அனைவருக்கும்
வணக்கம். இந்த வருடத்தின் முதல் பதிவை என்னுடைய இரு புதிய நூல்களின் அறிமுகத்தோடு வெளியிடுவதில்
மகிழ்கிறேன். கொக்கரக்கோ மற்றும் மழை நிலாக் கதைகள். முதலாவது சிறார் இலக்கியம், இரண்டாவது ஜப்பானிய செவ்விலக்கியம்.
‘கொக்கரக்கோ’ சிறுவர் பாடல் தொகுப்பு சிறார் இலக்கியத்தில் என் முதல் முயற்சி. 2021-ஆம் ஆண்டு மே மாதம் ஞா.கலையரசி (https://unjal.blogspot.com/) அக்காவால் தொடங்கப்பட்ட
சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலகம்’ (https://chuttiulagam.com/) இதற்கானக் களத்தை உருவாக்கிக்கொடுத்தது. சுட்டி உலகத்தை முன்னிட்டு
நான் எழுதிய சிறார் பாடல்கள் சுட்டி உலகம் வாயிலாகவே தொகுப்பாக வெளியிடப்படுவது, அதுவும்
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது
வெளியிடப்படுவது எனக்குப் பெருமை.
சிறுவர் பாடல்கள் எழுதுவதற்கானக் களத்தை
அமைத்துக் கொடுத்தது மட்டுமின்றி இந்நூல் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக விளங்கும்
கலையரசி அக்காவுக்கு இந்நேரத்தில் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
அவருடைய அணிந்துரையிலிருந்து சில வரிகள்...
\\இக்காலத் தலைமுறையை ஈர்க்கும்
விதமாகப் புதிய பாடுபொருள்களுடன்,
தமிழில் பாடல் நூல்கள் பல படைக்க வேண்டியது, மிகவும்
அவசியம். இந்நூலின் முதல் பாடலே “தமிழில் பாட்டுப் பாடுவோம்” என்று அமைந்திருப்பது
மிகவும் சிறப்பு!
“அன்னைத் தமிழில் பாடுவோம்
அனுதினமும் பாடுவோம்
தீந்தமிழில் பாடுவோம்
தித்திக்கத் தித்திக்கப்
பாடுவோம்”
“குழந்தைப்பாடல் படைப்போர்க்குக்
குழந்தை உள்ளம் இருப்பது மிக அவசியம்; மனதளவில் குழந்தைகளாகவே மாறி, அவர்களைப் போலவே
சிந்தித்து எழுத வேண்டும்” என்பதற்கேற்ப, இந்நூலின் ஆசிரியரும் குழந்தை உள்ளத்துடனும், அவர்கள்
பாடுவதற்கேற்றபடி எளிமையான சொற்களுடனும், இனிமையான சந்தத்துடனும் பல பாடல்களை
எழுதியுள்ளார்.
“சன்னச் சிறகை விரிக்குது
விரித்து விரித்து மூடுது
வண்ணம் காட்டி மயக்குது
வா வா என்று அழைக்குது!”
என்ற வண்ணத்துப்பூச்சி பாடல் வரிகள், இதற்கோர் எடுத்துக்காட்டு.\\
‘கொக்கரக்கோ’ சிறுவர் பாடல்கள் தொகுப்பை நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைத்து தரமாகவும் மிகச்சிறப்பாகவும் அச்சாக்கியுள்ள கன்னிக்கோவில் இராஜா (http://kannikoilraja.blogspot.com/) அவர்களுக்கும் லாலிபாப் சிறுவர் உலகத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
மழை நிலாக் கதைகள்
இந்நூல் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருந்த நண்பர் விக்னேஷ்வரனுக்கு என் முதல் நன்றி. கனலியின் ஜப்பானிய கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழுக்காக யுடா அகினாரியின் Tales of Rain and the Moon நூலிலிருந்து ‘The Carp of my dreams’ என்ற கதையை மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார். அதை ‘என் கனவுகளின் கெண்டைமீன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இச்சிறப்பிதழில் தனக்குப் பிடித்தக் கதைகள் எனக் குறிப்பிட்ட மூன்றில் 'என் கனவுகளின் கெண்டை மீன்' முதலாவதாக இருந்தது. அந்த அங்கீகாரமே பெரும் மகிழ்வளித்தது.
அந்நூலிலுள்ள மீதி 8 கதைகளையும் மொழிபெயர்க்கும் வாய்ப்பும் கனலியால் வழங்கப்பட்டது. அதுவரை ஜப்பானின் தொன்மை, வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், ஆன்மீகம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் குறித்த பரிச்சயம் மிகக் குறைவான அளவே எனக்கு இருந்தது. பண்டைய ஜப்பானின் வரலாற்றையும் வாழ்வியலையும் அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்ட கதைகளின் நுணுக்கமும் நுட்பமும் என் பரிச்சயத்துக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தன. எனவே அவை குறித்து மிக ஆழமான தேடலும் அடிப்படை அறிவும் பரந்துபட்ட புரிதலும் தெளிவாக விளக்கங்களும் தேவைப்பட்டன. பண்டைய ஜப்பானிய வரலாற்றிலக்கியம் மட்டுமல்லாது அதில் தனது தாக்கத்தைச் செலுத்தியிருந்த சீனாவின் வரலாற்றிலக்கியத்தின் பரிச்சயமும் அவசியமாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் அவற்றைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். ஒருவழியாக, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை திருப்தியுற முடித்தபிறகு, என் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றதாகவே எண்ணி மகிழ்கிறேன்.
யுடா அகினாரி பற்றி அறியாதவர்களுக்காக
அவரைப் பற்றிய சிறு அறிமுகம்:
யுடா அகினாரி சிறந்த இலக்கியவாதியும் கவிஞருமாவார். இவரது பெரும்பாலான புனைகதைகள் அமானுஷ்யம் சார்ந்தவை. யுடா அகினாரியின் இயற்பெயர் யுடா சென்ஜிரோ. 1770-களின் துவக்கத்தில்தான் அகினாரி என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார். இவர் நான்கு வயதுக் குழந்தையாயிருக்கும்போது செல்வரான ஒரு வணிகரால் தத்தெடுக்கப்பட்டார். கன்ஃபூஷிய சித்தாந்தங்களைப் போதிக்கும் தலைசிறந்த பள்ளிகளுள் ஒன்றில் சிறப்பான முறையில் கல்வியறிவு பெற்றார். குழந்தையாயிருக்கையில் பெரியம்மையால் கடுமையான பாதிப்புக்குள்ளானார். அதன் காரணமாக அவருடைய விரல்கள் பலவும் வளைந்து கோணலாகிப்போய்விட்டன. அவரது பெற்றோர் காஷிமா இனாரி ஆலயத்தின் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தனர். அந்தக் கடவுளின் கிருபையாலேயே தான் உயிர்பிழைத்ததாக யுடா அகினாரி நம்பினார். அன்றிலிருந்து அவர் அமானுஷ்யத்தின்பால் பெருத்த நம்பிக்கை உடையவரானார். அதனாலேயே பின்னாளில் அவரது படைப்புகள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்டக் கூறுகளை உடையவையாகவும் அமானுஷ்யம் சார்ந்தும் அமைந்தன. அவர் புனைகதைகளோடு தத்துவம் மற்றும் ஜப்பானிய செவ்விலக்கியம் சார்ந்து Kokugaku எனப்படும் ஆய்விலும் ஈடுபட்டார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த
இலக்கிய மேதைகளுள் இன்றியமையாதவரான யுடா அகினாரி, தன்
வாழ்நாளில் சமகாலத்து அறிஞர்களோடு கருத்தியல் ரீதியான பல மோதல்களை எதிர்கொண்டார். அகினாரி
ஜப்பானின் பண்டைய இலக்கியங்களோடு சீனாவின் பண்டைய இலக்கியங்களிலும்
ஈர்க்கப்பட்டிருந்தார். Tales of Moonlight and Rain தொகுப்பில்
அதைக் கண்கூடாகக் காணமுடியும். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஜப்பானிய
செவ்விலக்கியங்களிலிருந்து மட்டுமல்லாது, சீன
இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களும் நிகழ்வுகளும் காட்டப்பட்டுள்ளன. Waka, Renga, Haikai கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த அவர், தன் வாழ்நாள் முழுமையும்
அவற்றைத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தார். எண்ணற்றக் கவிதைளையும்
புனைவுகளையும் எழுதிக் குவித்திருந்தாலும் முக்கியப் படைப்புகளான Tales of Rain and the Moon, Tales of Spring
rain இரண்டும் ஜப்பானின் செவ்விலக்கியப் படைப்புகளாக
இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.
சுழலும் சக்கரங்கள், காஃப்காவின்
நுண்மொழிகள், பத்து இரவுகளின் கனவுகள் உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளரான முனைவர்
கே.கணேஷ்ராம் அவர்கள் மழைநிலாக் கதைகள் நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கியுள்ளார்.
அதிலிருந்து சில வரிகள்...
\\கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழைநிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள் இவை.\\
மழை நிலாக் கதைகள் தவிர கனலியின் பிற வெளியீடுகளான ஜப்பானிய (மொழிபெயர்ப்புச்) சிறுகதைகள் மற்றும் அமெரிக்கச் சிறுகதைகள் நூல்களிலும் என் மொழிபெயர்ப்புக் கதைகள் இடம்பெற்றுள்ளன.
புத்தகக் கண்காட்சி தள்ளிப்போகும் சூழலில் இந்நூல்களை தொடர்புடைய பதிப்பகங்கள் வாயிலாகப் பெறலாம்.
கொக்கரக்கோ..
(சிறுவர் பாடல்கள்)
லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு
விலை – ரூ.75/-
இந்நூலைப் பெற தொடர்பெண் - 98412 36965
மின்னஞ்சல் – lollipopchildrensworld@gmail.com
(ஜப்பானியப் படைப்பாளி யுடா அகினாரி சிறுகதைகள்)
கனலி வெளியீடு
விலை ரூ.200/-
ஜப்பானிய (மொழிபெயர்ப்புச்) சிறுகதைகள்
கனலி வெளியீடு
விலை ரூ.400/-
கனலி வெளியீடு
விலை ரூ.500/-
கனலி பதிப்பக நூல்களைப் பெற தொடர்பெண்கள்:
90800 43026
99401 48832
ஆர்வமுள்ளவர்கள் நூல்களை வாங்கி வாசித்து தங்கள் கருத்துகளை அறியத் தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
நன்றி.