குட்டிக்கதைகள் பல சொன்னேன்
சுவைத்து நீயும் கேட்டிருந்தாய்
விடுகதைகள் சில சொல்வேன்..
விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா…
விடுகதைகள் புதிர்கள் என்றால்
மிட்டாய் போல இட்டம் அண்ணா
விடுவிடுவென்று கேட்டிடுவாய்
நொடியில் பதிலைத் தந்திடுவேன்...
தொப்பி போட்ட பொடியன்
பெட்டிக்குள்ளே தூங்குவான்
பொழுது சாய்ந்தபின் எழுவான்
எழுந்ததும் எரிந்து சாவான்
குட்டிக்குட்டி தீப்பெட்டியில்
தூங்கும் பொடியன் தீக்குச்சியாம்
சட்டென்று பதில் சொன்னேனா..
சடுதியில் அடுத்தது கேளண்ணா
வளைகரத்தால் இழை திரித்து
நித்தம் பெண்டிர் நெய்யும் தடுக்கு
விரித்தால் சுருட்டமுடியாது
வேறிடம் பெயர்க்க இயலாது
வாசல் கூட்டி சுத்தம் செய்து
வண்ணக்கலவைகள் பல சேர்த்து
ஆசையாய் அக்கா இடுகின்ற
அழகுக் கோலம் அது அண்ணா
உருவமில்லா உடம்புக்காரன்
ஒரு டஜன் சட்டைக்கு சொந்தக்காரன்
ஒற்றை சட்டையை அவிழ்த்தாலும்
உடனே அழவைக்கும் ஆத்திரக்காரன்
சாம்பார் மணக்கச் செய்திடுவான்
சமையலில் ருசியைக் கூட்டிடுவான்
காய்கறி வகையுள் வந்திடுவான்
வெங்காயம் என்னும் பெயருடையான்
ஒன்றிலே இரண்டிருக்கும்
இரண்டிலே ஒன்றிருக்கும்
என் முகம் பார்த்து முழிக்காமல்
என்னவென்று சொல் பார்ப்போம்
முகமொன்றில் கண்ணிரண்டு
கண்ணிரண்டில் பார்வையொன்று
சொன்ன பதில் சரியென்றால்
சீக்கிரம் கேள் அடுத்ததை அண்ணா
காட்டிலே வளர்ந்திருப்பாள்
கந்தலாடை அணிந்திருப்பாள்
முத்துப்பிள்ளைகள் பெற்றெடுத்து
முடங்கிப்போவாள் அவள் யார்..
சுட்டாலும் சுணங்கமாட்டாள்
அவித்தாலும் அனத்தமாட்டாள்
மாலையில் அம்மா தின்னத்தரும்
சோளக்கதிர்தானே அது அண்ணா..
சோறு குழம்பு கறியெல்லாம்
ஆசையாய் கையில் அள்ளிடுவான்
ஒற்றைக் கவளம் தின்று ருசிக்க
வாயுமில்லை…
வயிறுமில்லை..
அள்ளி அள்ளி எடுத்ததெல்லாம்
அடுத்தவர்க்குப் பரிமாறிடுவான்
அகப்பை கரண்டி என்பதெல்லாம்
அவனுக்கு நாமிட்ட பெயர்களன்றோ…
வீட்டின் வெளியே அண்ணனை
விருந்தினர் கை தொட்டுவிட்டால்
உள்ளே இருக்கும் அன்புத்தம்பி
ஓஹோவென்று அலறித் தீர்ப்பான்…
அழைப்புமணி அன்புத் தம்பியாம்
அழுத்தும் பொத்தான் அண்ணனாம்
இருவரும் இணைந்து வேலைசெய்தால்
விருந்தினர்க்கு நல்வரவேற்பாம்…
நூறு விடுகதைகள் கேட்டாலும்
நொடியில் விடை கிட்டும் என்றாய்
சொன்னது போலவே செய்தாய்
நன்று தம்பி நலமாய் வாழ்க.
குழந்தைகளுக்கு ஏற்ற விடுகதைப் பாட்டு ஸூப்பர் "அழைப்புமணி அன்புத்தம்பியாம்" மிகவும் நன்று சகோ.
ReplyDeleteவருகைக்கும் ரசித்த விடுகதையைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி.
Deleteபுதிய விதமாய் புதிர்கள். ரசித்தேன். நீலத்தில் படித்து விட்டு அடுத்த நிறத்தில் விடைகளை படிக்கும் முன் விடை எனக்குத் தெரிகிறதா என்று சோதித்துக் கொண்டேன்! பார்டர் பாஸ்!
ReplyDeleteஎன்னது.. பார்டர் பாஸா... அவ்வளவு கடினமாகவா உள்ளது? எல்லாமே எளிதாக விடை சொல்லக்கூடியவை என்றல்லவா நினைத்தேன். :))) வருகைக்கும் ரசித்து வாசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteவிடுகதைகள் பாடல் வடிவில் அருமை
ReplyDeleteவருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் நன்றி அண்ணா.
Deleteபுதுசாவும் ஆர்வமாவும் இருக்கே கீத்
ReplyDeleteசிறுவர் பாடல்கள் தொகுப்பின் தொடர்ச்சியாக முயற்சி செய்தேன். வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சுரேஜினி.
Deleteபுதுமையான முயற்சி ! பாராட்டுக்கள் தோழி!
ReplyDeleteசிறுவர் இலக்கியத்தில் புதுமை வரவு! மகிழ்ச்சி.
ஒன்றிலே இரண்டிருக்கும்
இரண்டிலே ஒன்றிருக்கும்
என் முகம் பார்த்து முழிக்காமல்
என்னவென்று சொல் பார்ப்போம்//
தம்பி மேல் கரிசனமாய் மூன்றாம் வரியில் குறிப்பு தரும் அக்கறைக்கு அண்ணனுக்கு செல்ல அணைப்பு.
ஹா...ஹா.. ஆமாம் நிலாமகள்.. அண்ணன் குறிப்பு தரவில்லையென்றால் தம்பி தடுமாற நேரிடுமே... அதனால்தான். அந்தக் குறிப்பையும் அழகாய் உணர்ந்து ரசித்த உங்களுக்குப் பாராட்டுகள். வருகைக்கும் ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் தோழி.
Deleteகொஞ்சும் தமிழ்!
ReplyDeleteகீதாவின் கைகளில் கொஞ்சி விளையாடுது, விடுகதை சொல்லி....
கீதாவின் கைபற்றி பேசியபடி நடக்கும் அண்ணன் தம்பி யோடு தமிழும்....
அழகு தான் என்னே!
ஆஹா... என்ன ஒரு ரசனையான பின்னூட்டம். அன்பும் நன்றியும் தோழி.
Deleteதமிழ் தமிழ் அருமை புதுமை சிறப்பு தோழி
ReplyDeleteவருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் தோழி.
Deleteவிடுகதைகளும் விடைகளுமாய் வெகு அருமையான பாடல். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.
Deleteகொஞ்சும் தமிழில் குதூகலத்தை வரவழைக்கும் விடுகதைப் பாடல்கள்! உங்கள் இனிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா சென்னை
ReplyDeleteநல்வரவு ஐயா. சிறுவர் பாடல் தொகுப்பின் தொடர்ச்சியாக இம்முயற்சி. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
Deleteமிக மிக அருமை..ரசித்து வாசித்தேன்...
ReplyDeleteவருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் அனுராதா.
Deleteவிடுகதைகளைப் பாட்டு வடிவத்தில் கொடுத்து அதற்கான விடைகளைக் கொடுத்த விதம் ரசிக்கத்தக்கதாய் இருந்தது. பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteவருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் அக்கா.
Deleteவிடுகதை வரும் பத்திகளை படிக்கும்போதே மனதிற்குள் விடை சொல்லி அடுத்த பத்தியுடன் சரிபார்த்துக் கொண்டேன்...அருமை..
ReplyDelete