அத்துவானத் தண்டவாளத்தில்
நெடும்பொழுது நின்றது தொடர்வண்டி.
எந்தச் சலனமும் அற்று
சன்னல் வழி விரியும்
மாலைத் தொடுவான் பார்த்திருக்கையில்
ஒரு வெண்மேகம் இரண்டாகப்
பிரிந்து நகரும்அற்புதம் நிகழ்ந்தது.
எனக்கு ஏன் அப்படிக்
கண்ணீர் திரண்டது எனத் தெரியவில்லை.
இக்கவிதைக்கான என் பின்னூட்டம் கீழே.. (வலைப்பக்க சேமிப்புக்காக இங்கே பகிர்கிறேன்.)
காண்பதெல்லாம்
அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு
இரண்டாய்ப்
பிரிந்து நகரும் வெண்மேகம் கண்டு
கண்ணீர்
திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை…
கடந்துவந்த
பாதைகளில் சிறாய்ப்புற்ற
காயத்தின்
வடுவேதும் கவனத்துக்கு வந்திருக்கலாம்.
நினைவுகளின் சாயை
படிந்த மங்கிய பிம்பங்களின்
மறுபிரதிபலிப்பாய்
அது இருந்திருக்கலாம்.
நெகிழ்வுற்ற
கணங்களின் நீட்சியாகவும் இருக்கலாம்
தொப்புள்கொடியறுத்துத்
தாயிடமிருந்து
சுகமாய்ப்
பிரியும் சிசுவை நினைத்திருக்கலாம்.
கூடலுக்குப்பின்
களித்துக் களைத்துப் பிரியும்
காதல்
துணையாகவும் அது காட்சியளிக்கலாம்.
புகுந்த
வீட்டுக்கு விசும்பலோடு விடைபெறும் மகளை
ஒருவேளை
மனக்கண்ணில் கொணர்ந்திருக்கலாம்.
உவப்பத்
தலைக்கூடி உள்ளப் பிரிந்த
புலவர்
பெருமக்களை எண்ணி புளகாங்கிதமுற்றிருக்கலாம்.
புரட்டிப்போட்ட
வாழ்க்கையை நிமிர்த்திடும் நிமித்தம்
பரதேசமேகிய பால்ய
நட்புக்கு விடைகொடுத்த தருணம்
விருட்டென்று
நினைவுக்கு வந்திருக்கலாம்.
சின்னேரப்
பொழுதில் சிநேகம் வளர்த்து
செல்போன்
எண்களோடு கைகுலுக்கிப் பிரிகின்ற
பயண
சிநேகிதங்களைப் பற்றியும் நினைத்திருக்கலாம்.
காண்பதெல்லாம்
அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு
இரண்டாய்ப்
பிரிந்து நகரும் வெண்மேகம் கண்டு
கண்ணீர்
திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை…