27 March 2017

மின்னூல்கள் சில என்னூல்களென...



சிலேட்டுப் பலகையில் அ,ஆ என்று கைப்பிடித்து எழுதிப் பழகிய காலத்தில் நாலுகோடு நோட்டுப் புத்தகத்தின் மேல் கவனம் வைத்திருந்தோம். பென்சிலால் எழுதியழித்துப் பழகியபோது மைப்பேனாவின் மீது மோகம் கொண்டோம். கசியும் மைப்பேனாவை கையேந்திய போது பால்பாயிண்ட் பேனா மீது கண்வைத்தோம். கணினி வந்ததும் காகிதங்களைக் கைவிட்டோம். வலையுலகில் எழுத்தால் வலம் வந்தோம். கணினியில் ஏற்றியவற்றை மறுபடி காகிதத்தில் அச்சேற்ற ஆசை கொண்டோம்.. அச்சிலேற ஆகும் சில காலம் எனும்போது.. உடனுக்குடன் மின்னூலாக்கி உலகெங்கும் தவழவிட உவகை கொண்டோம். காத்திருந்த வாய்ப்பு நம் வாசல் கதவைத் தட்டக்கண்டோம். கரம்பற்றிக்கொண்டோம். வரிசையாய் நம் பதிவுலக நட்புகள் மின்னூலாக்கம் என்னும் அடுத்த கட்டத்துக்கு ஆர்வமாய் நகர்ந்திடக் கண்டு மகிழ்வில் துள்ளுகிறது மனம்.. அந்த வரிசையில் நானுமிருக்கிறேன் என்பதில் அகநிறைவு.

புஸ்தகா நிறுவனம் மூலம் இவ்வாய்ப்பினை அமைத்துக் கொடுத்த புதுகை கணினி தமிழ்ச்சங்கத்துக்கும் ஏற்பாடு செய்த நா.முத்துநிலவன் அண்ணனுக்கும் புஸ்தகா பற்றி விரிவாக எனக்கு எடுத்துச்சொல்லி ஊக்கமளித்த கலையரசி அக்காவுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.  

புஸ்தகாவில் வெளியான என் மின்னூல்கள்.. 
படத்தையோ தலைப்பையோ சொடுக்கி இணைப்புக்குச் செல்லலாம்.   






















புஸ்தகாவில் என் மின்னூல்கள் வெளியாகியிருப்பதைப் பகிரும் இவ்வேளையில் இந்நூல்கள் குறித்த நட்புகளின் விமர்சனங்கள் மனத்தை நெகிழவைக்கின்றன. 

என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் – சிறுகதைத் தொகுப்பு குறித்த தன் வாசிப்பனுபவத்தை மிக அழகாக தன் வலைப்பூவில் பதிவிட்டுள்ள வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். வாசிப்பில் பெரும் ஈடுபாடு கொண்ட அவருடைய விமர்சனம் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதாக உள்ளது. மிகவும் நன்றி வெங்கட்.

இதே தொகுப்பில் உள்ள ஒன்றும் அறியாத பெண்ணோ கதையுடன் தன் வாழ்வை ஒப்பிட்டு ஃபேஸ்புக்கில் சிலாகித்த மகாதேவன் அண்ணாவுக்கு என் அன்பான நன்றி.


நம் படைப்புகளை 
உலகளாவிய வாசகர்க்குக் கொண்டுசேர்க்கும் 
புஸ்தகா நிறுவனத்துக்கு 
நம் நெஞ்சம் நிறைந்த நன்றி. 

8 March 2017

மூதாய்களையும் வணங்கி... வாழ்த்துவோம்


படம் 1

படம் 2


முறத்தால் புலியை விரட்டிய...
முலையறுத்து வரிமறுத்த...
முன்னிருந்து படைநடத்திய...
முத்தமிழில் புலமை படைத்த...
மூதாதை வம்சம் வாழ்வித்த..
கைநாட்டும் காலத்திலும் தம்
பேர்நாட்டிய பாட்டி பூட்டிகளோடு
முடக்கப்பட்டு மூலையிற்கிடந்த
முக்காட்டுக்குள் வாழ்வு புதைத்த
இருண்ட கட்டுக்குள் சிறைப்பட்ட..
இருப்பும் மதிப்பும் உணரப்படாத..
செல்லாக்காசென ஜீவித்துமடிந்த..
எல்லாக்கிழவிகளையும் நினைவுகூர்வோம்..