2 January 2016

பறவைகள் பலவிதம் - 5


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து. என்னுடைய பறவைத்தொகுப்பு புகைப்பட ஆல்பத்தில் 
புதிதாய்ச் சேர்ந்துள்ள அழகுப்பறவைகள் சிலவற்றோடு 
அவற்றைக் குறித்த சிறு தகவல்களும்  
உங்கள் பார்வைக்கு...அத்திப்பழப்பறவை ஆண் (austrasian figbird male)


அத்திப்பழப்பறவை பெண் (australasian figbird female)


அத்திப்பழப்பறவைக்குஞ்சு (australasian figbird juvenile)

அத்திப்பழங்களைப் பிரதான உணவாகக் கொண்டுவாழும் இப்பறவைக்கு அத்திப்பழப்பறவை என்றே பெயராகிவிட்டது. ஆலிவ் பச்சை மற்றும் அடர்சாம்பல் வண்ண உடலையும்,  கண்களைச் சுற்றியுள்ள பளீர் சிவப்புநிறத்தையும் கொண்டு ஆண்பறவைகளையும், உடலும் கண்களைச் சுற்றியப் பகுதிகளும் மங்கிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் பெண்பறவைகளையும் வேறுபடுத்திக் கண்டறிதல் எளிது. இவற்றின் குரல் மிக இனிமையானது. 

வாலாட்டி - முதிராபருவம்  (willie wagtail juvenile)

Willie wagtail எனப்படும் வாலாட்டிப் பறவையினம் ஆஸ்திரேலியாவையும் சுற்றியுள்ள தீவுகளிலும் காணப்படுவது. பெரிய பறவைகளான கழுகு, காக்கை போன்றவற்றையும் தன் எல்லையிலிருந்து துரத்தியடிக்கும் வல்லமை கொண்டது. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் மத்தியில் இப்பறவை துர்சகுனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 


செந்தவிட்டுவண்ணக் கிளுவை - ஆண் (chestnut teal male)


செந்தவிட்டுவண்ணக் கிளுவை - பெண் (chestnut teal female)

இப்பறவையினத்தில் ஆண் பறவை chestnut எனப்படும் செந்தவிட்டுவண்ணக் கொட்டைகளின் நிறத்தில் இருப்பதால் இப்பறவையினத்துக்கு இது பொதுவான பெயர். ஆனால் பெண்பறவை சாம்பல் வண்ணத்தில் இருக்கும். அதனால் சில வேளைகளில் சாம்பல்வண்ணக் கிளுவையினம் என்று தவறாகக் கணிக்கப்படும். 


வெள்ளைக்கண் வாத்து ஆண் (White eyed or hardhead duck male)

முக்குளிக்கும் வாத்தினத்தைச் சார்ந்தது இந்த வெள்ளைக்கண் வாத்து அல்லது கடுந்தலை வாத்து. பார்ப்பதற்கு ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதிரி சாக்லேட் பழுப்பு நிறத்தில் காணப்பட்டாலும் கண்களின் நிறத்தைக் கொண்டு வேறுபாடு கண்டறியலாம். ஆண்பறவையின் கண்கள் பளீர் வெள்ளை நிறத்திலும் பெண் பறவையின் கண்கள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

 பசிபிக் கருப்பு வாத்து - ஆண் ( pacific black duck male)

கண்களுக்கு மைதீட்டியது போன்ற கருவரிகளைக்கொண்டு இவற்றை இனம் கண்டறியலாம். இறக்கையின் கீழே பளீர் பச்சை நிற இறகுகள் சிலவற்றைக் காணலாம். இவ்வினத்தில் ஆண்பெண் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் வேறுபாடு காண்பது அரிது. இந்த வாத்துகள் ஆஸ்திரேலியாவிலும், அக்கம்பக்கத் தீவுகளிலும், நியூசிலாந்திலும் காணப்படுகின்றன.


நீலத்தாழைக்கோழி (purple swamphen)

ஆஸ்திரேலியாவிலும் அதைச்சுற்றியுள்ள தீவுகளிலும் காணப்படும் நீலத்தாழைக்கோழியினம் இது. நீர்த்தாவரங்களோடு சிறு உயிரிகளான தவளை, நத்தை, வாத்துக்குஞ்சுகள் போன்றவற்றையும் தின்னும். மற்றப்பறவைகளின் முட்டைகளைத் திருடித் தின்பதிலும் கில்லாடி. 


ஆஸ்திரேலியப் புதர்க்கோழி (Australian brush turkey)

மற்றப் பறவைகளைப் போல கூடு கட்டி அதில் முட்டையிடும் பறவையினமல்ல இது. மண்ணையும் குப்பைக்கூளங்களையும் கொண்டு ஒரு பெரிய மண்மேட்டைக் கட்டுகிறது. நான்கு மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்ட பெரிய மேடு. குப்பைகளையும் இலைதழைகளையும் மண்ணையும் குவித்து உருவாக்கப்படும் இம்மண்மேட்டைக் கட்டிக்கொண்டிருக்கும்போது வெகு மூர்க்கமாய் செயல்படும். 


சாம்பல்வண்ண கசாப்புக்காரப்பறவை (grey butcherbird juvenile)

இப்பறவைகளுக்கு ஏன் இப்படியொரு பெயர்? கசாப்புக்காரன் தான் வெட்டிய இறைச்சியைக் கொக்கியில் தொங்கவிட்டிருப்பதைப் போன்று தாங்கள் வேட்டையாடிய இரையை பெருமுட்களிலோ, மரக்கிளைகளிலோ.  மர இடுக்குகளிலோ தொங்கவிடுவதால் இப்பறவைகளுக்கு கசாப்புக்கார பறவைகள் (Butcher birds) என்று பெயர். இரையைத் தின்ன ஏதுவாகவோ, நிறைய இரையைச் சேமித்துவைக்கவோ, அல்லது தன் இணையைக் கவரவோ இதுபோன்று செய்கின்றன.

கரண்டிவாயன் (அ) துடுப்புவாயன் (Royal spoonbill)

Royal spoonbill எனப்படும் இந்த வகை கரண்டிவாயன்கள் ஆஸ்திரேலியாவிலும் சுற்றியுள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன. நீரில் நின்றபடி, அதிர்வு உணர்விகள் (vibration detectors) கொண்ட தன்னுடைய தட்டையான அலகால் நீருக்குள் துழாவி, சிற்றுயிர்களைக் கண்டறிந்து பிடித்துத் தின்கின்றன. அதனால் இரவிலும் அவற்றால் நீருக்குள் இரைதேடுவது எளிதாகிறது.  


சிரிக்கும் கூக்கபரா (Laughing kookaburra)

இப்பறவை மனிதர்கள் சிரிப்பது போல் ஒலியெழுப்பினாலும் உண்மையில் அது சிரிப்பல்ல. மற்ற பறவைகளுக்கு தன் எல்லைப்பகுதியை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலியே அது. கூக்கபரா மீன்குத்தியினத்தைச் சார்ந்த பறவை. உலகிலுள்ள 90 மீன்குத்தியினங்களுள் மிகப்பெரிய பறவை ஆப்பிரிக்காவின் ராட்சத மீன்குத்திப்பறவைதான் என்றாலும் உடல் எடையில் மற்ற எல்லாவற்றையும்விடப் பெரியது ஆஸ்திரேலியாவின் சிரிக்கும் கூக்கபராதான்.

பறவைகளை ரசித்தீர்களா? மற்றுமொரு பறவைத்தொகுப்போடு மீண்டும் சந்திப்போம். 

30 comments:

 1. ஆஸ்திரேலிய பறவைகள் பற்றிய தொகுப்பு.. சகோதரி அவர்களுக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 2. சுவாரஸ்யமான தகவல்கள். அழகிய படங்கள்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 3. அனைத்தும் மிக அழகு!!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 4. தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இனியா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 5. பறவைகளின் படம் அழகு.
  செய்திகள் அருமை.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி மேடம். தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 6. பல்வேறு பறவையினங்களை உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி வெங்கட். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 7. அறிந்திராத பறவையினங்களின் படங்கள்! அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி சுரேஷ். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 8. ஹல்லோ ஆர்நிதாலஜிஸ்ட் பறவைகள் பற்றிய பதிவு படித்தேன் இத்தனை வகைகளும் நினைவில் நிற்குமா என்பதே சந்தேகம் எங்கள் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அறிந்துகொள்ளும் அத்தனையையும் நினைவில் நிறுத்திக்கொள்ள இயலாதுதான். இப்படியான பறவைகளும் உலகில் உள்ளனவே என்று அறிந்து ரசிப்பதே இன்பம் அல்லவா? தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! சகோதரி!

  மிக மிக அழகான, தெளிவான படங்கள். தகவல்களும் சுவாரஸ்யமானவையே! அறியாதவையும். ஏற்கனவெ ஆஸ்திரேலிய ப்ரஷ் டர்க்கி விளக்கமாகத் தந்திருந்தீர்கள். உங்கள் பதிவுகள் மிகவும் அறிவை வளர்க்கச் செய்கின்றது. பறவைகள் பற்றிப் புத்தகம் கொண்டுவரலாமே சகோ.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி சகோ. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். பறவைகள் மட்டுமல்ல.. ஆஸியின் அதிசயங்கள் அனைத்தையும் தொகுப்பாக்கும் எண்ணம் உள்ளது. உங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி.

   Delete
 10. தகவல்களுக்கு நன்றி. படங்கள் அருமை.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலக்ஷ்மி. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 11. ஒவ்வொரு பறவையுமே அழகு
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 12. அழகழகான பறவைகள்! தொகுத்தளித்திருக்கும் விதம் அருமை! பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா.

   Delete
 13. அழகான பறவைகளோடு அவை குறித்த விபரங்களுமாக உங்கள் தேடல் அருமை அக்கா! இன்னும் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றிம்மா நிஷா.

   Delete
 14. உங்க அளவு இல்லைனாலும் இப்போ ஓரளவு நானும் கொஞ்சம் போட்டோஸ் வைத்திருக்கிறேன் அக்கா. அதை ஒரு பதிவாய் தட்டுகிறேன். இப்போ இந்த தொடர் பதிவில் இணைவீர்களா? http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html

  ReplyDelete
  Replies
  1. போட்டோஸ் போடுங்க மைதிலி. ரசிக்கக் காத்திருக்கிறேன். உங்கள் அன்புக்கிணங்க தொடர்பதிவை வெளியிட்டுள்ளேன். அழைப்புக்கு நன்றிம்மா மைதிலி.

   Delete
 15. பறவைகள் பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளது.இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. பறவைகள் பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளது.இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.