27 January 2015

கருப்பு அன்னம் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 13


All swans are white  என்பது ஊரறிந்த உண்மைக்கு சொல்லப்படும் உவமை. அப்படியிருந்த காலத்தில் கருப்பு நிறத்திலும் அன்னங்கள் இருக்கின்றன என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? 1697 இல்தான் கருப்பு அன்னங்கள் (Black swans) ஆஸ்திரேலியாவில் இருப்பது ஐரோப்பியக் குடியேறிகளால் கண்டறியப்பட்டது. வெள்ளைக்காக்கா மல்லாக்கப் பறக்கிறது என்று சொன்னால் எப்படி எவரும் நம்பமாட்டார்களோ அப்படிதான் கருப்பு அன்னங்களின் இருப்பையும் நம்ப மறுத்தனர் ஐரோப்பியர். சாட்சிக்கு ஒரு சோடி கருப்பு அன்னங்கள் ஜகார்த்தாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கண்ணால் பார்த்தபிறகு நம்பித்தானே ஆகவேண்டும்? 

கருப்பாயிருந்தாலும் கம்பீரமான அழகுடை அன்னங்கள் என்பதால் இந்த அன்னங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவால் உலகின் பல நாடுகளுக்கும் பரிசாக அனுப்பிவைக்கப்பட்டனவாம். ஆனால் ஐரோப்பியரிடத்தில் அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. காரணம்?ஐரோப்பிய புராணக்கதைகளின்படி கருப்புநிற விலங்குகளும் பறவைகளும் துர்தேவதைகளின் அடையாளம். கருப்புப்பூனை, காகம் போன்றவற்றின் வரிசையில் கருப்பு அன்னமும் சேர்ந்துவிட்டதாம். அதனால் ஐரோப்பாவில் இவற்றை வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையாம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக மூர்க்கம் மிகுந்த கருப்பு அன்னங்கள் ஐரோப்பாவின் வெள்ளை அன்னங்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித்து அவற்றை விரட்டியடித்ததும் மற்றொரு காரணம். ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவையான இது அண்டை நாடான நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கும் பரவலாகக் காணப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின்  மாநிலப் பறவை என்ற அந்தஸ்துடைய கருப்பு அன்னப்பறவை அம்மாநிலத்தின் கொடியிலும் அரசு முத்திரையிலும் இடம்பெற்றிருப்பதோடு ஆஸ்திரேலியாவின் கலாச்சார, கலை, விளையாட்டு, தொழில் தொடர்பான பல நிறுவனங்களின் அடையாள உருவாகவும் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.


கரிய உடலும் 'S' வடிவில் அமைந்த நீளமான கழுத்தும் செக்கச்செவேலென்ற அலகும் கொண்ட இந்த அன்னம் பார்ப்பதற்கு அழகும் கம்பீரமும் நிறைந்தது. உலகிலுள்ள அன்னப்பறவை இனங்களிலேயே நீளமான கழுத்து இதற்குதான். இதன் உயரம் 120 செ.மீ முதல் 140 செ.மீ வரை இருக்கும். எடை 4 கிலோ முதல் 9 கிலோ வரை இருக்கும். இறக்கைகளை விரித்தால் 1.6 மீ முதல் 2 மீ. நீளம் இருக்கும். இதன் உயிரியல் பெயர் Cygnus atratus என்பதாகும்.


முழுவதும் கருப்பாக காட்சியளித்தாலும் இதற்கு வெள்ளை நிற இறகுகளும் உண்டு.  இறக்கைகளை விரித்துப் பறக்கும்போது உள்ளிருக்கும் வெண்ணிற இறகுகள் பளிச்சென்று தெரியும். அதனால் கருப்பு அன்னங்கள் கூட்டமாய் வானத்தில் பறக்கும்போது கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கருப்பு வெள்ளை நிறத்திலான  மேக்பை வாத்துகள் என்றே நினைக்கத் தோன்றுமாம். நீளமான கழுத்தையும் மிதமான சிறகசைப்பையும் கொண்டுதான் இவை கருப்பு அன்னங்கள் என்பதை அறிந்துகொள்ளமுடியும்

கருப்பு அன்னம் 


மேக்பை வாத்துகள்

வெள்ளை அன்னங்கள் பொதுவாக பெரிய அளவில் ஒலி எழுப்புவதில்லை. அதனாலேயே ஊமை அன்னங்கள் (mute swans) என்று பெயர் பெற்றுவிட்டன. கருப்பு அன்னங்களோ விசில் போன்ற ஒலியை எழுப்புகின்றன. சில சமயங்களில் இவை எழுப்பும் எக்காளம் போன்ற ஒலி வெகு தொலைவிலும் கேட்கும். நீரைச் சார்ந்து வாழ்ந்தாலும் கருப்பு அன்னங்கள் முழுக்க முழுக்க சைவப் பறவைகள். நீர்த்தாவரங்கள், புற்கள் தவிர வேறு எதையும் தின்பதில்லை. மீன்களையோ புழு பூச்சிகளையோ திரும்பியும் பார்ப்பதில்லை.

ஏரிகுளம், குட்டை, ஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வாழும் கருப்பு அன்னங்கள்  இனப்பெருக்கக் காலத்தில் அந்நீர்நிலைகளைச் சுற்றி வளர்ந்துள்ள கடல்பாசி, நீர்த்தாவரங்களைக் கொண்டு  சற்று மேடாக்கி அதில் கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன.  ஆணும் பெண்ணும் இணைந்தேதான் கூடமைக்கின்றன. இவை  ஒருமுறை இணை சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் தொடர்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் மற்றப் பறவைகளைப் போல் எல்லைத் தகராறுகளில் இவை ஈடுபடுவதில்லை. குழுவாக வாழும் இவை பக்கம் பக்கமாய்க் கூடமைத்துக் கொள்கின்றன.இந்த கருப்பு அன்னப்பறவைகளிடம் சில விநோதப் பழக்கங்களும் காணப்படுகின்றன. வாழ்நாள் இணையென்று நம்பப்பட்டாலும் இவற்றுள் இணையறியாக் கள்ளக்காதலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓர்பால் காதலும் உண்டாம். இரண்டு கருப்பு ஆண் அன்னங்கள் சோடி சேரும் பட்சத்தில் மற்றப் பறவைகளைப் போலவே கூடு அமைத்து, அக்கம்பக்கத்து கூடுகளிலிருந்து முட்டைகளைத் திருடிவந்து அடைகாத்துக் குஞ்சுபொரித்து குடும்பம் அமைப்பதும் உண்டாம். இவை தவிர ஐரோப்பாவில் பல இடங்களில் வெள்ளை அன்னத்தோடு இணைந்து Blute swan (Black swan + Mute swan) என்ற புதிய தலைமுறையையும் உருவாக்கியுள்ளனவாம்.

பொதுவாக ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 35 – 40 நாட்கள் இரு பறவைகளும் மாறி மாறி அடைகாக்கும். குஞ்சுகள் சாம்பல் நிறத்திலும் இறக்கைகளின் முனைகளில் மட்டும் கருப்பாகவும் காணப்படும். நான்கு வாரத்தில் குஞ்சுகள் நன்றாக நீந்தவும் தாய் தந்தை ஊட்டும் அவசியமில்லாமல் தாங்களாகவே உண்ணவும் செய்கின்றன. ஆழமான நீர்நிலைகளைக் கடக்கநேரும்போது தாய் தந்தையின் முதுகில் சவாரி செய்தபடி குஞ்சுகள் கடப்பது அழகு. ஆண் பறவை cob என்றும் பெண் பறவை pen என்றும் குஞ்சுகள் cygnets என்றும் குறிப்பிடப்படுகின்றன.கருப்பு அன்னங்கள் தட்பவெப்ப சூழலுக்கேற்ப இடப்பெயர்வில் ஈடுபடுகின்றன. கடற்கரையோரங்களில் வசிப்பதை விரும்பினாலும் பெருமழைக் காலங்களில் அங்கு தாக்குப் பிடிக்க முடியாமல் உள்நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளை நோக்கி பறந்துசெல்கின்றன. அங்கு கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. அங்கு கோடையில் வறட்சி உண்டாகும் சமயம் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கடலோர நீர்நிலைகளுக்கு வந்துவிடுகின்றன.

அடைகாத்து குஞ்சு பொரிக்கும் தருணங்களில் பெரும்பாலான நீர்ப்பறவைகளுக்கு ஏற்படுவது போலவே இவற்றுக்கும் இறகுகள் உதிர்ந்துவிடுகின்றன. அப்போது இவற்றால் பறக்க முடியாது. மீண்டும் இறகுகள் வளர்ந்து பழைய நிலையை அடைய ஒரு மாதகாலமெடுக்கும். அந்த சமயத்தில் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பெரும் குழுவாகவும் வெட்டவெளியான நீர்நிலைகளிலும் வசிக்கின்றன.பூர்வகுடி மக்களிடையே கருப்பு அன்னத்தைக் குறித்து ஒரு கதை உண்டு. பண்டைக்காலத்தில் இந்த கருப்பு அன்னமும்  வெள்ளையாக அழகாக இருந்ததாம்அழகிருந்தால் சிலருக்கு ஆணவமும் இலவச இணைப்பாக வந்துவிடுமே.  அன்னத்துக்கும் வந்துவிட்டதாம். அது சும்மா இல்லாமல் அங்கிருந்த கழுகின் முன்னால் போய்என் அழகென்ன? நிறமென்ன? நடையென்ன? நளினமென்ன?’ என்று தன் அழகைப் பற்றிப் பீற்றிக்கொண்டே இருந்ததாம். கடுப்பான கழுகு அன்னத்தின் இறக்கைகளைப் பிய்த்து சின்னாபின்னப் படுத்திவிட்டதாம். அத்தோடு விடவில்லையாம். இறக்கைகளில்லா அன்னத்தைக் கொண்டுபோய் ஆளரவமில்லாத பாலைநிலத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டதாம்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அன்னத்தை கழுகின் எதிரிகளான  காகங்கள்தாம் காப்பாற்றினவாம். சிறகில்லாத அன்னத்துக்கு தங்கள் சிறகுகளைத் தந்து உதவினவாம். அன்றுமுதல் வெள்ளை அன்னம் கருப்பு அன்னமாகிவிட்டதாம்.  அதனால் கழுகுக்கு அடையாளம் தெரியாமல் போகவே தப்பித்துக் கொண்டனவாம். கழுகு பிய்த்த இறகுகள் போக மீந்த சில சிறகுகள்தான் இந்த அன்னம் பறக்கும்போது வெள்ளையாய் வெளியில் தெரிகின்றவாம். கழுகு கொத்தியதால் அன்னத்தின் அலகில் ஏற்பட்ட இரத்தக்காயத்தால்தான் அதன் அலகு சிவப்பாக இருக்கிறதாம். கதை எப்படி? சுவாரசியம் அல்லவா?

(படங்கள் : நன்றி இணையம்)


15 January 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய நூல்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். 

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழா முடிவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  என்னுடைய முதல் நூலான 'என்றாவது ஒரு நாள்' என்னும் மொழிபெயர்ப்பு நூல் அகநாழிகை பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது என்பதையும் புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் மற்ற நூல்களோடு இதுவும் கிடைக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அகநாழிகை பதிப்பகத்தின் அரங்கு எண் 304. அகநாழிகைப் பதிப்பகத்தின் வெளியீடுகள் - 
2013, 2014 மற்றும் - ஜனவரி 2015

கவிதைகள் 
விரல் முனைக் கடவுள் - ஷான் (ரூ.80)
சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர் (ரூ.70)
மௌன அழுகை - மு.கோபி சரபோஜி (ரூ.70)
மலைகளின் பறத்தல் - மாதங்கி (ரூ.80)
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி (ரூ.60)
என் வானிலே - நிம்மி சிவா (ரூ.50)
யுகமழை - இன்பா சுப்ரமணியன் (ரூ.70)
கவிதையின் கால்தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) - தொகுப்பாசிரியர் : செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.230)
அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன் (ரூ.80)
சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன் (ரூ.80)
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி (ரூ.80)
தனியள் - தி.பரமேசுவரி (ரூ.100)
அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி (ரூ.200)
சிவப்பு பச்சை மஞ்சள் வௌ¢ளை - செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.70)
மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு (ரூ.70)
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன் (ரூ.70)
அக்காவின் தோழிகள் - நீரை. மகேந்திரன் (ரூ.60)
தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார் (ரூ.90)

சிறுகதைகள்
சுனை நீர் - ராகவன் ஸாம்யேல் (ரூ.110)
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய. செல்லப்பா (ரூ.120)
அடை மழை - ராமலக்ஷ்மி (ரூ.100)
குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் (ரூ.70)
முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) - தமிழில் : புல்வெளி காமராசன் (ரூ.120)
சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன் (ரூ.80)
வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி (ரூ.120)
அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ (ரூ.130)
என்றாவது ஒரு நாள் (ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்) - ஹென்றி லாசன் - தமிழில் : கீதா மதிவாணன் (ரூ.150)

கட்டுரைகள்
வெயில் புராணம் - உமா மோகன் (ரூ.25)
கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம்) தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி (ரூ.240)
யாருக்கானது பூமி? - (சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்) பா.சதீஸ் முத்து கோபால் (ரூ.140)
பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ டிசே (ரூ.150)

நாவல்
நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன் (ரூ.130)

**********************************************

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய ஐரோப்பியக் குடியேறிகளின் அன்றைய மாறுபட்ட வாழ்க்கைச்சூழலை மையமாய்க் கொண்டு புனையப்பட்ட ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் என் முயற்சிக்கு ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி.


அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.