30 June 2026

மலைகளுக்கு நடுவில் மனம் மயக்கும் சோலை

 

1. கற்பாலமும் அருவியும்

மேஃபீல்ட் கார்டன் (Mayfield Garden) பற்றியும் அதன் பருவகால அழகு பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். விளம்பரங்களிலும் பார்த்திருக்கிறேன். நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியிலிருந்து சுமார் 200 கி.மீ. மேற்கே உள்ளது ஆஸ்திரேலியாவில் பிரசித்தமான மற்றும் பிரமாண்டமான தனியார் பூங்காவான மேஃபீல்ட் கார்டன். ஆனால் அங்கே போவேன் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததே இல்லை. யூகலிப்டஸ் மலைக்காடுகளுக்கு அப்பால் எங்கோ இருக்கும் தோட்டத்தைப் பார்க்க மெனக்கெட்டுப் புறப்பட்டுப் போவதெல்லாம் அசாத்தியம் என்று நினைத்திருந்த வேளையில்தான் எதிர்பாராதவிதமாக ஒரு வாய்ப்பு அமைந்தது.

2. வாசனைத் தோட்டம்

3. வண்ண மலர்கள்

2026-ஐ வரவேற்கும் முகமாகவும் மூன்றுநாள் விடுமுறையைக் கழிக்க ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தேடியும் எங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். வீட்டுப் பறவைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு நானும் மகளும் மகளின் வளர்ப்பு நாய்களோடு எங்கள் சிறகுகளை விரித்தோம். மகளுடைய முதல் road trip. ப்ளூ மவுண்டன்ஸ்தான் இலக்கு. நாங்கள் Airbnb-ல் வீடெடுத்துத் தங்கியிருந்ததோ ப்ளூ மவுண்டன்ஸ்க்கு மறுபக்கம் இருந்த மலைகளுள் ஒன்றில். அங்கிருந்து ப்ளூ மவுண்டன்ஸ் போய்வருவதே ஒரு பெரிய சாகசப் பயணம் போல் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து நாங்கள் போய்வந்த அந்த சாகசப் பயணத்தைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

4. ஆங்காங்கே சலசலக்கும் சின்னச் சின்ன அருவிகள்

5. நன்கு பராமரிக்கப்பட்டுவரும் தோட்டம்

நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து பத்தே நிமிட தூரத்தில்தான் மேஃபீல்ட் கார்டன் இருக்கிறது என்று அறிந்தபோது எனக்குப் பெரும் வியப்பு. நாய்களுக்கு அனுமதி உண்டு என்பதும் தெரியவர எங்களுடைய பயணத்திட்டத்தில் மேஃபீல்ட் கார்டன் சட்டென்று இடம்பிடித்துவிட்டது.

6. பெரிய நீர்த்தேக்கம்

7. இயற்கையும் செயற்கையும் இணைந்து...

மேஃபீல்ட் கார்டனை மாபெரும் பூங்கா என்பதா, தோட்டம் என்பதா, சோலை என்பதாபொழுதுபோக்கிடம் என்பதா, ஓய்விடம் என்பதா தெரியவில்லை. எல்லாம் கலந்த கலவை என்றுதான் சொல்லவேண்டும். முழுவதையும் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு பருவகாலத்திலும் பூங்காவின் அழகைக் கண்ணுறும் ஆவலோடு மேஃபீல்ட் கார்டனுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். camping, திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு முன்பதிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம். 

8. பக்கத்திலிருந்த மேய்ச்சல்வெளி

9. தடாகத்தில் கருப்பு அன்னமும் நாமக்கோழிகளும்

வெட்டவெளியும் வெறும் மேய்ச்சல் நிலமுமாகக் காணப்படும் மலைப்பாங்கான பகுதியில் பாலைவனச் சோலை போல இப்படியொரு பூங்காவா என்று ஆச்சர்யமாக இருக்கும். அது உருவானதே தனிக்கதை. 

 

10. பெரிய குளத்தில் நீர்ப்பறவைகள்

11. குழந்தைகள் ஓடிவிளையாட பரந்த புல்வெளி

1984-ஆம் ஆண்டு ஹாக்கின்ஸ் குடும்பத்தார் ஒரு செம்மறிப் பண்ணை நிறுவுதற்பொருட்டு சுமார் 2,100 ஏக்கர் நிலப்பரப்பை வளைத்துப் போட்டபோது அந்த இடம் வெறும் மேய்ச்சல் நிலமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல பண்ணை வளர்ந்து இன்று சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவை எட்டியுள்ளது. பண்ணை நிலத்தின் ஒரு சிறு பகுதி அதாவது 160 ஏக்கர் நிலப்பகுதிதான் இன்று மேஃபீல்ட் கார்டன் என்னும் தனித்துவமான பூங்காவாக உருவாகியுள்ளது. இல்லை, இல்லை, உருவாக்கப்பட்டுள்ளது. 

12. இடப்பக்க ஓரத்தில் தெரிவதுதான் ஹாக்கின்ஸ் குடும்பத்தினரின் வீடு

13. பஞ்சுப்பொதி போல் தொலைவில் மேயும் செம்மறிகள்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்படும் மேய்ச்சல் நிலத்தின் நடுவில் வீட்டைக் கட்டி, கால்நடைப் பண்ணையை நிர்வகித்து வாழவேண்டிய வறட்டு வாழ்க்கையை சுவாரசியமாக்குவதற்காக ஹாக்கின்ஸ் குடும்பத்தார் ஒரு பூங்காவை உருவாக்கினர். தங்களது சொந்த உபயோகத்துக்காக என்றாலும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி, உலகின் பல்வேறு வகையான தாவரவினங்களையும் கொண்டுவந்து நட்டு பராமரித்து, அரண்மனைத் தோட்டம் போன்ற பிரமாண்டமான பூங்காவை உருவாக்கினர். Chinese Pagoda எனப்படும் அடுக்குத் தூபியும் கற்பாலங்களும், தாமரைக் குளங்களும், அருவிகளும் உருவாக்கப்பட்டு அழகுக்கு அழகு சேர்த்தன. 

14. தாமரைக்குளம்

15. வண்ண வண்ண இலைகள்

16. ஜப்பானிய மேப்பிள் இலைகள்

கோடைகாலம், வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என பருவகாலங்களுக்கு ஏற்ப புதுப் புது வண்ணம் காட்டி வசீகரிக்கும் வகையில் தாவர வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஹாக்கின்ஸ் குடும்பத்தார் மட்டுமே பார்த்து ரசித்து அனுபவித்து வந்த பூங்கா, 2008-ஆம் ஆண்டு நலநிதி திரட்டுதற் பொருட்டு, ஒரே ஒரு நாள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. அவ்வளவுதான். பூங்காவின் அழகில் சொக்கிப்போன மக்கள், அடிக்கடி திறந்துவிடுமாறு கோரிக்கை விடுக்கத் தொடங்கினர். பலன், இப்போது வருடத்தில் 363 நாட்கள் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒருவருக்குக் கட்டணம் 20 ஆஸ்திரேலிய டாலர்கள். மிகுந்த மெனக்கெடலுடன் ஒரு அழகிய பூங்காவை உருவாக்கி நிர்வகிக்கும் அந்த முயற்சிக்காக தாராளமாகத் தரலாம்.

17. இளஞ்சிவப்புவண்ணத் தாமரை

18. அடர்சிவப்புவண்ணத் தாமரை

19. லாவண்டர் தோட்டம்

20. லாவண்டர் பூவில் தேனீ

நாங்கள் போயிருந்தபோது கோடையின் இறுதி என்பதால் அடுத்து வரவிருக்கும் இலையுதிர் காலத்துக்கு அச்சாரமாக வண்ணபேதம் காட்டி வசீகரித்துக் கொண்டிருந்தன அங்கிருந்த மரங்கள். படகு சவாரிக்கு ஒரு பரந்த குளமும் உண்டு. நாங்கள் போயிருந்தபோது பராமரிப்புப் பணிக்காக படகு சவாரி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பகோடாவும் கூட சிதிலமுற்றிருப்பதாக சொல்லப்பட்டது. 

21. யாருடைய சிலை என்று தெரியவில்லை

22. வியக்கவைக்கும் பிரமாண்ட பாறை வளையம்

சுற்றுலா பயணிகளைக் கவரும் மிக முக்கிய அம்சம் Maze எனப்படும் புதிர்ப்பாதை. 1.8 மீ. உயரமும், 1.4 கி.மீ. நீள சுற்றுப்பாதையும் உள்ள புதிர்ப்பாதைக்குள் நுழைந்துவிட்டால் வழி கண்டுபிடித்து வெளியே வருவது பெரிய சவால். தொலைந்துபோய் மீண்டும் மீண்டும் வந்த வழியே வந்து, பார்த்தவர்களையே மீண்டும் பார்த்து, சிரித்து, அசடு வழிந்து என சுவாரசியமான விளையாட்டு அது. 

23. புதர்ப்புதிரின் ஒரு பக்கம்

23. புதர்ப்புதிரின் இன்னொரு பக்கம்

24. சிங்கங்களும் எங்கள் தங்கங்களும் 

25. பந்தலில் படர்ந்து நிழல் தரும் கொடியும் காய்களும்

பந்தற்காலில் மஞ்சள் பூசிப் பார்த்திருக்கிறேன். இதென்ன, மரங்கள் தோறும் மஞ்சள்? முதன்முறையாகப் பார்ப்பதால் என்னவென்று தெரியாமல் படம் மட்டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டேன். வழக்கம்போல் தேடும்போதுதான் விடை கிடைத்தது. மஞ்சள் நிறத்தில் இருப்பவை மஞ்சள் கல்பாசி. அசைவ சமையலுக்கு கல்பாசி என்றொரு மசாலாப் பொருளைச் சேர்ப்போம் அல்லவாஅதே இனத்தைச் சேர்ந்ததுதான் இந்த மஞ்சள் கல்பாசி. இது மரங்களில் படர்ந்து வளர்ந்திருப்பதால் யாரோ மரம் முழுக்க மஞ்சள் பூசியது போல் அவ்வளவு அழகாகக் காட்சி தருகின்றன.  

26. மஞ்சள் கல்பாசி வளர்ந்த மரம் 1

27. மஞ்சள் கல்பாசி வளர்ந்த மரம் 2

மேஃபீல்ட் கார்டனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதியையும் தேவையையும் முன்னிட்டு தோட்டத்துக்குள் நுழையும் இடத்திலேயே அருமையான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. சொந்தத் தோட்டத்திலும் அக்கம்பக்கப் பண்ணைகளிலும் விளையும் விளைபொருட்களையும் இறைச்சிவகைகளையும் கொண்டு பிரத்தியேகமான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. மேஃபீல்ட் கார்டனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளால் உள்ளூர் விவசாயிகள், கடைக்காரர்கள், வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் என பலரும் பெரிய அளவில் பயனடைகிறார்கள்.

28. இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள்

29. ரோமத்துக்காக வளர்க்கப்படும் அலபாகாக்கள்

30. ஒன்றாக மேயும் ஆடு, மாடு & அல்பாகாக்கள்

31. வேலியோரம் ஓய்வெடுக்கும் மாடுகள்

கருப்பு அன்னம், தாழைக்கோழி, நாமக்கோழி, விதவிதமான வாத்துகள், நீர்க்காகம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பறவைகளும், காக்கட்டூ, ரோஸல்லா, லாரிகீட், மேக்பை உள்ளிட்ட பறவைகளும், பாம்பு, நீல நாக்கு அரணை போன்ற ஊர்வனவற்றையும் பூங்காவினுள் பார்த்தோம். போகும் வழியில் கால்நடைகளோடு, நரி, முயல், கங்காரூகள் என வளர்ப்பு மற்றும் காட்டுவிலங்குகள் பலவற்றையும் பார்த்தோம். கேமராவை எடுத்துப் படம்பிடிக்க அவகாசம் இல்லாததால் சிலவற்றை மொபைலில் படம் பிடித்தேன். 
32. தற்செயலாகப் பார்வையில் பட்ட பாம்பு (Tiger snake)

33. கொஞ்சமும் பயமில்லாமல் நின்று போஸ் கொடுக்கும் நரி

34. வெயில் காயும் நீல நாக்கு அரணைக்குட்டி

நாங்கள் தங்கியிருந்த இடமும் அமைதியான அழகான இடம். வீட்டைச் சுற்றி பசுமஞ்சள் புல்வெளிகளும் ஆங்காங்கு மேயும் மாடுகள், செம்மறிகள், வெள்ளாடுகள், குதிரைகள், லாமாக்கள், அலபாகாக்கள் என கால்நடைகளும், கூட்டம் கூட்டமாய்த் தாவியோடும் கங்காரூக்களும், புதர்களுக்குள்ளிருந்து தலைகாட்டும் பெருமுயல்களும், நின்று நிதானமாய் நடைபோடும் நரிகளும், காலைநேரத்தில் துயிலெழுப்பும் காகம், குக்குபரா, மேக்பை பறவைகளும், மாலையானால் படையெடுக்கும் பெயரறியாப் பூச்சிகளின் பட்டாளமும் என ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவம்.

35. சாலையோரம் மேய்ந்துகொண்டிருந்த கங்காரூக்கள்

36. திடீர் ரென்று தோன்றி மறையும் பெருமுயல் (Hare)

37. கிரிம்சன் ரோசெல்லா

வாகனங்களில் பயணிக்கும்போது வெகு கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போது எங்கிருந்து கங்காரூக்களும் வல்லபிகளும் சாலையைக் கடக்குமோ, வாகனத்தில் வந்து மோதுமோ என்று பயந்துகொண்டேதான் காரைச் செலுத்த வேண்டும். நல்லவேளையாக எங்களுக்கு அப்படி எந்த மோசமான அனுபவமும் ஏற்படவில்லை. ஆனால் சாலையோரத்தில் ஆங்காங்கே வாகனங்களில் அடிபட்டு இறந்துபோன ஏராளமான கங்காரூக்களைப் பார்க்கமுடிந்தது. எப்படியோ துணிகரமான இந்த மலைப்பாதைப் பயணத்தை முடித்துவிட்டுப் பத்திரமாக வீடு வந்து சேர்ந்து ஆறு மாதங்களும் கடந்துவிட்டன. வேறு வேறு வேலைகளினாலும் படங்களை எடிட் பண்ண சோம்பல் பட்டும் ஒத்திப்போட்டுக்கொண்டே போய் இப்போதுதான் எழுத வாய்த்திருக்கிறது. 

38. குப்பென்று பூத்திருக்கும் மஞ்சள் பூக்கள்

39. நாமக்கோழிகள்

40. வளர்ப்புச் செல்லங்கள்

மொத்தத்தில் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அமைதியான இயற்கைச் சூழலில் சில நாட்கள் இருந்துவந்தது மனதுக்கு மிகவும் உற்சாகம் தருவதாக இருந்தது. அடுத்த முறை மேஃபீல்ட் கார்டனைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் வசந்தகாலத்தில் பார்க்கவேண்டும். அப்போதுதான் இயற்கையின் அழகு உச்சத்தில் இருக்கும்.  

14 May 2026

அப்பா!


சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுக் காப்பாற்றப்பட்ட பிறகு அப்பாவின் வாழ்க்கைமுறையில் முதன்முறையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 18 வயது முதல் 78 வயது வரை கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக பாக்கெட் பாக்கெட்டாக ஊதித் தள்ளிய சிகரெட்டை இனி அறவே தொடக்கூடாது என்றபோது கூட அவர் அவ்வளவு அதிர்ச்சி அடையவில்லை. அசைவ உணவு முக்கியமாக ஆட்டிறைச்சி கூடாது, எண்ணெய்ப் பண்டம் கூடாது, நெய், சர்க்கரை சேர்த்த இனிப்புகள் கூடாது (நீரிழிவு நோயும் இருந்தது) என உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடுகளைச் சேர்த்தபோதுதான் அப்பா மொத்தமும் அதிர்ந்து போனார். எதெது கூடாது என்று மருத்துவர் குறிப்பிட்டாரோ அதையெல்லாம் கேட்டு அடம்பிடித்தார். கிடைக்காவிட்டால் கோபம், உண்ணாவிரதம், மௌன விரதம் என்று குழந்தையைப் போல அடம்பிடித்த அவரைத் தேற்றுவதெல்லாம் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் என்பதால் மாதாமாதம் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் இறுமாப்பு வேறு. 

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் உடல்நலச் சீர்குலைவுக்குப் பிறகு அப்பா படுத்தப் படுக்கையாகிப் போனார். வயோதிகம் தன் பிடியை இறுக்கி மூச்சுத் திணறச் செய்து அந்திமத்தின் வாயிலில் அப்பாவை அசைவற்றுக் கிடத்தியிருந்த போதும் வாழ்வின் மீதான பிடிப்பு உணவு ரூபத்தில் அவர் வாயில் எச்சில் ஊறவைத்துக்கொண்டே இருந்தது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஆகாதவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒருவேளை அதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கக்கூடுமோ என்று பயந்து பயந்து அவர் கேட்டதெல்லாம் உடனுக்குடன் தரப்பட்டன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆசை மட்டுமே எஞ்சியது. வாயும் வயிறும் ஒத்துழைக்க மறுத்தன. உணவின் மீதான பிடிப்பு குறைந்த பிறகு உயிர்மூச்சும் மெல்ல மெல்லக் குறைந்து கடந்த 6-ஆம் தேதி (6-5-26) இந்த உலக பந்தத்திலிருந்து விடைபெற்றுவிட்டார் அப்பா! 

எங்கள் அப்பாவிடம் எத்தனையோ விமர்சிக்கத்தக்க குணங்கள் இருந்தாலும் அடிப்படையில் நேர்மை தவறாதவர். எந்த இடத்திலும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காதவர். தவறு கண்டால் பொறுக்கமாட்டார். துணிச்சலோடு தட்டிக் கேட்பார். முன்கோபத்தாலும் யார் என்ன என்று பாராமல் சட்டென்று கை ஓங்குதலாலும் பணியிடத்தில் பதவி உயர்வுகளையும் பல நல்ல வாய்ப்புகளையும் இழந்தவர். பிற்காலத்தில் தன் தவறுணர்ந்து ‘முன்கோபம் கூடாது’ என பேரப் பிள்ளைகளுக்குப் போதித்தவர். 

மிகக் குறைந்த வருமானத்தோடும், குடும்பக் கடன்களோடும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான நிலையிலிருந்த எங்கள் குடும்பத்தை அப்பா தன்னுடைய அயராத உழைப்பினால் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார். என்னையும் தம்பியையும் படிக்கவைத்தார். சொந்தமாக வீடு கட்டினார். 

எங்கள் பரம்பரையில் முதன்முதலில் வெளிநாடு சென்ற பெருமை அப்பாவுக்குதான் உண்டு. பணி நிமித்தம் ஜிம்பாப்வேக்குச் சென்று அவர் பணியாற்றிய நான்காண்டு கால அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட வாய் வலிக்காமல் பேசிப் பேசி பீடு கொள்வார். எங்கள் குடும்பங்களில் முதன்முதலில் ஸ்கூட்டர் வாங்கிய பெருமையும் கார் வாங்கிய பெருமையும் அப்பாவைச் சேரும். தானே கார் ஓட்டவும் கற்றுக்கொண்டு சில காலம் ஓட்டி மகிழ்ந்தார். 

அப்பாவுக்கு இறுதிவரை உடல்நலப் பிரச்சனை தவிர்த்து வேறெந்த பிரச்சனையும் இல்லை. கடைசிவரை அவரது குரல் கணீரென்று ஒலித்தது. எலும்பும் தோலுமாகப் படுக்கையில் கிடந்த அப்பாவை, அவருக்கு உடன்பாடு இல்லாதபோதும் அவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்த மனைவி, அழைத்த குரலுக்கு ஓடோடிச்சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்தும், கேட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் வாங்கித்தந்தும் பார்த்துக்கொண்ட மகன், ஆசைப்பட்டுக் கேட்கும் உணவு எதுவானாலும் அலுப்பின்றி சமைத்து அக்கறையோடு பரிமாறிய மருமகள், பாசமான பேரப்பிள்ளைகள், அன்பான மகள், உடன்பிறந்தோர், சுற்றம், நட்பு என நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்! 

ஒரு மகாராஜாவைப் போலவே இராஜ உபச்சாரங்களோடு இறுதிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார் அப்பா என்று ஆறுதல் கொள்வதைத் தவிர எம்மைத் தேற்றும் வழி வேறில்லை. 😔😔


29 April 2026

டிங்கோ கொலைகள் (3)

ஆஸ்திரேலியாவின் குற்றவியல் வரலாற்றில் கறை படிந்த ஒரு வழக்கு ‘அஸாரியா (Ch)சேம்பலேன் கொலை வழக்கு’.

“என் குழந்தையை டிங்கோ தூக்கிச் சென்றுவிட்டது” என்று தன்னுடைய இரண்டு மாதக் கைக்குழந்தையை இழந்த லிண்டியின் கதறல் அன்று எவராலும் செவிசாய்க்கப் படவில்லை. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு டிங்கோ மீது பழியைப் போடுகிறாள் என்றும் சொல்லி காவல்துறை அவளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. ஆயுள் தண்டனையும் பெற்றுத் தந்தது.

உலுருவில் லிண்டி அஸாரியாவுடன் 

அஸாரியா கொலைவழக்கு நடந்துமுடிந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் கூட, இன்றளவும் பலருடைய ஆத்திரத்தையும் அதிருப்தியையும் பெற்றிருக்கும் போலித்தனமான குற்ற விசாரணையும், ஆட்சி அதிகாரத்தின் ஒரு தரப்பு வாதமும் அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பும் என்றைக்குமே சரி செய்ய முடியாத சட்டச் சீர்கேடு என்பதில் சந்தேகமே இல்லை.

நடந்த எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாய், மர்மத்தின் நீட்சியாய், மத்திய ஆஸ்திரேலியாவின் செம்மண் பாலையில் ஒற்றையாய் நின்றுகொண்டிருக்கிறது, 3.6 கி.மீ நீளமும், 1.9 கி.மீ அகலமும், 348 மீ. உயரமும், 9.4 கி.மீ. சுற்றளவும் கொண்ட, 600 மில்லியன் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த உலுரு என்னும் பிரமாண்டமான மணற்பாறை. கண்ணுக்குத் தெரியும் பாறையின் உயரம் மட்டுமே கணக்கு. மண்ணுக்குள் புதைந்திருக்கும் மீதத்தின் அளவு பல கி.மீட்டர்கள் இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

உலுரு (விக்கிபீடியா)

உலுருவின் உண்மை நிறம் சாம்பல்வண்ணம் என்றாலும் ஏராளமான இரும்புத்துகள்களைக் கொண்டிருப்பதால் தொலைவிலிருந்து பார்க்கும்போது துருவேறியது போல செங்காமட்டை நிறம் காட்டுவது இதன் சிறப்பு. செங்காமட்டை வண்ணம் மட்டுமல்லாது, செந்தழல் சிவப்பு, அடர்சிவப்பு, நீலம், ஊதா என ஒரே நாளில் பலவண்ணங்கள் காட்டி வசீகரிக்கும். சூரிய உதயத்தின்போதும் அஸ்தமனத்தின்போதும் இப்பாறை செக்கச்செவேலென்று காட்சியளிக்கும்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றைப்பாறை என்னும் சிறப்பை உடைய உலுரு அப்பகுதியில் வசித்துவரும் ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனமான அனங்கு மக்களின் பாரம்பரிய மற்றும் ஆன்மீக நம்பிக்கையோடு தொடர்புடையது. உலுருவில் உள்ள குகைகளில். அனங்கு மக்களின் கனவுக்கால கதைகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களின் வயது ஐயாயிரம் வருடங்கள் இருக்கலாம். தற்போது உலுரு உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

ஏன் உலுருவைப் பற்றி இவ்வளவு பிரஸ்தாபம்? ஏனெனில் லிண்டியின் வாழ்வில் நிகழ்ந்த துயர சம்பவத்துக்கு அதுவே ஆரம்பப்புள்ளி, அதுவே மையப்புள்ளி. அதுவே முற்றுப்புள்ளியும் கூட.

1980-ஆம் ஆண்டு லிண்டியும் மைக்கேலும் ஏடன் (7), ரீகன் (4), அஸாரியா (68 நாள்) என தங்களுடைய மூன்று குழந்தைகளோடு விடுமுறையைக் கொண்டாட குவீன்ஸ்லாந்தின் மவுண்ட் இஸாவிலிருந்து டார்வினுக்குப் புறப்பட்டனர். பதினாறு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பதினாறாவது வயதில் ஏற்கனவே ஒரு முறை பார்த்திருந்த உலுருவை மீண்டும் பார்க்க விரும்பினார் லிண்டி. உலுருவின் மீதான ஈர்ப்பு அவரது வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

உலுருவில் மூன்றுநாள் முகாம் திட்டமிடப்பட்டது. இரண்டாம் நாள் (17 ஆகஸ்ட் 1980) இரவுணவை கூடாரத்துக்குச் சற்றுத் தொலைவில் மைக்கேல் தயார் செய்துகொண்டிருந்தார். அங்கு முகாமிட்டிருந்த மற்றவர்களும் உணவுவேளைக்காக அங்கே கூடியிருந்தனர். லிண்டி குழந்தை அஸாரியாவைக் கூடாரத்தினுள் மென்பஞ்சுத் தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு உணவருந்த வந்த ஒரு நிமிடத்திலேயே குழந்தையின் அலறல் கேட்டது. லிண்டி கூடாரத்தை நோக்கிச் சென்றபோது டிங்கோ ஒன்று எதையோ வாயில் கவ்வியபடி கூடாரத்திலிருந்து வெளியே ஓடியதைப் பார்த்தார். இருட்டில் என்னவென்று புரியாமல் ஓடிப்போய்த் தொட்டிலைப் பார்த்தபோது அங்கே குழந்தை இல்லை. அடுத்த நொடியே லிண்டி கூக்குரலிட்டார், “என் குழந்தையை டிங்கோ தூக்கிச் சென்றுவிட்டது”

எல்லாப் பக்கமும் தேடப்பட்டது. காவல்துறையும் வந்து தேடியது. எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையின் உடல்கூட கிடைக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து கூடாரம் இருந்த இடத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் குழந்தை அஸாரியா அணிந்திருந்த ஆடைகள் மட்டும் கிடைத்தன, கழுத்துப் பக்கம் இரத்தக் கறையோடு. அதில் எந்த இடத்திலும் டிங்கோவின் பல் பதிந்த தடயம் இல்லை. எனவே ஆடைகளை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரிகள், யாரோ குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதாக, தங்களது புதிய கண்டுபிடிப்பைக் கூறினர். லிண்டி மற்றும் மைக்கேல் பக்கம் சந்தேகம் திரும்பியது.

லிண்டி மீண்டும் மீண்டும் சொன்ன டிங்கோ கதையை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது. 

மைக்கேல், செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபையில் பாதிரியாராக இருந்தார். லிண்டியும் கடமை தவறாத ஒரு பாதிரியாரின் மனைவியாக திருச்சபைப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். போதாக்குறைக்கு லிண்டியின் அப்பாவும் செவன்த் டே அட்வென்டிஸ்ட் திருச்சபையின் பாதிரியாராக இருந்தவர்தான். இவ்வளவு போதாதா? மைக்கேல் மற்றும் லிண்டி சார்ந்திருந்த மதக்கோட்பாடு குறித்த ஐயப்பாடுகள் பொதுமக்களிடத்தும் காவல்துறையிடத்தும் புதுப்புது யூகங்களை உருவாக்கத் தொடங்கின. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கின. குழந்தையை தாயே கொன்று கடவுளுக்குப் பலி கொடுத்திருக்கலாம் என்ற எண்ணங்கள் வலுப்பெற்றன. வழக்கையும் திசைதிருப்பின. டிங்கோவை அனைவரும் புறங்கையால் ஒதுக்கிவிட்டு லிண்டியையே குற்றவாளியாக்கினர்.

டிங்கோக்கள் ஆபத்தற்றவை என அப்போது கருதப்பட்டன

டிங்கோக்களின் வேட்டைக்குணம் பற்றியும் இதற்கு முன்பு சில டிங்கோக்களிடம் கண்டறியப்பட்ட மூர்க்கவியல்புகளையும் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்ட வாதங்கள் யாவும் ஜூரிகளால் நிராகரிக்கப்பட்டன. 15 டிசம்பர் 1980 முதல் 20 பிப்ரவரி 1981 வரை நடைபெற்ற விசாரணையின் முடிவில் லிண்டி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் நேரடியாக ஒளிபரப்பான நீதிமன்ற நிகழ்வு அதுதான். ஆனால் காவல்துறையால் அத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மறுவருடமே (13 செப்டம்பர் 1982) இரண்டாவது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லிண்டி இந்த முறை தப்பிவிடக்கூடாது என்று அதிகாரிகள் பெருமுயற்சி மேற்கொண்டனர். லிண்டிக்கு எதிராக தடயங்கள் திரட்டப்பட்டன. அல்லது அவர்கள் திரட்டியவற்றைத் தடயங்களாக மாற்றினர். ஒரு பெரிய கதை ஜோடிக்கப்பட்டது.

முதல் விசாரணைக்குப் பிறகு லிண்டியும் மைக்கேலும்

லிண்டி காரில் வைத்துக் குழந்தையைக் கொன்றுவிட்டு, கூடாரத்துக்குச் சென்று ‘டிங்கோ என் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டது’ என்று கூப்பாடு போட்டு அனைவரையும் திசைதிருப்பிவிட்டு, மீண்டும் காருக்கு வந்து குழந்தையின் உடலை அப்புறப்படுத்தியிருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. முகாமில் அவரோடு இருந்த மற்ற சுற்றுலா பயணிகள், உலுரு பகுதியைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள், டிங்கோக்களைப் பற்றி நன்கறிந்த அப்பகுதியைச் சேர்ந்த தேசியப்பூங்கா பாதுகாவலர்கள் ஆகியோரது சாட்சியங்கள் எவையும் லிண்டியைக் காப்பாற்ற உதவவில்லை.

வழக்கின் முடிவில் (29 அக்டோபர் 1982) லிண்டி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு கடுமையான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மைக்கேல் குற்றத்துக்கு உடந்தை என 18 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  எனினும் மற்ற இரு குழந்தைகளுக்காக, அது ‘ஒத்திவைக்கப்பட்ட தண்டனை’ என்றானது.

சிறைக்கு அனுப்பப்பட்டபோது லிண்டி நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இரு வாரங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை தாயுடன் இருக்க சட்டம் மறுப்புத் தெரிவித்து, பிறந்த ஒரு மணி நேரத்திலேயே குழந்தையைப் பிரித்து தந்தையிடம் ஒப்படைத்தது. லிண்டி மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். லிண்டியின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. வழக்கின் உண்மைத்தன்மையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் லிண்டிக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கினர். கமிட்டி அமைக்கப்பட்டு, அஸாரியா கொலைவழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

குழந்தை அஸாரியா காணாமற்போய் ஆறு ஆண்டுகள் கழித்து (1986) நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்தது. உலுருவின் மீது ஏறும்போது தவறிக் கீழே விழுந்த சுற்றுலாப் பயணியின் உடலை மீட்கச் சென்றவர்களின் கண்ணில் அகப்பட்டது, மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு குழந்தையாடை.

குழந்தைக்கு தான் அணிவித்திருந்ததாக லிண்டி குறிப்பிட்டிருந்த, ஆனால் மற்ற உடைகளோடு கிடைத்திராத ‘மேட்டினி ஜாக்கெட்’ எனப்படும் அந்த குட்டி ஆடை, அஸாரியா கொலைவழக்கில் மீண்டும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஏராளமான டிங்கோக்களின் பதுங்கிடங்கள் காணப்பட்ட இடத்தில் குழந்தையாடை கிடைத்ததாலும், வேறு சில தகவல் சரிபார்ப்பினாலும் லிண்டி குற்றமற்றவர் என நிரூபணமானது. மூன்றரை வருடங்கள் கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்தப் பிறகு 7 பிப்ரவரி 1986 அன்று லிண்டி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் 15 செப்டம்பர் 1988 அன்று லிண்டியும் மைக்கேலும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வெளியானது. 

விடுதலைக்குப் பிறகு லிண்டியும் மைக்கேலும்

ஆனால் ஆண்டுக்கணக்காக நடைபெற்ற வழக்குகளும் வழக்கு தந்த வலிகளும் அனுபவங்களும் சமுதாய அவமதிப்புகளும் கேலிகளும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும்  லிண்டியையும் மைக்கேலையும் வெவ்வேறு திசைகளில் நகர்த்திச் சென்றன. இருவரும் 1991-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று வேறு வேறு திருமண பந்தங்களில் இணைந்தனர்.

நீதியின் பேரில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதை சரிசெய்ய லிண்டி, மைக்கேல் தம்பதியினருக்கு அரசு தரப்பிலிருந்து 1.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. மிக முக்கியமாக, கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு அஸாரியாவின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் ‘டிங்கோ’ என திருத்தி எழுதப்பட்டது.

திருத்தி எழுதப்பட்ட அஸாரியாவின் இறப்புச் சான்றிதழுடன் லிண்டி

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு லிண்டி சொன்னது, “டிங்கோவை நாம் தாக்கினால் பதிலுக்கு நம்மைத் தாக்குமே தவிர மற்றபடி அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று எந்த ஆஸ்திரேலியரும் இனிமேல் சொல்ல முடியாது. டிங்கோக்கள் எப்போதுமே ஆபத்தானவை.”

அஸாரியா கொலைவழக்கை ஆதாரமாகக் கொண்டு 1985-ஆம் ஆண்டு ஜான் ப்ரைசன் என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர், Evil Angels  என்ற நூலை வெளியிட்டார். அதை அடிப்படையாகக் கொண்டு 1988-ஆம் ஆண்டு 'Cry in the dark'  என்ற திரைப்படம் வெளியானது. அதன் பிறகு ஏராளமான புத்தகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

(படங்கள் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியக இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.) 

23 March 2026

டிங்கோ கொலைகள் (2)

டிங்கோக்கள் தங்களை விட உருவில் பெரிய விலங்குகளை வேட்டையாடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதர்களைக் கொல்லுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பூர்வகுடி மக்களை டிங்கோக்கள் தாக்கியதாக இதுவரை எங்குமே பதிவாகவில்லை. காரணம் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையும் டிங்கோக்களின் வாழ்க்கையும் இணைகோடுகளாகவே பயணித்தனவே தவிர எந்தப் புள்ளியிலும் ஒன்றோடொன்று குறுக்கிடவில்லை.  

1. (G)கர்ரி தீவின் டிங்கோக்கள்

ஐரோப்பியக் குடியேற்றத்திற்குப் பிறகுதான் டிங்கோக்கள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் அங்கும் இங்குமாக அரங்கேறத் தொடங்கின. ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைமுறையும் டிங்கோக்களை அவர்கள் அணுகிய விதமும்தான் முக்கியக் காரணங்கள் எனலாம். 

டிங்கோக்களின் வாழ் எல்லைக்குள் அவர்களை அறியாமலேயே மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை விரிவுபடுத்தினார்கள் அல்லது உணவு எளிதாகக் கிடைப்பதால் டிங்கோக்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவத் தொடங்கின அல்லது இரண்டுமே எனலாம். 

ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் ஒன்றறக் கலந்தவை trekking, hiking, sailing போன்ற வெளிப்புற நடவடிக்கைகள். தனியாகவோ, இணையாகவோ, குழுவாகவோ, குடும்பமாகவோ  காடு, மலை, கடற்கரை, சமவெளி என ஏதாவதொரு இயற்கையான சூழலில் கூடாரம் அமைத்து முகாமிட்டு (Camping)  சில நாட்கள் தங்கியிருந்து தங்களைப் புதுப்பித்துத் திரும்புவது அவர்களது வழக்கம். முன்னேற்பாடாக அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களைக் கையோடு கொண்டுசெல்வதும், அந்தப் பகுதியில், இயற்கைச்சூழலில்  வசிக்கும் டிங்கோக்களை நட்பாக்கிக் கொள்ள அவற்றுக்கு உணவளிப்பதும் டிங்கோக்களின் குணத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கின.

2001-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறைக்காலத்தின்போது (G)கர்ரி தீவைத் தெரிவு செய்து மகிழ்வோடு சுற்றுலா சென்றிருந்தது குவீன்ஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம். ஒன்பது வயது சிறுவன் க்ளின்டன் கேஜூம் அவனுடைய ஏழு வயது தம்பியும் தாங்கள் முகாமிட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடற்கரையோர மணல் மேடுகளில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு டிங்கோக்கள் சிறுவர்களைத் தாக்கத் தொடங்கின. 

2. டிங்கோவால் உயிரிழந்த சிறுவன் க்ளின்டன் கேஜ்

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டுப் பெற்றோர் ஓடிவந்து காப்பாற்றுவதற்குள் க்ளின்டன் கேஜ் இரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவனைக் காப்பாற்றுவது சாத்தியமற்றுப் போனது. கை கால்களில் பலத்த கடிவாங்கியிருந்த அவனது தம்பி ஹெலிகாப்டர் மூலம் குவீன்ஸ்லாந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டான். அந்த இரண்டு டிங்கோக்களும் அரசு உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டன.

(G)கர்ரி தீவில் டிங்கோக்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்றாலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவனின் மரணம்தான் டிங்கோக்களால் ஏற்பட்ட கடைசி மரணமாக இருந்தது, பைப்பர் ஜேம்ஸின் மரணம் வரையிலும். 

3. டிங்கோ, செந்நாய் & ஓநாய் ஒப்பீடு

டிங்கோக்களும் ஓநாய்களையும் செந்நாய்களையும் போன்ற காட்டு விலங்குகளே. செந்நாய்களையும் ஓநாய்களையும் பார்த்தால் எப்படி மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்போமோஅப்படிதான் டிங்கோக்களிடமும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும். நாய்தானே என்ற அலட்சியத்தினாலேதான் பல ஆபத்துகள் நிகழ்கின்றன. 

4. கர்ரி தீவின் எச்சரிக்கை அறிவிப்பு
இயல் வாழிடத்தில் காட்டு விலங்குகளுக்கே உரிய மூர்க்கத்தோடும் வேட்டையாடும் இயல்போடும் வாழும் டிங்கோக்களிடமிருந்து எச்சரிக்கையாக விலகியே இருக்குமாறும் டிங்கோக்களை ஈர்க்கும் எந்தச் செயலிலும் ஈடுபடாதிருக்குமாறும் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

  • தனியாகப் போகாதீர்கள்.  குழுவாகச் செல்லுங்கள்.  தற்காப்புக்காக எப்போதும் கையில் ஒரு குச்சியை வைத்திருங்கள். 

  • குழந்தைகளை எப்போதும் கையெட்டும் தொலைவிலேயே வைத்திருங்கள். ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தைகளை எல்லா நேரமும் கண்காணித்துக்கொண்டே இருங்கள்.

  • டிங்கோக்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ  உணவளிக்காதீர்கள். 

  • ஓடாதீர்கள் (உடற்பயிற்சிக்காக என்றாலுமே). ஓடுவது டிங்கோக்களின் கவனத்தை ஈர்த்து அவை துரத்த ஆரம்பிக்கலாம். ஓடினால் துரத்துவது என்பது பொதுவாகவே நாய்களின் இயல்பு. கூட்டமாய் வேட்டையாடும் காட்டுநாய்களுக்குச் சொல்ல வேண்டுமா?
  •    
  • கம்பிவேலியிடப்பட்ட பகுதிக்குள்ளேயே முகாம் இடுங்கள்.  உணவு உண்ணுங்கள். மிச்சமீதி உணவுகளை அப்படியே விட்டுச் செல்லாதீர்கள். 

  • கம்பிவேலிக்கு வெளியில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருப்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களைக் கண்ட இடத்தில் போட்டுவைக்காமல், அவற்றின் வாசம் பரவாமல் தகுந்த பாத்திரங்களில் அல்லது பாதுகாப்பான உணவுப் பெட்டியில் பத்திரப்படுத்துங்கள். 

  • உண்ட பிறகான உணவுமீதங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள்.  


தூண்டிலிட்டு மீன்பிடிப்பவர்கள் கூட ஒருவராகச் செல்லாமல் இருவராகச் செல்வதே அத்தீவின் வழக்கம். காரணம், ஒருவர் தூண்டிலில் கவனத்தைக் குவித்திருக்கும்போது, ஏற்கனவே பிடித்துவைத்திருக்கும் மீன்களை டிங்கோக்கள் திருட்டுத்தனமாகவோ, முரட்டுத்தனமாகவோ கவ்விக்கொண்டு செல்வது அங்கு வழக்கமான நடக்கும் விஷயம் என்கிறார்கள்.

5. டிங்கோ 

டிங்கோக்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் அவற்றால் உண்ணக்கூடிய எல்லாமே உணவுதான். முக்கியமாக காட்டுவிலங்குகள். அவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் பழக்கப்படாதவை. எந்த ஆணைகளுக்கும் உடன்படாதவை. 

உணவுக்காக டிங்கோக்கள் மனிதர்களின் முகாம்களைச் சுற்றிவரத் தொடங்கின.  உணவு கிடைக்காதபோது மனிதர்களைத் தாக்கவும் துணிந்தன.  கூடாரங்களைத் தங்களுடைய கூரிய பற்களால் கிழித்து உள்ளே புகுந்து கிடைப்பதைக் கவ்விச் செல்லவும் அவை தயங்குவதில்லை, அது பச்சிளம்சிசுவாக இருந்தாலும். ஆம். அப்படியொரு சம்பவம் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிங்கோக்களை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்திய அதிபயங்கர சம்பவம் அது.  

நினைத்தாலே நெஞ்சு பதறும் அச்சம்பவம் பற்றி விரிவாக அடுத்தப் பதிவில்.

தொடரும்...

(படங்கள் உதவி Pixabay)