தோட்டத்துப்
பிரதாபம் - 9
கொல்லையில்
நட்டுவைக்கப்பட்ட ஆரஞ்சு, எலுமிச்சை
மரங்களின் வளர்ச்சி ஒரு வருடத்துக்கு மேலாகியும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
புதிய மண்ணில் வேரூன்ற சில வருடங்கள் எடுக்கும் என்று தெரிந்தாலும் பிழைக்குமா
என்பதே சந்தேகமாகிவிட்டது. அதுவும் ஆரஞ்சு மரம் இருந்த கொஞ்சநஞ்ச இலைகளையும்
கொட்டிவிட்டு பரிதாபமாக குச்சி மட்டும் நின்றுகொண்டிருந்தது. ஒருநாள் அதைப்
பார்த்துவிட்டு கணவர் சொன்னார், “இது
அவ்வளவுதான்னு நினைக்கிறேன், பொழைக்காதுபோல”
என்றார். நான் உடனே “அதுக்குப் பக்கத்தில நின்னுட்டு அப்படியெல்லாம்
சொல்லாதீங்க.. பாவம்.. அது நிச்சயம் பொழைச்சிவரும்” என்று சொன்னேன். பாக்கலாம் என்று சொல்லி
அகன்றார். அடுத்த வாரத்தில் ஒரு நாள்.. சொன்னால் நம்பவே மாட்டீங்க.. மாயாஜாலம் போல
தளதளவென்று துளிர் விட்டு வளர்ந்து இப்போது பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக
பசிய இலைகளோடு அவ்வளவு அழகாகவும் செழிப்பாகவும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது
அந்த ரோஷக்கார இளமரம்.
எலுமிச்சையும்
ஒரு வேடிக்கை காட்டியது. தோட்டத்தில் உலாத்தியபடி ஒருநாள் தம்பியோடு ஃபோனில்
பேசிக்கொண்டிருந்தேன். தோட்டம் பற்றிக் கேட்டான். “எலுமிச்சை இதுவரை மூணு தடவை பூப்பூத்து எல்லாமே
கொட்டிடிச்சு. இப்பவும் ஆயிரக்கணக்கா பூத்திருக்கு. காய்க்குமான்னு தெரியல..
எனக்கொரு பத்து காய் காய்ச்சா கூட போதும். ஊறுகாய் போட்டு ஒரு வருஷம்
ஒப்பேத்திடுவேன்” என்று சொன்னேன்.
வழக்கம்போல பூக்கள் எல்லாம் பிஞ்சாகும் முன்பே கொட்டிவிட்டன. இப்போது கோலி குண்டு
அளவில் சிறுபிஞ்சுகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. எண்ணிப் பார்த்தேன்.
சரியாக பத்தே பத்து. மரங்களுக்கு காது கேட்கும் என்பதோடு கணக்கும் தெரியும்
என்பதும் புரிந்துபோனது. 😃😃😃
சில
வருடங்களுக்கு முன்பு 'கவிதை என்றும்பெயரிடலாம்' என்றொரு கவிதை
எழுதியிருந்தேன். என் விசித்திரத் தோட்டம் என்பதுதான் கரு. உண்மையிலேயே என்
தோட்டம் விசித்திரத் தோட்டமாகிக் கொண்டு வருகிறதோ என்று சந்தேகம். எலுமிச்சை மரம்,
நான் சொன்னால் சொன்னபடி
கணக்காய்க் காய்க்கிறது. போதும் போதும் என்று சொன்னாலும் சொல்பேச்சு கேளாமல்
பறங்கிக்காய் காய்த்துத் தள்ளியது. வெள்ளை ரோஜாச்செடியின் பூக்கள் மெல்ல மெல்ல
இளஞ்சிவப்பாய் நிறமாறி அதிசயத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வரிசையில் இப்போது சால்வியாவும்
சேர்ந்துகொண்டது.
நர்சரியிலிருந்து
என்ன நிறமென்றே தெரியாமல்தான் வாங்கிவந்தேன். சிவப்பா, பிங்க்கா, நீலமா, வயலட்டா என உள்ளுக்குள் கிளர்ந்த எதிர்பார்ப்பு முதல் நாள் பூத்த வெள்ளைமலரில்
சற்றே வெளிறிப்போனது. சொன்ன வாய்மொழி அல்லாது சொல்லாத மனமொழியும் (அதாம்பா..
மைன்ட்வாய்ஸ்) இப்போது என் செடிகளுக்குக்
கேட்க ஆரம்பித்துவிட்டது போலும். வெள்ளை பூத்த சால்வியாவில் மறுநாள் வெள்ளையும்
நுனியில் சிவப்புமாக பூக்கள்.. அதற்கு மறுநாள் சிவப்பும் நுனியில் வெள்ளையுமாய்..
அதற்கு மறுநாள் முழுச்சிவப்பு.. என ஒவ்வொரு நாளும் என்னைக் கிளர்த்தி
மகிழ்விக்கும் சால்வியா செடி செய்யும் விநோதத்தை என்னவென்று சொல்வது?
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா…
வெள்ளையிலிருந்து
இளஞ்சிவப்பாய் மாறும் ரோஜாச்செடி பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? பூவின் நிறமாற்றம் பெண்ணின் உருமாற்றமாய் ஒரு
கவிதைக்கு வித்திட்டதோடு, வாசகசாலை இணைய
இதழிலும் வெளியாகி சிறப்புற்றது.
அவள் உரு
மாறுகிறாள்
----------------------------------------------
பரிசுத்த ஆவியைப் போல..
கருவுறா முகிலின்
கன்னிமை போல…
காத்திருந்த கிள்ளையின் மனம் நோக
வெடித்துப் பறக்கும்
இலவம் போல…
தாய்மடி முட்டியருந்தும் கன்றின்
வாய் நுரைத்து வடியும் அமுதுபோல…
சவக்காரம் போட்டு தானே வெளுத்த
பாட்டனின் பழைய வேட்டி போல…
அவளின் ஆதிவண்ணம் அத்துணை வெண்மை.
நெஞ்சதிரச்செய்யும்
சொல்லறியும்வரை..
நிலமதிரச்செய்யும் வலியறியும்வரை
கண்ணீரும் குருதியும் காணும்வரை..
கையிடுக்கில் கழுத்துநெறிபடும் வரை..
அவளின் எண்ணம் அத்துணை மென்மை.
நுண்கணைகள் துளைத்து வெளியேறிய
நுண்ணொடிப்பொழுதில் அவள் கனலத்தொடங்கினாள்.
ஆதிவண்ணத்தின் அணுக்களில்
சொட்டுசொட்டாய் சிவப்பேற்றிக்கொண்டாள்..
பச்சிளஞ்சிசுவின்
பாதமென்மை விடுத்து
வரையாட்டுக் குளம்பினை
வரித்துகொண்டாள்..
உடல்வழியும் உப்பின்
உவர்ப்பேற்றி
உவப்பாய் உருமாறிக்கொண்டிருக்கிறாள்.
வெள்ளைமலராய் விரலிடுக்கில்
பொருந்தியவள்
முகர்ந்து கசக்கி எறிய இடங்கொடாது
செந்தீயாகித் தணலாகித் திகுதிகுவென
ஓங்காரமாய் எரியத் தொடங்குகிறாள்.
&&&&&&&
இன்று காலை தோட்டத்தில் கண்ட பொறிவண்டும்
ஒரு குறுங்கவிதைக்குப் பொறியானது.
முன்னிரவில் முணுமுணுத்துப் பெய்து
மண் குளிர்த்த
வான்துளியின்
நுண்துளி
சுமப்பதாய்
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
நீ அறியமாட்டாய்
நீ சுமப்பதொரு
ஓடை…
ஒரு நதி…
ஒரு அருவி…
ஒரு கடல்…
ஒரு
மகாசமுத்திரம்.
&&&&&&&
(பிரதாபங்கள் தொடரும்)
உங்க போட்டோக்கள் அத்தனையும் சூப்ப்ப்பரா இருக்கு கீதா. முதல் படம் சொல்லிவேலையில்லை. எலுமிச்சையில் முத்துபோல நீர்துளிகள். அதிலொன்று விழவா,வேண்டாமா என இருக்கும் தறுவாய்...வா.வ் சூப்பர்.
ReplyDeleteஉண்மையில் தோட்டம் அதிசயமானதுதான். உங்க தோட்டம் வேற லெவல். படிக்கவே ஆச்சரியமா இருக்கு. இந்த பூக்களே இப்படித்தான் வாங்கும்போது ஒரு கலர் போட்டிருப்பாங்க. பூத்தால் வேறு. எனக்கும் இம்மாதிரி அனுபவம் இருக்கு.
இப்படி நீங்க உங்க தோட்டத்தால் நிறைய கவிவரிகளை உருவாக்கிடுவீங்கள் போல.. இரண்டுமே அழகான கவிதைகள்.
நீ சுமப்பது ஒரு ஓடை,நதி,அருவி,கடல்,சமுத்திரம்...வா.வ் சூப்பர்.
உங்கள் ரசனையான வரிகளும் பாராட்டும் பெரும் உற்சாகம் அளிக்கின்றன. மனமார்ந்த நன்றி ப்ரியா.
Deleteட்தோட்டத்து அதிசயங்கள வியப்பளிக்கின்றன; கவிதைகள் பிரமாதம் .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
Deleteகவிதை சிறப்பு...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.
Deleteமலர்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன...
ReplyDeleteஅன்பும் நன்றியும் தனபாலன்.
Deleteவெண்மை குறித்த உருவக வரிகள் காட்சியாக மனதில்..., அழகிய கற்பனை வரிகள். மனமொழி உரையாடல் வாசிக்கும் போதே மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.
ReplyDeleteகவிதை வரிகளை வாசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteஎல்லுமிச்சை முத்து போல் நீர்துளி படம் சூப்பர்.
ReplyDeleteமகன் வீட்டில் எலுமிச்சை காய்த்து இருக்கிறது நிறைய. மருமகளும் ஊறுகாய் போட்டு இருக்கிறாள்.
தோட்டத்து பொன்வண்டு கவிதை பாட வைக்கிறது உங்களை கவிதைகள் அருமை.
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா…பாடல் பிடித்த பாடல்.
நிறம் மாறும் வெள்ளைரோஜா அழகு.
எலுமிச்சை காய்க்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் எண்ணிக்கைக்கு அளவே இருக்காது என்று நினைக்கிறேன். மருமகளும் ஊறுகாய் போட்டு பத்திரப்படுத்துவது மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteஎத்தனை அழகான படங்கள் ...அனைத்தும் மனதை கவர்கின்றன ...
ReplyDeleteசால்வியா செடி செய்யும் விநோதம்...எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா…...ஆஹா அற்புதம் ...
வருகைக்கும் படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அனு.
Deleteவாவ்!
ReplyDeleteமலர்களின் வர்ணங்களில் கவிதையும் பிறந்தது அற்புதம்.
ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கு அன்பும் நன்றியும் மாதேவி.
Deleteமலர்கள் 100க்கு பின் எப்போது மலரும் என்று இன்றுவரை காத்திருக்கும் எனக்கு ஏனைய பதிவுகளை வாசிப்பதில் கூட அதிருப்தியே...😢😢
ReplyDeleteஹா.. ஹா.. கூடிய சீக்கிரம் தொடர்கிறேன். :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete