14 August 2014
13 August 2014
கவிதைக் கைமாற்று
அன்றொருநாள்
அவசரநிமித்தம்
கவிதையொன்றைக்
கைமாற்றாய்க்கேட்டு
கையேந்தி
நின்றிருந்தாய் என் வாயிலில்.
உன் கையறுநிலையைக்
காணச்சகியாது
என் கவிதைத்தாள்களின்
கதறல்களை மீறி
பிய்த்துக்கொடுத்தேன்
என் கவிச்சிதறல்களை.
காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
நேயமற்ற
என்னோடு வாழ மறுத்ததால்
சுயமிழந்து
தவிக்கிறேன் நான்.
விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
என் விரல்
ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
தூசு படிந்த
உன் சத்தியங்கள் காலாவதியாகி
கனகாலமாகிவிட்டதை
உணராது
விடுபடும்
நாளை எதிர்பார்த்திருக்கின்றன
விம்மலும்
விசும்பலுமாய்!
உன்
கையொப்பத்துக்காக முண்டியடித்த
கூட்டத்தின்
நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது.
பைத்தியங்குளியைப்
போன்ற தோற்றத்திலும்
என்னை
நீ அடையாளங்கண்டுகொண்டாய் என்பதை
விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்.
இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லி
கரைந்துகொண்டிருக்கின்றன
காக்கைகள்!
கையுதிர்க்கவிருக்கும்
சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
கவிதைப்புத்தகத்தின்
வெற்றுப்பக்கங்களை
படபடப்போடு
புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று.
***************
(படம்: நன்றி இணையம்)
2 August 2014
மகிழ்வும் நெகிழ்வும் 1
அங்கீகாரங்களை விரும்பாத படைப்பாளிகள் யார்? நாமும் களத்தில் இருக்கிறோம் என்பதையும் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்துபவை அங்கீகாரங்கள். வெறும் முகத்துதியாக அல்லாமல் சரியான விதத்தில் சரியான விகிதத்தில் அது வந்துசேரும்போது படைப்பாளியின் திறன் பன்மடங்கு அதிகமாகிறது. எழுத்தின் மீதான பொறுப்பை அதிகரித்து தொடர்ந்து படைக்கும் வல்லமையை வழங்குகிறது. அந்த வகையில் சமீபத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
அங்கீகாரம் 1
குங்குமம் தோழியில் நட்பு சிறப்பிதழாய் மலர்ந்திருக்கும் (1-15 ஆக. 14)
இதழில் என் ஜன்னல் பகுதியில் கீதமஞ்சரி வலைப்பூ பற்றிய
கவிஞர் உமா மோகன் அவர்களின் அறிமுக உரை கண்டு மகிழ்வில்
நிறைகிறது மனம். எத்தனையோ அருமையான வலைப்பூக்களுக்கு
மத்தியில் கீதமஞ்சரி அவரது மனத்தில் இடம்பிடித்தமை ஒரு
சிறப்பான அங்கீகாரமல்லாது வேறென்ன?
தோழி உமா மோகன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த
அன்பும் நன்றியும்.
அங்கீகாரம் 2
என் கட்டுரை குறித்து நடுவர் முனைவர் திரு. வ.வே.சு ஐயா அவர்களின் கருத்து இதோ.
"இலக்கியத் தரம் வாய்ந்த இனிய கட்டுரை.” இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். “இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.” என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றாவதாக உள்ளது.
அங்கீகாரம் 3
கட்டுரை குறித்து கவிஞர் காவிரிமைந்தன் ஐயா அவர்களது கருத்து
இலக்கியங்களில் உள்ளம்புகுந்து இனியபல செய்யுள்களை மேற்கோள்காட்டி.. அட.. இதோ பாருங்கள் நம்ம கண்ணதாசன் பாடல் என்று சொல்லியிருக்கும் நேர்த்தி வாசகரை உங்கள் ரசிகராக்கிவிடும்!
கண்ணதாசனை.. என் நெஞ்சத்துடிப்போடு வைத்து
நடைபோடும் என்னால் உங்கள் தனித்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது! எளிமையான உங்கள் எழுத்தோட்டம்.. ம்..ம்..
அப்புறம் என்று உடனோடி வரச் சொல்கிறது..
கட்டுரையின் முகப்பிலேயே சொல்லிவிடுகிறீர்கள் இலக்கியங்களிலிருந்து
எடுக்கப்பட்ட விஷயங்கள் என்பதற்கும் சரியான உவமையோடு!
எதார்த்தமாக.. இன்றைய காலக்கட்டத்தில்
எவருமே வாசித்திருக்க வாய்ப்பில்லாத.. அல்லது தங்கள் வாழ்வில் அப்பகுதிகளை
காணவோ.. கேட்கவோ.. முடியாத சராசரி உள்ளங்களுக்கு கண்ணதாசன் பாட்டுவரிகள்
நிச்சயமாக இலக்கியத்தின் சாரத்தை எளிமையாக.. இனிமையாக.. இனிவரும் சந்ததிகளுக்கும்
கொடுத்துக் கொண்டே இருக்கும்! உங்களின் கட்டுரை இந்த வகையில் போற்றுதலுக்குரிய
சேவையைச் செய்திருக்கிறது! தடம் பார்த்து நடந்திருக்கிற பெண்போல.. இலக்கியங்களின் வழிநின்று அவற்றை எடுத்தியம்ப கண்ணதாசன்
போல் இன்றைக்கு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை!
சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!
சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!
போட்டியின் நடுவர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட முடிவுகளை அறிவித்துள்ள கவிஞர்
திரு. வ.வே.சு. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இப்படியொரு போட்டியை அறிவித்து
எண்ணத்தில் இருப்பவற்றை எழுத்தாய் வடிக்கத் தூண்டிய கவிஞர் திரு. காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கும் வல்லமை ஆசிரியருக்கும் குழுவினருக்கும் அன்பார்ந்த நன்றி.
மனங்கனிவான இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை பதிவுலகில் இல்லாத வகையில் புதுமையாக
சிறுகதைகளுக்கென்று விமர்சனப் போட்டியைத் துவங்கி தொய்வின்றி
சிறுகதைகளுக்கென்று விமர்சனப் போட்டியைத் துவங்கி தொய்வின்றி
வெற்றிகரமாய்த் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் கோபு சார்
அவர்களுடைய இன்றைய பதிவு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. போட்டியில்
கலந்துகொண்டு பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் தனித்ததொரு
அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கிக்கொண்டிருப்பவை
அவருடைய போட்டிகள் என்றால் மிகையில்லை. அவ்வகையில்
எனக்கென்று ஒரு இடம் வாசகர் மத்தியில் உருவாகக் காரணமான
கோபு சார் அவர்களுக்கு என் அன்பான நன்றி.
பரிசு அறிவிப்போடு எனக்கு மணநாள் வாழ்த்தையும்
தெரிவித்து அவர் இட்டிருக்கும் பதிவு மனம் நெகிழ்த்துகிறது.
நெகிழும் மனத்தோடு மீண்டும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து
மகிழ்கிறேன்.
Labels:
அனுபவம்,
கட்டுரை,
குங்குமம் தோழி,
மகிழ்வும் நெகிழ்வும்,
வல்லமை,
விருதுகள்
Subscribe to:
Posts (Atom)