நம் மனம்தான் நமக்கு உற்ற நட்பும் பகையும். அதை நம்மோடு
இணக்கமாய்ப் பேணுவதற்கே நாம் இன்னும் கற்றபாடில்லை. இந்த லட்சணத்தில் எங்கே
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது?
அதையும் மீறி நாம் ஒருவருக்கொருவர் அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டுதான்
இருக்கிறோம். இதோ இப்போதும் கேட்டால் கேளுங்க என்று அறிவுரை வழங்க வந்துவிட்டேன், துணைக்கு
கண்ணதாசனின் வரிகளையும் அழைத்துக்கொண்டு.
பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா..
யாரும் இருக்குமிடத்தில்
இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது
யாரும் எதுவும்
இருக்குமிடத்தில் இருந்தால்தான் சிறப்பு. அது சொற்களுக்கும் பெரிதும் பொருந்தும். வாய்க்குள்
இருக்கவேண்டியவை வெளியில் குதித்துவிட்டாலோ, வெளிப்பட வேண்டியவை வாய்க்குள் தேங்கிக்
கிடந்தாலோ மதிப்பிழந்துபோதல் நிச்சயம். தேவைப்படும் சொற்களுக்கே இந்நிலை என்றால் தேவைப்படாத
அறிவுரைகளுக்கு? கேட்கவிரும்பாத செவிகளுக்குள் செலுத்தப்படும் அறிவுரைகள், செவிடன்
காதில் சங்கூதுவது போல விரயம் என்று அறிந்திருந்தாலும் ஊதுற சங்கை ஊதிவைப்போம் என்ற
எண்ணத்தில்தான் பல அறிவுரைகள் ஓதப்பட்டுவருகின்றன.
அறிவுரைகள் அவசியப்படுவோர்க்குக் கூட நேரடியாக அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. நம்மைப் போன்ற படைப்பாளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன கதைகளும் கவிதைகளும்.
அவற்றின் வாயிலாக சொல்ல வேண்டியவற்றை சொல்வது ஒருவகையில் வசதியும் கூட. என் பிள்ளைகள் சிறுகுழந்தைகளாக இருக்கும்போதும் இந்த யுத்திதான் பெரிதும் கைகொடுத்தது. அவர்கள் தவறு செய்யும்போது நேரடியாக கண்டிக்காமல் அறிவுரை சொல்லாமல் கதைகள் மூலம் திருத்தினேன். இவர்கள் செய்யும் தவறுகளை கதையில் வரும் குழந்தைகள் செய்வதாகச் சொல்லி, அதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளால் குழந்தைகள் மனந்திருந்துவது போல கதைகளை உருவாக்கிச் சொல்வேன். நேரடியாக அறிவுரை சொல்வதை விடவும் கதைகள் மூலம் சொல்வதில் பலன் அதிகமாக இருந்தது.
சொல்லென்றும் மொழியென்றும்
பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை…
என்னைக் கேட்டால்
சொல்லாத சொல்லுக்கும் விலை உண்டு என்றுதான் சொல்வேன். ஆம் என்பதை அழுத்தமாய் ஆமோதிக்கும்
அதே சமயம், இல்லை என்பதையும் வாய்திறந்து மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயம், தயக்கம்,
கூச்சம், முகத்தாட்சண்யம், நாகரிகம், இங்கிதம் இன்னபிற காரணங்களால் நமக்கு உடன்பாடற்றவற்றை
மறுக்கத் துணியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மௌனம்
காப்பதுண்டு. மௌனம் எந்தக்காலத்திலும் நம் எதிர்ப்பை பதிவு செய்யாது. மௌனம் சம்மதம்
என்ற பொதுவிதியின்படி எதிராளிக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
பிரச்சனைகள் இல்லாத
வாழ்க்கை அமையவேண்டும் என்றுதான் நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஆனால் அமைகிறதா? பிரச்சனை
மேல் பிரச்சனை என்றுதானே வாழ்க்கை ஓடிக்கொண்டோ நகர்ந்துகொண்டோ இருக்கிறது? சிலர் தம்
பிரச்சனை மட்டுமல்லாது அடுத்தவர் பிரச்சனைகளையும் அடித்துப்பிடித்து வாங்கி தங்கள்
தோள்களில் போட்டுக்கொண்டு அல்லாடுவார்கள். இன்பமோ, துன்பமோ அவரவர் வாழ்க்கையை அவரவர்
வாழ்வதுதானே நியாயம்.
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு
கண்ணதாசனின் இவ்வரிகளில்
பலருக்கும் உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்வரிகளை நான் பாசிடிவாகவே
பார்க்கிறேன்.
நமக்கும் கீழே இருப்பவனோடு
ஒப்பிட்டு நம் நிலைமை அவனை விடவும் மேல் என்று மகிழ்வது என்ன மாதிரியான சாடிஸ்டிக்
மனோநிலை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். வரிகளை உற்றுக்கவனியுங்கள். அது மகிழ்ச்சி
அடையச்சொல்லவில்லை. நிம்மதி நாடச்சொல்கிறது. கண்முன் ஒரு விபத்து நடக்கிறது. ஐயோ என்று
பதறுகிறோம். யாருக்கும் அடிபடவில்லை என்று தெரிந்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு
பரவுமோ.. அப்படியான நிம்மதிதான் அது. ஓட்டுவீட்டில் வசிப்பவனுக்கு பங்களாவாசியைப் போல
வாழ ஆசை வருவதில் தவறில்லை. ஆசைகள் தானே முன்னேற்றம் என்னும் இலக்கு நோக்கி நம்மை நெம்பித்தள்ளும்
நெம்புகோல்கள். இலக்கை அடைவதற்கான முயற்சியில் இறங்குவதை விட்டுவிட்டு பணக்காரனைப்
பார்த்து ஏங்கித்தவிப்பதிலேயே தனக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையின் அருமை தெரியாமல்
வீணடித்துக் கொள்பவர்களுக்கான அறிவுரையாகவும் கொள்ளலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி
நடக்கிறது என்று வெம்பி உச்சபட்ச தாழ்வுணர்வில் புழுங்கித்தவிக்கும் உள்ளங்களை ஆசுவாசப்படுத்தும்
ஆறுதலுரையாகவும் இருக்கலாம். உன்னிலும் மேலானவனைப் பார்த்து பொருமிக் கொண்டிராமல் உன்னிலும்
கீழான நிலையில் வாழ்பவனைப் பார்த்து அவன் நிலையை விடவும் என் நிலை பரவாயில்லை என்று
நினைத்து, கிடைத்திருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழ் என்பதை சாடிஸமாக என்னால் நினைக்க
முடியவில்லை. அடுத்தவன் வாழ்க்கை குறித்த பொருமல், பொறாமை போன்ற கண்பட்டைகளைக் கழட்டினால்தான்
சொந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் புலப்படும்.
நம்மை வருத்தும்
துயரிலிருந்து, நம்மை நாமே உந்தி வெளிக்கொணர ஒரு மனோவசிய மந்திரம் அவசியம் தேவை. கிட்டத்தட்ட
இருகோடுகள் தத்துவம் போல், நடந்த துயரோடு நடக்காத ஆனால் நடக்க சாத்தியமுள்ள பெருந்துயர்
ஒன்றைப் பக்கத்தில் இருத்தி, ஒப்பிட்டு நிம்மதி அடைவதும் அழகானதொரு
மனச்சமாதானம்.
Happiness is found along the way, not at the end of the road என்பது அடிக்கடி
என் நினைவுக்கு வரும் பொன்மொழி. வாழ்க்கையில் இலட்சியங்கள் அவசியம். ஆனால் இலட்சியங்களை
அடைவது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது. தங்கத்தைத் தேடி அலைபவன் வழியில் தென்படும்
வைரங்களையும் வைடூரியங்களையும் புறக்கணிப்பது எவ்வளவு பேதைமையோ அவ்வளவு பேதைமை வாழ்க்கையின்
பெரும் இலட்சியங்களின் பொருட்டு சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தொலைப்பது. அன்றலர்ந்த
மலர், அழகிய வானவில், பஞ்சாரத்துக் கோழிக்குஞ்சுகள், சடசடக்கும் மழைத்தூறல், மழை கிளர்த்தும்
மண்வாசனை, மழலையின் குழறுமொழி, குழந்தைகள் குறும்பு, இளந்தம்பதியர் இணக்கம், மனந்தொடும்
மெல்லிசை, ரசனைக்குரிய திரைப்படம், வாசனை மாறா புதுப்புத்தகம், சிறகு கோதும் சிறுபறவை,
சரசரக்கும் அரசிலைகள், காற்றசையும் கொடி, கால் நனைக்கும் அலை, குடும்ப ஒன்றுகூடல்,
கூடத்து விருந்து, ஒரு குறும்பயணம், தோளணைக்கும் தோழமை, ஆசீர்வதிக்கும் முதுகரம், அறியா
முகத்தரும்பும் புன்னகை என நம் வாழ்வில் எவ்வளவு
பெரிய வேதனையையும் கணநேரம் மறக்கச் செய்துவிடும் மகிழ்தருணங்கள் எத்தனையோ உண்டல்லவா?
(மதுரைத்தமிழன் ஆரம்பித்த இத்தொடர்பதிவினைத் தொடருமாறு தோழி இளமதி விடுத்த அழைப்பின்
பேரில் எழுதப்பட்டது.)
சில நாட்களாக வலைப்பக்கம் வராமையால் யார் தொடர்ந்திருக்கிறார்கள் யார் தொடரவில்லை என்று தெரியவில்லை. அதனால் யாரையும் இங்கே குறிப்பிடவில்லை. இதுவரை எழுதாதவர்கள் இனிதே தொடரலாம்.