20 June 2024

சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்

ஆஸ்திரேலியாவின் அழகுக் குருவிகளுள் கோல்டியன் குருவியினமும் ஒன்று. பச்சைநிற முதுகும், ஊதா நிற மார்பும், மஞ்சள் வண்ண வயிறும், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு என மாறுபட்ட வண்ணங்களில் முகமும் என  கண்ணைப்பறிக்கும் அழகு வண்ணக் குருவிகள் கோல்டியன் குருவிகள். 


1. கருந்தலை கோல்டியன் குருவி


2. செந்தலை கோல்டியன் குருவி

3. ஆரஞ்சுத்தலை கோல்டியன் குருவி


பார்ப்பதற்கு ஒரே மாதிரி வண்ணமயமாய்க் காட்சியளித்தாலும் இவற்றுள் ஆண் பெண் பேதமறிதல் எளிது. மார்பில் அடர் ஊதா வண்ணம் ஆண் குருவியையும் வெளிர் ஊதா வண்ணம் பெண் குருவியையும் அடையாளங்காட்டும். பொதுவாகவே பெண்ணை விடவும் ஆணின் வண்ணங்கள் அடர்த்தியாகவும் பளிச்சென்றும் இருக்கும். 

4. கருந்தலை கோல்டியன் குருவி இணை

1844-ஆம் ஆண்டு பிரித்தானிய பறவை வல்லுநர் ஜான் கோல்ட் (John Gould) தன் மனைவி Elizabeth Gould நினைவாக இப்பறவையினத்துக்கு Amadina gouldiae என்று பெயரிட்டார். திருமதி எலிசபெத் கோல்ட் வரைகலையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் ஜான் கோல்ட் எழுதிய பறவைகள் குறித்த நூல்களுக்கு தத்ரூபமாக விளக்கப்படங்கள் வரைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. திருமதி எலிசபெத் கோல்ட்

கோல்டியன் குருவிகளின் பொதுவான உணவு புல்விதைகளும் தானியங்களும் என்றாலும் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை எளிதில் பெறுமுகமாக குஞ்சுகளுக்கு புழு பூச்சிகளை ஊட்டி வளர்க்கும். பெரும்பாலான நேரம் இவை கூட்டம் கூட்டமாக புல்வெளியில் மேய்வதைக் காணமுடியும். முட்டையிடும் பருவத்தில் உயரமான மரங்களின் பொந்துகளிலோ மரங்களிலுள்ள கரையான் புற்றின் துவாரங்களிலோ கூடு கட்டி முட்டையிடும். ஒரே இடத்தை பல கோல்டியன் குருவிகள் எல்லைத் தகராறு இல்லாமல் பங்கிட்டுக்கொள்ளும்.

6. கருந்தலை கோல்டியன் குருவி ஆண்

கோல்டியன் குருவிகள் ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் எட்டு முட்டைகள் வரை இடும். முட்டைகளை ஆண் பெண் இரண்டுமே பகலில் மாறி மாறி அடைகாக்கும். ஆனால் இரவில் பெண் மட்டுமே அடைகாக்கும். 13 நாட்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிந்துவரும். தாய் தந்தை இரண்டுமே குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்க்கும். 

குஞ்சுகளின் வாய் பெரிதாகவும் வாயைச்சுற்றி பளீர் நீல வண்ணத்தில் நான்கு பெரிய புள்ளிகளும் காணப்படும். இருட்டான பொந்துக்குள் குஞ்சுகளின் வாயில் சரியாக இரையை ஊட்டுவதற்காக இயற்கை அளித்த சிறப்பு இது. 

21 நாட்களுக்குப் பிறகு பறவைக்குஞ்சுகள் பறக்கத் தொடங்கியதும் கூட்டை விட்டு வெளியேறும். 

7. கருந்தலை கோல்டியன் குருவி பெண்

கோல்டியன் குருவிகளுக்கு ஒரு நாளைக்குப் பலமுறை நீரருந்தும் அவசியம் இருப்பதால் பெரும்பாலும் சதுப்புநிலக் காடுகளையும், நீர்நிலைகளையும் ஒட்டிய மரங்கள் அடர்ந்த புல்வெளிகளையே வசிப்பிடங்களாகத் தேர்ந்தெடுக்கின்றன. மற்றக் குருவியினங்களோடும் இணைந்து வாழக்கூடியவை. ஒரு கூட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் குருவிகளாவது காணப்படும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் ஐந்தாண்டுகள்.

8. கருந்தலை கோல்டியன் குருவிகள்

வளர்ப்பு கோல்டியன் குருவிகளுள் தற்போது அசல் அல்லாது பல கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு நிறமாற்றங்கள் அதிகரித்துள்ளன. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களே இவற்றின் முதல் எதிரி. 

9. செந்தலை கோல்டியன் குருவி

இயல்சூழலில் இவற்றைப் பாதுகாக்கும் வனச்சட்டம் 1981-ல் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இவற்றின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருந்துள்ளது. அழகு மற்றும் வசீகரம் காரணமாக கணக்கு வழக்கில்லாமல் உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட காரணத்தால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்துவிட்டது. 1934 – 1939 வருடங்களில் மட்டும் ஏற்றுமதியான கோல்டியன் குருவிகளின் எண்ணிக்கை சுமார் 25,000 இருக்கலாம். இப்போது ஆஸ்திரேலியாவின் வடக்கே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் இவற்றின் மொத்த எண்ணிக்கை 2,500 -க்கும் குறைவு என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். 

ஆஸ்திரேலியாவில் மிதமிஞ்சிப் பெருகியுள்ள வளர்ப்பாரற்ற ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்கினங்களால் குறிப்பிட்ட காக்கட்டூ வகை புற்கள் மேயப்பட்டுவிடுவதால் அப்புல்விதைகளை முக்கிய உணவாகக் கொண்ட கோல்டியன் குருவியினத்தின் எண்ணிக்கையும் சரிந்துவருவதாக அறிவித்துள்ளன ஆய்வு முடிவுகள்.  

10. செந்தலை கோல்டியன் குருவி

கோல்டியன் குருவிகள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அருகிவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பிடிப்பதோகடத்துவதோஆஸ்திரேலிய வனப்பாதுகாப்புச் சட்டத்தின்படி கடும் தண்டனைக்குரியக் குற்றமாகும். 

(படங்கள் அனைத்தும் சிட்னியிலுள்ள உயிரியல் பூங்காவிலும் பறவைக் காப்பகத்திலும்  என்னால் எடுக்கப்பட்டவை)

8 comments:

  1. கோல்டியன் குருவி அழகு. விவரங்கள் அருமை.
    இனி அவை பல்கி பெருகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி மேம்.

      Delete
  2. படங்கள் அனைத்தும் அழகு. தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  3. அரிய தகவல்களோடு கூடிய அழகிய பறவைகளை எங்களுக்குப் படங்களோடு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி யசோ.

      Delete
  4. தலையின் வண்ணம் மட்டும் வேறு வேறாக.. அழகுக் குருவி கோல்டியன் குருவி! மிக அருமையான படங்கள். தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.