நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது,
அந்தப் பிரேதம். அதன் உறவுகள் யாவும் அது,
அவளாய் இருந்தகாலத்து அருமை பெருமைகளைச் சொல்லி
வாய் ஓயாமல் அழுதுகொண்டிருந்தன. அதன் அருகில் கண்ணீர் விட்டபடி அதன் இரு மகள்களும்,
அவர்களை அணைத்தபடி அதன் தாயும். இந்த இரண்டு
தலைமுறைகளின் இணைப்புப்பாலமான அவள் மட்டும் இன்று ஆவியாய்! ஆம்! ஆவியாய்தான்!
நிறைவேறாத ஆசைகளுடன் அல்பாயுசில்
இறந்துவிடுபவர்களின் ஆவி அது நிறைவேறும்வரை நிம்மதியற்று அலைந்துகொண்டிருக்குமாமே!
அவளும் அலைகிறாள் அப்படி!
நேற்றுவரை நன்றாக இருந்தவள், காலையில் எழுந்து, வாசல் தெளித்து, கோலமிடவந்தபோது, கால் வழுக்கி, தடாரென்று நிலைப்படியில் மண்டை மோதி விழுந்தவள், விழுந்தவள்தான். அதன்பின் எழவேயில்லை.
சாவு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள்
அவள். பல்லக்குப் பாடை தயாராகிக்கொண்டிருக்கிறது. உறவுகள் ஒருவர் விடாது அனைவரும்
வந்திருந்தனர். அனைவரையும் பார்க்க அலாதி ஆனந்தமாய் இருந்தது. பெரியவள்
திருமணத்தின்போதுதான் எல்லோரையும் பார்க்கமுடியும் என்று நினைத்திருந்தாள்.
அப்போது கூட இத்தனைப் பேரும் வந்திருப்பார்களா என்பது சந்தேகமே..
கொல்லைப்புறம் மூன்றாவது வீட்டில்
அப்பா மேற்பார்வையில் இழவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் டிபன் காஃபி, குழந்தைகளுக்குப் பால் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடங்கலின்றி
நடந்துகொண்டிருக்கிறது. அவளுக்கு திருப்தியாக இருந்தது.
அழுது ஓய்ந்து அமர்ந்திருக்கும்
மகள்களைப் பார்த்தாள். அவர்களைப் பற்றிய கவலை அவளுக்குத் துளியும் இல்லை. அம்மா
இருவரையும் பார்த்துக்கொள்வாள். நல்ல இடத்தில் திருமணம்
செய்துவைத்துவிடுவாள். போதுமென்ற
அளவுக்குப் பொருளாதாரம் உள்ளது. கல்லூரியை முடித்தவுடன் கல்யாணம் செய்துவிடலாம்.
இப்போதைக்கு விடுதியில் தங்கிப் படிப்பதால் இவளுடைய தேவையும் தேவையில்லை.
எல்லாம் சரியாக இருப்பதுபோல்
தோன்றினாலும் ஏதோவொரு நெருடியது. அ.. அவன்
எங்கே? சுமங்கலியாய் பூவோடும் பொட்டோடும்
போயிருக்கிறாளே அந்தப் பெருமையை அள்ளித்தந்த அந்த அருமைக் கணவன் எங்கே?
கூட்டத்துக்குள் புகுந்து திணறி
வெளியில் வந்தாள். இதோ, வாசற்புறப்பந்தலில், நாற்காலியில் அமர்ந்தபடி...எ...என்ன...என்ன செய்துகொண்டிருக்கிறான்?
அடப்பாவி! செய்தித்தாள் படிக்கிற நேரமா
இது? இருபது வருடங்களாய், உன்னுடன் வாழ்ந்து, உனக்காகவே வாழ்ந்து, பொட்டென்று போய்ச்சேர்ந்தவளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்...எப்படி
இவனால் இருக்கமுடிகிறது?
ஆமாம்! அவள் உயிருடன் இருந்தபோது
மட்டும் என்ன அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிக்கொண்டா இருந்தான்? அவள் விசனத்துடன் நொடித்துக்கொண்டாள்.
எத்தனைக் கல்யாணக்கனவுகளோடு அவன்
கரம்பற்றினாள். அவளாகவா பற்றினாள்?
சுற்றி நின்ற தோழிகள் கேலியுடன்
பற்றச்செய்தனர். எத்தனை சினிமா
பார்த்திருக்கிறாள். அச்சமும், நாணமும் பின்னிப் பிணைந்து அவளைப்
பாடாய்ப் படுத்தினாலும், தோழியர் தந்த உற்சாகத்தில், கரம்பற்றத் துணிந்தவேளை, அவளை மட்டுமல்ல;
அனைவரையுமே அதிர்ச்சியில் உறையச்செய்தன,
அவன் வார்த்தைகள்.
"என்ன விளையாட்டு இது? எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலை"
சட்டென அங்கு நிலவிய அமைதி அவளைச்
சங்கடப்படுத்தியது. சுற்றத்தின் பரிதாபப் பார்வைகளும் அவளைக் கூர்வாளாய்க்
குடைந்தன.
புஸ்ஸென்று காற்றுப்போன பலூனாய் ஆனது,
அவளது கல்யாணக்கனவு! சுய ஏமாற்றத்தைவிடவும்,
அத்தனைப் பேர் மத்தியில் சொன்னதுதான் ஆழமான
காயத்தை அவள் அடிமனதில் உண்டாக்கியது. அதுதான் முதல் காயம்!
விருந்துண்ணும்போது யாரோ சொன்னார்கள்,
"மாப்பிள்ளை! நீங்க பொண்ணுக்கு ஊட்டுங்க,
பொண்ணு
உங்களுக்கு ஊட்டட்டும்"
வீடியோ எடுப்பவர் தயாராக நிற்க,
அவன் சொன்னான், "இதென்ன பழக்கம்? ஒருத்தர் இலையிலிருந்து
இன்னொருத்தருக்கு ஊட்டிகிட்டு? அதெல்லாம் வேண்டாம்!"
வீடியோ அணைக்கப்பட்டது. இது இரண்டாவது. முத்தாய்ப்பாய் முதலிரவின் கனவுகளை
முறியடித்தான், அவளுக்கு முழு சுதந்திரம் தருவதாய்
நினைத்து. அதன்பின் தொடர்ந்து எண்ணற்ற காயங்கள். புதிதாய்க் கொத்தின அம்மிபோல்
அத்தனை வடுக்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போயிருந்தது, மனம்.
ஒருவேளை இஷ்டமில்லாமல் திருமணம்
செய்துகொண்டானோ?. அதுவும் இல்லையாம். இஷ்டப்பட்டுதான்
திருமணமாம். இதற்குமுன் எவரையும் காதலித்ததும் இல்லையாம். இதுவரை போகட்டும்.
இப்போதுதான் ஒருத்தி அதற்காகவே வந்துவிட்டாளே.. உரிமையுடன் காதலிக்கலாமே… அதுதான் இல்லை. உணர்த்தத் தலைப்பட்ட இவள் காதலும்
அலட்சியப்படுத்தப்பட்டது. காதல் என்ற உணர்வே அவன் அணுக்களில் இல்லை என்னும்
அளவுக்கு கருங்கல்லாக இருந்தான். ஆனால் என்ன குறை வைத்தான் அவளுக்கு!
அவனொரு யதார்த்தவாதியாய்த் தன்னைக்
காட்டிக்கொண்டான். வாழ்வியல் நுட்பம் அறிந்தவனாயிருந்தான். இருந்தால்
அனுபவிக்கணும்; இல்லை என்றால் அதை நினைத்துக்
கவலைப்படக்கூடாது. இதுதான் அவன் கொள்கை. இது பொருட்களோடு நின்றிருந்தால் பிரச்சனையில்லை.
பெண்டாட்டிக்கும் அல்லவா பொதுவாகிவிட்டது. “நீயில்லாத வாழ்வை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது!"
என்பது போன்ற வசனங்களை அவனிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தாள்.
குடும்பம் நடத்துவதும் அலுவலகத்தில்
பணியாற்றுவதும் இரண்டும் இரண்டு கடமைகள் என்று நினைப்பவனிடம் காதலை எதிர்பார்ப்பது
அவள் தவறுதானே… கண்ணே மணியே என்று காதல்மொழி பேசி பிதற்றவேண்டாம்… அன்பாய் ஆதரவாய் ஒரு புன்னகை போதுமே… சிறு குறும்புப் பேச்சு… சின்னச் சின்ன
சில்மிஷங்கள்…. ம்ஹூம்… எப்போதும் உணர்ச்சியற்ற அந்த முகத்தின் மூலம் அவன் உள்ளாடும்
உணர்வுகளை உணரமுடியாமல் இவளுக்கும் பல நேரம் கல்லாகிப்போனது மனம்.
அவன் வார்த்தைகளில் சொல்வதானால் இவள்
ஒரு சுதந்திரப் பறவை. இவள் வார்த்தைகளில்
சொல்வதானால் அவன் ஒரு விட்டேத்தி.
உள்ளுக்குள் அரிக்கும் வேதனையை
அம்மாவிடம் சொல்ல… அவளை அதிசயமாய் பார்த்தாள்.
“உளறாதேடி… உனக்கென்ன குறை? உன்புருஷன்தான் என்ன குறை வச்சார்?
உன்னை இங்க விட்டுட்டுப் போகும்போது என்ன
சொன்னார்… உன் இஷ்டம் போல எத்தனை
நாள்வேணும்னாலும் தங்கிட்டு வான்னாரே… அது எத்தனைப்
புருஷன்மார் வாயிலிருந்து வரும்? தங்கம்டீ அவர்! நான்தான் பார்த்தேனே…
பிறந்தநாள், கல்யாண நாள் எல்லாத்தையும் எவ்வளவு சரியா நினைவு வச்சிருந்து புடவை
நகைன்னு வாங்கித்தரார்… உனக்கு தலைவலின்னால் கூட உடனே
டாக்டரிடம் அழைச்சிட்டு ஓடறார்..இதை விடவுமா நல்ல புருஷன் கிடைச்சிடப்போகிறான் ஒரு
பொண்ணுக்கு … போடி பைத்தியம்… கிடைச்சதை அனுபவிக்கத் தெரியாத மண்டு” என்று ஆத்துப்போனாள்..
அவளுக்கு எப்படி புரியவைப்பது? தான் எதிர்பார்ப்பது அவனிடம் புடவையோ நகையோ அல்ல, அன்பாய் ஆசையாய் ஒரு முத்தம் போதும்... தலைவலி என்றால் டாக்டர்
எதற்கு? கொஞ்சம் அமிர்தாஞ்சன் கொஞ்சம் கரிசனம்
போதுமே…
முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட
அன்று மாலை வரை பொறுமையில்லாமல் உடனே அவன்
அலுவலகத்துக்கு தொலைபேசினாள். ஆசையும் வெட்கமுமாய் திக்கித் திணறி
ஒருவழியாய் விஷயத்தை சொல்லிமுடிக்க, அவன் கேட்டான்.
"அப்படியா? சரி, இதைச் சொல்லவா வேலை நேரத்தில்
கூப்பிட்டே?"
அவள் அதிர்ந்துபோனாள். இது ஒரு பெரிய
விஷயமே இல்லை என்பதுபோல் என்ன பதில் இது? இதைவிடவும்
முக்கியமான விஷயம் என்றால் எதை எதிர்பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரை எதுவுமே
முக்கியச் செய்தியில்லை என்று போகப்போகத்தான் புரிந்தது. இதோ இன்று தன் மரணம் கூட
எத்தனை இயல்பாய் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது அவனால்! அவள் பழைய நினைவுகளால்
புழுங்கிக்கொண்டிருந்தாள்.
எத்தனைப்பேர் குழந்தைப்பேறு இல்லாமல்
கோயில் கோயிலாய் அலைகிறார்கள்? கோடி கோடியாய் மருத்துவத்துக்கு
செலவழிக்கிறார்கள்? அப்படியும் எல்லோருக்கும்
கிடைத்துவிடுகிறதா, அந்தப் பாக்கியம்? இப்படி எந்தத் தொல்லையும் தராமல், இயல்பாய்த் தரித்ததற்காக எத்தனை சந்தோஷப்படவேண்டும்? வம்சம் தழைக்க துளிர் விட்ட வயிற்றை தன் அன்புவார்த்தைகளால் நீவி
ஆனந்திக்கவேண்டாமா? குதூகலப்பகிர்வால் அவளை குஷிப்படுத்த
வேண்டாமா? அவளது பரவசத்துள்ளலைப்
பகிர்ந்திருக்கவேண்டாமா?
என்ன பிறவி இவன்?
பிரசவம் பற்றிய பயத்தைப்
பகிரும்போதெல்லாம் என்ன சொன்னான்?
"என்ன, நீ? இப்படி பயப்படுறே?ஆடு, மாடு எல்லாம் தானாதான் குட்டி ஈணுது.
அதுக்கெல்லாம் யாரு பிரசவம் பாக்குறா? அதுங்களுக்கெல்லாம்
ஸ்கேன் உண்டா, மாசாமாசம் செக்கப் உண்டா? இருந்தாலும் அதது இயல்பா நடக்குதில்லே? என்னமோ நீ மட்டும்தான் அதிசயமா பெறப்போறவ மாதிரி கவலைப்படுறே!
மருத்துவம் முன்னேறின இந்தக்காலத்திலே தேவையில்லாத பயம் எதுக்கு?"
ஆறுதலாய்தான் சொன்னான். ஆனாலும் தன்னை
ஒரு ஆட்டுடனும், மாட்டுடனும் ஒப்பிட்ட அவனை அவளால்
மன்னிக்கவே இயலவில்லை. தன் மனைவி தாயாகப்போகிறாள்
என்கிற அதீத கர்வத்தோடும் அக்கறையோடும், அவள் தலைகோதி,"கவலைப்படாதேம்மா! நான் உன்கூடவே
இருக்கிறேன்!" என்றொரு வார்த்தை சொல்லியிருந்தால் எவ்வளவு தைரியமாக
இருந்திருக்கும்? இப்படி அநியாயத்துக்கு பயமும், படபடப்பும் அதிகரித்து பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு அறுவை
சிகிச்சைக்கு கொண்டுபோய் விட்டிருக்குமா?
போகட்டும் தன் விஷயத்தில்தான் இப்படி..
பிள்ளைகள் விஷயத்திலாவது தன் உள்ளார்ந்த உணர்வுகளைக் காட்டியிருக்கிறானா? மூத்தவள் பூப்பெய்திய நாளன்று அவனைத் தனியே அழைத்து சேதி சொன்னபோதும்,
தலைகால் புரியாமல் பரபரப்புடன் வளையவந்தபோதும்,
அக்கம்பக்கத்தை, உறவுகளை அழைத்து சடங்கு, சம்பிரதாயங்கள்
செய்தபோதும் இப்படித்தான்! சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை.'இயல்பாய் நடக்கிற விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?' என்றொரு அலட்சியப்போக்குதான் இருந்தது.
என்னதான் தந்தை என்ற முறையில் பொறுப்பாய்
பாடம் சொல்லிக்கொடுத்தாலும், அறிவு வளர ஆயிரம் உபகரணங்கள் வாங்கித்
தந்தாலும், ஊர் ஊராய் உல்லாசப்பயணம் அழைத்துச்
சென்றாலும் இதுபோன்ற ஒரு தருணத்தில், மகளின் அருகில்
அமர்ந்து, "அம்மா! நீ வளர்ந்திட்டாயா? என்னால் நம்பவே முடியலையே! நேற்றுதான் பிறந்தமாதிரி இருக்கு!"
என்று ஆதங்கத்துடன், ஆதுரத்துடன் அவள் கன்னம் வழித்துச்
சொன்னால் எத்தனைச் சந்தோஷம் வரும் அந்தச் சின்னப்பெண்ணுக்கு?
சரி, அவனுக்குதான் தெரியவில்லை, அவளாவது
எடுத்துச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றும்… ஆனால் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையிலா அவன் இருந்தான்?
தான் நினைப்பதே சரி; தான் சொல்வதே நியாயம் என்று திடமாய் நம்புபவனிடம் எதைச் சொல்லி
புரியவைப்பது? ஆனாலும் என்ன குறை வைத்தான்
குடும்பத்துக்கு?
சொந்த வீட்டுக்கு அதிபதி! சொகுசுக்கார்
வாசலில்! அவள் பீரோ, பட்டுப்புடவைகளாலும், தங்க நகைகளாலும் நிரம்பி வழிகிறது. இரண்டு பெண்களுக்கும் சீர்
செய்யப் போதுமான செல்வம் சேர்த்தாகிவிட்டது. எல்லாம் யாரால்? அவனது கடின உழைப்புதானே காரணம்? மாங்கு மாங்கென்று உழைத்ததுதானே இத்தனை வசதிக்கும் அடிப்படை?
இத்தனை செய்திருக்கிறானே… இன்னும் அவனைக் குறைப்பட்டுக்கொண்டிருப்பதில் என்ன லாபம் என்று
தோன்றினாலும் ஏன் குறைபடக்கூடாது என்பதற்கும் காரணங்களை வைத்திருந்தாள் அவள்.
எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்! உயிரோடு இருந்தபோதுதான் அவள் உணர்வுகள்
மதிக்கப்படவில்லை. இப்போது பிணமாய்க் கிடக்கிறாளே… அந்தப் பிணத்துக்குரிய மரியாதையைக் கொடுக்கிறானா அவன்? மரியாதை வேண்டாம்… அவமரியாதையாவது செய்யாமல்
இருக்கவேண்டாமா? யார் வீட்டிலோ இழவு விழுந்தது போல்
எனக்கென்ன என்று இறுகிப்போன முகத்துடன் ஏடு படிப்பவனை என்னென்று சொல்வது?
இதோ, பாடை கட்டும் வேலை முடியப்போகிறது. இந்த இறுதி வேளையிலாவது அவள்
பக்கம் வந்தமர்ந்து அவளது துவண்ட கைகளைப் பற்றி, ஒரு துளிக்கண்ணீர் விடுகிறானா? ஒரு துளி போதுமே, குமுறிக்கொந்தளித்துக் கொண்டிருக்கும்
அவள் ஆன்மாவைக் குளிரவைப்பதற்கு!
உறவுகள் கூட அவனது இந்த நடவடிக்கை
கண்டு அசூயையுடன் பார்த்தபடி தங்களுக்குள் தாறுமாறான கதைகளை
அசைபோட்டுக்கொண்டிருந்தனர்.
இத்தனைவருடம் தன் சுகதுக்கங்களைப் பொருட்படுத்தாமல், அவனுக்காகவே சிரித்து, அவனுக்காகவே
உடுத்தி அவனுக்காகவே வாழ்ந்தவளுக்கு அவன் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? இதையெல்லாம் பார்க்கவா இன்னும் அலைந்துகொண்டிருக்கிறேன்? அவள் ஆன்மா புலம்பியது.
முடிந்துவிட்டது. எல்லாம்
முடிந்துவிட்டது. கொள்ளி வைத்து பதினாறாவது நாள் துக்கமும் கொண்டாடி
முடித்தாகிவிட்டது. அம்மா, மாடு கன்றுகளைப் பராமரிக்கவேண்டும்
என்று அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள். மகள்கள் அவ்வப்போது நினைவு வந்து
அவள் படத்தின் முன் நின்று அழுதனர். பின் இருவரும் அவர்கள் அப்பாவிடம் விடை
பெற்றுக்கொண்டு ரயிலேறிவிட்டனர்.
நாட்கள்… வாரங்களாகி மாதங்களாயின. இவள் மட்டும் இன்னும் இங்கேயே
அலைந்துகொண்டிருக்கிறாள். பிரிய மனமில்லாதவளைப்போல் வீட்டைச் சுற்றி சுற்றி
வருகிறாள்.
வீடு நிசப்தமாயிருந்தது. அவளிருந்த
காலத்தில் இப்படி ஒருநாளும் இருந்ததில்லை.
சன்னமாய் ஏதாவதொரு பாடலை எப்போதும் தன்னையறியாமலேயே முணுமுணுத்துக்கொண்டிருப்பாள்.
பிசிறில்லாத தேன்குரலில் மனம் தழுவும் பழைய பாடல்களைத்தான் பெரும்பாலும் பாடுவாள்.
அது வீடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதையும் அவன் ஒருநாளும் சிலாகித்துப்
பாராட்டியதில்லை. அவளுக்கு வேதனை ஊற்றெடுத்துக் கழிவிரக்கம் பெருகியது..
'சே! ஏன் இப்படி எல்லாமே தொடர்ச்சியாய்
நினைவுக்கு வந்து வந்து என்னை வாட்டுகின்றன? இப்படிப் பேயாய் அலையவா, நான் உன் தாயென
வலம் வந்தேன்? உன்னையே என் உலகமென்று ஓயாமல் சுற்றிச்
சுற்றி வந்தேன்? நான் இருந்ததும், இல்லாததும் உன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா? ஒரு நாற்காலிக்கால் உடைந்துபோனால் கூட அய்யோ, உடைந்துவிட்டதே! என்று உச்சு கொட்டுகிறோமே! எனக்கு அந்த நிலையும்
இல்லையா? நான் என்ன அந்த ஜடப்பொருளினும்
கீழானவளாய்ப் போய்விட்டேனா? என் முக்கியத்துவம் என்று எதுவுமே
இல்லையா? இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு
அர்த்தம்தான் என்ன? எனக்கு விமோசனமே கிடையாதா? நரிகளும், நாய்களும் ஊளையிடும் நள்ளிரவில்
நிறைவேறாத ஆசைகளைத் தாங்கி இப்படியே அலையவேண்டியதுதானா?
ஆற்றாமையால் வெம்பிய அவள் குமுறலை,
மெல்லிய விசும்பல் கலைத்தது. யார்? யார் இந்நேரத்தில்? ஏன்? எதற்காக?
கூடத்துத் தரையில்
குப்புறக்கிடந்தவனைக் கண்டு துணுக்குற்றாள். தலைக்கடியில் கோர்த்திருந்த கைகளின்
வழியே கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. சின்ன சின்னதாய் எழுந்த தேம்பல் சட்டென
வேகமெடுத்து பெருங்கேவலாய் எழ, இவள் பதறிப்போனாள். கண்ணீர் ஆறாய்ப்
பெருக, அரவணைப்பார் இல்லாத குழந்தை போல் தொடர்ந்து
கேவிக்கொண்டிருந்தான். அவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.
அவன் கைகளுக்கடியில் அவள் புகைப்படம்!
அவனைச் சுற்றிலும் அவள் கட்டி ஓய்ந்த புடவைகள்… அவள் வரைந்த திரைச்சீலை ஓவியம், அவள் சேகரித்துத் தொகுத்த தபால்தலை ஆல்பம், அவள் உபயோகப்படுத்திய பேனா, அவள் ரசித்த
பாட்டு டிவிடிக்கள்…. இன்னும் இன்னும் அவள் புழங்கிய அவள்
நினைவுகளைத் தாங்கிய அவனை உறுத்திக்கொண்டிருக்கும் ஏராளப் பொருட்கள்.... கரைகாண
முடியாத தூரத்தில் துக்கத்தின் நடுக்கடலில் அவன் பிடிப்பற்று நீந்தித்
தவித்துக்கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.
அவனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
வாய்விட்டு எதையும் உரைக்காதபோதும் அவன் மனமொழி புரிந்தது அவளுக்கு. ஊமை வலியின்
வேதனை அவள் அறியாததா? இன்பம், துன்பம் எதையுமே வாய்மொழி சொல்லியறியாதவன். அது அவன் குறையல்ல. அவனை
சரியாய்ப் புரிந்துகொள்ளாத தன் குறையே என்பது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. தன்னை, தன் உணர்வுகளை
அவன் புரிந்துகொள்ளவில்லையென்று அவனைக் குறை சொல்லியே சுற்றிய மனம், இப்போது, அவனை, அவன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்னைத் தானே குறைசொல்லி
முறையிட்டது. குற்ற உணர்வின் பிடியில் அகப்பட்டவளுக்கு அவனழுத கண்ணீர் ஆறுதல்
சொன்னது. காலங்கடந்து உணரப்பட்ட காதலை அவன் உணர்த்தும் காலமும் காலனால்
பறிக்கப்பட்டிருந்தது. அழுபவனைத் தேற்ற
இயலாமல் தவித்தவள், காலத்தின் கையிலேயே அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அகன்றாள்.
தனக்குத்தானே சுவர்கள் எழுப்பி
அதற்குள் அடைபட்டுக்கிடந்த அவன் உள்ளம் இப்போது தன் இருப்பை வெளிப்படுத்தும்
எண்ணத்தோடு சுவருடைத்து வெளிவந்து உணர்த்துகிறது தான் ஒரு கல் அல்ல, கற்பூரம் என்பதை!
கற்பூரம் எரிந்துதான் தன் இருப்பைக்
காட்டவேண்டுமென்ற அவசியம் இல்லையே… காற்றிலும் கரைந்து நிரூபிக்கலாம்
அவனைப் போல. இவளும் காற்றோடு காற்றாய் மெல்லக் கரையத் தொடங்கினாள் அந்த
கற்பூரம்போலவே… இனி அவளுக்கு அங்கென்ன வேலை?
******************
(ஜூன் 14, 21 ஆகிய தினங்களில் வெளியான தினமலர் பெண்கள் மலரில் வெளிவந்த கதை என்பதும் அச்சிலேறிய என் முதல் படைப்பு என்பதும் மகிழ்வு தரும் செய்திகள்.)