என் முதல் நூலுக்கான
வித்தை என்னுள் விதைத்தவர்களுள் முதன்மையானவர் என் அன்புத்தோழி மணிமேகலா என்கிற யசோதா பத்மநாதன். அட்சயப்பாத்திரம் என்னும் வலைத்தளத்தில் அள்ள அள்ளக் குறையாத அவரது சிந்தனையூற்றின் சிறப்புகளைக் காணலாம். சிட்னியில்
உயர்திணை என்னும் அமைப்பினூடாய்ப் இங்கு வசிக்கும் பற்பல தமிழிலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் அரிய முயற்சியை சில வருடங்களாய் மேற்கொண்டுவருகிறார். என்னுடைய ஆத்மார்த்தமான தோழி என்பதை விடவும் என் முன்னேற்றத்தின்
ஒவ்வொரு படிக்கல்லையும் பார்த்துப் பார்த்து வடிவமைப்பவர் என்று சொல்லலாம். என் திறமைகளை
வெளிக்கொணரும் முயற்சிகளில் என்னை விடவும் அவரே அதிகமாய் மெனக்கெடுகிறார்… என்னை முன்னடத்துகிறார்…
இதோ இப்போது என் புத்தகத்தை வெளிக்கொணரும் முயற்சியிலும் அவரே முன்னிற்கிறார்.
ஹென்றி லாஸனின்
ஆஸ்திரேலியக் காடுறை கதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தும்வண்ணம் அகநாழிகை பதிப்பகம்
வாயிலாய் வெளியான என்றாவது ஒருநாள் என்னும் என் நூலுக்கான முறையான வெளியீட்டு விழா
இதுவரை நடைபெறவில்லை என்பதோடு அதற்கான எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை என்பதே உண்மை. நான் அயல்நாட்டிலிருப்பதும் இலக்கியவட்டாரத்தில் அநேகரை நான் அறியாதிருப்பதும்
காரணங்கள் எனக் குறிப்பிட்டாலும் என் தயக்கமும் கூச்சமும் சொல்லப்படாத முதற்காரணம்.
அத்தயக்கமே நூலுக்கான முன்னுரை அணிந்துரைகளுக்காக எவரையும் நாடத் தடைபோட்டது. அத்தயக்கமே
நூலுக்கான அறிமுகத்தை எவர்மூலமும் கோரவிடாமல் தவறவிட்டது. அத்தயக்கமே நூலுக்கான விளம்பரத்தை
விலக்கிவைத்திருந்தது. அத்தயக்கமே நூலின் விற்பனையை பாதித்தது.
என்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளியீட்டு விழா நிகழும் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.. ஆனால் நூலை வெளியுலகில் பலருக்கும் அறியத்தரும் தன் இலக்கில் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறி இன்று அதை நிகழ்வுக்குக் கொண்டுவந்திருக்கும் தோழியின் முயற்சி அளப்பரியது. சிட்னியில் முறையான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தானே முன்னெடுத்து செய்யும் தோழிக்கும் அவருக்கு பக்கபலமாய் இருக்கும் நட்புகளுக்கும் என்ன கைம்மாறு செய்வதென்று புரியாமல்
தவிக்கிறேன். என் ஆயுள் உள்ளவரை என் அகமெரியும் அன்புத்தீபம் அணையாதிருக்கும் அன்புத்தோழி.
இந்தியக் குடியரசு
தினம் & ஆஸ்திரேலிய தினம் என்னும் சிறப்புடை ஜனவரி 26-ஆம் நாளன்று, நூல் வெளியீட்டு
விழா..
வர இயன்றவர்கள்
தவறாமல் வருகை தருக..
வர இயலாதவர்கள் மானசீகமாய் வாழ்த்திடுக.
அன்பும் நன்றியும் அனைவருக்கும்.
***********
சென்ற பதிவில் வண்ணதாசன் அவர்களுடைய கவிதையைக் குறிப்பிட்டு காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை என்றெழுதினேன்.. இதோ இன்று அக்கவிஞனுக்கு சாகித்ய அகாடமி விருது சமர்ப்பணமாகியுள்ளது. இப்போதும் சொல்கிறேன்... நெகிழெழுத்தால் நம் நெஞ்சங்கவர்ந்தவனுக்கு விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை என்று..
(படம் உதவி - இணையம்) |
வரிகளுக்குள்
வாழ்வின் அழகியல் புகுத்துபவன்…
வலிகளுக்குள்ளும் வாழ்வியல்
இனிமை காண்பவன்…
நுண்ணிய
ரசனைக்காரன்…
எண்ணியதெல்லாம் எழுத்தாக்கும்
திண்ணிய
வல்லமை பெற்றவன்…
விரக்தி
வேர்த்தொழுகும்
பொழுதுகளில்
எழுத்துச்சாமரம் வீசியெனை
ஆசுவாசப்படுத்துபவன்…
சிற்பியின்
கண்களுக்கு மட்டுமே
கல்லினுள்
சிலைகள் தெரியும்…
வண்ணங்களின்
தாசனுக்கு மட்டுமே
காட்சியுள்
கவிதைகள் தோன்றும்.
நெகிழெழுத்தால் நம்
நெஞ்சங்கவர்ந்தவனுக்கு
விருது
கிடைத்ததில் வியப்பேதுமில்லை…
விருதுகளொன்றும் அவனெழுத்தின் விளிம்பில்லை..
வாசகநெஞ்சங்களே என்றுமவன் வண்ணங்களின் எல்லை.
***************