31 August 2017

தவளையாரே... தவளையாரே..






தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இத்தனைநாள் சத்தமின்றி
இருந்ததெங்கே சொல்லுவீரே..

மண்ணிலே மறைந்திருந்து
மாயம் செய்தேன் பாரும்
உடல் விறைத்து இயக்கமற்று
உயிர் காத்திருந்தேன் நானும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இப்போது மட்டும் வந்தீரே
ஏன் என்றுதான் சொல்லுவீரே

மழைபெய்த சேதியறிந்து
மகிழ்ச்சி கொண்டேன் நானும்
குளம் குட்டை நிறையக்கண்டு
கும்மாளமிடுது என் மனம்.

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
கத்திக் கூப்பாடு போடுகிறீரே
காரணமென்ன சொல்லுவீரே

நானிருக்கும் இடத்தை எந்தன்
இணை அறிய வேண்டுமே..
வானம் பொழியும் காலத்தில் என்
வம்சம் வளர்க்க வேண்டுமே..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
உண்டுகளிக்கும் உணவெதுவோ..
உண்மை எனக்கு உரைப்பீரோ

நோய்பரப்பும் ஈயும் கொசுவும்
நொடியில் தின்பேன் நானும்
அந்துப்பூச்சியும் வெட்டுக்கிளியும்
ஆசையாய்த் தின்பேன் மேலும்..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
வாலோடு தானே பிறந்தீரே
வளர்ந்ததும் ஏனோ இழந்தீரே..

நீரில் மட்டும் வாழும் காலம்
நீந்திப்போக வால்தான் உதவும்
வளர்ந்து மண்ணில் வாழும் காலம்
மறைந்துபோனதே எந்தன் வாலும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
தண்ணீரில் ஆட்டம் போடுறீரே..
தாயார் திட்ட மாட்டாரோ

தவளையின் வாழ்வு தண்ணீரிலே
தரணி அறிந்த உண்மையிது.
ஏரிகுளங்கள் வற்றுவதாலே
எம் இனமும் வாழ்வும் அழியுது.



ஒரு நிலப்பரப்பின் வளமான இயற்கைச்சூழலின் அடையாளம் தவளைகள். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், வாழ்விட இழப்பு, நீர்நிலைகளில் கலக்கப்படும் இரசாயனம், பூச்சிகொல்லிகளின் பயன்பாடு, பூஞ்சைத்தொற்று மற்றும் இதர பல்வேறு காரணங்களால் தற்போது உலகெங்கும் தவளையினங்கள் குறைந்துகொண்டும் அழிந்துகொண்டும் வருவது கவலை தரும் விஷயம். அழிவின் விளிம்பில் இருப்பவற்றைக் காக்கும் முயற்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. 

ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்படும் பூஞ்சைத்தொற்று இன அழிவுக்கு முக்கியக்காரணம். இதுவரை ஆறு தவளையினங்கள் அழிந்துவிட்டன. ஏழு அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே வாழக்கூடிய, எறும்புகளைத் தின்றுவாழும் 3 செ.மீ நீளத்தில் கட்டைவிரல் மொத்தமே உள்ள (Corroboree frog) கொரோபோரீ தவளைகளின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் ஐம்பது. அவற்றுள் ஆண் தவளைகள் 15 மட்டுமே. கவனிக்கப்படாமல் விட்டால் கூடிய விரைவிலேயே இவ்வினம் கண்ணைவிட்டு… இம்மண்ணை விட்டு முற்றிலுமாக மறைந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்பதால் பதைப்புடன் இவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளன ஆஸியிலுள்ள பல்லுயிர் பாதுகாப்பு அமைப்புகள். 

இந்தியாவிலும் 21 தவளையினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் வளரும் பருவத்திலிருந்தே அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல.. நாம் வாழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த இந்த பூமியை அவர்களிடம் பாதுகாப்பாய் ஒப்படைப்பதும் நம் கடமை அல்லவா? 



12 August 2017

பூக்கள் அறிவோம் (11-20)

முந்தைய பதிவின் தொடர்ச்சியாக 
இன்னும் சில பூக்கள் அறிவோம். 


11.  கற்பூரவல்லிப்பூ
(coleus aromaticus)



  
11. டாலியா
(Dahlia)

டேரியா என்று நாம் குறிப்பிடும் இப்பூக்களின் உண்மைப்பெயர் டாலியா. மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்ட டாலியா மெக்சிகோவின் தேசிய மலர் என்னும் பெருமையையும் உடையது. சியாட்டில் நகரின் நகர மலர் என்ற சிறப்பும் உண்டு. ஆரம்பகாலத்தில் உணவின் பொருட்டே டாலியா செடிகள் வளர்க்கப்பட்டனவாம். இதன் கிழங்குக்கு கேரட், உருளைக்கிழங்கு, செலரி இவற்றின் கலவையான ருசி இருக்கிறதாம். கிழங்கிலிருந்து வருடந்தோறும் புதிய செடிகள் தோன்றி மலரும். சுவீடன் நாட்டு தாவரவல்லுநர் Anders Dahl பெயரால் இதற்கு Dahlia என்று பெயரிடப்பட்டுள்ளது. அசலும் கலப்புமாக சுமார் 5500-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றுள் சிறிய ரோஜா அளவிலிருந்து பெரிய தாமரை அளவு வரை பூக்கள் பூக்கும் செடிகள் அடக்கம். வெள்ளை நிறம் தவிர்த்த பிற வண்ண டாலியாக்களிலிருந்து ஆடைகளுக்கான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண சாயங்கள் தயாரிக்கப்படுகின்றனவாம். பதினான்காவது திருமண நாளின் அடையாள மலர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.  


12. உன்னிப்பூ
(lantana camara)





மத்திய அமெரிக்காவைச் சார்ந்த லாண்டானா (lantana camara) நமக்கு மிகவும் பரிச்சயமான தாவரம்தான். வேலியோரங்களில் வண்ணவண்ணப் பூக்களால் அழகு காட்டும் உன்னிப்பூ செடிதான் அது. கொத்துக்கொத்தாய் மலரும் பூக்கள் முதிர்ச்சி பொறுத்து நிறம் மாறும். அதனால் ஒரே கொத்தில் இரண்டு மூன்று நிறப்பூக்கள் காட்சியளிப்பது கண்களுக்கு விருந்தாகும். பார்வைக்கு அழகாக இருக்கும் இத்தாவரம் கால்நடைகளையும் நாய் பூனைகளையும் பாதிக்குமளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. இதையுண்ணும் விலங்குகளின் கல்லீரல் பாதிக்கப்படுவதோடு இந்தச்செடி வெளிவிடும் ஒருவகை இரசாயனம் காற்றில் பரவி அக்கம்பக்கத்து செடிகளையும் அழிக்கவல்லது. நச்சுத்தன்மை மிகுந்த இச்செடியின் காய்கள் பழுத்துவிட்டால் நச்சுத்தன்மையை இழந்து மனிதர்களும் பறவைகளும் விலங்குகளும் தின்பதற்கு ஏதுவாக மாறிவிடுகிற அதிசயத்தை என்னவென்பது? விதைபரவல் நடைபெற இதுவும் ஒரு தந்திரம் போலும். ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் களைப்பயிராக அறியப்படும் இதற்கு பல்வேறு மருத்துவகுணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.



13. சூரியகாந்தி
ring of fire (Helianthus annuus)

நெருப்பு வளைய சூரியகாந்தி

மஞ்சள் சூரியகாந்தி


சூரியன் போகும் திசையெல்லாம் தலைதிருப்பிப் பார்த்திருக்கும் சூரியகாந்திப்பூக்கள் வகையில் இந்த நெருப்பு வளையமும் ஒன்று. கருப்பு வளையத்தைச் சுற்றி தீப்பற்றி எரிவது போல இதன் மத்தியும் இதழ்களும் இருப்பதால் இப்பெயர். தோட்டத்துக்கு அழகுசேர்க்கும் இம்மலரின் தேனை உறிஞ்ச தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் படையெடுக்கும். மலர் காய்ந்தபின் விதைகளைத் தின்ன பறவைகள் படையெடுக்கும். தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள உதவும் அற்புதமான செடி இது. சூரியகாந்தி விதைகளிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகளை அப்படியேவும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உக்ரைனின் தேசிய மலர், அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தின் மாநில மலர், ஜப்பான் நகரத்தின் நகர மலர் என்ற சிறப்புகளை உடையது சூரியகாந்தி.  


14. நொச்சி
(Vitex agnus-castus)




குறுந்தொகைப்பாடல் ஒன்று.. தலைவியைக் காண இரவில் வருவேன் என்று சொன்ன தலைவன் வரவில்லை. மறுநாள் அவனைக் கண்ட தோழி சொல்கிறாள்.. நேற்றிரவு ஊரே தூங்கிவிட்டது. ஆனால் நானும் தலைவியும் தூங்கவில்லை. எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உயரமான ஏழில் என்னும் குன்றின் உச்சியில் உள்ள நொச்சி மரத்தின் நீலமணி போன்ற பூக்கள் உதிரும் சத்தத்தைக் கேட்டபடியே படுத்திருந்தோம் என்கிறாள். எங்கோ தூரத்துக் குன்றின் உச்சியில் நொச்சிப்பூ உதிரும் ஓசை கூட காதில் விழுமளவுக்குத் துல்லியமாய்க் காதைத் தீட்டிவைத்திருந்தோம். நீ வந்திருந்தால் எங்களுக்குத் தெரியாமல் போயிருக்குமா... நான் வந்தேன், நீங்கள்தான் தூங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிடாதே என்று மறைமுகமாய் எச்சரிக்கிறாள். அதென்ன நொச்சி அவ்வளவு பெரிய பூவா.. அது உதிரும் ஓசையில் நிலமே நடுங்குமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாமல் நொச்சிப்பூக்கள் தும்பையினும் சிறியவை என்பதை நம்மில் பலரும் அறிவோம்.


மயிலின் அடி போன்ற இலைகளைக் கொண்டது என்றும் நீலமணிகளைப் போன்ற மலர்களைக் கொண்டது என்றும் நொச்சி இலைகளையும் மலர்களையும் சங்கப்பாடல்கள் வர்ணிக்கின்றன. கபிலர் குறிப்பிடும் சிந்துவாரம் என்னும் மலரும் இதுதானாம். பண்டைய கிரேக்கத்தில் நொச்சிச்செடி கற்பின் அடையாளமாகப் பார்க்கப்பட்டதால் இதற்கு புனித மரம் (chaste tree) என்ற பெயரும், இதன் விதைகளை மிளகுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் வழக்கம் சில நாடுகளில் இருப்பதால் துறவிகளின் மிளகு (monk’s pepper) என்ற பெயரும் உண்டு. உடல்வலி தீர நொச்சி இலைகளை வெந்நீரில் போட்டுக் குளிப்பதுண்டு. உள்ளும் புறமுமான பலவித நோய்களைத் தீர்க்க நொச்சியின் இலைகள், பூக்கள், வேர், பட்டை, விதைகள் அனைத்துமே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

15. பிரம்மந்தண்டு பூ
Mexican prickly poppy (argemone Mexicana)



பாப்பி மலர்களைப் போன்றிருப்பதாலும். முட்செடியாக இருப்பதாலும், மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டதாலும் இதற்கு Mexican prickly poppy அல்லது Mexican poppy என்று பெயர். தமிழில் இதற்கு பிரம்மந்தண்டு, வீமன் தண்டு, குடியோட்டிப் பூண்டு, குறுக்குச்செடி என்று பல பெயர்கள். செடியை ஒடித்தால் மஞ்சள் நிறத்தில் பால் வடியும். கால்நடைகளுக்கு நச்சாகும் இச்செடி பல மருத்துவகுணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சித்த மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. பிரம்ம தண்டின் இலை, பால், வேர், விதை அனைத்துமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலேரியாவை குணப்படுத்த இதன் இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூக்களை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவிவந்தால் பார்வைத் தெளிவு கிடைக்கும் என்கிறது ஒரு தகவல்.

16. கொடுவேரி மலர்கள்
(Plumbago flowers)




அக்கினி, சித்ரகா, சித்திரமூலம், அனல், கொடுவேலி எனப் பல்வாறாக அழைக்கப்படும் கொடுவேரி (plumbago zeylanica) வேலிகளில் படர்ந்து இல்லங்களுக்கு அழகு சேர்ப்பதோடு மருத்துவகுணமும் வாய்ந்தது. வாதம், வெண்குஷ்டம், மூலம் போன்ற நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் வேரைப் பொடி செய்து தேன் கலந்து உபயோகிக்கிறார்கள். கொடுவேரி இனத்தில் வெள்ளை, சிவப்பு, நீலம் என பல வண்ணங்களில் சுமார் 20  வகைகள் உள்ளன. சிவப்பு வகைதான் குறிஞ்சிப்பாடலில் குறிப்பிடப்படும் செங்கொடுவேரி மலர்கள். Plumbum என்னும் லத்தீன் வார்த்தைக்கு ஈயம் என்றும் agere என்றால் போல என்றும் பொருளாம். இலைகளின் அடிப்புறத்தில் வெண்ணிற மாவுப்படலம் காணப்படுவதுதான் இப்பெயருக்குக் காரணம் என்றும் ஈய நச்சுக்கு இது மருந்தாகப் பயன்படுவதுதான் காரணம் என்றும் இருவேறு கருத்து உள்ளது.


 17. ப்ளூமேரியா
Frangipani (plumeria)




  
பாதிரிப்பூ, பாதுரிப்பூ, நெல சம்பங்கி, பன்னீர் மல்லி, நாகவல்லிப்பூ, அலரி, தேமாப்பூ, கள்ளி மந்தாரை, நாவில்லா அலரி என தமிழில் பல பெயர்கள் இந்தப் பூவுக்கு. (சங்கப்பாடல்கள் பாதிரிப்பூ என்று பாடலம்பூவைக் குறிப்பிடுகின்றன) மரமாகவோ குத்துச்செடியாகவோ வளரும் இவை பூக்களின் அழகுக்காகவும் நறுமணத்துக்காகவும் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. சும்மா வெட்டிவைத்தாலே துளிர்த்துக்கொள்ளும் இவ்வினத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. துளியும் தேனற்ற பாதிரிப்பூக்கள் தங்கள் நறுமணத்தால் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து ஏமாற்றி மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துகின்றன. 


பசிபிக் தீவுவாசிகள் இப்பூக்களைக் கோத்து மாலையாக அணிந்துகொள்கின்றனர். அத்தீவுகளின் பெண்கள் இப்பூவினை காதோரம் சூடித் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். வலக்காதோரம் அணிந்தால் இணையைத் தேடுவதாகவும் இடக்காதோரம் அணிந்தால் இணை இருப்பதாகவும் பொருளாம். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் இம்மரம் ஆவிகளின் குடியிருப்பாக அறியப்படுகிறது. வங்காளத்தில் ஈமச்சடங்குகளின்போது இப்பூக்கள் அவசியம் இடம்பெறுகின்றன. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் இம்மரம் இந்துக்கோவில்களிலும் புத்தவிகாரங்களிலும் வளர்க்கப்பட்டு பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதனாலேயே இம்மரம் temple tree, pakoda tree என்றும் குறிப்பிடப்படுகிறது.


18. அனிச்சம்
 scarlet pimpernel (anagallis arvensis)



மோப்பக்குழையும் அனிச்சம் என்கிறார் வள்ளுவர். அதாவது முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் அனிச்ச மலர். அது மட்டுமா? அனிச்சமலரைக் காட்டிலும் மென்மையானவள் என் காதலி, அனிச்சமலர் கூட என் காதலியின் பாதத்துக்கு நெருஞ்சிமுள் போல துன்பந்தரும் என்றெல்லாம் வர்ணிக்கிறார். அப்படிப்பட்ட அனிச்சமலரைக் காணும் பேறு கிட்டுமோ என்றிருந்த எனக்கு என் தோட்டத்துக் களைகளுக்கு மத்தியில் தானும் ஒரு களையாக வளர்ந்து மலர்ந்து அவை காட்சியளித்த அதிசயத்தை என்னவென்று சொல்வது? இங்கே பூவின் படத்தைப் பார்த்து பெரியதென கற்பனை செய்துவிடாதீர்கள். ஒரு எட்டுக்கல் மூக்குத்தி அளவிலான பூதான் இது.



Scarlet pimpernel, blue scarlet pimpernel என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் இப்பூக்களின் சிறப்பு இவை சூரியன் இருக்கும்வரைதான் மலர்ந்திருக்கும். மழை வருமுன்னரோ.. சூரியன் மறையுமுன்னரோ.. சட்டென்று வாடி கண்களுக்குப் புலப்படாமல் மறைந்துவிடுவதால் இதற்கு ஏழையின் வானிலைமானி, இடையனின் கடிகாரம் என்றெலாம் பொருள்படும் poor man’s barometer, poor man’s weather-glass, shepherd’s clock என்ற செல்லப்பெயர்களும் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்தில் பாம்புக்கடி, நாய்க்கடி, தொழுநோய் போன்றவற்றுக்கான வெளித்தடவும் களிம்புகள் இத்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பண்டைய கிரேக்கத்தில் மனப்பிறழ்வுக்கான மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. ஒரு பக்கம் மூலிகையாக கருதப்படும் இது இன்னொரு பக்கம் களைப்பயிராகவும் அறியப்படுகிறது. இதன் கசப்பு காரணமாக ஆடுமாடுகள் இதை மேய்வதில்லை. தவறி தின்றுவிட்டால் இரைப்பை அழற்சி ஏற்பட்டுவிடும். இதன் விதைகளைத் தின்னும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறதாம்.

19. கருஞ்சீரகப்பூ
(Nigella sativa)



கருப்பு என்று பொருள்படும் niger என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து நைஜெல்லா என்ற பெயர் இடப்பட்டுள்ளது. கருஞ்சீரகம், கலோஞ்சி, black seeds என்றெல்லாம் குறிப்பிடப்படும் நைஜெல்லாவின் தாயகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவாகும். இதன் அற்புதமான மருத்துவக்குணம் காரணமாக, கருஞ்சீரகம் இந்திய மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளில் உணவில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. ஓமம் போல சுரீரென்று நாவில் உறைக்கும் தன்மை உடையது. ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் பெரும்பங்கு வகிக்கும் கருஞ்சீரகம் சகலரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது. சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டைய எகிப்திய மக்களால் பயிரிடப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்பூவின் மேல்பகுதியில் உருளையாகத் தோன்றும் காயிலிருந்து ஏராளமான விதைகள் கிடைக்கின்றன.

20. தூங்கு செம்பருத்தி
Japanese lantern  (hibiscus schizopetalus)



ஒருவர் பாராசூட்டிலிருந்து இறங்குவது போன்ற அழகுடன் காற்றில் மிதந்தாடும் இந்த செம்பருத்தியின் தனித்துவ அழகுக்காகவே வீடுகளிலும் தோட்டங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. மெல்லிய காம்பின் இறுதியில் தலைகீழாய்த் தொங்கும் இதற்கு தூங்கு செம்பருத்தி என்று பெயர். ஆப்பிரிக்காவின் கென்யா, டான்சானியா, மொசாம்பிக் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த தூங்கு செம்பருத்தி, தேன்சிட்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் என அனைத்தையும் தோட்டத்துக்கு  கவர்ந்திழுக்கும் அழகுடையது. தூங்கு செம்பருத்தி என்ற பெயர் ஏன்? தூங்குதல் என்றால் தூய தமிழில் தொங்குதல் என்று பொருள். தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக்கண்டான் மரத்திலே என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா.. இப்படி தலைகீழாகத் தொங்குவதால் இதற்கு தூங்கு செம்பருத்தி என்று பெயர். எலும்புக்கூடு செம்பருத்தி (skeleton hibiscus), பவள செம்பருத்தி (coral hibiscus), சிலந்தி செம்பருத்தி (spider hibiscus), நார் செம்பருத்தி (fringed hibiscus), ஜப்பானிய லாந்தர் (japanese lantern) என ஏராளமான பெயர்கள் உள்ளன. கூடவே என் பிள்ளைகள் வைத்த செல்லப்பெயரான கிழிஞ்ச செம்பருத்தியையும் சேர்த்துக் கொள்ளலாம். :)))

**********

6 August 2017

காக்கைச் சிறகினிலே கீதமஞ்சரி

காக்கைச் சிறகினிலே - ஜூலை 2017-ல் கீதமஞ்சரி..
தரமானதொரு இலக்கிய இதழில் என் வலைத்தளத்துக்காக முழுமையாக எட்டுப் பக்கங்கள் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி 2017-ல் மூன்றாம் பரிசு பெற்றமைக்காக பிரத்யேக அங்கீகாரம் இது. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி தேர்வுக்குழுவுக்கும் காக்கைச் சிறகினிலே ஆசிரியர் குழுமத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இப்போட்டிக்கு கீதமஞ்சரி வலைப்பூவைப் பரிந்துரைத்த தோழி மணிமேகலாவுக்கு இதயபூர்வமான அன்பும் நன்றியும்.