4 September 2019

ஞிமிறென இன்புறு


தோட்டத்துப் பிரதாபம் - 6

துளசிப்பூவில் ஐரோப்பியத் தேனீ

ஞிமிறென இன்புறு. இதன் முழுப்பொருளையும் எங்கள் தோட்டத்துத் தேனீக்களைப் பார்த்துதான் அறிந்துகொண்டேன். அன்றலர்ந்த மலர்களில் அமர்ந்தும் பறந்தும் கிடந்தும் சுழன்றும் என்னவொரு ஆனந்தத் தாண்டவம். தோட்டம் உயிர்பெற்று வந்துவிட்டதைப் போன்ற தோற்றம் காட்டி கிறுகிறுக்கச் செய்யும் ரீங்காரம். குளவிகள் அளவுக்கு இவற்றிடம் ஏனோ எனக்கு அவ்வளவு பயம் இல்லை. வெகு அருகில் சென்று அவற்றுக்குத் தொல்லை தரா எச்சரிக்கையோடு மேக்ரோ ஒளிப்படம் கூட எடுக்கிறேன். தானுண்டு தன் வேலையுண்டு என்று அவை பாட்டுக்கு இயங்குகின்றனவே தவிர, என்னைத் திரும்பியும் பார்ப்பதில்லை. 

தேனீக்கள் என்று பொத்தாம்பொதுவாகத்தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். பிறகுதான் அவற்றுள் பல வகை எங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்ற உண்மை உணர்ந்தேன்.  

கத்தரிப்பூவில் நீலவரித்தேனீ

தேனீக்கள் பற்றி சொல்வதற்கு முன் ஒன்று சொல்லவேண்டும். நான் முன்பே சொன்னது போல தோட்டக்கலையில் எனக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது. தோட்டம் வளர்ப்பது என்று முடிவு செய்தபின் அதுவும் காய்கறித் தோட்டம் என்றான பின், அது குறித்த தேடல் துவங்கியது. எனக்கு எதிலாவது ஆர்வம் என்று கணவருக்குத் தப்பித்தவறி தெரிந்துவிட்டால் போதும், உடனே அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கத் தொடங்கிவிடுவார். அப்படிக் கிடைத்த புத்தகங்களிலும் இணையதளங்களிலும் பார்த்துப் பார்த்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். சிலவற்றை செயல்படுத்தினேன்.

முக்கியமாய் மகரந்தச்சேர்க்கை. அம்மா, அம்மாச்சி, மாமி என்று எல்லாரும்தான் தோட்டம் வளர்த்தாங்க. என்ன செய்வாங்க? விதைகளை நடுவாங்க, பதியன் போடுவாங்க, கொடியாயிருந்தா பந்தல் கட்டுவாங்க, தண்ணீ ஊத்துவாங்க, பலனை அனுபவிப்பாங்க. பூச்சி வந்திடுச்சா, வேப்பெண்ணெய், உப்பு அல்லது சாணித்தண்ணியைக் கரைச்சுத் தெளிப்பாங்க, அப்படியும் போகலைன்னா அந்தச் செடியை அப்படியே பிடுங்கிப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரிந்து செய்தாங்க. தோட்டத்துக்கு தேனீ வருதா இல்லையா, வந்தாலும் மகரந்தச் சேர்க்கை நடக்குதா இல்லையா, வரலைன்னா அதைத் தோட்டத்துக்கு வரவைக்கிறதுக்கு என்ன பண்ணனும் என்றெல்லாம் கவலைப்பட்ட மாதிரியோ, யோசித்தமாதிரியோ கூட தெரியலை. ஆனால், இன்றைக்கு?

மகரந்தச்சேர்க்கை என்கிற விஷயமே நாமாக செயற்கைமுறையில் (hand pollination method) செய்தால்தான் உண்டு என்பது மாதிரியான போதனைகள், செய்முறைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள். பறங்கிக்காய் விஷயத்தில் நானும் அப்படியான மாயைக்குள் சிக்கிய கதையை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தற்சமயம் என் தோட்டத்தில் ஒலிக்கும் தேனீக்களின் ரீங்காரம் என் முந்தைய பேதைமையை எள்ளி நகைப்பதுபோலவே தோன்றுகிறது. அயல்மகரந்தச்சேர்க்கையை நம்பியிருக்கும் பூக்களை மட்டுமல்லாது, தன்மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் கத்திரி, தக்காளி போன்றவற்றையும் ஒரு வேலையும் செய்யவிடாமல் சோம்பேறியாக்கிவிட்டன என் தோட்டத்துத் தேனீக்கள்.

கத்தரி, சூரியகாந்தி, துளசி. பறங்கி, தக்காளி,
வெள்ளரிப் பூக்களில்
ஐரோப்பியத் தேனீக்கள் (European honey bees)

முதலில் ஐரோப்பியத் தேனீக்கள்தான் அதிகமாக வந்தன. பிறகு பார்த்தால் ஆஸ்திரேலியத் தேனீக்களும் வர ஆரம்பித்தன. ஐரோப்பியத் தேனீக்கள் என்று நான் குறிப்பிடுவது நாம் தேனீ என்று பொதுவாகக் குறிப்பிடும் தேனீக்களைத்தான். 1822-ல்தான் இவை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காரணம்? வேறென்ன, தேன்தான். ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகளால் தேன் இல்லாமல் வாழ முடியவில்லை. அது மட்டுமல்ல, அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள், பேரிக்காய் உள்ளிட்ட பழமரங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற இத்தேனீக்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலியத் தேனீக்கள் தேன் சேகரிக்காதவை என்பதோடு புதிதாய் அறிமுகமான தாவரவினங்களுக்கு அவை பழகவில்லை என்பதும் காரணம்.
  
ஆஸ்திரேலியத் தேனீக்களில் ராணி, வேலைக்காரி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே இல்லத்தலைவிகள்தான். ஒவ்வொன்றும் தனித்து வாழ்பவை. தோதான இடம் பார்த்து (பெரும்பாலும் செங்கல் துவாரங்கள், மரத்துளைகள், களிமண் தரையிடுக்குகள் போன்றவை) முட்டையிடுவதும் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கான உணவைத் தேடி சேகரித்து வைப்பதும் பெண் தேனீக்களின் வேலை. இனப்பெருக்கம் முடிந்தவுடன் ஆண் தேனீக்களும் முட்டையிட்டு முடிந்தவுடன் பெண் தேனீக்களும் இறந்துவிடுகின்றன.

சூரியகாந்தி, தக்காளி, கத்தரி, வெள்ளரிப் பூக்களில்
நீலவரித்தேனீக்கள் (Blue banded bees)

நீலவரித்தேனீ (Blue banded bee) – காரணப்பெயர் என்பது பார்த்தாலே தெரியும். கருப்பும், நீலமும் வரிவரியாய் இதன் உடலில் காணப்படும். நீலமலர்கள்தான் பெருவிருப்பம் இத்தேனீக்களுக்கு. நீலமலர்கள் கிடைக்காத பட்சத்தில் பிற வண்ண மலர்களிடம் தேனெடுக்கும். இரவு நேரங்களில் ஆண் நீலவரித்தேனீக்கள் பல ஒன்றுகூடி மரக்கிளைகளிலோ, கம்பிகளிலோ தொங்கியபடி உறங்கும். பெண் தேனீக்கள் தனித்தனியாக இண்டு இடுக்குகளில் உறங்கும் நீலவரித்தேனீக்கள் buzz pollination எனப்படும் அதிர்வு மகரந்தச்சேர்க்கை முறையில் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன

தன்மகரந்தச்சேர்க்கை செய்யக்கூடிய சில பூக்களுக்கு காற்று லேசாக வீசினால் கூட போதும். சட்டென்று மகரந்தம் விடுபட்டு மகரந்தச்சேர்க்கை எளிதாய் நடைபெற்றுவிடும். ஆனால் சில பூக்களில் அவ்வளவு எளிதில் மகரந்தம் விடுபடுவதில்லை. இந்த தேனீக்கள் பூவைக் கால்களால் பற்றியபடி பலத்த அதிர்வுகளை உண்டாக்கி மகரந்தத்தாதுவை விடுவிக்கச் செய்கின்றன. ஆஸ்திரேலியாவின் உணவுப்பயிர் விளைச்சலில் சுமார் 30% நீலவரித்தேனீக்கள் மூலமாகவே நடைபெறுகிறது என்பதிலிருந்து இத்தேனீக்களின் முக்கியத்துவம் விளங்கும். 

வெட்டுப்பட்ட இலைகள்

அடுத்து இலைவெட்டித்தேனீ. தற்செயலாகத்தான் கவனித்தேன், மிளகாய்ச்செடியின் இலைகள் சிலவற்றின் ஓரத்தில் நகத்தால் கிள்ளி எடுத்தது போல அழகாய் அரைவட்ட வடிவ ஓட்டைகள். இப்படி அழகாய் அளவாய் வெட்டப்பட்டு இருந்தால் அது நிச்சயம் இலைவெட்டித் தேனீயின் வேலையாகத்தான் இருக்கும் என்று புரிந்தது. இன்னும் கையும் களவுமாகப் (படம்) பிடிக்கவில்லை என்றாலும் கானுயிர் ஆய்வாளர் திரு..ஜெகநாதன் அவர்களின் உயிரி தளத்தில் வாசித்திருந்த இலைவெட்டித் தேனீக்கள் குறித்த பதிவு உறுதிப்படுத்தியது.

என்னுடைய பால்யத்தில் இவற்றின் இலைக்கூடுகளை நிறையப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கதவு ஜன்னல் இவற்றின் நாதங்கித் துவாரங்களை அடைத்தபடி இருக்கும். வெளியில் அவசரமாக கிளம்பும் சமயம், தாழ் போடமுடியாமல் நாதங்கித் துவாரத்தை ஏதோ தடுக்கும். என்னடா என்று பார்த்தால் இந்த இலைக்கூடுகள் இருக்கும். நானும் தம்பியும் குச்சியால் தோண்டி வெளியில் போடுவோம். குழிவான தொன்னைகளை ஒன்றுக்குள் ஒன்றாய் சொருகிவைத்தது போல காய்ந்துபோன இலைகள் அடுக்கடுக்காய் சொருகியிருக்கும். இலைவெட்டித் தேனீக்கள் குறித்து அறியும் வரை அதுவும் ஒரு வகைக் குளவிக்கூடு என்றே நினைத்திருந்தேன்.


 இணையப்படம்

இலைவெட்டித் தேனீக்கள் இலைகளை வெட்டி எடுத்துப் போய் துவாரங்களில் சொருகி உள்ளே ஒரு முட்டையிடும்
. அதிலிருந்து வெளிவரும் லார்வாவுக்காக தேனும் மகரந்தமும் சேர்த்துவைத்து பிறிதொரு இலைத் துண்டத்தால் மூடும். (குளவிகளைப் போல இவை புழுக்களை உணவாக வைப்பதில்லை) அதன் மேலே மற்றொரு முட்டையிட்டு அதற்கும் உணவு வைத்து மூடும். இப்படி இடத்துக்குத் தகுந்தாற்போல எட்டு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடும். முடிவில் பல அடுக்கு இலைகளை வைத்து பசை அல்லது களிமண் உதவியோடு நன்றாக மூடிவிடும். முட்டைகளிலிருந்து பொரிந்துவரும் லார்வாக்கள் உள்ளே இருக்கும் உணவைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுவாகி பூக்கள் மலரும் வசந்தகாலத்தில் கூட்டையுடைத்து வெளியே வந்து வாழ்வைத் துவக்கும்.


இலைவெட்டித் தேனீக்கள் (Leaf cutter bees)

ஆஸ்திரேலியாவின் இலைவெட்டித்தேனீக்கள் பெரும்பாலும் தரைக்குள் சிறிய துவாரங்களில் கூடு கட்டி முட்டையிடுகின்றன. மற்ற ஆஸ்திரேலியத் தேனீக்களைப் போலவே இவையும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. நீலவரித்தேனீக்கள் போலவே இவற்றிலும் ஆண் தேனீக்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடனும் பெண் தேனீக்கள் முட்டையிட்டு முடிந்தவுடனும் மடிந்துவிடுகின்றன.

இலைவெட்டித் தேனீக்கள் பொதுவாக யாரையும் கொட்டுவதில்லை. கையால் பிடித்தால் அல்லது தவறுதலாக மிதித்துவிட்டால் கொட்டும். ஆனால் அது மற்ற தேனீக்கடி, குளவிக்கடி போல வலி அவ்வளவு கடுமையாக இருக்காதாம். அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Bee hotel -இணையப்படம்

ஆஸ்திரேலியத் தேனீக்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும், வரவை அதிகரிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை வீடுகளின் வெளிப்புறத்தில் செங்கல் இடுக்குகள், மண் தரை, மூங்கில் குழாய் துவாரங்கள் போன்ற இடங்களை முட்டையிட ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்கின்றன. அவ்வாறான இடங்கள் இல்லாத பட்சத்தில் bee hotel எனப்படும் வெவ்வேறு அளவிலான துளைகளோடு கூடிய மூங்கில் குழாய்கள் கொண்ட அமைப்பை தோட்டங்களில் பொருத்தி வசதி செய்து கொடுக்கலாம், திண்ணையும் இரவாணமும் இல்லாத வீடுகளைக் கட்டி சிட்டுக்குருவிகளைக் கண்ணாடி ஜன்னலில் மோதவிட்டு சாகடித்துக் கொண்டிருந்த நாம், தற்போது விழிப்புணர்வு பெற்று அட்டைப் பெட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டு அவற்றுக்குக் கூடமைக்கும் வசதி செய்து தருகிறோமே அது போல. தனித்து வாழும் தன்மையுள்ள ஆஸ்திரேலியத் தேனீக்கள் பலவற்றுக்கும் கூடுகட்டி இனம் பெருக்க இந்த bee hotel பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

(பிரதாபங்கள் தொடரும்)

5 August 2019

பூனைமூஞ்சி தக்காளி


தோட்டத்துப் பிரதாபம் - 5
இதையெல்லாம் தக்காளின்னு சொன்னால் அந்த தக்காளியே நம்பாது என்று பிள்ளைகள் கேலி செய்கிறார்கள். ஆனால் நீங்க நம்பிதான் ஆகணும். இது ஒரு வகையான நாட்டுத்தக்காளி இனம். பெயர் Costoluto Fiorentino. என்னடா இது எதுவும் ஒரு வடிவத்தில் இல்லாமல் இஷ்டத்துக்கு இருக்கேன்னு நினைக்கிறீங்களா? ஆரம்பத்தில் நானும் இவற்றின் வடிவத்தைப் பார்த்து ஏதோ நோய் தாக்கியதால்தான் இப்படி காய்க்கிறதென எண்ணி பயந்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது இது ஒரு குறைபாடு என்பது. இந்த மாதிரியான குறைபாடுள்ள தக்காளிகளுக்கு பூனைமூஞ்சி தக்காளி (cat-faced tomatoes) என்று பெயர். வேடிக்கையாக இருக்கிறதல்லவா
எனக்கென்னவோ இதற்கு நாய்மூஞ்சி தக்காளி என்று பெயர் வைக்கலாம் போலத் தோன்றுகிறது. உற்றுப்பார்த்தால் puggy மாதிரியே இல்லை? 😂

இந்தக் குறைபாடு நாட்டுத்தக்காளி இனத்தில்தான் காணப்படுமாம். அதுவும் பெரும்பாலும் முதல் விளைச்சலின்போது நேர்வதுண்டாம். சரிதான். அப்போதுதானே போதுமான அனுபவ அறிவில்லாமல் ஏகப்பட்ட ஆர்வக்கோளாறுடன் எக்கச்சக்கமாக என்னென்னவோ செய்துவைப்போம்.


வடிவான தக்காளிகள்

பூனைமூஞ்சி தக்காளிகள்

என் தோட்டத்துத் தக்காளிகளில் சரிபாதி பூனைமூஞ்சி தக்காளிகள்தான். தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்பது போல இந்த பூனைமூஞ்சி தக்காளிகளின் உருவத்தில் குறைபாடு இருந்தாலும் சுவையில் ஒரு குறையும் இல்லை. இம்மாதிரியான தக்காளிகள் சந்தைக்குப் போகும் வாய்ப்புக்கே வழியில்லை. போனாலும் நிச்சயம் செல்லுபடியாகாது. எப்போதும் உருவத்துக்குதானே மதிப்பு அதிகம்.
இந்த பூனைமூஞ்சிகள் ஏன் உருவாகின்றன என்று பார்த்தால்அடுக்கடுக்கானக் காரணங்களை அடுக்குகிறார்கள் வல்லுநர்கள். குழந்தையின் குறைபாடு கருவிலிருந்தே உருவாவது போல பழத்தின் குறைபாடு பூவிலிருந்தே துவங்குகிறதாம்.
பூக்கள் உருவாகும்போது ஏற்படும் திடீர் காலநிலை மாற்றம், அதீத வெப்பம், அதீத குளிர், அடர்மழை, அளவுக்கதிகமான உரம், மண்ணின் அமிலத்தன்மை, மகரந்தச்சேர்க்கை, கிருமித்தொற்று என பல காரணிகள் தக்காளியின் வடிவத்தோடு விளையாடக்கூடியவையாம். இவற்றுள் ஏதாவது ஒன்று என்றாலும் தக்காளிகள் இப்படி விநோத வடிவத்தில் காய்க்குமாம்.   
சாதாரணமாக தக்காளிப்பூக்களுக்கு அல்லிவட்டமும் (sepals) புல்லிவட்டமும் (petals)  ஐந்து அல்லது ஆறு என்ற கணக்கில்தான் பார்த்திருக்கிறேன். இந்தச் செடிகளிலோ பத்துப் பன்னிரண்டு உள்ளன. இந்த வகை நாட்டுத்தக்காளியினத்தின் பூக்கள் இப்படிதான் இருக்குமாம். புதிதாய் அறிந்துகொண்டேன்.
இந்த தக்காளியைப் பாருங்களேன். ஒட்டிப் பிறந்த இரட்டையர் மாதிரி இருக்கிறதல்லவா? மெதுவாக சர்ஜரி செய்து இரண்டையும் பிரித்தேன். ஒரே கருவில் இரண்டு குழந்தைகள் போல ஒரே பூவில் இரண்டு தக்காளிகள்.


பொதுவாக தக்காளிப்பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கை மூலமே காயாகக்கூடியவை. காற்றின் துணை போதும் அவை கருவுற. ஆனால் எங்கள் தோட்டத்தில் தேனீக்களுக்கா பஞ்சம்
தேனெடுக்க வரும் தேனீக்கள் பதிலுபகாரமாக இங்கும் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்திப்போக தக்காளிச்செடிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஏராளமாய் காய்பிடித்து என்னை மகிழ்வெள்ளத்தில் ஆழ்த்தின.
அதெல்லாம் இருக்கட்டும், தக்காளி பழுப்பதற்குள் என்ன அவசரம்? ஏன் எல்லாவற்றையும் பச்சையாகவே பறித்துவைத்திருக்கிறாய் என்று கேட்கலாம். மூன்று காரணங்கள். முதலாவது சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் செடிகள் எல்லாம் சாய்ந்தும் ஒடிந்தும் தரையில் விழுந்துவிட்டன. இவ்வளவுக்கும் நிறைய முட்டுக்கொடுத்திருந்தேன். பாரம் அதிகம் என்பதால்  தாங்கவில்லை

இரண்டாவது slugs தொல்லை. ஒரு காயையும் பழுக்கும்வரை விட்டுவைப்பதில்லை. அதனால் வேறு வழியில்லாமல் பறிக்கவேண்டியதாயிற்று. காய்கள் எல்லாம் மெல்ல மெல்ல பழுத்துவருகின்றன. பழுக்கப் பழுக்க சட்னியாகிக் கொண்டிருக்கின்றன.
மூன்றாவது காரணம் ரொம்ப முக்கியமானது. எனக்கு தக்காளிக்காய்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். கூட்டு, சாம்பார், குழம்பு என்று எந்த வடிவத்தில் இருந்தாலும் (வடிவமெல்லாம் குழைந்துபோய் இருந்தாலும்) பிடிக்கும்

தக்காளிக்காய் கூட்டு

என் அம்மா எனக்காகவே மீன் குழம்பில் தக்காளிக்காய்களை சேர்ப்பாங்க. குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போதே ஓடிப்போய் செடியிலிருந்து இரண்டு மூன்று தக்காளிக்காய் பறித்துவந்து நறுக்கி குழம்பில் போடுவாங்க. நானோ தக்காளிக்காய்க்காவே மீன் வாங்கிவந்து மீன்குழம்பு வைக்கிறேன். 😂😂இதுவரை காய்த்த தக்காளிகளின் எடை சுமார் பன்னிரண்டு கிலோ இருக்கலாம். மூன்று செடிகளுக்கு இது ரொம்பவே அதிகம். தக்காளிச்செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்த முறை செயல்படுத்திப் பார்ப்போம். அடுத்த முறையாவது பூனை மூஞ்சிகள் உருவாகாமல் எல்லா தக்காளிகளுமே நல்ல தக்காளிகளாகக் காய்க்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.


கொசுறு - கீழே இருப்பது என் தோட்ட அனுபவத்தைக் கேலி செய்து மகள் வாட்சப்பில் அனுப்பியது. 100% உண்மை என்பதால் சத்தமில்லாமல் சிரித்துக் கொள்கிறேன். 😄😄


(பிரதாபங்கள் தொடரும்)

முந்தைய பிரதாபங்கள்