12 July 2012

மங்கை நிலா'என்ன பெண் இவள்!'
என்ற அங்கலாய்ப்புடன்
ஆரவாரமாய் விடிகிறது,
என் ஒவ்வொரு காலைப்பொழுதும்!

தலைக்குமேல் வளர்ந்த பின்னும்,
தலைவாரத் தெரியவில்லை என்று
கடுகடுத்தால் போதும்;
தன் இடுப்பளவுக் கூந்தலை
இரண்டேகால் அங்குலமாய்க்
கத்தரித்துவிடுவேன் என்றே,
கலவரப்படுத்துகிறாள் என்னை!

வெந்நீர் கூட வைக்கத் தெரியவில்லையென
வேகமாய்ச் சாடினால்
சமையற்கலை அறிந்தவனை மணமுடிப்பேன் என்று
  சாவகாசமாய்ச் சொல்கிறாள்!

வாசல் தெளித்து, கோலமிடத்
தெரியவில்லையே உனக்கு! என்றால்,
'அடுக்குமாடிக் குடியிருப்புக்கு,
வாசற்கோலம் எதற்கு?' என்கிறாள்!

'எதிர்ப்பேச்சு பேசாதே!' என்றால்,
'ஏனம்மா பேசக்கூடாது?' என்று,
எதிர்க்கேள்வி கேட்கிறாள்!

கொந்தளிக்கும் கோபத்தோடு சொல்கிறேன்,
'நீ என் அம்மாவிடம் வளர்ந்திருக்கவேண்டும்;
அப்போது தெரிய வந்திருக்கும் அத்தனைக் கலைகளும்!'

ஆசையாய் என் தலைகோதிச் சொல்கிறாள்,
'பாவம் அம்மா, நீ! அன்பு மகளாய் வளராது,
அருமை மாணவியாய் வளர்ந்திருக்கிறாய்!
அன்னையின் வடிவில் ஓர்
ஆசிரியையைப் பெற்றிருக்கிறாய்!

நானோ,
அன்னையெனக் காண்பது, என்
அன்புத் தோழியை அன்றோ?'

தோழி மட்டுமா?
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
'என் செல்ல அம்மா! என் பட்டு அம்மா!' என்று
என்னைக் கொஞ்சும் தருணங்களில்
தன் மகவாயன்றோ மாற்றிவிடுகிறாள்,
இப்பொல்லாதப்பெண்!

'என் அருமை மகள் இவள்!'
என்ற இறுமாப்பு மேலோங்க,
அழகாய் விடைபெறுகிறது,
என் ஒவ்வொரு நாளும்!
 ******************

(பேதை, பெதும்பைப் பருவங்களில் நிலாவின் சேட்டையை ரசித்து மகிழ்ந்த அனைவரும் மங்கை, மடந்தைப் பருவங்களிலும் அவளை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். மங்கை என்பது பெண்களின் 12 முதல் 14 வயது வரையிலான பருவம்.)

படம் உதவி: இணையம்

55 comments:

 1. ஆம்... இன்றைய மங்கைகள பெரும்பாலும் நிலாவைப் போலத்தான் அம்மாவை தோழியாக பாவித்து நடக்கிறார்கள். அதிலும் ஒரு சுகம் பெற்றவளுக்கு இருக்கத்தானே செய்கிறது. காலமாற்றத்தின் படி அவர்களின் வாழ்க்கை முறையிலும் இந்த மாற்றங்களால் பிரச்னைகள் வருவதில்லை. நிலாவை இப்போதும் ரசிக்க முடிகிறது கீதா. அழகிய உங்களின் தமிழையும் தான். தொடரட்டும்...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உங்களுடைய ஊக்கமிகுப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

   Delete
 2. மங்கை நிலா
  புதுமைப் பெண் நிலா

  ரசித்தேன்

  நிலா
  எப்பருவத்திலும்
  அழகுடையது

  இந்த
  நிலாவும் அப்படித்தான்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி செய்தாலி.

   Delete
 3. இன்றைய நவ நாகரீகப் பெண்களைப் பற்றிய வெகு அழகான கவிதை. அவர்கள் துணிச்சலும் எதையும் சுலபமாக எதிர்கொள்ளும் திறமையையும் வாய்ந்தவர்களே.

  படித்ததும் பிடித்துப்போனது.

  அவள் சொல்வது போல பழமையில் ஊறிய அம்மாக்கள் நிலமை தான் இன்று பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் உள்ளது.

  இன்றைய கல்வியும் உத்யோகமும் பெண்களுக்கு மேலும் மேலும் மிகுந்த அழகைத் தந்துள்ளன.

  பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அருமையான புரிதல். வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

   Delete
 4. அழகான அருமையான கவிதை .
  ம்ம்ம்ம் நானும் ரசிக்க துவங்கபோகிறேன்,உங்கள் நிலாவென்னும் மங்கையை மற்றும் எங்க வீட்டு மங்கையை :))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் அனுபவங்களை அள்ளி வழங்கவிருக்கும் அன்பின் மகளுக்கு வாழ்த்துக்களும் ஏஞ்சலின்.

   Delete
 5. 'என் அருமை மகள் இவள்!'
  என்ற இறுமாப்பு மேலோங்க,
  அழகாய் விடைபெறுகிறது,
  என் ஒவ்வொரு நாளும்!//

  திருமணம் முடித்து இரண்டு பெண்களையும்
  அனுப்பும் மட்டும் இப்படித்தான் ரசித்து வாழ்ந்தேன்
  இப்போது அந்த பசுமையான நினைவுகளே மிகவும் சுகமாய்
  எப்போதும் துணையாய் உள்ளது
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் இனிய அனுபவப் பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி ரமணி சார்.

   Delete
 6. 'என் அருமை மகள் இவள்!'
  என்ற இறுமாப்பு மேலோங்க,
  அழகாய் விடைபெறுகிறது,
  என் ஒவ்வொரு நாளும்!

  அழகாய் விடைபெறும் நாட்கள்
  ஆனந்தக்கண்ணீருடன் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நெகிழ்வுடனான பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்.

   Delete
 7. மங்கையைப் பற்றிய மகத்தான கவிதை! அருமையாக இருந்தது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 8. அருமை அருமை..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 9. Anonymous13/7/12 06:07

  என் மகள் இப்போதும் என்தோழி...மகனும், தோழன், என்னால் புரிய முடிகிறது என் அனுபவத்தால்.. அருமை. நல்வாழ்த்து. (இப்போது தான் யு.கேயிலிருந்து பேசினா மகள் .அங்குதான் வசிக்கிறா. சில நேரம் எனக்கு அம்மாவாகிறா)
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய அனுபவங்களின் பகிர்வுக்கும் நன்றி தோழி.

   Delete
 10. arumai!

  azhakiya varikal!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சீனி.

   Delete
 11. இரண்டு நாட்களாக பல பதிவுகளையும் திறக்க முடியாது அவதிப் பட்டு இப்போது அதிர்ஷ்டவசமாக மங்கை நிலாவைப் பார்த்தேன். மகளின் வளர்ச்சியை ஒவ்வொரு கணமும் ரசித்து மகிழ்வது புரிகிறது. இதே அன்பும் புரிதலும் என்றும் நிலைக்க ஆண்டவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி ஐயா. தங்களுடைய அன்பான ஆசிபெற்றதில் மிகவும் மகிழ்கிறேன்.

   Delete
 12. மங்கை நிலா அழகாக இருக்கிறாள்....

  அருமை அக்கா.................

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி எஸ்தர்.

   Delete
 13. என் இளமைப்பருவத்தை உங்கள் வரிகளில் கண்டேன். என் அம்மாவின் கேள்விகளும் அருமை சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய நினைவுப் பகிர்வுக்கும் நன்றி சசிகலா.

   Delete
 14. /அருமை மாணவியாய் வளர்ந்திருக்கிறாய்!/

  ரசித்தேன்:). மங்கை நிலா மனதில் நிற்கிறாள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. அருமை சகோ. குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்திலும் ரசிப்பதற்கு எத்தனை எத்தனை விஷயங்கள்.....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வெங்கட். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.

   Delete
 16. மிக அருமையான கவிதை தோழர். கொஞ்சம் வேலை செய்தால் உச்சத்திற்கே போகும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் செதுக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே.

   Delete
 17. ஹய்... நானும் என் அம்மாவிடம் சமையல் மேட்டரிலும். தலை வாரும் விஷயத்திலும் இப்படிப் பேசியிருக்கிறேன். நிலா என்னைக் கண்ணாடியில் பாக்கற மாதிரி பிரதிபலிக்கறா. அருமையா எழுதிருக்கீங்க கீதாக்கா...

  ReplyDelete
  Replies
  1. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது நிரஞ்சனா. எங்கள் காலம் போல் அம்மாவிடம் இடைவெளி பராமரிக்கும் அவசியமற்று தோழமையுடன் உறவாடுவது நிச்சயம் அன்னையர்க்கு மகிழ்ச்சிதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.

   Delete
 18. கீதமஞ்சரி அக்கா....

  மகளிடம் மரபுக்கவிதையைத்
  தேடிப்பார்த்திருக்கிறீர்கள். அவளோ...
  புதுக்கவிதையாகப் பூத்துக் குலுங்குகிறாள்...

  பதிவு அருமைங்க அக்கா.

  ReplyDelete
  Replies
  1. இத்தனை வரிகளில் நான் சொன்னதை இரண்டே வரிகளில் அழகாய் சொல்லிவிட்டீர்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி அருணா செல்வம்.

   Delete
 19. அவ்விட‌த்திலும் இதே க‌தைதானா...! ஹ்ம்ம்...! பொல்லாப் பெண்! ப‌ட்டு அம்மா!! இக்கால‌ப் பிள்ளைக‌ளின் புத்திசாதுர்ய‌த்தை விய‌க்காம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஒத்த அனுபவ ரசனை வெளிப்படுத்தும் பின்னூட்டத்துக்கு நன்றி நிலாமகள்.

   Delete
 20. அழகான கவிதை...
  பகிர்வுக்கு நன்றி...
  தொடர வாழ்த்துக்கள்... (த.ம.5)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

   Delete
 21. பாருங்கள் கீதா.. அதி உன்னதங்களைக் கொண்டுவந்து வானத்து சுடர்களைப் போல சொட்டும் கவிதையிது. அருமை. அருமை. நன்றாக அனுபவிக்கவேண்டும் வாழ்க்கையை. அதன் சூட்சுமத்தைப் பிடிப்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம். உங்களுக்கு அது கைவந்த கலை போல. என்னுடைய மகனையும் மகளையும் ஒவ்வொரு பருவத்திலும் ரசித்து வந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே போகிறது. என்ன பேராசிரியரே..கோபமா என்றும் என்ன கவிஞரே கோபமா.. விடுங்கள்.. என்றபடி என் தோளில் தன் கைகளைப் போட்டு அவன் நெஞ்சுப்பக்கம் அணைத்துக்கொள்கிறான் என் மகன். என்னைவிட படு உயரம். எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. என்னுடைய தந்தை என்னை நண்பன் போல நடத்தினார் கடைசிவரைக்கும். நானும் என் பையனும் இப்போது அப்படித்தான். என் மகள் என்னைக் கிண்டல் செய்யத் தேர்ந்தெடுக்காத சொற்கள் குறைவு. நினைவுகளை கிளறிவிட்டீர்கள் கீதா. உலகக் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். தோழர் எட்வின் சொன்னதுபோல சற்று உரசினால் அந்த நிலைக்குப் போய்விடும். வெகு வெகு எதார்த்தம். அதேசமயம் வாழ்வின் ஆனந்தக் களிப்பு. அனுபவியுங்கள். எங்களுக்கும் பகிருங்கள். மகிழ்ச்சி. பரவசம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அனுபவங்களின் பகிர்வு கண்டு ஆனந்தம் அடைகிறேன். நன்றி ஹரணி சார். பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் பரஸ்பர புரிதல்களும், அன்பின் வெளிப்பாடுகளும் முன்பை விடவும் இப்போது வியக்கத்தக்க வகையில்தான் உள்ளன. அதற்கான உந்துதலையும் பிள்ளைகளே முன்வைக்கிறார்கள் என்பது இன்னும் வியப்பு.

   Delete
 22. பிறைநிலா மெல்ல வளர்ந்து வருகிறது... எல்லாப் பருவமுமே ரசிக்கத்தக்கதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

   Delete
 23. மங்கை எனினும்
  மடந்தை எனினும்
  பேதையாய் பழகும்
  பெதும்பை இந்தப் பெண்மகள்...
  தோளுக்கு மேல் வளர்ந்திடினும்
  தோழியாய் அன்னையை
  அகம்வைத்த பொன்மகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகியக் கவிதையாய் மலர்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்.

   Delete
 24. என்னைக் கொஞ்சும் தருணங்களில்
  தன் மகவாயன்றோ மாற்றிவிடுகிறாள்,
  இப்பொல்லாதப்பெண்!

  அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ரிஷபன் சார்.

   Delete
 25. கவிஞரின் மகளாய்ப் பிறந்ததற்கு வெண்ணிலா பாக்கிய்ம் செய்திருக்கவேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 26. கவிதை அருமை.
  அன்பு தோழி வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 27. குட்டி நிலா - மங்கை நிலா...வாழ்த்துகள் கீதா.படிக்க நிறையவுண்டு எங்கள் வீட்டு நிலாக்களிடம் !

  ReplyDelete
 28. உண்மைதான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹேமா.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.