நான் வளர்க்கும்
விசித்திரப்பூங்கா பற்றிச்
சொல்கிறேன், கேளுங்கள்,
உங்களிடமும் இருக்கலாம்
இப்படியொரு பூங்கா!
விதைத்தும், பதியனிட்டும்,
ஒட்டியும், போத்துகள் நட்டும்,
வேருடன் பெயர்த்தெடுத்தூன்றியுமென
பல்வகையிலும் வளர்க்கத் தலைப்பட்டேன்,
பலரதரப்பட்ட தாவரவினங்கள்!
இவ்விநோதச்சோலையில்
சத்தமின்றி வளர்கின்றன,
சாமந்தி விதைகளினின்று,
சரக்கொன்றை மலர்ச்செடிகள்!
பாரிஜாதம் சொரிவதோ
பால்வடியும் வெள்ளெருக்கு மலர்கள்!
இளமஞ்சள் ரோஜாச்செடியொன்று
இறுமாப்பு கொண்ட இயந்திரன் போல
ஒன்று பத்தாகி, பத்து பலவாகி
தன்னைத்தானே பதியனிட்டு
பூத்துக்குலுங்கச்செய்கிறது,
பற்பல வண்ண ரோஜாக்கள்!
குறுமரமென்று நினைத்ததெல்லாம்
விருட்சங்களாய் விண்ணோக்கி விரைய,
விண்முட்டுமென்று நினைத்தவையோ….
மண்முட்டி மல்லாந்து கிடக்கிறது!
விந்தையிலும் விந்தையாய்
குலை ஈன்ற வாழையொன்று
தன் காலடிக் கன்றுகளை அழித்து
களைகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது!
பூக்களோ, காய்களோ, கனிகளோ….
பலனாய் எதுவும் கிடைக்கும்வரை
இந்த விநோதங்கள் பற்றி
யாதொரு விசனமும் எனக்கில்லை!
அவை யாவற்றுக்கும்
‘கவிதை’ என்றொரு
பெயரிடப்படுவதைப்பற்றியும்
எனக்கெந்த ஆட்சேபணையுமில்லை!
//தன் காலடிக் கன்றுகளை அழித்து
ReplyDeleteகளைகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது!// இதை மரபு மீறிய கவிதை என்று சொல்லலாமா?
//பூக்களோ, காய்களோ, கனிகளோ….
பலனாய் எதுவும் கிடைக்கும்வரை
இந்த விநோதங்கள் பற்றி
யாதொரு விசனமும் எனக்கில்லை!//
இலக்கணங்கள் மாறுகின்றனவோ?
>>விண்முட்டுமென்று நினைத்தவையோ….
ReplyDeleteமண்முட்டி மல்லாந்து கிடக்கிறது!
அழகிய ரசனை.. உருவகம்
கவிதையில் நேரடியாக சொன்ன விஷயம் போக உள் மறைந்தும் ஊடாடி உள்ளது.. ம் ம் அது படைப்பாளிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
ReplyDeleteம்ம்ம்...காலடிக் கன்றுகளை அழித்துக் களைகளுக்கு உரம்...இதுதான் விதியென்றால் இதுவும் கடந்து போகும் கீதா.கவிதை முடித்த விதம் அழகு !
ReplyDeleteகருத்திட்டு ஊக்குவித்ததற்கு நன்றி சாகம்பரி.
ReplyDeleteகவிதை தோன்றும் கணத்தையும் விதத்தையும் யார்தான் கணிக்க இயலும்? எதிர்பார்ப்புகளுக்கு மாறாய் எழுவதும் கவிதைகள்தாமே.... அப்படி எழுந்ததில் ஒன்றுதான் இது.
ரசித்துக் கருத்துரைத்ததற்கு நன்றி செந்தில்குமார்.
ReplyDeleteரசிகனின் ரசனையைக் கட்டுப்படுத்தும் உரிமை படைப்பாளிக்கும் கிடையாதாம். உங்கள் பார்வை கவிதை விட்டு வெளியில் விரிந்ததற்காய் மிகவும் மகிழ்கிறேன்.
தொடர்ந்து வருவதற்கும் ரசித்துக் கருத்துரைப்பதற்கும் நன்றி ஹேமா.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteரசித்து படித்தேன்.
\\விந்தையிலும் விந்தையாய்
குலை ஈன்ற வாழையொன்று
தன் காலடிக் கன்றுகளை அழித்து
களைகளுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறது!\\
ரசித்துக் கருத்துரைத்ததற்கு நன்றி லோகு.
ReplyDelete