27 June 2015

ஒண்டவந்த பிடாரிகள் – 17 (யானைப்புல் & காம்பா புல்)


காம்பா புற்கள்


தற்போதுள்ள ஆஸ்திரேலியாவின் quarantine system மிக பலமானது.  அதை மீறி ஒரு பூவோ, காயோ, பழமோ, விதையோ உள்ளே வந்துவிடமுடியாது. அப்புறமும் எப்படி இப்படி? பரவியிருக்கும் தாவர வகைகளில் பெரும்பாலானவை இந்த க்வாரண்டைன் சிஸ்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இறக்குமதியானவை என்கிறார்கள். அப்போது இந்த அளவுக்கு இவற்றின் ஆக்கிரமிப்பு இருக்கும் என்பதோ மற்றத் தாவரங்கள் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வோ புத்திக்கு எட்டாத காலம். ஆனால் இப்போது.. கூடுமானவரை  அந்நிய தாவர வகைகள் எதுவும் நாட்டுக்குள் வரவிடாமல் கடுமையான கட்டுப்பாடுகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெருக்கதவைத் தாழ் போட்டு பூட்டி காவலும் வைத்தாயிற்று. ஆனால் பாருங்கள்கொல்லைப்புறக் கதவில் இருக்கும் பெரிய ஓட்டை அசட்டையாய் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது.  தடை செய்யப்பட்ட பின்பும் எப்படி இந்திய ஆசிய சீன லெபனியக் கடைகளில் அந்தந்த மண்ணின் காய்களும் பழங்களும் தாராளமாகக் கிடைக்கின்றன? இவற்றின் பின்விளைவுகள் என்னாகும்? உதாரணத்துக்கு பத்துநாள் குழம்புக்கு புளி கரைத்தால் போதும்.. பல்லாங்குழி விளையாடுமளவுக்கு புளியங்கொட்டைகள் தேறிவிடும். குப்பைகளோடு எறியப்படும் இந்தப் புளியங்கொட்டைகள் எல்லாம் என்னவாகும்? யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

யானைப்புற்கள்


ஆரம்பத்தில் அசட்டையாய் இருந்துவிட்டு  நிலைமை பூதாகர வடிவெடுக்கும்போது அவசர அவசரமாக ஓட்டையை அடைக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். அப்போது இனிமேலும் வெளியிலிருந்து வருவதற்கு எதுவும் மிச்சம் இருக்காது. எல்லாம் உள்ளே வந்திறங்கி முடிந்திருக்கும். கண்கெட்ட பின்னே சூர்ய நமஸ்காரம் என்பது எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்போலும்.

ஆனால் சிலருக்கு பட்டாலும் புத்தி வராது என்பதும் உண்மை. ஆப்பிரிக்க சவான்னா புல்வெளியைச் சார்ந்த யானைப்புல் (Pennisetum purpureum) மற்றும் காம்பா புல் (Andropogon gayanus) போன்றவை கால்நடைகளின் தீவனப்புல்லாக ஆஸ்திரேலியாவுக்கு  இறக்குமதி செய்யப்பட்டன. நான்கு முதல் பத்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அப்புற்கள் நிலப்பரப்புகளை அழகுசெய்யவும் காற்றுத்தடுப்பானாகவும் பயன்படுத்தப்பட்டன. கடுங்கோடையில் காட்டுத்தீ பரவ பெரும்காரணியாகவும் அவை செயல்படுகின்றன என்பதை சொல்லவும் வேண்டுமா?

காம்பா புல்வெளியில் காட்டுத்தீ

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஆட்டங்காணச்செய்யும் இயற்கைச் சீரழிவுகளுள் bushfire எனப்படும் காட்டுத்தீக்கு முக்கியப்பங்குண்டு. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தை அச்சுறுத்தியபடியே கடக்கச்செய்யும் காட்டுத்தீயால் இதுவரை அழிந்த கால்நடைகளும் பிற உயிரினங்களும் வீடுகளும் மனிதர்களும் நிலப்பரப்பும் அநேகம். கடந்த 2009 ஆம் ஆண்டில் விக்டோரியா மாநிலத்தில் உண்டான காட்டுத்தீயால் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. 173 பேர் தீக்கு பலியாயினர். 414 பேர் காயமுற்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துபோயின. இதுவரை ஏற்பட்ட ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிகழ்வுகளுள் அதிக அளவில் உயிர்ப்பலி கொண்ட அந்நாள் black Saturday என்று குறிப்பிடப்படுகிறது.

அச்சுறுத்தும் இத்தகு காட்டுத்தீயைப் பரப்ப வறண்டு காய்ந்துகிடக்கும் புற்கள் முக்கியக்காரணம். அவற்றுள் மேலே குறிப்பிட்ட அசுரப் புற்களின் பங்கு அலாதி. அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் டாஸ்மேனிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சூழலியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருக்கும் ஆலோசனையைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? "இந்த அசுரப் புற்களை அழிக்க இங்கிருக்கும் சாதாரண ஆடு மாடு எருமைகளால் முடியாது. அதற்கு இணையான எதிரியைத்தான் கொண்டுவரவேண்டும். இந்த யானைப்புற்களை ஒழிக்க ஆப்பிரிக்க யானைகளையும் காண்டாமிருகங்களையும் இறக்குமதி செய்வதுதான் புத்திசாலித்தனம். அதனால் புற்களின் வளர்ச்சி வெகு எளிதில் கட்டுப்படுத்தப்பட்டுவிடும்" என்கிறார். 

அறிந்தோ அறியாமலோ ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அதீத தொல்லைகளாய் மாறிவிட்ட விலங்குகள் பறவைகள் தாவரங்கள் குறித்து அரசும் மக்களும் நொந்துபோயிருக்கும் வேளையில் புதிய விலங்குகளின் அறிமுகத்துக்கு வழி சொல்கிறாரே… இப்படிப்பட்டவர்களை என்னவென்று சொல்வது? பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் என்பதைத் தவிர!


(அடுத்த பகுதியுடன் நிறைவடையும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி 

23 June 2015

ஒண்டவந்த பிடாரிகள் – 16 (முடக்கத்தான், கொலுக்கட்டை புல் & ஆகாயத்தாமரை)


முடக்கத்தான் கொடி


ஒருவனுக்கு மருந்து இன்னொருவனுக்கு விஷம் என்பார்கள்.. அதுபோலத்தான் நம் நாட்டில் மருந்தாக பயன்படும் ஒரு தாவரம் ஆஸ்திரேலியாவில் வேண்டாத விருந்தாளியாகக் கருதப்படுகிறது. முடக்குவாதம் போக்கும் மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைக்கொடியான முடக்கத்தான் கொடி (Cardiospermum grandiflorum) தோட்டங்களை அழகுபடுத்தும் நோக்கத்துடன்தான் முதலில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அபரிமித வளர்ச்சி மண்ணின் மற்ற உள்ளூர்த் தாவரங்களை முடக்கிவிடும் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை. காற்றூதி நிரப்பியது போன்ற காய்களைக் கொண்டிருப்பதால் பலூன் கொடி (balloon vine) எனக் குறிப்பிடப்படும் இக்கொடிகள் மற்றத் தாவரங்களின் மேல் படர்ந்து பெருகி போர்வையாய் மூடி, ஒளியும் வளியுமின்றி அவற்றை அழித்திடவல்லவை. நீர்நிலைகளை ஒட்டி வளரும் இக்கொடியின் காற்றடைத்த விதைகள்  காற்றிலும் நீரிலும் மிதக்கும் தன்மை கொண்டிருப்பதால் விதைபரவல் வெகு எளிதாக நடைபெறுகிறது. இப்போது இரசாயன களைக்கொல்லிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன.

நரிவால் புல்

மத்திய ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்திருக்கும் களைகளில் முக்கியமானது buffel grass எனப்படும் நரிவால் புல்.  தமிழ்நாட்டில் இது கொலுக்கட்டை புல் என்று குறிப்பிடப்படுவதாக அறிந்தேன். தகவல் சரிதானா என்று அறிந்தவர்கள் தெரிவிக்கலாம். ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியா போன்ற நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்புல் 19ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடர்த்தியாக வளரும் இந்தப் புல் இனத்தால் மற்ற உள்ளூர்த் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு காட்டுத்தீ பரவவும் முக்கியக்காரணியாக இப்புல்வெளிகள் விளங்குகின்றன. இப்போது களைப்பயிராக அறியப்பட்டுள்ள இப்புற்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அலிகேட்டர் களை

Alligator weed  எனப்படும் தாவரம் தென்னமெரிக்காவைச் சார்ந்த ஒரு நீர்த்தாவரம். இதன் தாவரவியல் பெயர் Alternanthera philoxeroides. நீர்நிலைகளை மட்டுமல்லாது மீன்பிடி பகுதிகளையும் விவசாய விளைநிலங்களையும் வெகுவாக ஆக்கிரமித்து பொருளாதார நஷ்டம் உண்டாக்கும் இப்பயிரை ஒழிப்பதென்பது பெரும்பாடு. நாடுதோறும் இதை ஒழிக்கும் முயற்சிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு நடைபெற்றுக்கொண்டிருக்க, சிலர் இதை பொன்னாங்கண்ணிக் கீரை (Alternanthera sessilis) என்று தவறாக நினைத்து வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது தெரியவந்தது. மக்களுக்கு வேறுபாடு அறிவுறுத்தப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் இதன் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 


அலிகேட்டர் களையை அழிக்க தென்னமெரிக்காவைச் சார்ந்த alligator weed flea beetle (agasicles hygrophila) எனப்படும் தத்து வண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வண்டுகள் அலிகேட்டர் தாவரத்தை மட்டுமே உண்டு உயிர்வாழ்வதால் இவற்றால் வேறு தாவரங்களுக்கு பாதகம் ஏற்படுவதில்லை என்பது ஒரு ஆறுதல். ஆனால் அலிகேட்டர் தாவரத்தை கோடையில் மட்டும்தான் இவற்றால் கட்டுப்படுத்த முடிகிறதாம். குளிர்சூழலில் கட்டுப்படுத்த இவற்றால் இயலாது. ஆனாலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் இக்களைத்தாவரத்தை உண்டு அழிக்கும் இவற்றால் ஓரளவு பலன் இருப்பதால் ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் அலிகேட்டர் களையைக் கட்டுப்படுத்த அலிகேட்டர் தத்து வண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். அமேசான் கழிமுகத்தைச் சார்ந்த ஆகாயத்தாமரையை (water hyacinth) ஆக்கிரமிப்பு சக்தி மட்டுமல்ல, அழிவு சக்தி என்றே சொல்லலாம். ஆறு குளம் போன்ற நீர்நிலைகளை நிறைத்துப் படர்ந்திருக்கும் இது நீரோட்டத்தைத் தடைபடுத்துவதோடு, நீரில் வாழும் பிற தாவரங்களுக்கும் மீன், ஆமை போன்ற உயிரினங்களுக்கும் பிராணவாயு (oxygen) கிடைக்காமல் செய்து அவற்றை அழித்துவிடவல்லது. ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அழிக்கமுடியாத களைத்தாவரமாகப் பெருகிவிட்ட ஆகாயத்தாமரையால் ஏற்படும் பாதிப்புகள் கணக்கிலடங்காதவை. சமீபத்தில் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் ஏரி குளங்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அழிக்கப்பட்டு வருவதை அறியமுடிகிறது. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் பெருகிவருவதை அறிந்து மனம் மகிழ்கிறது.

வேரறுக்கப்பட்ட முடக்கத்தான் கொடி

மனிதன் தன் ஆதாயத்தை மட்டும் முன்னிறுத்தி இயற்கைக்கு முரணான சில முடிவுகளை ஆராயாமல் அவசரப்பட்டு எடுத்துவிடுகிறான். பின்னாளில் அந்த முடிவுகளால் அவனுக்கு பிரச்சனைகள் நேரும்போது அந்த முடிவுகளுக்கு எதிராய் செயல்படவும் அவன் தயங்குவதில்லை. அப்படிதான் தானே கொண்டுவந்த களைப்பயிர்களை இப்போது கையாலும் கருவிகளாலும் இரசாயன மற்றும் உயிரியல் களைக்கொல்லிகளாலும் அழிக்க மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். களைகளின் இயல்பே தளைகளைத் தகர்த்தெறிந்து தம்போக்கில் வளர்வதுதானே… அதைத்தான் அவை செய்துகொண்டிருக்கின்றன. தலையைப் பிய்த்துக்கொண்டு அவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம் நாம்.


(தொடரும்)
(முடக்கத்தான் கொடி தவிர மற்ற படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி)

15 June 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி)


பார்த்தீனியம்

நம் நாட்டில் பார்த்தீனியம், சீமைக்கருவேலம் போன்ற அந்நியத் தாவரங்களின் வளர்ச்சியால் நிலமும் சுற்றுப்புறமும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதுபோல் ஆஸ்திரேலியாவிலும் சில குறிப்பிட்ட களைப்பயிர்களால் சுற்றுப்புறம் பாதிப்படைகிறதுமிக நீண்ட ஆயுளைக் கொண்ட தாவரங்கள் குறிப்பாக மரங்கள் அவ்வளவு எளிதில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஆனால் ஆண்டுத்தாவரங்கள் அதிவிரைவில் ஆக்கிரமிப்பில் இறங்கிவிடுகின்றன. ஒரு வருட காலத்துக்குள் முளைத்து வளர்ந்து பூத்து காய்த்து மடியும் இத்தாவரங்கள் ஆண்டுக்காண்டு பெருகிவளர்ந்து தங்கள் வாழ்விடங்களின் பரப்பளவை அதிகரித்துக்கொண்டே போகின்றனஇவற்றோடு போட்டிபோட முடியாத உள்ளூர்த் தாவர இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துகொண்டு வருகின்றன. அவற்றைச் சார்ந்து வாழும் பறவையினங்களும் விலங்கினங்களும் கூட அழியக்கூடிய ஆபத்திலிருக்கின்றன.

பார்த்தீனியத்தின் பாதகங்களை நாம் நன்றாகவே அறிவோம். அக்களைப் பயிர் ஆஸ்திரேலியத் தீவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயம் கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு உண்டான சமயத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீவனங்களுடன் பார்த்தீனிய விதைகள் கலந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோடிக்கணக்கில் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கும் இக்களைப்பயிரைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகள் முழுமைக்குமே ஒரு மாபெரும் சவால்.

உலகநாடுகளில் பார்த்தீனியப் பரவல்

ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துவிட்ட அக்களைத்தாவரம் மெல்ல மெல்ல நாட்டின் மற்றப் பகுதிகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் பரவலைத் தடுத்து நிறுத்த போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனாலும் கால்நடைகளின் குளம்புகள் வழியாகவும் ஒரு பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் உணவு தானியங்களைக் கொண்டுசெல்லும் வாகனங்களின் மூலமாகவும் இக்களை விதை பரவல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தியாவசிய உணவுப்பயிர்களின் விளைச்சலுக்கு அதீதமான பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சூழலில் களைவிதைகள் மட்டும் எந்த மனித முயற்சியுமின்றி கட்டுக்கடங்காமல் பெருகிவளர்ந்து பரவுவது விநோதம்தான்.

 பார்த்தீனியம்

நாட்டின் சொந்தத் தாவர இனங்களையும் சொந்தத்தாவரத்தை அழித்துவளரும் அயல்நாட்டுத் தாவர இனங்களையும் வேறுபடுத்தி அறியும் தெளிவின்மையும் அயல்நாட்டுத் தாவரங்கள் என்று அறிந்தும் அழகுக்காக அவற்றைப் பேணுவதில் மக்கள் காட்டும் ஆர்வமும்தான் சொந்த மண்ணின் தாவரவளத்தைக் குறைக்கும் முக்கிய  அம்சங்கள்.

ஆஸ்திரேலியாவில் பல அந்நியத் தாவர அறிமுகத்துக்கு மிக முக்கியக்காரணம் horticulture எனப்படும் தோட்டக்கலை வேளாண்மை என்கிறது ஒரு ஆய்வுவீட்டுத் தோட்டங்களையும் பூங்காக்களையும் அழகுபடுத்தவென்று  ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 340 க்கும் அதிகமான பூச்செடிவகைகள்சூழலுக்குப்  பெருங்கேடு விளைவிப்பவை என்று தெரிந்தே கொண்டுவரப்பட்டவையாம். அவற்றுள் 20% -த்துக்கு மட்டுமே விற்பனைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள படத்தில் மற்றத் தாவரங்களின் மீது வெண்ணிறப்போர்வை போர்த்தினாற்போல் காணப்படும் இந்தக் கொடியின் பெயர் மதீரா (Anredera cordifolia). தென்னமெரிக்காவைச் சார்ந்த இது அழகுக்காக கொண்டுவரப்பட்டது. சரம்சரமாகப் பூத்துக் குலுங்கினாலும் நல்லவேளையாக இந்தக் கொடி விதைபரவல் மூலம் இனப்பெருக்கம் நிகழ்த்தவில்லை. தண்டுக்கிழங்குகள் மூலமாகவே புதிய செடிகள் கிளைக்கின்றன. எனவே நன்கு வளர்ந்த ஒரு கொடியின் தண்டுக்கிழங்குகளைப் பரவாமல் செய்தால் போதும்.. ஆனால் அது அவ்வளவு எளிதில்லை. மிகுந்த பொறுமையும் நேரமும் தேவைப்படும். இந்தக் களைக்கொடியைக் கட்டுப்படுத்துவதென்பது சூழலியல் பாதுகாப்பாளர்களுக்கு ஒரு பெரிய சவால்தான்.

மதீரா பூக்கள்
மதீரா கொடி மிக வலுவானது.  40 மீ உயரம் வரையிலும் வளரக்கூடியது. பெருமரங்களில் பற்றிப்படர்ந்து வளர்ந்து மரத்தையே ஒரு போர்வை போல மூடிவிடும். இதன் அதீத எடை மற்றும் வலுவான கரங்களின் பிடிதாங்கமுடியாமல் மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றாக உடைந்துவிழுந்துவிடும். ஏற்கனவே சூரிய ஒளியும் நீரும் கிடைக்காமல் வலுவிழந்து போயிருக்கும் மரம் நாளடைவில் மடிந்துபோய்விடும். கொடியோடு ஒப்பிடுகையில் மரம் பெரிய பலவான்தான்.. ஆனால் எப்பேர்ப்பட்ட பலவானையும் முகத்தைப் பொத்தி அடித்தால் எப்படித் தாங்குவான்? எதிராளியை எப்படித் திருப்பித் தாக்குவான்?

ரப்பர் கொடிப்பூ

தோட்டங்களை அழகுபடுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட தாவர வகைகளுள் ரப்பர் கொடி (rubber vine) எனப்படும் Cryptostegia grandiflora –வும் ஒன்று.  இது மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டது. தோட்டம் விட்டுத் தப்பிப்போன சில விதைகள் காரணமாக இன்று ஆஸ்திரேலியாவின் மிக மோசமான களைப்பயிர் என்னும் பட்டத்தைப் பெற்றிருக்கிறதுகிட்டத்தட்ட 3.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இத்தாவரத்தால் அழிந்துபோய்க்கொண்டிருக்கும் உள்நாட்டு தாவரவகைகள் அநேகம்ஒரு வேதனையான வேடிக்கை என்னவென்றால் இப்படி களைப்பயிர் பட்டம் பெற்றபிறகும் கூட இத்தாவரத்தை காசு கொடுத்து வாங்கி தங்கள் தோட்டத்தை அலங்கரிக்க ஆஸ்திரேலியாவில் பலரும் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான்.

 ரப்பர் கொடியின் ஆக்கிரமிப்பு

இந்த ரப்பர்கொடியானது தன் அருகிலிருக்கும் செடிகளையும் மரங்களையும் பற்றிப்படர்ந்து வளர்ந்து சூரிய ஒளியை மற்றத் தாவரங்களுக்கு கிடைக்கமுடியாதபடி செய்து அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல் தீவிர நச்சுத்தன்மை கொண்டது இத்தாவரம். இதைத் தின்றால் கால்நடைகள் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்துவிடும். நானூறு கிலோ எடையுள்ள குதிரையைக் கொல்ல பத்தே பத்து கிராம் இலைகள் போதும்.

Euclasta Whalleyi moth

இந்த தொய்கொடியை அழிக்க புதிதாக ஒரு அறிமுகம் நடைபெற்றது. அது Maravalia cryptostegiae எனப்படும் பூஞ்சைக்காளான். இது இத்தாவரத்தில் நோயுண்டாக்கி அழிக்கவல்லது. இதுவும் கொஞ்சநாளில் பயனற்றுப்போன பின் இன்னொரு அறிமுகம். Euclasta whalleyi எனப்படும் அந்துப்பூச்சியினம். அதுவும் கொஞ்சநாள்தான். இப்போது இயந்திரங்கள் மற்றும் இரசாயனங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனஅயல்தேச அந்துப்பூச்சியின் அறிமுகம் எத்தனை உள்ளூர் பூச்சியினங்களை அழிக்கப்போகிறதோ? அதை அழிக்க வேறென்ன அறிமுகமாகுமோ? சாமியார் பூனை வளர்த்த கதை நினைவுக்கு வருகிறதல்லவா?


(தொடரும்)
படங்கள் உதவி: இணையம்)
முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)

9 June 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)


இதுவரை ஒண்ட வந்த பிடாரிகள் வரிசையில் மனிதர்களால் இயற்கைக்கு மாறாக புதிய இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னாளில் ஆக்கிரமிக்கும் இனங்களாக மாறிய விலங்குகள் பறவைகள் பற்றி அறிந்தோம். இந்த தொடரில் குறிப்பிடப்பட்டவை தவிரவும் பல விலங்குகள் பறவைகள் ஆக்கிரமிப்பின் வரிசையில் உள்ளன என்றாலும் அவற்றுள் பலவற்றின் அறிமுகம் தற்செயலானது. அந்தப் பட்டியலில் எறும்பு, எலி, தவளை உள்ளிட்ட ஏராள உயிரிகள் அடக்கம். அவற்றைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் இந்த தொடர் முடிவற்றுத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதனால் தொடரை நிறைவாக்கும் நிமித்தம் இறுதிப்பகுதிகளில் ஆஸ்திரேலிய நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் அந்நிய தாவர வகைகள் சிலவற்றைப் பார்ப்போம்.


ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துவரும் உள்நாட்டுத் தாவரவகைகள் 24,000 இருக்கலாம். ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட அயல்நாட்டுத் தாவரவகைகள் சுமார் 27,500 இருக்கலாமாம். இவற்றில் மூவாயிரம் வகை நாடெங்கும் வளர்ந்து மண்டிக்கிடக்கும் களைகள். இவை ஆய்வில் அறியவந்தவை. அறியப்படாமல் இருக்கும் களைப்பயிர்கள் இன்னும் எத்தனையோகளைகளின் ஆக்கிரமிப்பால் இதுவரை ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்க தாவர இனங்களுள் சில அழிந்தேபோய்விட்டன. இன்னும் பல  தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.விளைநிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் மானாவாரியாய் வளர்ந்து பெருகும் களைப்பயிர்களைக் கட்டுப்படுத்தவே ஆண்டுக்கு 3.5 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் பதினேழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்) செலவாகிறதாம். இரசாயன களைக்கொல்லிக்கான செலவு தனி.

மத்திய அமெரிக்காவைச் சார்ந்த லாண்டானா செடியும் (lantana camara) ஆப்பிரிக்காவின் நச்சுமுட்புதரும் (Lycium ferocissimum) தென்னாப்பிரிக்காவின் பிட்டூ புதர்த்தாவரமும் (Chrysanthemoides monilifera) ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க ஆக்கிரமிப்புத் தாவரங்களுள் சில.

lantana camara

லாண்டானாவை நன்றாகவே அறிந்திருப்பீர்கள். நம்மூரில் வேலியோரங்களில் வண்ணவண்ணப் பூக்களால் அழகு காட்டும் உன்னிப்பூ செடிதான் அது. அதன் அழகுக்காகவே 1841-இல் ஆஸ்திரேலியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்வைக்கு அழகாக இருக்கும் அந்த செடி கால்நடைகளையும் நாய் பூனைகளையும் பாதிக்குமளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. இதையுண்ணும் விலங்குகளின் கல்லீரல் பாதிக்கப்படுகிறதாம். இந்தச்செடி வெளிவிடும் ஒருவகை இரசாயனம் காற்றில் பரவி அக்கம்பக்கத்து செடிகளை அழிக்கவல்லது. நச்சுத்தன்மை மிகுந்த இச்செடியின் காய்கள் பழுத்துவிட்டால் நச்சுத்தன்மையை இழந்து மனிதர்களும் பறவைகளும் விலங்குகளும் தின்பதற்கு ஏதுவாக மாறிவிடும் அதிசயத்தை என்னவென்பது? விதைபரவல் நடைபெற இதுவும் ஒரு தந்திரம் போலும்.

Bitou bush

கடற்கரைப்பகுதிகளில் மேலோட்டமாக வேர்விட்டு வளரும் பிட்டூ புதர்ச்செடி (Bitou Bush) செடி ஒரு வருடத்தில் உருவாக்கும் விதைகளின் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரம். அந்த ஐம்பதாயிரத்தில் பெரும்பான்மை முளைத்துவிடுமாம். அப்படியென்றால் அதற்கடுத்த வருடத்தில் எவ்வளவு முளைக்கும்... கணக்குப் போட்டு மாளாது நமக்கு. மண்ணில் மேலோட்டமாக வேர்விட்டிருப்பதால் லேசான மழைத்தூறல் கூட போதும் இதன் வளர்ச்சிக்கு. இந்த தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பிட்டூ அந்துப்பூச்சியும் பிட்டூ விதைப்பூச்சியும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் இவற்றால் ஓரளவு பயனிருந்தாலும் நாளடைவில் அவற்றாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பிட்டூவின் பெருக்கம் அதிகமாகிவிட்டது. பிட்டூவின் வருகை ஆஸ்திரேலியாவுக்கு எப்படியாம்? தற்செயல்தானாம். கப்பலுக்கு அடிப்பாரமாக உபயோகப்படுத்தப்படும் மண்ணுடன் கலந்து வந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. 
African boxthorn (Lycium ferocissimum) என்னும் ஆப்பிரிக்க நச்சு முட்புதர் கதையும் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதைதான். முட்புதர் என்பதால் பாதுகாப்பான வேலியாக பயன்படுத்தும் பொருட்டு ஐரோப்பியரால் 1800-வாக்கில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றோ நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் களைப்பயிராகிவிட்டது. இதனை இராசாயனத் தெளிப்புகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதும் சாத்தியப்படவில்லை. ஆபத்தென்று உணர்ந்தவுடனேயே புத்திசாலித்தனமாக சட்டென்று இலைகளை உதிர்த்துவிடுகிறதாம் இத்தாவரம். அதனால் வேரோடு பிடுங்கியெடுத்தால் ஒழிய இவற்றை மற்றக் களைப்பயிர்களுக்கு செய்வது போல இரசாயனங்கள் மூலம் கட்டுப்படுத்த முடிவதில்லை.

African Boxthorn

2 செமீ முதல் 15 செ.மீ. நீளம் வரையிலான முட்களை நெருங்கக் கொண்டிருக்கும் புதர்ச்செடி ஒவ்வொன்றையும் வேரோடு பெயர்த்தெடுத்தல் அவ்வளவு எளிதா என்ன? அப்படியே பிடுங்கினாலும் வேரின் ஒரு துண்டு மண்ணில் மீந்தாலும் போதும்.. புதிய தளிர்கள் உருவாகித் தழைத்திடும். இலை, தண்டு, பூ, காய் என்று எல்லாப் பகுதியும் நச்சுடையதாயிருந்தாலும் பழங்களை மட்டும் நச்சுத்தன்மையற்று விளைவித்துப் பறவைகளுக்கு உணவாக்கி எச்சங்கள் மூலம் விதைபரவல் நடத்தும் இந்த நச்சுச்செடிகளின் சாதுர்யத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லைதானே?


(தொடரும்)