Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

17 October 2015

மகிழ்வும் நெகிழ்வும் 2



புதுகை பதிவர் திருவிழாவின்
வெற்றியின் பின்னணியிலுள்ள நல்லுள்ளங்கள்.

புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெற்றிருப்பதில் அளவிலாத மகிழ்ச்சி. அன்று காலை முதலே நேரலை ஒளிபரப்புக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அதுகுறித்த அறிவிப்பு எதுவும் எங்கும் காணப்படாமையால் ஏதேனும் காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என்ற கலக்கம் ஏற்பட்டது. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்குழுவின் தளத்தில் என் ஐயத்தை வெளியிட்டேன். அடுத்த சில நிமிடங்களிலேயே பதிவர்களின் ஆபத்பாந்தவனான திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் நேரலை ஒளிபரப்புக்கான இணைப்பு கிட்டியது.


அரங்கில் நாமும்... 

உடனடியாக அந்த இணைப்பை கீதமஞ்சரியிலும் வெளியிட்டேன். மகிழ்வோடு கணவரிடம் காட்டியபோது, அவர், இதை பெரிய திரையிலேயே நீ பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி தொலைக்காட்சியின் அகன்றதிரையில் ஒளிபரப்பைப் பார்க்க ஏற்பாடு செய்துதந்ததோடு தானும் என்னோடு அமர்ந்து நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தார். பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நிகழ்வுகளை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தே.. அதுவும் உடனுக்குடன் பார்க்க முடிந்தது பெரிய வரம் என்றுதான் சொல்லவேண்டும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்த புதுக்கோட்டை பதிவர் குழாமுக்கும் ஒளிபரப்பிய யூகே இன்ஃபோடெக் நிறுவனத்துக்கும் என் அன்பான நன்றிகள் பல. சீருடை அணிந்து செவிக்கும் வயிற்றுக்கும் சிறப்பாக விருந்தோம்பிய பதிவர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள். 


விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவரும்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் சிறப்பிக்கப்படும்போது.. 

வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப்போட்டிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி. போட்டியில் உத்வேகத்துடன் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். போட்டிமுடிவுகளை இங்கு காணலாம்.  

த.இ.க. உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள்

போட்டிக்குப் பிறகான விமர்சனப்போட்டியின் வாயிலாய் பல நல்ல எழுத்தாளர்களையும் புதியவர்களையும் அடையாளங்காண முடிந்தது கூடுதல் சிறப்பு. எல்லோருமே நன்றாக எழுதியிருந்ததால் யாருக்குப் பரிசு கிடைக்கக்கூடும் என்று கணிப்பது பெரும் சவாலாகவே இருந்தது. அப்படியிருந்தும் ஓரளவு சிறப்பாகக் கணித்து இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்ற கலையரசி அக்காவுக்கும் திரு. துரை. தியாகராஜ் அவர்களுக்கும் பாராட்டுகள்.


பதிவர் கையேடு வெளியீட்டின்போது...

முனைவர் பழனி.கந்தசாமி ஐயா சுய அறிமுகத்தின்போது...

எனக்கானப் பரிசை தோழி மு.கீதா பெற்றுக்கொண்டபோது நானே நேரில் வந்து பரிசைப் பெற்றுக்கொண்ட மகிழ்வில் திளைத்தேன். மிகவும் நன்றி தோழி. கேடயம் என் கரம் சேர சில மாதங்களோ வருடங்களோ ஆகலாம் என்ற நிலையில், என் உளக்கிடக்கையைப் புரிந்துகொண்டு வெற்றிக்கேடயத்தை உடனடியாகப் படமெடுத்து எனக்கு அனுப்பிவைத்த கலையரசி அக்காவுக்கு நெஞ்சம் நெகிழும் என் நன்றி.

என் சார்பில் பரிசினைப் பெற்றுக்கொண்ட
தோழி மு.கீதாவுக்கு அன்பான நன்றி.  

விழாவின் நிகழ்வுகள் அனைத்துமே மனந்தொட்டன. பாடல், ஓவியம், கவிதை என்று பல்வேறு தளங்களிலும் சிறப்பானதொரு முத்திரை. புத்தகங்களை வெளியிட்ட கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கும் திரு.ரூபன் அவர்களுக்கும் பாராட்டுகள். விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் பேச்சும் பயனுள்ளவையாகவும் இணையத்தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சிகளை முன்வைப்பவையாகவும் இருந்தன. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய பேச்சு பதிவர்களுக்கு பலத்த நம்பிக்கை தருவதாக இருந்தது.


விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திரு. அ.ரவிசங்கர் அவர்கள்

விழா முடிந்த சில நிமிடங்களிலேயே கலையரசி அக்காவைத் தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் சொன்ன ஒரு தகவல் என்னை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விழா முடிந்தவுடன் எஸ்.ரா அவர்களிடம் என் புத்தகத்தைக் கொடுத்தபோது, அவர் கீதமஞ்சரியில் சில கதைகளை முன்பே வாசித்திருப்பதாகவும் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளதாகத் தெரிவித்ததாகவும் சொன்னார். பிரபல எழுத்தாளர்களும் நம் வலைப்பக்கத்தை வாசிக்கிறார்கள் என்றால் எழுத்தின் மீதான சிரத்தை இன்னும் பன்மடங்கு கூடுகிறது. எஸ்.ரா. அவர்கள் பேசும்போது, எல்லோருடைய பதிவுகளின் பக்கமும் செல்வதில்லை என்றும் அதற்கான நேரமும் இருப்பதில்லை என்றும் தெரிவித்த அவர், யாராவது பரிந்துரை செய்தால்மட்டும் அந்த வலைப்பக்கம் சென்று வாசிப்பது வழக்கம் என்று கூறினார். எனவே என் வலைப்பக்கத்தை யாரோதான் அவருக்குப் பரிந்துரை செய்திருக்க வேண்டும். அந்த நல்லுள்ளத்துக்கு என் அன்பான நன்றி.

எஸ்.ரா. அவர்கள் உரையின்போது...

ஒரு திருமணத்தை வெகு விமரிசையாக நடத்திமுடித்த ஆயாசத்தோடு களைத்திருக்கும் புதுகை பதிவர் சந்திப்புக் குழுவினருக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள குறையைக் கேட்டு மனம் வருந்துகிறது. பதிவு செய்த பதிவர்களில் பாதிப்பேர் வரவில்லை என்றும் வராததை முன்கூட்டியே தெரிவிக்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். வராமையை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் உணவு ஏற்பாட்டில் செலவைக் குறைத்துக் கவனமாக இருந்திருக்கமுடியுமே என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானதே.


தோழி மு.கீதா நன்றியுரையின்போது...

ஒருமாத காலத்திற்கும் மேலாய் ஊண், உறக்கம் அற்று ஓயாது உழைத்துச்சோர்ந்த நம் நட்புகளுக்கு உதவ முன்வருவோம்.. நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பதிவர்கையேடுகள் விற்பனையாகவேண்டும். அதற்கு நம்மாலான ஒத்துழைப்பை நல்குவோம். கையேடுகளைப் பெறுவதற்கான விவரங்கள் இங்கே. 

(படங்கள் அனைத்தும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு -2015 தளத்திலிருந்து நன்றியுடன் பகிரப்பட்டவை..)

11 October 2015

பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...

அன்பார்ந்த வலையுலக மற்றும் வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான்காம் ஆண்டு புதுகை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...







நிகழ்வைக் கண்டுகளிப்போம்... உறவுகளின் அன்பில் திளைப்போம்..
உடலால் விலகியிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்போம்... 
வாருங்கள் நட்புகளே..

(நேரலை ஒளிபரப்பின் சுட்டிகளை வழங்கிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு அன்பான நன்றி)

4 October 2015

வாசிப்போம்.. கணிப்போம்... வெல்வோம்.



புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள நான்காம் ஆண்டு பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்... விழாவுக்கான ஏற்பாடுகளில் தம்மை மும்முரமாய்  ஈடுபடுத்திக் கொண்டிருப்பதோடு,  புதுப்புதுப் போட்டிகளையும் அறிவித்து பதிவர்களையும் வாசகர்களையும் விறுவிறுப்பு குறையாமல் சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருக்கிறது விழாக்குழு அமைப்பு.

இதோ... இன்னொரு போட்டி அறிவிப்பு.

வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015 க்காக பதிவு செய்யப்பட்டுள்ள 260 படைப்புகளுக்கான சுட்டிகள் இங்கே

படைப்புகளை வாசித்து அவற்றுள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று நாம் கணிக்கும் படைப்புகளை வகைக்கு மூன்றாக 1,2,3 என்று வரிசைப்படுத்தித் தெரிவிக்கவேண்டும். கணித்த முடிவுகளை bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தின் மூலமும்  தெரிவிக்கலாம். 

நடுவர்கள் எடுத்துள்ள சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை கணிப்பவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/- அடுத்துப் பெரும்பான்மையான முடிவுகளைக் கணிப்பவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3000/-  மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000/-  என்று மொத்தப் பரிசுத்தொகை ரூ.10,000/- விழாவின்போது வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.



 போட்டியென்றால் விதிமுறைகள் இல்லாமலா... இதோ போட்டியின் விதிமுறைகள்...

1. யார் வேண்டுமானாலும் இந்தவிமரிசனக் கருத்துப் போட்டியில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

2ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.

3. ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.

4.  வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

5. மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

6. இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

7. விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

8. வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும்மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

9. மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

10.  போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.




போட்டிவிதிகளைப் பின்பற்றுங்கள்...
படைப்புகளைப் பொறுமையாய் வாசியுங்கள்..
முடிவுகளைக் கணித்து மின்னஞ்சல் தாருங்கள்..
வெற்றிக்கனியைப் பறிக்க விரைந்துவாருங்கள்.
பங்கேற்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

&&&&&

2 October 2015

கவின்மிகு அழைப்பைப் பாரீர்... இனிதே வருகை தாரீர்..



எண்ணப்பறவை சிறகடித்து 
விண்ணில் பறக்கின்றதே..
பண்ணோடதுவும் புதுகையேகும் 
பாதை பார்க்கின்றதே…

அழைப்பிதழ்கண்டு அகந்தனிலின்று
ஆர்வம் பிறக்கின்றதே...
பிழைப்பதனாலே போகவியலாமையாலே
மனமது மலைக்கின்றதே...


பதிவர் யாவும் ஒன்றாய்க்கூடும் 
பரவசம் புரிகின்றதே…
உதயமாகும் உற்சாகவெள்ளம் 
என்னிதயம் நனைக்கின்றதே…

நிறையவிருக்கும் அரங்கம்கண்டு 
நெகிழ்ந்து மகிழ்கிறதே…
சிறந்ததொரு நிகழ்விதுவென்று 
சிந்தையும் நிறைகிறதே…


கண்ணயரா உழைப்பு காட்சிப்படுத்தும் 
கவின்மிகு அழைப்பைப் பாரீர்….
எண்ணமது நிறைக்க எழுத்துலகு சிறக்க 
இனிதே வருகை தாரீர்…

அரும்பெரும் பணிகள் அரங்கேறக்கண்டு
ஆனந்தம் அடைந்திடுவோம்..
கரமதுகூப்பி விழாக்குழுவினர்தம்மை
வணங்கி வாழ்த்திடுவோம்...


14 September 2015

புதுக்கோட்டையில் ஒரு பூந்தோட்டம்


புதுக்கோட்டையில் மலரவிருக்கிறது ஒரு பூந்தோட்டம் - ஆம் இது வண்ணவண்ண மலர்களால் ஆன பூந்தோட்டமன்று... வகை வகையான வலைப்பூக்களால் ஆன பூந்தோட்டம்நேரிலே வந்து வண்ணங்களைக் கண்டுகளிக்கவும் வாசங்களை முகர்ந்து ரசிக்கவும் என்னால் இயலவில்லையே என்ற ஏக்கம் மேலிட்டாலும்  இணையவழி அத்தனையும் இனிதே என்னைச்சேரும் என்ற மகிழ்வெண்ணம் மத்தாப்பூவாய் மலர்ந்து மனம் நிறைக்கிறது.




பதிவுலகில் கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா இவ்வருடம் அக்டோபர் மாதம் பதினொன்றாம் நாள் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள மகிழ்வான செய்தியை பதிவர்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதற்கான பலதரப்பட்ட முன்னடப்புகளும், சிறப்பான திட்டமிடல்களும், புதுமையான முயற்சிகளும், ஒற்றுமையான செயல்பாடுகளும், ஒழுங்குமுறைகளும் பதிவர்களாகிய நம்மைப் பெருமைப்படுத்தும் விஷயங்கள்.



நூல் வெளியீட்டுடன் குறும்படவெளியீடுகள், தமிழிசைப் பாடல்கள், விருதுகள், சான்றோர் சிறப்புரைகள், புத்தகக் கண்காட்சி & விற்பனை போன்ற புதுப்புது முயற்சிகளோடு பதிவர்களுக்கான பல போட்டிகளையும் களமிறக்கியிருக்கும் புதுக்கோட்டைப் பதிவர்களுக்கும் உறுதுணையாயிருக்கும் மற்ற மாவட்டப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இந்த பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்கென்றே புதிதாக ஒரு வலைத்தளம் வலைப்பதிவர் சந்திப்பு -2015 திறக்கப்பட்டு திருவிழா தொடர்பான தகவல்களை அங்கு பரிமாறிக்கொள்வது சிறப்பு.




வலையுலகில் எத்தனையோ பதிவர்கள் இருந்தாலும் ஒருசிலருடன் மட்டுமே நமக்குப் பரிச்சயம் இருக்கும். பலரைத் தெரிந்துகொள்ள வலைப்பதிவர் கையேடு ஒரு பெரும் வாய்ப்பு. நம்மைப் பற்றிய விவரங்களோடு நம் வலைத்தளத்தை ஒரு ஆவணமாக பதிவு செய்யும்வகையில் தமிழ் வலைப்பதிவர் கையேட்டு முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்க ஒன்று. இதுவரை கையேட்டில் தங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிப் பதிவு செய்யாதவர்கள் இங்கு சென்று 20-09-15 --க்குள் பதிந்துகொள்ளுங்கள்.

விழா சிறப்புற நடைபெற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை கீழுள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பி உதவவேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியல் இங்கே.


NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

நித்தம் நித்தம் ஒரு புதிய தகவலோடும் அறிவிப்போடும் நம்மை சுறுசுறுவென திருவிழாவுக்குத் தயாராக்கும் பதிவர் சந்திப்புத் திருவிழாவின் தற்போதைய புதிய அறிவிப்பின்படி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவின் மற்றொரு அங்கமாக வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-



போட்டிவிவரம் கீழே.

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

போட்டிவிதிகள் இங்கே 


ஐந்து வருடங்களாக வலையில் தொடர்ந்து எழுதிவந்தாலும் இதுவரை பதிவர் எவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பொதுவாகப் பதிவுலகில் மட்டுமல்லாது ஒவ்வொரு பதிவரின் உள்ளத்திலும் உற்சாகத்தன்மையும் குதூகலமும் குடிகொள்வதை மறுக்கமுடியாது. இம்முயற்சிகள் மூலம் புதிதாய்ப் பல வலைத்தளங்கள் துவங்கப்பட்டு இணையவழித் தமிழ் இன்னடை போடும் என்பதிலும் சந்தேகமில்லை. 



பதிவர்களின் கூட்டுமுயற்சியால் இவ்வருடம் மட்டுமல்ல, வரும் வருடங்களிலும் பதிவர் சந்திப்புத் திருவிழா சிறப்புற நடைபெற நம்முடைய இதயபூர்வ ஒத்துழைப்பை இனிதே நல்கி, செயலூக்கத்துடன் பாடுபடுவோம்.. இணையத்தமிழின் இன்வளர்ச்சிக்குதவுவோம்.