1 January 2018

அறுசுவை விருந்து படைத்த 2017




ஆஹா ஓஹோவென்று இல்லையெனினும்
அப்படியொன்றும் அசமந்தமாக இல்லை..
வாழ்விலுண்டாகும் சறுக்கல்களுக்கு
வருடத்தை நிந்திப்பதில் நியாயமுமில்லை.
வழக்கம்போலவே கழிந்து பிறக்கிறது புத்தாண்டு.
வருங்காலம் இனிதாகும் வளமாகுமென்னும்
ஆதி நம்பிக்கையை அடிப்பிறழாமல் தந்து! 🙂🙂




மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், கொண்டாட்டம், சோகம், கலவரம், அங்கீகாரம், அரவணைப்பு என பலவிதமான உணர்வுகளையும் கலவையாய் அள்ளித்தந்து அமைதியாய் நிறைவுபெறுகிறது 2017.

என்னுடைய எழுத்தின் வளர்ச்சிக்கு பின்புலமாய் இருந்த… இப்போதும் இருக்கும் அன்புத்தோழி மணிமேகலாவுக்கு இப்பிறவியில் நன்றி சொல்லிமாளாது. அவரால்தான் அற்புதமான பல அங்கீகாரங்கள் எனக்குக் கிட்டின..

1.   ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 26-ஆம் நாள் சிட்னி உயர்திணை இலக்கிய அமைப்பின் சார்பாக, தோழியின் அயராத முயற்சியால் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூல் வெளியீடு இனிதே நிறைவேறியது ஆகப் பெரும் மகிழ்வான நிகழ்வின் மூலம் சிட்னி இலக்கிய வட்டத்தில் நானும் ஒருத்தியாய் சங்கமிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகமும் அன்பும் ஆதரவும் கிட்டின.

2.   கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 - புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதற்கும் அன்புத்தோழியே காரணம். அவரே கீதமஞ்சரி வலைத்தளத்தை முன்மொழிந்துள்ளார் என்பது பிறகுதான் தெரியவந்தது.

3.   காக்கைச்சிறகினிலே– இலக்கிய இதழில் கீதமஞ்சரிக்காக முழுதாய் எட்டுப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பான அங்கீகாரம்.

4.   பிரபலஎழுத்தாளர் முருகபூபதி அவர்கள் என்றாவது ஒருநாள் நூல் குறித்த தன் வாசிப்பனுபவத்தை மெல்பனில்  06-05-17  அன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17-வது எழுத்தாளர் விழாவில் சமர்ப்பித்தமை எனது பெரும்பேறு. அவரை எனக்கும் என் எழுத்துகளை அவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு, அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் நெருக்கத்தை எனக்கு உருவாக்கித் தந்தவர் என் அன்புத்தோழியே.

5. ATBC எனப்படும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தாயகம் வானொலி, SBS Tamil Radio மூன்று வானொலியிலும் என்றாவது ஒருநாள் வெளியீடு தொடர்பாக என்னுடைய நேர்காணல் ஒலிபரப்பானது. SBS Tamil Radio-வில் அபாரமான பின்னணியோடு ஒலிப்பதிவு செய்யப்பட்ட திகில் கதையான சீனத்தவன் ஆவி ஒலிபரப்பானது இன்னொரு மகிழ்ச்சி.    
6.   எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ‘காலமும் கணங்களும்’ என்னும் தன்னுடைய அடுத்த நூலுக்கான அட்டைப்படத்தை என்னிடமிருந்து பெற்றது என் புகைப்பட ஆர்வத்தின் மீதான மிகப்பெரும் அங்கீகாரம்.

2017 - மகளுக்கு இரண்டாவது பட்டமளிப்பு விழா, மகனின் பள்ளியிறுதி ஆண்டுவிழா, எங்களுடைய திருமண வெள்ளிவிழா என பல மறக்கமுடியாத கொண்டாட்டங்களுக்கிடையில் உளைச்சலும் மனச்சோர்வும் தரும்வண்ணம் எதிர்பாராத சில நிகழ்வுகளும் நடந்தேறின. அவை தனிப்பட்டவை என்றாலும் என் எழுத்திலும் சற்று பாதிப்பை ஏற்படுத்தின. 

கொஞ்சகாலம் எதிலும் ஈடுபாடற்று பதிவுலகிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டு இருந்தேன். முந்தைய வருடங்கள் போல புகைப்படங்கள் அதிகம் பகிரவில்லை.. எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் கூடிவரவில்லை. வாசிப்பிலும் பெரிய ஈடுபாடு கிட்டவில்லை. எழுத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்ட பிடிவாதத்தால் எதையாவது கிறுக்கியபடி இருந்தேன்.

மொழிபெயர்ப்பில் தீவிரமாக இல்லாவிட்டாலும் இந்த வருடத்தில் ஹென்றி லாசனின் கதைகள் மேலும் சிலவற்றை மொழியாக்கம் செய்துள்ளேன்.

பூக்கள் பற்றிய தொடரை விளையாட்டாய் ஆரம்பித்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் பற்றி எழுதியிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது.

புஸ்தகா நிறுவனத்தின் மூலம் ஆறு மின்னூல்களும் பிரதிலிபி மூலம் எட்டு மின்னூல்களும் இந்த வருடத்தில் வெளியாகியிருப்பது உற்சாகம் அளிக்கும் உந்துசக்திகள். 

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளுடன் படைக்கப்படும் அசத்தலான விருந்து போல 2017 பல்சுவைகளால் எம் வாழ்வை நிறைத்துச் சென்றிருக்கிறது. அனுபவங்களே வாழ்வென்னும் பாடத்தை அழகாய்ச் சொல்லிக் கடந்திருக்கிறது இன்னுமோர் ஆண்டு. அதே பாடத்தைக் கற்றுத்தர இதோ.. தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது அடுத்ததோர் ஆண்டு.

அனைவருக்கும் 
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்
2018.


   

27 comments:

  1. வரும் ஆண்டு இன்னும் சிறப்பாய் அமைந்திடட்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட். உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  2. எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  3. புத்தாண்டு என்றாலேயே பிரமாணங்களும் இருக்குமல்லவ எனது புத்தாண்டு பதிவினை வாசிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரை எந்தப் பிரமாணங்களும் எடுத்ததில்லை. ஆனால் தங்களுடையவற்றை வாசிக்க ஆவலாக உள்ளேன். தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

      Delete
  4. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம். தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  5. 2018 ஆண்டு நல்லதோர் ஆண்டாக அமைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ப்ரியா. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் அதிரா. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள் என் பிரியமானவளே!
    கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக் கவி போல பதிவு வானில் தவழ்ந்து வா என் பிரியமானவளே....

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தோழி. உங்களால்தான் அத்தனையும் சாத்தியமாயிற்று. உங்களுக்கும் என் இனியபுத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தோழி. உங்களை மறுபடியும் வலையுலகில் காண மிகவும் மகிழ்வாக உள்ளது. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைத்தும் நலமாக அமையட்டும்.

      Delete
  10. புத்தாண்டு இன்னும் சிறப்பான அங்கீகாரங்களை வாரி வழங்கட்டும் என வாழ்த்துகிறேன் கீதா!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் அக்கா. தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்கும் இந்த வருடம் அற்புதமான ஆண்டாகத் திகழட்டும்.

      Delete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா.நல்ல தோழி அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பாராட்டுக்குரிய பணிகள் மற்றும் அங்கீகாரங்கள்!! வரும் ஆண்டு எல்லா வகையிலும் சிறப்பாக அமையும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. புகைப்படக்கலையில் என் மானசீக குரு நீங்கள்தான். உங்களிடமிருந்து கற்றுக்கொண்டவை அதிகம். கற்றுக்கொள்ளவேண்டியவை அநேகம். உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழி.

      Delete
  13. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் பூவிழி. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  14. என்னாச்சும்மா புகைப்பட போட்டியைபற்றி ஒன்றுமே சொல்லவில்லையே...... சரி சரி இந்த வருடம் நீங்கள் புகைப்பட போட்டியில் கலந்து கொள்ளவில்லையா ...


    கடந்த வருடப் போட்டியின் போது நிஷா ஏஞ்சல் நான் மேலும் பலர் அதற்காக முயற்சித்த போது நம் வீட்டுபெண்மணி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து செயல்பட்டது போல இருந்தது அது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த வருடமும் அது போல போட்டியில் நீங்கள் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நினைவு வைத்திருந்து கேட்பதற்கு மிகவும் நன்றி மதுரைத்தமிழன். இந்த வருடம் அவ்வளவாக புகைப்படங்கள் எடுக்கவில்லை. எடுத்தவையும் போட்டிக்கு அனுப்பத்தக்க வகையில் திருப்திகரமாக இல்லை. அதனால்தான் தவிர்த்துவிட்டேன். அடுத்தவருடம் சிறந்த புகைப்படங்களோடு கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன். உங்களைப் போன்ற நட்புகளை விட்டால் எனக்கு ஆதரவு திரட்ட யார் இருக்கிறார்கள்... நட்புகளிடமே மீண்டும் வருவேன். அன்பும் நன்றியும் உங்களுக்கு.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.