18 September 2017

பூக்கள் அறிவோம் 21-30

21. டாஃபோடில்

 daffodil (narcissus)



டாஃபோடில் பூக்களைப் பார்க்கும்போது எனக்கு cup & saucer தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக மஞ்சள் அல்லது வெள்ளை நிற சாசர்கள் மத்தியில் அதே வண்ண கோப்பைகள் அல்லது ஆரஞ்சு வண்ணக் கோப்பைகள் காணப்படுகின்றன. அழகான வித்தியாசமான இப்பூக்கள் கலைஞர்களைக் கவர்ந்து ஏராளமான கவிதைகளிலும் ஓவியங்களிலும் இடம்பெற்றுள்ளன. பத்தாவது திருமண நாளின் அடையாள மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. மத்தியதரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இதன் இலையும் வேர்க்கிழங்கும் நச்சுத்தன்மை கொண்டவை. இவற்றில் அசல் 50 வகையும் கலப்பு 13,000-க்கும் மேலும் இருக்கின்றனவாம். வசந்தகால மலர்களான டாஃபோடில் மலர்கள் மறுவாழ்வு மற்றும் புதிய ஆரம்பத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. புற்றுநோய் நிறுவனங்கள் டாஃபோடில் மலர்களை புற்றுநோயற்ற எதிர்காலத்தின் நம்பிக்கையாகக் காண்கின்றன. வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் கடைசி வெள்ளிக்கிழமை (கிட்டத்தட்ட குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் சமயம்) டாஃபோடில் தினமாக அறிவிக்கப்பட்டு புற்றுநோய் நிறுவனங்களுக்காக நிதி திரட்டப்படுகிறது.

Narcissus என்னும் இதன் உயிரியல் பெயருக்கான மூல வார்த்தையான narcissism பற்றி அறிவீர்களா? நாசீசிசம் என்பது தன்னைத் தானே காதலிக்கும், தற்பெருமையும் தன்முனைப்பும் கொண்ட குணத்தைக் குறிக்கிறது. ஹிட்லரின் நாசிசத்தோடு (Nazism) இதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம். அது வேறு. நாசீசிசம் என்னும் கிரேக்கப் புராணக் கதைப்படி நதிதேவன் செஃபிசஸ்க்கும் லிரியோப் தேவதைக்கும் மகனான நாசீசஸ் பேரழகன். தன் அழகு குறித்து பெருங்கர்வம் கொண்டிருந்தான். ஏராளமான தேவதைகள் அவன் அழகில் மயங்கினர். அவன் எவரையும் பொருட்படுத்தவில்லை. எக்கோ என்னும் தேவதையின் ஆத்மார்த்தமான காதலையும் நிராகரித்து அவளைத் துயரத்தில் ஆழ்த்தினான். இதை அறிந்த நெமசிஸ் என்னும் தேவதைக்கடவுள் அவனை ஒரு ஏரிக்கு வரவழைத்தது. நீரில் தெரியும் சுய பிம்பத்தின் அழகால் மயங்கிய அவன் அதையே காதலிக்கத் தொடங்கினான். அதை விட்டு அவனால் நகரமுடியவில்லை. தன் பிம்பத்திலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. தற்காதலில் தன் சிந்தனை, செயல், வாழ்க்கை அத்தனையும் இழந்து மறைந்துபோனான். அவன் மறைந்த இடத்தில் அவனைப் போலவே குனிந்து பிம்பம் பார்ப்பது போலவே மலர்ந்த இந்த அழகு டாஃபோடில் மலர்களுக்கு நாசீசஸ் என்ற பெயரிடப்பட்டதாம்.

இந்தியில் இதன் பெயர் என்ன தெரியுமா? நர்கீஸ். சொல்லும்போதே வசீகரிக்கிறது அல்லவா?

22. கொலம்பைன் மலர்கள் 

columbine (aquilegia)


பின்புறம் கொக்கிபோல் நீண்ட ஐந்து புற இதழ்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் கண்ணைக் கவரும் கொலம்பைன் மலர்களுக்கு நாற்பதாயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. Columba என்னும் லத்தீன் வார்த்தைக்கு புறா என்று பொருளாம். பூவைப் பின்புறமிருந்து பார்த்தால் ஐந்து புறாக்கள் வட்டமாய் அமர்ந்திருப்பது போல இருக்கும். இதன் உயிரியல் பெயரான aquilegia என்பதற்கு லத்தீன் மொழியில் கழுகின் கூர்நகங்கள் என்று பொருளாம். பாட்டியின் தொப்பி (granny’s bonnet) என்ற செல்லப்பெயரும் உண்டு. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், பிங்க், லாவண்டர் என பல்வேறு வண்ணங்களிலும் மலர்ந்து தோட்டங்களுக்கு அழகுசேர்ப்பவை. அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் புதுப்புது கொலம்பைன்  வகைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனவாம். இதுவரையில் அசலாக சுமார் 70 வகைகளும் கலப்பின வகைகள் எண்ணற்றவையும் உள்ளனவாம். அமெரிக்கப் பழங்குடியினர் இதன் விதைகளை தலைவலித்தைலம் தயாரிக்கப் பயன்படுத்தினார்களாம்.

23. சங்கு இஞ்சிப்பூ 

shell ginger flower (Alpinia zerumbet)



pink porcelain lily, variegated ginger, butterfly ginger என்றெல்லாம் குறிப்பிடப்படும் இச்செடி கிழக்காசியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்டது. காய்ச்சல், இருமல், மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம், வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. மலரின் அழகுக்காகவும் இலைகளின் மருத்துவ குணத்துக்காகவும் வளர்க்கப்படுகின்றன. மலர்வதற்கு முந்தைய மொட்டுகளைப் பார்த்தால் சங்குகள் போல் இருப்பதால் இதற்கு சங்கு இஞ்சி shell ginger என்ற பெயராம். பூவைப் பார்த்தாலும் நம்மூர் சங்குப்பூ போலத்தான் இருக்கிறது. நாம் வாழை இலைக் கொழுக்கட்டை செய்வது போல ஜப்பானின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான ஸாங்ஸி வேகவைப்பதற்கு அவர்கள் இந்த இஞ்சிச்செடியின் இலைகளைத்தான் பயன்படுத்துகிறார்களாம்.

24. பட்டுப்பஞ்சுப் பூ 

Silk floss flower (ceiba speciosa)



பட்டுப்பஞ்சு மரம் என்றதும் பட்டு இப்போதெல்லாம் பட்டுப்பூச்சிகளை விட்டுவிட்டு மரத்திலிருந்து எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வேண்டாம். இதன் காயிலிருந்து கிடைக்கும் பஞ்சு பட்டுப்போல மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதால் இதற்கு பட்டுப்பஞ்சு மரம் என்று பெயராயிற்று. இதை நம் இலவம்பஞ்சு மரத்துக்கு அக்கா எனலாம். பூக்கும் காலத்தின்போது மரம் இலையாடையை அவிழ்த்துவிட்டு பூவாடையை உடுத்திக்கொள்ளும். மரம் முழுக்கப் பூக்கள் மலர்ந்து பார்ப்பவரை வசீகரிக்கும். கல்யாண முருங்கை மரத்தைப் போல இந்த மரத்தின் தண்டுகளிலும் முட்கள் இருக்கும். பிரேசில், அர்ஜென்டினா நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் பூக்களின் அழகுக்காகவே முள்ளையும் பொருட்படுத்தாது வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இதன் அடர்ந்த கிளைகள் தாறுமாறாய் வளர்ந்து ஒன்றன்மேல் ஒன்று விழுந்துகிடப்பதால் இதற்கு குடிகார மரம் (drunken tree) என்றும் அடர்த்தியான நிழல் தருவதால் அடைக்கல மரம் (sheltering tree) என்றும் செல்லப்பெயர்கள் உண்டு.


25. ஃப்யூஷியா 

Fuchsia






கிணிகிணியென அடிக்கும் மணிபோல அழகு ஒரு பக்கம்.. காதோரம் கதைபேசும் லோலாக்கு போல காற்றிலாடி கண்கவரும் அழகு மறுபக்கம். நுனிவிரல் ஊன்றி சுழன்றாடும் பாலே நடனச் சிறுமியர் போல காட்சிதந்து ரசிக்கவைக்கும் அழகு இன்னொரு பக்கம். காண்போர் எவரையும் ஈர்க்கும்வண்ணம் வடிவத்திலும் அழகிலும் மிக வித்தியாசமான இந்த ஃப்யூஷியாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மையானவை தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. சில நியூஸிலாந்து, தஹிதி தீவுகளைச் சார்ந்தவை. தாவரவியல் நிபுணரான Leonhart Fuchs நினைவாக இதற்கு fuchsia என்று பெயரிடப்பட்டுள்ளது. வண்ணத்தால் கவரப்பட்டு தேனுறிஞ்ச வரும் தேன்சிட்டுகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. ஃப்யூஷியாவின் பழங்கள் அப்படியேயும், ஜாம் வடிவிலும் பலராலும் விரும்பியுண்ணப்படுகின்றன. அமெரிக்கப் பழங்குடியினர், கம்பளிகளில் கருப்புவண்ணமேற்ற ஃப்யூஷியா செடியின் வேர்களைப் பயன்படுத்தினார்களாம். சில ஃப்யூஷியா வகை நூறு வருடங்கள் கூட வாழுமாம். 1899-ல் நடப்பட்ட ஒரு ஃப்யூஷியா மரம் இன்றும் உயிர்ப்புடன் உள்ளதாம்.

26. கெல்லா லில்லி 

Calla lily (zantedeschia aethiopica)




லில்லி என்று பெயரே தவிர இவை லில்லியினம் கிடையாது. தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இச்செடி பூவின் அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகிறது. பசிய இலைகளுக்கு மத்தியில் வெள்ளைக்கிண்ணம் போல பூ மலர்கிறது. உண்மையில் வெள்ளைக்கிண்ண வடிவிலிருப்பது பூவடி இலை மட்டுமே. நடுவில் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதுதான் மலர்த்தண்டு. வெளியிதழ் வண்ணத்தாலும் மலர்த்தண்டு வாசத்தாலும் கவரப்பட்டு பூச்சிகள் தேடி வருகின்றன. செயின்ட் ஹெலனா தீவின் தேசிய மலர் இதுவே. அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருப்பது போல இதன் நச்சுத்தன்மை தோல்புண், எரிச்சல், ஒவ்வாமை, வயிற்றுவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால் சில நாடுகளில் இதை வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. Araceae குடும்பத்தைச் சேர்ந்த இவற்றில் 114 பிரிவுகளும் 3750 வகைகளும் உள்ளனவாம். 6-வது திருமண நாளின் அடையாள மலர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

27. சொர்க்கப்பறவைப்பூ 

Bird of paradise (Strelitzia reginae)



சொர்க்கப்பறவை என்று சொல்லப்படும் கண்ணைக்கவரும் வண்ணப் பறவையினமொன்று உண்மையிலேயே இருக்கிறது. ஆனால் இலைகளுக்கு மத்தியிலிருந்து அழகிய பறவை கழுத்தை நீட்டிப் பார்ப்பது போல காண்போரை சொக்கவைக்கும் இந்த மலருக்கும் சொர்க்கப்பறவை என்ற பெயர் பொருத்தம்தானே. தென்னாப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இச்செடிக்கு அங்கே கொக்குப்பூ (crane flower) என்று பெயராம். இம்மலர் தென்னாப்பிரிக்காவின் 50 சென்ட் நாணயத்தில் இடம்பெற்றுள்ளதோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அடையாளமலர் என்ற பெருமையும் உடையது. இதன் உயிரியல் பெயரான strelitzia என்பது இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி Charlotte of Mecklenburg Strelitz மகாராணியின் நினைவாக இடப்பட்டதாம். திருமணவாழ்வின் ஒன்பதாம் ஆண்டின் அடையாளமலர் என்ற பெருமை உடையது

28. அமைதி லில்லி 

Peace lily (spathiphyllum)




பெயர்தான் லில்லியே தவிர கெல்லா லில்லியைப் போலவே இதுவும் லில்லி குடும்பதைச் சேர்ந்ததில்லை. அமெரிக்க வெப்பமண்டல நாடுகளையும் தென்கிழக்கு ஆசியாவையும் தாயகமாகக் கொண்டது. அதிக தண்ணீரோ சூரிய ஒளியோ தேவைப்படாது. பாம்பு படமெடுத்தாற்போன்ற பூவடி இலையோடு கூடிய மலர்த்தண்டு பார்க்க வெகு அழகு. பூவடி இலைகள் வெள்ளை, மஞ்சள், பச்சை நிறங்களில் காணப்பட்டாலும் குறிப்பிட்ட இந்த வகை இதன் வெண்மையழகு காரணமாக புனித மேரியின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. கர்த்தர் உயிர்த்தெழும் நாளிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. எல்லா லில்லிச்செடிகளையும் போன்றே இதுவும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடிய நச்சுத்தன்மை உடையது. தோல் எரிச்சல், தொண்டைப்புண், வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது.

29. ஆப்பிரிக்க லில்லி 

African lily (Agapanthus africanus)



தென்னாப்பிரிக்கா, லெசாதோ, சுவாஸிலாந்து, மொஸாம்பிக் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட காரணத்தால் ஆப்பிரிக்க லில்லி என்றும் நைல் லில்லி (lily of the Nile) என்றும் குறிப்பிடப்படுகிறது. லில்லி என்று சொன்னாலும் இது லில்லியினம் கிடையாது. நீள்தண்டின் உச்சியில் நீலவண்ணத்தில் பூத்திருக்கும் பூப்பந்தில் 40 முதல் 100 பூக்கள் வரை இருக்கலாம். அழகுமலரான இது ஆபத்தானதும் கூட. இதன் இலையின் பால் விஷத்தன்மை கொண்டது. கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. இதன் உயிரியல் பெயரான agapanthus என்பதற்கு கிரேக்க மொழியில் அன்புமலர் என்று அர்த்தமாம். இந்த அன்புமலரும் துன்பமலராய் மாறிவிட்டது பல நாடுகளில். ஆம்.. நியூசிலாந்து மற்றும் சில நாடுகளில் ஆக்கிரமிப்புக் களைகள் பட்டியலில் இந்த ஆப்பிரிக்க லில்லியும் இடம்பெற்றுவிட்டது.

30.  முட்கிரீட மலர் 

Crown of thorns (euphorbia milii)





முட்கிரீடம், இயேசுவின் செடி, இயேசுவின் முள் என்றெலாம் வழங்கப்படும் இந்தச்செடியின் தாயகம் மடகாஸ்கர். succulent எனப்படும் சதைப்பற்றுள்ள தாவர இனத்தைச் சார்ந்த இச்செடியின் துளிர் வரும் இடங்களில் மட்டுமே முள்ளோடு இலைகளும் காணப்படும். மற்ற இடங்களில் முட்கள் மட்டுமே காட்சியளிக்கும். செவ்விய உதடுகளைப் போலக் காட்சியளிப்பவை பூவடி இலைகளே.. உள்ளே சின்னஞ்சிறியதாய்க் காட்சியளிப்பதுதான் பூ. நச்சுத்தன்மை உடைய இதன் பால் பட்டாலே எரிச்சலும் அரிப்பும் உண்டாகும். பஞ்சபூதங்களை வணங்கும் கிழக்கிந்திய போடோ பழங்குடி மக்களின் ஆன்மீக நம்பிக்கையில் இதற்கு முக்கிய இடம் உண்டு என்பதால் ஒவ்வொரு வீட்டின் வடகிழக்கு மூலையில் இச்செடி தவறாமல் இடம்பெற்றிருக்கும். பூக்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. படத்தில் பெரியதாக காட்சியளித்தாலும் நிஜத்தில் மிகவும் குட்டிப்பூக்களே..  

18 comments:

  1. ஒவ்வொரு பூவும் அழகோ அழகு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. தாமத பதிலுக்குப் பொருத்தருள்க.

      Delete
  2. பூக்களும், பூக்கள் பற்றிய விவரங்களும் அருமை. ஹிந்தியில் நர்கீஸ் என்றொரு நடிகை இருந்தார். சுனில் தத் மனைவி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஸ்ரீராம். தாமத பதிலுக்குப் பொருத்தருளவும்.

      \\நர்கீஸ் என்றொரு நடிகை இருந்தார். சுனில் தத் மனைவி.\\ ஆம். அதனால்தான் பெயரைச் சொல்லும்போதே வசீகரிக்கிறது என்றேன். :)))

      Delete
  3. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதத்தில் அழகு..

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ராஜி. தாமத பதிலுக்குப் பொருத்தருளவும்.

      Delete
  4. பூக்கள் அத்தனை அழகு அதுவும் உங்கள் புகைப்படம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது!! அட்டகாசம்!

    கீதா: இங்கு முட்க்ரீட மலர் போன்று இருப்பதாகப் பட்டது நானும் எடுத்திருந்தேன் ஆனால் கிட்டத்தட்ட ஒரே போன்று இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல என்பது தெரிந்தது. இங்கு எடுத்திருப்பதிலும் நீங்கள் சொல்லும் கலர்கள் உண்டு...நான் அதனை பட்டன் ஃப்ளவர் என்று சொல்லியிருந்தேன் பட்டன் போன்று அழகாக இருப்பதால்....இன்னும் ஒத்துப் பார்க்க வேண்டும் இரண்டும் ஒன்றுதானா என்று..

    அழகிய விவரங்கள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் நன்றி தோழி கீதா & துளசி சார். தாமத பதிலுக்காகப் பொருத்தருளவும்.

      முட்செடியாக இருந்தால் இரண்டும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

      Delete
  5. அழகு அழகு பூக்களும் விளக்கமும் எல்லா படங்களும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி பூவிழி. தாமத பதிலுக்காகப் பொருத்தருளவும்.

      Delete
  6. சங்கு இஞ்சிப்பூ,பட்டுபஞ்சிப்பூ,அமைதி லிப்பிப்பூ, சொர்க்கப்பறவைப்பூ என வெல்லாம் பெயரில் பூக்கள் இருக்கின்றதாக்கா? நீங்களே வைத்து கொண்ட பெயரா இதெல்லாம். இந்த பூக்களில் பலதை நான் பார்ர்த்து ரசித்திருக்கின்றேன். அக்கா இந்த தொகுப்புக்களை கட்டாயம் மின்னூலாக்க வேண்டும்.இப்பவே சொல்லி விட்டேன். புஸ்தகா நிறுவனம் கம்மியாகவே நம்ம பதிவுகளை மின்னூலாக்கி தருவார்களாம். இந்த வர்ணப்புகைப்படங்களோடு பதிவு புத்தகமாக்கப்படுமானால் இன்னும் சூப்பர் அக்கா. நம்ம தமிழில் ஆங்கிலப்புத்தகங்கள் போல் வர வேண்டும்.

    எங்கே தேடினாலும் கிடைக்காத அரிய வகைப்பூக்களை தேடித்தேடி படமெடுத்து மொழி பெயர்த்து தாவரவியல் பெயரோடு பகிரும் உங்கள் அர்ப்பணிப்புக்கு என் ராயல் சல்யூட் அக்கா.

    தொடருங்கள். நான் தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலப் பெயர்களை சும்மா தமிழில் தந்தேன்மா. சொல்லும்போது அழகாகவும் இருக்கிறதல்லவா? அதனால்தான். நிச்சயமாக மின்னூலாகவோ அச்சுநூலாகவோ கொண்டுவர விருப்பம் உள்ளது. இன்னும் நிறையத் தொகுக்கவேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு செய்வோம்மா. அன்பும் நன்றியும் நிஷா.

      கொஞ்சநாளாய் ஏதோ ஒரு மனச்சோர்வால் உற்சாகம் குன்றியிருந்தேன். அதனால் வலைப்பக்கம் வரவில்லை. தாமத பதிலுக்காகப் பொருத்தருள வேண்டுகிறேன்.

      Delete
  7. கொள்ளை அழகு! கண்டு களித்தேன்! சகோதரி நலமா!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழம்ண வாக்குக்கும் மிகவும் நன்றி ஐயா. தற்போது நலமே. தாங்கள் நலமா?

      தங்களுக்கு என் அன்பும் நன்றியும். தாமத பதிலுக்காகப் பொருத்தருள்க.

      Delete
  8. தேடித் தந்திருக்கும் தகவல்களுக்கு நன்றி. அத்தனை படங்களும் மிக அழகு. நீங்கள் சூட்டியிருக்கும் தமிழ் பெயர்கள் இன்னும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் சொல்லும்போது இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பதாகத் தோன்றியது. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி. தாமத பதிலுக்காகப் பொருத்தருளவும்.

      Delete
  9. கண்ணுக்கும் அறிவுக்கும் நல்விருந்து . பகிர்வுக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      சிலநாட்களாக வலைப்பக்கம் வரவில்லை. தாமத பதிலுக்காய்ப் பொருத்தருள்க.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.