Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

2 October 2025

சுயமோக ஆளுமைக் குறைபாடு

தன் அழகின் மீதே சுயமோகம் கொண்டு அழிந்துபோன நார்சிசஸ் பற்றியும் நார்சிசிஸம் பற்றியும் நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நார்சிசிஸம் என்றாலே தன் அழகின் மீதான மோகம் என்றே பல பேருடைய மனதில் படிந்துபோயிருக்கும். இந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் பூதாகரமான உளவியல் சிக்கல் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. 

 


சுயமோகம் என்பது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு சாதாரண குணம்தான். தோற்றத்தில் சிரத்தை எடுத்துக்கொள்வதுமிகைநேர்த்தியாக உடுத்துவது, கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் சிகையைத் திருத்துவது, எடை கூடியதை உணர்ந்தவுடன், பார்ப்பவர்களிடமெல்லாம், நான் குண்டா ஆயிட்டேனா என்று கேட்டு, ‘அப்படி ஒண்ணும் இல்ல, லேசாப் பூசினாப் போலத்தான் இருக்கே’ என்ற பதிலை எதிர்பார்த்து சமாதானமடைவது, ‘உனக்கு மட்டும் எந்த ட்ரெஸ் போட்டாலும் பொருத்தமா இருக்கு’ ‘நீ சமைச்சா ஊரே மணக்குது’ ‘உன்னைப் போல ஒருத்தர் இனிமேல் பிறந்துதான் வரணும்’ போன்ற புகழ்ச்சிகளில் புளகாங்கிதமடைவது என ஆண் பெண் பேதமற்று நம் எல்லாருக்குள்ளும் ஒரு சில சுயமோக விருப்புகள் இருக்கத்தான் செய்யும். இருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இருக்காது. நம்மையே நமக்குப் பிடிக்காமல் கூட போய்விடலாம். ‘என்னத்த வாழ்க்கை’ என்று ‘என்னத்த கண்ணையா’ போல புலம்ப நேரிடலாம். 

ஒருவரது சுயமோக சுபாவம், யாரையும் பாதிக்காத அளவில் சாதாரண இயல்பாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை. ஆளுமைக் குறைபாடாக (Narcissistic personality disorder) மாறும்போதுதான் அவரைச் சார்ந்தோருக்கான அச்சுறுத்தல் ஆரம்பமாகிறது. கிட்டத்தட்ட அது ஒரு புதைகுழி போல, நதிச்சுழல் போல, கருந்துளை போல மெல்ல மெல்ல அடுத்தவர்களை உள்ளிழுத்து அவர்களுடைய ஆன்மாவை அழிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தச் சுழலுக்குள் மூழ்கடித்து அவர்களுடைய வாழ்வையே மூளியாக்கிவிடுகிறது.

சுயமோக ஆளுமைக் குறைபாட்டைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அப்போதுதான் அப்படிப்பட்ட மனநிலையுள்ள ஆட்களிடமிருந்து நம்மால் எச்சரிக்கையாக விலகி இருக்கமுடியும். அவர்களுடைய சுயமோகச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாத வகையில் விழிப்புணர்வு பெற முடியும். அப்படியே சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழியைக் காணமுடியும். 

 


சுயமோக ஆளுமைக் குறைபாடு உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள்? தாங்கள் எப்போதும் எங்கும் எவராலும் ஆராதிக்கப்படவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். எல்லோரையும் விட தாங்களே சிறந்தவர்கள், திறமைசாலிகள், உத்தமர்கள், மேலானவர்கள், மேன்மையானவர்கள், அதி உன்னதமானவர்கள் என்ற மாயச்செருக்கோடும் மமதையோடும் திரிபவர்கள். அவர்கள் தம்மை மட்டுமே எங்கும் எப்போதும் முன்னிறுத்திப் பார்ப்பார்கள். நான், என், எனது, எனக்கு, என்னுடைய, என்னால், என்னை போன்ற வார்த்தைகள் இல்லாமல் எந்த வாக்கியத்தையும் இவர்களால் ஆரம்பிக்கவும் முடியாது, முடிக்கவும் முடியாது. இந்தப் பூமியே தங்களை மையமாக வைத்துச் சுற்றுவதான எண்ணத்தில் ஆழ வேரூன்றியவர்கள்.

சுயமோக ஆளுமைக் குறைபாடுள்ளவர்கள் மற்றவர்களைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்தும் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள். அடுத்தவரை தங்கள் வலையில் விழவைப்பதில் வல்லவர்கள். தங்கள் அலாதியான திறமைகளையும் சாகசங்களையும் பற்றிப் பேசிப்பேசிக் கவர்ந்திழுப்பதில் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அதீத தன்னம்பிக்கையோடு கூடிய அபாரமான எதிர்காலத் திட்டங்களைக் கேட்டு எதிரில் இருப்பவரின் சுய மதிப்பீடு ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். இங்குதான் அவர்கள் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் வலையில் விழ ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து அவர்களால் மீளமுடியாமலேயே போய்விடுகிறது. 

 


 சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களுக்கு அடுத்தவரின் வலி புரியாது. வலி மட்டுமல்ல, அடுத்தவரின் எந்த உணர்வும் புரியாது. தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பதான மனப்போக்குதான் இவர்களுடையது.

இவர்கள் தாங்கள் செய்த தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரவும் மாட்டார்கள். தவறை ஒப்புக்கொண்டால்தானே மன்னிப்புக் கேட்கத் தோன்றும்? தாங்கள் பிழை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று நூறு சதவீதம் உறுதியாக நம்புவார்கள். அதனால் இவர்களால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக்கொள்ள இயலாது. தம் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் குறைகளையும் பரிசீலிக்கவோ, நிதானமாக அணுகவோ தெரியாது. ஆக்ரோஷமாக எதிர்கொள்வார்கள். எதிரிலிருப்பவரைப் பேசவிடவே மாட்டார்கள். விதண்டாவாதம் செய்து விஷயத்தைத் திசைதிருப்புவார்கள் அல்லது அவசரமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள்.

இவர்களுக்கு வாதத்திறமை குறைவு என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ள மாட்டார்கள். தாங்கள் சொல்ல வேண்டியவற்றை எழுத்து, ஒலி அல்லது ஒளி வடிவில் வெளிப்படுத்துவார்கள். அதன் மூலம் அவர்களது கருத்தையே இறுதிக் கருத்தாக்கிவிட முடியும். எதிர்த்தரப்புக் கருத்தைக் கேட்கவேண்டிய அவசியம் கிடையாது. எதிராளி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவிக்க நேரும் சூழலையும் தவிர்த்துவிடலாம்.  

சுயமோக ஆளுமைக் குறைபாடுடையவர்கள், தவறு இழைத்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அவ்வளவுதான். தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தாம் தூம் என்று குதிப்பார்கள். அடுத்தவர்கள் தான் காரணம் என்று இறுதிவரை சாதிப்பார்கள். அடுத்தவர்க்கு உளரீதியான பாதிப்பை உண்டாக்கும் அவர்கள், பிரச்சனை பெரிதாகும்போது சட்டென்று  பாதிக்கப்பட்ட நபராக தம்மை நிறுவுவதற்குப் (victim play) பெருமுயற்சி மேற்கொள்வார்கள். பெரும்பாலும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்வார்கள். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காரியத்தில் இறங்குவார்கள். நேரத்துக்கொரு பேச்சு பேசுவார்கள். உணர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார்கள். என்ன நினைக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மர்மமான வாழ்க்கைமுறை இவர்களுடையது.  

 


சுருக்கமாய்ச் சொல்லவேண்டும் என்றால் தங்களைச் சுற்றி ஒரு மாய உலகை சிருஷ்டித்துக்கொண்டு தங்களைத் தாங்களே கடவுளாக எண்ணி வாழ்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களும் அப்படியே எண்ண வேண்டும், எண்ணுவது மட்டுமல்ல, வணங்கித் தொழவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். அப்படிதான் நடக்கவேண்டும் என்று நாலாபக்கத்திலிருந்தும் நிர்பந்திப்பவர்கள். அப்படி எண்ணப்படாத பட்சத்தில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி தண்டனைகளை வழங்கத் தயங்காதவர்கள்.

சுயநலமிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? சுயநலமிகளுக்கு தங்கள் காரியம் முக்கியம். யார் காலைப் பிடித்தாவது காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். யாரையும் கெஞ்சவோ, முகத்துதி பண்ணவோ தயங்கமாட்டார்கள். ஈகோவையெல்லாம் ஓரங்கட்டி எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அவ்வளவு கீழே இறங்கி தாங்கள் நினைத்தக் காரியத்தை முடிப்பார்கள்.

சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்கள் அப்படியல்ல. சுயநலமிகளுக்கு எதிர்முனையில் நிற்பவர்கள். ஈகோவின் உச்சத்தில் இருப்பவர்கள். மற்றவர்கள் தன்னை முகத்துதி பண்ண வேண்டும், தன் காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டும், ‘ஐயா, உம்மைப் போல இந்த உலகத்தில் யாருமே இல்லை’ என்று புகழாரம் சூட்டவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள். சுயநலமிகளின் இலக்கு காரியம் என்றால் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் இலக்கு சுயதிருப்தி. அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள், ஈகோவைத் தவிர.

சுயமோக ஆளுமைக் குறைபாடு உடைய பிரபலங்கள் பலர் உண்டு. அவர்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் தாங்கள் பேசுபொருளாக இருப்பதை விரும்புவார்கள். தாங்கள் மட்டுமே பேசுபொருளாய் இருப்பதை விரும்புவார்கள். தங்கள் முகத்தில் ஊடக வெளிச்சம் தொடர்ந்து பாய்ச்சப்படும்படி பார்த்துக்கொள்வார்கள். அல்லது ஊடக வெளிச்சம் பாயுமிடங்களில் தங்கள் முகத்தை வலிந்துகொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள். பணம், புகழ், செல்வாக்கு இன்ன பிற சங்கதிகள் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பார்கள். என்ன விலை கொடுத்தும் அந்த இடத்தைத் தக்கவைத்திருப்பார்கள். தங்களைத் துதிபாடும் கூட்டமொன்றை எப்போதும் பக்கத்தில் வைத்திருப்பார்கள். போலியான முகத்துதிகள் என்று அறிந்தபோதும் அவற்றை ரசித்து உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பார்கள்.

 குடும்பம், அலுவலகம், நட்பு வட்டாரம், அக்கம்பக்கம் மட்டுமல்ல, அரசியல், திரையுலகம், இலக்கியம், சமூகம், வணிகம், ஊடகம், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என விதிவிலக்கின்றி எல்லாத் துறைகளிலும் இப்படிப்பட்ட சுயமோக வெறி கொண்ட வேங்கைகள் உலவுவதை அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம்முடைய திறமையை, ஆற்றலை, தன்னம்பிக்கையை, நேரத்தை, உழைப்பை, சேமிப்பை, சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி இறுதியில் நம்மை சக்கையாக்கித் தூக்கியெறியும் அத்தகு மனிதர்களை அடையாளம் கண்டறியத் தெரிந்திருக்கிறோமா? குறைந்தபட்சம் உறிஞ்சப்படுகிறோம் என்ற உண்மையையாவது உணர்ந்திருக்கிறோமா?

(படங்கள் உதவி இணையம்)

9 August 2020

ஆஸ்திரேலியாவின் ரசனையான உணவுவகைகள்




எந்த நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாட்டின் பிரசித்தமான உணவுவகையை ருசிபார்ப்பது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான உணவுவகைகளை சுவைக்க நிச்சயம் விரும்புவார்கள். லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா, டிம்டாம், ஆன்ஸாக் பிஸ்கட்ஸ், கங்காருவால் சூப் என ஆஸ்திரேலியாவின் உணவுரசனையை மெய்ப்பிக்கும் வகையில் நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான கதைகளும் உண்டு.

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் ஒன்றான வெஜிமைட் உருவான கதையைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்களின் உணவுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன முக்கியமான அடையாளம் வெஜிமைட். இதன் பிரத்தியேக உப்பும் கசப்பும் கலந்த சுவைக்கு அடிமையாகிப் போன ஆஸ்திரேலியர்கள் பலர். ஜாம், பட்டர் போல பிரெட்டில் தடவி சுவைக்கக்கூடிய வெஜிமைட் மது உற்பத்திக்கூடங்களில் பயன்படுத்தப்படும் brewer’s yeast எனப்படும் தேறல் நொதியையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கொண்டு தயாரிக்கப்படுவது. இதில் கொழுப்பு கிடையாது, சர்க்கரை கிடையாது. முழுக்க முழுக்க சைவ பதார்த்தம்.



இன்னும் இரண்டு வருடங்களில் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கும் வெஜிமைட் ஏன் உருவானது தெரியுமா? முதலாம் உலகப் போர்க்காலத்தில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த Marmite சுவைத்துப் பழகிய ஆஸ்திரேலிய நாவுகளுக்கு அது இல்லாமை வெறுமையை உண்டாக்கியது. இந்த சமயத்தில் Fred Walker & Co. நிறுவனம் அதற்கு மாற்று தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. வேதியியலாளரும் உணவு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருந்த Cyril Percy Callister இடம் அதற்கானப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒரு சுவைக்கு பழகிய நாவுகளை மற்றொரு சுவைக்குப் பழக்கவேண்டுமே. முதலில் மக்களிடம் புதிய பொருளைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இந்த புதிய கண்டுபிடிப்புக்குப் பரிசுத்தொகையுடன் கூடிய பெயர் சூட்டும் போட்டியொன்று பொதுவில் நடத்தப்பட்டது. பெயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு Fred Walker-ன் மகள் Sheilah விடம் விடப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்தப் பெயர்தான் Vegemite.


பலதரப்பட்ட விளம்பரங்களுக்குப் பிறகும் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால் ஒருவேளை பெயர்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் Parwill என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதும் விற்பனை சரிவே. விற்பனையை அதிகப்படுத்த பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டன. Kraft walker cheese உற்பத்திப் பொருட்களுடன் இலவச இணைப்பாக வெஜிமைட் கொடுக்கப்பட்டது. இது குறித்த கவிதைப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு அமெரிக்க Pontiac கார்கள் பரிசளிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவில் வெஜிமைட் சேர்க்கப்பட்டது. இப்படியாக படிப்படியாக 1940 களின் பின்பகுதியில் பத்துக்கு ஒன்பது ஆஸ்திரேலிய வீடுகளில் வெஜிமைட் புழக்கத்துக்கு வந்தது.



இன்று பில்லியன் ஜார்கள் விற்பனையைக் கடந்து இன்னமும் அதிரடியாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது வெஜிமைட். காலத்தோடு இணைந்த விளம்பரம்தான் அதற்கு முக்கியக் காரணம் எனலாம். பன்னாட்டு கலாச்சாரம் பரவத்தொடங்கிய காலத்தில் 1983 வாக்கில் வெஜிமைட் என்ற பெயருக்குப் பதிலாக Multicultural என்ற பெயரைத் தாங்கி கீழே spread it around என்ற வாசகத்துடன் பன்னாட்டு மக்களையும் கவர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது. 


சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் விளையாட்டுத் தொடரின்போது ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை Ash Barty –க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவரை சிறப்பிக்கும் வகையிலும் Bartymite என்ற பெயர் தாங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன. விற்றும் தீர்ந்தன.  

ஆஸ்திரேலியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை என்கிறார்கள் grease போன்ற இதன் நிறமும், வாடையும் பிரத்தியேக கடுஞ்சுவையும் பிடிக்காமல் போன அயல் நாட்டவர்கள். உங்களுக்கெல்லாம் அது ஒரு உணவுப்பொருள் மட்டுமே, எங்களுக்கோ அது உணர்வின் பொருள் என்கிறார்கள் இவர்கள். உண்மைதானே.



அடுத்தது Fairy bread. பெயரைச் சொன்னவுடனேயே ஆஸ்திரேலியக் குழந்தைகள் சப்புக்கொட்டும். இதுவும் ஆஸ்திரேலியக் கண்டுபிடிப்புதான். வழக்கமான white bread-ன் இருபுறமும் வெண்ணெய் அல்லது மார்கரின் தடவி அதன் மேல் hundreds and thousands எனப்படும் சர்க்கரைப்பாகில் செய்யப்பட்ட கடுகளவிலான குட்டிக்குட்டி வண்ண மணிகளைத் தூவினால் அதுதான் fairy bread.

அடுத்தது பாவ்லோவா. ரஷ்யாவின் பிரபல பாலே நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 1881 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த அன்னா பாவ்லோவா Imperial Russian Ballet நிறுவனத்தின் முதன்மைக் கலைஞராக இருந்தவர். அவர் தனித்து ஆடும் The Dying Swan என்னும் நடனத்தை சுமார் 4000 தடவைக்கு மேல் மேடையேற்றியிருக்கிறார் என்பதும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்று உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பாலே நடனக் கலைஞர் என்பதும் அவரது பெருமைகளுக்குச் சான்று. பிரசித்தமான பாலே நடனக்கலைஞரான அன்னா பாவ்லோவாவுக்கும் ஆஸ்திரேலியாவின் பிரசித்த கேக்கான பாவ்லோவாவுக்கும் என்ன தொடர்பு? அப்படிப்பட்ட அற்புதமான கலைஞரை சிறப்பிக்கும் பொருட்டு இந்த கேக்குக்கு பாவ்லோவா என்று பெயரிடப்பட்டதாம். 


முட்டையின் வெள்ளைக்கரு, கார்ன்ஃப்ளார், கேஸ்டர் ஷூகர், வினிகர் வனிலா எஸன்ஸ் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கேக் போன்ற இனிப்பு வகையான இதற்கு மேலே க்ரீமும் பழங்களும் வைத்து அலங்கரிக்கப்படுகிறது. 1935 -ல் The Advocate பத்திரிகையிலும் தொடர்ந்து 1937-ல் The Australian Women’s Weekly இலும் பாவ்லோவா கேக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டது. நியூசிலாந்தோ பாவ்லோவா கேக் தங்களுடைய கண்டுபிடிப்பு என்றும் அது தாங்கள் வைத்த பெயர் என்றும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறது.

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தங்களுடையவை என்று உரிமை கோரும் பட்டியலில் அடுத்து வருவது லாமிங்டன். ஸ்பான்ஞ் கேக் அல்லது பட்டர் கேக் துண்டுகளை உருக்கிய சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து உலர்தேங்காய்த்தூளில் புரட்டியெடுத்தால் அதுதான் லாமிங்க்டன். இதற்கு பின்னாலிருக்கும் கதை வெகு சுவாரசியம்.


1896 முதல் 1901 வரை குவீன்ஸ்லாந்தின் கவர்னராக இருந்தவர் லார்ட் லாமிங்க்டன். அவருடைய முதன்மை சமையல் பணியாளராக இருந்தவர் Armand Galland என்பவர். ஒருமுறை லார்ட் லாமிங்க்டனை சந்திக்க வந்திருந்த எதிர்பாரா விருந்தினர்களுக்குப் பரிமாற வேண்டிய சூழலில் முதல்நாள் செய்த வனிலா ஸ்பான்ஞ் கேக்கைத் துண்டுகளாக்கி சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து மேலே உலர்தேங்காய்த்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறினார் என்றும் விருந்தினர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போய் செய்முறை வாங்கிச் சென்றார்கள் என்றும் அதனாலேயே லார்ட் லாமிங்க்டன் பெயரால் இது லாமிங்க்டன் என்று குறிப்பிடப்படுவதாகவும் ஒரு கதை உள்ளது. அதெல்லாம் இல்லை, வெலிங்க்டன் என்று எங்கள் தலைநகரின் பெயரால் நாங்கள் உருவாக்கிய இனிப்பை ஆஸ்திரேலியர்கள் லாமிங்க்டன் என்று பெயர் மாற்றி தங்களுடையது என மார்தட்டுகிறார்கள் என்று மறுக்கிறார்கள் நியுசிலாந்துக்காரர்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் லாமிங்க்டனைக் கொண்டாடுவோம் என்று சொல்லி ஜூலை 21 ஆம் நாளை தேசிய லாமிங்க்டன் தினமாக அறிவித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டோம் நாம். கூடவே lammo என்ற செல்லப்பெயரையும் சூட்டிவிட்டோம். 


 
இவை தவிர ஆன்ஸாக் பிஸ்கட்டுகள் குறித்த வரலாற்றை முந்தைய பதிவிலேயே பார்த்தோம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் ANZAC பிஸ்கட்கள், உணவுப்பொருள் என்பதையும் மீறி அதற்குள் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய ஒருமைப்பாடும் போர்வீரர்களுக்கான நினைவஞ்சலியும் என்றென்றும் தனித்துப் பிரித்தெடுக்க இயலாதவை.

ஒவ்வொரு நாடும் தமக்கென தனித்த உணவுக்கலாச்சாரத்தைப் பேணும்போது பன்னாட்டு கலாச்சாரத்தை மையமாய்க் கொண்ட ஆஸ்திரேலியா, பன்னாட்டு கலாச்சார உணவுவகைகளோடு காலங்காலமாய் தம் உணர்வுகளோடு பின்னிவரும் தனித்த உணவுக்கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பது போற்றத்தக்க ஒன்றல்லவா?  




8-6-20 அன்று SBS Tamil  வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. ஒலிவடிவத்தைக் கேட்க இங்கு சொடுக்கவும். 

(படங்கள் உதவி இணையம்)

25 April 2020

ANZAC தினம்





ஆஸ்திரேலிய தினத்தைப் போன்றே ஆஸ்திரேலியர்களுக்கு முக்கியமான மற்றொரு தினம் ANZAC தினம். முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர்களில் பங்கேற்ற மற்றும் உயிர்நீத்தப் படைவீரர்களின் நினைவாக, போர்வீரர் நினைவுதினத்தை விடவும் மேலான உணர்வுப் பெருக்குடனும் தேசிய ஒருமைப்பாட்டுடனும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதென்ன ANZAC? Australian and New Zealand Army Corps என்பதன் சுருக்கம்தான் ANZAC.

முதல் உலகப்போரின்போது, கூட்டுப்படைகளுக்கு ஆதரவாக, மத்தியத்தரைக்கடல் பயணப்படையின் ஒரு அங்கமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போர்வீரர் படைக்குழாம் உருவாக்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எகிப்தில் உருவாக்கப்பட்ட இப்படைக்குழாமில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை வீர்ர்களும், சிறிய அளவிலான தன்னார்வல யூதப் படைவீரர்களும் இருந்தனர். இப்படைக்குழாமில் மொத்தம் இரண்டு பிரிவுகள் இருந்தன. முதலாவது ஆஸ்திரேலியப் படைப்பிரிவு. இதில் முதல் கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலியக் காலாட்படைகள் இடம்பெற்றன. இரண்டாவது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து படைப்பிரிவு. இதில் நியூசிலாந்து காலாட்படை, நியூசிலாந்து ஆயுதப்படை, முதற்கட்ட ஆஸ்திரேலியக் குதிரைப்படை, நான்காம் கட்ட ஆஸ்திரேலியக் காலாட்படை ஆகியவை இடம்பெற்றன. இவை தவிர இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலியக் குதிரைப் படைகள் எப்பிரிவிலும் சேராமல் தனித்தியங்கின.

ANZAC படைக்குழாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், கூட்டுப்படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடல் வழியே துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை.. அந்நாளைய ஓட்டோமான் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்ற ஏதுவாக Gallipoli தீபகற்பத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. சுமார் எட்டு மாதங்கள் நீடித்த போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் 8700 ஆஸ்திரேலிய வீர்ர்களும் 2800 நியூசிலாந்து வீர்ர்களும் அடக்கம். காயமுற்ற இரண்டு லட்சத்து அறுபத்திரண்டாயிரம் வீர்ர்களுள் இருபத்தைந்தாயிரம் பேர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த போர்வீரர்கள். முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த ஆஸ்திரேலிய வீர்ர்களின் எண்ணிக்கையோ சுமார் 66,000.

கலிப்போலியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியைத் தழுவினாலும், இப்போர்க்காலம் ஆஸ்திரேலிய நியூசிலாந்து வீர்ர்களின் வீரத்தையும் தியாகத்தையும், நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டையும் வெளிக்கொணர்ந்த காலமாக அறியப்படுகிறது. கலிப்போலியில் அவர்கள் கால் வைத்த 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாளான முதல் நாளே இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெருமளவில் தேசிய ஒருமைப்பாட்டு அலையை உருவாக்கியது. கலிப்போலி போர் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. வீரர்களுக்கான நினைவேந்தல்கள் நிகழ்த்தப்பட்டன. 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் முதல் ANZAC தினம் அதிகாரபூர்வமாக ஏட்டில் பதிவானது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போர்வீர்ர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன. கலிப்போலி போரிலிருந்து திரும்பிய வீர்ர்கள் அவற்றில் பங்கேற்றனர். காயமுற்ற வீர்ர்கள் இயலாத நிலையிலும் மருத்துவ உபகரணங்களோடும் செவிலியர்களோடும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். அன்றைய தினம் லண்டன் தெருக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைவீரர்கள் அணிவகுத்தனர். லண்டன் செய்தித்தாள் ஒன்று அவர்களை The Knights of Gallipoli என்று பாராட்டி எழுதியது.   

Dawn service எனப்படும் அதிகாலை நினைவேந்தல் நிகழ்வும் அன்றைய தினத்தின் இறுதி நிகழ்வான lost post-ம் ANZAC தினத்தின் சம்பிரதாயச் சடங்குகளுள் முக்கியமானவை. போர் நினைவிடங்களிலும் போர்வீரர்களின் கல்லறைகளிலும் மலர்களும் மலர்வளையங்களும் வைக்கப்படுகின்றன. போர்களில் உயிர்நீத்த போர்வீர்ர்கள் பெருமையோடு நினைவுகூரப்படுகின்றனர். ஓய்வுபெற்ற முன்னாள் போர்வீரர்கள் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவிலும் பிற மாநிலத் தலைநகரங்களிலும் மட்டுமல்லாது சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களிலும் அணிவகுப்புகள் நடைபெறும். அணிவகுப்புகளில் படைவீரர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள், முன்னாள் வீரர்களின் வழித்தோன்றல்கள், போர்க்காலங்களில் பணியாற்றிய செவிலியர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் தேசப்பற்றையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றனர்.

முன்னாள் வீர்ர்கள் தாங்கள் தங்கள் சேவைகளுக்காய்ப் பெற்ற பதக்கங்களை வரிசையாய் மேற்சட்டையின் இடப்பக்கத்தில் அணிந்திருப்பர். உயிரிழந்த போர்வீர்ர்களின் உறவினர்கள் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களது பதக்கங்களைத் தங்கள் சட்டையின் வலப்பக்கத்தில் அணிந்திருப்பர். சில போர்வீர்ர்கள் தம்முடையதும், உயிரிழந்த தம் உறவுகளையுடைதும் என சட்டையின் இருபுறமும் பதக்கங்களை அணிந்திருப்பர்.  

ஏப்ரல் மாதம் மட்டுமல்லாது எல்லா மாதங்களும் பெரும்பாலான கடைகளில் கிடைக்கக்கூடியவை ANZAC பிஸ்கட்கள். ANZAC தினத்துக்கும், ANZAC பிஸ்கட்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.

முதலில் ANZAC பிஸ்கட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்று பார்ப்போம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் ANZAC பிஸ்கட்கள். நீண்ட நாள் கெடாது என்பதாலும், போஷாக்கு நிறைந்தது என்பதாலும் முதலாம் உலகப்போர்க் காலத்தில் போர்வீரர்களின் மனைவிகளும், பிற மகளிர் குழுக்களும் இப்பிஸ்கட்களை ஏராளமாய்த் தயாரித்து நாட்டைப் பிரிந்து சென்றிருக்கும் போர்வீர்ர்களுக்கு அனுப்பினார்கள் என்றொரு தகவலும் இல்லை இல்லை இப்பிஸ்கட்கள் போர்க்களங்களுக்கு அனுப்பப்படவில்லை.. உள்ளூர்களிலேயே பெருமளவு விற்பனை செய்யப்பட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் போர்க்காக செலவிடப்பட்டது என்றொரு தகவலும் சொல்லப்படுகின்றன. இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ உண்மையாக இருக்கலாம். எது எப்படி ஆயினும் போர்களுடனும் ANZAC வீரர்களுடனும் தொடர்புடையதாகிவிட்டது இப்பிஸ்கட். 1917 ஆம் ஆண்டில் சிட்னியிலிருந்து வெளியான War chest cookery book இல் ANZAC பிஸ்கட் என்ற தலைப்பில் இதன் செய்முறை வெளியாகியிருக்கிறது. இத்தனை வருடங்களில் அதன் செய்முறையில் பெரிய அளவு மாற்றமேதும் நிகழவில்லை என்பது ஆச்சர்யம்.

Remembrance day எனப்படும் போர்நினைவு தினத்தன்று சட்டைகளில் பாப்பி மலர்களை சூடிக்கொள்வதைப் போன்று ANZAC தினத்தன்று சட்டைகளில் ரோஸ்மேரி இணுக்குகள் சூடிக்கொள்ளப்படுகின்றன. என்ன காரணம்? கலிப்போலியை நினைவுகூரும் விதமாய் அந்நாளில் கலிப்போலி தீபகற்பத்தில் காட்டுச்செடிகளாய் ஏராளமாய் மலர்ந்துகிடந்த ரோஸ்மேரிச் செடிகள் இப்போதும் ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நினைவேந்தல்களின்போது கட்டாயம் இடம்பெறுகின்றன.

ANZAC தினத்தன்று கட்டாயம் இடம்பெறும் மற்றொரு சம்பிரதாயம் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் Collingwood மற்றும் Essendon குழுக்களுக்கிடையில் நடைபெறும் Australian Rules Football எனப்படும் ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டப் போட்டி. போர்க்காலங்களில் தங்கள் ஓய்வுப்பொழுதுகளில் ஆஸ்திரேலிய வீர்ர்கள் இவ்விளையாட்டை விளையாடினராம். பிற வீர்ர்களுடனான பிணைப்பை வலுப்படுத்தவும் ஆஸ்திரேலியக் கலாச்சாரத்தைக் கொண்டாடவும் அப்போது இவ்விளையாட்டுப் போட்டிகள் உதவினவாம். அதன் நீட்சியாகவே இன்றும் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
ANZAC தினத்தின் மகத்துவத்தையே இவ்விளையாட்டுப் போட்டி மறக்கடித்துவிடுகிறது என்றும் அதனால் ANZAC தினக் கால்பந்தாட்டப் போட்டியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பும் வெறிகொண்ட ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலோடு விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் முட்டி மோதி விளையாடி வெற்றியை நிலைநாட்டத் துடிக்கும் இப்போட்டிகளும் ஒரு வகையில் ANZAC தினத்துக்கான நினைவேந்தலே என்று மற்றொரு தரப்பும், வாதிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் 2002 இலிருந்து ANZAC தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு ரக்பி விளையாட்டுக்கான ANZAC தினக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு Sydney Roosters மற்றும் St.George Illawarra Dragons குழுக்களுக்கிடையிலான போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகின்றன.

எத்தனை முரண்கள் இருந்தாலும், எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் எத்தனைக் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ANZAC தினம் என்றவுடனேயே ஒவ்வொரு ஆஸ்திரேலியர் உள்ளத்திலும் உணர்வுப் பெருக்குண்டாவதை மறுக்க முடியாது.

ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பீதியால் பலர் கூடும் நிகழ்வுகளில் கலந்துகொள்வோருக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு ஆன்ஸாக் தின நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலும் நினைவு ரத்து செய்யப்படக்கூடாதன்றோ? நாட்டுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய வீர்ர்களின் தியாகத்தையும் பெருமையையும் தேசப்பற்றையும் என்றென்றும் நினைவிலிருத்தி அவர்களுக்கு நம் அஞ்சலியையும் மரியாதையும் தெரிவிப்பது ஆஸ்திரேலியர்களாகிய நம் கடமை அல்லவா?

(5 ஏப்ரல் 20 என்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்வில் ஒலிபரப்பானது.)



26 February 2020

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து...


இந்தியாவில் குறிப்பிட்ட நிலப்பகுதியில் டன் கணக்கில் தங்கத்தின் இருப்பு உள்ளதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கம் தங்கம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் தங்கம் மற்றும் இதர கனிம வளங்கள் குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. 2018-இல் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியின் எழுத்தாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

&&&&& 

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து 
காதல் என்னும் சாறுபிழிந்து
தட்டித்தட்டி சிற்பிகள் செய்த உருவமடா

காதலன் காதலியை வர்ணிக்கும் இந்தக் கணக்குப்படி ஒரு பெண்ணை உருவாக்கவேண்டுமெனில் எத்தனை கிலோ கட்டித்தங்கம் தேவைப்படும்.. அப்படியெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை, ஏதோ கவித்துவத்துக்காக கவிஞர் சொல்லியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் கிலோ கணக்கில் கட்டிக்கட்டியாக தங்கம் கிடைக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அது சாத்தியமே.

ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பவை தங்கச்சுரங்கங்கள். தங்கச்சுரங்கங்களில் தங்கம் மண்ணோடு மண்ணாக கலந்து பொடியாகவோ துகள்களாகவோ, கிடைப்பது இயல்பு. மிஞ்சிப்போனால் 2 கிலோ, 3 கிலோ என்ற அளவில் கிடைக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் தூக்கமுடியாத எடையுடன் கட்டிக்கட்டியாகக் கிடைத்தது. ஆம். ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் தனித்துவமானவை golden nuggets எனப்படும் தங்கக்கட்டிகள்.



தங்கம் மட்டுமாவைரம், வெள்ளி, யுரேனியம், அலுமினியம், இரும்பு, ஈயம், துத்தநாகம், செம்பு, நிக்கல், குரோமியம், லித்தியம், கோபால்ட், படிகப்பாறைகள் முதல் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வரை ஆஸ்திரேலிய மண்ணை அகழ அகழக் கிடைக்கும் கனிமங்கள் ஏராளம்.

1851-ல் தொடங்கியது Gold rush எனப்பட்ட தங்க ஓட்டம். அதை ஓட்டம் என்பதை விடவும் பாய்ச்சல் எனலாம். உலகெங்கிலுமிருந்து ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் குவிந்தனர். தங்கம் முதலில் கண்டறியப்பட்டது பல்லாரட் பகுதியில்தான். தோண்டுமிடமெல்லாம் தங்கம் அகப்பட்டது. மவுன்ட் அலெக்ஸாண்டர் பகுதியோ முன்னதை விடவும் அதிகமான தங்கத்தை வாரிவழங்கியது. இந்தப்பகுதியிலிருந்து மட்டும் ஏழு மாதங்களில் 1200 கிலோ எடையுள்ள தங்கம் சந்தைக்கு அனுப்பப்பட்டது. 1856-ல் மட்டும் ஆஸ்திரேலியாவில் வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு சுமார் 97 டன்.


இன்றைய நிலவரப்படி உலகில் பாக்ஸைட், நிக்கல், ஓபல் கற்கள் உற்பத்திகளில் முதலிடத்திலும், தங்கம், இரும்பு உற்பத்திகளில் இரண்டாமிடத்திலும், வைரம், யுரேனியம், இயற்கைவாயு உற்பத்திகளில் மூன்றாமிடத்திலும் ஆஸ்திரேலியா இருப்பதைக் கொண்டே இம்மண்ணின் கனிம வளத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறதல்லவா? ஆஸ்திரேலியாவின் சுரங்கங்களில் வேலைவாய்ப்பு மூலம் சுமார் 1,30,000 குடும்பங்கள் நேரடிப்பயன் பெறுகின்றன.




தங்கம் உற்பத்தியில் சீனாவுக்கு (400 டன்) அடுத்த இடத்தில் வருடத்துக்கு சுமார் 312 டன் அளவென்னும் சிறப்போடு ஆஸ்திரேலியா இரண்டாமிடத்தில் உள்ளது. விக்டோரிய மாநிலத்தின் பல்லாரட்டும் பென்டிகோவும் ஆஸ்திரேலியாவின் தங்க நகரங்கள் என்ற பெருமைக்குரியவை

Replica of Welcome nugget

உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி முதலில் பல்லாரட்டில்தான் கிடைத்தது. 1858-ல் கண்டெடுக்கப்பட்ட அதன் எடை 69 கிலோ. இந்தக் கட்டித் தங்கத்தை எந்த சிற்பியும் தட்டித்தட்டி பெண்ணுருவாக்கவில்லை. முதலில் கிடைத்த தங்கக்கட்டி என்பதால் அதை வரவேற்கும் முகமாக அதற்கு Welcome nugget என பெயரிடப்பட்டது. அதுவரை இவ்வளவு பெரிய தங்கக்கட்டியை எவருமே பார்த்ததில்லை என்பதால் அதைப் பார்த்த முதல் இரண்டு தொழிலாளிகளும் நம்பமுடியாத அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டனராம். இயற்கையாகக் கிடைத்த முதல் பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பைப் பெற்ற அது, லண்டன் சந்தையில் உருக்கப்பட்டு நாணயங்களாக மாற்றப்பட்டதாம். ஆனால் அதற்குமுன் அச்சுஅசலாக அதன் நகலுரு தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது.




அதன்பின் பதினொரு வருடங்கள் கழித்து 1869-ல் விக்டோரியா மாநிலத்தின் டுனாலி பகுதியில் மீண்டும் அதுபோல ஆனால் அதை விடவும் மூன்று கிலோ அதிகமாக 72 கிலோ எடையில் பூமிக்குக் கீழே கையெட்டும் தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற பெயரை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அதற்கு welcome stranger nugget என்று பெயரிடப்பட்டது. ஆனால் அதன் அருமை உணரப்படுமுன்னரே உருக்கப்பட்டு தங்கப்பாளமாக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பது ஏமாற்றம் தரும் செய்தி. உருக்கினால் பெறப்படும் தங்கத்தின் மதிப்பு மூலத்தங்கத்துக்கு இருக்காது எனினும் இப்படி பெருங்கட்டியாக மண்ணிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் அரிய பொருள் என்பதால் அது நிச்சயம் விலைமதிக்கவியலாத ஒன்றுதான்.


Hand of faith

மூன்றாவது இடத்தைப் பெறுவது 1980-ல் விக்டோரியா மாநிலத்தின் Wedderburn பகுதியில் கண்டெடுக்கப்பட்ட hand of faith என்று பெயரிடப்பட்டுள்ள 27 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியாகும். இது கிடைத்த கதை மிக சுவாரசியம். நம்ப முடியாததும் கூட. மாங்கு மாங்கென்று இரவு பகலாக சுரங்கம் வெட்டித் தங்கம் தேடும் தொழில்முறைப் பணியாளர்களைத் தவிர்த்து, சுரங்கத்தொழிலில் அனுபவமும் பயிற்சியும் இல்லாத சிலரும் பொழுதுபோக்காகத் தங்கத்தேடலில் ஈடுபடுவதுண்டு. கைவிடப்பட்ட சுரங்கங்களிலும் மலையெனக் குவிக்கப்பட்ட மண்ணிலும் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடியலைவர். அப்படி ஒருவர் metal detector எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவியைக் கொண்டு மண்ணை ஆராய்ந்துகொண்டு வந்தபோது ஓரிடத்தில் தங்கம் இருப்பதாக கருவி காட்ட, தோண்ட ஆரம்பித்தார். ஒரு அடிக்கும் குறைவான ஆழத்திலேயே 27 கிலோ எடையுள்ள இந்தப் பெரிய தங்கக்கட்டியைக் கண்டறிந்தார். இதுதான் அதிர்ஷ்டம் என்பது போலும். இன்னும் மூல வடிவம் சிதைவுறாமல் பாதுகாக்கப்பட்டுவரும் அது, பத்தாண்டுகளுக்கு முன்புதான் லாஸ் வேகாஸில் உள்ள கோல்டன் நக்கட் கஸீனோவுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாம். இப்போது உருவளவில் மாறாதிருக்கும், இயற்கையாய்ப் பெறப்பட்ட தங்கக்கட்டிகளில் இதுவே மிகப்பெரியது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

 Holtermann with Holtermann's nugget 

இதற்கிடையில் 1872 இல் நியூ சௌத் வேல்ஸின் ஹாக்கின்ஸ் மலைப்பகுதியில் 286 கிலோ அளவிலான தங்கக்கட்டி கிடைத்தது. Holtermann’s nugget என்று பெயரிடப்பட்ட அது, அவ்வளவு பெரியதாக இருந்தும் உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பை இழந்தமைக்குக் காரணம், அதன் மொத்த எடையில் 32% அதாவது 93 கிலோ மட்டுமே சுத்தமான தங்கம், மற்றவையெல்லாம் குவார்ட்ஸ் கற்கள் என்பதால்.   

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில்மக்கள் பெருக்கத்தில்.. வாழ்க்கை முறையில்.. அரசியலில்.. என யாவற்றிலும் பெருந்தாக்கத்தை உண்டாக்கிய தங்க ஓட்டம் பற்றி சொல்லும்போது தங்கச்சுரங்கத் தொழிலாளிகள் நடத்திய யுரேகா போராட்டம் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது

தங்க ஓட்டம் ஆரம்பித்த பிறகு சுரங்கத்தொழிலாளிகளுக்கு சுரங்க வரி விதிக்கப்பட்டது. மாதம் 30 ஷில்லிங் என்பது தங்கம் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல் தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கி அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு எட்டாப்பணம். நான்கு மாதங்களில் அது 60 ஷில்லிங் என்றானது. மண்ணைத் தோண்டித் தோண்டி சுரங்க ஏற்றங்கால்களை இறக்கி இறக்கி தங்கம் கிடைக்காமல் வெற்றுக்கைகளோடு வேறிடம் தேடிக் களைத்து, வரிகட்டவும் வக்கற்றுத் தொய்ந்திருந்த ஏழைத் தொழிலாளிகளின் நெஞ்சம், வெடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தது. சுரங்க அனுமதிக்கான வரி ரசீதுகளோடு தொழிலாளிகளும் அரசால் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1854 அக்டோபர் ஆறாம் நாள் அரசுக்கெதிரான போராட்டத்துக்கான வித்து விதைக்கப்பட்டது. பல்லாரட்டின் யுரேகா விடுதியில் தங்கியிருந்த ஜேம்ஸ் ஸ்கோபீ என்ற சுரங்கத் தொழிலாளி மூன்று காவலர்களாலும், விடுதி முதலாளியாலும் அடித்துக் கொல்லப்பட்டார். நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செல்வாக்காலும் பண பலத்தாலும் விடுதி முதலாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

யுரேகா போராட்டம்

ஆத்திரமடைந்த சுரங்கத் தொழிலாளிகள் யுரேகா விடுதிக்கு தீவைத்துக் கொளுத்தினர். சுமார் பன்னிரண்டாயிரம் சுரங்கத் தொழிலாளிகள் ஒன்றிணைந்தனர். தங்களுக்கென ஒரு அமைப்பையும் கொடியையும் உருவாக்கினர். தங்கள் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இறுதிவரை உண்மையாகப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுரங்க அனுமதித்தாள்கள் கொளுத்தப்பட்டன. இவர்களுக்கு எதிராக பெரும் காவல்படை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பெரிதாய் வெடித்தது. தொழிலாளர்கள் உருவாக்கி வைத்திருந்த தடுப்பரண்கள் தகர்க்கப்பட்டன. தடியடிகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. காயமுற்றவர்கள் மேலும் மேலும் காயமுறுவதைக் காணப்பொறுக்காதப் பெண்களும் போராட்டக்களத்தில் இறங்கினர். காயமுற்றவர்களைக் காப்பாற்றி அடிகளைத் தங்கள் உடல்களில் தாங்கிக்கொண்டனர். தொழிலாளிகள் மற்றும் அவர் குடும்பத்தார் மீதான இக்கடுமையான தாக்குதலை, கொஞ்சமும் மனித்தன்மையற்ற செயலென்று பிற்பாடு விசாரணைக் கமிஷன் கருத்துரைத்தது.

கிளர்ச்சியா புரட்சியா என்று இன்றும் வாதத்துக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும் இப்போராட்டத்தின் இறுதியில் கைதாகி தண்டனை அனுபவித்தவர்கள் அநேகம். போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் 27 பேர் என்று ஆவணப்பதிவில் இருந்தாலும் உண்மையான எண்ணிக்கையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. குறைந்தது 60 பேராவது இருக்கக்கூடும் என்கிறார் க்ளேர் ரைட் என்னும் வரலாற்று ஆசிரியர்.

மண்வளம் ஒரு பக்கம்.. மனிதவளம் மறு பக்கம்.. இரண்டுக்கும் இடையிலான பிணைப்பும் போராட்டமும் எல்லாக் காலத்தும் உண்டென்பதன் சாட்சியாய் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட கடந்தகால நிகழ்வது.   
&&&&