"சார்! உங்களைத்தானே! உங்ககிட்ட ஒரு
யோசனை கேக்கலாம்னு வந்தா ஆள் அகப்படவே மாட்டேங்கறீங்களே!"
"அப்பா! தயவுசெஞ்சு என்னை
ஆளைவிட்டுடு!!"
"என்ன சார், பணமா கேட்டேன்? ஒரு யோசனைதானே! அதுக்குப் போய் இப்படி
அலுத்துக்கறீங்களே?”
"நான் பணம் வேணுமின்னாலும் தரேன். ஆனா
யோசனை மட்டும் கேக்காதே!"
"என்ன சார்? நீங்க இப்படிச் சொல்லலாமா? ஒரு சின்ன
விஷயம்! முடிவெடுக்க முடியாமத் தடுமாறுறேன்."
"உனக்குப் புண்ணியமாப் போவட்டும்.
தயவுசெஞ்சு வேற யார்கிட்டயாவது யோசனை கேட்டுக்கோ!"
"உங்க யோசனைக்கு ரொம்ப நன்றி
சார்!" என்று கூறிவிட்டுப் போனவனை பல்லைக் கடித்தபடி பார்த்தேன்.
என்னடா இவன்? ஒரு யோசனை கேட்கவந்தவனை விரட்டு விரட்டு என்று விரட்டுகிறானே என்று
பார்க்கிறீர்களா?
இந்த உலகத்திலேயே இலவசமாய்க்
கிடைக்கக்கூடியவை அறிவுரையும் யோசனையும்தான். ஒரு தவறு செய்துவிட்டோம் என்று
தெரிந்துகொண்டால் ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதுபோல் ஒரு
காரியம் செய்ய முனைந்தால் யோசனை சொல்ல யார் யாரோ வருவார்கள். யோசனை சொல்பவர்களைக்
கண்டால் ஓடுபவர்கள் மத்தியில் என்னிடம் யோசனை கேட்பவர்களைக் கண்டால் ஓடும் ஆள்
நான்.
என்ன செய்வது? எனக்கு வாய்த்த அனுபவம் அப்படி! அன்றொருநாள்.......
வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தியவுடன்,
வழக்கத்துக்கு மாறாய் கீர்த்தனா வாசல் வந்து
வரவேற்றதில் லேசான பயம் அடிவயிற்றைக் கவ்வியது.
பிள்ளைகளை டியூஷனுக்கு
அனுப்பிவைத்துவிட்டு நான் உள்ளே நுழைவதையும் பொருட்படுத்தாமல் மகாராணி
இந்நேரமெல்லாம் மெகாதொடரில் மூழ்கியிருப்பாள்.
"என்னங்க இது? இன்னைக்குப் பார்த்து இவ்வளவு நேரம்?"
கூடுதலாய் கரிசன விசாரணை.
"இல்லையே! எப்பவும் போலத்தான்
வரேன்!"
"சதாவுடைய மாமனார் உங்களைப் பார்க்க
வந்து கிட்டத்தட்ட அரைமணி நேரமா காத்திட்டிருக்கார்."
"என்னவாம்? என்னை...எதுக்கு...?"
"ஏதோ யோசனை கேக்கணுமாம். நீங்கதான்
சரியா சொல்வீங்கன்னு சொல்லி சதா இங்கே அனுப்பியிருக்கான்."
சதாசிவம் கீர்த்தனாவின் பெரியப்பா
மகன். அவளுக்கு இளையவன். சமீபத்தில்தான் திருமணமானது. உள்ளூர் என்பதால் சதாவும் அவன் மனைவி சந்திராவும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இங்கு வந்துபோவார்கள்.
சந்திரா மிகவும் நல்லபெண். மற்றபடி அவள் தந்தையுடன் இதுவரை எந்தப் பழக்கமும்
இல்லை. முதன்முறையாக வீடுதேடி வந்திருக்கிறார்.
"வாங்க சார்...வாங்க!"
என்ன உறவு சொல்லி அழைப்பது என்று
தெரியவில்லை. பொத்தாம் பொதுவாக சார் என்றே அழைத்தேன்.
"என்னங்க, தம்பி, என்னைப்போய் சார், மோருன்னுட்டு?"
"பரவாயில்லைங்க! பெரியவர்தானே
நீங்க!"
"மாப்பிள்ளை உங்களைப் பத்தி நிறையச்
சொன்னார். அதான் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்."
"அட! என்ன சார் நீங்க? எந்த உதவி வேணும்னாலும் தயங்காமச் சொல்லுங்க!"
கீர்த்தனா என்னைப் பெருமை பொங்கப்
பார்த்தாள்.
"தம்பீ! நான் தனியாளு! என் சம்சாரமும்
போனவருஷம் போய்ச்சேர்ந்துட்டா! எனக்கு வேற யாரிருக்கா, சொல்லுங்க? அதனால நான் நல்லா இருக்கும்போதே ஊரில்
இருக்கிற வீடு, தோட்டமெல்லாம் வித்துட்டு காசி,
ராமேசுவரம்னு போகலாம்னு இருக்கேன்."
இவர் ஏன் இதையெல்லாம் என்னிடம்
சொல்கிறார் என்று புரியாமல் விழித்தேன். ஒருவேளை வீடு விற்றப் பணத்தை என்
வங்கியில் போட எண்ணுகிறாரோ? ஆஹா! இதுவல்லவோ நல்ல வாய்ப்பு!
நான் நிமிர்ந்து அமர்ந்தேன். அவர்
தொடர்ந்தார்.
"பெண்ணும் மாப்பிள்ளையும் வாடகை
வீட்டில்தானே இருக்கிறாங்க.புதுசா வீடு கட்டணும்னா அதுக்கு ரொம்பவும்
மெனக்கெடணும். எனக்கோ வயசாயிடுச்சு. மாப்பிள்ளைக்கும் நேரம் தோதுப்படாது."
இவர் என்னதான் சொல்லவருகிறார்? வீடு கட்டும் பொறுப்பை என்னை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாரா? நானே இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் முழிபிதுங்கிப்
போயிருந்தேன். இப்போதுதான் எல்லாம் சரியாகி நிம்மதியாக உணர்கிறேன். இப்போது
இவர்.........
"ஊரில் வீடு வித்தப் பணத்தைக் கொண்டு
இந்த ஏரியாவுல ஒரு கட்டின வீடா வாங்கிடலாம்னு தோணிச்சு."
தப்புக்கணக்குப் போட்ட என்னை நானே
மானசீகமாக தலையில் குட்டிக்கொண்டேன்.
"அப்படின்னா தரகர் ஆறுமுகத்தைப்
பாருங்க! ரொம்ப நல்ல மனுஷன்."
"பாத்துட்டேனே! அஞ்சாறு வீடு
காட்டினார். அதில் ரெண்டுதான் நம்ம ரேஞ்சுக்கு ஒத்துவருது. அதில் எதை
முடிக்கிறதுன்னுதான் ஒரே குழப்பமா இருக்கு!"
இதில் குழப்பம் என்ன இருக்கிறது?
சதாவுக்காக வீடு வாங்குகிறார். என்னைவிட
அவனுக்குதான் இந்த ஊரும் சுற்றுப்புறமும் அத்துப்படி. அவனே ஒரு முடிவு சொல்லலாமே!
இதற்காகவா இவரை என்னிடம் அனுப்பியுள்ளான்?
வியப்புடன் அவரைப் பார்த்தேன்.
"அதாவது தம்பி, ஒரு வீடு நகருக்கு மத்தியில கடைத்தெருவில இருக்கு. இன்னொன்னு ஊரை
விட்டுத் தள்ளி இருக்கு! எது சரியா வரும்னு நீங்களே சொல்லுங்க!"
இப்பொது குழப்பம் என்னைத் தொற்றியது.
சதாவின் அலுவலகமோ ஊருக்குள் உள்ளது. வீடும் அருகில் இருந்தால்தானே அவனுக்குப்
போகவர எளிதாய் இருக்கும்? இதில் யோசிக்க என்ன உள்ளது?
அவரிடம் அதைச் சொல்ல, அவர் உடனே மறுத்தார்.
"தம்பி, கடைத்தெருவில் வீடு! அதை மறந்திடாதீங்க. எப்பவும் ஜனசந்தடி
இருந்துகிட்டே இருக்கும். நிம்மதியா உட்காரமுடியாது. எப்பவும் எவனாவது ஹாரன்
குடுத்திட்டேயிருப்பான். ஆனால், அந்த இன்னொரு வீட்டைப் பாருங்க! அமைதின்னா அமைதி!
அப்படி ஒரு அமைதி! தியானம் பண்ணலாம்போல இருக்கும்."
ஓ! இவருக்கு அந்தவீடுதான்
பிடித்திருக்கிறது போலும். கிராமத்திலிருந்து வந்தவர் அல்லவா?
"நீங்க சொல்றதுதான் சரி! அந்த வீட்டையே
முடிச்சிடலாம்" நான் புன்னகைத்தேன்.
"அய்யோ, தம்பி! அங்க ஜனசந்தடியே கிடியாது; அடிச்சுப் போட்டாக்கூட தூக்க ஆள் கிடையாது. இந்த வீட்டில் அப்படியா?
எப்பவும் வீட்டைச் சுத்தி ஜே ஜேன்னு ஆள்
நடமாட்டம் இருந்திட்டே இருக்கும்."
ஆஹா! உண்மையில் மனிதர் குழம்பிப்
போய்தான் இருக்கிறார்.
"ஏங்க, மாமாவுக்கு நல்லதா யோசனை சொல்லி அனுப்புங்க! பின்னால் பிரச்சனை
வரக்கூடாது பாருங்க."
கீர்த்தனா என்ன பேசுகிறோம் என்று
தெரியாமலேயே பேசினாள். பிரச்சனை யாருக்கு? எனக்கா? சதாவுக்கா? அல்லது எதிரே அமர்ந்திருக்கும் இந்த
மனிதருக்கா?
புரியாதபோதும், இவ்வளவுதூரம் என்னை நம்பி வந்தவரை வெறுமனே அனுப்பிவிட மனமில்லாமல்
என் விசாரணையைத் துவக்கினேன். இருதரப்பு வாதங்களையும் கேட்டு, அதாவது இரு வீடுகளைப் பற்றிய விவரங்களையும் கலந்தாலோசித்து, அதன் சாதக பாதகங்களை உத்தேசித்து நல்லதொரு வீட்டை அவர் தேர்ந்தெடுக்க
உதவவேண்டும் என்று நினைத்த கணமே என்னை நானே நீதிபதியின் ஆசனத்தில்
அமர்த்திக்கொண்டேன்.
"சரி! ஆரம்பிங்க!"
"எதுங்க தம்பி?"
"அது..அது...அதாவது வீட்டைப் பத்திச்
சொல்லுங்க!"
"தம்பி! இந்தக் கடைத்தெரு வீடு இருக்கே
அது கொஞ்சம் சின்னது. ரெண்டு அறைதான் இருக்கு. சொந்தம்னு நாலுபேர் வந்தா தங்குறது
கஷ்டம். அந்த வீட்டில் பாருங்க, இந்தப் பிரச்சனை இல்லை. கடலாட்டம்
வீடு. ஹாலிலேயே இருவது பேர் நல்லா படுத்து உருளலாம்."
"அப்போ, உருளவேண்டியதுதானே!"
"என்னங்க தம்பி?"
"அந்த வீட்டையே வாங்கிடலாமேன்னேன்"
"அது சரிப்படாதுங்களே! ஏன்னு
கேளுங்க!"
ஏன் என்று கேட்டே ஆகவேண்டும்
என்பதுபோல் அவர் இடைவெளி விட்டுக் காத்திருக்க, வேறு வழியில்லாமல்,
"ஏன் சார்?" என்றேன் நொந்தவனாய்.
"அப்படிக் கேளுங்க! இந்த வீடு இருக்கே,
எது? இந்தக்
கடைத்தெரு வீடு, அதுல ஒரு வசதி! என்னன்னு கேளுங்க!"
"என்ன சார்?"
என் குரல் எனக்கே கேட்கவில்லை. தலையை
லேசாக வலிப்பதுபோல் இருந்தது.
"அதாவது மாப்பிள்ளை வேற ஊருக்கு
மாத்தலாகிப் போறாருன்னு வச்சுக்குவோம், அப்ப வாடகைக்கு
விடணும் இல்லையா? அப்போ எதுல வாடகை அதிகமா வரும்னு
சொல்லுங்க!"
"........."
"அதனால்தான் இந்த வீடு
பரவாயில்லைங்கறேன்."
"அப்படின்னா முடிச்சிடவேண்டியதுதானே
சார்?"
அப்பாடா! ஒரு வழியாய் ஒரு முடிவுக்கு
வந்துவிட்டார். மனம் மாறுவதற்குள் சட்டென்று அவரை அனுப்பிவிட முடிவு செய்தேன்.
அவரோ....
"அதாங்க முடியாது! ஏன்னா....இங்க
குடிதண்ணிப் பிரச்சனை! குழாயில எப்போ தண்ணி வரும்முன்னு காத்திருந்து புடிச்சு,
கணக்காப் புழங்கணும். அந்த வீட்டில்
அப்படியில்லை. கேணித் தண்ணி எளநீர் மாதிரி இனிக்கிது. கையை விட்டு மொள்ளலாம்.
அவ்வளவு கிட்ட இருக்கு! இதுக்கு என்னா சொல்றீங்க?"
அவர் ஒரு எகத்தாளப் புன்னகையுடன்
என்னைப் பார்த்தார். உன்னை எப்படி மடக்கிவிட்டேன் பார் என்ற தொணி அவர் கண்களில்
தெரிந்தது.
மண்டையைக் கொண்டுபோய் சுவரில்
முட்டிக்கொள்ளலாமா என்று தோன்றியது. தேவையா எனக்கு?
வேலைவிட்டு வீட்டுக்கு வந்து முகம்
கழுவவில்லை; உடை மாற்றவில்லை. எங்களை
வாய்பார்ப்பதில் மும்முரமாக இருந்ததாலோ என்னவோ, காபியென்று ஒன்று தரவேண்டும் என்ற உணர்வே இல்லாமல் கீர்த்தனா
அமர்ந்திருந்தாள்.
நானே நினைவூட்டலாம் என்று அவளிடம்,
"கீர்த்தனா....காப்பி..."
என்பதற்குள் அவர் வேகமாய்த் தடுத்து,
"அதெல்லாம் வந்தவுடனேயே ஆச்சுது தம்பி!
இந்நேரத்துக்கு ஒண்ணுதான். அதுக்கு மேல குடிச்சா எனக்குத் தூக்கம் வராது."
அவர் கறாராய்ச் சொல்லிவிட, எழுந்தவள் மறுபடியும் அமர்ந்துகொண்டாள். அடிப்பாவி! புருஷன்னு
ஒருத்தன் அலுவலகத்தில் மாடா உழைச்சிட்டு வந்திருக்கானே, அவனுக்குத் தரவேண்டும் என்கிற எண்ணம் எப்படி மறந்துபோனது?
சதிகாரி! தலைவலி மண்டையைப் பிளக்க,
மனதுக்குள் சபித்தேன்.
"அதை விடுங்க, தம்பி! நம்ம விஷயத்துக்கு வருவோம்!"
விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்
அவர்.
நம்ம விஷயமா? யோவ்! நீர் என்ன எனக்கா வீடு வாங்கித் தரப்போறீர்? போய் வேற வேலை இருந்தாப் பாரும் என்று கத்தவேண்டும்போல் இருந்தது.
முடியாது! வேற்றாளாய் இருந்திருந்தாலும் அது முடியும். இவரோ...கீர்த்தனாவின்...பெரியப்பாவின்...மகனின்...மனைவியின்...தகப்பனார்.
ஆக மொத்தம் கீர்த்தனாவின் உறவு. ஆகவே அடக்கி வாசிக்கத்தான் வேண்டும்.
"சரிங்க! இந்த ரெண்டுல எது பெட்டர்னு
உங்களுக்குத் தோணுது?"
“அதுக்குதானே தம்பி உங்களைத் தேடிவந்திருக்கேன்"
நான் தலையில் கைவைத்து
அமர்ந்துவிட்டேன். என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் கிளம்பி வந்திருப்பாரோ?
இவர் பழிவாங்கும் அளவுக்கு நான் எந்தத்
தீங்கும் செய்யவில்லையே! பின் ஏன்? என்ன ஆனாலும் சரி! துணிந்து என்
முடிவைச் சொல்லிவிடவேண்டியதுதான்.
"சார்! இந்தக் காலத்தில் கட்டுற
வீட்டைக்கூட நம் இஷ்டத்துக்கு கட்ட முடியாது. ஏதாவது ஒரு விஷயத்தில்
விட்டுக்கொடுத்துதான் போகவேண்டியிருக்கு. இதுல கட்டின வீட்டை வாங்கும்போது பல
விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிதான் ஆகணும். அதனால் நான் என்ன
சொல்றேனா....உங்களுக்குப் பலவிதத்திலயும் எது ஒத்துப்போவுதோ அதையே
முடிச்சிடுங்க!"
“அதுதான் முடியலிங்களே, தம்பி! ஏதாவது ஒண்ணு மாத்தி ஒண்ணு இடிக்கிது!"
"உங்க பெண்கிட்டேயும், மாப்பிள்ளைகிட்டேயும் யோசனை கேட்டுப்பாருங்களேன்!"
"அதுங்களுக்கு என்ன தெரியும் தம்பி?
சின்னப்பிள்ளைகள்! நாம் வாங்கிப் போட்டு இந்தா
இது இனிமே உன்னுதுன்னு சொன்னா ஆளப்போவுதுங்க! அவ்வளவுதான்!
மத்தவங்களை விடுங்க! நீங்க அனுபவஸ்தர். நீங்க என்ன சொல்றீங்க?"
"என்னைக் கேட்டால் ஊருக்கு வெளியில்
இருக்கறதே பரவாயில்லைம்பேன். அமைதியான இடம், பெரிய வீடு, முக்கியமா...தண்ணிப்பிரச்சனை இல்லை.
அதனால..."
"ஆனா..நீங்க ஒண்ணு யோசிக்கணூம்! அங்க
அக்கம்பக்கத்தில் கடைகண்ணி கிடையாது. அவசர ஆத்திரத்துக்கு டாக்டர் கிடையாது."
"அப்போ அதை விட்டுடுங்க!
கடைவீதியில்........."
"அது பரபரன்னு இருக்கும் தம்பி!
அக்கம்பக்கமெல்லாம் கடையா போச்சுதா? ராத்திரி
பதினோரு மணி வரைக்கும் கடை கட்டமாட்டாங்க. விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் சரக்கு
வந்து எறங்கும்."
வேதாளம் மீண்டும் முருங்கை மரம்
ஏறத்துவங்கிவிட்டது. என்ன மாதிரி மனிதர் இவர்? முன்னால் போனால் கடிக்கிறார், பின்னால் வந்தால் உதைக்கிறார். சே! சாதாரண வீடு வாங்கும்
விஷயத்துக்கே இப்படி முடிவெடுக்க முடியாமல் திணறுபவர் வாழ்க்கைப் பிரச்சனைகளை
எப்படிதான் இதுகாலம் வரை சமாளித்தாரோ?
பேந்தப் பேந்த விழித்து நின்ற என்னை
அவர் பார்த்த பார்வையில் சற்றே இரக்கம் தென்பட்டது. இதற்கு மேலும் படுத்தினால்
இவன் அழுதுவிடுவான் என்று உணர்ந்தவர்போல் அவர் கிளம்பினார்.
பளிச்சென்று மின்னலாய் ஒரு எண்ணம்
உதயமானது. கிளம்பியவரைக் கிட்டத்தட்ட வழிமறித்து,
"சார்! இந்த வாஸ்து வாஸ்துன்னு
சொல்வாங்களே! அதன்படி எந்த வீடு அமைஞ்சிருக்கோ, அதையே முடிச்சிடுங்களேன்."
என்று கூறிவிட்டு, வெற்றிப்புன்னகையுடன் அவரை ஏறிட்டேன்.
எப்போதோ கீர்த்தனா புலம்பியது
நினைவுக்கு வந்தது. கீர்த்தனாவின் அப்பாவுக்கு அதான்... என் மாமனாருக்கு வாஸ்து
நம்பிக்கை அதிகம். அதுவும் கொஞ்சகாலமாக தான். அவருக்கு ஏற்படும்
பிரச்சனைகளுக்கெல்லாம் பலிகடாவாக அவரது வீடுதான் மாட்டிக்கொண்டது. ஒவ்வொரு
விடுமுறைக்குப் போகும்போதும் வீடு வேறு வேறு முகம் காட்டிக்கொண்டிருக்கும்.
அவருக்கென்ன? சொத்து இருக்கிறது.
எப்படிவேண்டுமானாலும் இடிக்கலாம்; கட்டலாம் என்று நினைத்துக்கொள்வேன். முன்பொருநாள் கீர்த்தனா சொன்னாள்.
"எங்கப்பாவுக்கு பித்துப்
பிடிச்சிருக்குன்னுதான் நினைக்கிறேன்!"
"ஏனாம்?"
"கொஞ்சநாள் முன்னாடி எவனோ சொன்னான்னு
வீட்டு வாசலை மறைச்சு ரெண்டு கடை கட்டிவிட்டிருந்தாரில்ல?"
"ஆமாம்! அதுக்கென்ன?"
"இப்போ வேற எவனோ சொன்னான்னு நல்லா வாடகை
வந்துகிட்டிருந்த கடை ரெண்டையும் இடிச்சு தரைமட்டமாக்கி வச்சிருக்காராம்! அக்கா
போன்ல புலம்புறா. இதைக் கிறுக்குன்னு சொல்லாம வேறென்ன சொல்றதாம்?"
கிறுக்குத்தனம்தான். ஆனால் நான் அதை
வெளிப்படையாய்ச் சொல்லமுடியுமா? யாராவது தனக்குத்தானே ஆப்பு
வைத்துக்கொள்வார்களா?
"விடு! அவர் தயவால் நாலு கொத்தனார்,
கூலியாள் பிழைச்சுப்போவட்டும்!" என்றேன்.
அவரைப் போலவே இவருக்கும் வாஸ்து
நம்பிக்கை இருந்தால் இரண்டில் ஒன்றை முடித்துவிடலாம்.
"அட, நீங்க வேற தம்பி! அந்தக் கருமாந்திரத்தில எல்லாம் எனக்கு நம்பிக்கையே
கிடையாது." என்றவர் நிறுத்தி நெடுமூச்சு விட்டுக்கொண்டார்.
“ஹும்! என் வீட்டுக்காரி
இருந்தவரைக்கும் அவளே எல்லா விஷயத்திலயும் டக்கு டக்குனு முடிவெடுத்திடுவா! என்னை
இப்படி சிக்கலில் விடமாட்டா. என்ன செய்யறது? போய்ச்சேருற காலம் வந்து போய்ச் சேர்ந்திட்டா! நான் தான் இப்போ
அல்லாடறேன்" சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கடைசிவரிகளைச் சொல்லும்போது அவர்
கண்கள் லேசாகக் கலங்கியது போலிருந்தது. அந்நிலையில் அவரைப் பார்க்க மிகவும்
பரிதாபமாக இருந்தது. இருப்பினும் என்ன செய்வது? மனிதர் சிறிதாவது பிடி கொடுத்துப் பேசினால்தானே?
அதற்குப் பின் சதாவைத் தொடர்பு கொள்ள
முடியவில்லை. வேலைப்பளுவால் சதாவின் வீடு விஷயத்தைக் கிட்டத்தட்ட
மறந்துவிட்டிருந்தேன். குழந்தைகளைத் தேர்வுக்கு தயார் செய்வதில் கீர்த்தனாவும்
மும்முரமாக இருந்ததால் இந்த ஒருமாத காலத்தில் அவன் ஒருமுறை கூட எங்கள்
வீட்டுப்பக்கம் தலைகாட்டவில்லை என்ற நினைவும் எழவில்லை.
அன்று சலூனில் சதாவைத் தற்செயலாகச்
சந்திக்க நேர்ந்தது. பாராமுகமாய் இருந்தவனிடம் வலியச்சென்று,
"என்னப்பா! எந்த வீடு முடிவாச்சு?"
என்று விசாரிக்க, அவனோ,
"எங்க அத்தான்? அவர் குழப்பத்தில் இருந்ததால் தான் உங்களைப் பார்க்க அனுப்பினேன்.
நீங்க என்னடான்னா, அவரை ரொம்பவே குழப்பிட்டீங்களாமில்ல?"
என்று என்னைக் குறை சொல்வதுபோல் கூற
நான் அதிர்ந்துவிட்டேன்.
"நானா? அவரையா? அப்படியா சொன்னார்?"
"ஆமாம்! போதாக்குறைக்கு அவர்கிட்டே
பணமிருக்கறதைத் தெரிஞ்சுகிட்டு அவருடைய தம்பி பையன்கள் வந்து வியாபாரத்துக்குப்
பணவுதவி செய்யச்சொல்லி கண்ணீர் வடிக்கவும் எல்லாத்தையும் தூக்கிக்கொடுத்துட்டார்.
இப்போ வெறும் ஆளா எங்களோடு தான் தங்கியிருக்கார்."
"அடப்பாவமே! இப்படியும் ஒருத்தர்
இருப்பாரா?"
"இருக்காரே! இப்போ காசி, ராமேசுவரம் போகக்கூட நான் தான் என் பணத்தைக் கொடுத்து ஏற்பாடு
செய்யணும். ப்ச்! நல்ல விலையில் ரெண்டு வீடு வந்திச்சு. நானே ஒரு முடிவு
எடுத்திருக்கலாம்."
அவன் அங்கலாய்த்துக்கொண்டான்.
ம்! இதைத்தான் விதியென்பதா? வீடு தேடி வந்து விளையாடிய விதியை நினைத்து சிரிப்புதான் வந்தது.
வீட்டுக்கு வந்து கீர்த்தனாவிடம்
விவரம் சொல்ல,
"பாவம் பெரியவர்! உங்களை நம்பி இவ்வளவு
தூரம் வந்து யோசனை கேட்டார். ரெண்டுல ஒண்ணு சொல்லி அனுப்புறதை விட்டுட்டு
நீங்களும் குழம்பி, அவரையும் குழப்பி , கடைசியில் எதையுமே வாங்கவிடாமப் பண்ணிட்டீங்க!"
அடிப்பாவி! நீயுமா? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!
"சார்! உங்களிடம் ஒரு யோசனை
கேட்கவந்தேன்" என்று
யாராவது வந்தாலே, நான் காததூரம் ஓடுவதன் ரகசியம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!