28 September 2015

தேடுவோம் கண்டடைவோம்.
கேளுங்கள் தரப்படும், 
தட்டுங்கள் திறக்கப்படும், 
தேடுங்கள் கண்டடைவீர்கள் 
என்பது விவிலிய வாக்கு. இன்றைய நம் வாழ்க்கை தேடலை முன்னிறுத்தியே அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.. தேதியாகட்டும்.. கிழமையாகட்டும்… தொலைபேசி எண்களாகட்டும், முகவரிகளாகட்டும், கூட்டல் கழித்தல் கணக்காகட்டும்… வாழ்வியல் தேவையாகட்டும்.. எதையுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்.. மூளையின் செயல்பாட்டுக்குள் நாம் வைத்துக்கொள்வதில்லை.. அந்தக்காலமெல்லாம் கனாக்காலமாகி கனகாலமாகிவிட்டது. இப்போது உள்ளங்கைக்குள் அடங்கிக்கிடக்கிறது உலகம்.. விரல் நுனியில் தொக்கிக்கொண்டிருக்கிறது தேடல்..

நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட இணையத்தேடல் குறித்தானதுதான் இப்போது பகிரவிருக்கும் என் ஆதங்கம். இணையத்தேடல்களில் தமிழின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கப்படவேண்டும்; தவறான தகவல்கள் தரப்படுவது அடியோடு நிறுத்தப்படவேண்டும்; தவறான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் பிறிதொரு தகவல் முந்தைய தகவலைச் சரியென்றாக்கிவிடும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால் அப்படியொரு ஆபத்தான நிலை தமிழுக்கு உருவாவதைத் தவிர்த்திட நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் எண்ணங்களே இப்பதிவின் உருவாக்கம்.

இணையவெளிகளில் தமிழ்ச்சொற்களுக்குரிய உருவாதாரங்கள் மிகவும் குறைவு. நான் மட்டுமல்ல… இணையத்தேடலில் உரிய படங்கள் கிடைத்திராது சோர்ந்துபோன பலரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டின் மாநிலப்பறவையான மரகதப்புறா என்ற பெயரை கூகுள் படங்களில் இட்டுத் தேடிப்பார்ப்போமே… கிடைத்திருக்கும் சுமார் 250 படங்களுள் பத்தே பத்துப் படங்கள்தாம் மரகதப்புறாவின் படங்கள். மற்றவையெல்லாம் கத்தரிக்காய், மிதிவண்டி, கோயில், குதிரை என்று தேடலுக்குத் தொடர்பில்லாதவை. அதாவது மரகதப்புறா என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ள பதிவில் இணைக்கப்பட்டுள்ள பிற படங்கள். ஆனால் இதே மரகதப்புறாவை ஆங்கிலத்தில் emerald dove என்று தேடினால் சுமார் எழுநூற்றைம்பது படங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் எழுநூறு படங்கள் மரகதப்புறாக்கள். இப்போது தெரிகிறதா.. தமிழ்ச்சொல் சார்ந்த படத்தேடலில் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது.

சமீபத்தில் முருக்கம்பூ பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தேன். Erythrina என்ற தாவரக்குடும்பத்தில் உள்ள 130 வகையுள் முருக்குமரமும் ஒன்று என்றறிந்தேன். மேலதிகத் தகவல்களைத் திரட்டியபோது முருக்கு என்பதும் முள்முருக்கு என்பதும் ஒன்றே என்ற தகவல் கிடைக்க.. அதைப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மேலும் ஆஸ்திரேலியாவில் காணப்பட்ட எரைத்ரினா பூக்கள் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முருக்கம்பூவின் தன்மையையும் நிறத்தையும் ஒத்திருந்ததால் பதிவில் அப்படங்களை இணைத்திருந்தேன். ஏனெனில் இணையத்தேடலில் முள்முருக்கம்பூக்களின் படங்கள் ஓரளவு கிடைத்தாலும் முருக்கம்பூக்களின் பிரத்தியேகப் படங்கள் கிடைக்கவே இல்லை..

புலியின் இரத்தந்தோய்ந்த நகங்களைப் போன்றிருப்பதால் புலிநகக்கொன்றை என்று மற்றொரு பெயர் இதற்கு இருப்பதாக ஒரு தளம் சொல்ல… வேறொரு தளம் புலிநகக்கொன்றை என்பது மஞ்சள் நிறக் கொன்றை மலர்களெனக் குறிப்பிடுகிறது. இலக்கியத்தில் ஞாழல் என்று சொல்லப்படுவது இந்த மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட மரம் என்ற தகவலை வெளியிடும் மற்றொரு தளம், செவ்விய முள்முருக்குப் பூக்களை காந்தள் மலர்களெனக் காட்டும்போது இணையதளங்களின் நம்பகத்தன்மையில் நமக்கு ஐயம் உண்டாகிறது. புலிநகக்கொன்றை என்று இணையவெளிப்படங்களில் தேடினாலோ பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய புலிநகக்கொன்றை நாவலின் அட்டையையும் எழுத்தாளரையுமே தேடல் முன்னிறுத்திக் காண்பிக்கிறது. ஆங்கிலத்தில் tiger’s claw tree என்று தேடினால் முள்முருக்கின் சிவந்த மலர்களைக் காட்டுகிறது. இப்போது உண்மையான முருக்கின் பூக்களையும் புலிநகக்கொன்றை மலர்களையும் யாராவது ஆதாரத்துடன் காட்டினால் அன்றி நம்முடைய ஐயம் விலகப்போவதில்லை.

முருக்கம்பூ பற்றிய தெளிவில்லாத நிலையில், என் பதிவில் முருக்கு, முள்முருக்கு, முள்முருங்கை, கல்யாண முருங்கை, புலிநகக் கொன்றை, கவிர் என்றெல்லாம் அழைக்கப்படும் முருக்கம்பூ என்று குறிப்பிட்டிருந்தபோது.. மனவிழி பதிவர் நண்பர் சத்ரியன், முருக்கு வேறு, முள்முருக்கு வேறு என்று குறிப்பிட்டுத் திருத்தம் சொன்னார். இரண்டுமே எரைத்ரினா வகை என்று அறிந்தாலும் இரண்டுக்குமான தமிழ்ப்பெயர்கள் வேறு என்பதை அவர்மூலம் அறிந்தேன். இணையத்தேடல் என்னைத் தவறாக வழிநடத்தியதைப் புரிந்துகொண்ட அவர், தன்னுடைய ஆதங்கத்தையும் பதிவுவழி வெளிப்படுத்தி… இயற்கையைப் படம்பிடிக்கும் புகைப்படக்கலைஞர்களுக்கு முகநூல் வழியே ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதை இங்கே பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சத்ரியன்.

பறவைகளையும், விலங்குகளையும், இயற்கை காட்சிகளையும் விதவிதமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு (குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ளோர்) ஒரு வேண்டுகோள்.

நம் தமிழ்மொழி காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு இன்றைய சர்வ வல்லமைக் கொண்ட இணையஊடகத்திற்கு இடம்பெயர்ந்து இளையோரின் கைகளில் சென்று சேர்ந்திருக்குப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதே வேளையில், நம் இலக்கியங்களில் பதியப்பட்டிருக்கும் பூவினங்கள், பறவையினங்கள், மரவகைகள், செடிக்கொடி வகைகள் இவை யாவற்றையும் (கூடுமான வரையில் இன்றும் காணக்கிடைப்பவற்றை) படம் பிடித்து சரியான பெயர்களுடன் கூகுளில் பதிவேற்றம் செய்வது நம் சந்ததியினருக்கு சான்றாகவும், உதவியாகவும் இருக்கும்.

இத்தகவலைக் காணும் நண்பர்கள், உங்களின் நட்புப் பட்டியலில் இருக்கும் புகைப்பட ஆர்வர்களுக்கும் சென்றுச்சேர உதவுங்கள்.

இணையத்தமிழின் இன்வளர்ச்சிக்கு உதவும் இத்தகு முயற்சிகளுக்கு நம்மாலான பங்களிப்பை எல்லா வகையிலும் வழங்குதல் வேண்டும். புகைப்படக் கலைஞர்களுக்கு பறவை, விலங்கு, தாவரங்கள் பற்றிய பொது அறிவோ, இலக்கிய அறிவோ இருக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. ஆனால் அவர்கள் எடுத்தப் புகைப்படங்களைப் பொதுவில் சமூக வலைத்தளங்களிலோ, வலைப்பூக்களிலோ… இணையதளங்களிலோ பதிவிட்டு அடையாளங்கோருவதன் மூலம் அவற்றைக் குறித்தத் தகவல் அறிந்தவர்கள் இது இன்னதுதான் என்று அறுதியிட்டு அவற்றின் பெயரை ஆவணப்படுத்த இயலும். வருங்காலத் தலைமுறைக்கு உதவும்வகையில் படங்கள் யாவும் உரிய தலைப்புகளுடன் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும். அதற்கு பல்வேறு இயற்கை ஆய்வாளர்களின் நூல்களையும் கையேடுகளையும் வாசித்தறிதல் அவசியம்.

அயல்நாட்டிலிருந்துகொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தாய்மண்ணை மிதிக்கும் எனக்குத் தற்சமயம் இம்முயற்சியில் பங்கேற்பது அசாத்தியம் என்றாலும் என்னளவிலான முயற்சிகளைத் தவறவிடுவதில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். பறவையியல் வல்லுநர் சலீம் அலி அவர்கள் எழுதிய பறவை உலகம் நூலை வாசித்தபிறகுதான் moorhen என்பது தாழைக்கோழி என்றும் coot என்பது நாமக்கோழி என்றும் purple swamphen என்பது நீலத்தாழைக்கோழி என்றும் அறிந்தேன். ஆஸ்திரேலியாவில் படம்பிடிக்கப்பட்டப் பறவைகளானாலும் அவை தமிழ்நாட்டிலும் காணக்கூடிய பறவை வகைகள் என்பதறிந்து அப்பெயரால் அவற்றைச் சுட்டினேன். தாழைக்கோழி, நாமக்கோழி குறித்தான இணயத்தேடல்களில் முதல் பத்து படங்களுள் என்னுடைய படங்களும் இருப்பது மகிழ்வளிக்கிறது.

பறவைப் பெயர்களுக்கான கையேடுகளில் என் மனத்துக்கு உடன்படா விஷயம் ஒன்று உள்ளது. அது, முக்குளிப்பான் (little grebe), தவளைவாயன் (frogmouth), கரண்டிவாயன் (அ) துடுப்புவாயன் (spoon bill), அரிவாள்மூக்கன் (ibis) போன்ற ஆண்பாற்பெயர்கள். அவற்றின் இனத்தில் பெண்பறவைகளை எப்படிக் குறிப்பிடுவது? தவளைவாயன் இனத்தில் பெண்பறவையைக் குறிப்பிட பெண் தவளைவாயன் என்றால் நன்றாகவா இருக்கிறது? தவளைவாயள்? சரிவரவில்லை… எனவே பறவைப்பெயர்களை ஆவணப்படுத்தும்போது முக்குளிவாத்து, தவளைவாய்ப் பறவை, கரண்டிவாய்ப் பறவை போன்றப் பொதுப்பெயர்களால் குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

அதேபோல வண்ணத்துப்பூச்சிகளின் பெயர்களும்… தமிழ்நாட்டில் காணப்படும் 319 வகை வண்ணத்துப்பூச்சிகளும் அழகிகள், வெள்ளையன்கள், வரியன்கள், நீலன்கள், தாவிகள் என ஐந்து பிரிவுகளாக அடையாளங்காட்டப்படுகின்றன.

கத்திவால் அழகி (spot swordtail), மரகத அழகி (Tailed jay), மலபார் அழகி (Malabar rose), கறுப்பு அழகி (red helen), கறிவேப்பிலை அழகி (common Mormon), எலுமிச்சை அழகி (lime butterfly), கொன்னை வெள்ளையன், (catopsilia pomono), கண்ணாடி வரியன் (glassy tiger), நீல வரியன் (blue tiger), பனைச்சிறகன் (common palmfly), ஐந்து வளையன் (common fivering) போன்ற பெயர்கள் தமிழின் அழகியல் தன்மையோடு இருந்தாலும் ஆவணப்படுத்துதலின்போது இயல்புகெடாமல் இருக்கவேண்டியது அவசியமன்றோ? குழந்தைகளிடத்தில், ஒட்டுமொத்தமாக இன்னின்ன வகையெல்லாம் ஆணென்றும் இன்னின்ன வகையெல்லாம் பெண்ணென்பதுமான தட்டையான புரிதலுண்டாகும் சாத்தியத்தை நாம் ஏற்படுத்தலாமா?

கத்திவால் வண்ணத்துப்பூச்சி, நீலப்பட்டை வண்ணத்துப்பூச்சி, புலிவரி வண்ணத்துப்பூச்சி, காக்கைக்கருப்பு வண்ணத்துப்பூச்சி என்ற பொதுப்பெயர்களால் குறிப்பிட்டுப் பழகுவோமே… வண்ணத்துப்பூச்சிகளை விரட்டி விரட்டிப் படமெடுப்பதோடு நம் வேலை முடிந்துவிட்டதாக எண்ணாமல் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களை உடனுக்குடன் இணையமேற்றி அவற்றுக்கான பெயர்களுடன் பதிவு செய்தல் நம் கடமை என்பதையும் வருங்காலத் தலைமுறையின் தமிழார்வத்துக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் நாம் வகுத்துக்கொடுக்கும் பாதை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலக்கியம், வாழ்க்கை, இயற்கை, கலை, பாரம்பரியம், இன்னபிற துறைகள் சார்ந்து நாம் எடுக்கும் படம் ஒவ்வொன்றையும் அதற்கான தமிழ்ப்பெயர்களோடும் தலைப்போடும் சரியான தகவல்களோடும் எல்லையில்லா இணையப்பெருவெளியில் தப்பாமல் பகிர்வோம். இணைய ஊடகங்கள் வாயிலாய் தமிழில் பதிவேற்றப்படும் படங்கள் யாவும் நம் தமிழ்ச்சொல் சார்ந்த தேடலின் சிரமம் குறைப்பதோடு, தமிழின் வளர்ச்சிக்குத் தக்கதொரு ஆவணக்காப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. தமிழில் படங்களை ஆவணப்படுத்துவோம். நம் உருவாதாரத்தேடல்களை இலகுவாக்குவோம்.


தேடுவோம்.. கண்டடைவோம்.
************* 

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது. வகை(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப்போட்டிக்கென எழுதப்பட்ட இக்கட்டுரை, என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். – கீதா மதிவாணன்

(படம்: நன்றி இணையம்)

24 September 2015

நெருப்பெனத் தோன்றும் முருக்கம்பூ


முருக்கு, கவிர் என்றெல்லாம் வழங்கப்படும் முருக்கமரம் erythrina எனப்படும் தாவரவினத்தைச் சார்ந்தது. கிட்டத்தட்ட 130 வகையைக் கொண்டுள்ள இந்த எரைத்ரினா இனத்துள்தான் முள்முருக்கு (அ) முள்முருங்கை எனப்படும் கல்யாண முருங்கையும் அடங்கும். சங்கப்பாடல்களில் கையாளப்பட்டுள்ள முருக்கம்பூக்களுக்கான உவமைகள் ரசிக்கவைக்கின்றன. பாடலாசிரியர்களின் கற்பனைத்திறத்தையும் இயற்கையோடியைந்த வாழ்வியலையும் காட்டும் அவ்வுவமைகள் என்னென்னவென்று அறிவோமா?


Erythrina coralloides

  
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப
(அகநானூறு 41 – குன்றியனார்)

முருக்க மரத்தின் கிளைகள்தோறும் பெரிய அரும்புகள் விரிந்து மலர்ந்திருக்கும், நெருப்பை ஒத்த மலர்களை கூட்டமாய் வண்டுகள் மொய்த்து ரீங்கரிக்கின்றனவாம்.


Erythrina coralloides

முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை – 
(பதிற்றுப்பத்து – பாலைக்கௌதமனார்)

தாழ வளர்ந்து தழைத்திருக்கும் முருக்கமரத்தின் கிளைகள், பூக்களைச் சொரிந்துகொண்டிருக்கும் காட்சி, ஆற்றங்கரைதனில் நெருப்பு எரிவதைப் போலத் தோன்றுகிறதாம்.


குவிமுகை முருக்கின் கூர்நுனை வையெயிற்று
நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும் 
(அகநானூறு – 317 – வடமோதங்கிழார்)

முருக்கமரம் பூக்களும் மொட்டுகளுமாகக் காட்சியளிக்கிறது. அந்த மொட்டுகளைப் பார்த்தால், கூரிய பற்களையும் ஒளிரும் முகங்களையும் கொண்ட பெண்களின் செஞ்சாந்து பூசிய நகங்களைப் போல இருக்கின்றனவாம்.


Erythrina coralloides

கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வாய் – 
(அகநானூறு –3 எயினந்தை மகனார் இளங்கீரனார்)

முருக்கம்பூவினை ஒத்த, காண்பதற்கு இனிய செவ்விதழைக் கொண்டவளாம் தலைவி.

முருக்கும் ஆம்பலும் மென்காவியும்  குமிழும் – என்று  சந்திரமதியின் இதழுக்கு முருக்கம்பூவை உவமை காட்டுகிறார் அரிச்சந்திரபுராணத்தில் நல்லூர் வீரகவிராயர்.


Erythrina coralloides


உதிரந் துவரிய வேங்கை உகிர்போல் எதிரி முருக்கரும்ப  
(ஐந்திணை ஐம்பது – பாலை – மாறன் பொறையனார்)

வேட்டையாடியதால் இரத்தக்கறை படிந்த புலியின் நகங்களைப் போன்ற மொட்டுகளை அரும்பி நிற்கிறதாம் முருக்கமரம் பருவத்தில்.

வெண்கோட்டி யானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய
முருக்கரும் பன்ன வள்ளுகிர் வயப்பிணவு
கடிகொள (அகநானூறு 362 – வெள்ளிவீதியார்)

வெண்ணிறத் தந்தங்களை உடைய யானையோடு சண்டையிட்டு, அத்தந்தங்கள் உடலில் பாய்ந்ததால் உண்டான புண் மிகுந்து, பசிய கண்களையுடைய ஆண்புலி கற்குகையினுள்ளே ஒடுங்கியிருக்க, முருக்கின் அரும்பினை ஒத்த கூரிய நகங்களையுடைய வலிய பெண்புலி அதற்கு காவல் இருக்கிறதாம்.


Erythrina crista-galli

வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன
செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தாஅய்..
(அகநானூறு –99  பாலை பாடிய பெருங்கடுங்கோ)

வாள் போன்ற வரிகளையுடைய வலிய புலியின் கொல்லுந்தன்மையுடைய பயங்கரமான நகங்களைப் போன்ற சிவந்த அரும்புகளைக் கொண்ட முள்முருக்க மலர்களை, தேன் உண்ணும்பொருட்டு வண்டுகள் சூழ்ந்தமையால் வாடி உதிர்ந்து எங்கணும் பரந்துகிடந்தனவாம்.

குருதி படிந்த புலியின் நகத்துக்குப் பொருத்தமான உவமை முருக்கம்பூவென்னும் காரணத்தால் இம்மரத்துக்கு புலிநகக்கொன்றை என்ற பெயரிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் புலிநகக்கொன்றைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று சொல்லக் கேட்கிறேன். அதன் படம் கிடைத்தால் பதிவிடுகிறேன். 

Erythrina coralloides


கூர்வாய் அழலகைந் தன்ன காமர் துதைமயிர்
மனையுறை கோழி மறனுடைச் சேவல்
போர்புரி யெருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண் குரல்
(அகநானூறு 277 - கருவூர் நன்மார்பனார்)

கூரிய அலகையும் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் போன்ற அழகிய செறிவான சிறகினையுடைய, மனையில் உறைந்திருக்கும் கோழியின் வீரமிகு சேவலானது மற்ற சேவலுடன் சண்டையிடும்போது கிளர்ந்தெழும்பி நிற்கும் அதன் கழுத்திறகுகளைப் போலக் காட்சியளிக்கின்றனவாம், முருக்க மரத்தில் தீப்போன்ற நிறத்துடன் ஒளிர்ந்து மலர்ந்திருக்கும் மலர்க்கொத்துகள்.


Erythrina crista-galli

எரியும் நெருப்பு, பெண்ணின் செவ்விய இதழ், பெண்ணின் செஞ்சாந்து பூசப்பட்ட நகம், புலியின் குருதி படிந்த கூரிய நகம், சேவலின் சிலிர்ப்பிய கழுத்திறகுகள் என எவ்வளவு அழகாக முருக்கம்பூவிதழின் வண்ணமும் வடிவமும் உவமிக்கப்பட்டுள்ளன. இன்னுங்கூட இருக்கலாம். நானறிந்தவற்றை மட்டுமே இங்கு சுட்டியுள்ளேன். 

மேலே காட்டப்பட்டிருக்கும் இரு வகை எரித்ரைனா பூக்களின் படங்களும் ஆஸியில் எடுக்கப்பட்டவை. பூக்களின் வடிவத்தையும் நிறத்தையும் கொண்டு, சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முருக்கம்பூக்களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். 

22 September 2015

பெண்ணறம் காக்கும் பேராண்மை
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்பது கவிமணியின் மணியான வரிகள். மாதவத்தின் பலனாகத்தான் மங்கையராய்ப் பிறந்திருக்கிறோமா? மங்கையரெல்லோருமே மாதவப் பலன்கள்தாமா?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கேட்டுப்பெறாமல் கிடைக்கிறதா? பெண் என்னும் காரணத்துக்காகவே பணியிடங்களிலும் பதவி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் ஒடுக்கப்படும் நிலைமை குறைந்திருக்கிறதா? கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் பெண்கள், திருமணபந்தத்துக்குள் நுழைந்தபிறகு காணாமல் போகும் நிலை மாறியிருக்கிறதா? குடும்பப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பின் முன், தங்களுடைய பணி, பதவி மற்றும் வாழ்க்கை இலட்சியங்களைப்பற்றி ஒரு பெண் சிந்திப்பதே தவறென்னும் சமூகத்தின் அழுத்தமானப் பார்வையில் சிறிதேனும் மாற்றமேற்பட்டிருக்கிறதா? திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் கீழாகச் சித்தரிக்கப்படும் பெண்மீதான கண்ணோட்டம் மாறுபட்டிருக்கிறதா? அவ்வளவு ஏன்? சராசரி குடும்பங்களிலேயே பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்துவாழும் நிலையிலுள்ள பெண்களின் நிலை மேம்பட்டிருக்கிறதா? பொருளாதார சுதந்திரம் இருக்கட்டும், அவர்களுடைய பொதுவெளி சுதந்திரம் அங்கீகரிக்கப்படுகிறதா? அவர்களுடைய கருத்துகளும் ஆலோசனைகளும் உதாசீனப்படுத்தப்படாமல் பரிசீலனைக்காவது ஏற்கப்படுகின்றனவா? பொருளாதாரச் சுதந்திரம் உள்ள பெண்களும், தாங்கள் சம்பந்தபட்ட முடிவுகளைத் தாங்களே தீர்மானிப்பதிலும், சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் தற்சார்புடையவர்களாய் இருக்கிறார்களா? மொத்தத்தில் பெண் என்பது வரமா? சாபமா? முட்டிக்கிளைத்து வருகின்றன கேள்விகள்.. விடைகள்தாம் கண்களுக்கு மறைவாய்.. காணாத்தொலைவில்!

கருவொன்று பெண்ணுருக் கொள்வதிலிருந்தே பெண்சார்ந்த பிரச்சனைகள் துவங்கிவிடுகின்றன. பெண்சிசுக்கொலை என்பது சட்டப்படி குற்றம் என்றபோதிலும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் சத்தமில்லாமல் இக்கொலைகள் நடந்தேறுவது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் பெண்சிசுக்கொலைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வறுமையும் வரதட்சிணைப் பிரச்சனைகளும்தான், பெண்சிசுக்கொலைக்கு, பெற்றவளே உடந்தையாகும் கொடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறிந்து அழிப்பதான செயல், சட்டத்தின் தண்டனைகளுக்குப் பயந்து ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, பெண்குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு கள்ளிப்பால் புகட்டியோ, நெல்மணி கொடுத்தோ கொல்லப்படும் மாபாதகச்செயல் மட்டும் இன்றும் தொடர்ந்தவாறிருப்பது கொடுமை.

சோதனையான இக்கட்டத்தையும் மீறி வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் சரியான போசாக்கின்மையாலும் படிப்பறிவின்மையாலும், உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மிகவும் பின்தங்கி வறியதொரு வாழ்க்கையை வாழநேரிடுவது ஒரு துர்பாக்கியம்.

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

என்னும் மகாகவியின் வரிகளுக்கேற்ப பெண்மக்கள் வீட்டுப்பொந்தில் ஒளிவதை விடுத்து, பள்ளிக்குச் சென்று பாடம் பயிலத் தலையெடுத்தால், அதற்கும் முட்டுக்கட்டை போட முனைகிறது ஒரு காமாந்தக வெறிநாய்க்கூட்டம். பச்சிளம் பெண்குழந்தைகளின் மழலைப் பருவத்திலிருந்தே துவங்கிவிடும் பாலியல் பயங்கரவாதங்கள், பள்ளி, கல்லூரி, பணியிடம், பொது இடம் என்று பல்வேறு நிலைகளிலும் பெண்ணைத் தொடர்ந்து அவளை முன்னேறவிடாமல் துரத்தியடித்து மீண்டும் அவளை மூலையில் முடக்கப் பார்க்கின்றன. பெற்றவர்தம்வயிற்றில் அன்றாடம் அமிலஞ்சுரக்கவைக்கும் இத்தகைய அச்சுறுத்தல்களால், இதுவரை வயது வந்த பெண்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்பட்டு வந்த நாம், இப்போது பச்சிளம்சிசுக்களின் பாதுகாப்பான வீடுதிரும்பலுக்காகவும் பரிதவிப்போடு காத்திருக்கவேண்டிய நிலை வந்துவிட்டது..

காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்த குடை தூக்கி – நல்ல
கல்விக்கழகமதை நோக்கி – காய்ச்சும்
பாலுக்கு நிகர் மொழிப்பாவை நீ செல்லுவதைப்
பார்க்கும் இன்பந்தானடி பாக்கி.

என்றொரு தாயின் ஆவலைப் பாடிய பாரதிதாசனார் இன்றிருந்தால்… செல்லுவதை மாத்திரம் அல்ல… நல்லபடியாக சென்று நல்லபடியாகவே வீடு திரும்பிவருவதையும் பார்க்கும் இன்பம் வேண்டுமென பாடியிருப்பார்.  

குழந்தைகளிடத்தில் நல்ல தொடுகை, தீய தொடுகை பற்றியெல்லாம் கற்றுக்கொடுத்து எச்சரிக்கையாயிருந்தாலும், சிற்சில சந்தர்ப்பங்களில் நம்முடைய பெருத்த நம்பிக்கைக்குரியவர்களே குழந்தையின் பால்யத்தை சிதைக்கும் செய்திகளை எவ்வளவு பார்க்கிறோம்.. கேட்கிறோம்.  கண்ணையும் கருத்தையும் இழந்துவிட்ட காமுகர்களுக்கு குழந்தையும் குமரியும் கிழவியும் ஒன்றாகத்தோன்றும் கீழான மனநிலையில் அவ்வரக்கர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்ப்பதென்பது அத்துணை எளிதன்று. சோதனைமிகுந்த அந்தக் கட்டத்தையும் தாண்டி பெண்குழந்தைகள் வளர்ந்து படித்து பட்டம்பெற்று பணியில் அமர்ந்தபிறகும், இச்சமுதாயத்தில் ஒரு பெண்ணாய் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சொல்லிமாளா.

வயதும் அறிவும் முதிர்ந்த ஒரு பெண்,  தன் மனத்துக்குப் பிடித்தவனை,  அவன் தன் சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கும்பட்சத்தில், அவனைத் தன்  வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறதா இச்சமூகத்தில்? சாதிமத இனவெறி பிடித்த சண்டாளர்களின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகும் காதலர்களின் கதையை நித்தமும் செய்தியாகக் கேட்டு, ‘உச்சுகொட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது நம் இயல்பு வாழ்க்கை. சாதீயத்தின் ஆதிக்கத்துக்கு இன்றும் பெண்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டிய நிலையிருப்பது மறுக்கமுடியாத உண்மை. அதேசமயம், ஒரு பெண், தனக்குப் பிடிக்காத ஒருவனை வாழ்க்கைத்துணையாக ஏற்க மறுக்கும் சுதந்திரத்தையாவது பெற்றிருக்கிறாளா என்றால் அதுவுமில்லை. அமில வீச்சுகளும் கழுத்தறுப்புகளும் காவு வாங்கிய அப்பாவிப் பெண்களை அத்தனை எளிதில் நம்மால் மறந்துவிடமுடியுமா?

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சிபெறச் செய்து வாழ்வமடி..

என்று பாரதியும்

மாவடு நிகர்விழிச் சின்னஞ்சிறுமியே நீ
மங்கை எனும் பருவம் கொண்டுகாதல்
வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு காட்டித்
‘தேவை இவன்’  எனவே செப்பும் மொழி எனக்குத்
தேன்! கனி! தித்திக்கும் கற்கண்டு.

என்று பாரதிதாசனும் பாடிவைத்தனர் அன்று.

என்னதான் ஒரு பெண், பொருளாதார ரீதியாக தன் சொந்தக்காலில் நிற்கும் திறமும், சுயமாய் சிந்திக்கும் அறிவும் பெற்றிருந்தாலும், இன்றும் அவளுடைய வாழ்க்கைப்பாதையைத் தீர்மானிக்கும் பொறுப்பும், தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் அவள்வசத்தில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

அடுத்து, பணியிடங்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள். ஆண் பெண் ஊதிய பேதம் முதலாவது. இது உலகளாவிய அளவிலேயே பெண்ணினத்துக்கு எதிராக நடைபெறும் ஒரு பெரும் அநியாயம். அடிமட்டக் கூலிவேலை பார்க்கும் பெண்கள் முதல் உயர்மட்டத் தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் வரை எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சம தகுதியுள்ள ஆண்களை விடவும் பெண்களுக்கு 34 சதவீதம் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்று ஒரு ஆய்வின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆணுக்கு நிகராகப் பாடுபடும் பெண்ணுக்கு அவளுடைய உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படுவது என்ன நியாயம்?

பொருளாதாரச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, பணிபுரியும் பெண்கள் அனைவருக்குமே முழுமையாக அது கிடைத்துவிட்டது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. இன்றும் பல பெண்கள், தனக்காகவோ, தன்னைப் பெற்றவர்களுக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ செலவு செய்யும் உரிமை மறுக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் தங்கள் கணவர்களிடம் கணக்கு காட்டவேண்டியவர்களாயிருப்பது, இன்னும் அவர்களுடைய நிலை மேம்படவில்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் வாசித்த, தோழி மு.கீதா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பெண்கள் கையில இருக்குற கரண்டிய பிடுங்கிட்டு 
கல்விய கொடுன்னார் பெரியார்...
கல்வியும் கொடுத்து கரண்டியும் பிடுங்காம 
ரெட்டை சுமை சுமக்க வைத்துவிட்டார்கள்.

எவ்வளவு உண்மை.… அலுவலகப்பணி, வீட்டுப்பணி என்று இரட்டைக்குதிரை சவாரி செய்யும் பெண்களை எண்ணி கழிவிரக்கம்தான் பெருகுகிறது. இத்துடன் குழந்தைவளர்ப்பும் அவள் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமை. பணியிடத்தில் முதுகொடிய வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் பெண், வந்தவுடன் ஆணைப் போல ‘அப்பாடா’ என்று ஒருநாளாவது அமரமுடிகிறதா? வரும்போதே, வந்தவுடன் இன்னின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்று மனக்கணக்குப் போட்டபடியேதானே வருகிறாள். பணிக்குச் செல்லும் மனைவிகளும் தங்களைப் போலத்தானே என்பதை என்றைக்குக் கணவர்கள் புரிந்துகொண்டு, மேலைநாடுகளைப்போன்று இங்கும் வீட்டுப்பணிகளிலும், குழந்தை வளர்ப்பிலும் தங்களைத் தயக்கமின்றி ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அன்றைக்குதான், பெண் தன் முன்னேற்றப்படிக்கட்டுகளில் ஒரு படி மேலேறியிருக்கிறாள் என்று சொல்லலாம். இதையெல்லாம் நாங்கள் செய்யாமலா இருக்கிறோம் என்று சிலர் கேட்கலாம். அங்கொன்று இங்கொன்று என்பதெல்லாம் பொதுநடைமுறைக்கு உதாரணங்களாகா அன்றோ?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என்றார் பாரதி. ஆனால் திறம்பிவிடுகின்றனர் பல மாதர்.

சமீபத்தில் நிகழ்ந்துள்ள பெண் காவலதிகாரியின் மரணம் ஒரு சான்று. ஒரு பெண் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும், ஆணுக்கு நிகரான மதிப்பு ஒருபோதும் இச்சமுதாயத்தில் அவளுக்கு வழங்கப்படுவதே இல்லை.. தமக்குக் கீழே பணிபுரியும் பெண்ணை, பெண்தானே என்று இளக்காரமாய் நோக்குவதும்… தமக்கு மேலே பணிபுரியும் பெண்ணை, ஒரு பெண் தம்மை ஆள்வதா என்ற பொருமலுடன் நோக்குவதுமான ஆணின் பொதுப்புத்தி, உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவளைத் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த அச்சுறுத்தல், பல நேரங்களில் பதவியோடு அவள் வாழ்க்கையையும் பலிகொண்டுவிடுகிறது.

என்னைப் போன்ற பெண் அதிகாரிகள் அனைவரும், உயரதிகாரிகளின் நெருக்குதலால், தவறான வழிகாட்டுதலால் சுதந்திரமாக செயல்பட முடியாதபடி உள்ளோம் என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுக்கிறார் ஒரு பெண் காவலதிகாரி. இதுவா பெண் முன்னேற்றம்? பெண் என்னும் காரணத்துக்காகவே பணியிடத்தில் தங்களின் செயல்பாடுகள் முடக்கப்படும் சூழலைப் பெண்கள் மனவுறுதியுடன் எதிர்கொள்வதே ஒரு மாபெரும் சவால். 

தந்தை பெரியார் சொல்கிறார்,

‘வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது – வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.’

ஆண்மக்கள் இக்கருத்தை ஒப்புக்கொள்ளும்நாள் வரை பெண்கள் தொடர்ந்து போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். சிலர் இதற்கு மாறுபடலாம், இன்று படித்து கைநிறைய சம்பாதிக்கும் இளம்பெண்கள் எல்லாம் முன்போலவா இருக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பலாம்; தன்னிச்சையாக செயல்படுவதோடு, பெண் சுதந்திரம் என்பதன் பொருளைத் தாறுமாறாகப் பிரயோகிக்கிறார்களே என்று ஆத்திரம் கொள்ளலாம். அளவுமீறிய சுதந்திரமும் தன்னிச்சைப்போக்கும் அவர்களைத் திசைதிருப்புகிறதே என்று ஆற்றாமையடையலாம்.

இன்றைய இளம்பெண்கள் சிலர் அவ்வாறிருப்பது உண்மையே.. மறுக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக அழுத்திவைக்கப்பட்ட ஒரு இனம், காலப்போக்கில் மெல்ல மெல்லத் தலையெடுக்க முயலும்போதெல்லாம் தட்டித்தட்டி வைக்கப்பட, பார்த்துக்கொண்டிருந்த ஒரு தலைமுறை சட்டென்று பீறிட்டுக் கிளைத்தெழுவதான ஒரு எழுச்சிதான் தற்போதைய இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம். பிறவிக் குருடனுக்கு திடீரென்று பார்வை கிட்டினால் எதைப் பார்ப்பது, எதை விடுப்பது என்று ஏற்படும் தடுமாற்றத்தைப்போன்றதுதான் இந்த இளந்தலைமுறையின் தடுமாற்றமும். சற்றே நிதானப்பட்டுவிட்டால் சமனிலை கிடைத்துவிடும். அதுவரையில் பல விமர்சனங்களையும் அவள் எதிர்கொள்ளத்தான் வேண்டும். காலங்காலமாய் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி அடக்கிவைத்திருந்த இனத்துக்கு இது மாபெரும் திடுக்கிடல்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள அந்த இனத்துக்கு இன்னும்சில தலைமுறைகள் தேவைப்படலாம்.

பொறுமை, தியாக உணர்வு, குடும்ப நல்லிணக்கம், உறவுபேணுந்திறன் போன்ற குணங்கள் பெண்ணுக்குத் தேவைதாம். ஆனால் அவற்றையே வேலிகளாகப் போட்டுக்கொண்டு சிறிய வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட பெண்கள் இடங்கொடுக்கக்கூடாது. சின்னச்சின்ன ரசனைகளுக்கும், தேவைகளுக்கும் அவளுடைய வாழ்வில் இடமிருக்கவேண்டும். தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் பிறரது தலையீட்டைத் தவிர்த்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அறியாமை என்னும் இருளில் மூழ்கி வாழும் அவலவாழ்வை வெறுத்துதறித் தள்ளி வெளியேற வேண்டும். அதுவே பெண்ணறம் என்கிறார் பாரதி.

அமிழ்ந்து  பேரிருளாம் அறியாமையில்
அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்

பெண்களின் மனத்தில் பெண்ணறம் இன்னதெனும் புரிதல் வேண்டும் என்றுகூறும் அதே வேளை, அந்தப் பெண்ணறத்தைப் பேணுவது அச்சமுதாயத்தின் ஆண்மக்கள் வீரமே என்றும் உரைக்கிறார் பாரதி.

பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயிற் பிறகொரு தாழ்வில்லை

அப்படியான வீரமிகு ஆண்மக்கள் வாழும் நாட்டில் பெண்ணுக்கு என்றும் தாழ்வில்லை என்று உறுதியளிக்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இக்கருத்தை வலியுறுத்தும் நிலையில்தான் நம் சமுதாயம் உள்ளது என்று எண்ணும்போது அந்நிதர்சனம் நெஞ்சைச் சுடத்தான் செய்கிறது.

ஆண்குழந்தைகளுக்கு வளர்பருவத்திலிருந்தே பெண்ணை மதிக்கவும், அவளுடைய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், பெண்ணின் உடல் மற்றும் உளம் சார்ந்த பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், பெண்குழந்தைகளுக்கும் தங்கள் மீதான மதிப்பையும் தங்களுடைய உரிமைகளையும் புரிந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பதும். ஆண் பெண் பேதவொழிப்பு நம் வீடுகளின் அடுக்களையிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். நல்ல புரிதலுடன் அது தொடருமானால், பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொதுவெளி, சமுதாயம், நாடு என்று பரவலாகப் பாலின பேதம் மறைந்து ஆணும் பெண்ணும் நட்புறவுடன் கைகோர்த்து, வருந்தலைமுறை யாவும் நலமாய் வாழ நல்லதொரு பாதை உதயமாகும்.

*******
(படம்: நன்றி இணையம்)
  
இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது. பெண்கள் முன்னேற்றம் – கட்டுரைப்போட்டிக்கென எழுதப்பட்ட இக்கட்டுரை, என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். – கீதா மதிவாணன்


17 September 2015

கான் ஊடுருவும் கயமை
நம்முடைய அடிப்படைத் தேவைகள் என்னவென்று கேட்டால் உணவு, உடை, உறைவிடம் என்போம். அந்த அடிப்படைத் தேவைகளுக்கு ஆதாரமான இந்தப் பூவுலகின் நலத்தில் அக்கறை செலுத்துகிறோமா? ஓசோன் படலத்தில் ஓட்டை, புவி வெப்பமயமாதல், நிலநடுக்கம், சுனாமி, சூறைக்காற்று, மிதமிஞ்சிய பனிப்பொழிவு என இயற்கை சீற்றங்கள், பருவந்தப்பிப்போதல் போன்ற சூழலியல் மாறுபாடுகளால் நாம் என்னென்னத் துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தபிறகும் கூட சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நம்மிடத்தில் பெருகியதா என்றால் பெரும்பாலும் இல்லையென்பதையே பதிலாய்த் தரவேண்டியதொரு இழிநிலை. இப்படியான ஒரு சூழ்நிலையில் மழை தரும் காடுகளை  அழித்து நம் அழிவுக்கு நாமே குழிதோண்டிக்கொள்வதை  அறியாமை என்பதா? அலட்சியம் என்பதா? அசட்டுத்தனம் என்பதா?  அடிமுட்டாள்தனம் என்பதா?

பூமியின் மொத்த நிலப்பரப்பில் காடுகள் வெறும் முப்பது சதவீதம்தான். அதையும் விட்டுவைக்க மனமில்லாமல் வேரறுத்துக்கொண்டிருக்கிறோம் நாம். பூமிப்பரப்பில் வாழும் பல்லுயிர்களுள் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் காடுகளில்தான் வாழ்கின்றன. அதனால்தான் கானுயிர் வளத்தில் கருத்தை வைப்பது அவசியமாகிறது.  

ஒவ்வொரு வருடமும் சுமார் எழுபத்தைந்தாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகின்றன என்கிறது புள்ளிவிவரம். எளிதாகப் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ஒரு நிமிடத்தில் அழிக்கப்படும் காடுகளின் பரப்பளவு இருபது கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவுக்கு சமம். இப்படியே போனால் எழுநூறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக உலக வரைபடத்திலிருந்து காடுகள் காணாமல் போய்விடும்.. மற்றக்காடுகளோடு ஒப்பிடுகையில் மழைக்காடுகளின் பரப்பு மிகவும் சொற்பம் என்பதால் அதையொழிக்க ஒற்றை நூற்றாண்டு போதும்.

காடுகளை அழிப்பதன்மூலம் இயற்கைச்சமன் சீர்குலைந்துபோவதைப் பற்றியோ, உணவுச்சங்கிலி அறுபட்டுப்போவது பற்றியோ சிந்தனைகள் நமக்குள் எழுந்ததுண்டா? கவலைகள் பிறந்ததுண்டா? சக மனிதவுயிர்களின் உரிமையையும் உணர்வையும் மதிக்கத் தெரிந்தவர்களே, மற்ற உயிரினங்கள் பற்றியும் அக்கறை கொள்வார்கள். சுயநலத்தின் பிடியில் சிக்கி சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் நாசகாரர்களுக்கோ புத்தி செயலிழந்து வெகுகாலமாகிவிட்டது. காட்டுவளம் எல்லாம் நாட்டுவளத்தை மேம்படுத்தும் நற்காரணிகள் என்ற எண்ணமெல்லாம் மறைந்து, காடுகள் யாவற்றையும் தனிமனிதச் சொத்துப்போல் பாவிக்கும் தன்னலப்போதையே தலைக்குள் வீற்றிருக்கிறது.  

வனங்களை அழிப்பதன் மூலம் வானுயர்ந்த மரங்களை மட்டுமல்ல, வனஞ்சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவராசிகளையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். நாமறிந்த, அறியாத மற்றும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத பல்லுயிர்களையும் மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறோம். இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருபத்தெட்டாயிரம் உயிரினங்கள் அழிந்துபோகநேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனிதன் மட்டும் ஏகபோகமாக வாழ்ந்துவிடமுடியும் என்று எவராவது கற்பனைக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தால் அதை முற்றிலும் தகர்த்துவிடவேண்டிய தருணம் இது.. காடுகளை இழந்தபின், மழையற்று, வளமற்று, விளையும் பயிரற்று, விலங்கற்று, பறவையற்று, பூச்சிகளும் புழுக்களுமற்று, மரமற்று, அண்ட நிழலற்று, பார்க்குமிடமெல்லாம் பாலையென வறண்டுகிடக்கும் பூமியின் வெம்மைத்தகிப்பில் உண்ணக் கவளச்சோறின்றி, தொண்டை நனைக்கத் துளி நீரின்றி, நாவறண்டு மரணிக்கப்போகும் மனிதகுலத்திற்கு, எலும்புகள்கூட எஞ்சப்போவதில்லை என்பதுதான் எதார்த்தம்.

வையம் வாழ, வையத்து உயிர்கள் வாழ்வாங்கு வாழ, கான் ஊடுருவலைத் தடுப்பதே நம் தலையாய கடமையாகும். கான் ஊடுருவும் கயமை எந்நாளும் மன்னிக்கத்தக்கதன்று, காரணம் எதுவாக இருப்பினும்! காடுவிட்டு விலங்குகள் வெளியேறக் காரணம் என்ன? யார்? யோசித்துப் பார்த்திருக்கிறோமா? நம்மைப்போல் நாடுபிடிக்கும் பேராசை விலங்குகளுக்கில்லை என்பது நாமறிந்ததே.

விளைநிலங்களை அழித்து வீடுகளையும், காடுகளை அழித்து விளைநிலங்களையும் உருவாக்கும் அபத்தங்களும், காட்டையொட்டிய பகுதிகளில் குடியிருப்புகளை விரித்துக்கொண்டே போவதும், வனப்பகுதிகளின் ஊடே சாலை அமைத்துப் வாகனப்போக்குவரத்தைப் பெருக்குவதும், அமைதியான இயற்கையான சூழலின் காற்றை வாகனப்புகைகளால் மாசுபடுத்துவதும், உரத்த சத்தமும் ஒலியும் எழுப்பி வனவிலங்குகளிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி அவற்றின் இயல்பு வாழ்க்கையைக்கெடுப்பதுமான நமது நியாயமற்ற செய்கைகளின் வெளிப்பாடுதான் காடுவாழ் விலங்குகளின் வெளிநடப்புகள்.

காட்டுயிரிகளின் வாழ்க்கையில் நாம் குறுக்கிடுகிறோம் என்ற எந்தக் குற்றவுணர்வுமில்லாது காட்டுக்குள் நாம் அத்துமீறி நுழையலாம்.. ஆடலாம், பாடலாம், ஆர்ப்பாட்டம் பண்ணலாம், குப்பைகளைப் போடலாம், நெகிழிப்பைகளை நெடுக எறியலாம், குடிக்கலாம், கும்மாளமிடலாம், மதுப்புட்டிகளை வீசியெறிந்து உடைக்கலாம், மரங்களை வெட்டலாம், மான்களை வேட்டையாடலாம். மனம்போல் எதுவும் செய்யலாம். ஆனால் ஒற்றை விலங்கு தப்பி ஊருக்குள் வந்தாலும், ஓட ஓட விரட்டி, அடித்து உதைத்து அதன் உயிரைப்பறித்து வெற்றுச்சடலஞ்சுமந்து வெற்றிச்செருக்கோடு ஊர்வலம் வருவது எந்த வகையில் நியாயம்? நாகரிகமடைந்த இனம் என்று சொல்லப்பட்டாலும் மனிதகுலத்தின் அடிமனத்தில் மிச்சசொச்சமிருக்கும் ஆதிகால வேட்டைவெறியும் குரூரமும், குருதிவேட்கையும் ஆவேசமாய்க் கிளம்பித் தங்களை வெளிப்படுத்தும் அநாகரிகத்தருணங்கள் அவை என்றுதான் சொல்லவேண்டும்.

காடுகளை அழிப்பதில் காட்டுத்தீக்குப் பெரும் பங்குண்டு. அந்தக் காட்டுத்தீயை உருவாக்குவதில் மனிதகுலத்துக்கு மாபெரும் பங்குண்டு. வனப்பகுதிகளுள் குடித்து கும்மாளமிட்டுவிட்டுக் கிளம்பும்போது மதுப்புட்டிகளை அங்கேயே வீசிவிட்டு வருவதைப் போன்ற ஆபத்தான, அராஜகமான, கீழ்மைத்தனமான செயல் வேறெதுவும் இருக்கமுடியாது. கடுமையான கோடையில் அந்தக் கண்ணாடிச் சில்லுகள் உருப்பெருக்கிகளைப் போல செயல்பட்டு, சூரிய வெப்பத்தை உள்வாங்கி காய்ந்த புற்களில் தீப்பொறியை உருவாக்குகின்றன. தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ எனப் பாரதி பாடியதைப் போன்று அந்த அக்கினிக்குஞ்சொன்று போதும்… அனலில் வெந்து தணிந்துவிடும் காடு.

அதுமட்டுமா, உடைந்த கண்ணாடிச்சில்லுகள், யானை, சிங்கம், புலி, சிறுத்தை போன்ற காடுவாழ் விலங்குகளின் மென்பாதங்களில் காயங்கள் உண்டாக்கி, சீழ் வைத்து, புழுக்கள் மொய்த்து, அழுகி கொஞ்சம் கொஞ்சமாய் நரகவேதனையோடு போராடிமடியும் வேதனையை நினைத்துப் பார்க்கவும் நெஞ்சம் வலிக்கிறது. யானைடாக்டர் சிறுகதையை வாசித்தவர்களால் யானை போன்ற பெரும் விலங்குகளுக்கு மனிதர்களின் சிறுமைப்பண்புகளால் உண்டாகும் ஆபத்துகளையும் அவதிகளையும் அறிந்துணரமுடியும்.

ஒரு கன்றை வளர்த்து செடியாக்கலாம், மரமாக்கலாம்.. ஒரு தோட்டத்தை உருவாக்கலாம்.. ஒரு தோப்பை உருவாக்கலாம். ஆனால் மனித முயற்சியால் ஒருபோதும் காடுகளை உருவாக்கமுடியாது. இந்த உண்மையை உணர்ந்தால் மாத்திரமே காடுகளை அழிப்பதைத் தவிர்க்கவும் தடுக்கவுமான முயற்சிகளில் நம்மால் ஈடுபடமுடியும்.

மரங்களை வெட்டி கானகங்களை அழிப்பவர்களுக்கு கிஞ்சித்தும் சளைத்தவர்களில்லை கான் ஊடுருவும் கயவர்கள். கானுயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும். கானும் கானுயிரும் அழிக்கப்படுவதன் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பெருக்கவேண்டும். காடுகளின் அவசியத்தை உணர்த்தவேண்டும். காகிதங்களைப் பயன்பாட்டிலிருந்து குறைத்து மாற்று ஏற்பாட்டுக்கு மாறவேண்டும். நம்மாலியன்ற அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சூழலை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதலை உண்டாக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க ஆரம்பித்தாலே போதும்… இன்னலில்லா உலகம் இனிதாய் உருவாகும். 
 
*******

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரை, என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். – கீதா மதிவாணன்

14 September 2015

புதுக்கோட்டையில் ஒரு பூந்தோட்டம்


புதுக்கோட்டையில் மலரவிருக்கிறது ஒரு பூந்தோட்டம் - ஆம் இது வண்ணவண்ண மலர்களால் ஆன பூந்தோட்டமன்று... வகை வகையான வலைப்பூக்களால் ஆன பூந்தோட்டம்நேரிலே வந்து வண்ணங்களைக் கண்டுகளிக்கவும் வாசங்களை முகர்ந்து ரசிக்கவும் என்னால் இயலவில்லையே என்ற ஏக்கம் மேலிட்டாலும்  இணையவழி அத்தனையும் இனிதே என்னைச்சேரும் என்ற மகிழ்வெண்ணம் மத்தாப்பூவாய் மலர்ந்து மனம் நிறைக்கிறது.
பதிவுலகில் கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா இவ்வருடம் அக்டோபர் மாதம் பதினொன்றாம் நாள் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள மகிழ்வான செய்தியை பதிவர்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதற்கான பலதரப்பட்ட முன்னடப்புகளும், சிறப்பான திட்டமிடல்களும், புதுமையான முயற்சிகளும், ஒற்றுமையான செயல்பாடுகளும், ஒழுங்குமுறைகளும் பதிவர்களாகிய நம்மைப் பெருமைப்படுத்தும் விஷயங்கள்.நூல் வெளியீட்டுடன் குறும்படவெளியீடுகள், தமிழிசைப் பாடல்கள், விருதுகள், சான்றோர் சிறப்புரைகள், புத்தகக் கண்காட்சி & விற்பனை போன்ற புதுப்புது முயற்சிகளோடு பதிவர்களுக்கான பல போட்டிகளையும் களமிறக்கியிருக்கும் புதுக்கோட்டைப் பதிவர்களுக்கும் உறுதுணையாயிருக்கும் மற்ற மாவட்டப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இந்த பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்கென்றே புதிதாக ஒரு வலைத்தளம் வலைப்பதிவர் சந்திப்பு -2015 திறக்கப்பட்டு திருவிழா தொடர்பான தகவல்களை அங்கு பரிமாறிக்கொள்வது சிறப்பு.
வலையுலகில் எத்தனையோ பதிவர்கள் இருந்தாலும் ஒருசிலருடன் மட்டுமே நமக்குப் பரிச்சயம் இருக்கும். பலரைத் தெரிந்துகொள்ள வலைப்பதிவர் கையேடு ஒரு பெரும் வாய்ப்பு. நம்மைப் பற்றிய விவரங்களோடு நம் வலைத்தளத்தை ஒரு ஆவணமாக பதிவு செய்யும்வகையில் தமிழ் வலைப்பதிவர் கையேட்டு முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்க ஒன்று. இதுவரை கையேட்டில் தங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிப் பதிவு செய்யாதவர்கள் இங்கு சென்று 20-09-15 --க்குள் பதிந்துகொள்ளுங்கள்.

விழா சிறப்புற நடைபெற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை கீழுள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பி உதவவேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியல் இங்கே.


NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

நித்தம் நித்தம் ஒரு புதிய தகவலோடும் அறிவிப்போடும் நம்மை சுறுசுறுவென திருவிழாவுக்குத் தயாராக்கும் பதிவர் சந்திப்புத் திருவிழாவின் தற்போதைய புதிய அறிவிப்பின்படி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவின் மற்றொரு அங்கமாக வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-போட்டிவிவரம் கீழே.

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

போட்டிவிதிகள் இங்கே 


ஐந்து வருடங்களாக வலையில் தொடர்ந்து எழுதிவந்தாலும் இதுவரை பதிவர் எவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பொதுவாகப் பதிவுலகில் மட்டுமல்லாது ஒவ்வொரு பதிவரின் உள்ளத்திலும் உற்சாகத்தன்மையும் குதூகலமும் குடிகொள்வதை மறுக்கமுடியாது. இம்முயற்சிகள் மூலம் புதிதாய்ப் பல வலைத்தளங்கள் துவங்கப்பட்டு இணையவழித் தமிழ் இன்னடை போடும் என்பதிலும் சந்தேகமில்லை. பதிவர்களின் கூட்டுமுயற்சியால் இவ்வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் பதிவர் சந்திப்புத் திருவிழா சிறப்புற நடைபெற நம்முடைய இதயபூர்வ ஒத்துழைப்பை இனிதே நல்கி, செயலூக்கத்துடன் பாடுபடுவோம்.. இணையத்தமிழின் இன்வளர்ச்சிக்குதவுவோம்.