உறவுகள் தொடர்பான
சென்ற பதிவில் உறவென்னும் வட்டத்துள் வரும் அனைவரையுமே பொதுவில் கொண்டு கருத்தளித்திருந்தேன்.
அந்தப் பதிவுக்கு ஜிஎம்பி ஐயா அளித்திருந்த அவருடைய பின்னூட்டத்தில் கீழ்க்காணுமாறு
குறிப்பிட்டிருக்கிறார்.
\\என் பதிவில்
தொலைந்து கொண்டு போகும் உறவுகளைப் பெண்கள் நிலை நிறுத்தலாம் என்னும் கருத்தை மறைமுகமாக
வைத்தேன் பலரிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு நிதரிசன உண்மை விளங்கும் அறிந்த உறவுகளில்
தாய் வழி உறவே அதிகம் நினைவில் இருக்கும். இதற்கும் தலையணை மந்திரம் முந்தானையில் முடித்து
வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையும் மறைமுகக் காரணங்களாக இருக்க வாய்ப்புண்டா.
தெரிய வில்லை. நடைமுறை வாழ்க்கை நிலைகள் பிளவுபடும் குடும்ப உறவுகளுக்குக் காரணமானாலும்
அதைச் சீர்செய்ய யாரால் இயலும் என்னும்கேள்வியும் எழுகிறது.சில பல காரணங்கள் தெரிவதைச்
சொல்ல பெண்களுக்குத் தைரியம் இருக்கிறதா இல்லை இருக்கும் நிலையை மாத்திரம் சொல்லிக்
காரண காரியங்களை அவரவர் சௌகரியத்துக்கு விட்டு விடுவதா எது சரி...?\\
இந்தப் பின்னூட்டத்தைப்
பார்த்தபிறகு என் கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கலாமோ என்ற எண்ணம்
பிறக்கவும் தோன்றியது இந்தப் பதிவு. உறவுகள் பலப்படுவதும் விரிசலடைவதும் பெண்கள் கையில்தான்
என்ற அவரது கருத்துக்கு உறவின் தன்மையில் பெண்களுடனான என்னுடைய நிலைப்பாட்டை விளக்க
இப்பதிவு போதுமானது என்று நினைக்கிறேன்.
இதில் முழுக்க
முழுக்க என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிரப்போகிறேன். ஜிஎம்பி ஐயா குறிப்பிட்டுள்ளது
போல் தலையணை மந்திரமோ முந்தானையில் முடிந்து வைக்கும் தந்திரமோ எதுவும் என் திருமணத்தின்போது
எனக்கு வழங்கப்படவில்லை. என் தாய் மட்டுமல்ல… என்னுடைய பிறந்தவீட்டு உறவுகள் யாருமே
அப்படியொரு எண்ணத்தை எனக்குள் விதைக்கவில்லை. எல்லோரும் ஒன்றுபோல் சொன்னது இதுதான்.
நீ வாழ்க்கைப்பட
இருக்கும் குடும்பம் பெரியது. மாமியார் மாமனார், இரண்டு கொழுந்தனார், இரண்டு நாத்தனார்,
அவர்களது குடும்பம், ஓரகத்தி என்று பலரையும் அனுசரித்துப் போகவேண்டும். பிறந்த வீட்டில்
எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது பெரிய விஷயமில்லை. புகுந்த வீட்டிலும் எல்லோரிடமும்
நல்ல பெண்ணாக நடந்து நல்ல பெயர் வாங்கி பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
கணவனையும் கணவனது
குடும்பத்தாரையும் அனுசரித்துப் போ என்றுதான் அறிவுரைக்கப்பட்டதே தவிர… கவனமாயிரு…
கணவனைக் கைக்குள் போட்டுக்கொள் என்று எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. அதனால்தானோ
என்னவோ இன்னும் மூன்று வருடங்களில் வெள்ளிவிழா காணவிருக்கும் மண வாழ்க்கையில் இதுவரை
புகுந்த வீட்டினருடன் எந்த பிணக்குமில்லாமல் நல்ல மருமகளாய் எல்லோருடைய அன்பையும் நன்மதிப்பையும்
சம்பாதித்துவைத்திருக்க முடிகிறது. இதோ இந்தப் பதிவை வாசிக்கும் என் புகுந்த வீட்டு,
பிறந்த வீட்டு உறவுகள் நிச்சயம் என்னை ஆமோதிப்பார்கள்.
புகுந்த வீட்டில்
ஒவ்வொருவரிடமும் நான் காட்டும் அன்பு அதனினும் பன்மடங்கு என்னிடமே திருப்பித் தரப்படுவது
எங்கள் உறவு பலப்பட முக்கியமான காரணமாக நினைக்கிறேன். எனக்குத் திருமணமான புதிதில்
என் நாத்தனார்களை குடும்ப வழக்கப்படி அத்தாச்சி என்று அழைத்தேன். அக்கா என்றே அழை என்றார்கள்.
அந்த வார்த்தைகளுக்கான மதிப்பை இன்றுவரை உணர்ந்து அனுபவிக்கிறேன். என் நாத்தனார்களையும் ஓரகத்திகளையும் என் உடன்பிறந்த
தமக்கைகளாகவே நினைக்கிறேன். அவர்களும் அப்படிதான் நினைக்கிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளை
விடவும் ஒரு படி அதிகமாகவே பாசம் செலுத்துகிறார்கள்.
உறவுகளுக்குள்
சில சமயங்களில் தவறான புரிதலினால் மனக்கிலேசங்கள் ஏற்படுவது இயற்கை. அதை ஊதி ஊதி பெரிதாக்காமல்
ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பிரச்சனையைத் தீர்க்கவே முயல்கிறோம். எந்த சூழ்நிலையிலும்
யாரும் எவரையும் ஒதுக்க நினைப்பதில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் எல்லோருமே ஒருமித்துப்
பங்கு கொள்கிறோம்.
உறவுகளுக்குள்
பந்தம், பாசம், மரியாதை இவற்றைத் தாண்டி நட்புமிருந்தால் உறவு இன்னும் பலப்படும். என்
ஓரகத்திக்கும் எனக்கும் இடையில் இன்னதுதான் என்றில்லாமல் எவ்வளவோ கருத்துப் பரிமாற்றங்கள்
நிகழும். சிறிய நாத்தனாரும் நானும் குடும்ப விவரங்கள் அல்லாது பொதுவிஷயங்களை ஏராளமாய்ப்
பகிர்ந்துகொள்வோம். என் பெரிய நாத்தனாரிடம் உறவைத் தாண்டி இலக்கியம் குறித்தும் பதிவுலகம்
குறித்தும் என்னால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசியில் பேசமுடிகிறது. ஒவ்வொருவருடனும்
பேசும்போது அவர்கள் இன்ன உறவு என்பதோ மூத்தவர்கள் என்பதோ எதுவும் மனத்தில் உறுத்தாமல்
ஒரு உற்ற தோழியுடன் பேசுவது போன்ற உணர்வே தோன்றும். அப்படி நட்புணர்வுடன் கூடிய உறவுகள்
வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். தாயிடம் பகிரமுடியாத சங்கதிகளைக் கூட தாராளமாய்
நான் என் புகுந்த வீட்டு உறவுகளிடம் பகிரமுடியும்.
தானே கைம்பெண்ணான
நிலையிலும் நிராதரவாய் நின்ற கைம்பெண் நாத்தனாரை அவருடைய கடைசி காலம் வரை வைத்துக்
காப்பாற்றிய பெண்மணியையும், தாயும் மாமியாரும் பக்கம் பக்கம் அமர்ந்திருக்க, மாமியாரின்
மடியில் உரிமையுடன் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் மருமகளையும் கணவனுடன் பிறந்தவர்கள்
ஏமாற்றி தம்மை சுரண்டுகிறார்கள் என்று தெரிந்தே அனுமதிக்கும் தாராள மனம் கொண்ட பெண்ணையும்
அறியும் அதே சமயம்… பெற்றவளுடனும் உடன் பிறந்தவர்களுடனும் பேசினால்
தற்கொலை செய்துகொள்வேன் என்று கணவனை மிரட்டும் மனைவியையும் அறிவேன்.
குடும்ப உறவுகள்
வலுப்படுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது என்று ஜிஎம்பி ஐயா சொல்வது ஒருவகையில்
ஏற்கத்தக்கதுதான் என்றாலும் அதில் ஆண்களின் பங்கு எதுவுமே இல்லை என்று சொல்வதற்கில்லை.
நான் என் புகுந்த
வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்கிறேனோ அதுபோலவே என் கணவர் என் பிறந்த வீட்டாரிடம் நடந்துகொள்கிறார்.
அதை நான் எதிர்பாராதபோதும் என்பதுதான் சிறப்பு. என் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போலவும்
என் தாய் தந்தையை தன்னுடைய தாய் தந்தையைப் போலவும் மதிக்கிறார்… பாசம் காட்டுகிறார்.
உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்.. என் தம்பிக்கு திருமணம் முடிவான சமயம். என்
கணவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?
"உனக்கு நாத்தனார்களாகிய
என் அக்காக்கள் உன்னிடம் எப்படி பாசமாக பரிவாக நடந்துகொள்கிறார்களோ அப்படியே நீயும்
வரவிருக்கும் உன் தம்பி மனைவியிடம் பாசமும் பரிவுமாக நடந்துகொள்ளவேண்டும். அந்தப்பெண்
உன்னை விடவும் சிறிய பெண். தவறு செய்தால் நீ பெரியவள் என்ற முறையில் அனுசரித்துப்போ.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள். அது
உன் பிறந்த வீட்டிலுள்ள மற்ற உறவுகளுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான பிணைப்பை உருவாக்கும்."
எந்த அளவுக்கு
என் குடும்பத்தின்மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் இப்படி சொல்லத் தோன்றும்? என்
தம்பி மனைவி என்னை அத்தாச்சி என்றபோது நானும் என்னை அக்கா என்றே அழைக்கச்செய்தேன்.
இன்றுவரை என் சகோதரியாகவே பார்க்கிறேன். எங்கள் இருவருக்குள்ளும் உள்ள நட்பும் பாசமும்
இந்த பதினைந்து வருடங்களில் பலப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன்.
நான் வீட்டுக்கு
வருகிறேன் என்று சொன்னால் உற்சாகமாக என்னை வரவேற்க தயாராகிவிடுகிறார் தம்பி மனைவி.
எப்போது வருவேன் என்று எதிர்பார்த்திருக்கிறார். கணவனின் உறவுகள் வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தால்
எந்தப் பெண்ணாவது இப்படி ஆர்வத்துடன் நாத்தனாரை வரவேற்கக் காத்திருப்பாரா?
இந்தியாவிலிருக்கும்போது
குழந்தைகளுக்கு காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் தாய்வீட்டுக்குப் போவதற்கு நிகராக
மாமியார் வீட்டுக்கு நானும் பிள்ளைகளும் குஷியாகக் கிளம்பிவிடுவோம். என்னைப் பலரும்
கிண்டல் செய்திருக்கிறார்கள்… மாமியார் வீட்டுக்கும் நாத்தனார் வீடுகளுக்கும் போக இவ்வளவு
ஆர்வத்துடன் கிளம்பும் ஓரே ஆள் நீங்களாகத்தான் இருக்கமுடியும் என்று. என்ன செய்ய? என்
தாயின் வளர்ப்பு அது. பிறந்த வீட்டை விடவும் புகுந்த வீட்டுக்கு மரியாதை செய்யும்படி
சொன்ன அறிவுரையின் காரணம் அது.
ஒருவேளை எதிர்மறையாய்
அறிவுறுத்தப்படும் பெண்களின் செயல்பாடுகள் உறவுகளில் விரிசல் விழக் காரணமாயிருக்கலாம்.
அதைப் பற்றிய கருத்துகள் என்னிடமில்லை. ஏனெனில் என்னுடைய அனுபவத்தில் பிறந்த வீடு புகுந்த
வீடு என்ற பாகுபாடில்லாமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் பெண்களைத்தான்
வெகுவாக நான் பார்த்திருக்கிறேன்.