26 October 2024

மரத்துக்குக் கிளை பாரமா?

மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? என்ற பாடலைக் கேட்டிருப்போம். ஆஹா... என்ன அற்புதமான வரிகள் என்று ரசித்திருப்போம். ஆனால் கிளைகளை பாரமாக நினைக்கும் மரங்களும் உண்டு என்பது தெரியுமா உங்களுக்கு? 

1 யூகலிப்டஸ் மரங்கள்

யூகலிப்டஸ் மரங்கள் கிளைகளை பாரமாக நினைப்பது மட்டுமல்ல, இலைகளை உதிர்ப்பது போல தாய் மரம் நினைத்த மாத்திரத்தில் சடாரென்று கிளைகளை முறித்து கீழே விழவைக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா? இதற்கு ‘Sudden Branch Drop Syndrome’ என்று பெயர். யூகலிப்டஸ் மட்டுமல்ல, பீச், ஓக், எல்ம், மார்ட்டன் பே ஆல் போன்ற சில மர வகையிடமும் இவ்விநோதப் பழக்கம் உள்ளது. வறட்சிக்காலத்தில் மரங்கள் தங்கள் உயிரைத் தக்கவைக்க மேற்கொள்ளும் உத்திகளுள் இதுவும் ஒன்று.

'புரையோடிய கால்களை வெட்டி நீக்கினால்தான் நீ உயிர்பிழைப்பாய்' என்று மருத்துவர் சொன்னால் கால்களை வெட்ட மறுப்போமாஅதுபோலத்தான். ஆனால் இங்கே புரையோடிய கிளைகள் அல்லநல்ல ஆரோக்கியமான கிளைகளும் முறிந்துவிழும்.

யூகலிப்டஸ் மரங்கள் பொதுவாக வறட்சியைத் தாங்கும் வல்லமை கொண்டவை. அவற்றின் வேர்கள் மிக சாதுர்யமானவை. தண்ணீரைத் தேடிச்சென்று உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனினும் தண்ணீர் கிடைக்காத வறண்ட கோடையில் தாய் மரம் உயிர் பிழைத்திருப்பதுதான் முக்கியம். இருக்கும் கொஞ்சநஞ்ச தண்ணீரை எல்லாக் கிளைகளுக்கும் பகிர்ந்தளிக்க இயலாது அல்லவா? அதனால்தான் இந்த முடிவு. கிளைகள் போனால் மீண்டும் வளர்ந்துவிடும். மரமே போய்விட்டால் ஆனால் இந்த முடிவை கிளைகள் தன்னிச்சையாக எடுக்கின்றனவா அல்லது மரம் எடுக்கிறதா என்பது புரியாத புதிர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சென்ற பதிவில் யூகலிப்டஸ் மரங்களைச் சார்ந்து வாழும் புல்லுருவிகள் பற்றியும் புல்லுருவிகளைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவும் யூகலிப்டஸ் பற்றியதுதான். 

இன்று உலகம் முழுவதும் யூகலிப்டஸ் மரங்கள் பரவியிருந்தாலும் அவற்றின் தாயகம் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என அண்டார்டிகா தவிர்த்த அனைத்துக் கண்டங்களிலும் இம்மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு யூகலிப்டஸ் மர வளர்ப்பு உலக அளவில் இன்று வியாபார ரீதியாகப் பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது.

2 யூகலிப்டஸ் மரக்காடு

ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பே என்னுடைய பால்யத்திலேயே யூகலிப்டஸ் மரம் எனக்கு அறிமுகமாகிவிட்டது. ரயில்வே பணிமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு தாத்தா, தான் கட்டிய வீட்டில் எல்லா வகையான மரம் செடி கொடிகளையும் எங்கிருந்தோ யார் மூலமாகவோ எப்படியோ வரவழைத்து அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார். தோட்டத்தின் மூலையில் நெடுநெடுவென்று வளர்ந்து நின்றது ஒரு யூகலிப்டஸ் மரக்கன்று. அதிலிருந்து உதிர்ந்து விழும் மொடமொடவென்ற வெளிர்சாம்பல் பச்சை இலையைப் பொறுக்கிக் கசக்கி, அந்த இலையிலிருந்து வெளிப்படும் தைல வாசத்தை மோந்து பார்த்து மகிழ்வது எங்களுடைய பால்யகால விளையாட்டுகளுள் ஒன்று.

ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு காணும் இடத்தில் எல்லாம் யூகலிப்டஸ் விதவிதமான யூகலிப்டஸ் மரங்கள்! சாம்பல் பச்சை வண்ணத்தில் கத்தி போன்ற இலைகளோடு நெடுநெடுவென்று வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களையே பார்த்திருந்த எனக்கு, விதவிதமான வடிவத்திலும் நிறத்திலும் இருந்த யூகலிப்டஸ் மரங்களும் இலைகளும் வியப்பில் ஆழ்த்தின. அரச இலை வடிவிலான யூகலிப்டஸ் இலைகளை ஒன்றுக்கு பல தடவை கசக்கி மோந்து யூகலிப்டஸ்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.  

3 துளிர்விட்டிருக்கும் யூகலிப்டஸ் மரம்

யூகலிப்டஸ் இனத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டவை உள்ளன. அவற்றுள் ஒன்பது தவிர மற்ற அனைத்துக்கும் தாயகம் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியாவில் இவற்றின் செல்லப்பெயர் ‘Gum tree. அதற்கு ‘கோந்து மரம்’ அல்லது ‘பிசின் மரம்’ என்று அர்த்தம். தவிர, அந்தந்தப் பகுதிகளில் வழங்கப்படும் பூர்வகுடிப் பெயர்கள் ஏராளம்.

4 சிவப்பு யூகலிப்டஸ் பூக்கள்

5 வெள்ளை யூகலிப்டஸ் பூக்கள்

6 பிங்க் நிற யூகலிப்டஸ் பூக்கள்

யூகலிப்டஸ் மரங்கள் பூக்கும் காலத்தில் வெள்ளை, பழுப்பு வெள்ளை, மஞ்சள், பிங்க், சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் மரம் முழுக்கப் பூக்களுடன் அழகாகக் காட்சியளிக்கும். பூக்கள் பூக்கும் முன்பு மொட்டுகள் குட்டி குட்டியாக குங்குமச்சிமிழ் போன்ற தோற்றத்தில் மூடியுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும். 

7 மூடி போட்ட மொட்டுகள்

மலரும் சமயத்தில் மூடி திறந்து கீழே விழுந்துவிடும். பிறகு பூ விரியும். கிரேக்க மொழியில் eu என்றால் ‘நன்றாக’ என்றும் kalypto என்றால் ‘மூடிய’ என்றும் பொருள். அழகாக மூடி போட்டது போன்ற மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இதற்கு eucalyptus என்று பெயரிடப்பட்டுள்ளது. 

யூகலிப்டஸ் மரம் தமிழில் ‘தைல மரம்’ என்றும் ‘ஆரெஸ்பதி மரம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நூறுவருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்.பதி என்ற பிராண்டின் பெயரால் தமிழ்நாட்டில் இத்தைலம் அறியப்பட்டதால் யூகலிப்டஸ் மரத்தையும் ஆரெஸ்பதி மரம் என்றே அந்நாளில் குறிப்பிட்டனர்.

நறுமணமும் மருத்துவக்குணமும் கொண்ட யூகலிப்டஸ் தைலத்துக்கு உலகச் சந்தையில் பெரும் கிராக்கி. கிருமிநாசினியாகவும், சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூட்டுவலி, உடல்வலி, பூச்சிக்கடி, காயம், காய்ச்சல் போன்ற அனைத்து உடல் உபாதைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகவும் நாம் பயன்படுத்தும் ஆர்.எஸ்.பதி எண்ணெயும் நீலகிரித் தைலமும் தயாரிக்கப்படுவது யூகலிப்டஸ் மர இலைகளிலிருந்துதான். நீலகிரியின் யூகலிப்டஸ் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் நீலகிரித் தைலம் என்றாகிவிட்டது. வட இந்தியாவிலும் யூகலிப்டஸ் தைலத்துக்கு, ‘Nilgiri Thel’ (நீலகிரி எண்ணெய்) என்றே பெயர்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் விக்ஸ், அம்ருதாஞ்சன், டைகர் பாம், கோடாலித்தைலம் என்றழைக்கப்படும் ஆக்ஸ் ஆயில் என பல ரோக நிவாரணிகளிலும் யூகலிப்டஸ் எண்ணெய் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ளது. 

8 யூகலிப்டஸ் காயும் இலையும்

யூகலிப்டஸ் மரத்தின் இலைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? மற்ற மரங்களின் இலைகளைப் போல கிடைமட்டமாக இல்லாமல் அவை தொய்ந்து துவண்டதுபோல் செங்குத்தாகத் தொங்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம் உள்ளது. கடுமையான வெப்ப காலத்தில் சூரிய ஒளி நேரடியாக இலைகளின் மீது பட்டால், இலைகளின் நீர்ச்சத்து முழுக்க ஆவியாகிப் போய்விடுமே. அதைத் தடுப்பதற்காகத்தான் அப்படியொரு பிரத்தியேக அமைப்பு. இலைகள் மென்மையாக இல்லாமல் அழுத்தமாக இருப்பதற்கும் அதுதான் காரணம்.

அனைத்து வகை யூகலிப்டஸ் மர இலைகளிலும் எண்ணெய் இருந்தாலும் சுமார் 20 வகை இலைகளில் மட்டுமே அதிக அளவில் உள்ளது. அதனால் அந்த மரங்களே எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகின்றன. யூகலிப்டஸ் இலைகளைப் பெருமளவில் அறுவடை செய்து அவற்றைக் கொதிக்கவைத்துக் கிடைக்கும் நீராவியை வடிகட்டி யூகலிப்டஸ் எண்ணெய் பெறப்படுகிறது. சுமார் 80 கிலோ இலையைக் கொதிக்கவைத்தால் ஒரு லிட்டர் எண்ணெய்தான் கிடைக்கும். இந்த எண்ணெய் கிருமிநாசினியாகவும், பூச்சிக்கடி, தோல்நோய் போன்றவற்றுக்கும், சளி, மூக்கடைப்பு போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

இந்தியாவிற்கு யூகலிப்டஸ் மரங்களை 1790-வாக்கில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் என்றும் சுமார் பதினாறு வகை யூகலிப்டஸ் மரங்களின் விதைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து தருவித்து, நந்திமலையில் இருந்த அரண்மனைத் தோட்டத்தில் நட்டு வளர்த்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட மரமாக இருந்தாலும் தற்போது இந்தியாவில் யூகலிப்டஸ் சாகுபடி, ஏற்றுமதி மூலம் பெரும் லாபமீட்டும் தொழிலாக உள்ளது. 

9  நெடுநெடுவென்ற யூகலிப்டஸ் மரங்கள்

யூகலிப்டஸ் மரத்தின் வயது, எடை, சுற்றளவு இவற்றைப் பொறுத்து சந்தையில் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் இரண்டு மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு யூகலிப்டஸ் மரம் எண்பதாயிரம் ரூபாய்க்கு விலைபோகும். பொதுவாக முதிர்ந்த யூகலிப்டஸ் மரக்கட்டைகளின் சந்தை மதிப்பு குவின்டாலுக்கு (1 குவின்டால் = 100 கிலோ) ரூ. 900/- என்ற அளவில் தற்போது உள்ளது. ஆறு வருடத்துக்கு உட்பட்ட, ஒரு மீட்டர் சுற்றளவுக்கும் குறைந்த இள மரக்கட்டைகள் ஒரு குவின்டால் சுமார் ரூ.1140/- என்ற கணக்கில் ஒரு டன் ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை விற்பனையாகின்றனவாம்.

10 உறுதியான யூகலிப்டஸ் மரத்தண்டுகள்

யூகலிப்டஸ் மரக் கட்டைகள் சாரங்களாகவும்
, தண்டவாளக் கட்டைகளாகவும், கனமானக் கட்டுமானப் பொருட்களாகவும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. காகிதம், காகிதக்கூழ், மரத்துகள், அட்டைப்பெட்டிகள் போன்றவை தயாரிக்கவும், பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் கதவுகள், சன்னல்கள், நிலைகள், அலமாரிகள், கைப்பிடிகள் போன்றவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் மின்கம்பங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

11 யூகலிப்டஸ் மரத்தில் உறங்கும் கோவாலா

ஆஸ்திரேலியாவின் சூழல் பாதுகாப்புக்கும் பல்லுயிர் வளத்துக்கும் யூகலிப்டஸ் மரக்காடுகள் மிக இன்றியமையாதவை. அழிவாய்ப்பு இனமாக அறிவிக்கப்பட்டுள்ள கோவாலா இனத்தை அழிவிலிருந்து மீட்க வேண்டுமானால் யூகலிப்டஸ் மரங்களை அழியாமல் காப்பது அவசியம். காடழிப்புகளைத் தவிர்ப்பதோடு புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்து கோவாலாக்களுக்கான வாழ்விடப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதற்காக அரசும்  தனியார் நிறுவனங்களும் பற்பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும்  அதற்கான தங்கள் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.  


12 யூகலிப்டஸ் இலை தின்னும் கோவாலா

ஆனால் தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்களை வணிகரீதியாக நடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது தெரியுமல்லவா? தமிழ்நாட்டில் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கின்போது, தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அடுத்தப் பத்தாண்டுகளுக்குள் முழுமையாக அகற்றிவிடுவதாக தமிழக அரசின் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் குழு, ‘அந்நிய மரங்களை அகற்ற முற்படும் அரசே ஏன் அந்நிய மரமான யூகலிப்டஸ் மரங்களை நடவேண்டும்? எனவே இனி தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதிக்கிறோம்’ என்று உத்தரவிட்டது.

யூகலிப்டஸ் மரங்களைத் தடை செய்வதால் அதனால் கிடைக்கும் அந்நிய செலாவணி பாதிக்கப்படும் என்றும் அவற்றை நம்பியிருக்கும் மரத் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், தைல உற்பத்தி அனைத்தும் பாதிக்கப்படும். தைலமரக் கன்றுகளைப் பயிரிட்டிருக்கும் விவசாய சாகுபடியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு தரப்பிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது, மண்ணில் அமிலத்தன்மை சேர்கிறது, மற்றத் தாவரங்களை வளரவிடாமல் செய்கிறது என்று இன்னொரு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. கூடவே தமிழகத்தில் சோலைக்காடுகள் பெருமளவு அழிந்துபோனதற்கு தைலமரச் சாகுபடிதான் காரணம் என்ற வலுவான காரணமும் முன்வைக்கப்படுகிறது.   

15 October 2024

புல்லுருவியும் நல்லவையே!

 


1 யூகலிப்டஸ் மரத்தில் பூத்திருக்கும் புல்லுருவி

எங்கள் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன என்று சொன்னேன் அல்லவா? அம்மரங்களைக் கூர்ந்து கவனித்தபோது பெரும்பாலான கிளைகள் மேல்நோக்கி வளர்ந்திருக்க, சில கிளைகள் மட்டும் உடைந்துதொங்குவது போல நிலம் நோக்கியிருப்பதைப் பார்த்தேன். அந்தக் கிளைகள் மரத்தின் இயல்போடு ஒட்டாமல், சடைசடையாகத் தொங்கிக்கொண்டும், காற்று பலமாக வீசும்போது மற்றக் கிளைகளின் அசைவோடு பொருந்தாமல் கொழுகொம்பற்றக் கொடிகளைப் போல தனித்துக் காற்றிலாடிக் கொண்டும் இருக்கும். வசந்த காலத்தில் யூகலிப்டஸ் பூப்பதற்கு முன்பாக செக்கச் செவேலென்றோ மஞ்சள் சிவப்பு வண்ணத்திலோ கொத்துக்கொத்தாய்ப் பூக்களோடு காட்சியளிக்கும். எனக்கு அக்காட்சி விநோதமாக இருந்தது. ஏறுகொடி போன்ற அது என்ன தாவரம் என்று அறியும் ஆவல் மேலிட்டது. ஆனால் கண்டறிய இயலவில்லை. 

என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகள் உள்ளுக்குள் நச்சரித்துக்கொண்டே இருந்தன. இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோவின் Green planet என்ற தொலைக்காட்சி நிகழ்வாக்கத் தொடரில் விடை கிடைத்ததோடு மேலதிகத் தகவல்கள் என்னை வியப்பின் எல்லைக்கே இட்டுச்சென்றன. யூகலிப்டஸ் கிளைகளில் காணப்பட்ட அந்த வித்தியாசமான தாவரம் வேறொன்றுமில்லை, புல்லுருவிதான் அது. சிறுவயதில் எங்கள் வீட்டு மாமரங்களில் புல்லுருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை வேறுமாதிரி இருக்கும்.


2. புல்லுருவிகள் காற்றிலாடும் யூகலிப்டஸ் மரம்

3. வட்டத்துக்குள் இருப்பவைதான் புல்லுருவிச் செடிகள்

புல்லுருவி என்றால் என்ன? செழிப்பாய் வளர்ந்திருக்கும் பெரு மரங்களின் கிளைகளில் வளர்ந்து படர்ந்து மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரக்கூடிய ஒருவகை ஒட்டுண்ணித் தாவரமே புல்லுருவி ஆகும். அது கொடியாகவும் இருக்கலாம், செடியாகவும் இருக்கலாம், அல்லது மரமாகவும் இருக்கலாம். நல்ல நிலையில் இருக்கும் ஒன்றில் ஒரு கெட்ட விஷயம் வெளியில் தெரியாமலேயே மெல்ல மெல்ல உள்ளே ஊடுருவி கேடுவிளைவிக்கும் செயலுக்கு ‘நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல’ என்றொரு உவமைத்தொடர் சொல்லப்படும்.

4. மொட்டு வைத்திருக்கும் புல்லுருவிச் செடி

புல்லுருவிகளை குறைத்து மதிப்பிடுவது சரியன்று என்றும் இயற்கையின் அங்கமான அவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் நன்மை விளைவிப்பவை என்றும் உறுதிபடச் சொல்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த, பல வருடங்களாக புல்லுருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புல்லுருவி வல்லுநர் எனப் புகழப்படுகின்ற, டாக்டர் டேவிட் வாட்சன்.

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவிகள் இருப்பதாகவும் அவற்றுள் 97 வகை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை என்றும் குறிப்பிடும் அவர், புல்லுருவிகள் தாய்மரத்தை அழித்துவிடும் என்ற வாதம், நாயுண்ணிகள் நாயைக் கொன்றுவிடும் என்பதற்கு நிகரானது என்கிறார். புல்லுருவிகள் வளர்வதற்குத் தேவையான சத்துக்களைத் தாய்மரத்திலிருந்து பெற்றாலும் ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும் என்கிறார். மேலும் புல்லுருவிகளின் இலைகளும், பூக்களும், கனிகளும் பல உயிரினங்களுக்கு உணவாவதையும், அடர்த்தியான புல்லுருவித் தாவரம் மரக்கிளையில் அமைந்திருக்கும் புதர் போல பல பறவைகளுக்கு பாதுகாப்பான உறைவிடமாகவும் கூடு கட்ட வசதியாகவும் இருப்பதையும் சுட்டுகிறார்.

எங்கள் சுற்றுப்புற யூகலிப்டஸ் மரங்களில் எனக்குத் தெரிந்து வளர்ந்திருக்கும் புல்லுருவி இனங்கள் Fleshy mistletoe (Amyema miraculosa) மற்றும் Brush mistletoe (Amylotheca dictyophleba). 

5. புதர் போல் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும் புல்லுருவி

ஆஸ்திரேலியாவில் புல்லுருவிகளுக்கு அடைக்கலம் தந்திருக்கும் மரங்கள் அநேகம். யூகலிப்டஸ், வாட்டில், சவுக்கு, ஆல், பைன், மகடாமியா, மேலலூக்கா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுதேசி மரங்களோடு ஜகரண்டா, அரளி, மலைவேம்பு, சைகாமோர், மேக்னோலியா போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய மரங்கள் பலவும் அவற்றுள் அடக்கம். சில வகை புல்லுருவிகள் ஏற்கனவே மரத்தில் ஒட்டுண்ணியாக இருக்கும் மற்றப் புல்லுருவிகளின் மீது ஒட்டுண்ணியாக வளர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சிக்கொள்ளுமாம். ‘பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதைப் பிடுங்கினாராம் அனுமாரு’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா? 

6. புல்லுருவி வேர்ப்பகுதியில் மேக்பை கூடு

7. புல்லுருவியில் கூடு கட்ட இடம்பார்க்கும் நாய்சி மைனர் 

புல்லுருவிகள் வளர்ந்திருக்கும் உறுதியான யூகலிப்டஸ் கிளைக் கவைகளில் வருடந்தோறும் மேக்பை பறவைகளும் நாய்சி மைனர் பறவைகளும் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புல்லுருவிகள் பூத்திருக்கும் சமயத்தில் அவற்றில் தேனருந்த லாரிகீட் பறவைகள் கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கும். அப்போது காச்மூச், காச்மூச் என்ற அவற்றின் ஆரவாரச் சத்தம் காதைத் துளைக்கும்.

 

8. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட் பறவைகள்

9. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட்

ஐரோப்பாவைச் சேர்ந்த Viscum album என்ற புல்லுருவி மிகுந்த மருத்துவக்குணம் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. விஸ்கம் ஆல்பம் புல்லுருவியிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்து புற்றுநோய்க்கு  சட்டப்பூர்வமான மருந்தாகப் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் மட்டுமல்லாமல் கட்டி, வீக்கம், முடக்குவாதம், மலச்சிக்கல், உள்காயம், இரத்தக்கசிவு, வயிற்றுப்புண் என பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பியப் பாரம்பரிய மருத்துவத்திலும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

புல்லுருவி பற்றி தமிழில் வேறு ஏதாவது பழமொழிகளோ, சொலவடைகளோ, வட்டார வழக்குச் சொற்றொடர்களோ உள்ளனவா என்று தேடும்போது கிடைத்த பல தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. 

10. காய்ந்துபோன புல்லுருவியின் உறுதியான வேர் முடிச்சு

மூங்கில், மா, அரசு, புளி, வேம்பு, எருக்கு, எலுமிச்சை, நாவல், வில்வம், வன்னி, இலுப்பை, நெல்லி, மருதாணி, கருங்காலி, புங்கை, வேங்கை, பூவரசு, மருது, வாகை, எட்டி, கடம்பு, சந்தனம், ஆல், அத்தி, இலவம் என ஒரு மரம் விடாமல் நாட்டிலிருக்கும் அனைத்து மரத்துப் புல்லுருவிக்கும் (எப்படியோ தப்பிவிட்டது தைலமரம்) ஒவ்வொரு விதமான பலாபலன் உண்டு என்றும் ஆணையும் பெண்ணையும் வசியம் செய்ய ஒன்று, எதிரியை நாசம் செய்ய ஒன்று, செல்வம் குவிக்க ஒன்று, வியாபாரம் கொழிக்க ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு ஜெயிக்க ஒன்று, சூதாட்டத்தில் வெற்றி பெற ஒன்று என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வேர், பொடி, தாயத்து, மை, காப்பு, பூஜை என பல வடிவங்களில் புல்லுருவி வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. மந்திரம், மாந்திரீகம், வசியம், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் என ஒரு கூட்டம், பலவீனமான மக்களைக் குறிவைத்து தனி ட்ராக்கில் பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

11. வீட்டருகில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள்

புல்லுருவிகள் எப்படி அவ்வளவு உயரமான மரக்கிளைகளில் விதைகளை ஊன்றி வளர்கின்றன? 

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவி இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவை சார்ந்து வாழும் மரம், அந்த இடத்தின் தட்ப வெப்பச் சூழல், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் போன்றவற்றைப் பொறுத்து விதவிதமான முறையில் விதைபரவல்களை மேற்கொள்கின்றன. சில புல்லுருவிகள் குறிப்பிட்ட பறவைகள் மூலமே விதைகளைப் பரப்புகின்றன. பறவைகள் பிசுபிசுப்பான புல்லுருவிப் பழங்களைத் தின்றுவிட்டு எச்சமிடும்போதோ அல்லது அலகை மரத்தில் துடைக்கும்போதோ விதைகள் மரப்பட்டையின் இடுக்குகளில் சிக்கி வேர் பிடித்து வளர்கின்றன. சில புல்லுருவிகளின் விதைகள் முற்றிய நிலையில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வெடித்துச் சிதறி புதிய மரங்களைச் சென்றடைகின்றன.   

 

12. புல்லுருவிச் சிட்டு ஆண்

யூகலிப்டஸ் மரப் புல்லுருவிகளின் விதைபரவல் பத்து செ.மீ. நீளமும் பத்தே கிராம் எடையும் கொண்ட mistletoebirds எனப்படும் புல்லுருவிச் சிட்டுகள் மூலமே நடைபெறுகிறது என்று அறிந்து வியந்தேன். Dicaeidae எனப்படும் பூக்கொத்திக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளுள் ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரே பறவை Mistletoebirds தான் என்பது அவற்றின் தனிச்சிறப்பு. 


13 புல்லுருவிப் பூக்கள் (1)
 
14 புல்லுருவிப் பூக்கள் (2)

‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ என்றொரு பழைய பாடலைக் கேட்கும்தோறும் ‘சின்னப் பூங்குருவி நாளைக்கும் சேர்த்துத் தேடுதே’ என்ற வரிகள் உள்ளுக்குள் சிறு நெருடல் தரும். ‘வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை’ என்று பள்ளிக்காலத்தில் வாசித்த பைபிள் வாசகமும் உடனே நினைவுக்கு வந்துபோகும். ஆனால் ஆஸ்திரேலியப் புல்லுருவிச் சிட்டுகளைப் பற்றி அறிந்துகொண்டபோது நெருடல் தீர்ந்தது.  

புல்லுருவிச் சிட்டுகளின் உணவு புல்லுருவிப் பழங்கள்தாம். அவை புல்லுருவிப் பழங்களைத் தின்பதைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும். பழத்தைப் பறிக்காமல் தோல் காம்பிலேயே தொங்க, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுதியை மட்டும் அலகால் பிதுக்கி கொட்டையுடன் லபக்கென்று இவை விழுங்கும் நேர்த்தி வியக்கவைக்கும். அரை மணி நேரத்தில் பழத்தின் சத்தை உறிஞ்சிக்கொண்டு எச்சத்தின் மூலம் கொட்டையை வெளியேற்றும். ஆனால் பறக்கும்போதே போகிற போக்கில் எச்சம் விடாது. இன்னொரு மரத்தில் விதை விழுந்து முளைத்தால்தான் தனக்குத் தேவையான உணவு தொடர்ந்து கிடைக்கும் என்பது அந்த சின்னஞ்சிறு சிட்டுக்குத் தெரியும். எனவே மற்றொரு உயரமான யூகலிப்டஸ் மரக்கிளையில் அமர்ந்து எச்சமிடும். இக்கொட்டையைச் சுற்றி சளி போன்ற பிசுபிசுப்பான திரவம் ஒட்டியிருக்கும். அப்போதுதானே விதை மரக்கிளையில் ஒட்டிக்கொண்டு வளர ஏதுவாக இருக்கும்.

15. மாலைக் கதிரொளியில் யூகலிப்டஸ் மரம் புல்லுருவிகளோடு

புல்லுருவிச் சிட்டு எச்சமிடும் அழகும் தனித்துவமானது. பிசினுடன் கூடிய விதையை எச்சமாக வெளியேற்றிய பிறகும் அப்பிசினிலிருந்து விடுபடுவதற்காக கிளையில் அப்படியும் இப்படியுமாக நடன அசைவுகளைப் போன்ற அதன் அசைவுகள் Pre-poop dancing என்று சொல்லப்படும் அளவுக்குப் பிரசித்தம்.

புல்லுருவிப் பழத்தின் விதை கிளையோடு ஒட்டிக்கொண்டதும் முளை விட்டு அக்கிளையினைப் பற்றிக்கொண்டு அதன் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளர ஆரம்பிக்கும். பிறகு பூத்து காய்த்துப் பழங்களைக் கொடுக்கும். புல்லுருவிப் பறவைகள் அப்பழங்களைத் தின்று விதைகளை எச்சத்தின் மூலம் மற்ற மரங்களுக்குப் பரப்பும். இப்படியாக புல்லுருவித் தாவரங்கள் புல்லுருவிச் சிட்டுகளின் தயவால் தங்கள் வாழ்நாள் முழுவதும் மண்ணைப் பார்க்காமலேயே மரங்களிலேயே முளைத்து வளர்ந்து மடிகின்றன. புல்லுருவிச் சிட்டுகளும் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே விதைத்து உண்டு மகிழ்கின்றன.

பழத்தை சும்மா தின்றுவிட்டுப் போவோம் என்று இல்லாமல் நாளைக்கும் சேர்த்து விதைக்கிறதே. இந்தக் குருவியைத்தான் கவிஞர் பாடியிருப்பாரோ?


16. புல்லுருவிச் சிட்டு பெண்


17. புல்லுருவிச் சிட்டு ஆண்

தேன்சிட்டு அளவே உள்ள புல்லுருவிச் சிட்டுகளை நேரில் பார்க்க முடியுமோ முடியாதோ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் எங்கள் வீட்டின் பின்னால் இருக்கும் மரத்தில் வந்தமர்ந்து குரல் கொடுத்தன. விடுவேனா? சட்டென்று படம் பிடித்துவிட்டேன். 

18. அழகிய புல்லுருவிப் பூக்கள்


19. வழியில் கிடந்த புல்லுருவிப் பூ

புல்லுருவிப் பூவும் கூட ஒருநாள் எதிர்பாராமல் என் கைக்கு வந்தது. வாழையின் உதிரிப்பூ வடிவத்தில் பளீரென்ற மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் கீழே கிடந்த அதைக் கையிலேந்தி படம் பிடித்தபோது, காலம் காலமாய் தனக்கென்று ஒரு வாழ்வைத் தகவமைத்துத் தக்கவைத்திருக்கும் புல்லுருவி மீது மதிப்பு பெருகியது. 

*****