Showing posts with label தித்திக்குதே. Show all posts
Showing posts with label தித்திக்குதே. Show all posts

27 July 2025

தித்திக்குதே (4) மேப்பிள்

தேன், சர்க்கரைப் பாகு போலவே மேப்பிள் சிரப்பும் இனிப்புக்குப் பிரசித்தமானது. உலகளவில் பலராலும் விருப்பத்துடன் உணவில் பயன்படுத்தப்படுவது. மேப்பிள் சிரப்பை அப்படியேயும் பயன்படுத்தலாம். மிட்டாய், குக்கீஸ், கேக், டோநட் (doughnut) , பை (pie), புட்டிங்  (pudding), மில்க் ஷேக் போன்றவற்றில் இனிப்பூட்டியாகவும் பயன்படுத்தலாம்.

1. பான்கேக்கும் மேப்பிள் சிரப்பும்

எங்கள் வீட்டில்  Pancake செய்தால் மேப்பிள் சிரப் கட்டாயம் இருந்தாக வேண்டும். மேப்பிள் சிரப் பார்ப்பதற்கு தேன் போல இருந்தாலும் சுவை மாறுபடும்.  

2. மேப்பிள் மரத்தில் இனிப்பு நீர் வடித்தல்

மேப்பிள் சிரப் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா? மேப்பிள் மரத்தின் தண்டிலிருந்துதான். மேப்பிள் மர வகை நூற்றுக்கு மேல் இருந்தாலும் சிரப் தயாரிப்பதற்கு சில்வர் மேப்பிள், கருப்பு மேப்பிள், சிவப்பு மேப்பிள், மனிடோபா மேப்பிள், பேரிலை மேப்பிள், சுகர் மேப்பிள் என குறிப்பிட்ட சில மரங்களே உதவுகின்றன. இவற்றுள் முக்கியமானது Sugar maple எனப்படும் இனிப்பு மேப்பிள் மரம். இம்மரச் சாற்றில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருப்பதாலேயே இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Acer saccharum.

3. இனிப்பு நீர் சேகரிப்பு

ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்திற்கு முன்பு மேப்பிள் மரங்களின் தண்டு, கிளை, வேர் போன்ற பகுதிகளில் மாவுச்சத்து இனிப்பு நீராக சேமிக்கப்பட்டிருக்கும். மேப்பிள் சிரப் தயாரிப்பவர்கள், வசந்த காலத்தில் மேப்பிள் மரத் தண்டுகளில் துளைகள் இட்டு, சொட்டுச் சொட்டாக வடியும் இனிப்பு நீரை குழாய்கள் மூலம் கொண்டுவந்து மரப் பீப்பாயில் சேகரிப்பார்கள். பிறகு அது நன்கு காய்ச்சப்படும். நீர் முழுவதும் ஆவியான பிறகு கொழகொழப்பான சுவையான மேப்பிள் சிரப் கிடைக்கும். சுமார் 40 லிட்டர் இனிப்பு நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் சிரப்பின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு லிட்டர் மட்டுமே.

4. மேப்பிள் பட்டர்

தேன் போன்று அடர்த்தியான மேப்பிள் சிரப்பை தொடர்ச்சியாக சூடுபடுத்திக் கிளறிக்கொண்டே இருந்தால் கிடைப்பதுதான் மேப்பிள் சர்க்கரை. தூளாகவும் வெல்லம் போல் கட்டியாகவும் கடைகளில் கிடைக்கும். சிரப்பை விடவும் அதிக நாள் கெடாமல் இருக்கும். பாகுக்கும் சர்க்கரைக்கும் இடையே கிடைப்பது மேப்பிள் பட்டர் (maple butter) அல்லது மேப்பிள் க்ரீம். வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பாகை குறிப்பிட்ட வேகத்தில் கடையும்போது வெண்ணெய் போல திரண்டு வரும் இந்த மேப்பிள் வெண்ணெயை சாதா வெண்ணெய் போல பிரட்டில் தடவி உண்ணலாம். 

5. விற்பனையில் மேப்பிள் பட்டர்

மேப்பிள் மரத்திலிருந்து சிரப், சர்க்கரை போன்றவற்றை முதலில் தயாரித்த  பெருமை அமெரிக்கப் பூர்வகுடிகளையே சேரும். அமெரிக்க மற்றும் கனடா வாழ் பூர்வகுடியினர் ஆதிகாலத்திலிருந்தே இவற்றைத் தயாரித்து வருகின்றனர்.

மேப்பிள் சிரப்புக்கு அரசியல் பங்களிப்பும் உண்டு. அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிப்புப் போராட்டம் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டபோது, நாடு முழுவதும் பரவலாக கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக மேப்பிள் சர்க்கரை பயன்பாட்டுக்கு வந்தது. 


6. லுக்ரிடியா மோட்

அமெரிக்கச் சீர்திருத்தவாதியும் அடிமை முறை எதிர்ப்பாளரும் பெண்ணுரிமைப் போராளியுமான லுக்ரிடியா மோட், அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மேப்பிள் சர்க்கரையால் செய்யப்பட்ட மிட்டாய்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மிட்டாயைச் சுற்றியிருக்கும் தாளில் ‘நண்பனே, இதைத் தின்பதில் உனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை, ஏனெனில் இதன் உருவாக்கத்தில் எந்த அடிமையும் ஈடுபடுத்தப்படவில்லை’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது.  

7. இலையுதிர்கால மேப்பிள் இலைகள்

பருவ காலத்துக்கு ஏற்றபடி இலைகள் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் அழகுக்காகவே மேப்பிள் மரங்கள் பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, அரக்கு என இலையுதிர்காலத்தில் மேப்பிள் மர இலைகள் நிறம் மாறுவது அவ்வளவு அழகாக இருக்கும். இலையுதிர்காலத்தின் இறுதியில் மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்துவிடும்.

8. கனடாவின் தேசியக்கொடி

கனடா நாட்டின் தேசியக்கொடியில் இருப்பது மேப்பிள் இலையே. கனடாவின் தேசிய மரமும் மேப்பிள் மரம்தான். இனிப்பு மேப்பிள் மரம் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த நியூயார்க் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாநில மரமாகவும் உள்ளது. 

மேப்பிள் மரத்திலிருந்து சிரப், சர்க்கரை, வெண்ணெய் போன்றவை மட்டுமல்ல, மேப்பிள் மரத்தின் கட்டைகள் பேஸ்கட் பால் மட்டை, கூடைப்பந்து தளம் போன்றவற்றைத் தயாரிக்கவும், கிடார், வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகளின் பாகங்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

பொதுவாக மேப்பிள் மரங்கள் 200 முதல் 300 வருடங்கள் வரை வாழும். கனடாவிலுள்ள ஓன்டோரியா மாகாணத்தில் உள்ள 500 வயது மேப்பிள் மரம்தான் உலகின் மிகப் பழமையான மேப்பிள் மரமாகும்.

(படங்கள் உதவி: Pixabay & wikipedia)

17 May 2025

தித்திக்குதே (3) இலுப்பை

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். ஆலையில்லாத ஊர் என்றால் சர்க்கரை ஆலை இல்லாத ஊர். சர்க்கரை ஆலை இருக்கவேண்டும் என்றால் கரும்பு அதீதமாக விளைய வேண்டும். கரும்பு விளையக்கூடிய மண்ணாக இல்லாவிடில் அங்கே சர்க்கரைக்கு வழியில்லை. இப்போது உலகமயமாக்கல் காரணமாக உலகின் எந்த மூலையில் விளைவதையும் எந்த மூலையிலும் பெற முடியும். முற்காலத்தில் இந்த வசதி கிடையாதல்லவா? அப்படியென்றால் இனிப்புக்கு அந்த ஊர் மக்கள் எங்கே போவார்கள்? இருக்கவே இருக்கிறது இலுப்பைப்பூ. 

1. இலுப்பைப்பூக்கள்
Pc. Smarndi (wikimedia commons)

இலுப்பைப் பூக்களைச் சேகரித்து உலர்த்தி சுத்தப்படுத்தி பிறகு அவற்றை வெதுவெதுப்பான நீரில் பல மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை வடிகட்டிக் கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் பாகினை ஆற வைத்துப் பெறுவதுதான் இலுப்பைப்பூச் சர்க்கரை.  இலுப்பைப் பழங்களும் மிக இனிப்பானவை என்றாலும் சர்க்கரை தயாரிக்கப்படுவது பூக்களின் தேனிலிருந்துதான். உலரவைத்த இலுப்பைப் பூக்களை அப்படியேயும் உண்ணலாம்.  

2. உலர்ந்த இலுப்பைப்பூக்கள்
Pc. Gurpreet Singh Ranchi (wikimedia commons)

அதீத இனிப்புச்சுவை கொண்ட இலுப்பைப் பூக்களிலிருந்து கள் போன்ற போதையூட்டும் மதுபானம் கூட தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இம்மரத்துக்கு madhuca என்று காரணப்பெயர் பெயரிடப்பட்டுள்ளது. 'மதுகா' என்னும் வடமொழிச் சொல்லுக்கு 'இனிமை' என்று பொருள். இதன் அறிவியல் பெயர் Madhuca longifolia என்பதாகும். ஆங்கிலத்தில் Indian Butter tree, Honey tree, Mahua, Madhuca என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இலுப்பையின் தாயகம் இந்தியா, இலங்கை, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகள். 

முற்காலத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளில் இலுப்பைப்பூவை இனிப்பூட்டியாகப் பயன்படுத்தினார்கள் என்றும் பூக்களையும் இலுப்பைப் பழங்களையும் நொதிக்க வைத்து போதையூட்டும் தேறல்  தயாரித்து அருந்தினார்கள் என்றும் தெரிகிறது. இப்போதும் வட இந்தியப் பழங்குடி மக்களிடத்தில் திருமணம், திருவிழா போன்ற கலாச்சாரக் கூடுகைகளின்போது இலுப்பைப்பூ ஊறல் அருந்தும் வழக்கம் உள்ளது. ஒரிசாவைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனத்தார் இலுப்பை மரத்தைத் தெய்வமாக வழிபடுகின்றனர். 

3. இலுப்பை மரம் 
Pc. LRBurdak (wikimedia commons)

ஒரு டன் அதாவது ஆயிரம் கிலோ இலுப்பைப் பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை கிடைக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். நன்கு வளர்ந்த ஒரு இலுப்பை மரம் வருடத்துக்கு இருநூறு கிலோ முதல் முந்நூறு கிலோ அளவுக்கு இலுப்பைப் பூக்களைத் தரும். 

ஒரு இலுப்பை மரத்திலிருந்து ஒரு வருடத்துக்கு சுமார் இருநூறு கிலோ விதைகள் கிடைக்கும். எண்ணெய் வித்துக்களான அவற்றிலிருந்துதான் இலுப்பை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயிலிருந்து  சோப்பு, சவக்காரம் மற்றும் உயவு எண்ணெய் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மூட்டுவலி, தலைவலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கான மருந்துகளிலும், சருமப் பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பிலும் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கான தாவர வெண்ணெய் தயாரிப்பிலும் இலுப்பை பெரும் பங்கு வகிக்கிறது. Indian butter tree என்று ஏன் சொல்லப்படுகிறது என்று இப்போது புரியுமே! எண்ணெய் எடுத்தப் பிறகான சக்கை தாவரங்களுக்கு நல்ல உரமாகவும் பயன்படுகிறது. 

மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், ஒரிசா என பல வட இந்திய மாநிலங்களில் இலுப்பை ஜாம் தயாரிப்புத் தொழில் சிறு தொழிலாகவும் பெருவணிகமாகவும் நடைபெறுகிறது. உலரவைத்த இலுப்பைப் பூக்களும் இலுப்பை பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ஜாமும்  உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இணையங்களிலும் விற்பனைக்கு உள்ளன. 

4.  உலர் இலுப்பைப் பூக்களும் ஜாமும்
பட உதவி - இணையம்

தமிழ்நாட்டில் முன்பு கோவில்களில் விளக்கெரிக்க இலுப்பை எண்ணெய்தான் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அதற்காகவே கோவிலைச் சுற்றி இலுப்பை மரங்கள் பெருமளவு வளர்க்கப்பட்டன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோவில், திரு இரும்பைமாகாளம் மாகாளேச்வரர் கோவில் என பல கோவில்களில் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது.

5. மணிமுழுங்கி மரம்
Pc. A. J. T. Johnsingh (wikimedia commons)

மேலே உள்ள படத்தில் இருப்பது பொதிகை மலை வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சொரிமுத்து ஐயனார் திருக்கோவிலின் இலுப்பை மரம். பக்தர்கள் வேண்டுதலின் பொருட்டு, இக்கோவிலின் தல விருட்சமான இந்த இலுப்பை மரத்தைச் சுற்றி மணிகளைக் கட்டுவது வழக்கம். மரம் பெருக்கப் பெருக்க நாளடைவில் மணிகள் மரத்தோடு மரமாகப் புதைந்து காணாமற் போய்விடுகின்றன. அதனால் இம்மரத்துக்கு 'மணிமுழுங்கி மரம்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. இக்கோவில் தற்போது களக்காடு - முண்டந்துறை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

முன்பு தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இலுப்பை மரங்கள் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. எண்ணிக்கை பெருமளவு குறைந்துவரும் காரணத்தால் அவை அழிவின் விளிம்பில் இருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

*****


28 April 2025

தித்திக்குதே (2) கித்துள்

ஒருவித்திலைத் தாவரவினமான அரக்கேசி என்னும் பனைக்குடும்பத்தில் சுமார் 200 பேரினங்களும் 2500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. தென்னை, பனை, பாக்கு, ஈச்சை ஆகிய அனைத்துமே பனைக்குடும்பத்தைச் சேர்ந்தவைதாம். 

பழம், கிழங்கு, விதை, வித்து, தண்டு, பாக்கு, எண்ணெய் (பாமாயில்), பதநீர், கள், வெல்லம், பாகு, கருப்பட்டி, மாவு, கீற்று, நார், கயிறு, பன்னாடை, ஓலை, மட்டை என எண்ணற்ற பயன்களைத் தரும் பனைகள் உலகளாவிய வணிகச் சந்தையில் பெரும் பங்கு வகிக்கின்றன.  சில பனை வகைகள்  பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் சாலையோரங்களிலும் அலங்கார மரங்களாக வளர்க்கப்படுகின்றன. 

இப்போது தலைப்பில் உள்ள கித்துள் மரத்துக்கு வருவோம். சில வருடங்களுக்கு முன்பு இங்கிருக்கும் இந்திய, இலங்கைக் கடைகளில் வெல்லம் மற்றும் சர்க்கரை பகுதியில் கித்துள் வெல்லம், கித்துள் கருப்பட்டி என்ற பெயர்களைப் பார்த்தேன். தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அவை என்னவாக இருக்கும் என்று  யோசித்தபடி கடந்துவிடுவேன். பிறகுதான் தெரிந்தது, கித்துள் மரம் இலங்கையில் மிகவும் பிரபலமானது என்றும் கித்துள் கருப்பட்டி அந்த மரத்திலிருந்துதான் கிடைக்கிறது என்றும். 


கித்துள் மரமா? கேள்விப்படாத மரமாக இருக்கிறதே என்று பார்த்தால் எல்லாம் நமக்குத் தெரிந்த மரம்தான். தமிழகத்தில் நாம் ‘கூந்தப்பனை’ என்று சொல்வோம் அல்லவா? அந்த மரத்தைத் தான் இலங்கையில் ‘கித்துள் / கித்துல் மரம்’ என்று சொல்கிறார்கள்.

இப்பனையின் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூத்து,  பெண்களின் விரித்தக் கூந்தலைப் போன்று காட்சியளிப்பதால் நாம் அதற்கு ‘கூந்தல் பனை’ என்று காரணப்பெயர் இட்டிருக்கிறோம்.  தமிழகத்தின் தென்பகுதியில் இது 'சவுரிப்பனை' என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது. 

இப்பனையின் ஓலைகள் மற்ற பனையின் நீள் ஓலைகளைப் போல் இல்லாது, மீன்வால் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் ‘Fishtail palm என்ற காரணப்பெயரால் குறிப்பிடப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Caryota urens. 

கித்துள் பற்றி மேலும் அறிந்துகொள்ள தேடல் வேட்டையில் இறங்கியபோது சுவாரசியமான பல தகவல்கள் கிடைத்தன. கித்துள் பனை மரச் சாகுபடி இலங்கையில் பிரசித்தம். அம்மரங்களிலிருந்து கிடைக்கும் கித்துள் கருப்பட்டி, கித்துள் பாகு, கித்துள் பால் போன்ற இனிப்பூட்டிகள் பண்டைக் காலத்திலிருந்தே அங்கு புழக்கத்தில் உள்ளன. கித்துள் பனையிலிருந்து கள்ளும் இறக்கப்படுகிறது. அது மற்றப் பனைமரக் கள்ளைக் காட்டிலும் வீரியம் மிகுந்தது என அறியப்படுகிறது.   

அதென்ன கித்துள் பால்? கித்துள் மரத்தின் பதநீர்தான் கித்துள் பால் எனப்படுகிறது. கருப்பட்டி தயாரிப்பு போன்றதே மற்ற யாவும். கித்தூள் பாலை குறைந்த தீயில் சரியான பதத்தில் காய்ச்சினால் கிடைப்பது கித்துள் பாகு. அச்சில் ஊற்றி இறுக வைத்தால் கிடைப்பது கித்துள் வெல்லம். 

ஒடியல், ஒடியல் மா, புழுக்கொடியல், புழுக்கொடியல் மா இவையெல்லாம் பனையின் உபரிப் பொருட்கள். கடைகளில் இவற்றைப் பார்த்தபோது இவையெல்லாம் நமக்கு அறிமுகமில்லாத ஏதோ புதிய வஸ்துகள் போலும் என்றுதான் நினைத்திருந்தேன். பிறகுதான் புரிந்தது. பனங்கிழங்கை நீளவாக்கில் வகுந்து துண்டுகளாக்கிக் காயவைத்துப் பெறுவது ஒடியல். அதிலிருந்து கிடைக்கும் மாவுதான் ஒடியல் மா. பனங்கிழங்கை அவித்துக் காயவைத்தால் அதன் பெயர் புழுக்கொடியல் (புழுங்கலரிசி போன்று புழுங்க வைப்பதால்). அதிலிருந்து கிடைக்கும் மாவு புழுக்கொடியல் மாவு. இவையெல்லாம் இலங்கையில் பிரபலமான உணவுப் பொருட்கள். தென் தமிழக மாவட்டங்களிலும் இவற்றின் பயன்பாடு உண்டு என்று தற்போதுதான் அறிந்துகொண்டேன்.

மற்ற பனையிலிருந்து கித்துள் பனை வேறுபடும் இன்னொரு விஷயம் அதன் அடிமரத் தண்டும் உணவாகப் பயன்படுவதுதான். கித்துள் மரத் தண்டை செதுக்கி இடித்துப் பொடித்து சலித்து மாவாக்கினால் அதுதான் கித்துள் மா. அதிலிருந்து கஞ்சி, புட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.


பனம்பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை வெயிலில் காயவைத்துச் செய்யும் இனிப்பு ‘பினாட்டு (அ) பனாட்டு’ என்று சொல்லப்படுகிறது. மாம்பழம் அதீதமாகக் காய்க்கும் காலங்களில் சாப்பிட்டது போக, மிதமிஞ்சிக் கிடக்கும் பழங்களைப் பிழிந்து சாறெடுத்து வெயிலில் காயவைத்துப் பதப்படுத்தி வைப்போம் அல்லவா? அதே செய்முறைதான் இதற்கும்.  கூடுதலாக 'காடி' சேர்க்கப்படுகிறது. பனம்பழச் சாற்றோடு மாவைக் கலந்து செய்யப்படும் பனம்பழப் பணியாரமும் இலங்கையில் பிரசித்தம். 

பொதுவாகப் பனம்பழங்களை அவித்தோ சுட்டோ உண்பதுண்டு. நார்நாராக இருக்கும் பனம்பழத்தைச் சுவைத்து முடித்தவுடன் கொட்டையைக் காயவைத்து அதில் பொம்மை செய்வார்கள். 

பனை ஆர்வலர் அசோக் குமார் செய்த பொம்மைகள்

கொட்டையின் ஒரு பக்கம் நாரைச் செதுக்கிவிட்டு அதில் முகம் வரைந்துவிட்டால் போதும். நாலாபக்கமும் சிலுப்பிநிற்கும் தலைமயிரோடு தாத்தா பொம்மை, சிங்க பொம்மை, குரங்கு பொம்மை போன்றவை தயார். எங்கள் அம்மாச்சி வீட்டில் கருப்பு முகத்தில் உருட்டு விழிகளோடு இரண்டு பனங்கொட்டை தாத்தா பொம்மைகள் இருந்தன. சொல்பேச்சுக் கேட்காமல் அடம்பிடிக்கும் அக்கம்பக்கக் குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் மிரட்டி வழிக்குக் கொண்டுவர அம்மாச்சி அந்தப் பொம்மைகளைத்தான் பயன்படுத்துவார். 


பொதுவாக ஒரு பனை மரம் ஆணா பெண்ணா என்பது அது பூக்க ஆரம்பிக்கும் காலத்தில்தான் அறியப்படும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் உச்சியில் இருக்கும் காய்களைக் கொண்டும் பூக்களைக் கொண்டும் இது ஆண் மரம், இது பெண் மரம் என்று அடையாளம் காண முடியும். சில பனை வகைகளில் இதுபோல் தனித்தனியாக இல்லாமல் ஒரே மரத்திலேயே ஆண் பெண் பூக்கள் காணப்படும். இன்னும் சில வகையில் ஒரே பூவிலேயே சூலகம், மகரந்தம் என ஆண் பெண் உறுப்புகள் காணப்படும். 

சிட்னியின் தாவரவியல் பூங்காவில் பனைவகைக்கென்றே ஒரு பகுதி உள்ளது. அங்கு உலக நாடுகள் பலவற்றையும் சேர்ந்த பல்வேறு பனை வகைகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள கூந்தல்பனை மரம் தற்போது இளமரமாக உள்ளது. ஆனால் வேறு பனைகள் பூக்களோடும் காய்களோடும் பழங்களோடும் பார்த்திருக்கிறேன். பாக்கு மரத்தின் பழங்களையும் இங்குதான் முதன்முதலில் பார்த்தேன். அவற்றையெல்லாம் வேறொரு பதிவாகத் தருகிறேன். 

கொசுறு:

என்னுடைய சிறார் பாடல் தொகுப்பான 'பச்சைக்கிளியே பறந்து வா' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பனைமரப் பாடல்.


பனை மரமாம் பனை மரமாம்

படபடக்கும் பனை மரமாம்

பனை மரமாம் பனை மரமாம்

தமிழகத்தின் தனி மரமாம்


நூறு நூறு பலன் தருமாம்

நூறாண்டு வாழ்ந்திடுமாம்

உயரமாக வளர்ந்திடுமாம்

உச்சியிலே காய்த்திடுமாம் 


ஜெல்லி போல நுங்கிருக்கும்

ஜோராகவே ருசிக்கலாம்

குச்சி போல கிழங்கிருக்கும்

அவித்து நாமும் புசிக்கலாம் 


சுவையான பனம்பழங்கள்

சுட்டு சுட்டுத் தின்னலாம்

கட்டிக் கருப்பட்டி காய்ச்சி

காப்பி போட்டுக் குடிக்கலாம் 


விசிறியும் தொப்பியும்

பனைமடலில் செய்யலாம்

தடுக்கும் பாயும் பெட்டியும்

பக்குவமாய்ப் பின்னலாம் 


பாட்டெழுதிய ஓலைச்சுவடி

பனைமரமே தந்ததாம்

பனைமரத்தின் அருமை எனக்கு

இப்போதுதான் புரிந்ததாம்.

******

(படங்கள் உதவி:  Pixabay )

25 March 2025

தித்திக்குதே (1) பனை


சர்க்கரை என்று சொன்னால் வாய் தித்திக்குமா?

சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா?

என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. ஆனால் என்னைப் போன்ற இனிப்புப் பிரியர்களுக்கோ லட்டு, பூந்தி, அல்வா, கேசரி, பாயசம், கொழுக்கட்டை, பால்கோவா, குலாப் ஜாமூன், ரசகுல்லா, மைசூர்பாக்கு, தூத் பேடா, பாதுஷா, காஜூ கட்லி, சூர்ய கலா, சந்திரகலா... என இனிப்புப் பலகாரங்களின் பெயர்களை எழுதக்கூட வேண்டாம், நினைத்த மாத்திரத்திலேயே வாய் ஊற ஆரம்பித்துவிடும். நீரிழிவு நோய் வந்த பிறகு இனிப்புகளைத் தின்பதில் வாய்க்குப் பெரும் கட்டுப்பாடு போடப்பட்டுவிட்டாலும் நினைக்கவும் ஏங்கவும் மனதுக்கு ஏது கட்டுப்பாடு?

இந்தியா செல்லும்போதெல்லாம் தேன் மிட்டாயை விடுவதில்லை.  ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், குச்சி மிட்டாய், காசு மிட்டாய், பல்லி மிட்டாய், பம்பர மிட்டாய், பரங்கிக்காய் மிட்டாய், கடலை மிட்டாய், கம்மர்கட், தேங்காய் மிட்டாய், ஆரஞ்சுச்சுளை மிட்டாய் என்று பெட்டிக்கடை மிட்டாய்களை நினைத்தமாத்திரத்தில் சிறுவயது நினைவுகள் நிழலாடா நெஞ்சங்கள் ஏது?  அஞ்சு பைசாவுக்கும் பத்து பைசாவுக்கும் ஒத்தப்பீசா (ஒற்றைப் பைசா) மிட்டாய் வாங்கி தெருவில் இருக்கும் அத்தனைக் குழந்தைகளும் பங்குபோட்டுக்கொண்டு ருசித்த பால்யகாலம் தவறாமல் நினைவுக்கு வந்து ஏங்க வைக்கும். 

இனிப்புச்சுவையை விரும்பாதவர்கள் உங்களில் எத்தனைப் பேர்? எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். குழந்தைகளுக்கு அறிமுகமாகும் ஆதி ருசியே தாய்ப்பாலின் இன்சுவைதானே! அறுசுவை விருந்துகளில் எந்தச் சுவை தவறினாலும் இனிப்புச்சுவை மட்டும் தவறவே தவறாது. பண்டிகைகள், திருவிழாக்கள், விசேஷ நாட்கள், திருமண வைபவம், பிறந்தநாள், காதுகுத்து, பிரிவுபசார விழா, விருந்தினர் வருகை, குடும்ப உறுப்பினர் கூடுகை என அனைத்துக் கொண்டாட்டங்களும் இனிப்பில் தொடங்கி இனிப்பில் முடியும். அவ்வளவு ஏன்? இறந்தவர்களுக்குப் படைக்கப்படும் பதினாறாம் நாள் துக்கக் காரியத்தில் கூட இனிப்புகள் அவசியம் இடம்பெறும்.


இனிப்புப் பலகாரங்களைச் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் இனிப்புச் சுவையூட்டிகள்தான் எத்தனை எத்தனை
? வெள்ளைச் சீனி, பழுப்புச் சீனி, கற்கண்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் (அ) மண்டை வெல்லம், பனைவெல்லம் (அ) கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன், வெல்லப்பாகு, பழக்கூழ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கரும்பு, பனை, தென்னை, கூந்தப்பனை இப்படி நம் பகுதியில் விளையும் தாவரங்களிலிருந்து நமக்குத் தேவையான இனிப்பூட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே, அந்த இலுப்பையிலிருந்தும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இப்படி உலகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் அபரிமிதமாகவோ தனித்துவமாகவோ விளையும் தாவரங்களைக் கொண்டு பீட்ரூட் சர்க்கரை, மேப்பிள் சிரப், பேரீட்சை சர்க்கரை, சீனித் துளசிச் சர்க்கரை, சீந்தில் சர்க்கரை என பல்வேறு இயற்கை இனிப்பூட்டிகள் தயாரிக்கப்பட்டு, மக்களின் உணவுமேசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. உலகச் சந்தையிலும் முக்கிய இடம் பிடித்து பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாமா?

பனை மரம்

முதலில் நம் தமிழகத்தின் மாநில மரமான பனையில் இருந்து தொடங்குவோம். பனை மரம் என்று சொன்னாலும், இது மரம் அன்று. ஒரு வித்திலைத் தாவரமான பனை, இலக்கண வகைப்படுத்தலின்படி ‘புல்’ வகையைச் சேர்ந்தது. பனையின் அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களும் நமக்கு மிகவும் பயன் தரக்கூடியவை. 


பனை மரத்திலிருந்துதான் நுங்கு, பதநீர், பனம்பழம், பனங்கிழங்கு, பனை வெல்லம் போன்றவை கிடைக்கின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், விசிறி, தொப்பி, கொட்டான், ஓலைப்பெட்டி மற்றும் பல கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன. பனஞ்சட்டங்கள் கட்டுமானத்துக்கும் பனஞ்சப்பைகள் அடுப்பெரிக்கவும் பயன்படுகின்றன. பனந்தும்பிலிருந்து கயிறு, மிதியடி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பனைநார்க் கட்டிலும் நார்ப்பாயும் தமிழ்நாட்டில் முற்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. இப்போதும் சிலர் அத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.  

இவ்வளவு பயனுள்ள பனையை தென்னையோடு ஒப்பிட்டுக் குறைத்து மதிப்பிடுவது போல் ஒரு பழமொழி உள்ளது.

\\தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்; பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்\\

என்பதுதான் அது. தென்னை மரம் அதைக் கன்றாக வைத்தவரது வாழ்நாளிலேயே வளர்ந்து காய்த்து உரிய பலனைத் தந்துவிடும். ஆனால் பனை காய்ப்பதற்கு வெகு காலம் எடுப்பதால் வைத்து வளர்த்தவருக்குப் பலன் தராது என்று தட்டையாக பொருள் கொள்ளப்படுவதுண்டு. மேலும் பனையில் ஆண், பெண் மரங்கள் தனித்தனியே உண்டு. வளர்ப்பது ஆண் மரம் எனில் எத்தனை வருடங்கள் ஆனாலும் காய்க்க வாய்ப்பில்லை.

பொதுவாக ஐந்தாறு வருடங்களில் காய்க்கத் தொடங்கும் தென்னையோடு ஒப்பிடும்போது முதல் காய்ப்புக்கு 12 முதல் 20 வருடங்கள் எடுக்கும் பனையின் கால அளவு அதிகம்தான். ஆனால் காய்க்கத் தொடங்கிய பிறகு 120 ஆண்டுகளுக்கும் மேலாகக் காய்த்துப் பலன் தரக்கூடியது பனை. தென்னையின் ஆயுள் சுமார் 80 ஆண்டுகள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒரு பனைமரத்திலிருந்து வருடத்துக்கு சராசரியாக 180 லி. பதநீர், 25 கிலோ பனைவெல்லம், 16 கிலோ பனஞ்சீனி, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார், 2.25 கிலோ ஈர்க்கு, 11 கிலோ தும்பு (கயிறு திரிக்கப் பயன்படும் நார்த்தூள்) போன்றவை கிடைப்பதாக ‘கிராமப் பொருளாதாரத்தில் பனையின் பங்கு’ என்ற கட்டுரையில் (கிராம உலகம்) புள்ளிவிவரத்தோடு குறிப்பிடுகிறார் முனைவர் இரா. சுதமதி அவர்கள். இவை தவிர நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு கணக்கு தனி.

பதநீர் என்றதுமே என் நினைவு பால்யத்துக்குச் சென்றுவிடுகிறது. பதநீர் ருசி அறியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? அரை இனிப்பும் துவர்ப்பும் லேசான புளிப்புமாய் இன்ன சுவையென்று பகுத்தறிய இயலாத பதநீரின் ருசி குடித்துமுடித்த பிறகும் நெடுநேரம் நாவில் தங்கியிருக்கும். நாங்கள் காலையில் கண் விழிக்கும் முன்பே தெருவில் ‘பதநீ... பதநீ...’ என்று சத்தம் கேட்கும். உடனே வாரிச் சுருட்டி எழுந்து அம்மாவிடம் ஓடுவோம்.

பதநீர்க்காரர் சைக்கிளின் பின்புறம் பானையைக் கட்டிக்கொண்டு வருவார். தெருவில் யாராவது வாங்கினால் நிற்பார். இல்லையென்றால் விருட்டென்று அடுத்தத் தெருவுக்குப் போய்விடுவார் (இப்போதைய இடியாப்பக்காரரைப் போல). நம் தெருவை அவர் கடப்பதற்குள் அம்மாவைக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கவேண்டும். சில நாள் கிடைக்கும், சில நாள் கிடைக்காது. அம்மாவிடம் சம்மதம் பெற்றவுடன் தம்பி பதநீர்க்காரரை நிறுத்த ஓடுவான். நான் காசையும் லோட்டாவையும் பெற்றுக்கொண்டு பின்னால் ஓடுவேன். அடுத்தத் தெருவுக்குப் போனாலும் பின்னால் துரத்தி ஓடி பதநீரை வாங்கிக்கொண்டுதான் வீடு திரும்புவோம். நம்முடைய தெருவை அவர் தாண்டிவிட்டால் பின்னால் ஓடக்கூடாது என்பது அம்மாவின் கட்டளை. ஆனால் பதநீர் ஆசை யாரை விட்டது? சில நாட்களில் ஆச்சர்யமாக அம்மாவே வாங்கி வைத்துக்கொண்டு எங்களை எழுப்புவார்.  

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறைக்கு, கிராமத்தில் இருந்த எங்கள் பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போதுதான் கலப்படமில்லாத பதநீரின் உண்மையான ருசியைப் பதம் பார்க்க வாய்த்தது. பெரியம்மாவின் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் வயல்வெளியை ஒட்டி நிறைய பனைமரங்கள் இருக்கும். மரமேறி தினமும் விடியற்காலையில் பெரியம்மா வீட்டின் வழியாகத்தான் பதநீர் எடுத்துச் செல்வார். தொலைவில் வரும்போதே ‘ஆத்தா’ என்று குரல் கொடுப்பார். தயாராக வைத்திருக்கும் குவளையை அவரிடம் நீட்ட, அப்போதுதான் இறக்கிய பதநீரை சுரைக்குடுக்கையைச் சாய்த்து ஊற்றுவார். பெரியம்மா அதை வாங்கி வடிகட்டி (எறும்பு, சிறு பூச்சிகள் கிடக்கும்) டம்ளரில் ஊற்றி எங்களிடம் கொடுப்பார்கள். சில நாட்களில் மரமேறுபவர் குரல் கொடுக்காமல், எங்களைப் பார்க்காதது போல விருட்டென்று கடந்து போவார். பெரியம்மாவைக் கூப்பிடவும் மாட்டார். பிறகுதான் தெரிய வந்தது அப்போதெல்லாம் சுரைக்குடுக்கையில் இருந்தது பதநீர் அல்ல, கள் என்று.


கள்ளுக்கும் பதநீருக்கும் என்ன வித்தியாசம்?

பனைமரத்தில் பாளையைச் சீவினால் கிடைப்பது பதநீர். பாளை என்பது பனை, தென்னை போன்றவற்றின் பூக்களையும் அவற்றை மூடியிருக்கும் மடலையும் குறிக்கும். பாளையைச் சீவுதல் என்பது அந்த மடல் இருக்கும் தண்டைச் சீவுவதாகும். மரமேறுபவர் கூரிய கத்தியால் பாளையைச் சீவுவார். உடனே அதிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடியத் தொடங்கும். 




அந்த நீர் பாலும் தண்ணீரும் கலந்தாற்போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும். அதைச் சேகரிக்க சிறிய அளவிலான மண்கலயத்தை அதன் வாயில் கட்டிவிடுவார். கலயத்தின் உட்புறம் சுண்ணாம்பு தடவப்பட்டு இருக்கும். அப்போதுதான் அந்த நீர் புளித்துப்போகாது. சொட்டுச் சொட்டாகப் பானைக்குள் சேகரமாகும் நீர்தான் பதநீர். மரமேறுபவர் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் மரமேறி அந்த சிறு மண்பானைகளில் இருக்கும் பதநீரை, தான் இடுப்பில் கட்டி எடுத்துவரும் சுரைக்குடுக்கையிலோ, குடத்திலோ சேகரித்துக்கொள்வார். சேகரிக்காமல் அப்படியே விட்டுவைத்தாலோ அல்லது சுண்ணாம்பு தடவாத பானையில் சேகரித்தாலோ அது புளித்த நீராகிவிடும். புளித்த நீரை மேலும் புளிக்கவைத்து இன்னும் சில கூடுதல் செய்முறைகளோடு தயாரிக்கப்படுவதுதான் கள்(ளு).

ஒவ்வொருநாளும் மரமேறுபவர் ஒவ்வொரு மரமாக ஏறி, தான் கொண்டுபோகும் பாத்திரத்தில் பதநீரைச் சேகரிப்பதோடு அவர் வேலை முடிந்துவிடுவதில்லை. மரத்தில் கட்டியிருக்கும் கலயத்தின் உள்ளே மறுபடியும் சுண்ணாம்பு தடவ வேண்டும். பாளையின் நுனியில் முதல்நாள் சீவிய இடத்துக்குச் சற்று மேலே மறுபடியும் புதிதாகச் சீவி விடவேண்டும். அப்போதுதான் மீண்டும் அதில் பதநீர் சுரக்கும். தேவையான சுண்ணாம்பு, அதைப் பூசுவதற்கான ப்ரஷ், பாளையைச் சீவ உதவும் கூர்கத்தி, பதநீரைச் சேகரிக்க உதவும் சுரைக்குடுக்கை அனைத்தையும் தன்னோடு இடுப்பில் கட்டிக் கொண்டு மரமேறுவார் மரமேறி.


பதநீர் சுரப்புக் காலம் என்பது ஆண்டுக்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே. ஒரு பாளையிலிருந்து ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை பதநீர் கிடைக்கும் என்றும்
, நன்கு வளர்ச்சியடைந்து நிறைய பாளைகள் விட்டிருக்கும் ஒரு பனை மரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 20 லிட்டர் பதநீர் கிடைக்கும் என்றும் வைத்துக்கொண்டால், ஒரு பனை மரம் தன் வாழ்நாளில் சுமார் 1,20,000 லிட்டர் பதநீரைத் தரக்கூடும் என்ற ஆதாரபூர்வமான தகவலைத் தெரிவிக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணையதளம். ஒரு மரமேறி ஒரு நாளைக்கு 25 முதல் 30 மரங்கள் ஏற முடியும் என்ற தகவலையும் அது தெரிவிக்கிறது.

மரமேறிகள் மரமேறும்போது சிறு கயிற்றுப் பிரியால் இரண்டு கால்களையும் பிணைத்தோ, அல்லது சற்று பெரிய கயிற்றுப்பிரியால் தங்கள் உடலை மரத்துடன் பிணைத்தோ ஏறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? கால்களைப் பிணைத்திருக்கும் கயிற்றுக்கு கால் கயிறு என்றும் உடலைப் பிணைத்திருக்கும் கயிற்றுக்கு தாங்கு கயிறு என்றும் பெயர்.   

இப்போது அடுத்தக் கட்டமாக பனைவெல்லம் தயாரிப்பு. இதில் பக்குவம் அறிந்த, பல கால அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். அவர்கள் மரமேறிகள் கொண்டுவரும் பதநீரை வடிகட்டி, பெரிய விறகடுப்பின் மீது வைக்கப்பட்டிருக்கும் வாயகன்ற பெரிய இருப்புச்சட்டியில் ஊற்றிக் கொதிக்கவிடுவார்கள். அடுப்பை எரிக்க பனை ஓலை, பனஞ்சப்பை, பனைமட்டை போன்ற பனையின் பிற பொருட்கள் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக அதைக் கிளறிக் கொண்டே இருந்தால், தண்ணீர் எல்லாம் ஆவியாகி பாகு போன்ற பதம் கிடைக்கும். சரியான பதம் வந்தவுடன் தயாராக இருக்கும் அச்சுகளில் அல்லது கொட்டாங்குச்சிகளில் சூடான பாகை ஊற்றுவார்கள். அச்சுக்குப் பயன்படுத்தப்படும் கொட்டாங்குச்சிகள் பிசிறுகள் இல்லாமல் தேய்த்து சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். பாகு ஆறியதும் திடநிலையை அடைந்துவிடும். அவற்றைதான் ‘கருப்பட்டி’ என்கிறோம். அச்சிலிருந்து கருப்பட்டிகளை வெளியில் எடுத்து பனை ஓலைகளில் வைத்து ஈரம் போக நன்கு காயவைப்பார்கள். முழுமையாகத் தயாரான கருப்பட்டிகள்  பனையோலைக் கொட்டானில் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும்.

கருப்பட்டி தயாரிக்கும் முறைகளில் சிற்சில மாற்றங்களுடன் சில்லுக் கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி, பனந்தேன், பனங்கற்கண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. சுக்குக் கருப்பட்டி காப்பியின் ருசிக்கு அடிமையானோர் ஏராளம். இப்போதும் கசாயம், நாட்டு மருந்து, லேகியம் போன்றவற்றுக்கு பனங்கருப்பட்டிதான் பிரதான இனிப்பூட்டியாக உள்ளது.

கொசுறாகக் கொஞ்சம் இலக்கியம்!

இனிப்பூட்டிகள் தவிர நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என்று பருவத்துக்கு ஏற்ப பனை மரம் தரும் வரங்கள் ஏராளம். இதை அழகாகச் சொல்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். புலவர் ஆலத்தூர்கிழார், சோழன் நலங்கிள்ளியின் படைபலத்தைப் பாடும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார். 

\\தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய

இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்

கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர

நிலமலர் வையத்து வலமுறை வளைஇ

வேந்து பீடழித்த ஏந்துவேல் தானை...\\

சேனை அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. வழியில் ஒரு இடத்தில் நிறைய பனைமரங்கள் உள்ளன. அது பனைமரங்கள் காய்க்கத் தொடங்கிய பருவம். எனவே முதலில் செல்லும் படைவீரர்களுக்கு இனிய சதைப்பத்தான நுங்குகள் சுவைக்கக் கிடைக்கின்றன. 


சேனையின் அளவு பெரியது என்பதால் அணிவகுப்பும் நெடியதாக இருக்கிறது. சேனையின் மத்தியில் உள்ள வீரர்கள் பனைமரங்கள் இருக்கும் இடத்தைக் கடக்கும்போது காய்கள் முற்றிக் கனியும் பருவமாகிவிட்டதாம். அதனால் அவர்களுக்கு நல்ல பழுத்தப் பனம்பழங்கள் ருசிக்கக் கிடைக்கின்றன. சேனையில் கடைசியாக படைவீரர்கள் வரும்போது அவர்களுக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா



முன்னால் சென்ற வீரர்கள் பனம்பழங்களைச் சுவைத்துவிட்டு எறிந்த பனங்கொட்டைகள் யாவும் முளைவிட்டு பனங்கிழங்குகளாக உள்ளனவாம். அவற்றை அவர்கள் சுட்டு உண்கின்றனராம். அப்படியென்றால் எவ்வளவு பெரிய படை என்று பார்த்துக் கொள்ளுங்கள். 

உயர்வு நவிற்சி அணிக்கு மிக அழகான எடுத்துக்காட்டு இப்பாடல்.

பனங்கிழங்கு என்றதும் சத்திமுத்தப் புலவர் பாடிய நாராய் பாடல் நினைவுக்கு வராமல் போகாது.

\\நாராய் நாராய் செங்கால் நாராய்

பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....\\

நாரையின் அலகைப் பார்த்தபோது அவருக்கு பனங்கிழங்கின் நினைவு வந்திருக்கிறது. எனக்கோ பனங்கிழங்கைப் பார்க்குந்தோறும் நாரையின் அலகு நினைவுக்கு வருகிறது.


புலவர் பாடிய நாரை இதுவாகத்தான் இருக்கவேண்டும். செங்காலும் பவளக்கூர்வாயும் கொண்டிருக்கிறதே.. 


எனக்கென்னவோ மஞ்சள் மூக்கு நாரைக்குதான் அச்சொட்டாக அலகு அப்படியே பனங்கிழங்கு போல இருப்பதாகத் தோன்றுகிறது. 

(தொடரும்)

படங்கள் உதவி Pixabay