இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும்
தலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. இன்றைய
சினிமாவின் போக்கால் சமூகம் பாதிப்புக்காளாகிறது என்பது எவரும் மறுக்கவியலாத உண்மை. தலைப்பில்
சினிமா என்று பொதுவாக இருப்பதால் அது குறிப்பது தமிழ்த் திரைப்படங்களையா? இந்தியத்
திரைப்படங்களையா? அல்லது உலகத் திரைப்படங்களையா? என்று ஆரம்பம்
முதலே ஒரு தடுமாற்றம் இருந்தது. ஒரு தமிழ் இணையதளத்தில் நடத்தப்படும் ஒரு போட்டி என்பதாலும்
உலக சினிமா பற்றிய அலசலை முன்வைக்கும் தகுதி எனக்கில்லை என்பதாலும் தமிழ்த்
திரைப்படங்களைக் குறிப்பதாகவே எண்ணிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டேன்.
திரைப்படம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புதானே என்று ஒருசிலர்
வாதிடலாம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மையாகிவிடாது. சமூகத்தைப்
பிரதிபலிக்கும் எத்தனையோ நல்ல சிறப்பான அம்சங்கள் இருக்க, சமூகத்தைப்
பாதிக்கும் அம்சங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒன்றைக் காட்டுகிறேன் என்று துவங்கி, இறுதியில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெட்டது என்ற தீர்ப்பை வழங்குதல் நியாயமன்று. எல்லாத்
திரைப்படங்களும் அப்படித்தானா என்றால் இல்லை, ஆனால் நூற்றுக்கு
தொண்ணூறு படங்கள் அப்படித்தான் உள்ளன. அவற்றைப் பற்றிய
என் பார்வையே இது.
இன்றைய பல திரைப்படங்கள் தவறான உதாரணங்களை முன்வைத்து
இளைஞர்களைத் தவறான பாதைகளில் திசைதிருப்பிவிடுகின்றன. இன்றைய இளைஞர்களுக்கு
அவர்கள் ஆண்களாகட்டும், பெண்களாகட்டும்… எதையும்
நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. அவசர யுகத்தில் வாழ்கிறார்கள். சரியான
புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலங்கடந்தபின்னரே கவனத்துக்கு வருகின்றன.
ஆனால்… அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். உடல்நலம்
கெட்டு, மனநலம் கெட்டு, கைப்பொருள் இழந்து, நிம்மதி இழந்து, உறவுகளை
இழந்து, இறுதியில் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கிறார்கள்.
அதற்கு சினிமா போன்ற ஊடகங்களின் பங்கு பெரும்பான்மை என்றால் அது மிகையில்லை.
திரைகளில் அவர்கள் தங்களையே பார்க்கிறார்கள். எப்படி ஒரு இல்லத்தரசி மெகா
தொடர்களைப் பார்த்து மனம் பேதலித்து அதில் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டு மன
நிம்மதி இழந்து தவிக்கிறாளோ… அதற்கு துளியும் குறைவிலாத அவலம் திரைப்படங்கள் மூலம்
இளைய தலைமுறைக்கு நேர்கிறது.
இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனைப் பற்றிய ஒரு மோசமான
சூத்திரம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை சமீபகாலமாக நாம் பார்க்கும் சில
திரைப்படங்கள் மூலம் உணரமுடிகிறது. பழைய திரைப்படங்களில்
கதாநாயகன் என்பவன் அன்பு, பண்பு, பாசம், தியாகம், லட்சியம், வள்ளன்மை
போன்ற பல உயரிய குணங்களைக் கொண்டவனாக இருந்தான். ஒருசில
படங்களில் ஆரம்பத்தில் கெட்டவனாக இருக்கும் கதாநாயகன், ஏதோவொரு
சந்தர்ப்பத்தில் திருந்தி, நல்லவனாக மாறிவிடுவான். சில வருடங்களுக்கு
முன்பு வரையிலும் கூட, கதாநாயகன் என்பவன் உத்தமனாய் இல்லாவிடினும், ஓரளவு நல்லவனாய், மனசாட்சிக்குப்
பயந்தவனாய், சந்தர்ப்ப சூழலினால் மட்டுமே தவறிழைப்பவனாய் காட்டப்பட்டுக்கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது…. கதாநாயகன், உலகத்திலுள்ள அனைத்து
அயோக்கியத்தனங்களும் கொண்டவனாக இருக்கிறான். வில்லனை
விடவும் மோசமானவனாக சித்தரிக்கப்படுகிறான். எந்த சிக்கலும்
இல்லாத ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கதாநாயகி, அவனுடைய
அயோக்கியத்தனத்தாலேயே ஈர்க்கப்பட்டு விரட்டி விரட்டி காதலிக்கிறாள். இது போன்ற
திரைப்படங்களைப் பார்க்கும் விடலைகள் மனத்தில்… ஓஹோ… இப்படியிருந்தால்தான்
பெண்பிள்ளைகளுக்குப் பிடிக்கும்போலும் என்னும் எண்ணம் வேர்விட ஆரம்பித்துவிடலாம். இல்லாத
பழக்கங்களைக் கற்றுக்கொள்ள இத்திரைப்படங்கள் ஒரு தூண்டுதலாக அமைந்துவிட பெரும் வாய்ப்பு உள்ளது.
காதல் என்ற சொல்லுக்கு இந்த திரைத்துறையினர் கொடுக்கும் விளக்கங்களும்
வியாக்கியானங்களும் இருக்கிறதே… அப்பப்பா… ரம்யமான அந்த உணர்வை
ரம்பத்தால் அறு அறு என்று அறுத்து குருதி வடியத் தொங்கவிட்டுவிடுகிறார்கள். காதலைக்
கடைபரப்பி விற்கிற அந்த வியாபாரிகளிடம் எல்லாம் இருக்கிறது, காதலைத்
தவிர என்பது விநோதம். காதல் மீதான மதிப்பைக் கூட்டுவதாக இல்லையென்றாலும் பரவாயில்லை, இழிவுபடுத்துவது
போல் எத்தனைப் படங்கள்!
காதல் மட்டுமா? காதலும் நட்பும்தான்
இன்றைய திரைத்துறை கையிலெடுக்கும் கருக்கள். அவற்றைத்
தாண்டிய உணர்வுகளும் வாழ்க்கையும் ஒரு பொருட்டே இல்லை அவர்களுக்கு.
காதலைப் போலவே நட்பையும் கொச்சைப்படுத்தும் திரைப்படங்கள்
ஏராளம். கூடிக் குடிப்பதும், கும்மாளமிட்டுக்
களிப்பதும், ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதும் காட்டிக்கொடுப்பதும்தான் தான்
நட்பின் இலக்கணங்களென்று இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் வரையறுத்து வைத்திருக்கின்ற போலும்.
பெரும்பான்மைத் திரைப்படங்களில் இளைஞர்கள்
எப்படிப்பட்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்? குடிப்பதும், புகைப்பதும்தான்
நாகரிகம், அதுதான் வாழ்க்கை என்று காட்டி, எந்தவிதக்
கெட்டப் பழக்கங்களும் இல்லாத ஒருவனுக்கு, தான் வாழவே
தகுதியில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இழிசெயலைப் பெரும்பாலான
திரைப்படங்கள் தவறாமல் செய்கின்றன. அரிதிலும் அரிதாய் ஒருசில நல்ல திரைப்படங்கள் வந்து
நட்பின் பெருமை காட்டி ஆறுதல் தருகின்றன.
இன்றைய நாட்களில் மதுவருந்தும் காட்சி இல்லாத திரைப்படத்தைக்
காண்பதே அரிதாகிவிட்டது. உணவுண்ணுதல், புத்தகம் வாசித்தல், ஒட்டடை அடித்தல்
போன்று அதுவும் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதுபோல் வெகு அலட்சிய மனோபாவத்துடன் காட்டப்படுவது
கூட நமக்கும் பழகிவிட்டது என்றே நினைக்கிறேன். அதுபோன்ற
காட்சிகளில் மதுவருந்துவது/புகைப்பது உடல்நலத்துக்குக் கேடு என்று ஒரு ஸ்லைடு போடுவார்கள். அவனோ அவர்களோ
புகைத்துக்கொண்டிருக்கிறான்/கிறார்கள் என்பது அதுவரை நம் கவனத்துக்கு வந்திருக்காது. ஸ்லைடைப்
பார்த்தவுடன்தான் தோன்றும். அட… ஆமால்ல…..
ஒன்றல்ல, இரண்டல்ல, பல
திரைப்படங்களில் பார்த்த காட்சி ஒன்று. ஐந்து பேர் குடிக்கையில்
ஒருத்தன் மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் மற்ற நால்வரும் சேர்ந்து அவனால் ஆண்வர்க்கத்துக்கே
அவமானம் என்பதுபோல் அவனைக் கேலி பேசி எப்படியும் குடிக்கவைத்துவிடுவார்கள். அதன் மூலம்
குடிப்பதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு என்று ஒரு தவறான கற்பிதம் இளைஞர்களின் மனத்தில் ஆழமாக
பதியவைக்கப்படுகிறதல்லவா?
இந்த இடத்தில் நான் ஒன்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். குடி குடி
என்று குடி முழுகிப் போவது போல் புலம்புகிறாயே… மேலை நாடுகளில்
எல்லோரும்தான் குடிக்கிறார்கள். குடிப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று கேட்பீர்களாயின்
ஒருசில வார்த்தைகளை உங்களுடன் பகிரவிரும்புகிறேன்.
மேலை நாடுகளில் நிதானம் தெரியாமல் வயிறு முட்டும் அளவுக்கு
குடித்துவிட்டு வாந்தி எடுப்பதும், தெருக்களில் விழுந்து
கிடப்பதும், போதையோடு வாகனங்களை ஓட்டி விபத்து உண்டாக்குவதுமான நிகழ்வுகள் மிக சொற்பமே. அதற்கான சட்டங்களும் கடுமையாக இருப்பதால் மக்களிடம் பயம்
இருக்கிறது. அதுபோல் ஒரு அலுவலக சந்திப்புகளிலோ, நட்புக்
குழுமத்திலோ எவரும் எவரையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை. மரியாதை
நிமித்தம் குடிப்பதும் குடிக்காதிருப்பதும் அவரவர் விருப்பம். குடிப்பழக்கம்
இல்லாதவர்களும், தாங்களே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பவேண்டியிருப்பவர்களும்
பழரசங்களைப் பருகியபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சர்வ சாதாரணம் அங்கு.
அடுத்து இன்றைய திரைப்படங்களில் நம்மை நெளியச்செய்யும் நெருடலான
விஷயம் ஆபாசம். பாலியல் வேட்கையைத் தூண்டும்படியான வக்கிரக் காட்சிகளுக்குக்
குறைவே வைப்பதில்லை பெரும்பான்மைப் படங்கள். பெண்கள்
என்றாலே ஒரு போகப்பொருளாகக் காட்டப்படுவதன் விளைவுதான் பாலியல் பலாத்காரங்களும், கழுத்தறுப்புகளும், அமில வீச்சுகளும். பெண்கள்
மதிக்கப்படும்வண்ணம் திரைப்படங்கள் வெளிவரவேண்டும். ஆபாச வர்ணனைகள், இரட்டை
அர்த்த வசனங்கள், அருவறுப்பான அங்க அசைவுகள் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். தரமான
திரைப்படம் என்று சொல்லப்படுபவற்றில் கூட ஆபாசமான இடையசைவுகளும், அங்கக்
குலுக்கல்களும், உதட்டுச் சுழிப்புகளும் கொண்ட பாடலொன்று இடைச்செருகலாக
செருகிவிடப்படுகிறது. வியாபார நோக்கத்துக்காக என்னும் ஒரு காரணத்தை முன்வைத்தால்…. அது
நம்மை நாமே பேரம் பேசும் இழிநிலையைத்தான் காட்டுகிறது.
இளம்பெண்களுக்கு அரைகுறை ஆடைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும்
தான் அழகென்று திரைப்படங்கள் அறிவுறுத்துகின்றன. ஆடவருக்கிணையாய் குடிப்பதிலும், நள்ளிரவு
நடனக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதிலும்தான் சம உரிமை இருக்கிறதென்னும் அறியாமை அவர்களுள்
தலைதூக்குகிறது. இப்படித்தான் வாழவேண்டுமென்ற வரைமுறையெல்லாம் காற்றில்
பறக்கவிடப்பட்டு எப்படியும் வாழலாம் என்று போதிக்கப்படுகிறது.
பொது நிகழ்ச்சிகளில் குடும்பப்பெண்கள் குத்தாட்டம் போடுவதைப்
பற்றி சில நாட்கள் முன்பு சில பதிவுகளில் வாசிக்க நேர்ந்தது. இதுவும்
திரைப்படத்தின் தாக்கம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? ஊரே தலையில்
வைத்துக் கொண்டாடும் அளவுக்குப் பெரிய மனிதர், செல்வந்தர், செல்வாக்குடையவர்… அவ்வளவு
ஏன், நாட்டாண்மை என்றே வைத்துக்கொள்வோமே. ஊர்த்திருவிழாவின்போது
பாட்டுப்பாடி ஆட்டமாடிக் கொண்டாடும் ஊராரின் மத்தியில் அந்த பெரிய மனிதரின் மனைவியும்
ஒரு கட்டத்தில் தன்னை மறந்து குத்தாட்டம் போட்டுவிட்டு பிறகு வெட்கப்பட்டுக்கொண்டு
நிற்பதையெல்லாம் ரசிப்புடன் ஏற்றுக்கொள்ளும் சனம் தங்களையும் ரசிக்கும் என்ற எண்ணம்
அப்பெண்களுக்குத் தோன்றியிருக்கலாம்.
அடுத்து குழந்தைகளிடம் வருவோம். குழந்தைகளும்
திரைப்படங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து சமூகப் பொறுப்புடன் படமெடுப்பவர்கள்
யாராவது இருக்கிறார்களா? ஒரு திரைப்படத்தை தியேட்டருக்குப் போய்த்தான் பார்க்கவேண்டும்
என்ற அவசியம் இப்போது இல்லை. எவ்வளவு புதிய திரைப்படமாயிருந்தாலும் உலகத் தொலைக்காட்சிகளிலேயே
முதன்முறையாக ஏதாவதொரு சானலின் மூலம் வீட்டுக்குள் வந்து தன்னைத் தானே திரையிட்டுக்கொள்கிறது. ரேட்டிங்
பற்றிய சிந்தனையின்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை கூடியமர்ந்து பார்த்துக் களிக்கிறோம். அதில் வரும்
வன்முறைக் காட்சிகள் குழந்தைகள் மனத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்குமென்று என்றைக்காவது
எண்ணிப்பார்த்திருக்கிறோமா?
கையை காலை வெட்டுவதும், கழுத்தறுப்பதுமான
காட்சிகளை கொஞ்சமும் விவஸ்தையின்றி குளோசப் காட்சிகளாக வேறு காட்டுகிறார்கள். இலை மறை
காய் மறைவாக காட்டவேண்டியவற்றையெல்லாம் தலை முதல் கால் வரை காட்டி அருவறுப்பை உண்டுபண்ணும்
போக்கை என்னவென்பது?
வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. தங்கள்
படங்களில் வன்முறையை வரைமுறையின்றிக் காட்ட நினைப்பவர்களுக்கு ஒரு சப்பைக்கட்டுதான்
மதுரை சப்ஜெக்ட். கதைக்களம் மதுரை என்று வைத்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும்
யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், குத்தலாம், கொல்லலாம். மதுரைக்காரர்களே
கையெடுத்துக் கும்பிட்டு, “ஐயா… எங்களை விட்டுவிடுங்கள். மதுரையைப்
பற்றியும், மதுரை மக்களைப் பற்றியும் இப்படி அநியாயமாக அவதூறு பரப்பாதீர்கள்” என்று கெஞ்சியும்
விடுவதாக இல்லை மதுரையை வைத்து காசு பார்ப்பவர்கள். புதிதாக
தமிழகம் வருபவர்கள் மதுரைக்குப் போகுமுன் இதுபோன்ற இரண்டு திரைப்படங்களைப் பார்த்தால்
போதும். மதுரைப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள்.
அளவுகடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஒரு
கசாப்புக்காரனின் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் நாம். முன்பின்
அறிந்திராத ஒருவரின் மரண ஊர்வலம் கூட நம் மனத்துள் மெல்லிய அதிர்வை உண்டாக்கும். ஆனால்… மரண வீட்டிலும்
குத்துப்பாட்டு போட்டு சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார்கள் இன்றைய இயக்குநர்கள். குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசிப்பதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எழுகிறது ஒரு
கேள்வி. மரணத்தின் மதிப்பு அவ்வளவுதானா?
அன்றைய திரைப்படங்கள் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக்
கடந்து மக்களை ஒன்றாக வாழவைக்கும் முயற்சியை செய்தன. இன்றைய
சில திரைப்படங்களோ, ஒற்றுமையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மனங்களில் பிரிவினையை
உண்டாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
திரைப்படங்கள் என்பவை வாழ்வியலின் அழகைக் கூட்டுவதாக, வாழ்க்கைத்
தத்துவத்தைக் காட்டுவதாக இருக்கவேண்டும். உறவுகளுக்கிடையிலான
மெல்லிய மனவோட்டங்களைச் சொல்வதாக, சமுதாய அமைப்பின் சிக்கல்களை உணரச் செய்வதாக, வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாக, சிறந்த
பொழுதுபோக்கம்சம் கொண்டதாக, நெகிழவைப்பதாக, மகிழவைப்பதாக, ரசிக்கத்தக்கதாக, புத்துணர்வூட்டுவதாக, புரட்சிகரமானதாக, மாறுபட்ட
சிந்தனைகளை உருவாக்குவதாக, முரண்பட்ட களங்களை மையப்படுத்துவதாக… என்று வித்தியாசமான
ரசனைகளை ரசிகனுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஐந்து நிமிடக்
குறும்படங்களிலேயே மேற்சொன்ன அனைத்தையும் சாதித்துக் காட்டமுடிகிறது என்னும்போது இரண்டுமணி
நேரத் திரைப்படங்களில் எவ்வளவு சாதிக்க முடியும்?
மாறாக… சமூக நடவடிக்கைகளுக்குப் புறம்பான பல காட்சிகளை யதார்த்தம்
என்ற போர்வையில் காட்டும் திரைப்படங்கள், சமூகம் பற்றிய ஒரு
மாயையை மக்கள் மனத்தில் சிருஷ்டிக்க முனைகின்றன. மிகையெது, யதார்த்தமெது
என்று பிரித்துணர இயலாது மயங்கி நிற்கும் இளைய சமுதாயத்தை எளிதில் வெற்றிகொள்கிறது
மிகையாளுமை. படாடோபமற்ற யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு மதிப்பற்றுப் போதலும் பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடனான மிகைப்படுத்தல்களும் அசாதாரணக்
கற்பனைகளும் பிரதானத்துவம் பெறுதலும் காலத்தின் கோலம். இந்நிலை மாறவேண்டுமெனில், குறைந்தபட்சம்
திரைப்படங்கள் வேறு, சமூக அமைப்பு வேறு என்று பிரித்தறியும் மனப்பாங்காவது நம்மிடையே
உருவாதல் வேண்டும்.
**************
(தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபனின் எழுத்துப் படைப்புகள் தளத்தில் நடைபெறும் மாபெரும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டுரை)
(படம் நன்றி: இணையம்)