14 November 2018

அம்மாவின் கைவண்ணங்கள்


அம்மாவின் கைவிரல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அவை நம்முடையவை போல அல்ல, அசாதாரணமானவை. ஆனாலும் பல அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றவை. அறியா சிசுவாய் இருந்தபோது, சுடர் விடும் தீயைப் பழமென்று பற்ற, பச்சிளம் சிசுவென்றும் பாராது பிஞ்சு விரல்களில் பாதியைத் தின்றுவிட்டதாம் தீ. தின்றது போக எஞ்சிய, அம்மாவின் இடக்கை விரல்கள் முனை கருகிய மலரை எனக்கு நினைவுறுத்தும். ஆனால் கைராசி என்பார்களே, அது அம்மாவின் கைகளுக்கு அபரிமிதமாய் உண்டு. அவர் மண்ணில் ஊன்றிய எதுவும் பலன் தராமல் போனதில்லை.  நடக்கூட வேண்டாம்.  தொட்டுத் தூவினால் கூட விதைகள் அத்தனையும் விழித்துக்கொள்ளும். அம்மா, மரங்களின் மொழி அறிந்தவர். மரங்களுடனான சம்பாஷணைகளால் மனிதப் பார்வைகளில் விநோதமாய்ப் பார்க்கப்படுபவர்.

கோலத்தின் இழைகளை அவ்வளவு அழகாக லாவகமாக இழுப்பார். அம்மாவின் கைவேலைப்பாடுகள் அந்நாளில் அத்தனை பிரசித்தம். ஒயரில் எல்லாரும் கூடை போடும்போது, அவர் நாய்க்குட்டிகள் பின்னினார்.  கூடை, எம்பிராய்டரி, மணிகளாலான பூச்சாடி, சுவர் அலங்காரங்கள், புடவையில் ஜம்க்கி, குஞ்ச வேலைப்பாடு என அவரது கைகள் எதையாவது செய்துகொண்டே இருக்கும். இப்போது நாய்க்குட்டி பின்ன வரவில்லை, எண்ணிக்கை எல்லாம் மறந்துபோயிற்று என்று மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறார்.

நடையில் தடுமாற்றம், விரல்களில் நடுக்கம், பார்வையில் பழுது, இடுப்புவலி, மூட்டுவலி, கழுத்துவலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு மன அழுத்தம், முதுமைத் தளர்ச்சி, நினைவுத் தள்ளாட்டம்  யாவும் சேர்ந்துகொள்ள, அம்மா சோர்ந்திருக்கிறார். தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சியிலும் பலமுறை முயன்று தோற்றிருக்கிறார். ஆனாலும் மறுபடி மறுபடி எழுந்து நிற்கும் உத்வேகத்தை ஏதாவதொரு வடிவில் தன்னுள் கண்டு எழுகிறார்.  இதோ.. இப்போதும் அப்படியே..

நடை பழகும் குழந்தை தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்பார்க்கும் உற்சாகப்பாராட்டு போல அங்கீகாரங்கள் அவரது வாழ்நாள் ஏக்கங்கள். விருப்புகளும் ஆசைகளும் மறுக்கப்பட்ட வாழ்வில், இருப்பும் கேள்விக்குறியாகிப் போன சூழலில், மனோவசிய மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன அம்மாவின் விரல்களும் சாக்லேட் தாள், ரெடிமேட் சட்டை வரும் அட்டை, ஸ்பாஞ்ச், பெயரறியா மரத்தின் இலை, விதை, தொலி என குப்பையில் போகவிருப்பவற்றைக் கைக்கொண்டு மீள்சுழற்சியாய் அவர் கண்டறியும் சில கலைவேலைப்பாடுகளும்.   

கடந்த ஐந்தாண்டுகளில் அவ்வப்போது அவர் செய்த வேலைப்பாடுகள் சில எனக்கானத் தொகுப்பாகவும் அம்மாவுக்கான அங்கீகாரமாகவும்.