நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'பூக்கள் அறிவோம்' தொடர்கிறது. இந்தப் பதிவில் ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட சில தாவரங்கள் இடம்பெறுகின்றன.
101. நியூசௌத் வேல்ஸ் கிறிஸ்துமஸ் பூக்கள்
(Ceratopetalum gummiferum)
ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில்தான் அதிகம் என்பதாலும், கிறிஸ்துமஸ் சமயத்தில் அதாவது டிசம்பர் மாதவாக்கில் செடிமுழுவதும் செக்கச்செவேலென்று காட்சிதருவதாலும் இதற்கு நியூசௌத் வேல்ஸ் கிறிஸ்துமஸ் புதர் (New south wales Christmas bush), அல்பேரியின் சிவப்பு (Albery’s Red) என்ற செல்லப்பெயர்கள் உண்டு. செடியை ஒடித்தால் கோந்து வெளிப்படும் என்பதால் gummiferum என்றும் பெயர். பூக்களைப் போன்ற அழகும் வசீகரமும் வாடா தன்மையும் கொண்டிருப்பதால் பூங்கொத்துகளில் பெருமளவு இடம்பெறுகின்றன.
102. லெப்டோஸ்பெர்மம்
(Leptospermum)
கிரேக்க மொழியில் leptos என்றால் மிருதுவான என்றும் sperma என்றால் விதை என்றும் பொருள். இவற்றில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை ஆஸ்திரேலியாவையும் சில நியூசிலாந்து மற்றும் தெற்காசிய நாடுகளையும் தாயகமாகக் கொண்டவை. எளிதில் வாடாத மற்றும் உதிராத தன்மையால் இப்பூக்கள் பண்டிகை, விழாக்களின்போது பூ அலங்காரங்களில் இடம்பெறுகின்றன. இச்செடிகள் பூக்களின் அழகுக்காகவும் தேன் உற்பத்திக்காவும் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இப்பூக்களிலிருந்து கிடைக்கும் தேனில் கணிசமான அளவு methylglyoxal எனப்படும் பாக்டீரியா கிருமிகளை எதிர்க்கும் வேதிப்பொருள் இருக்கிறதாம்.
103. க்ரீவிலியா பூக்கள்
(Grevillea)
க்ரீவிலியாவில் தரைத்தாவரம், புதர்ச்செடி, குத்துச்செடி, மரம் என பல வகை உண்டு. வசீகர வண்ணமும் வடிவமும் கொண்ட இவற்றால் தோட்டங்கள் அழகுபெறுவதோடு, ஏராளமான பூந்தேனைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் தேனீக்களும் தேனுண்ணும் பறவைகளும் தேடிவந்து தோட்டத்திற்கு மேலும் அழகுசேர்க்கும். இப்பூக்களோடு சிறிது தண்ணீர் சேர்த்து பழச்சாறு போல பூஞ்சாற்றை அருந்துவது பூர்வகுடி மக்களின் பாரம்பரியப் பழக்கங்களுள் ஒன்றாம். இதன் தித்திப்பு காரணமாக Bush lollies என்ற செல்லப்பெயரும் இதற்கு உண்டு.
104. பிரமாண்ட ஈட்டி லில்லி
(Giant spear lily)
105. இலவாரா தீச்சுவாலை பூக்கள்
(Illawarra flame tree)
பூக்கள் அளவில் சிறியதாய் ஐந்து இதழ்களுடன் கோவில்மணி வடிவில் காட்சியளிக்கும். இதன் முற்றிய காய்க்குள்ளிருக்கும் சோளம் போன்ற விதைகளை பூர்வகுடி மக்கள் வறுத்துத் தின்பதுண்டாம். முற்றிய காயின்மேல் காணப்படும் சுணப்பு அரிப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும் என்பதால் அவற்றைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை.
106. துலிப் ஸாட்டின் பூக்கள்
(Tulip satinwood)
ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளைச் சார்ந்தவை துலிப் ஸாட்டின்வுட் மரங்கள் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. சிவப்பு நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பூக்களின் அழகுக்காகவும், உறுதிவாய்ந்த மரக்கட்டைகளுக்காகவும் பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன. வறட்சி, குளிர் போன்ற கடுமையான சூழலையும் தாங்கும் இயல்பாலும், ஆக்கிரமிப்பற்ற வேர்களைக் கொண்டிருப்பதாலும் ஆஸ்திரேலியாவில் சாலையோர நிழல்தரும் மரங்களாகவும் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
மாமர வகையைச் சார்ந்த இதுவும் ஒரு பால்மரமே. இதன் இலைகளும் பூக்களும் மாமரத்தை ஒத்திருந்தாலும் பழங்கள் பார்ப்பதற்கு இலந்தை போல செவேலென்று சிறியதாகவும் மினுமினுப்புடனும் காட்சியளிக்கின்றன. பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் தேனீக்களும் பறவைகளும் மரத்தை எப்போதும் வலம்வந்தபடியிருக்கும்.
107. ஆஸ்திரேலிய வயலட்
Australian violet (Viola hederacea)
ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இது ஒரு தரைபடர் தாவரம். தரையிலிருந்து 10 – 15 செ.மீ. உயரமே வளரக்கூடியது. Australian native violets, ivy-leaved violets, Australian tufted violets என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. இதுவும் பான்சியும் violaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர் viola hederacea என்பதாகும். லத்தீன் மொழியில் viola என்றால் ஊதா என்றும் Hedera என்றால் படர்கொடி என்றும் பொருள்.
வல்லாரைக் கீரை போன்ற வடிவத்தில் இலைகளும் இலைமட்டத்துக்கு மேலே நீண்டு வளர்ந்த மெல்லிய காம்பில் பூத்திருக்கும் வெள்ளை ஊதா நிறப் பூக்களும் தோட்டத்திற்கு அழகு சேர்ப்பவை. அதிக தண்ணீர் தேவைப்படாமலேயே நன்கு படர்ந்து படர்ந்து வளரக்கூடியது. பூக்கள் உண்ணத் தகுந்தவை என்பதால், சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
108. சர்ப்பக்கொடிப்பூ
(Snake vine)
பூக்கள் என்றால் பெரும்பான்மையானவற்றுக்கு நறுமணம் உண்டு. சில பூக்கள் மணமற்று இருக்கும். ஆனால் இந்தக் கொடியின் பூக்களோ மூத்திர வீச்சம் போன்ற விரும்பத்தகாத வாடையை வெளியிடும் என்பது வியப்பான தகவல். ஆனாலும் பூக்களின் அழகுக்காக சுவர்களிலும் வேலிகளிலும், நன்கு வளர்ந்த மரங்களிலும் படரவிட்டுப் பேணப்படுகின்றன.
ஆரஞ்சு நிறத்தில் அழகாக சதைப்பற்றுடன் இருக்கும் இதன் பழங்கள் தின்னத்தூண்டும் என்றாலும் தின்பது பெரும் ஆபத்து. பழத்தை வாயில் போட்ட அடுத்த நிமிடமே உதடு நாக்கு எல்லாம் வெந்து புண்ணாகிவிடும்.
எது எப்படியிருந்தால் என்ன? 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வெளியான அஞ்சல் தலையில் இடம்பெற்ற சிறப்பு இப்பூக்களுக்கு இருக்கிறதே.
109. மென்கம்பளிப் பூ
(Flannel flower)
சிட்னியை ஒட்டிய புதர்க்காடுகளில் அபரிமிதமாகக் காணப்படும் தாவரம் இது. பூக்கள் தொடுவதற்கு மென்கம்பளி போன்று மெத்தென்று இருப்பதால் இதற்கு flannel flower என்ற பெயரானது. பூ மட்டுமல்ல.. இலை, காம்பு உள்ளிட்ட எப்பாகமும் தொடுவதற்கு மென்கம்பளித்தன்மை கொண்டவை. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் apiaceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. கேரட் செடிகளும் இதே குடும்பத்தைச் சேர்ந்தவைதாம். Actinotus என்றால் கிரேக்க மொழியில் சக்கரத்தின் ஆரக்கால்கள் என்றும் helianthi என்றால் சூரியனைப் போன்றது என்றும் பொருளாம்.
வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் இவை, பூங்கொத்துகளிலும் இடம்பெறுகின்றன. பார்ப்பதற்கு மற்றப் பூக்களைப் போல கவர்ச்சிகரமான நிறம் இப்பூக்களுக்குக் கிடையாது. இங்கு பூவென்று குறிப்பிடுவது பூவடி இலைகளே. அவை பெரும்பாலும் சாம்பல், சாம்பல் பச்சை, வெளிர்பச்சை நிறங்களில் காணப்படும். அதுவே அவற்றின் தனித்துவம் எனலாம்.
110. பேப்பர் டெய்ஸி
Paper daisy
காகிதம் போன்று மொடமொடப்பாகவும், எளிதில் வாடாத தன்மையாலும் டெய்ஸி பூக்கள் போன்ற தோற்றத்தாலும் இதற்கு பேப்பர் டெய்ஸி என்னும் பெயர் வந்தது. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட பேப்பர் டெய்ஸி பூக்கள், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் மலர்ந்து தோட்டங்களை அழகுபடுத்துகின்றன. பொன்மஞ்சள் வண்ண பேப்பர் டெய்ஸிக்கு everlasting golden daisy, straw flower என்ற செல்லப்பெயர்களும் உண்டு.
Xerochrysum என்பதற்கு கிரேக்க மொழியில் உலர்ந்த தங்கம் என்றும் bracteatum என்பதற்கு பூவடி இலை என்றும் பொருளாம். வண்ண வண்ணமாய்த் தோற்றமளிப்பதெல்லாம் பூவடி இலைகளே அன்றி உண்மையான பூவிதழ்கள் அன்று. மலரின் மத்தியில் நூற்றுக்கணக்கில் குழுமியிருப்பவைதாம் உண்மையான பூக்கள். விதைகள் மூலமாகவும் கிளைகளை வெட்டி நடுவதன் மூலமாகவும் புதிய செடிகள் உருவாகும் என்பதால் கலப்பினங்கள் உருவாக்குவது எளிது. பூங்கொத்துகளையும் பூச்சாடிகளையும் அலங்கரிக்க பேப்பர் டெய்ஸிகள் வியாபார ரீதியாகப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன.
(தொடரும்)
பூக்கள் எல்லாம் அழகு, பூக்களின் வரலாறு அருமை.
ReplyDeleteஇரண்டு பாகமாக கொடுத்து இருக்கலாம் கீதமஞ்சரி.
சர்ப்பக்கொடி பூ அதன் வாசம் நன்றாக இல்லையென்றாலும் பூவின் அழகு அதை வளர்க்க வைக்கிறது என்பதை படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.
மென் கம்பிளி பூவும் அருமை.
வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி கோமதி மேம். பதிவு மிகவும் நீளமாகிவிட்டதோ? இனி வருபவற்றை இரண்டு பாகமாகவே தருகிறேன். மிக்க நன்றி மேம்.
Deleteபூக்கள் - பார்க்கப் பார்க்க பரவசம் தான். அலுப்பில்லாமல் ரசிக்க முடியும் விஷயங்களில் பூக்களும் ஒன்று. பார்த்து ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteஅரிய வகை பூக்கள் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்களும் பதிவிடத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். மகிழ்ச்சி.
Delete