25 May 2013

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4


மழையும் குளிரும் வாட்டும் வேளை, மக்கள் படும்பாட்டை விவரிக்கும் அழகு மேவிய வரிகள்!
 

குளிர்மாலைத் துயர் நினைத்து
மலர்மாலை புனையப் பயந்து
சிலமலர் சூடிடுவார் மகளிர்தம்
அடர்கூந்தல் அழகு செய்ய!

 
நறுமண விறகில் நெருப்பினை மூட்டி
அகிலோடு சாம்பிராணியும் பலவும் கூட்டி
முகிலென்றெழுந்த புகையினில் காட்டி
முடிப்பர் கூந்தலை வாசனை ஊட்டி!

 
கைவினைக் கலைஞன் செய்த
கலைநயமிக்க விசிறியெலாம்
சிலந்திவலைப் பின்னலோடு
வளைந்த ஆணியில் தொங்க....
 
 
இளவேனிற் காலத்தில்
இளந்தென்றல் காற்றால்
இதம் மேவும் பள்ளியறையின்
பலகணிக்கதவுகள் இரண்டும்
உலவுவாரில்லாக் காரணத்தால்
திறவாது கிடந்தன தாழிட்டு!

 
தொடர்மழைத் தூறலால்
இடர்மிகு வாடையால்
குறுங்கழுத்துப் பானையின்
குளிர்நீரைப்பருகத் துணியாது
அகன்ற சட்டியிலே அனலுண்டாக்கி
அதன் அருகே அமர்வர் யாவரும்.

 
குளிர்ந்த நரம்புகளால்
குறையுறும் இன்னிசையென்றே
திரண்ட மார்பணைத்து
யாழினுக்கு வெம்மையூட்டி
நிறைந்த பண்ணிசைத்தார்,
நயமிகு ஆடல்மகளிர்!

 
கணவரைப் பிரிந்து வாடும்
காதல் மகளிர் மேலும் வாட,
கனத்த மழை மிகுந்து
பனிக்காற்றும் தொடர்ந்ததே. 

************************************

நெடுநல்வாடைப் பாடல் (53-72)

கூந்தல் மகளிர் கோதை புனையார்;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக், 

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க 

வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக்  

கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; 

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீம்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப 

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால்
-----------------------------------------------------------------------

(படங்கள்: நன்றி இணையம்)

16 May 2013

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 3


மழைக்காலத்து மாலைப்பொழுதை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாடலாசிரியர்!
 
வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)


வெண்சங்குவளையல் முன்கையழகைக் காட்ட,

மீன் ஆடும் கம்மல் மென்செவிக்கு அழகூட்ட,
முத்தொளியை இதழ் விரிக்க,
புத்தொளியை விழி தெறிக்க,
 
 
தளிரிளம் கொடியிடை மகளிர்,
இளந்தளிர் கொடியிடை புகுந்து
கொய்த பிச்சியரும்புகள் யாவும்
பெய்த மழை காரணமாய்
பொழுது அறியாப் பொழுதிலும்
பழுதிலாது இதழ் விரித்து
அந்தி  இதுவென்று உணர்த்தி
முந்தி அதன் மணம் பரப்ப...

 

 
நெய்விளக்கேற்றிவைத்து
நெல்லோடு மலர் தூவித்தொழுது
இல்லுறை இறையை வணங்கி
வானகம் பொழியினும்
வாணிகம் பொலிவுறும்
அங்காடித் தெருவில்
கொண்டாடி மகிழ்ந்தார்..

மனைஉறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப 
கடியுடை வியல் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு பறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக் (45- 52)
 
 

இரவும் பகலும் இன்னதென விளங்காது
இரையுண்ணவும் முற்றத்தில் இறங்காது
அடுத்தமர்ந்து பெட்டையோடு
கடுத்த கால் மாற்றி இணைபுறா தவிக்க....

 
காவல் மிகுந்த இல்லங்களில்
ஏவல் பணிந்த வேலையாட்கள்
நறுமணமிகுந்த கத்தூரியை
கருநிற அம்மியில் அரைத்தெடுக்க....
 

வடநாட்டினர் தந்துவிட்ட
வெண்வட்ட சந்தனக்கல்
தென்னாட்டுக் கட்டைகளோடு
தீண்டுவாரற்றுக் கிடக்கும். 
படங்கள்; நன்றி இணையம்

11 May 2013

அன்னையர் தினம்


 



நான் அன்னையர் தினத்தை எதிர்நோக்கி அப்படியொன்றும் ஆவலுடன் காத்திருக்கவில்லை. மாறாக, அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன்  என்பதைப் பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்துக்கொன்டிருந்தேன். 
மூன்று வருடங்கள் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த குறுகிய கால சந்தோஷ வாழ்க்கையில், கிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாட்களுக்கான மாபெரும்  கொண்டாட்டங்களுடன் ஆலிஸ்க்கு இந்த அன்னையர் தினமும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. 
ஆலிஸ், அன்பு அம்மாவுக்கென்று (அப்பாவின் உதவியுடன் தான்) அனுப்பியிருக்கும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டே அதன் முக்கியத்துவத்தை எவரும் உணரமுடியும். 
இப்போது அவற்றை மீளவும் பார்க்கும் ஆர்வமெழவே, என் பொக்கிஷங்களை ரகசியமாய்ப் பாதுகாக்கும் அலங்காரக் கண்ணாடி மேசையின் கடைசி இழுப்பறையைத் திறந்து, அவற்றை வெளியிலெடுத்தேன். 
இது இப்போது வேண்டாத வேலையென்று உள்மனம் எச்சரித்தாலும், என்னை நானே கட்டுப்படுத்த இயலாத நிலையிலிருந்தேன். 
மூன்று வாழ்த்தட்டைகள்தாம் என்றாலும் ஒவ்வொன்றும் என் இதயத்துடன் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன. 
முதலட்டையில் பெரிய புஸு புஸுவென்ற முயல் குட்டியொன்று முத்தங்களுடன் ஒரு வாசகத்தையும் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. 
"இந்த உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்கு" 
இதைப்படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதே வாசகத்தைத் தாங்கி எத்தனை எத்தனை வாழ்த்தட்டைகள் எத்தனை எத்தனை அன்னையரிடம் அளிக்கப்படுகின்றன? 'இந்த உலகிலேயே தலைசிறந்த' அம்மாக்கள் என்று எத்தனை பேர்தான் இருக்கக்கூடும் 
அதன் கீழ் "இன்றைய தினம் அற்புதமாய் அமையட்டும், ஏனெனில் நீ கோடிகளில் ஒருத்தி!" என்று எழுதியிருந்தது. கீழே ஆலிஸின் பெயர். ஆனாலும் இதன் அர்த்தத்தை ஆலிஸ் அன்று அறிந்திருப்பாளா என்றால் நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் அன்னையர் தினத்தைப் பற்றியெல்லாம்? 
அந்த சுகமான தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பல ஏமாற்றங்களுக்கும், அவநம்பிக்கைகளுக்கும் பிறகு, நாங்களும் ஒரு குழந்தைக்குப் பெற்றோரானோம், அதுவும் அன்னையர் தினத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் என்பதே அந்நாளில் நம்பமுடியாத உண்மையாக இருந்தது.
இரண்டாவது அட்டை ரோஜா நிறத்தில் பளீரிடும் நாடாக்களால் ஒரங்கள் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரமாதமாய் இருந்தது.
அபோதெல்லாம் எங்கு வெளியில் சென்றாலும் ஆலிஸுக்கு ரோஜா நிற உடை உடுத்தியே எடுத்துச் செல்வது வழக்கம். இயல்பாகவே அமைந்த வட்டவடிவ முக அமைப்பு அவளை ஒரு ஆண்பிள்ளையென்றே பிறரை எண்ணச்செய்தது. அந்த எண்ணத்தை விரட்ட ரோஜா நிற உடைகள் உதவின. 
ஆலிஸுக்கு அப்போது இரண்டு வயது. அவ்வட்டையில் அவளே தன் கையால் ரோஜா நிற ஜெல் பேனா கொண்டு ஏதேதோ கிறுக்கியிருந்தாள். 
"அம்மா" என்ற வார்த்தையே ஆயிரம் கதை சொல்லும்போது அவளுக்கென்று தயாரிக்கப்படும் வாழ்த்தட்டைகளில் ஆயிரமாயிரம் கற்பனை பீறிட்டு வாராதோ?  ஒரு சிறுமியை தாய் அணைத்திருக்க, அவர்களைச் சுற்றிலும் ஏராளமான இதயங்கள்! 
ஆலிஸ் வெகுவிரைவிலேயே நடக்கத் தொடங்கிவிட்டாள். விடுவிடுவென்று விரைவாகவும் நடப்பாள். எங்கள் கூட்டு வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதல்ல, அவகாசத்தின்பேரில் அளிக்கப்பட்டது என்று எப்போது எங்களுக்குத் தெரியவந்ததோ, அப்போதிருந்து அவள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தி எங்களுடனேயே தக்கவைக்க பெரும்பாடு பட்டோம்.  
அதனாலேயே இந்த மூன்றாவது வாழ்த்தட்டை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. திறந்தால் இசைபாடும் அந்த அட்டையை நான் திறந்துகாட்டியதுதான் தாமதம், ஆலிஸ் அதை திறப்பதும் மூடுவதுமாய் நாள்முழுவதும் இசையை ஒலிக்கச்செய்த அந்நாட்கள் நினைவுக்கு வந்தன.
"நீ அதை வீணடிக்கத்தான் போறே!" 
என் எச்சரிக்கையை அவள் லட்சியம் செய்யவே இல்லை. ஒரு கள்ளப்புன்னகையுடன் என்னைப் பார்த்தபடியே அவள் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள்.
இந்த அட்டையில் அவளே அவள் பெயரை எழுதியிருந்தாள். அந்தப் பொன்னான தருணங்களை மீட்டெடுத்துக் கொண்டிருந்தன, அட்டைகள். வாழ்த்தட்டை அதுவே கூறிய வாழ்த்து போதாதென நினைத்தோ, என்னவோ ஆலிஸ் தன் பங்குக்கு இன்னும் எழுதியிருந்தாள். 
"அன்புள்ள அம்மா! எனக்கு அம்மாவாய் இருப்பதற்கு உனக்கு அளவிலா நன்றிகள்!" அழகாய் அவள் கைப்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 
நான்காவது அட்டையும் வரக்கூடும். ஆனாலும் சென்ற முறை கிடைத்த வாழ்த்தட்டையின் பெருமையை இனி வருபவை பெறுமா என்பது சந்தேகமே. 
கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. சட்டென சுயநினைவுக்கு வந்த நான், என்னை ஒரு முட்டாளைப் போல் உணர்ந்தேன். 
எவரிடமிருந்தும் அதிகம் வாழ்த்தட்டைகள் வரப் பெற்றிருக்காத, இனியும் பெற இயலாத பரிதாபத்துக்குரிய பழங்கால பாட்டிமார்கள் போன்று நானும் இவ்வளவு நேரம் இருந்திருப்பதை எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். அவர்கள் தங்களுக்கு பல வருடங்களுக்கு முன் வந்திருக்கக்கூடிய ஒரு சில வாழ்த்தட்டைகளை வைத்துக்கொன்டு பழங்கதை பேசி அதில் திளைப்பது வாடிக்கைதானே!  
நானும் ஆலிஸின் பழைய வாழ்த்தட்டைகளை வைத்துக்கொண்டு, கடந்தகால நினைவுகளில் மூழ்கி, நிகழ்கால சிந்தனையற்று  உட்கார்ந்திருப்பதை யாரேனும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? 
நிச்சயம் அவர்கள் வாயைத் திறந்து எதுவும் சொல்லமாட்டார்கள், எனக்குத் தெரியும். 
ஒரு பரிதாபப் பார்வையை வீசிவிட்டு, பேச்சை வேறுபக்கம் திசைதிருப்ப முயற்சிப்பார்கள். பெரும்பாலானோர் இப்படித்தானே செய்கிறார்கள், அந்த சம்பவத்துக்குப் பிறகு? 
மறுபடியும் கதவு தட்டப்பட்டது. இம்முறை பொறுமையற்று பலமாக தட்டப்பட, கதவுக்கு வெளியில் யாரென்பது திறக்காமலேயே விளங்கியது. 
அவசரமாக, இழுப்பறையில் அட்டைகளைப் பதுக்கிவிட்டு, கதவைத் திறந்தேன். குட்டி ஏவுகணையொன்று விருட்டென்று வீட்டுக்குள் புகுந்து என் கால்களைக் கட்டிக்கொண்டது. பின் அங்கிருந்து விடுபட்டு நேரே வரவேற்பறை பாய்ந்து தொலைக்காட்சியை முடுக்கி கண்களை மேயவிட்டது. 
"முதல்லே ஷூவைக் கழற்று, ஆலிஸ்!" 
என் வழக்கமான கத்தலுக்கு வழக்கம்போலவே அவள் செவிசாய்க்கவில்லை. பார்ப்பவர்கள் இந்த வீட்டின் எஜமானி அவள்தான் என்று நினைக்கக்கூடும். 
" ஹாய்!" 
தெரஸா, ஆலிஸின் மெய்க்காவலாளி (?) எதையோ சொல்ல விரும்புபவள் போல் இன்னும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். 
தெரஸா மட்டும் இல்லையென்றால் என் கதி என்னவாகியிருக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அதுவும் பள்ளி விடுமுறை நாட்களில்
ஆலிஸை தெரஸாவின் பொறுப்பில் விட்டுவிட்டு கவலையில்லாமல் அலுவலகம் போகமுடிகிறது. பணி முடிந்து வரும் வழியில் தினமும் அவளை தெரஸா வீட்டிலிருந்து அழைத்து வருவேன். 
இன்று, தெரஸாவே ஆலிஸை அழைத்து வருவதாக சொன்னாள். மேலும் என்னிடம் எதையோ தரவேண்டுமென்றும் சொன்னாள். 
அவள் கையிலிருந்த கடித உறைகளைப் பார்த்த நொடியே எனக்குள் பயம் அப்பிக்கொண்டது. அவள் தன்னுடைய பொறுப்பிலிருந்து விடுபட முன்கூட்டியே கடிதம் தரப்போகிறாள். 
இது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். தெரஸா திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். படிப்பு முடிந்து வேலை கிடைக்கும்வரைதான் ஆலிஸை அவளால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்திருந்தேன். 
"நான் உள்ள வரலாமா? இதை உங்களிடம் கொடுக்கணும்,"
அவள் என்னைப் பார்த்து வித்தியாசமாய் சிரிப்பது போலிருந்தது.
நான் தயங்கியபடியே பின்வாங்கினேன். "தயவுசெய்து...இப்போது இது வேண்டாமே, தெரஸா!" 
"ஏன்?" அவள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே சொன்னாள். "இதிலே என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியாது." 
"எனக்குத் தெரியும்னு நான் நினைக்கிறேன்." 
"நிஜமாவா?" 
அவள் இரண்டு கடித உறைகளையும் நீட்டினாள்.
"ஒண்ணு, உங்களுக்காக ஆலிஸ்கிட்டேயிருந்து. இதை அவளே தயாரிச்சா. மற்றது நான் உங்களுக்குக் கொடுக்கிறது."
எங்கள் உரையாடலைக் கவனித்த ஆலிஸ் வரவேற்பறையிலிருந்து துள்ளிக்குதித்து ஓடிவந்தாள். 
"என்னோடதுதான் முதல்லே......என்னோடதுதான் முதல்லே......" 
நான் அப்படியே செய்தேன். 
"உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்காக!" வாசகங்களைக் கண்டதும் என் கண்கள் பனித்தன.  
"இதை மத்த அட்டைகள் வச்சிருப்பீங்களே, யாருக்கும் தெரியாம, கடைசி டிராயர்ல! அங்கேயே வச்சிடவா? அப்பதான் இது தனியா இருக்காது!" 
ஆலிஸ் உரக்கக் கேள்வியெழுப்பினாள். எதுவும் சொல்ல இயலாமல் மெளனமாய் தலையசைத்தேன். அமைதியாய் அடுத்ததைப் பிரித்தேன். 
"பிரிச்சிப் பாருங்க.....பிரிச்சிப் பாருங்க......"ஆலிஸ் நிலைகொள்ளாமல் மேலும் கீழும் குதித்துக்கொண்டே உற்சாகத்துடன் பாடினாள். 
அது சென்ற வருடத்து அட்டையை அப்படியே ஒத்திருந்தது, அதே இசையைப் பாடியது. ஆனால் ஒரு சிறிய வித்தியாசமிருந்தது. 
"அன்புள்ள அம்மா" என்பதில் 'அம்மா' என்ற வார்த்தையின் குறுக்காக ஒரு கோடு கிழிக்கப்பட்டு அதற்குப் பதில் 'அப்பா' என்று எழுதப்பட்டிருந்தது. 
"இதெல்லாம் ஆலிஸோட யோசனைதான். நீங்க எதுவும் தப்பா நினைக்கமாட்டீங்கன்னு நம்புறேன்." 
தெரஸா அமைதியாய் புன்னகைத்தாள். 
"ரொம்ப அழகா இருக்கு!" என்னை நானே சமாளிக்க பெரும் பிரயத்தனப்பட்டேன். 
"அப்பா.... அப்பா! அம்மா மேலேயிருந்து இந்த கார்டையெல்லாம் பாப்பாங்களா?" 
"நிச்சயமா பார்ப்பாங்க, கண்டிப்பா பார்ப்பாங்க!" 
"இப்படிதான் தெரஸா ஆன்ட்டியும் சொன்னாங்க!" 
ஆலிஸ் உற்சாகத்துடன் கூறினாள். 
என் கையிலிருந்த உறையிலிருந்து எதுவோ நழுவிக் கீழே விழ, குனிந்து எடுத்தேன். 
திரையரங்கில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கட்டுகள். 
வியப்புடன் ஒன்றும் புரியாமல் தெரஸாவை ஏறிட்டேன். நாணத்தால் முகம் சிவந்துபோனது அவளுக்கு. 
"அது.... அது வந்து.... நீங்க என்னோட வருவீங்களான்னு தெரியல...... இருந்தாலும்..... ஒருவேளை... இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்லைனா..... வருவீங்கன்னு...." 
அவள் முடிக்கமுடியாமல் தடுமாறினாள். 
"ரொம்ப நன்றி, தெரஸா!"  
நான் பெரிதாய்ப் புன்னகைக்க, ஆலிஸ் தன் பிஞ்சுக்கரங்களை எங்கள் இருவரது கரங்களுடன் பின்னியபடியே எங்களுக்கிடையில் ஊஞ்சலாடினாள். 
இந்த அன்னையர் தினம் மிகப் பிரகாசமானதாகத் தோன்றியது எனக்கு. 
********************************

(மூலம்: Sophie King எழுதிய Mother's Day என்ற ஆங்கிலச் சிறுகதை.
தமிழாக்கம் மட்டுமே நான்)
படம்: நன்றி இணையம்.