15 October 2024

புல்லுருவியும் நல்லவையே!

 


1 யூகலிப்டஸ் மரத்தில் பூத்திருக்கும் புல்லுருவி

எங்கள் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன என்று சொன்னேன் அல்லவா? அம்மரங்களைக் கூர்ந்து கவனித்தபோது பெரும்பாலான கிளைகள் மேல்நோக்கி வளர்ந்திருக்க, சில கிளைகள் மட்டும் உடைந்துதொங்குவது போல நிலம் நோக்கியிருப்பதைப் பார்த்தேன். அந்தக் கிளைகள் மரத்தின் இயல்போடு ஒட்டாமல், சடைசடையாகத் தொங்கிக்கொண்டும், காற்று பலமாக வீசும்போது மற்றக் கிளைகளின் அசைவோடு பொருந்தாமல் கொழுகொம்பற்றக் கொடிகளைப் போல தனித்துக் காற்றிலாடிக் கொண்டும் இருக்கும். வசந்த காலத்தில் யூகலிப்டஸ் பூப்பதற்கு முன்பாக செக்கச் செவேலென்றோ மஞ்சள் சிவப்பு வண்ணத்திலோ கொத்துக்கொத்தாய்ப் பூக்களோடு காட்சியளிக்கும். எனக்கு அக்காட்சி விநோதமாக இருந்தது. ஏறுகொடி போன்ற அது என்ன தாவரம் என்று அறியும் ஆவல் மேலிட்டது. ஆனால் கண்டறிய இயலவில்லை. 

என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகள் உள்ளுக்குள் நச்சரித்துக்கொண்டே இருந்தன. இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோவின் Green planet என்ற தொலைக்காட்சி நிகழ்வாக்கத் தொடரில் விடை கிடைத்ததோடு மேலதிகத் தகவல்கள் என்னை வியப்பின் எல்லைக்கே இட்டுச்சென்றன. யூகலிப்டஸ் கிளைகளில் காணப்பட்ட அந்த வித்தியாசமான தாவரம் வேறொன்றுமில்லை, புல்லுருவிதான் அது. சிறுவயதில் எங்கள் வீட்டு மாமரங்களில் புல்லுருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை வேறுமாதிரி இருக்கும்.


2. புல்லுருவிகள் காற்றிலாடும் யூகலிப்டஸ் மரம்

3. வட்டத்துக்குள் இருப்பவைதான் புல்லுருவிச் செடிகள்

புல்லுருவி என்றால் என்ன? செழிப்பாய் வளர்ந்திருக்கும் பெரு மரங்களின் கிளைகளில் வளர்ந்து படர்ந்து மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரக்கூடிய ஒருவகை ஒட்டுண்ணித் தாவரமே புல்லுருவி ஆகும். அது கொடியாகவும் இருக்கலாம், செடியாகவும் இருக்கலாம், அல்லது மரமாகவும் இருக்கலாம். நல்ல நிலையில் இருக்கும் ஒன்றில் ஒரு கெட்ட விஷயம் வெளியில் தெரியாமலேயே மெல்ல மெல்ல உள்ளே ஊடுருவி கேடுவிளைவிக்கும் செயலுக்கு ‘நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல’ என்றொரு உவமைத்தொடர் சொல்லப்படும்.

4. மொட்டு வைத்திருக்கும் புல்லுருவிச் செடி

புல்லுருவிகளை குறைத்து மதிப்பிடுவது சரியன்று என்றும் இயற்கையின் அங்கமான அவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் நன்மை விளைவிப்பவை என்றும் உறுதிபடச் சொல்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த, பல வருடங்களாக புல்லுருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புல்லுருவி வல்லுநர் எனப் புகழப்படுகின்ற, டாக்டர் டேவிட் வாட்சன்.

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவிகள் இருப்பதாகவும் அவற்றுள் 97 வகை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை என்றும் குறிப்பிடும் அவர், புல்லுருவிகள் தாய்மரத்தை அழித்துவிடும் என்ற வாதம், நாயுண்ணிகள் நாயைக் கொன்றுவிடும் என்பதற்கு நிகரானது என்கிறார். புல்லுருவிகள் வளர்வதற்குத் தேவையான சத்துக்களைத் தாய்மரத்திலிருந்து பெற்றாலும் ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும் என்கிறார். மேலும் புல்லுருவிகளின் இலைகளும், பூக்களும், கனிகளும் பல உயிரினங்களுக்கு உணவாவதையும், அடர்த்தியான புல்லுருவித் தாவரம் மரக்கிளையில் அமைந்திருக்கும் புதர் போல பல பறவைகளுக்கு பாதுகாப்பான உறைவிடமாகவும் கூடு கட்ட வசதியாகவும் இருப்பதையும் சுட்டுகிறார்.

எங்கள் சுற்றுப்புற யூகலிப்டஸ் மரங்களில் எனக்குத் தெரிந்து வளர்ந்திருக்கும் புல்லுருவி இனங்கள் Fleshy mistletoe (Amyema miraculosa) மற்றும் Brush mistletoe (Amylotheca dictyophleba). 

5. புதர் போல் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும் புல்லுருவி

ஆஸ்திரேலியாவில் புல்லுருவிகளுக்கு அடைக்கலம் தந்திருக்கும் மரங்கள் அநேகம். யூகலிப்டஸ், வாட்டில், சவுக்கு, ஆல், பைன், மகடாமியா, மேலலூக்கா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுதேசி மரங்களோடு ஜகரண்டா, அரளி, மலைவேம்பு, சைகாமோர், மேக்னோலியா போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய மரங்கள் பலவும் அவற்றுள் அடக்கம். சில வகை புல்லுருவிகள் ஏற்கனவே மரத்தில் ஒட்டுண்ணியாக இருக்கும் மற்றப் புல்லுருவிகளின் மீது ஒட்டுண்ணியாக வளர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சிக்கொள்ளுமாம். ‘பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதைப் பிடுங்கினாராம் அனுமாரு’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா? 

6. புல்லுருவி வேர்ப்பகுதியில் மேக்பை கூடு

7. புல்லுருவியில் கூடு கட்ட இடம்பார்க்கும் நாய்சி மைனர் 

புல்லுருவிகள் வளர்ந்திருக்கும் உறுதியான யூகலிப்டஸ் கிளைக் கவைகளில் வருடந்தோறும் மேக்பை பறவைகளும் நாய்சி மைனர் பறவைகளும் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புல்லுருவிகள் பூத்திருக்கும் சமயத்தில் அவற்றில் தேனருந்த லாரிகீட் பறவைகள் கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கும். அப்போது காச்மூச், காச்மூச் என்ற அவற்றின் ஆரவாரச் சத்தம் காதைத் துளைக்கும்.

 

8. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட் பறவைகள்

9. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட்

ஐரோப்பாவைச் சேர்ந்த Viscum album என்ற புல்லுருவி மிகுந்த மருத்துவக்குணம் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. விஸ்கம் ஆல்பம் புல்லுருவியிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்து புற்றுநோய்க்கு  சட்டப்பூர்வமான மருந்தாகப் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் மட்டுமல்லாமல் கட்டி, வீக்கம், முடக்குவாதம், மலச்சிக்கல், உள்காயம், இரத்தக்கசிவு, வயிற்றுப்புண் என பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பியப் பாரம்பரிய மருத்துவத்திலும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

புல்லுருவி பற்றி தமிழில் வேறு ஏதாவது பழமொழிகளோ, சொலவடைகளோ, வட்டார வழக்குச் சொற்றொடர்களோ உள்ளனவா என்று தேடும்போது கிடைத்த பல தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. 

10. காய்ந்துபோன புல்லுருவியின் உறுதியான வேர் முடிச்சு

மூங்கில், மா, அரசு, புளி, வேம்பு, எருக்கு, எலுமிச்சை, நாவல், வில்வம், வன்னி, இலுப்பை, நெல்லி, மருதாணி, கருங்காலி, புங்கை, வேங்கை, பூவரசு, மருது, வாகை, எட்டி, கடம்பு, சந்தனம், ஆல், அத்தி, இலவம் என ஒரு மரம் விடாமல் நாட்டிலிருக்கும் அனைத்து மரத்துப் புல்லுருவிக்கும் (எப்படியோ தப்பிவிட்டது தைலமரம்) ஒவ்வொரு விதமான பலாபலன் உண்டு என்றும் ஆணையும் பெண்ணையும் வசியம் செய்ய ஒன்று, எதிரியை நாசம் செய்ய ஒன்று, செல்வம் குவிக்க ஒன்று, வியாபாரம் கொழிக்க ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு ஜெயிக்க ஒன்று, சூதாட்டத்தில் வெற்றி பெற ஒன்று என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வேர், பொடி, தாயத்து, மை, காப்பு, பூஜை என பல வடிவங்களில் புல்லுருவி வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. மந்திரம், மாந்திரீகம், வசியம், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் என ஒரு கூட்டம், பலவீனமான மக்களைக் குறிவைத்து தனி ட்ராக்கில் பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

11. வீட்டருகில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள்

புல்லுருவிகள் எப்படி அவ்வளவு உயரமான மரக்கிளைகளில் விதைகளை ஊன்றி வளர்கின்றன? 

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவி இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவை சார்ந்து வாழும் மரம், அந்த இடத்தின் தட்ப வெப்பச் சூழல், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் போன்றவற்றைப் பொறுத்து விதவிதமான முறையில் விதைபரவல்களை மேற்கொள்கின்றன. சில புல்லுருவிகள் குறிப்பிட்ட பறவைகள் மூலமே விதைகளைப் பரப்புகின்றன. பறவைகள் பிசுபிசுப்பான புல்லுருவிப் பழங்களைத் தின்றுவிட்டு எச்சமிடும்போதோ அல்லது அலகை மரத்தில் துடைக்கும்போதோ விதைகள் மரப்பட்டையின் இடுக்குகளில் சிக்கி வேர் பிடித்து வளர்கின்றன. சில புல்லுருவிகளின் விதைகள் முற்றிய நிலையில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வெடித்துச் சிதறி புதிய மரங்களைச் சென்றடைகின்றன.   

 

12. புல்லுருவிச் சிட்டு ஆண்

யூகலிப்டஸ் மரப் புல்லுருவிகளின் விதைபரவல் பத்து செ.மீ. நீளமும் பத்தே கிராம் எடையும் கொண்ட mistletoebirds எனப்படும் புல்லுருவிச் சிட்டுகள் மூலமே நடைபெறுகிறது என்று அறிந்து வியந்தேன். Dicaeidae எனப்படும் பூக்கொத்திக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளுள் ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரே பறவை Mistletoebirds தான் என்பது அவற்றின் தனிச்சிறப்பு. 


13 புல்லுருவிப் பூக்கள் (1)
 
14 புல்லுருவிப் பூக்கள் (2)

‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ என்றொரு பழைய பாடலைக் கேட்கும்தோறும் ‘சின்னப் பூங்குருவி நாளைக்கும் சேர்த்துத் தேடுதே’ என்ற வரிகள் உள்ளுக்குள் சிறு நெருடல் தரும். ‘வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை’ என்று பள்ளிக்காலத்தில் வாசித்த பைபிள் வாசகமும் உடனே நினைவுக்கு வந்துபோகும். ஆனால் ஆஸ்திரேலியப் புல்லுருவிச் சிட்டுகளைப் பற்றி அறிந்துகொண்டபோது நெருடல் தீர்ந்தது.  

புல்லுருவிச் சிட்டுகளின் உணவு புல்லுருவிப் பழங்கள்தாம். அவை புல்லுருவிப் பழங்களைத் தின்பதைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும். பழத்தைப் பறிக்காமல் தோல் காம்பிலேயே தொங்க, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுதியை மட்டும் அலகால் பிதுக்கி கொட்டையுடன் லபக்கென்று இவை விழுங்கும் நேர்த்தி வியக்கவைக்கும். அரை மணி நேரத்தில் பழத்தின் சத்தை உறிஞ்சிக்கொண்டு எச்சத்தின் மூலம் கொட்டையை வெளியேற்றும். ஆனால் பறக்கும்போதே போகிற போக்கில் எச்சம் விடாது. இன்னொரு மரத்தில் விதை விழுந்து முளைத்தால்தான் தனக்குத் தேவையான உணவு தொடர்ந்து கிடைக்கும் என்பது அந்த சின்னஞ்சிறு சிட்டுக்குத் தெரியும். எனவே மற்றொரு உயரமான யூகலிப்டஸ் மரக்கிளையில் அமர்ந்து எச்சமிடும். இக்கொட்டையைச் சுற்றி சளி போன்ற பிசுபிசுப்பான திரவம் ஒட்டியிருக்கும். அப்போதுதானே விதை மரக்கிளையில் ஒட்டிக்கொண்டு வளர ஏதுவாக இருக்கும்.

15. மாலைக் கதிரொளியில் யூகலிப்டஸ் மரம் புல்லுருவிகளோடு

புல்லுருவிச் சிட்டு எச்சமிடும் அழகும் தனித்துவமானது. பிசினுடன் கூடிய விதையை எச்சமாக வெளியேற்றிய பிறகும் அப்பிசினிலிருந்து விடுபடுவதற்காக கிளையில் அப்படியும் இப்படியுமாக நடன அசைவுகளைப் போன்ற அதன் அசைவுகள் Pre-poop dancing என்று சொல்லப்படும் அளவுக்குப் பிரசித்தம்.

புல்லுருவிப் பழத்தின் விதை கிளையோடு ஒட்டிக்கொண்டதும் முளை விட்டு அக்கிளையினைப் பற்றிக்கொண்டு அதன் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளர ஆரம்பிக்கும். பிறகு பூத்து காய்த்துப் பழங்களைக் கொடுக்கும். புல்லுருவிப் பறவைகள் அப்பழங்களைத் தின்று விதைகளை எச்சத்தின் மூலம் மற்ற மரங்களுக்குப் பரப்பும். இப்படியாக புல்லுருவித் தாவரங்கள் புல்லுருவிச் சிட்டுகளின் தயவால் தங்கள் வாழ்நாள் முழுவதும் மண்ணைப் பார்க்காமலேயே மரங்களிலேயே முளைத்து வளர்ந்து மடிகின்றன. புல்லுருவிச் சிட்டுகளும் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே விதைத்து உண்டு மகிழ்கின்றன.

பழத்தை சும்மா தின்றுவிட்டுப் போவோம் என்று இல்லாமல் நாளைக்கும் சேர்த்து விதைக்கிறதே. இந்தக் குருவியைத்தான் கவிஞர் பாடியிருப்பாரோ?


16. புல்லுருவிச் சிட்டு பெண்


17. புல்லுருவிச் சிட்டு ஆண்

தேன்சிட்டு அளவே உள்ள புல்லுருவிச் சிட்டுகளை நேரில் பார்க்க முடியுமோ முடியாதோ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் எங்கள் வீட்டின் பின்னால் இருக்கும் மரத்தில் வந்தமர்ந்து குரல் கொடுத்தன. விடுவேனா? சட்டென்று படம் பிடித்துவிட்டேன். 

18. அழகிய புல்லுருவிப் பூக்கள்


19. வழியில் கிடந்த புல்லுருவிப் பூ

புல்லுருவிப் பூவும் கூட ஒருநாள் எதிர்பாராமல் என் கைக்கு வந்தது. வாழையின் உதிரிப்பூ வடிவத்தில் பளீரென்ற மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் கீழே கிடந்த அதைக் கையிலேந்தி படம் பிடித்தபோது, காலம் காலமாய் தனக்கென்று ஒரு வாழ்வைத் தகவமைத்துத் தக்கவைத்திருக்கும் புல்லுருவி மீது மதிப்பு பெருகியது. 

*****

6 comments:

  1. புல்லுருவி குறித்த தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. படங்களும் தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் தங்களது தேடல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  2. புல்லூருவி பற்றிய செய்திகள் படங்கள் எல்லாம் அருமை.
    இறைவன் படைப்பில் ஒன்றும் வீண் இல்லை.
    புல்லூருவியும் நிறைய நன்மைகள் செய்கிறது.
    அருமையான பதிவு. படிக்க படிக்க வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு நன்மை செய்பவை தீமை செய்பவை என்று நாம்தான் அனைத்தையும் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால் இயற்கையின் படைப்பு ஒவ்வொன்றும் அதனதன் வாழ்வை அதனதன் வழியில் அதனதன் போக்கில் வாழ்ந்து முடிக்கிறது. உண்மைதான் மேம். கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  3. ’புல்லுருவி மரங்கள் மண்ணைப் பார்க்காமலே இந்த பூமியில் பிறந்து வளர்ந்து மடிகின்றன; புல்லுருவிச் சிட்டுக்களும் தமக்கான உணவைத் தாமே விதைத்துண்டு வாழ்கின்றன....’
    எவ்வளவு அபூர்வமான தகவல்கள் கீதா!
    இந்தப் புல்லுருவிக்குள் இத்தனை விடயங்களா என்று எண்ணி வியக்க வைக்கின்றன நீங்கள் கூறி இருக்கின்ற தகவல்கள்!
    உங்கள் பார்வைப் புலன் செல்லும் திசை எங்கும் கொட்டிக்கிடக்கின்றன எத்தனை ஆயிரம் வியக்க வைக்கும் விஷயங்கள்...
    உங்கள் சொந்த அனுபவங்களோடும் நீங்களே எடுத்த புகைப்படங்களோடும் கூடிய தகவல் பதிவு இன்னுமொரு படி மெருகும் சிறப்பும் பெற்ரு விட்டது.
    உங்களுக்குப் பாராட்டுக்கலைச் சொல்வதை விட நன்றி சொல்வதே பெரிதும் பொருந்தும் கீதா.
    மிக்க நன்றி உங்களின் அபூர்வமான ஆர்வத்திற்கும் தகவல் சேகரிப்புக்கும் அவற்ரை எங்கலோடும் பகிர்ந்து கொண்டமைக்கும்.
    ஆச்சரியமான அபூர்வ தகவல்களால் எங்களை மேலும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்!
    இந்த இயற்கை ஆர்வலருக்குத் ’தகவல் களஞ்சியம்’ என்று ஒரு பட்டமே வழங்கி விடலாம் போல இருக்கிறது.
    மேலும் இப்படியான விபரங்களுக்கும் தகவல்களுக்குமாகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் அறிந்து வியந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும்போது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இயற்கையை நேசிக்கும் உங்களைப் போன்றோர் பாராட்டும்போது கூடுதல் உற்சாகம் பிறக்கிறது. அன்பும் நன்றியும் தோழி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.