Showing posts with label மலர்கள். Show all posts
Showing posts with label மலர்கள். Show all posts

23 July 2024

அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் -1 (பூக்கள் அறிவோம் 111-114)

 ஆர்க்கிட் மலர்கள் (Orchids) 

உலகின் மிகத் தொன்மையான தாவரங்களுள் ஆர்க்கிட் தாவரமும் ஒன்று. ஆர்க்கிட் தாவரங்கள் நிலத்திலும் வளரும், மரத்திலும் வளரும். பாறை இடுக்கிலும் வளரும். ஒரு ஆய்வுக்கட்டுரையே சமர்ப்பிக்கும் அளவுக்கு அதிசயத்தன்மைகள் நிறைந்த ஆர்க்கிட் மலர்க்குடும்பத்துக்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான வாழ்வியல் வரலாறு இப்புவியில் உண்டு.  அது கண்டறியப்பட்ட விதமே ஆச்சர்யமானது. 

1. விதவிதமான ஆர்க்கிட் மலர்கள் 

சுமார் 15 மில்லியனுக்கு முந்தைய ஆர்க்கிட் மகரந்தம் சுமந்த தேனீயின் புதைபடிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் ஆர்க்கிட் தாவர இனம் சுமார் நூறு மில்லியன் ஆண்டுகள் தொன்மையானது என்று அறியப்பட்டுள்ளது. மீப்பெரு கண்டமாக கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இருந்த காலத்திலேயே ஆர்க்கிட் தாவர இனம் உருவாகியிருக்கலாம் என்றும் அதனால்தான் நீக்கமற அனைத்துக் கண்டங்களிலும் ஆர்க்கிட் தாவரங்கள் காணப்படுகின்றன என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.  

ஆர்க்கிட் பூக்கள் அழகு மட்டுமல்ல, செழுமை, உறுதி மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக விளங்குகின்றன. அன்பு, காதல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளின் தீவிர வெளிப்பாட்டுக்கு ஆர்க்கிட் பூக்கள் பரிசாக அளிக்கப்படுகின்றன. 

அண்டார்டிகா தவிர்த்து உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் தன்மையிலும், இரண்டு மி.மீ. முதல் இரண்டரை மீ. வரையிலுமாக பூக்களின் அளவுகளிலும்சில மாதங்கள் முதல் நூறு வருடங்கள் வரையிலான செடிகளின் ஆயுட்காலத்திலும்சில மணி நேரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான பூக்களின் வாடா இயல்பிலும்... என பல்லாயிரக்கணக்கான வகைகள் ஆர்க்கிட் குடும்பத்தில் இயற்கை மற்றும் செயற்கை வழிகளில் உருவாகியுள்ளன. இப்போதும் கூட வருடத்துக்கு நூறு புதிய கலப்பின வகைகளாவது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் இனிப்புகளில் சுவையும் மணமும் கூட்டப் பயன்படுத்தும் வெனிலா எசன்ஸ் தயாரிக்கப் பயன்படும் வெனிலா மலரும் ஆர்க்கிட் மலரினம்தான். Orchid என்பதன் மூலவார்த்தையான orkhis கிரேக்க மொழியில் ஆணின் விதைப்பையைக் குறிக்கிறதாம். இதன் வேர்க்கிழங்குகளின் வடிவம் விதைப்பையை ஒத்திருப்பதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது. ஆர்க்கிட் செடியின் ஒரே ஒரு விதைநெற்றுக்குள் கோடிக்கணக்கான விதைகள் இருந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சில மட்டுமே அடுத்த தலைமுறையை உருவாக்கும் வீரியமுள்ளவை.  இந்த விதைகளை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவுக்கு மிகவும் நுட்பமானவை. 

பூக்கள் அறிவோம் தொடரின் தொடர்ச்சியாக, இப்பதிவில் அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் பற்றி அறிந்துகொள்வோமா? இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் சிட்னி & வுல்லங்காங் தாவரவியல் பூங்காக்களில் 2018 முதல் தற்போது வரை அவ்வப்போது என்னால் எடுக்கப்பட்டவை. 


111. லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்


குட்டிக் குழந்தைகளின் பாதணி போல அழகான பையுடன் வசீகரிக்கும் இந்த வகை ஆர்க்கிட் பூக்களுக்கு "Ladies slipper orchid" என்று பெயர்இவை பெரும்பாலும் உள்ளரங்க அலங்காரச் செடியாக வளர்க்கப்படுகின்றன. தேனெடுக்க வரும் பூச்சிகள் இந்தப் பைக்குள் விழுந்து எழுந்து தடுமாறி வெளியேறுவதற்குள் மகரந்தப் பொடிகளைத் தந்தும் பெற்றும் மகரந்தச் சேர்க்கையை வெற்றிகரமாக்கிவிடுகின்றன.

2. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (1)

3. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (2)

4. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (3)

5. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (4)

6. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (5)

7. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (6)

8. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (7)

லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் இனத்தில் ஐந்து பெரும் பிரிவுகள் உள்ளன. படத்திலிருப்பதுவீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்இது paphiopedilum பேரினத்தைச் சேர்ந்தது. வீனஸுக்கு நிகரான காதற்கடவுள் அப்ரோடிட் அவதரித்த இடத்தின் பெயர் paphos என்பதாகும். கிரேக்க மொழியில் pedilon  என்றால் பாதணி என்று பொருள். இரண்டையும் சேர்த்து இவ்வழகிய பூக்களுக்கு paphiopedilum என்ற பெயர் இடப்பட்டுள்ளது. 

9. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (8)

பொதுவாக ஆர்க்கிட் பூக்களில் ஒரே ஒரு மகரந்தப்பை தான் இருக்கும். ஆனால் லேடீஸ் ஸ்லிப்பர் வகை ஆர்க்கிட் பூக்களில் இரண்டு மகரந்தப்பைகள் இருக்கும். இவற்றின் பூர்வீகம் இந்தியாசீனாதென்கிழக்காசிய நாடுகள் போன்றவை. இவற்றின் விநோதமான அமைப்பால் கவரப்பட்டுதோட்ட ஆர்வலர்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.


112. சிட்னி ராக் ஆர்க்கிட்

ஆஸ்திரேலிய ஆர்க்கிட் வகையான இது, சிட்னி சார்ந்த பகுதிகளில் காணப்படுவதாலும் உயரமான மலைகளிலும் பாறைப்பகுதிகளிலும் காணப்படுவதாலும் இது 'சிட்னி ராக் ஆர்க்கிட்' என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு cane orchid, rock lily என்ற பெயர்களும் உண்டு. 

10. சிட்னி ராக் ஆர்க்கிட் (1)

11. சிட்னி ராக் ஆர்க்கிட் (2)

12. சிட்னி ராக் ஆர்க்கிட் (3)

13. சிட்னி ராக் ஆர்க்கிட் (4)

14. சிட்னி ராக் ஆர்க்கிட் (5)

15. சிட்னி ராக் ஆர்க்கிட் (6)

இதன் இலைகள் பன்னிரண்டு வருடம் வரை வாடாதவை. ஒரு பூந்தண்டில் சுமார் இருநூறு பூக்கள் வரை பூக்கும். முதலில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்கள் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்துக்கு மாறும். இது Dendrobium பேரினத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Dendrobium speciosum என்பதாகும். Speciosum என்றால் லத்தீனில் 'வசீகரமான' என்று பொருள். இவை தொங்குதொட்டியில் வளர்க்கவும் தோதானவை. 

113. காக்‌ஷெல் ஆர்க்கிட்

பார்ப்பதற்கு வாய் திறந்திருக்கும் சிப்பி போன்றிருப்பதால் cockleshell orchid, clamshell orchid என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. Prosthechea பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. படத்தில் இருப்பது Prosthechea cochleata மலராகும்.

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த Belize நாட்டின் தேசிய மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. அங்கு இதன் பெயர் கருப்பு ஆர்க்கிட்.

16. காக்‌ஷெல் ஆர்க்கிட் (1)

17. காக்‌ஷெல் ஆர்க்கிட் (2)

18. காக்‌ஷெல் ஆர்க்கிட் (3)

19. காக்‌ஷெல் ஆர்க்கிட் (4)

நறுமணமிக்க இந்த வகை ஆர்கிட் மலர்கள் மாதக்கணக்காக வாடாதவை என்பதோடு எளிதில் பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகாதவை என்ற சிறப்பும் உடையவை. பூங்கொத்தின் பூக்கள் ஒரே சமயத்தில் பூக்காமல் ஒவ்வொன்றாகப் பூப்பதால் வருடம் முழுவதும் செடி பூக்களுடனேயே காட்சியளிக்கும். அதனாலேயே உள் அலங்காரச்செடிகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன.  

114. போட் ஆர்க்கிட்

Cymbidium பேரினத்தைச் சேர்ந்த இவை ‘Boat orchids’ என்றழைக்கப்படுகின்றன. ‘cymba’ என்றால் லத்தீன் மொழியில் 'படகு' என்று பொருள். இந்தப் பேரினத்தில் சுமார் அறுபது சிற்றினங்கள் உள்ளன. 

பொதுவாக கடைகளில் சரியான தட்பவெப்பத்தில் முறையான பராமரிப்போடு, விற்பனைக்கென பொத்திப் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட் பூந்தொட்டிகளையும் ஆர்க்கிட் பூங்கொத்துகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இயற்கைச்சூழலில் காற்று, மழை, புழுதி, வெயில், பூச்சித்தாக்குதல் எல்லாவற்றையும் தாங்கி, மண்ணில் வளர்ந்து கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் காட்சியளிக்கும் ஏராளமான போட் ஆர்க்கிட் செடிகளைப் பூங்காவில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  

20. போட் ஆர்க்கிட் (1)

21. போட் ஆர்க்கிட் (2)

22. போட் ஆர்க்கிட் (3)

23. போட் ஆர்க்கிட் (4)

24. போட் ஆர்க்கிட் (5)

25. போட் ஆர்க்கிட் (6)

26. போட் ஆர்க்கிட் (7)

27. போட் ஆர்க்கிட் (8)

28. போட் ஆர்க்கிட் (9)

29. போட் ஆர்க்கிட் (10)

30. போட் ஆர்க்கிட் (11)

போட் ஆர்க்கிட் செடிகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவை. கொத்துக் கொத்தாகப் பூக்கும் இவற்றின் அழகு காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 

திருமணத்துக்கான மலர் அலங்காரங்களிலும் பூங்கொத்துகளிலும் இவை பெரிதும் இடம்பிடிக்கின்றன. செடியில் இருந்தால் பல வாரங்களுக்கு வாடாமல் அன்றலர்ந்த மலர் போலவே காணப்படுவது இவற்றின் சிறப்பு. உள்ளரங்கத்திலும் வெளியிலும் வளரும் தன்மை இவற்றின் இன்னொரு சிறப்பு.

படகு ஆர்க்கிட் பூக்கள் காதல், அழகு, செழுமை, வனப்பு போன்றவற்றின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றன. ஆர்க்கிட் மலர்களைப் பரிசாகப் பெறுவதென்பது நற்பேறாகவும் வளமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

31. போட் ஆர்க்கிட் (12)

32. போட் ஆர்க்கிட் (13)

33. போட் ஆர்க்கிட் (14)

34. போட் ஆர்க்கிட் (15)

35. போட் ஆர்க்கிட் (16)

அழகு மட்டுமல்லாது, ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தோடு மிகத் தொன்மையான தொடர்புடைய படகு ஆர்க்கிட், சீனா, ஜப்பான் போன்ற தென்கிழக்காசிய நாடுகளின்  கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரிய மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது.

******

டான்சிங் லேடி ஆர்க்கிட், பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட், மோத் ஆர்க்கிட், கைட் ஆர்க்கிட் என இன்னும் சில வித்தியாசமான ஆர்க்கிட் மலர்களைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம். 
(தொடரும்)


30 June 2024

பூக்கள் அறிவோம் (101-110)

நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'பூக்கள் அறிவோம்' தொடர்கிறது. இந்தப் பதிவில் ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட சில தாவரங்கள் இடம்பெறுகின்றன. 


101.  நியூசௌத் வேல்ஸ் கிறிஸ்துமஸ் பூக்கள் 

(Ceratopetalum gummiferum)



வசந்தகாலத்தில் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில்) வெள்ளைநிறத்தில் குட்டிக்குட்டியாய் அபரிமிதமாய்ப் பூக்கும் பூக்கள் அழகுதான் என்றாலும் அவை முதிர்ந்து உதிர்ந்தபின் வளர்ந்து சிவப்பாக மாறும் புல்லிவட்டம்தான் செடிக்குக் கூடுதல் கவர்ச்சி. விதைகளைப் பொத்திப் பாதுகாக்கும் அவற்றைப் பார்க்கும்போது ஐந்து இதழ்களைக் கொண்ட பூக்களைப் போலவே இருக்கும். இதோ படத்தில் இருப்பதும் அப்படியான பூவடி இலைகளே. இவை பூக்கள் அல்ல என்பதை சத்தியம் செய்தாலும் எவராலும் எளிதில் நம்பமுடியாது. 

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில்தான் அதிகம் என்பதாலும், கிறிஸ்துமஸ் சமயத்தில் அதாவது டிசம்பர் மாதவாக்கில் செடிமுழுவதும் செக்கச்செவேலென்று காட்சிதருவதாலும் இதற்கு நியூசௌத் வேல்ஸ் கிறிஸ்துமஸ் புதர் (New south wales Christmas bush), அல்பேரியின் சிவப்பு (Albery’s Red) என்ற செல்லப்பெயர்கள் உண்டு. செடியை ஒடித்தால் கோந்து வெளிப்படும் என்பதால் gummiferum என்றும் பெயர். பூக்களைப் போன்ற அழகும் வசீகரமும் வாடா தன்மையும் கொண்டிருப்பதால் பூங்கொத்துகளில் பெருமளவு இடம்பெறுகின்றன.

102. லெப்டோஸ்பெர்மம்

(Leptospermum)




ஆஸ்திரேலியாவின் ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகள் இதன் இலைகளின் எலுமிச்சை போன்ற மணத்தால் கவரப்பட்டு இதன் இலைகளைப் பயன்படுத்தி மூலிகைத்தேநீர் தயாரித்தக் காரணத்தால் இதற்கு தேநீர் மரம் (tea tree) என்ற பெயராகிவிட்டது. 

கிரேக்க மொழியில் leptos என்றால் மிருதுவான என்றும் sperma என்றால் விதை என்றும் பொருள். இவற்றில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை ஆஸ்திரேலியாவையும் சில நியூசிலாந்து மற்றும் தெற்காசிய நாடுகளையும் தாயகமாகக் கொண்டவை. எளிதில் வாடாத மற்றும் உதிராத தன்மையால் இப்பூக்கள் பண்டிகை, விழாக்களின்போது பூ அலங்காரங்களில் இடம்பெறுகின்றன. இச்செடிகள் பூக்களின் அழகுக்காகவும் தேன் உற்பத்திக்காவும் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இப்பூக்களிலிருந்து கிடைக்கும் தேனில் கணிசமான அளவு methylglyoxal எனப்படும் பாக்டீரியா கிருமிகளை எதிர்க்கும் வேதிப்பொருள் இருக்கிறதாம்.  

103. க்ரீவிலியா பூக்கள்

(Grevillea)





ஆஸ்திரேலியாவையும் அக்கம்பக்கமுள்ள நியூகினி, நியூ கலடோனா, இந்தோனேஷியா போன்ற தீவுகளையும் தாயகமாகக் கொண்டது க்ரீவிலியா இனம். இதழ்களற்ற மலர் இது. தோற்றம் காரணமாக Spider flower, tooth brush flower என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. தோட்டக்கலையில் பெருத்த ஈடுபாடு கொண்ட பிரித்தானிய ஆட்சியாளர் Charles Francis Greville அவர்களை சிறப்பிக்கும் விதமாக இதற்கு Grevillea எனப் பெயரிடப்பட்டதாம்.  ஏராளமான வண்ணங்களில் வருடமுழுவதும் பூத்துக்குலுங்கும் Grevillea இனத்தில் எளிதாக கலப்புவகையை உருவாக்க முடியும் என்பதால் அநேக வகைகள் உருவாகியுள்ளன.

க்ரீவிலியாவில் தரைத்தாவரம், புதர்ச்செடி, குத்துச்செடி, மரம் என பல வகை உண்டு. வசீகர வண்ணமும் வடிவமும் கொண்ட இவற்றால் தோட்டங்கள் அழகுபெறுவதோடு, ஏராளமான பூந்தேனைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் தேனீக்களும் தேனுண்ணும் பறவைகளும் தேடிவந்து தோட்டத்திற்கு மேலும் அழகுசேர்க்கும். இப்பூக்களோடு சிறிது தண்ணீர் சேர்த்து பழச்சாறு போல பூஞ்சாற்றை அருந்துவது பூர்வகுடி மக்களின் பாரம்பரியப் பழக்கங்களுள் ஒன்றாம். இதன் தித்திப்பு காரணமாக Bush lollies என்ற செல்லப்பெயரும் இதற்கு உண்டு. 

104. பிரமாண்ட ஈட்டி லில்லி

(Giant spear lily)



Doryanthes என்பதற்கு அபூர்வமான ஈட்டிச்செடி என்று அறிந்தோம். 1870-களில் குவீன்ஸ்லாந்தின் முதல்வராயிருந்த Sir Arthur Hunter Palmer நினைவாக இதற்கு palmeri என்று பெயரிடப்பட்டதாம். சுமார் 5 மீட்டர் உயரத்தண்டில் உச்சியில் செக்கச் செவேலென்று வரிசையாய் மலரத்தொடங்கும் பிரமாண்ட ஈட்டி லில்லிப்பூக்கள். பிரமாண்ட லில்லிப்பூவின் தண்டு போல இது உறுதியாக செங்குத்தாக நிற்காது வளைந்துவிடும். இதன் வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு வரும் பறவைகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. பழங்காலத்தில் இப்பூக்களின் இதழ்களையும் செடியின் வேர்க்கிழங்கையும் பூர்வகுடி மக்கள் உணவாகப் பயன்படுத்தினர்.

105. இலவாரா தீச்சுவாலை பூக்கள்

 (Illawarra flame tree)



ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைப் பூர்வீகமாய்க் கொண்ட இம்மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. குளிர்கால இறுதியில் இலைகளை முழுக்க உதிர்த்தபின் பூக்களைப் பூக்கத் துவங்கும்.  மரம் முழுவதும் செம்மலர்களால் போர்த்தி தொலைவிலிருந்து பார்க்கும்போது தீச்சுவாலை படர்ந்தாற்போன்ற தோற்றம் காட்டுவதால் இதற்கு flame tree என்ற பெயர் மிகப்பொருத்தமே. 


பூக்கள் அளவில் சிறியதாய் ஐந்து இதழ்களுடன் கோவில்மணி வடிவில் காட்சியளிக்கும். இதன் முற்றிய காய்க்குள்ளிருக்கும் சோளம் போன்ற விதைகளை பூர்வகுடி மக்கள் வறுத்துத் தின்பதுண்டாம். முற்றிய காயின்மேல் காணப்படும் சுணப்பு அரிப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும் என்பதால் அவற்றைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. 

106. துலிப் ஸாட்டின் பூக்கள்

 (Tulip satinwood)


ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளைச் சார்ந்தவை துலிப் ஸாட்டின்வுட் மரங்கள் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. சிவப்பு நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பூக்களின் அழகுக்காகவும், உறுதிவாய்ந்த மரக்கட்டைகளுக்காகவும் பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன. வறட்சி, குளிர் போன்ற கடுமையான சூழலையும் தாங்கும் இயல்பாலும், ஆக்கிரமிப்பற்ற வேர்களைக் கொண்டிருப்பதாலும் ஆஸ்திரேலியாவில் சாலையோர நிழல்தரும் மரங்களாகவும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. 

மாமர வகையைச் சார்ந்த இதுவும் ஒரு பால்மரமே. இதன் இலைகளும் பூக்களும் மாமரத்தை ஒத்திருந்தாலும் பழங்கள் பார்ப்பதற்கு இலந்தை போல செவேலென்று சிறியதாகவும் மினுமினுப்புடனும் காட்சியளிக்கின்றன. பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் தேனீக்களும் பறவைகளும் மரத்தை எப்போதும் வலம்வந்தபடியிருக்கும்.

107. ஆஸ்திரேலிய வயலட் 

Australian violet (Viola hederacea)

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இது ஒரு தரைபடர் தாவரம். தரையிலிருந்து 10 – 15 செ.மீ. உயரமே வளரக்கூடியது. Australian native violets, ivy-leaved violets, Australian tufted violets என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. இதுவும் பான்சியும் violaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர் viola hederacea என்பதாகும். லத்தீன் மொழியில் viola என்றால் ஊதா என்றும் Hedera என்றால் படர்கொடி என்றும் பொருள்.

வல்லாரைக் கீரை போன்ற வடிவத்தில் இலைகளும் இலைமட்டத்துக்கு மேலே நீண்டு வளர்ந்த மெல்லிய காம்பில் பூத்திருக்கும் வெள்ளை ஊதா நிறப் பூக்களும் தோட்டத்திற்கு அழகு சேர்ப்பவை. அதிக தண்ணீர் தேவைப்படாமலேயே நன்கு படர்ந்து படர்ந்து வளரக்கூடியது. பூக்கள் உண்ணத் தகுந்தவை என்பதால், சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.  

108. சர்ப்பக்கொடிப்பூ

(Snake vine)


மயக்கும் மஞ்சள் வண்ணத்தில் அழகிய பூக்களைக் கொண்டு, snake vine, Climbing guinea flower, golden guinea vine, gold guinea plant என்றெல்லாம் வசீகரப் பெயர்கள் கொண்ட படர்கொடியினம் இது. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட Hibbertia இனத்தில் சுமார் 150 வகை உள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த வியாபாரியும் அரசியல்வாதியும் தாவரவியல் ஆர்வலருமான George Hibbert அவர்களை சிறப்பிக்கும்வண்ணம் இப்பேரினத்துக்கு Hibbertia என்ற பெயரிடப்பட்டுள்ளது.

பூக்கள் என்றால் பெரும்பான்மையானவற்றுக்கு நறுமணம் உண்டு. சில பூக்கள் மணமற்று இருக்கும். ஆனால் இந்தக் கொடியின் பூக்களோ மூத்திர வீச்சம் போன்ற விரும்பத்தகாத வாடையை வெளியிடும் என்பது வியப்பான தகவல். ஆனாலும் பூக்களின் அழகுக்காக சுவர்களிலும் வேலிகளிலும், நன்கு வளர்ந்த மரங்களிலும் படரவிட்டுப் பேணப்படுகின்றன.

ஆரஞ்சு நிறத்தில் அழகாக சதைப்பற்றுடன் இருக்கும் இதன் பழங்கள் தின்னத்தூண்டும் என்றாலும் தின்பது பெரும் ஆபத்து. பழத்தை வாயில் போட்ட அடுத்த நிமிடமே உதடு நாக்கு எல்லாம் வெந்து புண்ணாகிவிடும்.

எது எப்படியிருந்தால் என்ன? 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வெளியான அஞ்சல் தலையில் இடம்பெற்ற சிறப்பு இப்பூக்களுக்கு இருக்கிறதே. 

109. மென்கம்பளிப் பூ

(Flannel flower)


சிட்னியை ஒட்டிய புதர்க்காடுகளில் அபரிமிதமாகக் காணப்படும் தாவரம் இது. பூக்கள் தொடுவதற்கு மென்கம்பளி போன்று மெத்தென்று இருப்பதால் இதற்கு flannel flower என்ற பெயரானது. பூ மட்டுமல்ல.. இலை, காம்பு உள்ளிட்ட எப்பாகமும் தொடுவதற்கு மென்கம்பளித்தன்மை கொண்டவை. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் apiaceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. கேரட் செடிகளும் இதே குடும்பத்தைச் சேர்ந்தவைதாம். Actinotus என்றால் கிரேக்க மொழியில் சக்கரத்தின் ஆரக்கால்கள் என்றும் helianthi என்றால் சூரியனைப் போன்றது என்றும் பொருளாம்.

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் இவை, பூங்கொத்துகளிலும் இடம்பெறுகின்றன. பார்ப்பதற்கு மற்றப் பூக்களைப் போல கவர்ச்சிகரமான நிறம் இப்பூக்களுக்குக் கிடையாது. இங்கு பூவென்று குறிப்பிடுவது பூவடி இலைகளே. அவை பெரும்பாலும் சாம்பல், சாம்பல் பச்சை, வெளிர்பச்சை நிறங்களில் காணப்படும். அதுவே அவற்றின் தனித்துவம் எனலாம்.  

110. பேப்பர் டெய்ஸி

Paper daisy 



காகிதம் போன்று மொடமொடப்பாகவும், எளிதில் வாடாத தன்மையாலும் டெய்ஸி பூக்கள் போன்ற தோற்றத்தாலும் இதற்கு பேப்பர் டெய்ஸி என்னும் பெயர் வந்தது. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட பேப்பர் டெய்ஸி பூக்கள், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் மலர்ந்து தோட்டங்களை அழகுபடுத்துகின்றன. பொன்மஞ்சள் வண்ண பேப்பர் டெய்ஸிக்கு everlasting golden daisy, straw flower என்ற செல்லப்பெயர்களும் உண்டு. 

Xerochrysum என்பதற்கு கிரேக்க மொழியில் உலர்ந்த தங்கம் என்றும் bracteatum என்பதற்கு பூவடி இலை என்றும் பொருளாம். வண்ண வண்ணமாய்த் தோற்றமளிப்பதெல்லாம் பூவடி இலைகளே அன்றி உண்மையான பூவிதழ்கள் அன்று. மலரின் மத்தியில் நூற்றுக்கணக்கில் குழுமியிருப்பவைதாம் உண்மையான பூக்கள். விதைகள் மூலமாகவும் கிளைகளை வெட்டி நடுவதன் மூலமாகவும் புதிய செடிகள் உருவாகும் என்பதால் கலப்பினங்கள் உருவாக்குவது எளிது. பூங்கொத்துகளையும் பூச்சாடிகளையும் அலங்கரிக்க பேப்பர் டெய்ஸிகள் வியாபார ரீதியாகப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன.


(தொடரும்)