27 December 2015

சந்திரமதி (4)
நறுமணமிக்க மலர்களையும் வாசனைமிக்க சாந்துப் பூச்சுகளையும், அழகையும், ஒளிமிக்க மணிகளாலான ஆபரணங்களையும் சுமக்க முடியாமல் சுமந்து பூத்துக்குலுங்கும் மலர்க்கொடிபோல் அசைந்தும் துவண்டும் நிலத்தில் பாதங்களை ஊன்றுவதற்கே பயந்து பயந்து அவள் நடப்பதைப் பார்க்கும்போது, ஆண்யானையின் பின்னே நாணத்தோடு நடந்துசெல்லும் பெண்யானையைப் போலவும் மென்னடைபோடும் அன்னப்பேட்டைப் போலவும் இருக்கும்.. பாதங்களைத் தரையில் ஊன்றுவதற்கே அஞ்சி அடியெடுத்துவைப்பாளெனில் அவள் பாதங்களின் மென்மையும் தன்மையும் புரிகிறதல்லவா?

கடிகமழ் மலரும் கலவையும் அழகும்
கதிர்மணிப் பணிகளும் சுமந்து
கொடியென இசைந்து நிறைவுறப் பூத்த
கொம்பென அசைந்து அசைந்து ஒல்கி
அடியிணை படியிற் படப்பொறாது அஞ்சி
அன்புறு கடகரிப் பின்போம்
பிடியெனக் கன்னி நடைபயில் அன்னப்
பெடையென மடநடை பெயர்வாள்.
(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பூவும் பொட்டும்

பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)

இதுவரை நாங்கள் வர்ணித்த இனிய தன்மையளுக்கு, அமிர்தத்தில் பிறந்தாற்போன்ற அருஞ்சிறப்பு கொண்ட பெண்ணவளுக்கு, இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. அது என்ன தெரியுமா? சந்திரமதி சிவபெருமானின் அருளால் பிறந்தவள் அல்லவா? அவளுடைய மணவாளன் இன்னார் என்பது இறைவனின் அருளால் மாத்திரமே தெரியவருமாம். எனவேதான் அவளை மணம் பேச வந்த மன்னர்களுக்கெல்லாம் அவளைக் கொடுக்காமல் உரிய மணாளனுக்காகக் காத்திருப்பதாகவும் தாங்கள் கேள்விப்பட்டதாக அம்முனிவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமா? இத்தனை அழகும் அம்சமும் பொருந்திய சந்திரமதி உன்னைச் சேர்வதற்கே உரியவள் என்றும் சொல்லி அரிச்சந்திரனுக்கு சந்திரமதியின் மீதான மோகத்தைத் தலைக்கேற்றுகின்றனர்.

அன்ன தன்மையளைஅமிர்தினில் பிறந்த
அணங்கு அபிடேகத்தைஅனந்த
மன்னர் தம் தமக்கு மணம்செயக் கருதி
மணம் மொழிந் தவர்க்கெலாம் கொடாது
முன்னம் எம் பெருமான் மொழிந்தவர்க் கன்றி
முடிக்கிலேன் கடிமணம் என்னச்
சொன்னதோர் மொழியும் கேட்டனம் அவள் நின்
தோள்களுக்கு இசைந்தவள் என்றார்.


(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பாவமன்னிப்பு
பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)


காதல் பித்தம் தலைக்கேறிய அரிச்சந்திரன் தன்னிடம் சந்திரமதியை வர்ணித்த முனிவர்களையே தனக்காக தூது அனுப்பியதும், சுயம்வரத்தில் கலந்துகொண்டதும், சந்திரமதியின் கழுத்தில் முன்பே ஒரு மாங்கல்யம் இருக்க, மறுதிருமணத்துக்கு ஏன் இந்த ஏற்பாடு என்று கேட்டதும், அவள் சிவபெருமான் அருளால் பிறந்தவள் என்றும் பிறக்கும்போதே மங்கல அணியுடன்பிறந்தவள் என்றும் அது யார் கண்களுக்குத் தெரிகிறதோ அவரே அவளை மணக்கும் தகுதியுடைய மணாளன் என்றும் அவளுடைய தந்தை சொல்லக்கேட்டு மகிழ்ந்து அவளை மணமுடித்ததும் அடுத்தடுத்துத் தொடரும் கதைகள். உண்மைக்கு உதாரண புருஷனாய் வாழ்ந்து அவன் பட்ட அவதிகள் ஒருபக்கம் எனில் உத்தம புருஷனான அவனை மணமுடித்தக் காரணமாய் சந்திரமதியும் அவள் மகனும் பட்ட துயரங்கள் அளவிலாதவைஅறிவோமல்லவா?

(சந்திரமதி குறித்த வர்ணனைப் பாடல்கள் நிறைவுற்றன. ரசித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)


15 December 2015

ஆஸ்திரேலியப் புதர்க்கோழி - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 14படத்திலிருப்பது Australian brush turkey எனப்படும் ஆஸ்திரேலியப் புதர்க்கோழி. வான்கோழிகளைப் போல தாடை இருப்பதால் இது turkey என்று குறிப்பிடப்பட்டாலும் இது வான்கோழியினத்தைச் சார்ந்தது அல்ல. Megapodiidae என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. அதென்ன மெகாபோடீடே? வலிமையான கால்களைக் கொண்டு குப்பைக்கூளங்களையும் மண்ணையும் சீய்த்து, மலைபோல் குவித்து, அதற்குள் முட்டையிடும் வகையைச் சேர்ந்த பறவைகள்தாம் Megapodiidae எனப்படுகின்றன. ஆஸ்திரேலியாவைச் சார்ந்த Megapodiidae குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பறவைகளில் பெரியது இந்த ஆஸ்திரேலியப் புதர்க்கோழி.

பெரும்பாலும் மழைக்காடுகளிலும் ஈரப்பதமான புதர்ப்பகுதிகளிலும் காணப்பட்டாலும் சில சமயங்களில் வறண்ட புதர்ப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை நிலத்தில் வாழும் பறவைகள் என்பதால் இவற்றுக்கான உணவும் நிலத்தில்தான். தங்களுடைய பெரிய வலிமையான கால்களைக் கொண்டு மண்ணைக்கிளறியும், உளுத்துப்போன மரக்கட்டைகளை சிதைத்தும் உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்கின்றன. அவை தவிர மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உண்கின்றன. இவை தரைவாழ் பறவைகள் என்றபோதும் இரவு நேரங்களில் தரையிலிருப்பது ஆபத்து என்பதால் ஏதேனும் மரங்களின் கிளைகளில்தான் உறங்கிக் கழிக்கின்றன.
கருப்பு நிற இறகுகளும் கோழிகளைப் போன்ற செங்குத்தான பட்டையான வாலும், மொட்டையான சிவப்புநிறத் தலையும் பளீரென்ற மஞ்சள் நிறத் தாடையும் கொண்ட இப்பறவையை இனங்காண்பது எளிது. வடக்குப்பகுதிவாழ் புதர்க்கோழிகளுக்கு மஞ்சள் தாடைக்குப் பதில் நீலத்தாடை. ஆஸ்திரேலியப் புதர்க்கோழிகள் பொதுவாக 60 -75 செ.மீ. உடல்நீளமும் 80 செ.மீ. சிறகுவிரிநீளமும் கொண்டிருக்கும். 

ஆஸ்திரேலியப் புதர்க்கோழிகள் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் விதம் அறிந்து வியக்காமலிருக்க முடியவில்லை. அப்படி என்ன சிறப்பு என்றுதானே யோசிக்கிறீர்கள்? மற்றப் பறவைகளைப் போல கூடு கட்டி அதில் முட்டையிடும் பறவையினமல்ல இது. கூட்டுக்கு பதில் வீடே கட்டுகிறது. ஆம் மண்ணையும் குப்பைக்கூளங்களையும் கொண்டு ஒரு பெரிய மண்மேட்டைக் கட்டுகிறது. அதுதான் அதன் கூடு. மண்மேடு என்றால் சின்னதாய் குழந்தைகள் கடற்கரையில் குவித்துவிளையாடுவது போல் இல்லை. நான்கு மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்ட பெரிய மேடு. குப்பைகளையும் இலைதழைகளையும் மண்ணையும் குவித்து உருவாக்கப்படும் இம்மண்மேட்டைக் கட்டிக்கொண்டிருக்கும்போது வெகு மூர்க்கமாய் செயல்படும். 

ஆண் புதர்க்கோழியின் வாழ்க்கை இலட்சியமே அதன் இணை முட்டையிடவிருக்கும் மண்மேட்டைப் புதுப்பிப்பதும் காவலிருப்பதும்தான் என்பது போல் காலையிலிருந்து மாலை வரை அதற்காக உழைப்பதிலும் அதை சீரமைப்பதிலுமே நேரத்தைச் செலவிடுகிறது. முந்தைய வருடங்களில் பயன்படுத்திய அதே மண்மேட்டையே அடுத்தடுத்த வருடங்களிலும் பயன்படுத்துகின்றன. மேட்டை உருவாக்கும்போது வேறெந்த ஆண் புதர்க்கோழியும் அந்தப்பக்கம் வரமுடியாது. அவ்வளவு ஏன்? தன் இணைக்கோழியைக் கூட அந்த மேட்டின் அருகில் வரவிடாது. 
ஒருவழியாய் கூடு அதாவது மண்மேடானது, ஆணின் திருப்திக்கேற்ப வடிவமைக்கப்பட்டவுடன் பெண்பறவையை முட்டையிட அங்கு அனுமதிக்கும். பெண்பறவை தினமும் அந்த மண்மேட்டில் 60 முதல் 80 செ.மீ ஆழக் குழி தோண்டி அதில் முட்டையிட்டுச் செல்லும். ஒவ்வொரு முட்டைக்கும் அடுத்த முட்டைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 20 முதல் 30 செ.மீ. இருக்கும். பெண் புதர்க்கோழி போனபின் ஆண் புதர்க்கோழி அந்த முட்டையின் மேல் குப்பைகளையும் மண்ணையும் போட்டு மூடிவைக்கும்.

சில சமயங்களில் ஆண் புதர்க்கோழியே முட்டையிடுவதற்கான குழியைத் தோண்டி தயாராக வைத்திருக்கும். பெண் புதர்க்கோழி வரவேண்டும், முட்டையிடவேண்டும், திரும்பிப் பார்க்காமல் போய்விடவேண்டும். அவ்வளவுதான். பெண் புதர்க்கோழிகளின் முழுநேரப் பணியே முட்டையிடத் தேவையான சத்துள்ள உணவைத் தேடித்தேடி நாள்முழுவதும் தின்றுகொண்டிருப்பதுதான்.

முட்டைகளைப் பராமரிப்பது முழுக்க முழுக்க ஆண் பறவையின் வேலை. முட்டைகள், பறவையின்  உடல் வெப்பத்தால் அடைகாக்கப்படுவதற்குப் பதிலாக மண்மேட்டுக்குள்ளிருக்கும் வெப்பத்தால் அடைகாக்கப்படுகின்றன. மண்ணுக்குள் உள்ள மக்கிய இலைதழைகள் நொதிக்க ஆரம்பிப்பதால் உள்ளே வெப்பம் உண்டாகும். அவ்வாறு உண்டாகும் வெப்பம் 33 முதல் 38 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கவேண்டும். அதுதான் முட்டைகள் பொரிய சரியான வெப்பம்.

ஆண் புதர்க்கோழி அவ்வப்போது தன் அலகை ஒரு வெப்பமானி போல் மேட்டுக்குள் ஆங்காங்கே நுழைத்து வெப்பத்தை ஆராயும். ஒருவேளை வெப்பம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் மேட்டின் சில இடங்களில் பள்ளம் பறித்து உள்ளிருக்கும் வெப்பம் வெளியேற வகை செய்யும். வெப்பம் குறைவாக இருப்பதாக உணர்ந்தால் முட்டையிருக்கும் பகுதிகளில் சூரிய ஒளி அதிகம் படுமாறு பார்த்துக்கொள்ளும். வெப்பம் வெளியேறிவிடாமல் ஆண் பறவை மேலும் மேலும் மண்ணை சீய்த்து மூடி பாதுகாக்கும்.மண் மேட்டின் வெப்பநிலை பேணுவது அல்லாமல் முட்டைகளைத் திருட வரும் பாம்பு, கோவான்னா (ஆஸ்திரேலிய ராட்சதப் பல்லி) போன்ற ஊர்வனவற்றிடமிருந்தும் முட்டைகளைப் பாதுகாக்கவேண்டியது இதன் பெரும்பொறுப்பு. கோவான்னாவின் வாலில் ஏதாவது காயத்தையோ வடுவையோ காணநேர்ந்தால் அது ஏதாவதொரு ஆண் புதர்க்கோழியின் முரட்டுத்தாக்குதல்தான் என்பதைக் கண்டுகொண்டுவிடலாம். 

பருவகாலம் சாதகமாக இல்லாத காலத்திலும் முட்டைகளுக்கு போதிய வெப்பம் கிடைக்காது என்று தோன்றும் நிலையிலும் ஆண் புதர்க்கோழி எடுக்கும் முடிவு விசித்திரம். அப்போது முட்டையிட வரும் பெண் புதர்க்கோழியை தயவு தாட்சண்யம் இல்லாமல் விரட்டித் துரத்திவிட்டுவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பறவைகள் ஒரே மேட்டில் முட்டையிடுவதால் ஒரு பெண் புதர்க்கோழி ஒரு ஈட்டுக்கு எத்தனை முட்டைகள் இடுகிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், 18 முதல் 24 வரை இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சில சமயங்களில் ஒரு மண்மேட்டிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது குஞ்சுகள் பொரிந்து வெளிவருகின்றன. எல்லாக் குஞ்சுகளும் ஒரே நாளில் பொரிப்பதில்லை. ஒவ்வொரு நாள் ஒரு முட்டை என்ற கணக்கில் இடப்படுவதால் 50 நாட்கள் கழித்து ஒவ்வொரு நாளும் ஒரு புதர்க்கோழிக்குஞ்சு பொரிந்து வெளிவருகிறது.புதர்க்கோழிக்குஞ்சுகளின் வாழ்க்கை அடுத்த விசித்திரம். கிட்டத்தட்ட ஒரு மீட்டர் ஆழத்தில் உள்ள முட்டையிலிருந்து பொரிந்துவரும் கோழிக்குஞ்சு மண்ணை முட்டிக்கொண்டு வெளியே வருவதென்பது ஒரு பெரும் சாதனைதான். ஆம். ஒரு புதர்க்கோழிக்குஞ்சு சுமார் நாற்பது மணிநேரம் போராடித்தான் உள்ளேயிருந்து வெளியே வந்து மூச்சு விடுகிறது. அந்த சாதனை போதாதென்று வெளிவந்த நொடியே காட்டுக்குள் ஓடிப்போய் தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்கிறது என்பது எவ்வளவு விசித்திரம்.

இரை இன்னதென்று அறிந்து, தானே இரைதேடி உண்டு, எதிரிகளை அறிந்து, அவற்றிடமிருந்து தப்பிக்கும் தந்திரம் கற்று, ஒரே நாளில் தானே பறக்கவும் கற்றுக்கொண்டு, இரவு நேரத்தில் மரக்கிளைகளில் தஞ்சம் புகுந்து, பிறந்த நொடியிலிருந்தே ஒரு குழந்தை தன்னிச்சையாய் எவர் தயவுமின்றி வாழ்வதான வாழ்வை என்னவென்று சொல்வது? நாய் நரிகளுக்கும், பாம்பு, பல்லிகளுக்கும் இரையாகாமல் தப்பித்து பொரித்து வளர்ந்து முழுக்கோழியாக உருவாவதென்பது நூற்றில் ஒரு முட்டைக்குதான் சாத்தியமாம். எவ்வளவு கொடுமை!

1930 களில் அழிவின் விளிம்புக்குப் போன ஆஸ்திரேலியப் புதர்க்கோழிகள் இப்போது சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு பரவலாய் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன என்பது சூற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்வான தகவல்.

&&&&
(படங்கள் உதவி: இணையம்)


14 December 2015

தாங்குமா இத்தாயாடு?ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
அண்ணன் எங்கே எங்கே என்று
அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.

மண்சட்டியில் துண்டுகளாகி..
வெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய கண்டங்களாகி..
வெய்யிலில் காயும் மீதத்திலும்
வீசும் உன் பிணவாடையை
தாங்குமா இத்தாயாடு?

கறியுணவாய்ப்போன கண்மணியின்
கரியுருவை முகர்ந்து முகர்ந்து
கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு
வல்லமை மின்னிதழின் இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதை சிறந்த கவிதையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து  மகிழ்ச்சி. அனைத்துக் கவிதைகளையும் அலசி ஆய்ந்து விமர்சனங்களோடு சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கிய மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமை குழுவுக்கும் மிகவும் நன்றி. சிந்திக்கத்தூண்டும் படத்தை வழங்கிய புகைப்படக்கலைஞர் வெங்கட் சிவா அவர்களுக்கும் படத்தைத் தேர்ந்தெடுத்த தோழி சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

10 December 2015

அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.எத்தனை முகங்களின் சாயங்களை
வெளுக்கச்செய்திருக்கிறது இப்பெருமழை..
எத்தனைத் தூய உள்ளங்களைத்
அடையாளங்காட்டியிருக்கிறது இந்த அடைமழை!

கர்ப்பக்கிரகத்திலும் கட்-அவுட்டிலும்
அரசியல்வாதிகளின் காலடிமண்ணிலும்
கடவுளர்களைத் தேடியவர் கண்களுக்கு
மனிதர்களைக் காட்டியிருக்கிறது இம்மாமழை..

பணமே பிரதானமென்று முன்தினம்வரை 
பரபரத்து ஓடிய மனங்களுக்குப்
பணத்தால் ஆவதொன்றுமில்லையென 
பாடம்புகட்டியிருக்கிறது இந்தத் தொடர்மழை..
நில்லென்று மழைநிறுத்தி சுள்ளென்று ஆதவன் ஒளிரட்டும்..
சொல்லொணா துயரிலிருந்து மெல்ல நம் வாழ்வு மலரட்டும்..
அழைக்கும் திக்கெல்லாம் ஓடிக்களைத்த கால்களும்
உதவிக்களைத்த கரங்களும் சற்றே ஓய்வு கொள்ளட்டும்…

நசிந்துகிடக்கும் நிகழ்வாழ்விலிருந்து எதிர்காலம் மீட்கச்செய்யும்
நம்பிக்கையும் ஆன்மபலமும் நம்மைவிட்டு நீங்காதிருக்கட்டும்…
இடர்ப்பாடு களைந்து இயல்புக்குத் திரும்பியபின்னும் நம்
அகத்திலெரியும் அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.. 

இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.
ஆழி முகந்துவந்த அளவிலா நீரெல்லாம்
ஊழிப்பெருவெள்ளமென ஊரெல்லாம் சூழ
அல்லாடிக்கிடக்கும் நெஞ்சங்களை
அன்பால் தேற்றிடும் அனைவருக்கும் நன்றி

திக்கற்றுத் திகைத்துநிற்கும் மக்களை
பக்குவமாய் மீட்டெடுக்கும் தாயுள்ளங்களுக்கு நன்றி
சாணக்கிய அரசியல்வாதிகளை எதிர்பாராது
சனம் ஒன்றுகூடி நீட்டும் உதவிக்கரங்களுக்கு நன்றி..

மகத்தான உதவிகளை காலத்தே செய்யும்
மனிதம் இன்னும் துறக்கா மனங்களுக்கு நன்றி
சாதிமத இனவேறுபாடுகளை மறந்தும் துறந்தும்
சங்கமித்துதவும் சகோதர உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இயல்புவாழ்வு மீள நம்மிரு கரங்களையும் தந்துதவுவோம்
இயன்றவழியிலெல்லாம் இடர்ப்பாடு களைய முன்வருவோம்
அன்புவெள்ளத்தின்முன் ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்
சின்னாபின்னமான வாழ்வனைத்தும் சீர்பெற்று மீண்டுவரட்டும்.


(படங்கள்: நன்றி இணையம்)

2 December 2015

தி.தமிழ் இளங்கோ ஐயாவின் எண்ணத்தில் என்றாவது ஒருநாள்...

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவர்களுள் ஒருவரும் என் பிறந்தகமான திருச்சியைச் சார்ந்தவருமான தமிழ் இளங்கோ ஐயா அவர்களைப் பற்றி அறியாதவர்கள் பதிவுலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அரசு வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவர்தம் பதிவுகளில் இலக்கியமும் அனுபவ அறிவும், சமூகநலன் சார்ந்த பதிவுகளும் பிரதானமாய் இடம்பெறும். அவர் எனது எண்ணங்கள்’ என்னும் தன்னுடைய வலைப்பூவில், என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான ‘என்றாவது ஒருநாள்’ குறித்த விமர்சனத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது என்னுடைய நூலை தமிழ் இளங்கோ ஐயா விலை கொடுத்து வாங்கிய செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். வாசித்து முடித்த கையோடு அதற்கான விமர்சனமும் எழுதிப் பதிவிட்டுள்ளமை என்னை இரட்டிப்பு மகிழ்வடையச் செய்துள்ளது. மொழிபெயர்ப்பின் வகைகள் குறித்தும் இந்நூலில் நான் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு குறித்தும் கருத்துரைத்துள்ள அவர், நூலிலுள்ள கதைகள் தொடர்பான தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துள்ளமை சிறப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததைப் போன்று தமிழிலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடல் வேண்டுமென்ற வேண்டுகோளை தற்போதைக்கு மறுக்கும் நிலையில் இருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன். அவருடைய கருத்துரைக்கான என் பதில் இது...

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவரான தங்களிடமிருந்துஎன்றாவது ஒருநாள்நூலுக்கான விமர்சனம் கிடைத்திருப்பதை என்னுடைய பேறாகவே கருதுகிறேன். மிகுந்த மகிழ்வும் நன்றியும் ஐயா. இந்த நூலில் நான் மேற்கொண்டிருப்பது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நேரடி மொழிபெயர்ப்புதான். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்களிலும் நான் வியந்து ரசித்த மூல ஆசிரியருடைய எழுத்து பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறியத்தரமுடியும் என்று நம்பினேன்.

கதைகள் குறித்த சிறு அறிமுகமும் வாசகரை வாசிக்கத் தூண்டும்வண்ணம் தாங்கள் இங்கு அவற்றைக் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. ஒற்றை சக்கரவண்டி கதையின் தலைப்போடு கவியரசரின் வரிகளையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. கதைகளையும் கதைகளின் பின்னணியையும் மிக அழகாக உள்வாங்கி எழுதப்பட்ட விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றி.

ஆங்கிலத்தில் எனக்குப் போதுமான புலமை இல்லாதபோதும், நான் ரசித்தவற்றைத் தமிழில் தரவேண்டும் என்னும் முனைப்பே மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தூண்டியது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லையென்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். பின்னாளில் என்றேனும் நான் அந்த முயற்சியில் ஈடுபட முடியுமானால் அந்தப் பெருமை தங்களுக்கே உரித்தாகும். நன்றி ஐயா.
இறுதியில் நான் குறிப்பிட்டுள்ள வரிகள் 
என்றாவது ஒருநாள் மெய்ப்படலாம்.. 
அதற்கான விதை இங்குதான் விதைக்கப்பட்டது என்பதை 
அப்போதும் மகிழ்வுடன் நினைவுகூர்வேன்.
மிக்க நன்றி ஐயா.