16 December 2019

கான்பெராவின் வசந்தகாலத் திருவிழாவசந்தகாலம் என்றாலே காணுமிடமெல்லாம் களைகட்டிவிடும். வண்ணவண்ணப் பூக்கள் எங்கணும் மலர்ந்து கண்ணைக் கவரும். வாசம் பரப்பி மகிழ்விக்கும். சிந்தையை குளிர்விக்கும். தோட்டத்தின் ஒற்றைப்பூவே உளம் மயக்கும் என்னும்போது ஒரு மில்லியன் பூக்களை ஒரே இடத்தில் காணநேரிட்டால்? தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரிய மலர்க்காட்சி என்று சொல்லப்படுகிற கான்பராவின் Floriade திருவிழாவில்தான் அத்தகு அரிய காட்சியைக் காணமுடியும். ஆண்டுதோறும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஒருமாத காலத்துக்கு நடைபெறும் இந்த வசந்தகாலக் கொண்டாட்டம் எப்போது ஆரம்பித்தது?

ஆஸ்திரேலியாவின் தலைநகராக கான்பெரா உருவாக்கப்பட்டதன் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக ஏதேனும் புதுமை செய்ய எண்ணியபோது தோன்றியதுதான் இந்த மலர்க்காட்சி கருத்துப்படிவம். 

Burley Griffin ஏரிக்கரையில் அமைந்திருக்கும் காமன்வெல்த் பூங்காவில் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. நெதர்லாந்தின் உலகப்புகழ் வாய்ந்த Keukenhof மலர்த்தோட்டத்தை அடிப்படையாய்க் கொண்டு இங்கும் அது போலவே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாட்டாளாரான நிலவடிவமைப்பு வல்லுநர் Christiaan Slotemaked de Bruine மேற்பார்வையில் சிற்பங்கள், ஒளிவிளக்குகள், பூப்படுகைகள், இசைமேடைகள் என ஒவ்வொன்றாய் உருவாக்கப்பட்டன. 1988-ல் முறையாய் துவங்கப்பட்ட மலர்த்திருவிழா ஆண்டுதோறும் புதிய புதிய மையக்கருக்களைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துவருகிறது.      

32-வது மலர்த்திருவிழாவான நடப்பு ஆண்டின் (2019) theme அதாவது கருப்பொருள் world in Bloom. மையப்பொருளுக்கேற்றபடி Tulips, Poppies, Daffodils, Pansies, Chrysanthemum என வகைவகையாக வண்ணவண்ணப்பூக்கள் கண்ணைப் பறித்தாலும் மைய ஈர்ப்பென்னவோ துலிப் மலர்கள்தான். துலிப் மலர்களுள்ளும்தான் எத்தனை வகை… எத்தனை வண்ணம். 

சில பூக்களை ஒற்றையாய்ப் பார்த்தாலே வசீகரிக்கும். சில பூக்களைக் கொத்தாய்ப் பார்க்க அழகு. ஆனால் துலிப் பூக்களை வயலாய்ப் பார்ப்பதே பேரழகு. கருப்பு வண்ண பான்சி மலர்கள், அடுக்கிதழ் துலிப் மலர்கள், ஆஸ்திரேலியத் தேனீக்கள் போன்றவை இன்னபிற சிறப்பம்சங்கள். தோட்டத்துக் குள்ளர்கள் இன்னொரு சுவாரசியமான ஈர்ப்பு. வயதுவாரியாக குழந்தைகளும் பெரியவர்களும் வண்ணம் அடித்து அழகுபடுத்திய குள்ளர்கள் வரிசை கட்டி நின்று வசீகரிக்கிறார்கள்.    

Ferris wheel எனப்படும் ராட்சத ராட்டினம் தவிர்க்கவியலாத சிறப்பம்சம். சுமார் 32 மீ. உயரத்திலிருந்து பூங்காவின் மொத்தப் பரப்பையும் பூப்படுகைகளின் அழகையும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கான்பெராவையுமே பார்த்து உவக்கலாம். 

பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் இசை, நடனம், கலைகள், உடைகள், கலைப்பொருட்கள் மற்றும் தோட்ட உபகரணங்கள் விற்பனை நிலையங்கள், தோட்டக்கலைப் பயிற்சி வகுப்புகள், நாய்க் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு, மதுபானம் என பன்முனைக் கொண்டாட்டத்தின் உச்சம் இத்திருவிழா.   

பகல் பொழுதில் வண்ண வண்ணப் பூக்கள் கண்பறிக்கின்றன என்றால் இரவுப்பொழுதில் வண்ண வண்ண ஒளியலங்காரங்கள் வாய்பிளக்கவைக்கின்றன. பகலின் தோற்றத்தை முற்றிலுமாய் மாற்றி வேறொரு உலகைக் கண்முன் விரிக்கின்றது Nightfest எனப்படும் இரவொளித்திருவிழா. கிட்டத்தட்ட சிட்னியின் விவித் திருவிழாவை ஒத்து பூங்கா முழுவதும் வண்ண ஒளிவீச்சுகள் குழைந்தடிக்கின்றன.

ஆண்டுதோறும் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இத்திருவிழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கின்றனர். காணுமிடமெல்லாம் மலர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு மனிதத் தலைகள். புகைப்படக் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றால் தற்படக் கலைஞர்களுக்கோ பெருங்கொண்டாட்டம்.

("எதிரொலி" நவம்பர் மாதப் பத்திரிகையில் வெளியான என் குறுங்கட்டுரை)

கான்பெரா மலர்த்திருவிழாவில் நான் எடுத்த ஒளிப்படங்களுள் சில கீழே. 


(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

(13)

(14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

(21)

(22)

(23)

(24)

(25)

(26)

(27)

(28)

(29)

(30)
மீதமுள்ள படங்கள் வேறொரு பதிவாக வெளியாகும். 
ரசித்த அனைவருக்கும் அன்பும் நன்றியும். 


5 December 2019

மீசைக்கரண்டி


மேசைக்கரண்டி தெரியும். இதென்ன மீசைக்கரண்டி? இரண்டில் ஏதாவது ஒன்றுதான் சாத்தியம் என்ற சூழலில் இரண்டுக்குமே ஆசைப்பட்டால், கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா என்ற சொலவடையைப் பயன்படுத்துவோம்.

உண்மையிலேயே ஒருவருக்கு கூழ் குடிக்கவும் ஆசையிருந்து மீசை வளர்க்கவும் ஆசையிருந்தால் என்ன செய்வார்? மீசையை இடக்கையால் லேசாக ஒதுக்கிவிட்டுக் குடிப்பார்.

கொஞ்சம் சோம்பேறிகளாகவோ அல்லது பெரும் செல்வர்களாகவோ அல்லது இரண்டுமாகவோ இருந்தால்? ஸ்பெஷலாக ஒரு ஸ்பூன் தயாரிக்கப்பட்டுவிடும், ஸ்பூனே மீசை மயிரை ஒதுக்கித் தந்துவிடும்படி.

19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் மீசை வளர்ப்பில் பெரு மோகம் உருவான காலகட்டத்தில், அரசர்கள் பிரபுக்கள் போன்ற உயர்மட்டத் தலைகள் சூப் குடிக்கும்போது ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதானாம் இந்த மீசைக்கரண்டி. 😄😄😄இத்தகவல் இம்மாத 'காக்கைச் சிறகினிலே' இதழில் வெளிவந்துள்ளது. காக்கை குழுமத்துக்கு மனமார்ந்த நன்றி.26 November 2019

கீரையோ.. கீரை

தோட்டத்துப் பிரதாபம் - 10

கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். ஆனாலும் நிறைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. கீரை சாப்பிடாமல் எழுந்தால் உதை கிடைக்கும் என்ற பயத்தால்தான் சோற்றுக்குள் வைத்து உருட்டி விழுங்கிவைப்போம். வளர வளர கீரைகளின் அருமை புரிந்த பிறகு விரும்பியுண்ண ஆரம்பிப்போம். நான் ஆஸ்திரேலியா வந்த ஆரம்பத்தில் கீரை கிடைப்பது அரிதாக இருந்தது. இப்போது நிறைய இந்திய, ஆசியக் கடைகளின் தயவால் கிட்டத்தட்ட எல்லா விதமான கீரைகளும் கிடைக்கின்றன. என்ன இருந்தாலும் சொந்தத் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் நாமே விளைவித்துப் பறித்து சமைத்துண்ணும் கீரைகளின் ருசியே தனிதான். இப்பதிவு தோட்டத்துக் கீரை மகாத்மியம்.

1. வல்லாரைக்கீரை

தோட்டத்தில் தொட்டி நிறைய வளர்ந்து கிடக்கும் வல்லாரைக் கீரையைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக் கொள்வேன். ஒரு காலத்தில் எங்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்தினாய், இப்போது என்னடாவென்றால் கையெட்டும் தூரத்தில் ஜம்பமாய் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை காட்டுகிறாயேஎன்றும் நினைத்துக் கொள்வேன்.


ஒன்பதாவது படிக்கும்போது அறிவியல் செய்முறைப்பாடம். இலைகளின் மாதிரியை சேமித்து scrap notebook-ல் ஒட்டவேண்டும். நீள் வடிவம்ஈட்டி வடிவம்வட்ட வடிவம்நீள்வட்ட வடிவம்இதய வடிவம்முட்டை வடிவம்சதுர வடிவம்நீள்சதுர வடிவம்சிறுநீரக வடிவம்நுரையீரல் வடிவம்நட்சத்திர வடிவம் போன்றவை தவிரவும்அலைஊசிகூரிய பற்கள்ரம்பம்பிறை போன்ற விளிம்புகள் கொண்டவை என மாதிரி இலைகளைத் தேடித்தேடித் தெருத்தெருவாக அலைவோம். ஏதேதோ இலைகளை எல்லாம் பறித்து வந்து பாடம் செய்வோம். கனமான புத்தகமொன்றின் தாள்களுக்கிடையில் சில நாட்கள் வைத்திருந்தால் இலை சருகாகி இஸ்திரி போட்டது போல தட்டையாகிவிடும். பிறகு அதை எடுத்து நோட்டுப்புத்தகத்தில் ஒட்டுவோம். நிச்சயம் பலருக்கும் இதுபோலொரு பள்ளி அனுபவம் இருக்கும்.

சிறுநீரக வடிவத்துக்கு வல்லாரை இலை குறிப்பிடப்பட்டிருக்கும். அதைக் கண்ணால் கூட பார்த்திராத நாங்கள் வல்லாரை இலைக்கு எங்கே போவோம். கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைத்தும் கிடைக்கவில்லை. எங்கள் வகுப்புத் தோழியொருத்தி மிகுந்த பிகுவுடன் எண்ணி பத்து இலைகள் கொண்டுவருவாள். முந்திக் கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். வல்லாரை இலை கிடைக்காதவர்கள் படம் வரைந்து ஒப்பேத்துவோம். 
அப்போது அப்படி எங்களை ஏங்கி அலைய வைத்தாயே என்ற கோபம் தோட்டத்து வல்லாரையை ஆய்ந்து வதக்கி அரைத்துத் துவையலாக்கித் தின்றபோது தீர்ந்துபோனது.😄😄😄


அந்நாள் ஆசைக்காக பாடமும் செய்தாயிற்று. 🙂🙂🙂     


2. பசலைக்கீரை

வீட்டைச் சுற்றி fencing இல்லாததால் நிறைய களைச்செடிகளின் விதைகளைக் காற்று கொண்டுவந்து தோட்டத்தில் விதைப்பதுண்டு. அழகழகான பூக்களை ரசித்தாலும் காடு போல் மண்டிவிடுவதால் line trimmer கொண்டு அவ்வப்போது களையொழிப்பது வழக்கம்.

இந்தக் களைகளுக்குள்தான் அனிச்சமலரையும் அரிவாள்மனைப் பூண்டையும் அடையாளம் கண்டுகொண்டேன். இந்தக் களைகளுக்குள்ளிருந்துதான் அருகம்புல்லை அறுவடை செய்தேன். இந்தக் களைகளுக்குள்ளிருந்துதான் மணித்தக்காளிச்செடி வளர்த்தேன். இப்போது கிடைத்திருக்கிறது இந்த பசலைக்கீரை.


பார்ப்பதற்கு பசலைக்கீரை போல இருந்தாலும் பசலைதான் என்று உறுதியாகத் தெரியாததால் உணவில் பயன்படுத்த பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. பெருத்த தேடலின் முடிவில் இதன் பெயர் New Zealand spinach என்று தெரியவந்துள்ளது. உவர்மண்ணிலும் நன்றாக வளரும் தன்மையாலும் வறட்சியைத் தாங்கும் தன்மையாலும் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் கீரையாம்.

ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் Warrigal greens. ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளுள் ஒன்றான தாருக் மொழியில் இதற்கு காட்டுக்கீரை’ என்று அர்த்தமாம்.பசலைதான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு எடுத்து தொட்டியில் வைத்து பராமரிக்கத் தொடங்கினேன். நான்கைந்து இலைகளோடு இருந்த அது கொப்பும் கிளையுமாய் வெடித்துப் படர ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாளைக்கொரு முறை பறித்து சமைக்கிறேன். பாசிப்பருப்பு போட்ட பசலைக்கீரைக்கூட்டு மிகப் பிடித்தமானது. அடிக்கடி செய்து கிண்ணத்தில் வைத்துக்கொண்டு snack போல சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. 

3. புதினா


புதினா ஒரு மருத்துவ மூலிகை. பசியின்மைசெரிமானக் கோளாறுமலச்சிக்கல்வயிறு உப்புசம்சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற வயிறு தொடர்பான பல உபாதைகளுக்குமான மாமருந்து.

புதினாவை முன்பெல்லாம் கடையில் வாங்கிதான் உபயோகித்திருந்தேன். ஒரு கட்டு இரண்டு டாலர்கள். உபயோகித்தபின் காம்புகளை நட்டுவைப்பேன். பெரும்பாலும் வளரவில்லை. அதிசயமாய் ஒருமுறை ஒன்றே ஒன்று மட்டும் வேர் பிடித்துக்கொண்டு வளரத் தொடங்கியது. புதினாவை தொட்டியில்தான் வளர்க்கவேண்டுமாம். தெரியாத்தனமாக raised bed –ல் வைத்துவிட்டேன். இன்று என்னடாவென்றால் மற்ற செடிகளை வளரவிடாமல் முழுக்க வேரோடி எங்கணும் புதினாச்செடிகள். வெட்ட வெட்டக் கிளைத்துக்கொண்டே இருக்கின்றன. புதினா துவையல், புதினா தொக்கு, புதினா டீ, புதினா தண்ணீர், பிரியாணி, குருமா என்று புதினாவை சமையலில் அடிக்கடி சேர்த்துக்கொள்கிறேன். பறிக்கப் பறிக்க அடுத்த ஈட்டுக்குத் தயாராய் நிற்கும் புதினாவை வியந்து பார்க்கிறேன். அடுத்து புதினா பொடி செய்ய உத்தேசித்திருக்கிறேன். 

4. முளைக்கீரைஇந்தக் கீரையும் கடையில் வாங்கியதன் மூலம் உருவானதே. கீரையை ஆய்ந்த பிறகு அதன் தண்டுகளை நட்டுவைத்து வளர்த்துப் பெற்ற விதையிலிருந்து உருவாக்கிய அடுத்த தலைமுறைக் கீரை. நம்மூர் முளைக்கீரைக்கு நிகரான ருசி. அடிக்கடி பொரியலும், கீரைக்குழம்பும், வடையும் செய்தேன். மூன்றாம் தலைமுறைக்குத் தயாராய் இருக்கின்றன விதைகள். இடம் தோது பண்ணியதும் தூவ வேண்டும்.  5. மணித்தக்காளிக்கீரை
வாயில் புண் வந்துவிட்டால் உடனே அம்மா செய்து தருவது மணித்தக்காளிக்கீரை தண்ணிச்சாறுதான். அரிசி களைந்த தண்ணீரில் கீரையும் வெந்தயமும் சேர்த்து வேகவைத்து இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குவார்கள். எப்பேர்ப்பட்ட வாய்ப்புண்ணும் உடனே ஆறிவிடும். வாய்ப்புண், வயிற்றுப்புண் எல்லாவற்றையும் சடுதியில் ஆற்றும் அருமருந்து மணித்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு. மணித்தக்காளி வற்றலும் உடலுக்கு நல்லது. வற்றக்குழம்பின் ருசியையும் கூட்டும். 


தோட்டத்தில் தானே வளர்ந்த மணித்தக்காளிப் பழங்களைப் பிழிந்து புதிய செடிகளை உருவாக்கி அவற்றிலிருந்து கீரை பறித்துப் பயன்படுத்துகிறேன். காய்களை வற்றலுக்குப் போட்டிருக்கிறேன். 


6. வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை கீரையினங்களிலேயே ஸ்பெஷல் எனலாம். லேசான கசப்புடன் கூடிய சுவை இதற்கு. ஆனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உகந்தது. வெந்தயத்தைத் தூவினாலே போதும். சில நாட்களில் கீரை கிடைத்துவிடும். வெந்தயக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். சுவையாக இருக்கும். 


ஹி.. ஹி.. நம்ம கைவண்ணம்தான். 

(பிரதாபங்கள் தொடரும்)

18 November 2019

மனமொழியறியும் மரங்களும் மலர்களும்


தோட்டத்துப் பிரதாபம் - 9
கொல்லையில் நட்டுவைக்கப்பட்ட ஆரஞ்சு, எலுமிச்சை மரங்களின் வளர்ச்சி ஒரு வருடத்துக்கு மேலாகியும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. புதிய மண்ணில் வேரூன்ற சில வருடங்கள் எடுக்கும் என்று தெரிந்தாலும் பிழைக்குமா என்பதே சந்தேகமாகிவிட்டது. அதுவும் ஆரஞ்சு மரம் இருந்த கொஞ்சநஞ்ச இலைகளையும் கொட்டிவிட்டு பரிதாபமாக குச்சி மட்டும் நின்றுகொண்டிருந்தது. ஒருநாள் அதைப் பார்த்துவிட்டு கணவர் சொன்னார், “இது அவ்வளவுதான்னு நினைக்கிறேன், பொழைக்காதுபோலஎன்றார். நான் உடனே அதுக்குப் பக்கத்தில நின்னுட்டு அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. பாவம்.. அது நிச்சயம் பொழைச்சிவரும்என்று சொன்னேன். பாக்கலாம் என்று சொல்லி அகன்றார். அடுத்த வாரத்தில் ஒரு நாள்.. சொன்னால் நம்பவே மாட்டீங்க.. மாயாஜாலம் போல தளதளவென்று துளிர் விட்டு வளர்ந்து இப்போது பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக பசிய இலைகளோடு அவ்வளவு அழகாகவும் செழிப்பாகவும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது அந்த ரோஷக்கார இளமரம். 


எலுமிச்சையும் ஒரு வேடிக்கை காட்டியது. தோட்டத்தில் உலாத்தியபடி ஒருநாள் தம்பியோடு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன். தோட்டம் பற்றிக் கேட்டான். எலுமிச்சை இதுவரை மூணு தடவை பூப்பூத்து எல்லாமே கொட்டிடிச்சு. இப்பவும் ஆயிரக்கணக்கா பூத்திருக்கு. காய்க்குமான்னு தெரியல.. எனக்கொரு பத்து காய் காய்ச்சா கூட போதும். ஊறுகாய் போட்டு ஒரு வருஷம் ஒப்பேத்திடுவேன்என்று சொன்னேன். வழக்கம்போல பூக்கள் எல்லாம் பிஞ்சாகும் முன்பே கொட்டிவிட்டன. இப்போது கோலி குண்டு அளவில் சிறுபிஞ்சுகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. எண்ணிப் பார்த்தேன். சரியாக பத்தே பத்து. மரங்களுக்கு காது கேட்கும் என்பதோடு கணக்கும் தெரியும் என்பதும் புரிந்துபோனது. 😃😃😃  

சில வருடங்களுக்கு முன்பு 'கவிதை என்றும்பெயரிடலாம்' என்றொரு கவிதை எழுதியிருந்தேன். என் விசித்திரத் தோட்டம் என்பதுதான் கரு. உண்மையிலேயே என் தோட்டம் விசித்திரத் தோட்டமாகிக் கொண்டு வருகிறதோ என்று சந்தேகம். எலுமிச்சை மரம், நான் சொன்னால் சொன்னபடி கணக்காய்க் காய்க்கிறது. போதும் போதும் என்று சொன்னாலும் சொல்பேச்சு கேளாமல் பறங்கிக்காய் காய்த்துத் தள்ளியது. வெள்ளை ரோஜாச்செடியின் பூக்கள் மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாய் நிறமாறி அதிசயத்தில் ஆழ்த்துகின்றன.  அந்த வரிசையில் இப்போது சால்வியாவும் சேர்ந்துகொண்டது.  

நர்சரியிலிருந்து என்ன நிறமென்றே தெரியாமல்தான் வாங்கிவந்தேன். சிவப்பா, பிங்க்கா, நீலமா, வயலட்டா என உள்ளுக்குள் கிளர்ந்த எதிர்பார்ப்பு முதல் நாள் பூத்த வெள்ளைமலரில் சற்றே வெளிறிப்போனது. சொன்ன வாய்மொழி அல்லாது சொல்லாத மனமொழியும் (அதாம்பா.. மைன்ட்வாய்ஸ்)  இப்போது என் செடிகளுக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டது போலும். வெள்ளை பூத்த சால்வியாவில் மறுநாள் வெள்ளையும் நுனியில் சிவப்புமாக பூக்கள்.. அதற்கு மறுநாள் சிவப்பும் நுனியில் வெள்ளையுமாய்.. அதற்கு மறுநாள் முழுச்சிவப்பு.. என ஒவ்வொரு நாளும் என்னைக் கிளர்த்தி மகிழ்விக்கும் சால்வியா செடி செய்யும் விநோதத்தை என்னவென்று சொல்வது? 


எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
வெள்ளையிலிருந்து இளஞ்சிவப்பாய் மாறும் ரோஜாச்செடி பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? பூவின் நிறமாற்றம் பெண்ணின் உருமாற்றமாய் ஒரு கவிதைக்கு வித்திட்டதோடு, வாசகசாலை இணைய இதழிலும் வெளியாகி சிறப்புற்றது.
அவள் உரு மாறுகிறாள்

----------------------------------------------
பரிசுத்த ஆவியைப் போல..
கருவுறா முகிலின் கன்னிமை போல
காத்திருந்த கிள்ளையின் மனம் நோக
வெடித்துப் பறக்கும் இலவம் போல
தாய்மடி முட்டியருந்தும் கன்றின்
வாய் நுரைத்து வடியும் அமுதுபோல
சவக்காரம் போட்டு தானே வெளுத்த
பாட்டனின் பழைய வேட்டி போல
அவளின் ஆதிவண்ணம் அத்துணை வெண்மை.

நெஞ்சதிரச்செய்யும் சொல்லறியும்வரை..
நிலமதிரச்செய்யும் வலியறியும்வரை
கண்ணீரும் குருதியும் காணும்வரை..
கையிடுக்கில் கழுத்துநெறிபடும் வரை..
அவளின் எண்ணம் அத்துணை மென்மை.

நுண்கணைகள் துளைத்து வெளியேறிய
நுண்ணொடிப்பொழுதில் அவள் கனலத்தொடங்கினாள்.
ஆதிவண்ணத்தின் அணுக்களில்
சொட்டுசொட்டாய் சிவப்பேற்றிக்கொண்டாள்..
பச்சிளஞ்சிசுவின் பாதமென்மை விடுத்து
வரையாட்டுக் குளம்பினை வரித்துகொண்டாள்..
உடல்வழியும் உப்பின் உவர்ப்பேற்றி
உவப்பாய் உருமாறிக்கொண்டிருக்கிறாள்.
வெள்ளைமலராய் விரலிடுக்கில் பொருந்தியவள்
முகர்ந்து கசக்கி எறிய இடங்கொடாது
செந்தீயாகித் தணலாகித் திகுதிகுவென
ஓங்காரமாய் எரியத் தொடங்குகிறாள்.

&&&&&&&

இன்று காலை தோட்டத்தில் கண்ட பொறிவண்டும் 
ஒரு குறுங்கவிதைக்குப் பொறியானது. 
 முன்னிரவில் முணுமுணுத்துப் பெய்து 
மண் குளிர்த்த வான்துளியின் 
நுண்துளி சுமப்பதாய் 
நினைத்துக்கொண்டிருக்கிறாய் 
நீ அறியமாட்டாய் 
நீ சுமப்பதொரு ஓடை… 
ஒரு நதி… 
ஒரு அருவி… 
ஒரு கடல்… 
ஒரு மகாசமுத்திரம்.&&&&&&&

(பிரதாபங்கள் தொடரும்)