9 June 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)


இதுவரை ஒண்ட வந்த பிடாரிகள் வரிசையில் மனிதர்களால் இயற்கைக்கு மாறாக புதிய இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னாளில் ஆக்கிரமிக்கும் இனங்களாக மாறிய விலங்குகள் பறவைகள் பற்றி அறிந்தோம். இந்த தொடரில் குறிப்பிடப்பட்டவை தவிரவும் பல விலங்குகள் பறவைகள் ஆக்கிரமிப்பின் வரிசையில் உள்ளன என்றாலும் அவற்றுள் பலவற்றின் அறிமுகம் தற்செயலானது. அந்தப் பட்டியலில் எறும்பு, எலி, தவளை உள்ளிட்ட ஏராள உயிரிகள் அடக்கம். அவற்றைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் இந்த தொடர் முடிவற்றுத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதனால் தொடரை நிறைவாக்கும் நிமித்தம் இறுதிப்பகுதிகளில் ஆஸ்திரேலிய நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் அந்நிய தாவர வகைகள் சிலவற்றைப் பார்ப்போம்.


ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துவரும் உள்நாட்டுத் தாவரவகைகள் 24,000 இருக்கலாம். ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட அயல்நாட்டுத் தாவரவகைகள் சுமார் 27,500 இருக்கலாமாம். இவற்றில் மூவாயிரம் வகை நாடெங்கும் வளர்ந்து மண்டிக்கிடக்கும் களைகள். இவை ஆய்வில் அறியவந்தவை. அறியப்படாமல் இருக்கும் களைப்பயிர்கள் இன்னும் எத்தனையோகளைகளின் ஆக்கிரமிப்பால் இதுவரை ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்க தாவர இனங்களுள் சில அழிந்தேபோய்விட்டன. இன்னும் பல  தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.விளைநிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் மானாவாரியாய் வளர்ந்து பெருகும் களைப்பயிர்களைக் கட்டுப்படுத்தவே ஆண்டுக்கு 3.5 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் பதினேழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்) செலவாகிறதாம். இரசாயன களைக்கொல்லிக்கான செலவு தனி.

மத்திய அமெரிக்காவைச் சார்ந்த லாண்டானா செடியும் (lantana camara) ஆப்பிரிக்காவின் நச்சுமுட்புதரும் (Lycium ferocissimum) தென்னாப்பிரிக்காவின் பிட்டூ புதர்த்தாவரமும் (Chrysanthemoides monilifera) ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க ஆக்கிரமிப்புத் தாவரங்களுள் சில.

lantana camara

லாண்டானாவை நன்றாகவே அறிந்திருப்பீர்கள். நம்மூரில் வேலியோரங்களில் வண்ணவண்ணப் பூக்களால் அழகு காட்டும் உன்னிப்பூ செடிதான் அது. அதன் அழகுக்காகவே 1841-இல் ஆஸ்திரேலியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்வைக்கு அழகாக இருக்கும் அந்த செடி கால்நடைகளையும் நாய் பூனைகளையும் பாதிக்குமளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. இதையுண்ணும் விலங்குகளின் கல்லீரல் பாதிக்கப்படுகிறதாம். இந்தச்செடி வெளிவிடும் ஒருவகை இரசாயனம் காற்றில் பரவி அக்கம்பக்கத்து செடிகளை அழிக்கவல்லது. நச்சுத்தன்மை மிகுந்த இச்செடியின் காய்கள் பழுத்துவிட்டால் நச்சுத்தன்மையை இழந்து மனிதர்களும் பறவைகளும் விலங்குகளும் தின்பதற்கு ஏதுவாக மாறிவிடும் அதிசயத்தை என்னவென்பது? விதைபரவல் நடைபெற இதுவும் ஒரு தந்திரம் போலும்.

Bitou bush

கடற்கரைப்பகுதிகளில் மேலோட்டமாக வேர்விட்டு வளரும் பிட்டூ புதர்ச்செடி (Bitou Bush) செடி ஒரு வருடத்தில் உருவாக்கும் விதைகளின் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரம். அந்த ஐம்பதாயிரத்தில் பெரும்பான்மை முளைத்துவிடுமாம். அப்படியென்றால் அதற்கடுத்த வருடத்தில் எவ்வளவு முளைக்கும்... கணக்குப் போட்டு மாளாது நமக்கு. மண்ணில் மேலோட்டமாக வேர்விட்டிருப்பதால் லேசான மழைத்தூறல் கூட போதும் இதன் வளர்ச்சிக்கு. இந்த தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பிட்டூ அந்துப்பூச்சியும் பிட்டூ விதைப்பூச்சியும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் இவற்றால் ஓரளவு பயனிருந்தாலும் நாளடைவில் அவற்றாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பிட்டூவின் பெருக்கம் அதிகமாகிவிட்டது. பிட்டூவின் வருகை ஆஸ்திரேலியாவுக்கு எப்படியாம்? தற்செயல்தானாம். கப்பலுக்கு அடிப்பாரமாக உபயோகப்படுத்தப்படும் மண்ணுடன் கலந்து வந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. 
African boxthorn (Lycium ferocissimum) என்னும் ஆப்பிரிக்க நச்சு முட்புதர் கதையும் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதைதான். முட்புதர் என்பதால் பாதுகாப்பான வேலியாக பயன்படுத்தும் பொருட்டு ஐரோப்பியரால் 1800-வாக்கில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றோ நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் களைப்பயிராகிவிட்டது. இதனை இராசாயனத் தெளிப்புகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதும் சாத்தியப்படவில்லை. ஆபத்தென்று உணர்ந்தவுடனேயே புத்திசாலித்தனமாக சட்டென்று இலைகளை உதிர்த்துவிடுகிறதாம் இத்தாவரம். அதனால் வேரோடு பிடுங்கியெடுத்தால் ஒழிய இவற்றை மற்றக் களைப்பயிர்களுக்கு செய்வது போல இரசாயனங்கள் மூலம் கட்டுப்படுத்த முடிவதில்லை.

African Boxthorn

2 செமீ முதல் 15 செ.மீ. நீளம் வரையிலான முட்களை நெருங்கக் கொண்டிருக்கும் புதர்ச்செடி ஒவ்வொன்றையும் வேரோடு பெயர்த்தெடுத்தல் அவ்வளவு எளிதா என்ன? அப்படியே பிடுங்கினாலும் வேரின் ஒரு துண்டு மண்ணில் மீந்தாலும் போதும்.. புதிய தளிர்கள் உருவாகித் தழைத்திடும். இலை, தண்டு, பூ, காய் என்று எல்லாப் பகுதியும் நச்சுடையதாயிருந்தாலும் பழங்களை மட்டும் நச்சுத்தன்மையற்று விளைவித்துப் பறவைகளுக்கு உணவாக்கி எச்சங்கள் மூலம் விதைபரவல் நடத்தும் இந்த நச்சுச்செடிகளின் சாதுர்யத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லைதானே?


(தொடரும்)

38 comments:

 1. வணக்கம்
  சகோதரி

  ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... சிலது அறியாத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்.

   Delete
 2. ஒரு தூய்மையான இடம் 'நாகரீக' மனிதர்கள் கிடைத்தால் எந்த அளவு அது பாழாகும் என்பதற்கு ஆஸ்திரேலியா உதாரணம் போல! நேர்த்தியாக தொடுக்கிறீர்கள் தொடரை!

  ReplyDelete
  Replies
  1. தூய்மை என்பதை விடவும் தனித்துவம் எனலாம். மனிதர்களோ மரமோ விலங்கோ எதுவாக இருப்பினும் அதன் தனித்துவம் அழிக்கப்படும்போது எழும் ஆதங்கம் சொல்லில் வடிக்கவியலாது அல்லவா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. கணக்கிட்டால் தலை சுத்துகிறது...

  வியக்க வைக்கும் தகவல்கள்...

  ReplyDelete
  Replies
  1. கணக்கிடமுடியாமல் ஏராளம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 4. ஆம், தாவரங்களைக் களை எடுப்பதென்பது சிரமமானதும் சவாலானதுமான ஒன்று.

  இந்தத் தொடரால் பல விஷயங்களை அறிந்து கொண்டோம். நேரம் எடுத்து தகவல்களுடன் அழகாகத் தொகுத்து அளித்த உங்களுக்கு எங்கள் நன்றி, கீதா.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி ராமலக்ஷ்மி. இன்னும் இரண்டு பகுதிகளில் முடிக்க உத்தேசம்.

   Delete
 5. வியக்க வைக்கும் தொடர்...சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்.

   Delete
 6. ஓ.... தொடரும்?

  வழக்கம் போலவே சுவாரஸ்யமான பதிவு. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இரண்டு வாரம்... அத்துடன் இதை முடித்துவிட்டு ஆஸ்திரேலிய அதிசய உயிரினங்கள் தொடரை மீண்டும் தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம். தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. தொடரின் இடையே விலங்குகளிலிருந்து சற்றே விலகி, வியக்க வைக்கும் வித்யாசமான தாவரங்கள் பற்றிய திடுக்கிடும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். காட்டியுள்ள படங்கள் எல்லாமே அழகாக உள்ளன.

  //இலை, தண்டு, பூ, காய் என்று எல்லாப் பகுதியும் நச்சுடையதாயிருந்தாலும் பழங்களை மட்டும் நச்சுத்தன்மையற்று விளைவித்துப் பறவைகளுக்கு உணவாக்கி எச்சங்கள் மூலம் விதைபரவல் நடத்தும் இந்த நச்சுச்செடிகளின் சாதுர்யத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லைதானே?//

  இயற்கையின் விந்தைகளில் இப்படியும் சிலவா என ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

  மிக அருமையான அலசல் பதிவுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ‘தொடரும்’ என்பதைப் பார்த்ததில் என் மகிழ்ச்சியும் தொடரத்தான் செய்கிறது :) தொடரட்டும் !

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரப் பணியிலும் என் பதிவுக்கு மட்டுமல்லாது வழக்கமாய் செல்லும் பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று கருத்திட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

   Delete
  2. வலைச்சரப் பணிக்கு இடையிலும் என்று இருக்கவேண்டும்.

   Delete
 8. ஒண்ட வந்த பிடாரிகள் தொடரைப்படிக்கும்போது அநேகமாக எல்லாமே இறக்குமதி செய்தவைதானோ என்னும் ஐயம் எழுகிறது

  ReplyDelete
  Replies
  1. ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்க உயிரினங்கள் பற்றி முன்பொரு தொடர் எழுதியுள்ளேனே... அத்தகு உயிரினங்களை அயல்நாட்டு உயிரினங்கள் அழிக்கும் முயற்சி கண்டு உண்டான ஆதங்கமே இந்த திடீர் தொடருக்கு காரணம். மீண்டும் ஆஸ்திரேலிய உயிரினங்கள் தொடரை தொடரவிருக்கிறேன். அதன்மூலம் இங்கு பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் உயிரினங்கள் பற்றி அறியலாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 9. நிறைய விடயங்கள் அறிந்தேன் சகோ
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.

   Delete
 10. லாண்டனா பற்றி நானே எழுத வேண்டும் என்றிருந்தேன். நம் நீலகிரியில் இது ஏராளமாகப் பரவி சோலைக்காடுகளை அழிக்கின்றதாம். இதன் செடிக் குச்சிகளிலிருந்து மலைவாழ் மக்கள் பிரம்புக் கூடை போல் தயாரிக்கிறார்கள். பிரம்பை விட மிக மலிவானது. ஆஸ்திரேலியா போல் ஒவ்வொன்றைப் பற்றியும் துல்லியமான கணக்கு நம்மிடம் கிடையாது. எனவே பாதிப்பின் முழு விபரம் நமக்குக் கிடைப்பது கடினம். வேலிக்காத்தானை அறிமுகப்படுத்திவிட்டு இப்போது நாம் விழிப்பது போல் முள்செடிகளை அறிமுகப்படுத்திவிட்டு ஆஸ்திரேலியா முழி பிதுங்குகிறது. அங்கு வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம் என்பதால் அரசு கொண்டு வரும் பரவல் தடுப்பு முறைகளுக்கு அவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் நம் நாட்டில்? நச்சுத்தன்மையுள்ள காய்கள் பழுக்கும் சமயத்தில் நச்சுத்தன்மை அகன்று இனப்பெருக்கம் செய்வது விந்தையாயிருக்கிறது. சுவையான தகவல்கள்! நன்றி கீதா!

  ReplyDelete
  Replies
  1. லாண்டானா செடியின் தண்டிலிருந்து மலைவாழ் மக்கள் கூடை முடைவது முற்றிலும் புதிய செய்தி. தானும் தழைத்து பிற செடிகளையும் வாழவிட்டால் எந்தப் பிரச்சனையுமில்லை. அப்படியில்லாமல் மற்றவற்றை அழித்துவாழும்போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. அப்போது அந்தக் களைகளை அழித்தால் ஒழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

   Delete
 11. பழங்கள் மட்டும் நச்சுத் தன்மை அற்று
  வியப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வியப்புதான் ஐயா. அதையே இங்கு பகிர்ந்துகொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. லாண்டானா பூவைப்பற்றி படித்த போது ஆச்சரியமாக இருந்தது~ இத்தனை நச்சுத்தன்மை வாய்ந்த இந்த தாவரத்தின் காய் பழுத்ததும் எப்படி சாதுவாய் மாறி விடுகின்றன!

  அழகான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. இனம் தழைக்கவைக்கும் சாமர்த்தியம். வேறென்ன சொல்வது? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ மேடம்.

   Delete
 13. கீதா,

  இந்த வரிசையில் தாவரங்களும் உள்ளனவா ! லாண்டானா(இப்போதுதான் இதன் பெயர் தெரிந்தது) எங்க ஊரிலும் ஏன் இங்கும் கூட பல வண்ணங்களில் உள்ளன. இதன் பழங்களை நானும் சாப்பிட்டிருக்கிறேன் இதில் இவ்ளோ பிரச்சினைகளா ?

  இன்னும் என்னென்ன தாவரங்கள் வரிசைகட்டி வரப்போகின்றனவோ !

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இந்தச்செடியைப் பற்றி அறியும்போதுதான் பெயரும் தெரியவந்தது. உங்கள் பதிவில் உன்னிப்பூ என்ற தலைப்பில் பார்த்திருக்கிறேன் சித்ரா. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 14. தொடரை ஏன் நிறுத்துகிறீர்கள் ..
  தற்காலிகமாக நிறுத்திவிட்டு மீண்டும் தொடருங்கள்
  நல்ல தொகுப்பாக மலரும்
  தம +

  ReplyDelete
  Replies
  1. எழுதிக்கொண்டே இருந்தால் முடிவே இருக்காது. வாசிப்பவர்க்கும் சுவாரசியம் குன்றிவிடும். முக்கியமானவற்றை எழுதிவிட்டேன். அதனால் நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது போல் மீண்டும் ஏதேனும் சுவாரசியத் தகவல் கிடைத்தால் மறுபடி தொடர்கிறேன். ஆலோசனைக்கு நன்றி மது.

   Delete
 15. நீங்க கொடுப்பது எல்லாம் எங்களுக்கு புதிய தகவல்தான் ஆதலால் தோழி தொடர்ந்து எழுதுங்க. தங்களின் ஆய்வில் எங்களுக்கும் கிடைக்கும் பல அறிமுகங்கள்.

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்துக் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி சசி.

   Delete
 16. இப்படி இந்தியாவிலும் பரவிய வேற்று மண் தாவரங்களை பற்றியும் அறிய ஆவலாக இருக்கிறது! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் எழுதுகிறேன். ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி சுரேஷ்.

   Delete
 17. வணக்கம்

  லண்டானா கேமரா என்னும் இச்செடி நம் நாட்டிற்கும் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.

  மிக எளிதாக படர்வதும் பிற செடி வகைகளை அழிப்பதும் எளிதில் அழிக்க முடியாததுமாய் இருப்பது.

  பிற செய்திகள் புதியன.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. பொறுமையாக பல பதிவுகளையும் வாசித்துத் தொடர்ந்து கருத்திட்டு பல புதிய தகவல்களையும் குறிப்பிட்டு ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி தங்களுக்கு.

   Delete
 18. உன்னிப்பூ செடி விஷ செடியா?... எங்கள் இடங்களில் நிறைய வளர்ந்துள்ளன...ஆனால் இதை விஷ செடி என்று இதுவரையில் யாரும் சொல்லியதில்லை .... வெட்டுப்பட்ட இடங்களில் இதன் இலையை அரைத்துவைத்துக் கட்ட அப்படியே ஓட்டிபிடித்துக்கொள்ளும் ... புண் ஆறிய பின்புதான் கீழேவிழும் என்று ஒரு மருத்துவ நூலில் படித்த நினைவு.... கட்டுரை அருமை ... நன்றி !!!
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.