29 October 2015

கேல் கீரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?



கேல் என்னும் பரட்டைக்கீரை


கேல் கீரையை ஆஸி கடைகளில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பாவைத் தாயகமாய்க் கொண்ட இந்த கேல் கீரை, முட்டைக்கோஸ் வகையறாவைச் சேர்ந்தது. இளம்பச்சை, அடர்பச்சை, கத்தரிப்பூ நிறங்களில் காட்சியளிக்கும் இக்கீரைகளைக் கடைகளில் பார்த்திருந்தாலும் அவற்றின் கரடுமுரடானத் தோற்றம் காரணமாக வாங்கத் துணிந்ததில்லை. கேல் கீரையின் மகிமைகளை அறிந்தபிறகு சமீபகாலமாக வாங்கி உபயோகிக்கத் துவங்கியுள்ளேன். பீட்டா காரட்டின், விட்டமின் கே, விட்டமின் சி, கால்சியம் போன்றவற்றை அதிக அளவில் கொண்டு ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள கேல் (kale) எனப்படும் இக்கீரை சூப், சாலட், ஜூஸ், சிப்ஸ் போன்ற வடிவங்களில் மேலைநாட்டினர் பலராலும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு சத்து சேர்க்கும் அதே சமயம், நம் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கும் விசேடத்தன்மையும் வாய்ந்தது. ருசி எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் சோதனை முயற்சிகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. 

சோதனை முயற்சி - 1 
கேல் கீரை, காய்கறி, கொண்டைக்கடலை சூப்



கேல் கீரை கொண்டு வழக்கமாய் தயாரிக்கப்படும் சூப்பைத்தான் முதலில் முயன்றேன். கேல் கீரை, கேரட், காப்சிகம் எனப்படும் சிவப்பு, பச்சை குடைமிளகாய்கள், செலரித்தண்டு போன்ற காய்கறிகளை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி, குக்கரில் நிறைய நீர்விட்டு, நன்கு வேகவைத்தபின், தனியாக ஏற்கனவே வேகவைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையும் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் கலந்தால் அருமையான கலவையான சத்துநிறைந்த சூப் தயார்… தேங்காய்ப்பால் சேர்க்கவிரும்புவோர் இதில் சேர்த்துக்கொள்ளலாம். நான் வழக்கமாகத் தேங்காயை உணவில் சேர்ப்பதில்லை என்பதால் அதற்குப் பதிலாக பத்துப்பன்னிரண்டு கொண்டைக்கடலைகளை மசித்துச் சேர்த்தேன். சூப் சற்று கெட்டியாக, ஸ்பூனால்  எடுத்துண்பதற்கு வசதியாக இருந்தது. இதை முழுவேளை உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். வயிறு நிறைந்துவிடுகிறது. முதல் முயற்சி வெற்றி! 


சோதனை முயற்சி - 2 
கேல் கீரை சட்னி



என்னது, கீரையில் சட்னியா என்று வியக்கிறீர்களா? மணத்தக்காளிக்கீரைத் துவையல் பற்றி தோழி சண்முகவடிவும் இருவாட்சியிலைத் துவையல் பற்றி தோழி உமா மோகனும் முகநூலில் பதிவிட்டபொழுது, உங்களைப் போலத்தான் நானும் வியந்தேன். சரி, நாமும் முயன்று பார்க்கலாம் என்று துணிந்து கேல் கீரைச் சட்னி செய்தாயிற்று. முதல்முறை என்பதால் ருசி எப்படியிருக்குமோ என்றொரு தயக்கம் இருந்தது. அதனால் ஒன்றிரண்டு புதினா இலைகளையும் சேர்த்துக்கொண்டேன். வாணலியில் துளி எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலுடன், புதினா, கேல் கீரையை லேசாக வதக்கி ஆறவிட்டு கொஞ்சமாய் தேங்காய், புளி, உப்பு சேர்த்து அரைத்தெடுத்தேன். சுவை பிரமாதம்.  அடுத்தமுறை புதினா இல்லாமல் செய்துபார்க்கவேண்டும்.


சோதனை முயற்சி - 3 
கேல் கீரை + மாங்காய் சாம்பார்

  

கீரை + மாங்காய் சாம்பாருக்கென்று ஒரு தனித்த ருசி உண்டு. முளைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என்று எந்தக் கீரையும் மாங்காயோடு கூட்டு சேரும். கீரை மாங்காய்க்குழம்பு என்றாலே ஒரு பிடி சோறு கூடுதலாய் உள்ளே செல்லும். இத்தனைக் கீரைகளோடு கூட்டு சேரும் மாங்காய், கேல் கீரையோடு கூட்டு சேராதா என்ன? அடுத்த முயற்சியும் வெற்றி… வெற்றி… கேல் கீரை மற்றக் கீரைகளைப் போல எளிதில் குழைவதில்லை… அகத்தி, முருங்கை மாதிரி கொஞ்சம் விறைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ருசிக்குக் குறைவில்லை…


சோதனை முயற்சி 4 
கேல் கீரை கடையல்



முளைக்கீரையும் பூண்டும் வேகவைத்துக் கடைந்து உப்பு, நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் அமுதம்தான்... முளைக்கீரை கிடைக்காதபோது, கிடைக்கிற கீரையில் செய்துபார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற… அடுத்த முயற்சி.. கேல் கீரையை ஆய்ந்து, அலசி, பூண்டுப்பற்கள், மிளகுப்பொடி, சீரகம், உப்பு சேர்த்து லேசாக ஆவிகாட்டி பச்சைநிறம் மாறாமல் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டு சுற்று சுற்றி இறக்கினால் சுவையான கீரை கடையல் தயார். நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டாயிற்று… ஆஹா… வேற்றுக்கீரை என்ற வித்தியாசமே தெரியவில்லை… அபாரம்…


கேல் கீரையை இயன்றவரை நம்முடைய உணவுமுறைக்குப் பழக்கியாகிவிட்டது.. நம்மையும் அதற்குப் பழக்கியாயிற்று. பரஸ்பர புரிதல் வந்தபின் இனியென்ன பிரச்சனை? கீரைக்கூட்டு, கீரைத் துவட்டல், கீரை பஜ்ஜி, கீரை வடை என்று விதவிதமாய் வெளுத்துக்கட்ட வேண்டியதுதான்.. தாயகம் விட்டு அயல்தேசங்களில் வசிப்போர், நம் நாட்டில் கிடைக்கும் கீரை, காய்கறி, பழ வகைகள் இங்கு கிடைப்பதில்லையே என்று ஆதங்கப்படாமல் ஆங்காங்கு, அந்தந்த பருவத்தில் கிடைக்கும் கீரை, காய்கறி, பழங்களை உண்ணப் பழகிவிட்டால் ஆரோக்கியக்குறைகளைப் பெரிதும் தவிர்க்கமுடியும் அல்லவா?  

 &&&

பிற்சேர்க்கை: 

kale என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்தக் கீரைக்குத் தமிழில் 'பரட்டைக்கீரை' என்ற பெயர் என்னும் தகவலைப் பின்னூட்டத்தின் வழி தெரிவித்த (துளசிதரன் தில்லையகத்து) கீதாவுக்கும், (காகிதப்பூக்கள்) ஏஞ்சலினுக்கும் மனமார்ந்த நன்றி. 
என்னவொரு பொருத்தமான பெயர்! 

&&&&

சோதனை முயற்சி 5 
கீரை பஜ்ஜி




கேல் கீரையை ஆய்ந்து நன்கு அலசிவிட்டு நீரைப்பிழிந்தெடுத்தபின், சிறிது வெங்காயம், புதினா, மல்லித்தழைகளுடன் க.மாவு, உப்பு, மி.தூள் சேர்த்து மிதமாய் நீர்விட்டுப் பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் கீரை பஜ்ஜி தயார்.. இது நேற்றைய சோதனை... இதுவும் பிரமாத வெற்றியே.. . 

26 October 2015

நரிக்குறவர் இனவரைவியல் – நூலறிமுகம்






நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் தந்துள்ளார் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மாணவி கரசூர் பத்மபாரதி அவர்கள். இவர் புதுவை பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழிற்புலத்தில் முதுகலை மற்றும் இளமுனைவர் பட்டங்கள் பெற்றவர்.

இந்நூலுக்கு கிட்டத்தட்ட எட்டுப்பக்கங்களுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்  முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் (மானிடவியல் துறை – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி)

அணிந்துரையிலிருந்து ஒரு பத்தி…  

\\இந்திய ஆரிய மொழிச் சமூகமான நரிக்குறவர் இந்தியா முழுமைக்கும் புலம்பெயர்ந்து நிலைநிறுத்திக் கொண்டுள்ள அசைவியக்கத்தை இந்த இனவரைவியல் முனைப்புடன் எடுத்துரைக்கிறது. மேலும் கருத்தூன்றி நோக்குவோமானால் ஒரு சமூகத்தையும் பண்பாட்டையும் நுட்பதிட்பத்துடன் அறிய விழைவோருக்கும் இந்நூல் ஓர் அரிய கைவிளக்காக அமைகிறது. பழமைச் சமூகங்களின் வாழ்வு முறையும், சமூக, பொருளாதார, சமய, கலை, அறிவியல் முறைகள் இத்துணைக் கண்டத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் எவ்வாறான தன்மைகளைக் கொண்டிருக்கின்றன என்னும் புரிதலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாய் ‘நரிக்குறவர் இனவரைவியல்’ அமைகிறது\\

நரிக்குறவர் இனவரைவியல் குறித்த தன் ஆய்வுகளின் போது தனக்கேற்பட்ட அனுபவங்களை கீழ்க்கண்டவாறு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் கரசூர் பத்மபாரதி அவர்கள்.

\\தொடக்கத்தில் பணம், பொருள், கடன் வசதி என எதையாவது எதிர்பார்த்து தரவுகளைக் கூற ஆரம்பித்த நரிக்குறவர்கள் பழகிய உடன் உறவுக்காரர்களைப் போல் பாசத்துடனும் பண்புடனும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மணிக்கணக்கில் அமர்ந்து என்னுடன் பேசினார்கள். செய்திகளைத் தந்தார்கள். வேட்டையாடினால்தான் அன்றைய பிழைப்பு என்றாலும், நான் அவர்களுடைய குடியிருப்புப் பகுதிக்குச் சென்றுவிட்டால் படிக்கிற பெண் நம்மைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறதே என்று எண்ணி தங்கள் வருமானத்தைக் கூட ஒரு பொருட்டாகக் கருதாது என்னுடன் அமர்ந்து பலமணி நேரம் பேசினர்.

எனக்கும் அவர்களுடைய நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவை குமட்டலைத் தந்து வாந்தியெடுக்கும் உணர்வை ஏற்படுத்தியது என்றாலும் சகிப்புத்தன்மை வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்தேன். அதை எனக்குக் கற்றுத்தந்தவர்கள் நரிக்குறவர்கள். மேலும் சுறுசுறுப்பு, கடின உழைப்பு, கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சூழலில் இன்புற்று வாழும் நிலை போன்றன பிடித்தமான செயல்கள். கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு மிருகங்களைப் பலியிட்டு பச்சை இரத்தம் குடிப்பது அச்சத்தை உண்டாக்கும் செயல்கள். பண்பாட்டுச் சார்புடைமை (cultural relativism) படித்ததால் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு களப்பணி செய்தேன்.\\

இந்நூலில் பரவலாகக் காணப்படும் பல தகவல்கள் நரிக்குறவர் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையானக் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கக்கூடியவை எனலாம். நாம் முற்றிலும் அறிந்துகொள்ள விரும்பாது ஒதுக்கியும் உதாசீனப்படுத்தியும் வைத்துள்ள ஒரு சமூகத்தை, அதனுள் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதுடன் வாசித்து முடித்ததும் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நமக்கு உண்டாவது உண்மை.

பொதுவாக குறவர்கள் என்று வழங்கப்படும் இனத்துக்கும் இந்த நரிக்குறவர் இனத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள்.  முருகக்கடவுள் குறத்தியாகிய வள்ளியை மணந்துகொண்ட கதை பலரும் அறிவர். ஆனால் நரிக்குறவர்கள் என்பவர்கள் வேறுவகையானவர்கள். அவர்கள் நாடோடிகள். தமிழகத்தில் குடியேறிய சமூகத்தினர். இந்நூலிலிருந்து நரிக்குறவர் வாழ்வியல் குறித்து நான் அறிந்துகொண்ட சில தகவல்களை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

நரிக்குறவர்கள் குஜராத், மேவார் போன்ற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருக்கலாம் என்பது அவர்களுடைய பூர்வீகக் கதைகளின் மூலம் தெரியவருகிறது. முகலாயப் படையெடுப்பின் பிறகு அவர்களுக்குப் பயந்து காடுகளில் வசிக்கத் தொடங்கிய அவர்கள் காடுகளைச் சார்ந்தே தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர்.  

தமிழகத்தில் ஏறக்குறைய எழுபது வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக் குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. நரிகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம் வால் கொம்பு முதலியவற்றை விற்பதாலும் குறிப்பிட்ட இனத்தை நரிக்குறவர் இனம் என்பதாகத் தெரிகிறது.

நரிக்குறவர்களின் பேச்சுமொழியான வாக்ரிபோலிக்கு எழுத்துவடிவம் கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் வாழாமல் ஊர் விட்டு ஊர் சென்றுகொண்டே இருப்பதால் அந்தந்த இடத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி இவற்றைத் தங்கள் வாழ்க்கையோடு கலந்துவிடுகின்றனர். இவர்கள் பேசும் மொழியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது, குஜராத்தி உள்ளிட்ட இருபத்துநான்கு மொழிகள் கலந்துள்ளனவாம். ஒரு வரியில் குறைந்தபட்சம் மூன்று மொழி வார்த்தைகள் கலந்திருக்குமாம்.

நரிக்குறவர்கள் அவர்கள் வணங்கும் கடவுளைக் கொண்டும் பலியிடும் மிருகங்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகிறார்கள். ஆட்டுக்கடாவைப் பலியிடுவோர் ஒரு வகை. எருமைக்கடாவைப் பலியிடுவோர் இன்னொரு வகை. துர்க்கை, காளி, மாரியம்மன் என்று சக்தியின் வடிவங்களைத் தெய்வங்களாக வணங்குகின்றனர்.

நரிக்குறவர்கள் கூட்டமாகவே வாழ்கின்றனர். மற்ற சமூகத்தினருடன் கலந்து உறவு வைத்துக்கொள்வதில்லை. தங்கள் குழந்தைகளை தங்களுடைய பாரம்பரிய வழிமுறையின்படியே வளர்க்கின்றனர். ஆண்கள் வேட்டையாடியும் பெண்கள் ஊசி, பாசிமணி, சீப்பு போன்றவற்றை விற்றும் தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான பொருளீட்டுகின்றனர். வெற்றிலை புகையில் போட்டுக்கொள்வர். கள், சாராயம் குடிப்பது வழக்கம். இக்கூட்டத்தில் முதியவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. முதியவர்கள் வகுத்துள்ள கட்டுப்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் திருமணத்துக்கான செலவைத் தாங்களே சம்பாதித்து சேர்த்துக்கொள்ளவேண்டும். பதினான்கு பதினைந்து வயதிலிருந்தே ஆண் பிள்ளைகள் தங்கள் திருமணத்துக்காக சேமிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

நரிக்குறவர் சமூகத்தில் பெண்களின் நிலை உயர்வாகவே உள்ளது. பெண் குழந்தைகளை விரும்பிப் பெற்றுக்கொள்கின்றனர். திருமணத்தின் போது பெண்ணுக்கு ஆண் வீட்டாரே பரிசப்பணம் தந்து மணம் முடிக்கவேண்டும். சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்விக்கப்படுகிறது. கணவன் இறந்தால் பெண்கள் உடனடியாக மறுமணம் செய்துகொள்ளலாம். அது மட்டுமல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறலாம். ஆனால் முந்தைய கணவனை விவாகரத்து செய்திருக்கவேண்டும். இது பெண்ணுக்கும் ஆணுக்கும் பொருந்தும். வயதான பின்னும் கூட திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் நரிக்குறவர்களிடத்தில் உள்ளது.

இவர்களினத்தில் குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட நியதிகள் அதிகம். ஒரு பெண்ணோ ஆணோ அடுத்த ஆண்மகனின் குடுமியை தொட்டு இழுப்பது குற்றம். ஒருவர் இறந்தால் உறவினர்கள் சாவுக்கு வராமலிருப்பது குற்றம். சாமி சொத்துள்ளவர்கள் குடுமியை எடுப்பது குற்றம். ஒரே பிரிவுக்குள் மணமுடிப்பது குற்றம். பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவது குற்றம். குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனைகளுள் பெரிய தண்டனை கூட்டத்திலிருந்து ஒருவரை ஒதுக்கிவைப்பதுதான். 

நரிக்குறவர்களிடம் சகுனம் பார்க்கும் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. நாயின் காதுகள் படபடவென அடித்துக்கொண்டால் அது கெட்டசகுனம். வானத்தில் காக்கா கூட்டம் வட்டம் அடித்துக்கொண்டிருந்தால் அது நல்ல சகுனம். நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டால் அப்பிணத்தை தூக்கிச் சென்றவர்கள் பன்னிரண்டு நாள் வரை குடிசைக்குத் திரும்பிவரக்கூடாது. அப்படி வந்தால் இறந்தவர் ஆவியாக வந்து மிரட்டுவார் என்று நம்புகின்றனர். இறந்தவரின் தலைக்கடியில் ஒரு கல்லும் காலுக்கடியில் ஒரு கல்லும் வைக்கப்படுகிறது. இது மூன்று தடவை தலைக்கல் காலுக்கும் காலின் கல் தலைக்குமாக மாற்றி வைக்கப்படுகிறது. அப்படி செய்தால் சுடுகாடு சென்ற ஆவிக்கு வீட்டுக்கு செல்ல வழி தெரியாது என்று நம்புகின்றனர். இறந்தவரின் ஆவிக்காக தினமும் ஒரு பிடி சோறு வைத்து வணங்குகின்றனர். இறப்புக்குப் பின் சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் இவர்களிடமும் உண்டு.

தெய்வத்தின் மீதும் அது தொடர்பான சடங்குகளின் மீதும் அதிக அளவு நம்பிக்கை கொண்டவர்கள் நரிக்குறவர்கள். இவர்களுக்கென்று கோவில்கள் கிடையாது என்றாலும் ஒவ்வொரு நரிக்குறவ குடும்பத்தார்க்கும் சாமிமூட்டை என்ற ஒன்று இருக்கிறது. இதில் தாம்பாளத்தட்டு, தூபக்கால், வெள்ளியால் செய்யப்பட்ட சாமி உருவங்கள், கருஞ்சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவில் அமைந்த பை போன்ற துணிகள், இரத்தம் தோய்ந்த சாமிப்பாவாடைகள், சலங்கைகள், போன்றவை இருக்கின்றன. இதனை பெண்கள் தொட்டால் பாவம் என நம்புகின்றனர். பூசை போடும்போதும் சடங்குகள் செய்யும்போதும் மட்டுமே திறக்கப்படும் இம்மூட்டையை மற்ற நேரங்களில் திறந்துகாட்டவோ வெளியே எடுத்துப் பார்க்கவோ பயப்படுகின்றனர்.

பிரசவத்துக்காக குறத்தி, தாய்வீட்டுக்குப் போவதில்லை. குறவன்தான் வேறொரு தனியிடத்தில் தாயையும் சேயையும் வைத்துக் காப்பாற்ற வேண்டும். தீட்டு கழித்தலின்போது பச்சை, சிவப்பு, வெள்ளை, கறுப்பு போன்ற எட்டு நிறங்களில் பன்னிரண்டு சோற்று உருண்டையை உருட்டி பெரிய தட்டில் வைத்து சாமிக்கு படைத்துஅதனை மாலை ஆறு மணியளவில் தூர எறிந்துவிடுவார்கள். இதனால் குழந்தைக்குப் பட்டிருக்கும் கண்ணேறு கழிந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.

நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு. சாத்துக்குடி சாப்பிடுபோது பிறந்த குழந்தைக்கு சாத்துக்குடியான் என்ற பெயரும் மணிபர்ஸ் திறக்கும்போது பிறந்த குழந்தைக்கு மணிபர்ஸ் என்றும் பிச்சையெடுக்கும்போது பிறந்த குழந்தைக்கு பிச்சைக்காரி என்று பெயரிடுவதும் சுவாரசியம்தானே.. ஊரின் பெயர், பொருளின் பெயர், தெய்வத்தின் பெயர், குடும்ப முன்னோர்களின் பெயர்,  நாகரிக வளர்ச்சிக்கேற்ப நவீனப்பெயர் என்று பலவிதமாக பெயர் சூட்டுகின்றனர். தாம்பரத்தான், தட்டாஞ்சாவடியான், விழுப்புரத்தான் என்பது போன்ற ஊர்ப்பெயர்களை சிலர் வைத்திருப்பதைப் பார்க்கலாம். அதே சமயம் கமல், ரஜினி, விஜய், அஜீத், சிம்ரன், குஷ்பு என்று திரைப்படத்தின் தாக்கமும் பெயர்களில் தொணிப்பதைக் காணமுடியும்.

இவையெல்லாம் அவர்களுடைய வாழ்க்கைமுறை குறித்த சில மாதிரிகள்தாம். இதுபோல் ஏராளமான தகவல்களை விரிவாகவும் சுவையாகவும் எடுத்துரைக்கிறது இந்நூல். நரிக்குறவர் இனம் குறித்து மேலும் அறிந்துகொள்ள விழைவோர் மட்டுமல்ல, சமுதாயத்தின் பார்வையில் புறக்கணிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தைப் பற்றிய மதிப்பையும் அறிவையும் வளர்த்துக்கொள்ளவும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது. நரிக்குறவர் வாழ்க்கையை சித்தரிக்கும் பல புகைப்படங்கள் அவர்கள் அனுமதியுடன் எடுக்கப்பட்டு ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு.

270 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.160\- இதை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு டிசம்பர் 2004 இல் வெளிவந்துள்ளது..
&&&&


நான்கு பெண்கள் தளத்தில் வெளியானது.)


19 October 2015

கூழைக்கடா - பெலிக்கன்


பெலிக்கன் (pelican) என்னும் பறவையைத் தமிழில் கூழைக்கடா என்றும் மத்தாளிக்கொக்கு அல்லது மத்தாளி என்றும் குறிப்பிடுகின்றனர். இதன் தசை கெட்டியாக இல்லாமல் கூழ் போல் இருப்பதாலும் கிடா போன்ற பெருந்தோற்றத்தாலும் இதை கூழைக்கடா என்பதாகக் கருத்துள்ளது. 

நீர்நிலையொன்றில் 
எதிர்பாராமல் காணக்கிடைத்த கூழைக்கடா சோடி

பொதுவாகவே கூழைக்கடாக்களுக்கு பை போல் விரிவடையக்கூடியக் கீழ்த்தாடை ஒரு சிறப்பு. Australian Pelican (Pelicanus conspicillatus) எனப்படும் ஆஸ்திரேலியக் கூழைக்கடாவுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா?  உலகிலேயே மிக நீண்ட அலகுடைய பறவை இதுதான். அலகின் நீளம் சுமார் 33 செ.மீ. - 45 செ.மீ. வரையிலும் கூட இருக்கும்.  இதுவரை பதிவாகியுள்ளவற்றுள் 51 செ.மீ. நீள அலகுதான் அதிகபட்சம். 



உலகில் தற்போது வாழும் எட்டு வகையான கூழைக்கடாக்களும் தரையில் கூடு கட்டுபவை, மரத்தில் கூடு கட்டுபவை என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியக் கூழைக்கடாக்கள் நீர்நிலையை ஒட்டிய நிலப்பகுதிகளில் தரையில் கூடுகட்டி வாழ்பவை.. 


மூன்று வகை  கூழைக்கடாக்கள் அச்சுறுத்துநிலையை எட்டியவை என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியக் கூழைக்கடாக்களுக்கு அந்த ஆபத்து இல்லை. 


ஆகாயமளக்கும் இந்தப் பெரிய நீர்வாழ்ப்பறவையின் சிறகுவிரிநீளம் இரண்டரை மீட்டர்களாம்.  ஆனால் உயர வானில் பறக்கும்போது அப்படியா தெரிகிறது?

ஆகாயத்தில் புள்ளியாய் அன்றொரு நாள்... 

வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே!
வருகினும் ஐயே! திரிகூட நாயகர் 
வாட்டமில் லாப்பண்ணைப் பாட்டப் புரவெல்லாம் 
குருகும் நாரையும் அன்னமுந் தாராவும்
கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும்....

என்று திரிகூட நாயகரின் வாட்டமில்லா வயல்களில் மேயவரும் பல்வேறு நீர்ப்பறவைகளுள் கூழைக்கடாவையும் குறிப்பிடுகிறது 
திருக்குற்றாலக் குறவஞ்சிப்பாடல்.  


17 October 2015

மகிழ்வும் நெகிழ்வும் 2



புதுகை பதிவர் திருவிழாவின்
வெற்றியின் பின்னணியிலுள்ள நல்லுள்ளங்கள்.

புதுக்கோட்டை பதிவர் சந்திப்புத் திருவிழா திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெற்றிருப்பதில் அளவிலாத மகிழ்ச்சி. அன்று காலை முதலே நேரலை ஒளிபரப்புக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அதுகுறித்த அறிவிப்பு எதுவும் எங்கும் காணப்படாமையால் ஏதேனும் காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என்ற கலக்கம் ஏற்பட்டது. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்குழுவின் தளத்தில் என் ஐயத்தை வெளியிட்டேன். அடுத்த சில நிமிடங்களிலேயே பதிவர்களின் ஆபத்பாந்தவனான திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் நேரலை ஒளிபரப்புக்கான இணைப்பு கிட்டியது.


அரங்கில் நாமும்... 

உடனடியாக அந்த இணைப்பை கீதமஞ்சரியிலும் வெளியிட்டேன். மகிழ்வோடு கணவரிடம் காட்டியபோது, அவர், இதை பெரிய திரையிலேயே நீ பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி தொலைக்காட்சியின் அகன்றதிரையில் ஒளிபரப்பைப் பார்க்க ஏற்பாடு செய்துதந்ததோடு தானும் என்னோடு அமர்ந்து நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தார். பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நிகழ்வுகளை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தே.. அதுவும் உடனுக்குடன் பார்க்க முடிந்தது பெரிய வரம் என்றுதான் சொல்லவேண்டும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்த புதுக்கோட்டை பதிவர் குழாமுக்கும் ஒளிபரப்பிய யூகே இன்ஃபோடெக் நிறுவனத்துக்கும் என் அன்பான நன்றிகள் பல. சீருடை அணிந்து செவிக்கும் வயிற்றுக்கும் சிறப்பாக விருந்தோம்பிய பதிவர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள். 


விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவரும்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் சிறப்பிக்கப்படும்போது.. 

வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப்போட்டிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி. போட்டியில் உத்வேகத்துடன் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். போட்டிமுடிவுகளை இங்கு காணலாம்.  

த.இ.க. உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள்

போட்டிக்குப் பிறகான விமர்சனப்போட்டியின் வாயிலாய் பல நல்ல எழுத்தாளர்களையும் புதியவர்களையும் அடையாளங்காண முடிந்தது கூடுதல் சிறப்பு. எல்லோருமே நன்றாக எழுதியிருந்ததால் யாருக்குப் பரிசு கிடைக்கக்கூடும் என்று கணிப்பது பெரும் சவாலாகவே இருந்தது. அப்படியிருந்தும் ஓரளவு சிறப்பாகக் கணித்து இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்ற கலையரசி அக்காவுக்கும் திரு. துரை. தியாகராஜ் அவர்களுக்கும் பாராட்டுகள்.


பதிவர் கையேடு வெளியீட்டின்போது...

முனைவர் பழனி.கந்தசாமி ஐயா சுய அறிமுகத்தின்போது...

எனக்கானப் பரிசை தோழி மு.கீதா பெற்றுக்கொண்டபோது நானே நேரில் வந்து பரிசைப் பெற்றுக்கொண்ட மகிழ்வில் திளைத்தேன். மிகவும் நன்றி தோழி. கேடயம் என் கரம் சேர சில மாதங்களோ வருடங்களோ ஆகலாம் என்ற நிலையில், என் உளக்கிடக்கையைப் புரிந்துகொண்டு வெற்றிக்கேடயத்தை உடனடியாகப் படமெடுத்து எனக்கு அனுப்பிவைத்த கலையரசி அக்காவுக்கு நெஞ்சம் நெகிழும் என் நன்றி.

என் சார்பில் பரிசினைப் பெற்றுக்கொண்ட
தோழி மு.கீதாவுக்கு அன்பான நன்றி.  

விழாவின் நிகழ்வுகள் அனைத்துமே மனந்தொட்டன. பாடல், ஓவியம், கவிதை என்று பல்வேறு தளங்களிலும் சிறப்பானதொரு முத்திரை. புத்தகங்களை வெளியிட்ட கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கும் திரு.ரூபன் அவர்களுக்கும் பாராட்டுகள். விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் பேச்சும் பயனுள்ளவையாகவும் இணையத்தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சிகளை முன்வைப்பவையாகவும் இருந்தன. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய பேச்சு பதிவர்களுக்கு பலத்த நம்பிக்கை தருவதாக இருந்தது.


விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திரு. அ.ரவிசங்கர் அவர்கள்

விழா முடிந்த சில நிமிடங்களிலேயே கலையரசி அக்காவைத் தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் சொன்ன ஒரு தகவல் என்னை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விழா முடிந்தவுடன் எஸ்.ரா அவர்களிடம் என் புத்தகத்தைக் கொடுத்தபோது, அவர் கீதமஞ்சரியில் சில கதைகளை முன்பே வாசித்திருப்பதாகவும் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளதாகத் தெரிவித்ததாகவும் சொன்னார். பிரபல எழுத்தாளர்களும் நம் வலைப்பக்கத்தை வாசிக்கிறார்கள் என்றால் எழுத்தின் மீதான சிரத்தை இன்னும் பன்மடங்கு கூடுகிறது. எஸ்.ரா. அவர்கள் பேசும்போது, எல்லோருடைய பதிவுகளின் பக்கமும் செல்வதில்லை என்றும் அதற்கான நேரமும் இருப்பதில்லை என்றும் தெரிவித்த அவர், யாராவது பரிந்துரை செய்தால்மட்டும் அந்த வலைப்பக்கம் சென்று வாசிப்பது வழக்கம் என்று கூறினார். எனவே என் வலைப்பக்கத்தை யாரோதான் அவருக்குப் பரிந்துரை செய்திருக்க வேண்டும். அந்த நல்லுள்ளத்துக்கு என் அன்பான நன்றி.

எஸ்.ரா. அவர்கள் உரையின்போது...

ஒரு திருமணத்தை வெகு விமரிசையாக நடத்திமுடித்த ஆயாசத்தோடு களைத்திருக்கும் புதுகை பதிவர் சந்திப்புக் குழுவினருக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள குறையைக் கேட்டு மனம் வருந்துகிறது. பதிவு செய்த பதிவர்களில் பாதிப்பேர் வரவில்லை என்றும் வராததை முன்கூட்டியே தெரிவிக்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். வராமையை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் உணவு ஏற்பாட்டில் செலவைக் குறைத்துக் கவனமாக இருந்திருக்கமுடியுமே என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானதே.


தோழி மு.கீதா நன்றியுரையின்போது...

ஒருமாத காலத்திற்கும் மேலாய் ஊண், உறக்கம் அற்று ஓயாது உழைத்துச்சோர்ந்த நம் நட்புகளுக்கு உதவ முன்வருவோம்.. நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பதிவர்கையேடுகள் விற்பனையாகவேண்டும். அதற்கு நம்மாலான ஒத்துழைப்பை நல்குவோம். கையேடுகளைப் பெறுவதற்கான விவரங்கள் இங்கே. 

(படங்கள் அனைத்தும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு -2015 தளத்திலிருந்து நன்றியுடன் பகிரப்பட்டவை..)

11 October 2015

பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...

அன்பார்ந்த வலையுலக மற்றும் வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான்காம் ஆண்டு புதுகை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...







நிகழ்வைக் கண்டுகளிப்போம்... உறவுகளின் அன்பில் திளைப்போம்..
உடலால் விலகியிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்போம்... 
வாருங்கள் நட்புகளே..

(நேரலை ஒளிபரப்பின் சுட்டிகளை வழங்கிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு அன்பான நன்றி)

9 October 2015

வானவில் மனிதனின் பார்வையில் 'என்றாவது ஒருநாள்'





கவிதையே காதலாய்… கனவே வாழ்க்கையாய்… வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் நண்பர் மோகன்ஜி அவர்களுடைய கவிதைகள், கதைகள் மற்றும் இதர படைப்புகளின் பரமவாசகி நான் என்பதில் எனக்கோர் பெருமை. நானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்துகொண்டு…  சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர… கனவுகள் உதிர்ப்பவன் என்று தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நண்பர் மோகன்ஜி அவர்களின் நட்பு வளையமும் வானவில்லைப் போலவே வசீகரமானது. 

அந்த நட்புவளையத்துக்குள் கண்ணியமான எழுத்தோடு, பல்வேறுபட்டக் கருத்துகளும், விவேகமிக்க தர்க்கங்களும், மனந்திறந்த விமர்சனங்களும், ரசனையான கேலிகளும், நட்பின் கலாய்ப்புகளும் இல்லாமல் இருக்காது. மகிழ்வு, நெகிழ்வு, நகைச்சுவை, நையாண்டி, காதல், ரசனை, ஆதங்கம், உருக்கம் என எண்ணிலா உணர்வுகளை செறிவான எழுத்தால் வாசகமனங்களுள் செதுக்கும் கலை அறிந்த படைப்பாளி. அவருடைய வாசிப்பால்… தேர்ந்த எழுத்தால் மேன்மைப்பட்டிருக்கிறது என்னுடைய ‘என்றாவது ஒருநாள்’ மொழிபெயர்ப்பு நூல் என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

நண்பர் மோகன்ஜி புத்தக விமர்சனத்தை எழுதிப் பதிவிட்டு ஒருமாதகாலமாகப் போகிறது. விமர்சனத்தை இங்கு வாசிக்கலாம். இதுவரை கீதமஞ்சரியில் அதைக் குறிப்பிட்டுப் பதிவெழுதாமைக்குப் பல்வேறு காரணங்களை அடுக்கமுடியும் என்றாலும் என்னுடைய சோம்பேறித்தனத்தையும் திட்டமிடற்குறைபாட்டையுமே முன்னிறுத்தி நண்பரிடம் மன்னிப்புக் கோருகிறேன்.



அவரது விமர்சனம் குறித்த என் கருத்து:

அன்புள்ள மோகன்ஜிதங்களுடைய இந்த விமர்சனத்தை வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தாலும் இன்று இப்போது வெளிவந்திருப்பது எனக்கொரு இன்ப அதிர்ச்சி. நல்லதொரு எழுத்தாளரும் வாசகருமாகிய தங்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரிகளும் என் எழுத்தை மேம்படுத்த உதவக்கூடியவை..

மொழிபெயர்ப்பு என்பதா மொழியாக்கம் என்பதா என்பதில் எனக்குமே இன்னும் தெளிவில்லை. ஆனால் மூலக்கதாசிரியரின் எழுத்தை அப்படியே தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டும் என்று விரும்பினேன். அதில் தவறியும் என்னுடைய பாணியோ எழுத்துநடையோ வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறேன் என்பது அநேகருடைய விமர்சனங்கள் மூலம் அறியமுடிகிறது.

இது ஒரு நேரடி மொழிபெயர்ப்பாக இருப்பதால் மூலக்கதாசிரியர் தொட்டுவிட்டுச் செல்லும் இடங்களில் விளக்கங்கள் தரப்படாமை ஒரு நெருடலாகவோ குறையாகவோ கருதப்படும் வாய்ப்புண்டு என்றாலும் இங்கு அதைத் தாங்கள் நிறையாகக் குறிப்பிடுவது மனத்துக்கு இதமளிக்கிறது. ஊக்கமும் உற்சாகமும் தரும் வகையில் மிகவும் நிறைவானதொரு விமர்சனப்பதிவு. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி மோகன்ஜி.

நண்பர் மோகன்ஜியின் பதில்..

சில நாட்களுக்குமுன்பே ஒன்றை எழுதிவைத்து, அதனையும் போக்கடித்துவிட்ட ஆயாசத்தில் தாமதம். மீண்டும் நினைவில் தொகுத்துக் கொண்டு எழுதியதால் எனக்குள் சின்ன தடுமாற்றம்..

மொழிபெயர்ப்பு அப்படியே வரிக்குவரி தமிழ்'படுத்து'வது... ஒரு .டி ப்ரோக்ரமை அப்படி செய்யலாம். ஒரு இலக்கியபடைப்பு முற்றிலும் மாறுபட்ட வேறொரு வாசகப் பரப்பை அடைய,பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நுண்ணிய மொழியாக்கமே மார்க்கம். இத்தகு கதைகளை நான் முயன்றிருந்தால் முற்றிலுமே மாறுபட்ட ஆக்கமாய் ஆகியிருக்கலாம். எல்லாமுமே சாத்தியம். உங்களுடைய முயற்சியை அங்கீகரிப்பதில் என் பொறாமை கூட இருக்கிறது கீதா.. சில கவிதைகளை மொழிமாற்றிப் பார்த்தால் வேறுபாடு விளங்கும். மீண்டும் வாழ்த்துக்கள்!



ஏற்கனவே எழுதியதைத் தவறவிட்ட ஆயாசம் தோய்ந்த நிலையிலும் மறுபடியும் சிறப்பாக எழுதிப் பதிவிட்டு ஊக்கமளித்திருக்கும் நண்பர் மோகன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அடிக்கடி எழுத்துலக அஞ்ஞாதவாசம் சென்றுவிடும் அவர், வலையில் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என்போன்ற வாசகர்களின் ஆசை. பூர்த்தி செய்வார் என்று நம்புவோம். 
*****

4 October 2015

வாசிப்போம்.. கணிப்போம்... வெல்வோம்.



புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள நான்காம் ஆண்டு பதிவர் சந்திப்புத் திருவிழாவுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்... விழாவுக்கான ஏற்பாடுகளில் தம்மை மும்முரமாய்  ஈடுபடுத்திக் கொண்டிருப்பதோடு,  புதுப்புதுப் போட்டிகளையும் அறிவித்து பதிவர்களையும் வாசகர்களையும் விறுவிறுப்பு குறையாமல் சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருக்கிறது விழாக்குழு அமைப்பு.

இதோ... இன்னொரு போட்டி அறிவிப்பு.

வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015 க்காக பதிவு செய்யப்பட்டுள்ள 260 படைப்புகளுக்கான சுட்டிகள் இங்கே

படைப்புகளை வாசித்து அவற்றுள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று நாம் கணிக்கும் படைப்புகளை வகைக்கு மூன்றாக 1,2,3 என்று வரிசைப்படுத்தித் தெரிவிக்கவேண்டும். கணித்த முடிவுகளை bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தின் மூலமும்  தெரிவிக்கலாம். 

நடுவர்கள் எடுத்துள்ள சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை கணிப்பவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/- அடுத்துப் பெரும்பான்மையான முடிவுகளைக் கணிப்பவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.3000/-  மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000/-  என்று மொத்தப் பரிசுத்தொகை ரூ.10,000/- விழாவின்போது வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.



 போட்டியென்றால் விதிமுறைகள் இல்லாமலா... இதோ போட்டியின் விதிமுறைகள்...

1. யார் வேண்டுமானாலும் இந்தவிமரிசனக் கருத்துப் போட்டியில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

2ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.

3. ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.

4.  வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

5. மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

6. இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

7. விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

8. வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும்மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

9. மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

10.  போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.




போட்டிவிதிகளைப் பின்பற்றுங்கள்...
படைப்புகளைப் பொறுமையாய் வாசியுங்கள்..
முடிவுகளைக் கணித்து மின்னஞ்சல் தாருங்கள்..
வெற்றிக்கனியைப் பறிக்க விரைந்துவாருங்கள்.
பங்கேற்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

&&&&&