Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

15 January 2018

உங்களிடம் சில வார்த்தைகள்.. கேட்டால் கேளுங்கள்..




நம் மனம்தான் நமக்கு உற்ற நட்பும் பகையும். அதை நம்மோடு இணக்கமாய்ப் பேணுவதற்கே நாம் இன்னும் கற்றபாடில்லை. இந்த லட்சணத்தில் எங்கே மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது? அதையும் மீறி நாம் ஒருவருக்கொருவர் அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். இதோ இப்போதும் கேட்டால் கேளுங்க என்று அறிவுரை வழங்க வந்துவிட்டேன், துணைக்கு கண்ணதாசனின் வரிகளையும் அழைத்துக்கொண்டு.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா..
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

யாரும் எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் சிறப்பு. அது சொற்களுக்கும் பெரிதும் பொருந்தும். வாய்க்குள் இருக்கவேண்டியவை வெளியில் குதித்துவிட்டாலோ, வெளிப்பட வேண்டியவை வாய்க்குள் தேங்கிக் கிடந்தாலோ மதிப்பிழந்துபோதல் நிச்சயம். தேவைப்படும் சொற்களுக்கே இந்நிலை என்றால் தேவைப்படாத அறிவுரைகளுக்கு? கேட்கவிரும்பாத செவிகளுக்குள் செலுத்தப்படும் அறிவுரைகள், செவிடன் காதில் சங்கூதுவது போல விரயம் என்று அறிந்திருந்தாலும் ஊதுற சங்கை ஊதிவைப்போம் என்ற எண்ணத்தில்தான் பல அறிவுரைகள் ஓதப்பட்டுவருகின்றன.




அறிவுரைகள் அவசியப்படுவோர்க்குக் கூட நேரடியாக அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. நம்மைப் போன்ற படைப்பாளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன கதைகளும் கவிதைகளும். அவற்றின் வாயிலாக சொல்ல வேண்டியவற்றை சொல்வது ஒருவகையில் வசதியும் கூட. என் பிள்ளைகள் சிறுகுழந்தைகளாக இருக்கும்போதும் இந்த யுத்திதான் பெரிதும் கைகொடுத்தது. அவர்கள் தவறு செய்யும்போது நேரடியாக கண்டிக்காமல் அறிவுரை சொல்லாமல் கதைகள் மூலம் திருத்தினேன். இவர்கள் செய்யும் தவறுகளை கதையில் வரும் குழந்தைகள் செய்வதாகச் சொல்லி, அதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளால் குழந்தைகள் மனந்திருந்துவது போல கதைகளை உருவாக்கிச் சொல்வேன். நேரடியாக அறிவுரை சொல்வதை விடவும் கதைகள் மூலம் சொல்வதில் பலன் அதிகமாக இருந்தது.


சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை…

என்னைக் கேட்டால் சொல்லாத சொல்லுக்கும் விலை உண்டு என்றுதான் சொல்வேன். ஆம் என்பதை அழுத்தமாய் ஆமோதிக்கும் அதே சமயம், இல்லை என்பதையும் வாய்திறந்து மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயம், தயக்கம், கூச்சம், முகத்தாட்சண்யம், நாகரிகம், இங்கிதம் இன்னபிற காரணங்களால் நமக்கு உடன்பாடற்றவற்றை மறுக்கத் துணியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மௌனம் காப்பதுண்டு. மௌனம் எந்தக்காலத்திலும் நம் எதிர்ப்பை பதிவு செய்யாது. மௌனம் சம்மதம் என்ற பொதுவிதியின்படி எதிராளிக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அமையவேண்டும் என்றுதான் நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஆனால் அமைகிறதா? பிரச்சனை மேல் பிரச்சனை என்றுதானே வாழ்க்கை ஓடிக்கொண்டோ நகர்ந்துகொண்டோ இருக்கிறது? சிலர் தம் பிரச்சனை மட்டுமல்லாது அடுத்தவர் பிரச்சனைகளையும் அடித்துப்பிடித்து வாங்கி தங்கள் தோள்களில் போட்டுக்கொண்டு அல்லாடுவார்கள். இன்பமோ, துன்பமோ அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வதுதானே நியாயம்.


உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

கண்ணதாசனின் இவ்வரிகளில் பலருக்கும் உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்வரிகளை நான் பாசிடிவாகவே பார்க்கிறேன். நமக்கும் கீழே இருப்பவனோடு ஒப்பிட்டு நம் நிலைமை அவனை விடவும் மேல் என்று மகிழ்வது என்ன மாதிரியான சாடிஸ்டிக் மனோநிலை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். வரிகளை உற்றுக்கவனியுங்கள். அது மகிழ்ச்சி அடையச்சொல்லவில்லை. நிம்மதி நாடச்சொல்கிறது. கண்முன் ஒரு விபத்து நடக்கிறது. ஐயோ என்று பதறுகிறோம். யாருக்கும் அடிபடவில்லை என்று தெரிந்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு பரவுமோ.. அப்படியான நிம்மதிதான் அது. ஓட்டுவீட்டில் வசிப்பவனுக்கு பங்களாவாசியைப் போல வாழ ஆசை வருவதில் தவறில்லை. ஆசைகள் தானே முன்னேற்றம் என்னும் இலக்கு நோக்கி நம்மை நெம்பித்தள்ளும் நெம்புகோல்கள். இலக்கை அடைவதற்கான முயற்சியில் இறங்குவதை விட்டுவிட்டு பணக்காரனைப் பார்த்து ஏங்கித்தவிப்பதிலேயே தனக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையின் அருமை தெரியாமல் வீணடித்துக் கொள்பவர்களுக்கான அறிவுரையாகவும் கொள்ளலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று வெம்பி உச்சபட்ச தாழ்வுணர்வில் புழுங்கித்தவிக்கும் உள்ளங்களை ஆசுவாசப்படுத்தும் ஆறுதலுரையாகவும் இருக்கலாம். உன்னிலும் மேலானவனைப் பார்த்து பொருமிக் கொண்டிராமல் உன்னிலும் கீழான நிலையில் வாழ்பவனைப் பார்த்து அவன் நிலையை விடவும் என் நிலை பரவாயில்லை என்று நினைத்து, கிடைத்திருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழ் என்பதை சாடிஸமாக என்னால் நினைக்க முடியவில்லை. அடுத்தவன் வாழ்க்கை குறித்த பொருமல், பொறாமை போன்ற கண்பட்டைகளைக் கழட்டினால்தான் சொந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் புலப்படும்.

நம்மை வருத்தும் துயரிலிருந்து, நம்மை நாமே உந்தி வெளிக்கொணர ஒரு மனோவசிய மந்திரம் அவசியம் தேவை. கிட்டத்தட்ட இருகோடுகள் தத்துவம் போல், நடந்த துயரோடு நடக்காத ஆனால் நடக்க சாத்தியமுள்ள பெருந்துயர் ஒன்றைப் பக்கத்தில் இருத்தி, ஒப்பிட்டு நிம்மதி அடைவதும் அழகானதொரு மனச்சமாதானம்.


Happiness is found along the way, not at the end of the road என்பது அடிக்கடி என் நினைவுக்கு வரும் பொன்மொழி. வாழ்க்கையில் இலட்சியங்கள் அவசியம். ஆனால் இலட்சியங்களை அடைவது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது. தங்கத்தைத் தேடி அலைபவன் வழியில் தென்படும் வைரங்களையும் வைடூரியங்களையும் புறக்கணிப்பது எவ்வளவு பேதைமையோ அவ்வளவு பேதைமை வாழ்க்கையின் பெரும் இலட்சியங்களின் பொருட்டு சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தொலைப்பது. அன்றலர்ந்த மலர், அழகிய வானவில், பஞ்சாரத்துக் கோழிக்குஞ்சுகள், சடசடக்கும் மழைத்தூறல், மழை கிளர்த்தும் மண்வாசனை, மழலையின் குழறுமொழி, குழந்தைகள் குறும்பு, இளந்தம்பதியர் இணக்கம், மனந்தொடும் மெல்லிசை, ரசனைக்குரிய திரைப்படம், வாசனை மாறா புதுப்புத்தகம், சிறகு கோதும் சிறுபறவை, சரசரக்கும் அரசிலைகள், காற்றசையும் கொடி, கால் நனைக்கும் அலை, குடும்ப ஒன்றுகூடல், கூடத்து விருந்து, ஒரு குறும்பயணம், தோளணைக்கும் தோழமை, ஆசீர்வதிக்கும் முதுகரம், அறியா முகத்தரும்பும் புன்னகை என நம் வாழ்வில் எவ்வளவு பெரிய வேதனையையும் கணநேரம் மறக்கச் செய்துவிடும் மகிழ்தருணங்கள் எத்தனையோ உண்டல்லவா?

(மதுரைத்தமிழன் ஆரம்பித்த இத்தொடர்பதிவினைத் தொடருமாறு தோழி இளமதி விடுத்த அழைப்பின் பேரில் எழுதப்பட்டது.)

சில நாட்களாக வலைப்பக்கம் வராமையால் யார் தொடர்ந்திருக்கிறார்கள் யார் தொடரவில்லை என்று தெரியவில்லை. அதனால் யாரையும் இங்கே குறிப்பிடவில்லை. இதுவரை எழுதாதவர்கள்  இனிதே தொடரலாம். 

24 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 (தொடர்பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்காக சில எழுத்தாளுமைகளைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏராளமான பதிவர்களும் பதிவுகளும் என் மனம் கவர்ந்திருந்தாலும் இதுவரை அதிகம் அடையாளங்காட்டப்படாத வலைத்தளங்களையே இத்தொடரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இன்னும் சில…




ஆஸியில் எனக்கமைந்த அற்புதமான தோழி மணிமேகலா. இவரது தளம் அட்சயப்பாத்திரம். தமிழின்மீதும் தமிழர் சமுதாயம் மீதும் அளவிலாப்பற்று கொண்டவர் என்பதோடு தமிழின் வளர்ச்சிக்காக அதன் மொழிச்சிறப்பையும், பாரம்பரியப் பெருமைகளையும் தொடர்ந்து வரும் தலைமுறைக்குக் கடத்த தன்னால் என்னென்ன செய்ய இயலும் என்று எந்நேரமும் யோசிப்பவர். எந்தக் கருத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழம் வரை சென்று அலசுபவர். உயர்திணை என்ற அமைப்பின்மூலம் மாதாந்திர இலக்கியக்கூடல்களை நிகழ்த்திக்கொண்டிருப்பவர். இன்னும்கூட இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவருடைய பதிவுகளில் சமீபமாய் என் மனம் கவர்ந்தவை கண்டறியாத கதைகள் என்ற தலைப்பில் இவர் பதிவிடும் அருமையானதொரு தொடர்.  பண்டையப் பாரம்பரியப் பொருட்களின் அமைப்பு, பயன்பாடு, மாற்றம், அழகியல் இவற்றை இலக்கிய மேற்கோள்களோடு அவர் எடுத்துரைப்பது சிறப்பு.










குடும்ப மருத்துவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை நம் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணிக்கொள்ளலாம். மனம் விட்டு அவரிடம் நம் நோய்கள் குறித்துப் பேசி ஆலோசனைகள் கேட்கலாம். தினக்குரலில் மருத்துவரைக் கேளுங்கள் என்ற பகுதியில் அவரிடம் கேட்கப்படும் அந்தரங்கமான உடல் மனப் பிரச்சனை குறித்த கேள்விகளும் அதற்கான அவர் பதில்களும் கூட நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும். அவர் தொடாத உடற்கோளாறுகள் ஏதுமில்லை என்னுமளவுக்கு அவர் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன  நோய் மற்றும் உடற்கோளாறுகள் குறித்த விழிப்புணர்வும், மருத்துவ ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும், நோயாளிகளின் சந்தேகங்களும் தீர்வுகளும், பயம் போக்கும் தெளிவுகளும்.  மருத்துவம் தவிரவும் தமிழிலக்கிய ஆர்வலர், கவிஞர், பதிவர், புகைப்பட ஆர்வலர் என்று பன்முகங்கொண்ட மருத்துவரின் தமிழ்ச்சேவை முக்கியமாய் நோய்கள் குறித்து எளிய தமிழில் விளக்கும் அவரது திறம் மிகுந்த பாராட்டுக்குரியது.










இப்போது நான் குறிப்பிடப்போகும் பதிவரை முன்பே பலமுறை பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இப்போதும் குறிப்பிடுவதில் பெருமையே எனக்கு. சமீபத்தில் தன்னுடைய தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடியவரும் எங்கள் குடும்பத்தின் மூத்த வழிகாட்டியும் எங்கள் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவருமான சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள். எழுத்துச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் அவரை எண்ணிக்கொண்டால் போதும், சோர்வு பறந்துவிடும் என்று நான் உரைப்பதெல்லாம் வெற்றுப் புகழாரமன்று. உண்மை. அவருடைய அற்புதமான பல பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடையவேண்டும் என்னும் பேராசையின் உந்துதலோடு இலக்கியச்சாரல் என்னும் அவரது தளத்திலிருந்து சில பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.








கட்டுப்பெட்டித்தனமான சமூக நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையுடனும் துணிச்சலுடனும் தன் எழுத்துகளை முன்வைக்கும் பெண் எழுத்தாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர், தமிழிலும் சிங்களத்திலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், பாடகர், பாடலாசியர், ஆய்வறிஞர், ஏராளமான இலக்கிய விருதுகளுக்கு சொந்தக்காரர் என்னும் ஏராளமான சிறப்புகளுக்கு உரியவர் இலங்கையைச் சேர்ந்த தோழி லறீனா அப்துல் ஹக் அவர்கள்.  அவருடைய காத்திரமான கருத்தாழமிக்கப் பதிவுகளிலிருந்து சில..

(முக்கியக்குறிப்பு – இத்தளத்துக்குச் செல்லுமுன் நம்முடைய கணினியின் ஒலியளவைக் குறைத்துக்கொண்டு செல்வது நலம். சட்டென்று எங்கிருந்தோ பாடல் ஒலித்துத் திடுக்கிடச்செய்கிறது. தங்களுடைய தளங்களில் தானியங்கியாக இதுபோன்று பாடல்களை ஒலிக்கவிடும் பதிவர்கள்,  பதிவினை ஊன்றிப்படிக்க இயலாமல் வாசகர்க்கு ஏற்படும் சங்கடத்தை உணர்ந்தால் நல்லது. )







இத்தொடரில் நான் குறிப்பிட்டுள்ள பதிவர்களுள் ஓரிருவர் தவிர மற்றவர்கள் மற்றத் தளங்களுக்கு வருகை புரிவதோ கருத்திடுவதோ இல்லை என்றாலும் நான் வியந்து வாசிக்கும் பதிவர்கள் என்ற வகையில் அவர்களைக் குறிப்பிட்டுள்ளேன். இங்கே குறிப்பிடப்பட்டவர்களோடு, என் நட்பு வட்டத்தில் உள்ள நான் தொடரும், அனைத்துப் பதிவர்களும் எனக்குப் பிடித்த, என் மனம் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  


வாசிக்கும் வலைப்பூ வழியே நான் தொடரும் பதிவர்கள் ஒவ்வொருவரிடமும் என்னைக் கவர்ந்த அம்சங்களாக அழகிய எழுத்துவன்மை, படைப்பாற்றல், தமிழார்வம், கவித்திறம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, நட்புறவு, சுவாரசியமான அனுபவப்பகிர்வு, பயணக்குறிப்புகள் என ஏராளமுண்டு. அனைவரைப் பற்றியும் எழுதத் தொடங்கினால் இத்தொடருக்கு முடிவே இராது. எனவே நட்புகள் அனைவருக்கும் என் அன்பினைத் தெரிவித்து இத்தொடரை நிறைவு செய்கிறேன். என் எழுத்தை வாசித்தும் ஊக்கந்தரும் பின்னூட்டங்கள் அளித்தும் என்னைத் தொடர்ந்து எழுதவைத்துக் கொண்டிருக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. 




இத்தொடரில் என்னை இணைத்த ஊஞ்சல் கலையரசி அக்காவுக்கு என் சிறப்பு நன்றி. 

17 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 (தொடர் பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுத்த கலையரசி அக்காவுக்கு என் அன்பான நன்றி.  அவர் தம்முடைய ஊஞ்சல் வலைப்பூவில் மூன்று தொடர் பதிவுகளில் தம்மைக் கவர்ந்த பல அருமையான பதிவர்களை அடையாளங்காட்டியமைக்காக அவருக்கு என் இனிய பாராட்டு.  அவர் அடையாளங்காட்டிய பதிவர்கள் பலரும் என்னையும் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. 

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் அனைத்தையும் ஒரு பூமாலையாக்கி வாசிக்கும் வலைப்பூ என்ற பெயரில் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வலைப்பூவை எனக்கான பிரத்தியேக சேகரிப்பென்றுதான் ஆரம்பத்தில் எண்ணிமகிழ்ந்திருந்தேன். ஆனால் என்னைத் தொடரும் பதிவர்கள் சிலருக்கும் அது உபயோகமாக இருப்பதாக அறிந்தபிறகு மகிழ்ச்சி பன்மடங்காகிவிட்டது.  இத்தொடர் பதிவில் நான் தொடரும் பதிவர்கள் அனைவரையும் அடையாளங்காட்டத்தான் ஆசை.. ஆனால்… அவர்களுள் பலரையும் எனக்கு முன்பு தொடர்ந்த நட்புகள் அடையாளங்காட்டிவிட்டமையால் பதிவுலகில்  எனக்குத்தெரிந்து இதுவரை குறிப்பிடப்படாத  பதிவர்களுள் என்னைக் கவர்ந்த சில எழுத்தாளுமைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.




பெண்ணியல்புகளை மிகத் தீர்க்கமாகவும், நுண்மையாகவும், பொருண்மையாகவும் கையாளக்கூடிய எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் தோழி சக்திஜோதி.  கருத்தாழமிக்க கவிதைகளால் பரிச்சயமானவர்.  தற்சமயம் குங்குமம் தோழியில் தொடர்ந்து எழுதிவரும் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் பாடல்கள் வாயிலாய் இவர் வெளிப்படுத்தும் பெண்களின் உடல், மனம், மொழி சார்ந்த இவரது  சிந்தனைகளும் ஆய்வுகளும் அனுபவம் சார்ந்த கருத்தோட்டங்களும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை. தற்காலப் பெண்களின் வாழ்வியலையும் அனுபவச் செறிவுகளையும் சங்ககாலப் பெண்டிர் வாழ்வியலோடு பிணைத்து மிக அழகாக அறியத்தருகிறார்.  சான்றுக்கு சில…




இதுவரை சுமார் 18  பதிவுகள் குங்குமம் தோழியில் வெளிவந்திருந்த போதும் வலையில் ஏனோ எட்டே பதிவுகள்தாம் பதிவேற்றப்பட்டுள்ளன.  அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் ஜூன் மாதத்தோடு வலையேற்றம் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் பல அற்புதமான கவிதைகளை வழங்கும் இவர் வலையிலும் அவற்றைப் பதிவு செய்து பலருக்கும் வாசிக்கத்தரவேண்டும் என்பதே என் விருப்பம்.




நாம் எளிதில் கடந்துபோகும் ஒரு எளிய விஷயத்தைக்கூட  அழகியலாக்கும் அல்லது மனத்தை நெகிழ்விக்கும் எழுத்துக்கு உரிய  எழுத்தாளுமை வண்ணதாசன் அவர்கள். கல்யாண்ஜி என்றும் அறியப்படும் இவரது எழுத்துகளை வாசிப்பது ஒரு வரம் என்பேன். சமவெளி என்ற இவரது தளத்தில் அவ்வப்போதுதான் எழுதுகிறார். ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக இவரது படைப்புகளை வாசிக்க முடிகிறது.  இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றையும் நேசிக்கும் அவற்றோடு உரையாடும் அதியற்புத நேசமனம் இவருடையது.  அந்த நேசமனம் இவரது படைப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவது அழகு.








நம் மதிப்புக்குரிய ஜீவி சார் எழுதிய ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை என்னும் நூலின் அறிமுகத்தை நம் பதிவுலக நட்புகள் பலரும் எழுதியிருந்தாலும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் குறித்த விரிவான தொடராக தம்முடைய வலைப்பூவில் நம் அன்புக்குரிய வை.கோபாலகிருஷ்ணன் சார் எழுதிவருவதை நம்மில் பலரும் அறிவோம். அற்புதமான அப்படைப்பாளிகளோடு இன்னும் சில அரிய எழுத்தாளர்களின் எழுத்து குறித்தும் படைப்புகள் குறித்தும் அறிய விரும்புவோர்க்கு அழியாச்சுடர்கள் தளம் ஒரு வரப்பிரசாதம்.








பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில் அவரவர்  தாய்மொழியில் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின்  கடமை எனக் குறிப்பிடும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரான பி.ஜெகநாதன் அவர்கள் தம் வலைப்பதிவான உயிரியின் நோக்கமும் அதுதான் என்கிறார்.







சிறந்த சிந்தனாவாதி, நல்லதொரு எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்,  புத்தகப்பிரியர், தயாளகுணம் மிக்கவர், நட்புக்கு நல்லிலக்கணம், நகைச்சுவை உணர்வு மிக்கவர், சமூக அக்கறை மிகுந்த மனிதர் என்று ஏராளமான நல்லியல்புகளைக் கொண்டு, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலருக்கும் பரிச்சயமான பெயர் டெல்லி ஷாஜகான் அவர்கள்.  சமீபத்திய சென்னை வெள்ளப் பேரிடரின்போது மத்திய அரசு வழங்கிய டோல் தொகை ரத்து,  ரயில் குடிநீர் போன்ற  பல உதவிகளுக்கு முக்கியக் காரணகர்த்தாவாக,  முன்னின்றும் பின்னணியில் இருந்தும் செயல்பட்டவர்.

கல்வி சார்ந்த எந்த உதவியானாலும் தயங்காமல் இவரைக் கோரும் நெஞ்சங்கள் ஏராளம். தன்னால் இயன்றவற்றை சத்தமின்றி தனியாகவும், இயலாதவற்றை மற்ற நட்புகளின் உதவிக்கரங்களோடு இணைந்தும் செயலாற்றுவதில் வல்லவர். பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமூக நலன் குறித்த அக்கறையுடனும் பகிரப்படும் இவரது கருத்துகள் வீச்சும் விவேகமும் நிறைந்தவை. புதியவன் பக்கம் என்ற இவரது வலைப்பூவிலிருந்து சான்றுக்கு சில பதிவுகள்...








என்னைக் கவர்ந்த மேலும் சில பதிவுகளின் அறிமுகம் அடுத்த பதிவில்...