தவளையாரே
தவளையாரே
தத்திச்செல்லும்
தவளையாரே
இத்தனைநாள்
சத்தமின்றி
இருந்ததெங்கே
சொல்லுவீரே..
மண்ணிலே
மறைந்திருந்து
மாயம் செய்தேன்
பாரும்…
உடல் விறைத்து இயக்கமற்று
உயிர்
காத்திருந்தேன் நானும்
தவளையாரே
தவளையாரே
தத்திச்செல்லும்
தவளையாரே
இப்போது மட்டும்
வந்தீரே
ஏன் என்றுதான்
சொல்லுவீரே
மழைபெய்த
சேதியறிந்து
மகிழ்ச்சி
கொண்டேன் நானும்
குளம் குட்டை
நிறையக்கண்டு
கும்மாளமிடுது
என் மனம்.
தவளையாரே
தவளையாரே
தத்திச்செல்லும்
தவளையாரே
கத்திக் கூப்பாடு
போடுகிறீரே
காரணமென்ன
சொல்லுவீரே
நானிருக்கும்
இடத்தை எந்தன்
இணை அறிய
வேண்டுமே..
வானம் பொழியும்
காலத்தில் என்
வம்சம் வளர்க்க
வேண்டுமே..
தவளையாரே
தவளையாரே
தத்திச்செல்லும்
தவளையாரே
உண்டுகளிக்கும்
உணவெதுவோ..
உண்மை எனக்கு
உரைப்பீரோ
நோய்பரப்பும்
ஈயும் கொசுவும்
நொடியில்
தின்பேன் நானும்
அந்துப்பூச்சியும்
வெட்டுக்கிளியும்
ஆசையாய்த்
தின்பேன் மேலும்..
தவளையாரே
தவளையாரே
தத்திச்செல்லும்
தவளையாரே
வாலோடு தானே
பிறந்தீரே
வளர்ந்ததும் ஏனோ
இழந்தீரே..
நீரில் மட்டும்
வாழும் காலம்
நீந்திப்போக
வால்தான் உதவும்
வளர்ந்து மண்ணில்
வாழும் காலம்
மறைந்துபோனதே எந்தன் வாலும்
தவளையாரே
தவளையாரே
தத்திச்செல்லும்
தவளையாரே
தண்ணீரில் ஆட்டம்
போடுறீரே..
தாயார் திட்ட
மாட்டாரோ…
தவளையின் வாழ்வு
தண்ணீரிலே
தரணி அறிந்த
உண்மையிது.
ஏரிகுளங்கள்
வற்றுவதாலே
எம் இனமும்
வாழ்வும் அழியுது.
ஒரு நிலப்பரப்பின்
வளமான இயற்கைச்சூழலின் அடையாளம் தவளைகள். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், வாழ்விட
இழப்பு, நீர்நிலைகளில் கலக்கப்படும் இரசாயனம், பூச்சிகொல்லிகளின் பயன்பாடு, பூஞ்சைத்தொற்று
மற்றும் இதர பல்வேறு காரணங்களால் தற்போது உலகெங்கும் தவளையினங்கள் குறைந்துகொண்டும்
அழிந்துகொண்டும் வருவது கவலை தரும் விஷயம். அழிவின் விளிம்பில் இருப்பவற்றைக் காக்கும்
முயற்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள் பெருமுயற்சி எடுத்து
வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்படும் பூஞ்சைத்தொற்று இன அழிவுக்கு முக்கியக்காரணம்.
இதுவரை ஆறு தவளையினங்கள் அழிந்துவிட்டன. ஏழு அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவற்றைப்
பாதுகாக்க 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன. ஆஸ்திரேலியாவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே
வாழக்கூடிய, எறும்புகளைத் தின்றுவாழும் 3 செ.மீ நீளத்தில் கட்டைவிரல் மொத்தமே உள்ள (Corroboree frog) கொரோபோரீ தவளைகளின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணிக்கை
வெறும் ஐம்பது. அவற்றுள் ஆண் தவளைகள் 15 மட்டுமே. கவனிக்கப்படாமல் விட்டால் கூடிய விரைவிலேயே
இவ்வினம் கண்ணைவிட்டு… இம்மண்ணை விட்டு முற்றிலுமாக மறைந்துவிடும் சாத்தியங்கள் அதிகம்
என்பதால் பதைப்புடன் இவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளன ஆஸியிலுள்ள பல்லுயிர்
பாதுகாப்பு அமைப்புகள்.
இந்தியாவிலும் 21 தவளையினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் வளரும் பருவத்திலிருந்தே அடுத்த தலைமுறைக்குக்
கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல.. நாம் வாழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த இந்த பூமியை அவர்களிடம்
பாதுகாப்பாய் ஒப்படைப்பதும் நம் கடமை அல்லவா?
//இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் வளரும் பருவத்திலிருந்தே அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல.. நாம் வாழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த இந்த பூமியை அவர்களிடம் பாதுகாப்பாய் ஒப்படைப்பதும் நம் கடமை அல்லவா? //
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு பதிவு. இயற்கையை பாதுகாக்க வேண்டும்.பல்லூயிர் பாதுகாக்க வேண்டும்.
அருமையான பதிவு.
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.
Deleteதவளைக்கான பாடலும் தவளைகள் பற்றிய விபரங்களும் மிகவும் சிறப்பு!!
ReplyDeleteமிகவும் நன்றி மனோ மேடம்.
Deleteஅருமை, ஆனா தவளையார்களைப்பார்க்க பிளாஸ்ரிக் போல இருக்குதே.
ReplyDeleteஅப்படியா தெரியுது? இவங்க எல்லாம் உண்மையான ஆட்கள்தான்.. போஸ் கொடுக்கறாங்க அப்படி.. :)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.
கவிதைக்கேற்ற புகைப்படங்களா, புகைப்படங்களுக்கு ஏற்ற கவிதையா என வியந்தோம். அருமை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteபல இனங்களழிந்து போனாலும் புதிதாக இருப்பவைகளும் செய்தியாக வருகின்றன
ReplyDeleteபுதியவை தோன்றினாலும் பழையவை அழிவது கவலைக்குரியதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஅருமை பாடல்!!! தகவல்கள் படங்கள் எல்லாமே செம!
ReplyDeleteகீதா: கீதா அந்தப் பச்சை தவளையார் உண்மையானவரா?!! வியப்பாக இருக்கிறதே!! ஏதோ நீங்கள் பொம்மைத் தவளையாரை அடுக்கி வைத்து எடுத்தது போல் இருக்கு!! செம புகைப்படம் மிகவும் ரசித்தோம்...அனைத்தையும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி சார் & தோழி கீதா.
Deleteபடத்தில் காட்டப்பட்டுள்ள தவளைகள் அனைத்தும் உண்மையானவையே.. ஆஸ்திரேலிய வாழ் தவளைகள்... இங்குள்ள உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட படங்கள்.
அடடா.... எங்கப்பா இவங்களப் புடிச்சீங்க? அழகா படத்துக்கு போஸ் வேற குடுக்கிறாங்க.... ஒறிஞினல் கலராப்பா? கண்டதே இல்லையே.... பொன்னிறம்... பச்சை நிறம்... வரிசையா வேற....
ReplyDeleteஅது போதாதுன்னு மெடத்திட கவித வேற செம்ம!! :) ரொம்ப சிறப்பா இருக்குப்பா....குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏற்ற ஒரு சிறந்த பாட்டு....
பாட்டும் பரதமும் மாதிரி...
இசையும் கவிதையும் மாதிரி....
கீதாவுக்கே உரிய அழகியலோடு பொருந்திப் போகுது....
உண்மைதான் மணிமேகலா.. taronga உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட படங்கள். இன்னும் ஏராளமாய் நாம் இதுவரை அறியாத உயிரினங்களை அங்கே பார்க்கமுடிகிறது. வருகைக்கும் அழகான பாராட்டுக்கும் அன்பு நன்றி தோழி.
Deleteவணக்கம் !
ReplyDeleteஅடடா தவளைப் பாட்டு அருமை தகவல்களும் அருமை
தொடர வாழ்த்துகள் சகோ
தம +1
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் அன்பு நன்றி சீராளன்.
Deleteதவளைப்பாட்டும் படங்களுமாய் நிரம்ப விடயங்கள் அறிய முடிந்தது. நன்றி கீதாக்கா
ReplyDelete