பூமராங் இனி
தேவையில்லை
ஈட்டிகட்கும் இனி
வேலையில்லை
நகருக்குள்
மதுவருந்திக் களிக்கும்
நாகரிக
மாந்தரானோம் நாம்..
பாரம்பரிய
நடனங்கள் மறந்தோம்
பன்னெடுங்
கொண்டாட்டம் இழந்தோம்
கைப்பணம்
கொடுத்துத் திரையரங்கினில்
கேளிக்கைப்
படங்கள் ரசிக்கின்றோம்.
வேட்டையாடிக்
கூட்டத்தோடு
பங்கிட்டுண்ணும்
பழக்கம் துறந்தோம்
ஓடாய்த் தேய்ந்து
உழைத்த காசில்
கடைப்பண்டம்
உண்டு காலம் கழிக்கிறோம்
முன்னிருந்த
வாழ்வு மறந்தோம்
முதலாளிகளைத்
தேடி சோர்கிறோம்.
வாழ்க்கை நுட்பம்
அறியும்பொருட்டு
தேசாந்திரம்
போனோம் அன்று.
பணியும் பணமும்
தேடும் பொருட்டு
பேருந்து ரயிலேறி
அலைகிறோம் இன்று.
ஆடையற்றிருந்த
காலத்திலும்
அவமானம் குறித்து
அறியாதிருந்தோம்
அப்பழுக்கில்லா
நிர்வாணம் மறைக்க
ஆடைகள் அணிந்து
அழுக்காகிப் போனோம்.
குச்சுக்குடிசைகள்
இனி தேவையில்லை.
குடியிருக்க
அடுக்குமாடி இருக்கையிலே.
அசலும் வட்டியும்
கட்டிமுடிக்க
ஆண்டிருபது
ஆகலாம், அதனாலென்ன?
கற்கோடரியைக்
கைவிட்டு
இரும்புக்கோடரியைக்
கையிலெடு…
அடிமை போல
உழைத்துழைத்து
ஆண்டானுக்கு உணவு
கொடு.
வெள்ளை மக்கள்
நக்கல் செய்யும்
கொள்ளிக்கோல்கள்
இனியும் வேண்டாம்.
இதோ..
வந்துவிட்டது மின்சாரம்
இல்லை அதிலும்
நன்மையேதும்.
தொலைந்துபோன
தொன்மப்பிசாசு
புனியாப் என்னும்
நீர்வாழ் கொடூரம்
வெள்ளைமனிதனாய்
மீண்டுவந்து
வேறுபெயர்
சொல்லிக்கொள்கிறது.
நவீனம் காட்டும்
ஓவியம் யாவும்
நச்சென்று ஏதும்
சொல்வதுண்டோ?
எங்கள்
குகையோவியம் சுட்டும்
கூற்றுக்குக்
குறையேதுமுண்டோ?
கறுப்புமனிதனுக்கு
மிருக வேட்டை,
வெள்ளைமனிதனுக்கு
பண வேட்டை.
தகவற்கட்டைகள்
இனி தேவையில்லை
தூது
செல்வோர்க்கினி வேலையில்லை..
தொலைக்காட்சிகள்
இல்லா வீடில்லை..
தொடர்
விளம்பரங்களுக்கு முடிவில்லை.
குத்தீட்டிகள்
இனி வேண்டாம்
குண்டுக்கழியும்
இனி வேண்டாம்
அணுகுண்டு
கைக்கொண்டோம்..
அகிலத்தை
அழித்திடுவோம்.
---------------------------
(ஆஸ்திரேலியாவில்
வெள்ளையர்கள் வரவால் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட இழப்புகள்
குறித்த ஆதங்கக் கவிதை)
|
Oodgeroo Noonuccal |
எழுதியவர் – திருமதி ஓட்ஜெரூ நூநுக்கல் (Oodgeroo
Noonuccal) (1920 – 1993)
1920-ல்
குவீன்ஸ்லாந்தைச்
சேர்ந்த நார்த் ஸ்ட்ராட்ப்ரோக் தீவில் நூநுக்கல் பூர்வகுடி இனத்தில் பிறந்த ஓட்ஜெரூ நூநுக்கல் அற்புதமான கவிஞரும் சமூக அரசியல் போராளியும் ஆவார். பூர்வகுடி மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அரசின் சட்டதிட்டங்களை மாற்றக்கோரும் போராட்டங்களில் பெரும்பங்கு வகித்தவர். வெள்ளையர்கள் வரவால் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட இழப்புகளைக் கவிதைகளாக்கியவர். ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களில் முதன்முதலில் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டவர் என்ற பெருமைக்குரியவர். ஏராளமான விருதுகளையும் கௌரவ முனைவர் பட்டங்களையும் பெற்றவர். Kathleen Jean Mary Ruska என்பது இவரது இயற்பெயர். Bruce Walker என்பவரை மணம் முடித்ததால் கேத் வாக்கர் என்று அழைக்கப்பட்டார். 1988-ல் ஓட்ஜெரூ நூநுக்கல் என்ற பூர்வகுடி அடையாளப் பெயரை சூட்டிக்கொண்டார். 1993-ல் தனது 72-வது வயதில் இயற்கை எய்தினார்.
தமிழாக்கம் –
கீதா மதிவாணன்
(படங்கள் இணையத்திலிருந்து...)