26 November 2019

கீரையோ.. கீரை

தோட்டத்துப் பிரதாபம் - 10

கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். ஆனாலும் நிறைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. கீரை சாப்பிடாமல் எழுந்தால் உதை கிடைக்கும் என்ற பயத்தால்தான் சோற்றுக்குள் வைத்து உருட்டி விழுங்கிவைப்போம். வளர வளர கீரைகளின் அருமை புரிந்த பிறகு விரும்பியுண்ண ஆரம்பிப்போம். நான் ஆஸ்திரேலியா வந்த ஆரம்பத்தில் கீரை கிடைப்பது அரிதாக இருந்தது. இப்போது நிறைய இந்திய, ஆசியக் கடைகளின் தயவால் கிட்டத்தட்ட எல்லா விதமான கீரைகளும் கிடைக்கின்றன. என்ன இருந்தாலும் சொந்தத் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் நாமே விளைவித்துப் பறித்து சமைத்துண்ணும் கீரைகளின் ருசியே தனிதான். இப்பதிவு தோட்டத்துக் கீரை மகாத்மியம்.

1. வல்லாரைக்கீரை

தோட்டத்தில் தொட்டி நிறைய வளர்ந்து கிடக்கும் வல்லாரைக் கீரையைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக் கொள்வேன். ஒரு காலத்தில் எங்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்தினாய், இப்போது என்னடாவென்றால் கையெட்டும் தூரத்தில் ஜம்பமாய் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை காட்டுகிறாயேஎன்றும் நினைத்துக் கொள்வேன்.


ஒன்பதாவது படிக்கும்போது அறிவியல் செய்முறைப்பாடம். இலைகளின் மாதிரியை சேமித்து scrap notebook-ல் ஒட்டவேண்டும். நீள் வடிவம்ஈட்டி வடிவம்வட்ட வடிவம்நீள்வட்ட வடிவம்இதய வடிவம்முட்டை வடிவம்சதுர வடிவம்நீள்சதுர வடிவம்சிறுநீரக வடிவம்நுரையீரல் வடிவம்நட்சத்திர வடிவம் போன்றவை தவிரவும்அலைஊசிகூரிய பற்கள்ரம்பம்பிறை போன்ற விளிம்புகள் கொண்டவை என மாதிரி இலைகளைத் தேடித்தேடித் தெருத்தெருவாக அலைவோம். ஏதேதோ இலைகளை எல்லாம் பறித்து வந்து பாடம் செய்வோம். கனமான புத்தகமொன்றின் தாள்களுக்கிடையில் சில நாட்கள் வைத்திருந்தால் இலை சருகாகி இஸ்திரி போட்டது போல தட்டையாகிவிடும். பிறகு அதை எடுத்து நோட்டுப்புத்தகத்தில் ஒட்டுவோம். நிச்சயம் பலருக்கும் இதுபோலொரு பள்ளி அனுபவம் இருக்கும்.

சிறுநீரக வடிவத்துக்கு வல்லாரை இலை குறிப்பிடப்பட்டிருக்கும். அதைக் கண்ணால் கூட பார்த்திராத நாங்கள் வல்லாரை இலைக்கு எங்கே போவோம். கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைத்தும் கிடைக்கவில்லை. எங்கள் வகுப்புத் தோழியொருத்தி மிகுந்த பிகுவுடன் எண்ணி பத்து இலைகள் கொண்டுவருவாள். முந்திக் கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். வல்லாரை இலை கிடைக்காதவர்கள் படம் வரைந்து ஒப்பேத்துவோம். 




அப்போது அப்படி எங்களை ஏங்கி அலைய வைத்தாயே என்ற கோபம் தோட்டத்து வல்லாரையை ஆய்ந்து வதக்கி அரைத்துத் துவையலாக்கித் தின்றபோது தீர்ந்துபோனது.😄😄😄


அந்நாள் ஆசைக்காக பாடமும் செய்தாயிற்று. 🙂🙂🙂     


2. பசலைக்கீரை

வீட்டைச் சுற்றி fencing இல்லாததால் நிறைய களைச்செடிகளின் விதைகளைக் காற்று கொண்டுவந்து தோட்டத்தில் விதைப்பதுண்டு. அழகழகான பூக்களை ரசித்தாலும் காடு போல் மண்டிவிடுவதால் line trimmer கொண்டு அவ்வப்போது களையொழிப்பது வழக்கம்.

இந்தக் களைகளுக்குள்தான் அனிச்சமலரையும் அரிவாள்மனைப் பூண்டையும் அடையாளம் கண்டுகொண்டேன். இந்தக் களைகளுக்குள்ளிருந்துதான் அருகம்புல்லை அறுவடை செய்தேன். இந்தக் களைகளுக்குள்ளிருந்துதான் மணித்தக்காளிச்செடி வளர்த்தேன். இப்போது கிடைத்திருக்கிறது இந்த பசலைக்கீரை.


பார்ப்பதற்கு பசலைக்கீரை போல இருந்தாலும் பசலைதான் என்று உறுதியாகத் தெரியாததால் உணவில் பயன்படுத்த பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. பெருத்த தேடலின் முடிவில் இதன் பெயர் New Zealand spinach என்று தெரியவந்துள்ளது. உவர்மண்ணிலும் நன்றாக வளரும் தன்மையாலும் வறட்சியைத் தாங்கும் தன்மையாலும் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் கீரையாம்.

ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் Warrigal greens. ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளுள் ஒன்றான தாருக் மொழியில் இதற்கு காட்டுக்கீரை’ என்று அர்த்தமாம்.



பசலைதான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு எடுத்து தொட்டியில் வைத்து பராமரிக்கத் தொடங்கினேன். நான்கைந்து இலைகளோடு இருந்த அது கொப்பும் கிளையுமாய் வெடித்துப் படர ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாளைக்கொரு முறை பறித்து சமைக்கிறேன். பாசிப்பருப்பு போட்ட பசலைக்கீரைக்கூட்டு மிகப் பிடித்தமானது. அடிக்கடி செய்து கிண்ணத்தில் வைத்துக்கொண்டு snack போல சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. 

3. புதினா


புதினா ஒரு மருத்துவ மூலிகை. பசியின்மைசெரிமானக் கோளாறுமலச்சிக்கல்வயிறு உப்புசம்சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற வயிறு தொடர்பான பல உபாதைகளுக்குமான மாமருந்து.

புதினாவை முன்பெல்லாம் கடையில் வாங்கிதான் உபயோகித்திருந்தேன். ஒரு கட்டு இரண்டு டாலர்கள். உபயோகித்தபின் காம்புகளை நட்டுவைப்பேன். பெரும்பாலும் வளரவில்லை. அதிசயமாய் ஒருமுறை ஒன்றே ஒன்று மட்டும் வேர் பிடித்துக்கொண்டு வளரத் தொடங்கியது. புதினாவை தொட்டியில்தான் வளர்க்கவேண்டுமாம். தெரியாத்தனமாக raised bed –ல் வைத்துவிட்டேன். இன்று என்னடாவென்றால் மற்ற செடிகளை வளரவிடாமல் முழுக்க வேரோடி எங்கணும் புதினாச்செடிகள். வெட்ட வெட்டக் கிளைத்துக்கொண்டே இருக்கின்றன. புதினா துவையல், புதினா தொக்கு, புதினா டீ, புதினா தண்ணீர், பிரியாணி, குருமா என்று புதினாவை சமையலில் அடிக்கடி சேர்த்துக்கொள்கிறேன். பறிக்கப் பறிக்க அடுத்த ஈட்டுக்குத் தயாராய் நிற்கும் புதினாவை வியந்து பார்க்கிறேன். அடுத்து புதினா பொடி செய்ய உத்தேசித்திருக்கிறேன். 

4. முளைக்கீரை



இந்தக் கீரையும் கடையில் வாங்கியதன் மூலம் உருவானதே. கீரையை ஆய்ந்த பிறகு அதன் தண்டுகளை நட்டுவைத்து வளர்த்துப் பெற்ற விதையிலிருந்து உருவாக்கிய அடுத்த தலைமுறைக் கீரை. நம்மூர் முளைக்கீரைக்கு நிகரான ருசி. அடிக்கடி பொரியலும், கீரைக்குழம்பும், வடையும் செய்தேன். மூன்றாம் தலைமுறைக்குத் தயாராய் இருக்கின்றன விதைகள். இடம் தோது பண்ணியதும் தூவ வேண்டும்.  



5. மணித்தக்காளிக்கீரை




வாயில் புண் வந்துவிட்டால் உடனே அம்மா செய்து தருவது மணித்தக்காளிக்கீரை தண்ணிச்சாறுதான். அரிசி களைந்த தண்ணீரில் கீரையும் வெந்தயமும் சேர்த்து வேகவைத்து இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குவார்கள். எப்பேர்ப்பட்ட வாய்ப்புண்ணும் உடனே ஆறிவிடும். வாய்ப்புண், வயிற்றுப்புண் எல்லாவற்றையும் சடுதியில் ஆற்றும் அருமருந்து மணித்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு. மணித்தக்காளி வற்றலும் உடலுக்கு நல்லது. வற்றக்குழம்பின் ருசியையும் கூட்டும். 


தோட்டத்தில் தானே வளர்ந்த மணித்தக்காளிப் பழங்களைப் பிழிந்து புதிய செடிகளை உருவாக்கி அவற்றிலிருந்து கீரை பறித்துப் பயன்படுத்துகிறேன். காய்களை வற்றலுக்குப் போட்டிருக்கிறேன். 


6. வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை கீரையினங்களிலேயே ஸ்பெஷல் எனலாம். லேசான கசப்புடன் கூடிய சுவை இதற்கு. ஆனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உகந்தது. வெந்தயத்தைத் தூவினாலே போதும். சில நாட்களில் கீரை கிடைத்துவிடும். வெந்தயக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். சுவையாக இருக்கும். 


ஹி.. ஹி.. நம்ம கைவண்ணம்தான். 

(பிரதாபங்கள் தொடரும்)

14 comments:

  1. செடிகள் பலவும் " என்னை வளர்த்துக் காப்பாற்று " என்று அடைக்கலம் தேடி வருவதுபோல் இருக்கிறது ; தக்க தாயாரை அவை எப்படி அடையாளங் கண்டன !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு வரிகள் தோட்டக்கலையின் மீதான என் ஈடுபாட்டை மிகையாக்கிப் பேருற்சாகம் தருகின்றன. பிள்ளைகள் கூட என்னை வீட்டுக்குள் காணவில்லை என்றால் 'அம்மா மூன்றாவது பிள்ளைகளைப் பார்க்க தோட்டத்துக்குப் போயிருப்பாங்க' என்றுதான் சொல்கிறார்கள். தாங்களும் அதையே சொல்வது மகிழ்வளிக்கிறது. அன்பும் நன்றியும்.

      Delete
  2. ஆகா...! உங்களின் அனுபவமே தனி... எல்லோருக்கும் இது வைக்காதது... வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்.

      Delete
  3. ரெம்ப நல்லா வந்திருக்கின்றன கீரைகள் எல்லாமே. அனேகமா எல்லா சத்து கீரைகளும் உங்க வீட்டில் கிடைக்கின்றன. நல்லா என் ஞாய் கீதா. காலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து சாப்பிடுங்கள்.கடையில் வாங்கபோனால் விலை,அதைவிட என்ன பூச்சிகொல்லி அடித்தார்களோ என பயந்து சாப்பிடனும்.
    எனக்கும் இந்த புதினா படுகுழப்படி. முடிவில்லாமல் வளருது.அப்பப்போ வெட்டி எடுத்தால் பின் நன்றாக தழைத்து வருகிறது. நானும் உங்களை போலவே செய்கிறேன். இனி சம்மர் ஆரம்பிக்க உங்க பொழுது தோட்டத்தில்தான்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரியா.. இனி கோடைக்காலம் என்பதால் தோட்டத்தில் நிறைய வேலை இருக்கும். ஆனால் காட்டுத்தீ காரணமாக புகையும் சாம்பலும் இருப்பதால் தற்போது வெளியிலேயே வரமுடியவில்லை. போதாக்குறைக்கு தண்ணீர் கட்டுப்பாடு வேறு. அதனால் இந்த வருடம் விளைச்சல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சி செய்கிறேன். உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா.

      Delete
  4. ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தோட்டக் கலையில் ஈடுப்பட்டு வருகிறீர்கள். நமக்கானதை நம் வீட்டிலேயே வளர்ப்பது சிறப்பு. புதினாவை நானும் தெரியாமல் ஒரு முறை மண்ணில் நட்டு விட்டேன். இப்போது 2 அகன்ற தொட்டிகளில் வைத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. புதினா ஒருமுறை வேர்பிடித்துவிட்டால் அதற்குப் பிறகு அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை. நானும் கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிக்கு மாற்றவேண்டும். இல்லையென்றால் மற்ற செடிகளை வளரவிடாமல் அமுக்கிவிடும் போலிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  5. ஆஆஆவ் இவை அனைத்தும் உங்கள் கார்டினிலோ அவ்வ்வ்வ்வ் என்னால என்னைக் கொன்றோல் பண்ண முடியவில்லை, எனக்கு இலைவகைகள் எனில் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கடையில் வாங்குவதை விட நம் வீட்டில் வளர்க்கும்போது அதில் சமைப்பது சொர்க்கம்தான்.

    எங்களுக்கு இங்கு புதினா நல்லபடி வளருது, மற்றும் வெந்தயம் சாடியில் வளரும் வேறு எதுவும் இந்தக் காலநிலைக்கு வளருதே இல்லை, மணத்தக்காளியுடன் போராடிக் கை விட்டு விட்டேன் வளர்ப்பதை:(

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா.. வாங்க வாங்க கார்த்திகைப்பிறை அதிரா.. :))) எல்லாமே நம்ம வீட்டுத் தோட்டத்தில்தான். எனக்கு முதல் முயற்சியிலேயே கீரைகள் நல்ல பலன் அளிப்பது மகிழ்வளிக்கிறது. இந்த வருடம் இனிதான் பார்க்கவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.

      Delete
  6. பச்சைப் பசேல் எனப் பார்ப்பதற்கே ஆசையாக உள்ளது. பூச்சி மருந்து இல்லாமல் செயற்கை உரம் இல்லாமல் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆர்கானிக் என்று விற்பனை செய்யப்படும் பொருட்களை எந்த அளவுக்கு நம்பலாம் எனத் தெரியவில்லை. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா. ஆர்கானிக் என்று சொல்லி விலை கூடுதலான அதே சமயம் உண்மையிலேயே ஆர்கானிக்தானா என்று தெரியாதவற்றை வாங்குவதை விடவும் நம் தோட்டத்தில் நம் பராமரிப்பில் வளர்ந்தவற்றை சமைத்துண்பதை மிகுந்த மகிழ்வளிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  7. கீரையோ.. கீரை


    பசுமையோ பசுமை ...

    அழகோ அழகு ...

    ஆசையா இருக்குதே....

    ReplyDelete
    Replies
    1. வாங்க. வாங்க சாப்பிடலாம். :)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.