Showing posts with label பூர்வகுடி. Show all posts
Showing posts with label பூர்வகுடி. Show all posts

10 August 2024

நீர் அல்ல, குருதி; நிலம் அல்ல, உயிர்!

 

பழங்குடிப் பெண்மணி
 (படம் உதவி Pixabay)

நேற்று ஆகஸ்டு 9-ஆம் நாள் சர்வதேசப் பழங்குடி மக்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1994-ஆம் ஆண்டு முதல் இந்நாள் சர்வதேசப் பழங்குடி தினமாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகெங்கும் உள்ள பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பழங்குடியின மக்களின் செயலாக்கங்களையும் சாதனைகளையும் அங்கீகரிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும். 

ஒரு நிலத்தின் அல்லது மண்ணின் ஆதிகுடிகளான பழங்குடி மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியல் அம்சங்களை அழியாமல் பாதுகாப்பதும் அவர்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் தடையின்றிப் பெற வழிவகுப்பதும், அவர்களுடைய கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து, உடல்நலம் மற்றும் சமூகநலம் சார்ந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதும் நம் கடமையாகும்.

கனலியின் அமெரிக்கச் சிறப்பிதழில் (2021) என் மொழிபெயர்ப்பில் வெளியான கடிதத்தை, சர்வதேசப் பழங்குடி தினத்தை முன்னிட்டு இங்கு பதிகிறேன்.

தலைவர் சியாட்டிலிடமிருந்து 

அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885

1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும் பிற செவ்விந்தியப் பழங்குடியினர் எதிர்கொள்ள நேரிட்டது. உடன்படிக்கையின் ஒரு பகுதி, இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை 150,000 டாலர்களுக்கு விற்க அவர்களை நிர்பந்தித்தது. 

தலைவர் சியாட்டில்
(படம் உதவி Wikipedia) 

செவ்விந்தியப் பழங்குடிகளுள் ஒன்றான சுக்வாமிஷ் பழங்குடியின் தலைவர் சியாட்டில், ஆன்மீக நம்பிக்கையும் தெளிந்த சிந்தனையும் கொண்டவராக இருந்தார். அவர் சுக்வாமிஷ் மொழியில் ஆற்றிய உரைகளை நேரில் கேட்டுக் குறிப்பெடுத்திருந்த கவிஞரும் மருத்துவருமான ஹென்றி ஸ்மித் பிற்காலத்தில் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அக்கடிதம் சற்றே கவித்துவமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், 'அமெரிக்கப் பூர்வகுடி உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களின் மதிப்புணர்த்தும் சக்திவாய்ந்த, கசப்பான வேண்டுகோள்' என்று பாராட்டப்படுகிறது. 

செவ்விந்தியர் (படம் உதவி Pixabay)


இதோ அந்தக் கடிதம்:

அந்த ஆகாயத்தை, இந்த நிலத்தை, அதன் வெதுவெதுப்பை நீங்கள் எப்படி விற்கவோ வாங்கவோ முடியும்? இந்த யோசனையே எங்களுக்கு விநோதமாக இருக்கிறது. காற்றின் புத்துணர்வையும் நீரின் பளபளப்பையும் நம்மால் சொந்தம் கொண்டாட முடியாதபோது அவற்றை வாங்க மட்டும் உங்களால் எப்படி முடியும்?

இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்குப் புனிதமானவை. ஒளிரும் ஒவ்வொரு பைன் மர இலையும், ஒவ்வொரு மணற் கடற்கரையும், அடர்வனத்தின் ஒவ்வொரு பனித்திவலையும், ஒவ்வொரு பொட்டல்வெளியும், ரீங்கரிக்கும் ஒவ்வொரு பூச்சியும் எங்கள் மக்களின் நினைவிலும் அனுபவத்திலும் புனிதமானவை. 

மரங்கள் தம்முள் நீரைக் கடத்தவில்லை, செவ்விந்தியர்களின் நினைவுகளைக் கடத்துகின்றன.

இறந்துபோன வெள்ளையர்கள், விண்ணுலகம் சென்ற பின், தாங்கள் பிறந்த நாட்டை மறந்துவிடுகிறார்கள். ஆனால் இறந்துபோன எங்கள் முன்னோர்கள் ஒருபோதும் இந்த அழகிய பூமியை மறப்பதே இல்லை. ஏனெனில் இதுதான் செவ்விந்தியரின் அன்னை. நாங்கள் இந்தப் பூமியின் அங்கம், இந்தப் பூமி எங்களின் அங்கம்.

நறுமணமிக்க மலர்கள், எங்கள் சகோதரிகள்; மான், குதிரை, பெருங்கழுகு, இவையெல்லாம் எங்கள் சகோதரர்கள். பாறை முகடுகள், பச்சைப் புல்வெளிகளின் ஈரம், மட்டக்குதிரையின் உடற்சூடு, மனிதன் - யாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

வாஷிங்டனில் உள்ள பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாகச் சொல்கிறார், எங்களின் ஒரு பகுதியைக் கேட்கிறார். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கித் தருவதாகவும் அதில் நாங்கள் வசதியாக எங்கள் விருப்பம் போல வாழலாம் என்றும் பெருந்தலைவர் சொல்கிறார். அவர் எங்கள் தகப்பனைப் போன்றவர், நாங்கள் அவரது பிள்ளைகளைப் போன்றவர்கள். ஆகையால் நீங்கள் எங்கள் நிலத்தை வாங்குவது குறித்து பரிசீலிப்போம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதமானது. 

ஓடைகளிலும் நதிகளிலும் மினுமினுத்துக்கொண்டு ஓடுவது வெறும் நீர் அல்ல, எங்கள் முன்னோர்களின் குருதி.

நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் இது புனிதமானது என்பதைச் சொல்லித்தரவேண்டும். ஏரிகளின் தெளிந்த நீரில் தோன்றும் அமானுஷ்யப் பிரதிபலிப்புகள் ஒவ்வொன்றும் எங்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் நினைவுகளையும் சொல்லும். நீரின் சலசலப்பு என் பாட்டனின் குரல்.

நதிகள் எங்கள் சகோதரர்கள், அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. எங்களது படகுகளை ஏந்திச் செல்கின்றன, எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றன. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், நதிகள் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சகோதரர்கள் என்பதையும், ஒரு சகோதரனிடம் காட்டும் பரிவைப் போன்று நதிகளிடமும் பரிவு காட்ட வேண்டுமென்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லித்தரவேண்டும்.

வெள்ளையர்களால் எங்கள் வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்ள முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு நிலப்பகுதியைப் போலத்தான் இன்னொன்றும். ஏனென்றால் அவர்கள் இரவுநேரத்தில் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றை நிலத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் அந்நியர்கள். இந்த நிலம் அவர்களுக்கு சகோதரன் அல்ல. மாறாக, அவர்களுடைய எதிரி. நிலத்தை வெற்றிகொண்ட பிறகு அவர்கள் அங்கிருந்து போய்விடுகிறார்கள்.

ஒரு வெள்ளை மனிதன், தான் விட்டுச் செல்லும் அவனுடைய தந்தையின் கல்லறையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவனுடைய குழந்தைகளிடமிருந்து இந்த பூமியைப் பறிக்கிறான், அது குறித்தும் அவன் அக்கறை கொள்வதில்லை. அவனது தந்தையின் கல்லறை, அவனுடைய குழந்தைகளின் பிறப்புரிமை எல்லாமும் மறக்கப்பட்டுவிடுகின்றன. அவன் தன் தாய், இந்த பூமி, தன் சகோதரன், அந்த வானம் எல்லாவற்றையுமே ஆடுகளுக்கும் அலங்கார மணிகளுக்கும் நிகரான, வாங்கவும் பறிக்கவும் விற்கவும் கூடிய பொருட்களைப் போலவே நடத்துகிறான். அவனுடைய ஆறாப்பசி, இந்த பூமியை விழுங்கி, வெற்றுப் பாலையை மாத்திரமே விட்டுவைக்கப்போகிறது.

எனக்குத் தெரியவில்லை. எங்கள் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டவை. உங்கள் நகரத்துக் காட்சிகள் செவ்விந்தியனின் கண்களை ரணமாக்குகின்றன. செவ்விந்தியன் ஒரு காட்டுவாசி என்பதால், ஒருவேளை அவனுக்கு அது புரியாமல் இருக்கலாம்.

வெள்ளையர்களின் நகரத்தில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை. வசந்தகாலத்தில் துளிர்விடும் இலையின் ஓசையோ அல்லது பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தமோ கேட்க ஒரு இடமும் இல்லை. நானொரு காட்டுவாசி என்பதால் ஒருவேளை எனக்கு அது புரியாமல் இருக்கலாம்.  இரைச்சல்கள் எங்கள் காதுகளை இம்சிக்கின்றன. 

தனித்து ஒலிக்கும் இராப்பக்கி பறவையின் கதறலையோ, குளத்தோரத் தவளைகளின் கூச்சலையோ ஒருவனால் கேட்க இயலவில்லை எனில் வாழ்க்கையில் பிறகு வேறு என்னதான் இருக்கிறது

நானொரு செவ்விந்தியன் என்பதால் எனக்கு அது புரியவில்லை. குளத்து நீரின் மேற்பரப்பை உரசிப்போகும் காற்றின் சன்ன ஒலியையும், நண்பகல் மழை கழுவிய அல்லது பைன் மர வாசம் சுமந்த அக்காற்றின் மணத்தையுமே ஒரு செவ்விந்தியன் விரும்புகிறான்.

செவ்விந்தியர்களுக்கு காற்று ஒரு அரும்பொருள். ஏனெனில் அனைத்துப் பொருட்களுக்கும் அதுதான் ஒரே மூச்சுக்காற்று. விலங்கு, மரம், மனிதன் – அனைவரும் ஒரே காற்றைத்தான் பகிர்ந்து சுவாசிக்கிறார்கள். வெள்ளையர்களோ, தாங்கள் சுவாசிக்கும் காற்றின்பால் கவனம் செலுத்துவதாகக்கூடத் தெரியவில்லை. வெகுகாலமாக மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்கு, வீச்சமும் வாடையும் தெரியாத அளவுக்கு நுகர்திறன் மரத்துப்போய்விடும்.

ஆனால், நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், காற்று எங்களது அரும்பொருள் என்பதையும், காற்று தன் ஆன்மாவை, அது வாழ்விக்கும் அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். 

இந்தக் காற்றுதான் என் பாட்டனாருக்கு முதல் மூச்சைக் கொடுத்தது, அதுவேதான் அவரது கடைசி மூச்சைப் பெற்றுக்கொண்டது.

மேலும் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், புல்வெளிப் பூக்களின் நறுமணம் தாங்கிய காற்றை, வெள்ளையர்களும் அனுபவிக்கும் ஒரு தலமாக, தனியாகவும் புனிதமாகவும் அதை நீங்கள் பேணவேண்டும்.

எனவே எங்கள் நிலத்தை வாங்குவது குறித்த உங்கள் முனைவை நாங்கள் பரிசீலிப்போம். அதை ஏற்றுக்கொள்வதென நாங்கள் முடிவு செய்தால் நான் ஒரு நிபந்தனை விதிப்பேன்: வெள்ளையர்கள் இந்த நிலத்தின் உயிரினங்களை தங்கள் சகோதரர்களாக நடத்தவேண்டும். 

நானொரு காட்டுவாசி. எனக்கு வேறெந்த வழியும் தெரியவில்லை.

ஓடும் ரயிலிலிருந்து வெள்ளையர்கள் சுட்டுக் கொன்றதால் புல்வெளிகளில் அழுகிக்கிடக்கும் ஆயிரமாயிரம் எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். நானொரு காட்டுவாசி. எனக்குப் புரியவில்லை, நாங்கள் உயிரோடு இருப்பதற்காக மட்டுமே கொல்லும் எருமையை விடவும் புகைவிடும் அந்த இரும்புக் குதிரை எந்த விதத்தில் முக்கியமானதாக இருக்க முடியும்?

விலங்குகள் இல்லாவிடில் மனிதன் ஏது? எல்லா விலங்குகளும் அழிந்துவிட்டால், மனிதனும் ஆன்மாவின் பெருந்தனிமையில் அல்லாடி மரித்துப்போவான். விலங்குகளுக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் விரைவில் மனிதனுக்கும் நேரும். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

உங்கள் குழந்தைகளிடம், அவர்களுடைய பாதங்களுக்கு அடியிலிருக்கும் மண், அவர்களுடைய பாட்டனார்களின் சாம்பல் என்பதை நீங்கள் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். வாழ்ந்துசென்ற நம் சுற்றத்தாரால்தான் இந்த பூமி வளமாக இருக்கிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

இந்த பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதைப் போலவே, நீங்களும் உங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். பூமிக்கு என்னவெல்லாம் நேர்கிறதோ, அது எல்லாமும் பூமியின் பிள்ளைகளுக்கும் நேர்கிறது. மனிதர்கள் தரை மீது துப்புகிறார்கள் எனில், அவர்கள் தங்கள் மீதே துப்பிக் கொள்கிறார்கள்.

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: இந்த பூமி, மனிதனுக்குச் சொந்தம் இல்லை, மனிதன்தான் பூமிக்குச் சொந்தம். 

குடும்பத்தைப் பிணைக்கும் இரத்த பந்தம் போன்றுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைப் பின்னலை மனிதன் நெய்வதில்லை. அவன், அப்பின்னலின் ஒற்றை இழை மட்டுமே. அப்பின்னலுக்கு என்னவெல்லாம் அவன் செய்கிறானோ, அதையெல்லாம் அவன் தனக்கே செய்கிறான்.

ஒரு நண்பனைப் போல இறங்கி வந்து தன்னோடு பேசக்கூடிய கடவுளைக் கொண்டிருக்கும், வெள்ளை மனிதனும் கூட, இந்தப் பொதுவிதியிலிருந்து விலக்கு பெற இயலாது.

என்ன இருந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறந்தவர்களே. எங்கள் கடவுளும் அதே கடவுள்தான் என்று ஒருநாள் வெள்ளையர்கள் கண்டுகொள்ளக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் நிலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புவதைப் போலவே எங்கள் கடவுளையும் சொந்தமாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்களால் முடியாது. காரணம், அவர் மனிதர்களின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளை மனிதனுக்கும் சமமானது. அவருக்கு இந்த பூமி மிக மதிப்புவாய்ந்த ஒன்று. இந்தப் பூமிக்குக் கேடு விளைவிப்பது என்பது படைத்தவனை அவமதிப்பது போன்றது.

வெள்ளையர்களும் போய்விடுவார்கள். மற்றெல்லாப் பழங்குடியினரையும் விட சீக்கிரமாகவே அது நடக்கலாம். உங்கள் படுக்கையைத் தொடர்ந்து நீங்கள் அசுத்தப்படுத்திக்கொண்டே இருந்தால், ஒருநாள், உங்கள் மூத்திர வாடையே உங்களை மூச்சுத் திணறவைக்கும். 

ஆனால் ஏதோ ஒரு சிறப்புக் காரணத்தை முன்னிட்டு, இந்த நிலத்தின் மீதும், இந்த நிலத்தில் வாழும் செவ்விந்தியர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தந்த, இந்தப் பூமிக்கு உங்களைக் கொண்டுவந்த கடவுளின் வல்லமையால், உங்கள் அழிவின்போதும் நீங்கள் பிரகாசிப்பீர்கள்.

எல்லா எருமைகளும் கொல்லப்பட்ட பிறகு, காட்டுக் குதிரைகள் யாவும் பழக்கப்பட்ட பிறகு, காடுகளின் ரகசிய மூலை முடுக்கெல்லாம் மனித வாடையால் நிரம்பிய பிறகு, பழங்குன்றுகளெல்லாம் தந்திக் கம்பிகளின் பொருட்டு சிதைக்கப்பட்ட பிறகு, வரவிருக்கும் ஊழ்வினை என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு மர்மமாக உள்ளது.

&&&&&

27 December 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள்

ஒரு இனத்தின் சிறப்பையும், தொன்மையையும், வரலாற்றையும் வாழ்வியலையும் அறிந்துகொள்ள அவ்வினத்தின் மொழியும் அதன்வழி வெளியான இலக்கியங்களுமே நமக்கு உதவுகின்றன. ஆனால் காலங்காலமாக வாய்மொழியாகப் பேசப்பட்டு வந்தாலும் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் தங்கள் மொழிக்கென்று எழுத்துவடிவமோ இலக்கியமோ படைத்திராத சூழலில் அவர்களுடைய தொன்மையையும் சிறப்பையும் எப்படி தங்கள் தலைமுறையினருக்குக் கடத்துகிறார்கள்? எப்படி தங்கள் இனத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என்ற கேள்விகள் நமக்கு எழக்கூடும்.


இயற்கையை இறையாய் வழிபடும் அவர்கள்,  நிலவமைப்புகளைப் புனிதமாய்க் கருதுகிறார்கள். முன்னோர்களின் ஆன்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் கதைகள் மூலம் செவிவழியாகவும், கலைகள் மூலம் காட்சிவழியாகவும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கடத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். தங்களுடைய மொழியை ஓவியங்களாய் வெளிப்படுத்தினர். நடனம், சடங்குகள், வழிபாட்டுமுறை, ஓவியம், வைத்தியம், இசை, கைவேலைப்பாடு, வேட்டை நுணுக்கம் என எத்தனையோ சம்பிரதாயங்களை அவற்றின் பாரம்பரியம் கெடாது தங்கள் வருங்கால சந்ததியினருக்குக் கடத்திவருகின்றனர்.




ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள் என்றாலே பாறை ஓவியம், செதுக்கு ஓவியம், புள்ளி ஓவியம், மரப்பட்டை ஓவியம், மணல் ஓவியம், சுவடு ஓவியம், உடல் ஓவியம் என அதில் அத்தனை வகையைக் காணமுடியும்.



உலக மக்களின் பார்வையில் ஆஸ்திரேலியாவை தனித்து அடையாளப்படுத்தும் கலாச்சார வகைமைகளுள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் புள்ளி ஓவியமும் ஒன்று. ஆஸ்திரேலியப் புள்ளி ஓவியங்கள் இன்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாய் புள்ளிகள் வட்டங்கள் கோடுகள் என்று தோன்றினாலும் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அர்த்தமுடையவை. பூர்வகுடி ஓவியங்கள் பல அடுக்கு புரிதல்களைக் கொண்டவை. குழந்தைகளுக்கு எளிமையாகவும் மேலோட்டமாகவும், பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சற்று விரிவாகவும் அதைச் சார்ந்தோர்க்கு, அதன் புனிதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த ஆழமான மற்றும் தீர்க்கமான புரிதலையும் தரக்கூடியவை. ஒரு பூர்வகுடிக் கலைஞர், இந்த மூன்று நிலையிலும் ஓவியத்தை விளக்கும் முறையை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 




கதைகளுக்குள் ஓவியங்களும் ஓவியங்களுக்குள் கதைகளும் பொதித்துவைக்கப்பட்டு, ஆன்மீக உணர்வுடனும், இனத் தனித்துவத்துடனும்  பாதுகாக்கப்பட்ட ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்கு வலம்வரத் தொடங்குவதை அறிந்த அவர்கள் தங்கள் பாரம்பரியத்துக்கும் புனித நம்பிக்கைகளுக்கும் இழுக்கு ஏற்படாதிருக்கவும், இதர பூர்வகுடி இனங்களுக்கு தங்கள் ரகசியங்கள் பகிரப்படாதிருக்கவும் கண்டுபிடித்த உத்திதான் புள்ளி ஓவிய உத்தி. ஓவியங்களை புள்ளிகளாய் வரைவதன் மூலம் அதன் புனிதத்தன்மை நீக்கப்பட்டு விடுவதாகவும் ரகசியங்கள் வெளியுலகுக்குக் கடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டு விடுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.




கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்கள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவிய வகைமையுள் முக்கியமான ஒன்று. தங்களுடைய வாழ்விட எல்லைகளைப் பறைசாற்றும் வண்ணம் மலைப்பாறைகளிலும் குகைகளிலும் அவ்விடங்களில் வசிக்கும் பூர்வகுடிக் குழுவினர் தங்கள்  கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்களைப் படியெடுத்து முத்திரை பதிப்பது வழக்கம். படியெடுக்கப்பட்டிருக்கும் கைச்சுவட்டுப் பிரதிகளுள் மேலே உச்சியில் இருப்பது குழுவின் உயர்ந்த பதவியிலிருப்பவர் அதாவது தலைவரின் கைச்சுவட்டுப் பிரதியாகும். அவருக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களின் கைச்சுவட்டுப் பிரதிகள் அந்தந்த வரிசைக்கேற்ப அமைந்திருக்கும்.



இந்த கைச்சுவட்டுப் பிரதிகளை உருவாக்குவதே ஒரு கலை. தண்ணீர், செங்காவி அல்லது சுண்ணாம்புத்தூள், கங்காரு, எக்கிட்னா, ஈம்யு போன்ற விலங்கு அல்லது பறவைகளின் கொழுப்பு இவற்றைக் கலந்து வாய் நிறைய நிரப்பிக்கொண்டு பாறையில் ஊன்றப்பட்டிருக்கும் கையின் மீது மிகுந்த விசையோடு ஊதுவார்கள். தாளில் மை ஊறுவது போல இக்கலவை பாறையில் ஊறி சுவட்டோவியத்தை உருவாக்கும். குழுவின் மூத்த உறுப்பினர்கள் அவர்களுடைய வயதுக்கும் தலைமைப் பண்புக்கும் ஏற்ப மணிக்கட்டு வரை மட்டுமல்லாது முழங்கை வரை தங்கள் கைச்சுவட்டைப் பதிக்கும் பெருமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். கைச்சுவட்டுப் பிரதிகள் பெரும்பாலும் இடக்கைகளாகவே உள்ளன. அதற்குக் காரணம், பெரும்பாலானோர் வலக்கை பயன்பாட்டாளர்கள் என்பதால் வலக்கையை வாயருகில் புனல்போல் குவித்து வண்ணக்கலவையை சிதறாமல் ஊதுவதற்குப் பயன்படுத்தினர்.


இந்த கைச்சுவட்டுப் பிரதியெடுக்கும் ஓவிய வகைமை ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களிடத்தில் மட்டுமல்லாது அர்ஜென்டினா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் தொன்மையான ஓவிய வகைமையாக அறியப்படுகிறது.



ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்களும் செதுக்கு சிற்பங்களும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதாயிரம் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரின் சில சுண்ணாம்புப் பாறை செதுக்கு சிற்பங்களின் வயது சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களுக்கு செங்காவி வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண்ணைக் குறிக்கும் குறியீடுகளும், நீர்நிலைகள், பழங்கள், கங்காரு, ஈமு போன்ற உணவிருப்பிடம் குறித்த குறியீடுகளும், சந்திக்கும் இடங்கள் பற்றிய அடையாளக் குறியீடுகளுமாய் ஒவ்வொரு இனமும் தமக்கென்று தனித்த குறியீட்டு ஓவியமுறையைக் கைக்கொண்டுள்ளனர்.



நார்வாலா கபன்மேங் குகைகள், கிம்பர்லி, லாரா, உபிர், காக்கடூ தேசியப் பூங்கா, உலுரு என ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களிலும் கற்பாறை ஓவியங்களும் முருஜுகா, ப்ளூ மவுண்டன்ஸ், குரிங்கை சேஸ் தேசியப்பூங்கா போன்ற இடங்களில் சுண்ணாம்புப்பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆதி மனிதன் முதல் இன்று அழிந்துபோய்விட்ட தைலாசின் போன்ற பல உயிரினம் வரை வரையப்பட்டுள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள இயலும்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் மரப்பட்டை ஓவியங்களும் மற்றொரு பிரசித்தி பெற்ற ஓவிய முறையாகும். முண்டுமுடிச்சுகள் இல்லாத யூகலிப்டஸ் மரவகையான Stringybark எனப்படும் மரத்தின் பட்டைகளே ஓவியம் தீட்டப் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பமும் தேர்ச்சியும் பெற்றவர்களால் உரிக்கப்பட்ட மரப்பட்டைகள் தீயில் லேசாக வாட்டப்பட்டு மேலே கற்கள் மரக்கட்டைகள் போன்றவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டு சமதளமாக்கப்படுகின்றன. பிறகு காவி, மஞ்சள் போன்ற மண் நிறமிகள், சுண்ணாம்பு மற்றும் கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. நிறமிகளின் ஒட்டுந்தன்மைக்கு முற்காலத்தில் மரப்பிசின் பயன்படுத்தப்பட்டது. தற்போது இரசாயனப் பசைகள் பயன்படுத்தப்படுகின்றன.   



பூர்வகுடி மக்களின் கலாச்சார நம்பிக்கையின் மையமான கனவுக்காலக் கதைகளை அடிப்படையாய்க் கொண்டே பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த உலகம் எப்போது, எப்படி தோன்றியது, இவ்வுலகின் உயிரினங்கள், காடுகள், மலைகள், சூரியன், நிலவு, காற்று, மழை, நெருப்பு, கடல் என ஒவ்வொன்றின் தோற்றம் குறித்தும் ஒவ்வொரு பூர்வகுடிக் குழுவினரிடமும் கதைகள் உள்ளன. படைப்பின் ரகசியங்களை வேற்றுக் குழுவினரோடு பகிர்ந்துகொள்வதைக் குற்றம், இழுக்கு என்று நம்பிய அவர்கள், எப்போதும் தங்கள் கதைகள் மற்றும் கலைகளை புனித நம்பிக்கை காரணமாக தங்களுக்குள் மறைவாகவே பகிர்ந்துவந்தனர். இன்றும் கூட ஒரு பூர்வகுடி ஓவியத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம் வேறு. அவர்கள் புரிந்துகொள்ளும் விதம் வேறு.


பெரும்பாலான பூர்வகுடி ஓவியங்கள் பறவைப் பார்வை கொண்டு வரையப்படுகின்றன. நிலத்துக்கு மேலே பறந்துகொண்டு நிலத்தைப் பார்ப்பதான பாவனையில் இவ்வோவியங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் நீர்நிலைகள், புதர்க்காடுகள், பழமரங்கள் மட்டுமல்லாது வேட்டைகான விலங்குகள் பறவைகள் இவற்றின் இருப்பிடங்களும் ஒரு வரைபடம் போல மிகத்தெளிவாக சுட்டப்படுகின்றன.



1930 களில்தான் பூர்வகுடி ஓவியர்கள் கான்வாஸ் மற்றும் காகிதங்களில் வரையத் தொடங்கினர். செங்காவி வண்ணத்துக்குப் பதிலாக நீர்வண்ண ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. 1937-ல் முதன்முதலாக பூர்வகுடி ஓவியக் கலைஞரான ஆல்பர்ட் நமட்ஜிராவின் நிலவமைப்புத் தோற்ற ஓவியங்கள் அடிலெய்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆனாலும் பல தனித்துவமிக்க பூர்வகுடி ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்படாமலேயே இருந்தன. காரணம் அவற்றை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. முதலாவது தங்களுடைய கனவுகாலக் கதைகளையும் குழு சார்ந்த ரகசியங்களையும் வேற்று மனிதர்களுடன் பகிர்ந்துவிடக்கூடாது என்னும் அவர்களுடைய புனித நம்பிக்கை. இரண்டாவது தங்களுக்கு உரிமை இல்லாத, பிற இனம் சார்ந்த ஓவியங்களை வரைவது தவறு என்னும் தார்மீக எண்ணம். ஓவியக்கதைகளில் மட்டுமல்ல, ஓவிய முறைகளிலும் கூட அவர்கள் தார்மீக ஒழுங்கினைப் பின்பற்றுகின்றனர். உதாரணத்துக்கு குலின் இனத்தைச் சேர்ந்தவர்கள் புள்ளி ஓவியங்களை வரைய மாட்டார்கள். மாறாக தங்களுக்கு உரிமையான குறுக்குக் கோட்டோவியங்களை மட்டுமே வரைவார்கள்.  


தங்கள் குழுவைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துக்கு வழிவழியாய் வந்த கதைகளை மட்டுமே அவர்கள் ஓவியங்களாய்த் தீட்டினர். அதன் மூலம் தங்கள் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார அடையாளத்தையும் உலகுக்கு உணர்த்தினர். 2007-ஆம் ஆண்டு மே மாதம் Emily Kame Kngwarreye -இன் Earth’s creation என்னும் ஓவியம் ஒன்றரை மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் விற்பனையானது. மில்லியன் டாலர்களுக்கு மேல் விற்பனையான முதல் பூர்வகுடி ஓவியம் என்ற பெருமையைப் பெற்ற அதே வருடம் ஜூலை மாதம் Clifford possum Tjapaltjarri - இன்  Warlugulong ஓவியம் 2.4 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. 



இன்று ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்களுக்கு சர்வதேச அளவில் பெரும் மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைவளர்ச்சிக்காகவே செயல்படும் சுவிட்சர்லாந்தில் உள்ள La grange, நெதர்லாந்திலுள்ள The Museum of Contemporary Art, விர்ஜினியா பல்கலைக் கழகத்தின் Kluge-Ruhe Aboriginal Art Collection போன்ற அருங்காட்சியகங்கள், ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைகளின் சிறப்பு உலக மக்களை ஈர்த்திருப்பதற்கான பெரும் சாட்சி எனலாம்.



(SBS தமிழ் வானொலியில் 01-11-20 அன்று 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.)

(படங்கள் அனைத்தும் இணையங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

22 May 2020

பூமராங்

பூமராங்


ஆஸ்திரேலியாவின் தொன்ம அடையாளங்களுள் மிக முக்கியமானது பூமராங். பூமராங் என்றதுமே பலருக்கும் ஆஸ்திரேலியா நினைவுக்கு வருவது அதனால்தான். இன்று உலகமுழுவதும் பல நாடுகளில் விளையாட்டுப் பொருளாய்ப் பயன்படுத்தப்படும் பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தொன்மைக்கு ஒரு  சிறப்பான எடுத்துக்காட்டுகள் பூமராங்குகள். பண்டைக்காலத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய மரக்கருவிதான் பூமராங் (boomerang). உலகின் மிகப் பழைமையானதும் சுமார் ஐம்பதாயிரம் வருட வரலாறு கொண்டதுமான கிம்பர்லி பகுதியில் காணப்படும் பூர்வகுடி மக்களின் பாறை ஓவியங்களில் பூமராங் கொண்டு நடத்தப்பட்ட கங்காரு வேட்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இன்றைக்கு சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய பூமராங்குகள் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்தடி படிமங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.  

ஆதிகாலத்தில் விலங்குகளின் எலும்பால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள், பிறகு மரத்தால் தயாரிக்கப்பட்டன. கருப்பு வாட்டில் மரம் மற்றும் குறிப்பிட்ட சில யூகலிப்டஸ் மரங்களின் நல்ல வைரம்பாய்ந்த மரங்களின் உறுதியான வேர்ப்பகுதிகள், பருத்த கிளைகள் அல்லது அடிமரத்தண்டுகள் போன்றவற்றிலிருந்துதான் பூர்வகுடிகளின் பாரம்பரிய பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இன்று, பிளைவுட், பிளாஸ்டிக் போன்ற பொருட்களாலும் பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. பூமராங்குகள் பல வடிவங்களில் பல அளவுகளில் காணப்படுகின்றன. பூமராங் என்றாலே எறிந்தவரிடம் திரும்பிவந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் எல்லா பூமராங்குகளும் எறிந்தவரிடம் திரும்புவதில்லை.

பூமராங்கும் கேடயமும்


ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் பூமராங்கைக்கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினர். கங்காருவை வேட்டையாட அதன் கால்களைக் குறிவைத்தும், ஈமு போன்ற பெரிய பறவைகளை அவற்றின் கழுத்தைக் குறிவைத்தும் பூமராங்குகள் எறியப்பட்டன. பூமராங் எறியும் வேகத்தைப்பொறுத்து அதிகபட்சமாக நொடிக்கு பத்து சுற்றுகள் கூட சுற்றக்கூடும். வேட்டையாடுவதற்கு மட்டுமல்லாது, போர் ஆயுதமாகவும், இசைக்கருவியாகவும் விளையாட்டு எறிவளையாகவும் பயன்படுத்தியுள்ளனர். தீக்கடைக்கோல்களாகவும் பூமராங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பத்து செ.மீ.க்கும் குறைவான அளவுடைய சின்னஞ்சிறிய பூமராங் முதல் 180 செ.மீ. அளவிலான பெரிய பூமராங்குகள் வரை அவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. 

பூமராங்குகளில் மூன்று வகை உண்டு. கங்காரு போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது ஒரு வகை. இலக்கைத் தாக்குவது மட்டுமே அதன் வேலை. வாழைப்பழ வடிவத்தில் மிக லேசான வளைவுடனும் மழுங்கிய முனைகளுடனும் இருக்கும் அது எறிந்தவரிடம் திரும்பிவருவதில்லை. இரண்டாவது சற்று அதிகமாக வளைந்து ஆங்கில எழுத்து ‘V’ வடிவத்தில் மழுங்கிய முனைகளுடன் இருக்கும். பூமராங் என்றதுமே நம் நினைவுக்கு சட்டென்று வருவது இதுதான். இதன் பிரத்தியேக வடிவம் மற்றும் எடை காரணமாக எறிந்தவரிடமே திரும்பிவரக்கூடியது. இது பறவைகளைத் தாக்கப் பயன்பட்டது. மூன்றாவது கூட்டல் வடிவத்தில் இருக்கும். இதன் முனைகள் மிகவும் கூராக இருக்கும். இது எதிரிகளைத் தாக்கப் பயன்பட்டது. பூர்வகுடியினர் பயன்படுத்திய பூமராங்குகளில் பூர்வகுடியினரின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இன்று தயாரிக்கப்படும் நாகரிக மற்றும் அலங்கார பூமராங்குகளிலும் பூர்வகுடி ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு அசலைப்போன்ற மாயையை உருவாக்கி விற்பனையில் சாதனை படைக்கின்றன.

தற்போதுள்ள விதவிதமான பூமராங்குகள்


அசலானாலும் நகலானாலும் பூமராங் என்ற பெயருக்கும் வடிவத்துக்குமான ஈர்ப்பும் மோகமும் இன்றும் மக்கள் மனத்தை விட்டு அகலவில்லை. தற்போது உலக அளவில் பூமராங் எறியும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆஸ்திரேலிய இராணுவப்படையின் சின்னம்


ஆஸ்திரேலிய இராணுவப்படையின் இலச்சினையிலும் பூமராங் இடம்பெற்றுள்ளது. காரணம் என்ன தெரியுமா? போருக்குச் செல்லும் வீர்ர்கள் பூமராங் போல புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவந்துவிட வேண்டுமென்னும் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளம் அது. ஆஸ்திரேலியா தவிர, ஐரோப்பா, எகிப்து, வட அமெரிக்காவிலும்.. ஏன் தமிழ்நாட்டிலும் கூட பூமராங்குகள் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. உலகின் மிகப் பழமையான பூமராங் போலந்தின் ஒலாஸோவா குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. முற்காலத்தில் வாழ்ந்திருந்த யானை போன்ற மாபெரும் விலங்கான மம்மூத்தின் தந்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட அதன் வயது சுமார் 30,000 ஆண்டுகள் என்றும் இரண்டு அடி நீளமும் ஒரு கிலோ எடையும் கொண்ட அது ரெயின்டீர் எனப்படும் மான்களை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது என்றும் அறியப்படுகிறது. 

தமிழ்நாட்டில் யானைத்தந்தத்தால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்னும் தகவல் நமக்கு வியப்பளிக்கிறது அல்லவா? பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அவை இன்று அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூமராங்குகளுக்கு தமிழில் வளரி என்று பெயர். வளரியின் வேறுசில பெயர்கள் வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் போன்றவை. வளரிகள் பெரும்பாலும் அடிமரத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டன. சிறப்பாக சில உலோகத்திலும் யானைத்தந்தங்களிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.



வளரி எறியும் முறைகளும் பூமராங் எறிமுறைகளைப் போலவேதான். அவை இலக்கைக் குறிவைத்து நேரடியாக வீசப்படுவதில்லை. சுழற்றிதான் எறியப்படுகின்றன. அப்படி சுழற்றி எறியப்படும்போது செங்குத்தாகவோ, கிடையாகவோ சுழன்றபடி செல்லும். சில பூமராங்குகள் சுழலாமலும் செல்லும். பண்டைய காலத்தில் வளரிகள் போர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எதிரியின் கழுத்தை இலக்குவைத்தால் வளரி சுழன்றுசெல்லும் வேகத்தில் உயிரையும் பறிக்கும் வல்லமை உடையது என்றபோதும் பெரும்பாலும் கால்களை இலக்குவைத்தே எறியப்பட்டன. தற்காப்பு ஆயுதங்களுள் ஒன்றாகவும் வளரிகள் இருந்திருக்கின்றன. இந்த வளரிகளின் முன்னோடி ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பயன்படுத்திய பூமராங்குகளே என்று அறியப்படுகிறது.

உலகின் பல பகுதிகளிலும் பண்டைக்காலத்தில் பூமராங் பயன்பாடு இருந்தாலும் இலக்கை நுட்பமாகக் குறிபார்த்து எய்யக்கூடிய வில், அம்பு, ஈட்டி, வேல் போன்ற கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பூமராங் பயன்பாடு குறைந்துபோனது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடத்தில் மட்டுமே பூமராங் பயன்பாடு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. பூமராங் என்றதும் ஆஸ்திரேலியா நம் நினைவுக்கு வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்.




ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய வேறு சில வேட்டை ஆயுதங்கள் வேட்டைத்தடி, எறி ஈட்டி, குத்தீட்டி போன்றவை. தற்காப்புக்காக கேடயங்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எறி ஈட்டிகள் தொலைவிலுள்ள விலங்குகளை வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டாஸ்மேனியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய எறி ஈட்டிகள் மெல்லியதாகவும் சுமார் 6 மீ. அளவில் நீளமாகவும் இருந்திருக்கின்றன. அளவில் பருத்தும், நீளம் குறைந்தும் காணப்பட்ட குத்தீட்டிகள் கடற்பசுக்கள் எனப்படும் சீல்களைக் கொல்வதற்கு ஏதுவாகப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. சமவெளியிலும் கடலோரப் பகுதியிலும் வசித்தவர்கள் அதிகமாக எறி ஈட்டியையும், மழைக்காடுகளில் வசித்தவர்கள் குத்தீட்டிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர். மழைக்காடுகளில் அடர்ந்த செடிகொடிகளுக்கிடையில் புகுந்து செல்லும்போது நீளமான ஆயுதம் ஏந்திச் செல்வது எளிதல்ல என்பதால் குறைந்த நீளமுள்ள ஆயுதங்களையே பயன்படுத்தினார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனங்களிலேயே வில்லும் அம்பும் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமை டாரஸ் நீரிணைப்பு தீவு வாசிகளையே சேரும்.




வேட்டைத்தடியை தாரூக் பூர்வகுடியினர் waddy என்கின்றனர். தென்னிந்திய மொழிகளுள் ஒன்றான மலையாளத்திலும் தடியை வடி எனக் குறிப்பிடுவது ஆச்சர்யத்தக்க ஒற்றுமை. இதை Nulla nulla என்றும் சொல்வதுண்டு. இதன் முனை கூம்பு மாதிரியோ, உருண்டை வடிவிலோ, பறவையின் தலை போன்ற வடிவத்திலோ அல்லது ஹாக்கி மட்டை போன்று முனையில் வளைந்து தட்டையான வடிவத்திலோ.. பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்து தயாரிக்கப்படும்.

வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் ஆண்களின் வேலை எனில் பெண்களின் வேலை சேகரிப்பது. ஈமு, கங்காரு போன்ற பெரிய உயிரினங்களை ஆண்கள் வேட்டையாட, காய்கள், பழங்கள், கிழங்குகள், மூலிகைகள், பருப்புகள், முட்டைகள், தேன் போன்றவற்றையும் கோவான்னா, பாம்பு போன்ற தரைவாழ் சிற்றுயிர்களையும் பெண்கள் கொணர்வார்கள்.

ஆயுதங்கள் அல்லாது பூர்வகுடியினர் செய்வினை போன்ற காரியங்களையும் எதிரிகளைப் பயங்கொள்ளவும் பழிவாங்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இறந்த ஒருவனின் எலும்பை எடுத்து எதிரியை நோக்கி சுட்டினால் சுட்டப்பட்டவன் விரைவிலேயே நோயுற்று சாவான் என்னும் நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. காலங்காலமாய் மானுட வரலாற்றில் துணிச்சலும் பயமும் ஒன்றோடொன்று பிணைந்தே பயணிப்பது வியப்பளிக்கிறது அல்லவா?

(03-05-20 அன்று தமிழ் வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.)


படங்கள் உதவி - இணையம்


15 April 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி இசைக்கருவிகள்






ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சார அடையாளங்களுள் முக்கியமானவை இசையும் நடனமும். இசை என்றதுமே நம்மில் பலருக்கும் டிஜிரிடூ (Didgeridoo) நினைவுக்கு வரும். ஆம். ஆஸ்திரேலியாவின் அதிமுக்கிய அடையாளங்களுள் ஒன்று பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான டிஜிரிடூ எனப்படும் காற்றூது இசைக்கருவி. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஆண்டுக்கால தொன்மை உள்ளதாக கருதப்படும் இவ்விசைக்கருவி இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகி இசைக்கப்படுகிறது. டிஜிரிடூவின் குறைந்தபட்ச நீளம் மூன்று அடி, அதிகபட்ச நீளம் பத்து அடி. பாரம்பரிய விழாக்களின்போது இசைக்கப்படும் இக்கருவியை பூர்வகுடியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இசைப்பது வழக்கம். அந்த இசைக்கு ஆண்களும் பெண்களும் நடனமாடுவர். டிஜிரிடூ பெரும்பாலும் தனி இசைக்கருவியாக வாசிக்கப்பட்டாலும் சில விழாக்களில் இசைக்கோல்களும் தாளவாத்தியக்கருவியாக சேர்ந்திசைக்கப்படுகின்றன.

பூர்வகுடி பெண்கள் டிஜிரிடூ வாசிப்பதில்லை. பெண்கள் வாசித்தால் தெய்வக்குற்றம் என்ற கருத்து இருந்தாலும் சமூக, பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி சில பூர்வகுடிப் பெண்கள் அந்நாளில் வாசித்ததுண்டாம். தற்போது உலகநாடுகள் பலவற்றிலும் ஆண்பெண் பேதமின்றி பெண் இசைக்கலைஞர்களும் டிஜிரிடூவை வாசிக்கப் பயின்று கச்சேரிகளில் இசைக்கத் துவங்கியுள்ளனர்.

காற்றுக்கருவியான இதை நம் நாதசுரத்துக்கு ஒப்பாக சொல்லலாம். மூச்சை வெகுவாக தம் கட்டி வாசிக்கவேண்டிய காரணத்தால் நாதசுரம் பொதுவாக ஆண்கள் வாசிக்கும் இசைக்கருவி என்று பெயர் இருந்தாலும் ஆங்காங்கே பெண் இசைக்கலைஞர்களும் ஆரம்பகால எதிர்ப்புகளைக் கடந்து, முறையான பயிற்சி பெற்று நல்ல வித்வான்களாக விளங்கியிருப்பதை நாம் அறிவோம் அல்லவா?



2005-ல் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் ஆஸ்துமா, குறட்டை மற்றும் உறக்கத்தில் உயிர்பறிக்கும் சுவாசப் பிரச்சனைகளுக்கும், சீரான மூச்சுப்பயிற்சிக்கும் நல்லதொரு தீர்வாக டிஜிரிடூ இசைப்பயிற்சி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும்கூட ஆஸ்திரேலியாவின் சில குறிப்பிட்ட பூர்வகுடி இன மக்களிடையே டிஜிரிடூ குறித்த பயபக்தியுடன் கூடிய நம்பிக்கைகள் தொடர்கின்றன. பூர்வகுடி மக்கள் அல்லாத பிறர் முக்கியமாக பெண்கள், வாசிப்பது மட்டுமல்ல இந்த இசைக்கருவியைக் கையால் தொடுவது கூட பாவம் என்பதோடு கலாச்சாரத் திருட்டு என்றும் கருதுகின்றனர்.

டிஜிரிடூ என்று இதற்கு பெயர் வைத்தது யார் என்பது ஒரு பெரிய மர்மம் நிறைந்த கேள்வி. ஏனெனில் didgeridoo என்ற வார்த்தையோ அதற்கு நிகரான வார்த்தையோ எந்த பூர்வகுடி மொழியிலும் கிடையாது என்பதுதான் உண்மை. இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வார்த்தை. ஒவ்வொரு பகுதியில் வழங்கப்படும் பூர்வகுடி மொழியிலும் இதற்கு வெவ்வேறு பெயர் உண்டு. அவற்றுள் சில – mako, liddung, ngorla, morlo, wuyimbarl, mudburuja, morle, yirdaki, yigi yigi  போன்றவை.


யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்தும் பருத்த கிளைகளிலிருந்தும் இக்கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதற்கான மரத்தைத் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை. மரம் உயிரோடும் இருக்கவேண்டும், கரையான் அரித்து உள்ளே கூடாகவும் இருக்கவேண்டும். ஏன் கரையான் அரித்த மரமாக இருக்கவேண்டும்?

கரையான்கள் அரித்திருப்பதால் உள்ளே ஏற்பட்டிருக்கும் காற்றறைகள்தாம் டிஜிரிடூவில் சரியான இசையை எழுப்ப உதவுகின்றன. அதனால் அப்படிப்பட்ட மரத்தைத் தேர்ந்தெடுத்து கூரான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, சரியான அளவுக்கு வெட்டி பட்டைகளை அகற்றி உள்ளே சுத்தம் செய்து உபயோகித்தார்கள். டிஜிரிடூவின் மீது மிருகக்கொழுப்பு அல்லது எண்ணெய் தடவப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. டிஜிரிடூவில் வாய் வைத்து ஊதும் பக்கம் உதடுகளில் உறுத்தாமல் இருக்கவும் ஊதும் காற்று வெளியேறாமல் இருக்கவும் தேன்மெழுகு தடவப்பட்டது. வாய்வைத்து இசைக்கும் பகுதி குறுகலாக ஆரம்பித்து போகப்போக விரிந்து மறுமுனை சற்றுப் பெரியதாக இருக்கும். 

டிஜிரிடூ நேராகவும் இருக்கலாம் கோணல்மாணலாக வளைந்தும் இருக்கலாம். வடிவம் எப்படி இருக்கிறதென்பது பிரச்சனையில்லை.. அதிலிருந்து வெளிப்படும் கணீரென்ற இசையே பிரதானம்.

மூங்கில் காட்டில் வண்டுகள் துளைத்த ஓட்டைகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்று இசையாக மாறி புல்லாங்குழல் உருவாகக் காரணமானது போலயூகலிப்டஸ் மரக்காட்டில் கரையான் அரித்த மரக்கூடுகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்றே இந்த டிஜிரிடூ உருவாகக் காரணமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகிறது.

மற்ற காற்றூது கருவிகளை இசைப்பதற்கும் டிஜிரிடுவை இசைப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைக்கும்போது ஊதுகுழல் ஊதுபவரின் வாய்க்குள் இருக்கும். புல்லாங்குழல் போன்றவற்றில் துளையின் மீது வாயை வைத்து ஊதுவர். ஆனால் இந்த டிஜிரிடுவை இசைக்கையில் வாய் முற்றிலுமாய் இசைக்கருவியின் ஊதுதுவாரத்தின் உள்ளே பொருந்தி இருக்கும். மூச்சினை உள்ளிழுத்து நிறுத்தி உதடு, நாக்கு, குரல்வளை இவற்றில் அதிர்வுகளை உண்டாக்கி வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுடன் காற்றை வெளியேற்றுவதன் மூலம் இசை வெளிப்படுகிறது. 

இக்காலத்தில் டிஜிரிடூக்களைத் தயாரிக்க நூதனக் கருவிகள் வந்துவிட்டன. அதோடு கரையான் அரித்த மரங்களின் அவசியமற்றுப்போய் அலுமினியம் போன்ற உலோகங்கள், யூகலிப்டஸ் அல்லாத வேறு மரங்கள், மூங்கில், ப்ளாஸ்டிக், மண் போன்ற பல்வேறு பொருட்களாலும் உலோகங்களாலும் டிஜிரிடூக்கள் தயாரிக்கப்படுகின்றன. டிஜிரிடூவோடு ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய வேறு சில இசைக்கருவிகள் bull roarer, clapstick, gum leaf போன்றவை.

புல்ரோரர்

புல்ரோரர் (bullroarer) என்பது பின்னாளில் ஐரோப்பியர் வைத்த பெயர். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. நீளமான கயிற்றின் ஒரு நுனியில் அரை அடி முதல் இரண்டு அடி நீளமும் அரை அங்குலம் முதல் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட தட்டையான மரப்பலகை இணைக்கப்பட்டிருக்கும். கயிற்றின் மறு நுனியைக் கையில் பிடித்து தலைக்கு மேலே கவண்கல் சுழற்றுவது போல வேகவேகமாகச் சுழற்றும்போது விர்ர்ர் விர்ரெரென்று ஒலி உருவாகும்.

பல மைல்களுக்கு அப்பாலும் கேட்கும் அளவிலான பேரொலி அது. பூர்வகுடிகளின் ஆன்மீக வழிபாடுகளிலும் ஈமச் சடங்குகளின்போதும் தவறாமல் இடம்பெறும் ஒலிக்கருவியாகும். துர்தேவதைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இக்கருவியை பூர்வகுடி ஆண்கள் மட்டுமே கையாளுவர். பெண்கள், குழந்தைகள், பூர்வகுடியைச் சாராத வேற்று ஆண்கள் தொடுவது பாவம் என்ற நம்பிக்கையோடு அதன் ஒலியை வெளியாட்கள் செவிமடுப்பதும் கூட இழுக்கு என்னும் நம்பிக்கை பூர்வகுடிகளிடத்தில் உள்ளது.  

தட்டுக்கோல்கள்

Clapsticks எனப்படும் தட்டுக்கோல்கள் கோலாட்டக் கோல்களை ஒத்து ஆனால் அளவில் பருத்திருக்கும். இவையும் யூகலிப்டஸ் மரத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. இக்கோல்களை ஒன்றோடொன்று தட்டுவதன் மூலம் பெரும் ஒலி உண்டாகும். டிஜிரிடூவுடன் இசைக்கப்படும் தாளவாத்தியக் கருவி இதுவே ஆகும். பூர்வகுடி மக்கள் இவற்றை பிம்லி அல்லது பில்மா என்று குறிப்பிடுகின்றனர்.

யூகலிப்டஸ் இலை 

யூகலிப்டஸ் இலைகூட அந்நாளில் ஒரு இசைக்கருவியாக இருந்திருக்கிறது. நாம் பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ வாசிப்பது போல.. அக்காலத்து பூர்வகுடி மக்கள் யூகலிப்டஸ் இலையை படுக்கைவாக்கில் உதடுகளுக்கிடையில் வைத்து ஊதுவதன்மூலம் இசையுண்டாக்கி ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர். 

யூகலிப்டஸ் காடுகளை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த பூர்வகுடி மக்கள் அதன் மரம், கிளை, பட்டை, இலை மட்டுமல்லாது கரையான் அரித்த கட்டைகளையும் தங்கள் இசை ரசனையோடு பிணைத்து வாழ்ந்த அழகிய வாழ்வியல் ரசனை வியக்கவைக்கிறதல்லவா?

(1 மார்ச் 20 அன்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்வில் ஒலிபரப்பானது.)


&&&
(டிஜிரிடூ தவிர்த்த பிற படங்கள்  இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)