27 July 2025

தித்திக்குதே (4) மேப்பிள்

தேன், சர்க்கரைப் பாகு போலவே மேப்பிள் சிரப்பும் இனிப்புக்குப் பிரசித்தமானது. உலகளவில் பலராலும் விருப்பத்துடன் உணவில் பயன்படுத்தப்படுவது. மேப்பிள் சிரப்பை அப்படியேயும் பயன்படுத்தலாம். மிட்டாய், குக்கீஸ், கேக், டோநட் (doughnut) , பை (pie), புட்டிங்  (pudding), மில்க் ஷேக் போன்றவற்றில் இனிப்பூட்டியாகவும் பயன்படுத்தலாம்.

1. பான்கேக்கும் மேப்பிள் சிரப்பும்

எங்கள் வீட்டில்  Pancake செய்தால் மேப்பிள் சிரப் கட்டாயம் இருந்தாக வேண்டும். மேப்பிள் சிரப் பார்ப்பதற்கு தேன் போல இருந்தாலும் சுவை மாறுபடும்.  

2. மேப்பிள் மரத்தில் இனிப்பு நீர் வடித்தல்

மேப்பிள் சிரப் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா? மேப்பிள் மரத்தின் தண்டிலிருந்துதான். மேப்பிள் மர வகை நூற்றுக்கு மேல் இருந்தாலும் சிரப் தயாரிப்பதற்கு சில்வர் மேப்பிள், கருப்பு மேப்பிள், சிவப்பு மேப்பிள், மனிடோபா மேப்பிள், பேரிலை மேப்பிள், சுகர் மேப்பிள் என குறிப்பிட்ட சில மரங்களே உதவுகின்றன. இவற்றுள் முக்கியமானது Sugar maple எனப்படும் இனிப்பு மேப்பிள் மரம். இம்மரச் சாற்றில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருப்பதாலேயே இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Acer saccharum.

3. இனிப்பு நீர் சேகரிப்பு

ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்திற்கு முன்பு மேப்பிள் மரங்களின் தண்டு, கிளை, வேர் போன்ற பகுதிகளில் மாவுச்சத்து இனிப்பு நீராக சேமிக்கப்பட்டிருக்கும். மேப்பிள் சிரப் தயாரிப்பவர்கள், வசந்த காலத்தில் மேப்பிள் மரத் தண்டுகளில் துளைகள் இட்டு, சொட்டுச் சொட்டாக வடியும் இனிப்பு நீரை குழாய்கள் மூலம் கொண்டுவந்து மரப் பீப்பாயில் சேகரிப்பார்கள். பிறகு அது நன்கு காய்ச்சப்படும். நீர் முழுவதும் ஆவியான பிறகு கொழகொழப்பான சுவையான மேப்பிள் சிரப் கிடைக்கும். சுமார் 40 லிட்டர் இனிப்பு நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் சிரப்பின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு லிட்டர் மட்டுமே.

4. மேப்பிள் பட்டர்

தேன் போன்று அடர்த்தியான மேப்பிள் சிரப்பை தொடர்ச்சியாக சூடுபடுத்திக் கிளறிக்கொண்டே இருந்தால் கிடைப்பதுதான் மேப்பிள் சர்க்கரை. தூளாகவும் வெல்லம் போல் கட்டியாகவும் கடைகளில் கிடைக்கும். சிரப்பை விடவும் அதிக நாள் கெடாமல் இருக்கும். பாகுக்கும் சர்க்கரைக்கும் இடையே கிடைப்பது மேப்பிள் பட்டர் (maple butter) அல்லது மேப்பிள் க்ரீம். வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பாகை குறிப்பிட்ட வேகத்தில் கடையும்போது வெண்ணெய் போல திரண்டு வரும் இந்த மேப்பிள் வெண்ணெயை சாதா வெண்ணெய் போல பிரட்டில் தடவி உண்ணலாம். 

5. விற்பனையில் மேப்பிள் பட்டர்

மேப்பிள் மரத்திலிருந்து சிரப், சர்க்கரை போன்றவற்றை முதலில் தயாரித்த  பெருமை அமெரிக்கப் பூர்வகுடிகளையே சேரும். அமெரிக்க மற்றும் கனடா வாழ் பூர்வகுடியினர் ஆதிகாலத்திலிருந்தே இவற்றைத் தயாரித்து வருகின்றனர்.

மேப்பிள் சிரப்புக்கு அரசியல் பங்களிப்பும் உண்டு. அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிப்புப் போராட்டம் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டபோது, நாடு முழுவதும் பரவலாக கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக மேப்பிள் சர்க்கரை பயன்பாட்டுக்கு வந்தது. 


6. லுக்ரிடியா மோட்

அமெரிக்கச் சீர்திருத்தவாதியும் அடிமை முறை எதிர்ப்பாளரும் பெண்ணுரிமைப் போராளியுமான லுக்ரிடியா மோட், அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மேப்பிள் சர்க்கரையால் செய்யப்பட்ட மிட்டாய்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மிட்டாயைச் சுற்றியிருக்கும் தாளில் ‘நண்பனே, இதைத் தின்பதில் உனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை, ஏனெனில் இதன் உருவாக்கத்தில் எந்த அடிமையும் ஈடுபடுத்தப்படவில்லை’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது.  

7. இலையுதிர்கால மேப்பிள் இலைகள்

பருவ காலத்துக்கு ஏற்றபடி இலைகள் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் அழகுக்காகவே மேப்பிள் மரங்கள் பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, அரக்கு என இலையுதிர்காலத்தில் மேப்பிள் மர இலைகள் நிறம் மாறுவது அவ்வளவு அழகாக இருக்கும். இலையுதிர்காலத்தின் இறுதியில் மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்துவிடும்.

8. கனடாவின் தேசியக்கொடி

கனடா நாட்டின் தேசியக்கொடியில் இருப்பது மேப்பிள் இலையே. கனடாவின் தேசிய மரமும் மேப்பிள் மரம்தான். இனிப்பு மேப்பிள் மரம் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த நியூயார்க் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாநில மரமாகவும் உள்ளது. 

மேப்பிள் மரத்திலிருந்து சிரப், சர்க்கரை, வெண்ணெய் போன்றவை மட்டுமல்ல, மேப்பிள் மரத்தின் கட்டைகள் பேஸ்கட் பால் மட்டை, கூடைப்பந்து தளம் போன்றவற்றைத் தயாரிக்கவும், கிடார், வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகளின் பாகங்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

பொதுவாக மேப்பிள் மரங்கள் 200 முதல் 300 வருடங்கள் வரை வாழும். கனடாவிலுள்ள ஓன்டோரியா மாகாணத்தில் உள்ள 500 வயது மேப்பிள் மரம்தான் உலகின் மிகப் பழமையான மேப்பிள் மரமாகும்.

(படங்கள் உதவி: Pixabay & wikipedia)

No comments:

Post a Comment

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.