நான் சமீபத்தில்
வாசித்த, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்
என்ற நூலை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இந்நூலின் முதல் பதிப்பு 1969-இலும்
இரண்டாம் பதிப்பு 2014 -இலும் வெளியாகியுள்ளது. நூலாசிரியர் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள். அவர் எழுதியுள்ள பிற நூல்கள் காலந்தோறும் நாட்டியக்கலை (1979), இந்திய நாட்டியத்தின்
திராவிட மரபு (1985), நாட்டியக்கடலில் புதிய அலைகள் (1988) ஆகியவை.
திருமதி கார்த்திகா
கணேசர் அவர்கள் சிறுமியாயிருந்த காலத்திலிருந்தே நாட்டியத்தின்பால் ஈடுபாடு கொண்டு
முதலில் இயல், இசை வாருதி ஸ்ரீ வீரமணி ஐயர் அவர்களிடமும் பின்னர் குருகுல வாசம் முறையில்
பரதநாட்டியக் கலையில் பெருவிருட்சம் போன்று மிளிர்ந்த பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை
அவர்களிடம் அவருடைய வீட்டிலேயே தங்கியும் நாட்டியம் பயின்றுள்ளார்.
வெகுஜன மக்களுக்கு
பழமை மரபின் மேலிருக்கும் ஈடுபாடு குறையக் குறைய… புதுமையின் நவீனத்துவம் மீது மோகம்
அதிகரிக்க அதிகரிக்க… மரபு சார்ந்த எந்தக் கலையும் நாளாவட்டத்தில் அழிந்தேபோகும் சாத்தியம்
உண்டு. உயரிய கலைகள் அங்ஙனம் வீணே அழிந்துவிடாமல் வழிவழியாய்த் தொடரவேண்டுமானால் காலத்துக்கேற்பத்
தன்னை தகவமைத்துக்கொள்ளுதல் அவசியம் என்பதும், மக்களின் நடப்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும்
சமகாலப் பிரச்சனைகளைப் பேசுவதாகவும் அக்கலைகள் மாறவேண்டும் என்பதும் நூலாசிரியரின்
கருத்து. தக்கன பிழைக்கும் என்பது ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல… ஜீவனுள்ள கலைகளுக்கும்
பொருந்துமல்லவா?.
ஆடற்கலையைப் பொறுத்தவரையில்
அது மக்கள் மத்தியில் வாழவேண்டுமெனில் அதன் கருப்பொருளானது… பொதுமக்களின் சமகால வாழ்க்கையையும்
இன்ப துன்பங்களையும் மையமாய்க்கொண்டு அமைவதோடு அடித்தட்டு மக்களையும் சென்றடையும் வண்ணம்
எளிமையாக இருத்தல் வேண்டும். கலைஞர்கள், இசை வல்லுநர்கள், ஆடற்கலைஞர்கள் ஒன்றுபட்டால்
கிராமியக் கூத்துக்காட்டும் பாதையில் நாம் சென்று மக்களின் கவன ஈர்ப்பைப் பெற்றிடமுடியும்
என்பது கார்த்திகா கணேசர் அவர்களின் உறுதியான நம்பிக்கை.
இயல் இசை நாடகம்
என்னும் முத்தமிழிலக்கியத்தில் நாடகத்தமிழ் என்பது ஆடற்கலையையே குறிக்கும். இந்த ஆடற்கலை
பற்றி பண்டைக்காலத்தில் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதையும், அவை பரதம், அகத்தியம்,
முறுவல், சயந்தம், குணநூல், இசை நுணுக்கம், இந்திர காவியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம்,
மதிவாணர் நாடகத்தமிழ் போன்ற நூல்கள் எனவும் இந்நூல் வாயிலாக அறியமுடிகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள
நாட்டிய சாஸ்திர நூல்கள் பலவும் அழிந்துபோய்விட்டன என்பதை அறியும்போது… தமிழின் அரிய
பொக்கிஷங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோமே என்று ஆற்றாமை எழுவது உண்மை.
இந்திரவிழாவில்
மாதவி ஆடியதாக பதினோரு வகையான நாட்டியங்களை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அவையெல்லாம் என்னென்னவென்று
தெரியுமா? இதோ கார்த்திகா கணேசர் பட்டியலிடுகிறார்..
- பரமசிவன் திரிபுரத்தை
எரித்தபின் சுடுகாட்டில் பார்வதி அருகில் நிற்க, கைகொட்டிக்கொண்டு ஆடிய ஆனந்த நடனமான
கொடுகொட்டி.
- பிரம்மாவின் முன்
வெண்ணீறணிந்து பரமசிவன் ஆடிய இன்னொருவகை ஆடலான பாண்டுரங்கம்.
- கம்சனைக் கொல்லும்
பொருட்டு கம்சன் அனுப்பிய யானையின் தந்தங்களை ஒடிப்பதற்காக அதன் எதிரில் நின்று கண்ணன்
ஆடிய நடனமான அல்லிக்கூத்து
- வாணாசுரனுடன் மல்யுத்தம்
செய்து அவனை வென்ற களிப்பில் கண்ணன் ஆடிய நடனமான மல்லாடல்
- கடல் மத்தியில்
நின்ற சூரனுடன் பொருதுமுன் கடலையே ஆடலரங்காகக் கொண்டு முருகனால் ஆடப்பட்டதான துடிக்கூத்து
- போரில் தோல்வியுற்ற
அசுரர்களின் முன்பு, குடையைத் திரையாகக் கொண்டு முருகன் ஆடியதான குடைக்கூத்து
- வாணாசுரன் அநிருத்தனைச்
சிறை கொண்டபோது திருமால் வீதிகளிலே குடத்தை வைத்துக்கொண்டு ஆடிய குடக்கூத்து
- மன்மதன் பெண்ணுருவில்
நின்றாடிய பேடிக்கூத்து
- அசுரர்களின் கொடுமைகளைக்
கண்டு சகியாத துர்க்கை சினங்கொண்டு மரக்கால் மீது நின்றாடிய மரக்கால் கூத்து
- இந்திராணி ஆடிய
கடையம் என்னும் ஒருவகைக் கூத்து
- அசுரரின் வெம்மையான
போர்க்கோலம் நீங்க செந்நிற உடையில் திருமகள் வடிவில் நின்றாடிய பாவைக்கூத்து
இவைதாம் அந்த பதினொரு
வகை நாட்டியங்கள்.
சிலப்பதிகாரத்திற்கு
உரையெழுதிய நச்சினார்க்கினியார் ‘ஆடல்’ என்பது தேசி, வடுகு, சிங்களம் என்று மூவகைப்படும்
என்று குறிப்பிட்டிருப்பதை ஆதாரம் காட்டி சிங்களத்திலும் பரதம் சார்ந்த ஆடல்முறையொன்று
அந்நாளில் சிறப்புற்று இருந்திருப்பதை நூலாசிரியர் குறிப்பிட்டு சிலாகிக்கிறார். அத்துடன்
உலகப் புகழ் பெற்ற கண்டி நடனமும் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்படும் தாண்டவ வகைகளுடன்
நெருங்கிய தொடர்புடையதே என்கிறார். பரதம், பண்டைக்கூத்து இவற்றோடு வடமோடி, தென்மோடி
போன்ற ஈழத்தின் இருபெரும் கூத்துகளையும் குறிப்பிடுவதோடு ஈழத்தில் பரதத்தின் நிலையில்
ஏற்பட்ட மாற்றங்களையும் வரலாற்றின் அடிப்படையில் விவரிக்கிறார்.
பரதத்தைப் பொறுத்தவரை
அது தமிழ்நாட்டில் ஆடப்பட்டு வந்த தொன்மையையும்… சைவ சமண சித்தாந்தங்களின் நுழைவால் சமூகத்தில்
மக்கள் மனங்களில் நிகழ்ந்த மாற்றங்களையும், அம்மாற்றங்களால் பரதம் பொதுமக்களிடமிருந்து
ஒதுக்கப்பட்டு பொதுமகளிரை அடைந்த தன்மையையும், தேவதாசிகளின் அயரா அர்ப்பணிப்பால் பரதத்தின்
தொடர்ச்சி அறாமல் தலைமுறைகளைத் தாண்டி எவ்வாறு மறுபடியும் தலையெடுத்துள்ளது என்பதையும்
தெள்ளந்தெளிவாகப் பகிர்ந்துள்ளார்.
பரத சாஸ்திரத்தில்
காணப்படும் 64 ஆம் கரணமாகிய லதா திலகம் என்பது
என்ன தெரியுமா? ஒரு காலை உயர்த்தி, கால்விரலால் நெற்றியில் திலகம் இடுவதாம். எவ்வளவு
கடினமான ஒரு கரணம். நடராஜனின் ஊர்த்துவத் தாண்டவ நிலையை இக்கரணத்தோடு ஒப்பிடுகிறார்
நூலாசிரியர்.
சோழர் காலத்தில்
கட்டப்பட்ட சிதம்பரம் கோவிலின் கோபுர வாயில்களில் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள
நூற்றெட்டு வகை கரண நிலைகளையும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் விமானத்தின் கீழ் 81
கரண நிலைகளையும் கொண்ட சிற்பங்களைக் காணமுடியும் என்றும் குறிப்பிடுகிறார்.
பண்டைக்காலத்தில்
இருந்த தேவதாசி முறையைப் பற்றி விரிவாக விவரிக்குமிடத்து… தேவதாசிகள் கற்றுவைத்திருக்க
வேண்டிய கலைகள், அவர்களுடைய கடமைகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், சமூகத்தில்
அவர்களுக்கு இருந்த மரியாதை என்று பலவற்றையும் பேசுகிறது இந்நூல். ஆடற்கலையின் முக்கிய
வடிவமான பரதத்த்தை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை அழியாமல் வளர்த்து வந்தவர்கள் தேவதாசிகளே
என்கிறார் கார்த்திகா கணேசர்.
தாசிகள் பற்றி
அவர் குறிப்பிடுபவற்றுள்ளிருந்து சில வரிகள்…
\\ தாசி என்பவள் என்றுமே விதவையாவதில்லை.
இவளின் தாலி மிகவும் புனிதமானது. அதிர்ஷ்டமுடையதெனவும் கொள்வார்கள். இதனால் ஏனைய குலப்பெண்களின்
திருமணத்துக்கு வேண்டிய தாலிச்சரட்டை தாசி ஒருத்தியிடம் கொடுப்பார்கள். அவளே வேண்டிய
தாலிக்கயிற்றைத் தயாரித்து தனது கழுத்து மணியிலிருந்து ஒன்றை இதில் சேர்த்து தாலி கோர்த்துக்
கொடுப்பாள். இவ்வாறு பெற்ற தாலி மிகவும் அதிர்ஷ்டம் உடையதாகக் கொள்ளப்படும். திருமண
ஊர்வலத்தின்போது தாசியே முன்னுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாள்.
தாசிப்பெண் இறந்தவுடன், கோவில் விக்கிரகத்தினின்றும்
அகற்றிய தூய சீலையினால் அவளின் உடல் போர்க்கப்படும். அவள் பணிபுரியும் கோவிலில் இருந்து
மலர்கள் வரவழைக்கப்பட்டு உடலுக்கு சாத்தப்படும். பிரேதம் அகற்றும் வரை அன்று கோவிலில்
பூசை நடைபெறாது. கோவில் தெய்வமே அவளின் நாயகனாக கொள்ளப்படுவதால் அன்று கோவிலுக்கும்
தெய்வத்திற்கும் துக்கமாகக் கொள்ளப்படும். மேலும் கோவிலில் இருந்தே கொள்ளி கொண்டுவரப்பட்டு
அவளுக்குத் தீ மூட்டப்படும்.\\
பரதத்தின் கூறுகளான
கரணங்கள், அடவுகள், அபிநயங்கள், முத்திரைகள் போன்றவற்றை விரிவாகவும் பாமரர்க்கும் எளிதில்
புரியும்படியும் எழுதப்பட்டிருப்பது நூலின் சிறப்பு. பரதப்பாடல்களின் சிறப்பு பற்றிச்
சொல்லும்போது “பரதத்தில் நேரடியாக ஈடுபாடற்றவர்களும் பாடல்களின் இலக்கியச்சுவை கருதி
இரசிக்க விரும்புவர்” என்று குறிப்பிடும் கார்த்திகா அவர்கள் உதாரணப் பாடல்களையும்
தந்து ரசிக்கவைக்கிறார்.
சதுரக்கை இரண்டு கையில் தருமிகு நுனியுங்
கூட்டி
அதனில் தர்ச் சனிகள் இரண்டும் அங்குட்டம்
இரண்டும் நீட்டில்
இது கட்டுவக்கை யென்றே இயம்பினர், வினியகங்கேள்,
மெதுவுறு கட்டிலுக்கே விளம்பினர் பரதத்தோரே.
இரண்டு சதுரக் கைகளின் நுனிகளைக் கூட்டி,
அவற்றில் சுட்டு விரல்களையும் கட்டை விரல்களையும் நீட்டல் இம்முத்திரை எனவும் இது கட்டில்
அல்லது விசிப்பலகையைக் குறிக்கும் எனவும் பாடல் கூறுகிறது.
இவற்றைப்போல ஏராளமான
சுவாரசியமான நாட்டியத் தகவல்களை அறியத்தருகிறது இந்நூல். நாட்டியம் பற்றிய அடிப்படை
அறிவு இல்லாதவர்களும் கூட இந்நூலை ரசித்து வாசிக்கக்கூடிய எளிமையான எழுத்து. தமிழர்
வளர்த்த ஆடற்கலைகளைப் பற்றி மட்டுமல்லாது நாட்டியக்கலை தொடர்பான சிற்பக்கலை இசை போன்ற
பல்வேறுபட்ட களங்களுடனுமான நாட்டியக்கலையின் பிணைப்பையும் சிறப்பம்சங்களையும் இந்நூல் வாயிலாய் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஆடற்கலை மக்கள்
மத்தியில் பரவத்தக்க வடிவங்களில் சமுதாயப் பணியை நோக்காகக் கொண்டு செல்லும்போது விமர்சனங்களும்
மக்களிடையே தோன்றும். இதனால் ஆடற்கலை மேலும் மேலும் பரிணமித்துச் சிறப்புற்று விளங்கும்
என்று நூலை முடிக்கும் கார்த்திகா கணேசர் இலங்கையிலும் சென்னையிலும் ஆஸ்திரேலியாவிலும்
பல நாட்டியப் பள்ளிகளை நிறுவி பல நாட்டிய நாடகங்களைத் தயாரித்தவர், இப்போதும் தயாரித்துக்கொண்டிருப்பவர்,
பல நர்த்தகிகளை உருவாக்கியவர்… இப்போதும் உருவாக்கிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல் பெயர் – தமிழர்
வளர்த்த ஆடற்கலைகள்
ஆசிரியர் – நாட்டிய
கலாநிதி கார்த்திகா கணேசர்
பதிப்பகம் – ஞானம்
பதிப்பகம், இலங்கை
பக்கங்கள் -
122
விலை – இலங்கை ரூ.400/-