3 May 2013

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 1


பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்று நெடுநல்வாடை. இதைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார்.  கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  

இந்தப் பாடலில் மதுரை மாநகரின் மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் மிக அழகாக வர்ணித்துள்ளதைக் கண்டு நான் வியந்து ரசித்ததை உங்களுடன் பகிரவிரும்புகிறேன். விளக்கத்தையும் எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் தரவுள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் அளவிடற்கரிய பேராசையே இம்முயற்சிக்கு மூலகாரணம். ஆதலால் கற்றவர் பிழை பொறுத்து குற்றம் காணுமிடத்து உரிமையுடன் திருத்தினால் மகிழ்வேன். 


இனி நெடுநல்வாடை பாடலும் விளக்கமும்...


  
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர்அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி நலிய,பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க, (1-8)பொய்யா வானமது!

பெய்தது வானமுது!

மலை தழுவிய முகிலால்
நிலம் தழுவியது நீர்!
நிலம் தழுவிய நீரால்
உடல் தழுவியது ஊதல்!
உடல் தழுவிய ஊதலது
உயிரைத் தழுவிடும் கூதலிது! 


 
இடையறாதப் பொழிவின் இடையூறால் நலிந்த
இடையர்கள் யாவரும் இடம்பெயர விழைந்து... 
 
மேய்ச்சல் நிலமதைப் பருகுவதுபோல்
பாய்ச்சலோடு ஓடிவந்த பாழ்நீர் கண்டு
ஓய்ச்சலின்றி ஓட்டினார் மந்தைதனை
காய்ச்சலற்ற மேட்டுநிலத்துக்கு.  
காந்தள் மலர்மாலை கழுத்திருந்து
ஏந்திய இதழ்க்கரத்தால் நீர்ச்சொரிய...

 

 வாட்டிய வாடையின் வாதை தணிக்க
மூட்டிய தீயின் முன்னேயிருந்து
காட்டிய கைகளை அக்குளில் பொத்தி
கூட்டிய வெம்மையும் உதவக் காணாது...  
கிடுகிடுவென்று பற்கள் தந்தியடிக்க
நடுநடுங்கியிருந்தார் மந்தைக்காவலர்.

 
 
 
மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ( 9- 12)

 
கூதல் தந்த மந்தத்தால்
மந்தைகள் மேய்ச்சல் மறக்க...
அங்கும் இங்கும் அலப்பும் மந்தியும்
ஓரிடம் குந்தி ஒடுங்கி நடுங்கியுமிருக்க....


 
 சிறகு உறைந்த பறவைகள்
உறைந்திருந்த சிறுகிளைகள்
விரைந்து வீசிய காற்றிலாட
விறைத்து அவை தரையில் வீழ..... 

பசிய புல்லையுந் துறந்து
பசுக்கள் முடங்கிக்கிடக்க...
பசியால் எழுந்த தவிப்பால்
சிசுக்கள் பால்மடி நெருங்க...

மன இரக்கமின்றி விரட்டப்பட்டன,
மடியிறக்கமின்றி வெருட்டப்பட்டன. 

தாயன்பால்
சுரக்கவேண்டிய தாயின்பால்
சுரக்கவில்லை தாயின் பால்! 

குன்றும் குளிரில்  நடுங்கிக்
குன்றும் கூதிர்நாள்  இதுவே!
 
(தொடரும்)

46 comments:

 1. தங்கள் எளிய நடை வியக்கும் வண்ணம் உள்ளது.

  பத்துப்பாட்டும் இந்த வெயிலுக்கு
  பதனீர் போல் சுகமளிக்கிறது.
  இத்தனை எளிதினில் பொருள் புரியுமென்றால்,
  இவ்வளவு நாள் ஏன் காத்திருந்தோம் ?

  அது சரி..
  இரண்டாவது பாட்டில் மடி என்னும் சொல்லுக்கு,
  மடி என்றால் சோம்பல் என்றும் பொருள் உண்டல்லவா?
  மடியிரக்கம் என்று சொன்னால் ?
  எனக்கு நோட்சுக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 2. அட! அட! அட! அருமை. எளிமையான தெளிவான விளக்கம்.

  ReplyDelete
 3. @sury Siva

  தங்கள் உடனடி வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் நன்றி சுப்பு தாத்தா.

  அது மடியிரக்கம் அல்ல, மடியிறக்கம். கன்றுக்கு ஊட்டினால்தானே கறவையின் மடியில் பால் இறங்கும்(சுரக்கும்)?

  நானே குளிரில் மேயவும் பிடிக்காமல் முடங்கிக் கிடக்கிறேன். உனக்கு பால் ஒரு கேடா என்று உதைத்து விரட்டினால்....? ஐயோ பாவம் அந்தக் கன்றுகள்!


  ReplyDelete
 4. //கிடுகிடுவென்று பற்கள் தந்தியடிக்க
  நடுநடுங்கியிருந்தார் மந்தைக்காவலர்.//

  ;)))))

  அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. புரிந்து கொள்ளும்படி எளிமையான வரிகள்... பாராட்டுக்கள்...

  இதுபோல் தொடரவும் வாழ்த்துக்கள் பல... நன்றி...

  ReplyDelete
 6. தமிழ்மணம் (+1) இணைத்தாயிற்று... நன்றி...

  ReplyDelete

 7. தமிழ் தெரியும் என்று சொல்பவர் சங்க காலக் கவிதைகள் படிக்கவேண்டும். பொருள் தெரியாது இருப்பதாலேயே படிப்பதில் ஆர்வம் குறைகிறது. இவ்வளவு எளிதாக பொருள் கூறி விளக்கும் உங்கள் பணி பாராட்டுகுரியது. ஆம்.. அவர்கள் ஏன் இவ்வாறு கடினமாகப் பாட்டு எழுதினார்கள்.? பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. மிக எளிதில் விளங்கும்படி எழுதியிருக்கீங்க கீதா .
  உங்கள் விளக்கம் மூலம்தான் கவிதை அழகாக புரிகின்றது எனக்கு

  ReplyDelete
 9. மிகமிக அருமை தோழி!
  எனக்கும் உங்கள் விளக்கமும் இப்படி அழகாக இலகுவாக அமைக்கும் கவிதைகள் மிக விருப்பமானதே. வாசித்து விளங்கவும் எழுதுவதையும் வாசிப்பவர் இலகுவாக புரியும் வண்ணம் எழுதுவதையே நானும் விரும்புகிறேன்.

  இப்படி எழுதுவதால் இப்ப இருக்கும் நம் தமிழ்மொழி அருகிவரும் நிலையில் படிப்பவர்கள் ஆர்வமுடன் படித்து மகிழ்வார்கள் என்பது என் கருத்து.

  முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள்...

  உடனுக்குடன் வந்து கருத்திடமுடியாமல்போனாலும் தாமதமாய் என்றாலும் வந்துபார்த்து கருத்தெழுதுவேன். மிக்க நன்றி தோழி!

  ReplyDelete
 10. கருத்தும் பொருள் விளக்கமும் எல்லோராலும் புரிந்து கொள்ளும் படி உள்ளது.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அசத்தல் கீதா! சங்கப் பாடலைப் புரிந்து ரசித்து, அதை எளிய தமிழில் கவிதையாக சிறு குழந்தைக்கு உணவை மசித்து ஊட்டும் அன்னை போல ரசனையாகத் தந்தமை வெகு சிறப்பு! இந்த விருந்தைத் தொடருங்கள்! மகிழ்வுடன் அருந்தக் காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 12. கோடையில் இந்த அக்னி நட்சத்திர நாளில் நெடுநல்வாடை பகிர்வு வெகு குளிர்ச்சியாக இருக்கிறது.
  குளிரில் வேலை ஏதும் செய்யாமல் முடங்கதான் விரும்பும் எல்லா உயிர்களும்.
  அருமையாக எளீமையாய் புரிந்து கொள்ள முடிகிறது.
  நெடுநல்வாடை விளக்கம் மிக நன்றாக இருக்கிறது கீதமஞ்சரி.
  வாழ்த்துக்கள், தொடருங்கள், தொடர்கிறேன்.

  ReplyDelete
 13. விளக்கம் அருமை. தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 14. முதலில் என்னுடையை பொற்கிழியைப் பெற்றுக்கொள்ளுங்கள்...
  ==
  மண்ணாலும் பாண்டியனோ
  மாபெரும் வள்ளலோ - அல்ல
  நானொரு சாதாரண கவிஞனே
  ஆயினும் என்னுள்
  குடிகொண்ட சங்கத்தின்
  தேனமுது பாடலை
  மழலைக்கும் புரிவாற்போல்
  இனிதாய் விளம்பிட்ட
  பெருங்கவியே உமக்காக
  என்னன்பு பொற்கிழி..
  ஏற்றுக்கொள்வீர் ஏகாந்தமாய்...
  =====
  நெடுநல்வாடை...
  அழகான குறிப்பு விளக்கம்
  எனைப்போன்று வெளிநாடுகளில் பணிபுரிவோர்
  இன்றும் இப்போதும். என்றும் எப்போதும்
  உணர்ந்துகொண்டிருக்கும் காவியம்
  இந்த நெடுநல்வாடை...

  ஒரே ஒரு வித்தியாசம் தான்
  இங்கே தலைவனும் தலைவியும்
  ஒரே எண்ணத்தால் உள்ளனர்..

  கொடிது கொடிது
  வாடை கொடிது
  அதனினும் கொடிது
  ஆரணங்கே (ஆதவனே) நீ அருகில் இலாத
  ஆட்கொல்லி வாடை...
  ====

  மீண்டும் மீண்டும்
  நெடுநல்வாடையை எமக்கு
  எளிய நடையில் விளம்பிட்ட சகோதரிக்கு நன்றிகள்...

  ReplyDelete
 15. நெடுநல் வாடையை ரசனையாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. கடலுக்குள் விழுந்து விட்டீர்கள். நமக்கினிக் கிட்டப்போவதெல்லாம் முத்துக்கள் தான்.

  பார்த்ததை எல்லாம் தமிழ் சொட்டச் சொட்ட தாருங்கள் கீதா. கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டு, மனதார மகிழ்ந்து, நெஞ்சாரக் கொண்டாடி, வயிறார தமிழ் விருந்தை உண்டு அனுபவிக்கக் காத்திருக்கிறேன்.

  முதல் முத்தின் செழுமையில் திளைத்துப் போனேன்.

  ReplyDelete
 17. அருமை கீதமஞ்சரி! பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி! வாழ்த்துகள்!

  ReplyDelete
 18. @இமா

  வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி இமா.

  ReplyDelete
 19. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 20. @திண்டுக்கல் தனபாலன்

  ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி தனபாலன்.

  ReplyDelete
 21. @G.M Balasubramaniam

  அந்நாளில் கற்றறிந்தோர்க்கு எளிதாகவே விளங்கியிருக்கலாம். இருந்தாலும் என் தமிழார்வத்தின் காரணமாக விளைந்த பதிவு இது. தவறுகள் இருக்கலாம். அறிந்தோர் திருத்தினால் அகமகிழ்வேன்.

  தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @angelin

  மகிழ்ச்சி ஏஞ்சலின். தொடர்ந்து வந்து ஊக்கமூட்டும் உங்களுக்கு என் அன்பான நன்றி.

  ReplyDelete
 23. @இளமதி

  உங்களுடைய இந்த ஊக்கம் தரும் பின்னூட்டம் இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது இளமதி. தொடர்ந்து வந்து கருத்திடலுக்கு மகிழ்வான நன்றி.

  ReplyDelete
 24. @கவியாழி கண்ணதாசன்

  தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மெத்த மகிழ்வும் நன்றியும் ஐயா.

  ReplyDelete
 25. @பால கணேஷ்

  இந்த முயற்சிக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்று தெரியாமலேயே ஆரம்பித்தேன். எளிமையாயிருக்கிறது என்பதை இதைவிடவும் அழகாய் சொல்லமுடியாது. மிகவும் நன்றி கணேஷ்.

  ReplyDelete
 26. @கோமதி அரசு

  ரசிப்புடனான அழகான மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 27. @vimal

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனங்கனிந்த நன்றி.

  ReplyDelete
 28. @மகேந்திரன்

  என் தயக்கத்தைத் துடைத்தெறிந்த அழகான பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன் மகேந்திரன். அற்புதமான கவிஞர் தாங்கள். தங்கள் கையால் பொற்கிழி பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறதே பெருமகிழ்வு. மிக்க நன்றி. வாடைக்காலத்தில் அந்நாளைய காதலர் தவிப்பை இந்நாளோடு ஒப்புமைப்படுத்தி வேதனை வெளிப்படுத்திய கவிதை கண்டு நெகிழ்கிறேன். ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு என் அன்பான நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 29. @இராஜராஜேஸ்வரி

  தங்களது வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 30. @மணிமேகலா

  அப்படியா சொல்றீங்க? பார்ப்போம் கிடைப்பதெல்லாம் முத்துக்கள் மட்டுமா? வெறும் சிப்பிகளும் சேர்கிறதா என்று... :)

  வருகைக்கும் உற்சாகம் தரும் அழகானப் பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றி மணிமேகலா.

  ReplyDelete
 31. @கிரேஸ்

  தங்களது வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மனங்கனிந்த நன்றி கிரேஸ். தவறு காணின் தயங்காமல் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

  ReplyDelete
 32. நானும் மிக ரசித்த நெடுநல் வாடை பாடல்கள் இவை மிக சிறப்பாக சரியான பொருள் உணர்த்தும் எளிய கவி நடை உங்களுக்கு கைவர பெற்று இருக்கிறது தோழி தொடர்ந்து ஒரு நூலாக்கம் செய்யும் அளவிற்கு நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் தமிழுக்கு இதைவிட வேறு எப்படி தொன்றாற்ற முடியும் வளரட்டும் வாழட்டும் தமிழும் அதனோடு நாமும் .......பாராட்டுக்கள் அறிய முயற்சிக்கு

  ReplyDelete
 33. Anonymous8/5/13 00:41

  @G.M Balasubramaniam

  அவர்கள் காலத்திய நடை அது.அவர்களுகு அது கடினமல்ல.
  என் காலத்திலேயே தமிழின் தலைகீழ் மாற்றத்தை உணர்கிறேன்..

  ஜெய புஷ்ப லதா.

  ReplyDelete
 34. Anonymous8/5/13 00:57

  தமிழன்னை கொஞ்சி விளையாடுகிறாள் கீதமஞ்சரியிடம்..

  எதை விடுத்து எதைக் கோர்த்து எதை பாராட்ட என்று தெரியவில்லை..புதுக் கவிக்கு உரையாக,விளக்கமாக
  உள்ளது..

  மேற்கோள் காட்டி பாராட்ட வேண்டுமெனில் அனைத்தையும் எடுத்து காட்ட வேண்டும்..

  தமிழ் சொற்களின் ஜால பின்னலால்
  மனம் களி கொள்கிறது.

  ஜெய புஷ்ப லதா.

  ReplyDelete
 35. @ஜெய புஷ்ப லதா

  முதல் வருகைக்கும் ஊக்கம் தரும் இனிய கருத்துரைக்கும் நன்றி லதா. உங்களிடமிருந்து கிடைத்துள்ள இப்பாராட்டு என் எழுத்தின் மீதான பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. மிக்க நன்றி.

  ReplyDelete
 36. @கோவை மு சரளா

  தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் கருத்தே நான் மிகவும் எதிர்பார்த்தது. சரியான பொருள் உணர்த்துவதாக நீங்கள் சொல்லியிருப்பதே பெரும் மகிழ்வையும் மனநிறைவையும் தருகிறது. மேலும் ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி சரளா.

  ReplyDelete
 37. Anonymous10/5/13 05:52

  புது விருந்து.
  நல் விருந்து
  மிக்க மகிழ்வு.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 38. அருமையாக உள்ளது.
  தொடருங்கள். நானும் தொடருகிறேன்.

  ReplyDelete
 39. அருமையான முயற்சி
  உள்ளம் குளிர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 40. பத்துப் பாட்டில் ஒன்றான, “நெடுநல் வாடை” என்ற நெடிய பாட்டிற்கு, சகோதரி கீதமஞ்சரியின் புதுக்கவிதை உரை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 41. @kovaikkavi

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.

  ReplyDelete
 42. @அருணா செல்வம்

  தொடரச் சொல்லி ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி அருணா செல்வம்.

  ReplyDelete
 43. @Ramani S

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 44. @தி.தமிழ் இளங்கோ

  தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 45. தோழி மிக அற்புதமான செயல் தங்களுடையது. வியந்து போனேன்.
  உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இப்போது வந்து படிக்கிறேன்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.