அந்நிய மண்ணில்
ஆதிக்கம் செலுத்தவந்தாயிற்று. தங்கள் சொந்தமண்ணில் வாழ்ந்ததைப் போன்றே வசதி வாய்ப்புகளுடன்
வாழ வழியும் செய்யவேண்டாமா? போக்குவரத்து, உணவு, இருப்பிடம் எல்லாவற்றுக்கும் சொகுசான
ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது. இனி பொழுதுபோக்கு அம்சத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான்
பாக்கி. ஐரோப்பிய கணவான்களின் இரத்தத்தில் ஊறிய வேட்டைக்குணம் சும்மா இருக்குமா? இங்கிருக்கும்
கங்காரு உள்ளிட்ட வேட்டைக்குப் பழக்கப்படாத விலங்குகளை வேட்டையாடுதல் அவ்வளவு சுவாரசியமானதாக
இல்லை. பழக்கத்தால் கை நமநமவென்று அரிக்க, வேட்டையாடிக் கொன்று களிப்பதற்கென்றே இங்கும்
சில விலங்குகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? குறுக்குபுத்தி வேலை செய்தது.
உலகையே வசப்படுத்த முடிந்த தங்களால் இதை சாதிக்கமுடியாதா என்ன? ஆதிக்கவாதிகளின் பேராசை
அடுத்த கட்டத்தை எட்டியது.
1850 வாக்கில்
ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதியாயின European Red Fox எனப்படும் ஐரோப்பிய செந்நரிகள்.
வேட்டை விளையாட்டுக்கென்று அறிமுகப்படுத்தப்பட்ட அவை உள்ளூர் மார்சுபியல் விலங்குகளையும்,
தரைவாழ் பறவைகளையும் உணவாகக்கொண்டு ஏராளமாய்ப் பெருகின. பத்தொன்பதாம் நூற்றாண்டில்
முயல்களின் அறிமுகம் காரணமாக உணவுக்கு தட்டுப்பாடில்லா வாழ்க்கையில் அபரிமிதமாய்ப்
பெருகி ஆஸ்திரேலியக் கண்டம் முழுவதும் தங்கள் இனத்தைப் பரப்பின. ஆஸ்திரேலியாவின் பல
அரிய மார்சுபியல் விலங்குகளும் பறவைகளும் அழிந்துபோனதற்கும் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருப்பதற்கும்
செந்நரிகள் ஒரு முக்கியக்காரணம்.
சிங்கம் புலி போன்ற
வேட்டையாடும் பெரு மாமிசபட்சிணிகள் இல்லாத இம்மாபெரும் நிலப்பரப்பில் நரிகளின் நாட்டாண்மைக்கு
சொல்லவேண்டுமா என்ன? டாஸ்மேனியாவில் ஏற்கனவே உள்ள மாமிச பட்சிணியான டாஸ்மேனியன் டெவிலின்
இருப்பால் செந்நரிகளால் அங்கு இருப்பைத் தக்கவைக்க முடியவில்லை. ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பிலும்
டிங்கோ நாய்கள் பரவலாக வசிக்கும் பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் ஓரளவு கட்டுக்குள்
இருப்பது ஆறுதல்.
நரிகளால் முயல்,
எலி போன்ற பயிரழிக்கும் பிராணிகளின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் நரிகளுக்கு அவை
இரையாகும் விகிதத்தோடு ஒப்பிட்டால் முயல், எலிகளின் இனப்பெருக்க விகிதம் மிகமிக அதிகம்.
மேலும் நரிகள் முயல் எலிகளை வேட்டையாடுவதை விடவும் எளிதில் கிடைக்கக்கூடிய பண்ணைகளில்
வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டிகளையே உணவாகக் கொள்வதில் பெரும் ஈடுபாடு காட்டுவதால் பண்ணையாளர்களுக்குப்
பெருத்த நஷ்டம். அது மட்டுமல்லாது, ரேபிஸ் போன்ற நோய்கள் பண்ணை விலங்குகளுக்கு பரவவும்
நரிகள் காரணமாகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மிகப்பெரும் பிரச்சனை.
செந்நரிகள் தங்கள்
பசிக்குத் தின்றது போக மிச்சத்தை அடுத்தவேளைக்காகவும் மண்ணுக்குள் பதுக்கிவைக்கும்
பழக்கமுள்ளவை. ஒரு நரி ஒரு நாளைக்கு 400 கிராம் மாமிசம் தின்பதாகக் கொண்டால் ஒரு வருடத்தில்
அது தின்னும் மாமிசத்தின் எடை சுமார் 150 கிலோ. பத்து நரிகள் எனில் வருடத்துக்கு ஒன்றரை
டன் மாமிசம் உணவாகக் கொள்ளப்படுகிறது. பண்ணை ஆட்டுக்குட்டிகளை நரிகளிடம் இழப்பதால்
பண்ணையாளர்களுக்கு ஏற்படும் வருடாந்திர நஷ்டம் இருநூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாம்.
(இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்)
ஆஸ்திரேலியாவின்
வடக்குப் பகுதி தவிர நாடு முழுவதும் ஒரு சதுரகிலோமீட்டர் பரப்புக்கு பத்து நரி என்ற
அளவில் பெருகிவிட்ட நரிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது என்பது இப்போது கைமீறிப்
போய்விட்ட ஒரு விஷயம். பண்ணைகளைச் சுற்றி உறுதியான வேலிகளை அடைப்பதன் மூலமும் கால்நடைகளைப்
பாதுகாக்கும் நாய்களை வளர்ப்பதன் மூலமும் பண்ணையாடுகளை நரிகளிடமிருந்து காப்பாற்றும்
முயற்சி ஓரளவு பலனளிக்கிறது.
நரிகள் அதிகமாக
உள்ள இடங்களில் பொறிவைத்தும் விஷம் வைத்தும் கொல்லப்படுகின்றன. இறைச்சியோடு கலந்து
வைக்கப்படும் விஷத்தால் மற்ற உயிரினங்களும் இறக்கும் வாய்ப்புள்ளது என்பதால் விஷ உணவு
மண்ணுக்கடியில் புதைக்கப்படுகிறது. நரியைத்
தவிர வேறெந்த மிருகமும் மண்ணுக்குள் இருக்கும் மாமிசத்தை மோப்பம்பிடித்துத் தோண்டி
உண்பதில்லை என்பதால் நரிகள் மட்டும் இதற்கு இரையாகின்றன.
ஐரோப்பிய வருகைக்குப்
பிறகு ஆஸ்திரேலியாவில் அழிந்துபோன சொந்த மண்ணின் உயிரினங்கள் கிட்டத்தட்ட இருபதுக்கும்
மேல் இருக்கலாம். பேன்டிகூட், பில்பி, எலிக்கங்காரு, க்வோல், முயல் வல்லபி போன்றவை
அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள உயிரினங்கள். ஒரு பக்கம் ஆடு, மாடு, எருமை, குதிரை,
கழுதை, ஒட்டகம், முயல் போன்ற தாவர உண்ணிகள் சொந்த மண்ணின் உயிரினங்களின் உணவையும் வாழ்விடத்தையும்
பங்குபோட்டுக்கொண்டு வாழவழியில்லாமல் செய்துவிட, இன்னொரு பக்கம் நரி, நாய், பூனை போன்ற
மாமிச உண்ணிகள் அவற்றை உணவாகக் கொண்டு இனத்தையே அழித்துக்கொண்டிருக்கின்றன.
மனிதர்களின்
பேராசையாலும் ஆதிக்க மனோபாவத்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி உயிரினங்கள்தாம்.
(தொடரும்)