20 September 2018

இலைகளில் இழையும் கலைகள்

இலை என்பது தாவரங்களின்
இயற்கை அழகு ஒப்பனையாகும்.
இலை என்பது சூரிய ஒளியில்
சக்தி சமைக்கும் கூடமாகும்.
இலை என்பது உணவும் நீரும்
சேமித்துவைக்கும் கிடங்காகும்.
இலை என்பது தாவரங்களின்
இருப்பை உணர்த்தும் இயல்பாகும்..
மரங்களின் நிர்வாணம் மனத்துக்கு உவப்பல்ல..
பச்சையோ மஞ்சளோ சிவப்போ பழுப்போ
இலைக்கூட்டமே 
உயிர்ப்பெனும் உணர்வுதரும்.
உளம் புரளும் உற்சாகம் தரும். 
&&&&

நான் ரசித்த சில இலையழகுகள் இங்கே நீங்களும் ரசிக்க...  



படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

படம் 8

படம் 9

படம் 10

படம் 11

படம் 12

படம் 13

படம் 14

படம் 15

படம் 16

படம் 17

படம் 18

படம் 19

படம் 20

படம் 21

படம் 22


ரசித்த அனைவருக்கும் நன்றி. 

14 September 2018

பூமராங் இனி தேவையில்லை




பூமராங் இனி தேவையில்லை
ஈட்டிகட்கும் இனி வேலையில்லை
நகருக்குள் மதுவருந்திக் களிக்கும்
நாகரிக மாந்தரானோம் நாம்..

பாரம்பரிய நடனங்கள் மறந்தோம்
பன்னெடுங் கொண்டாட்டம் இழந்தோம்
கைப்பணம் கொடுத்துத் திரையரங்கினில்
கேளிக்கைப் படங்கள் ரசிக்கின்றோம்.

வேட்டையாடிக் கூட்டத்தோடு
பங்கிட்டுண்ணும் பழக்கம் துறந்தோம்
ஓடாய்த் தேய்ந்து உழைத்த காசில்
கடைப்பண்டம் உண்டு காலம் கழிக்கிறோம்

முன்னிருந்த வாழ்வு மறந்தோம்
முதலாளிகளைத் தேடி சோர்கிறோம்.
வாழ்க்கை நுட்பம் அறியும்பொருட்டு
தேசாந்திரம் போனோம் அன்று.
பணியும் பணமும் தேடும் பொருட்டு
பேருந்து ரயிலேறி அலைகிறோம் இன்று.

ஆடையற்றிருந்த காலத்திலும்
அவமானம் குறித்து அறியாதிருந்தோம்
அப்பழுக்கில்லா நிர்வாணம் மறைக்க
ஆடைகள் அணிந்து அழுக்காகிப் போனோம்.

குச்சுக்குடிசைகள் இனி தேவையில்லை.
குடியிருக்க அடுக்குமாடி இருக்கையிலே.
அசலும் வட்டியும் கட்டிமுடிக்க
ஆண்டிருபது ஆகலாம், அதனாலென்ன?

கற்கோடரியைக் கைவிட்டு
இரும்புக்கோடரியைக் கையிலெடு
அடிமை போல உழைத்துழைத்து
ஆண்டானுக்கு உணவு கொடு.

வெள்ளை மக்கள் நக்கல் செய்யும்
கொள்ளிக்கோல்கள் இனியும் வேண்டாம்.
இதோ.. வந்துவிட்டது மின்சாரம்
இல்லை அதிலும் நன்மையேதும்.

தொலைந்துபோன தொன்மப்பிசாசு
புனியாப் என்னும் நீர்வாழ் கொடூரம்
வெள்ளைமனிதனாய் மீண்டுவந்து
வேறுபெயர் சொல்லிக்கொள்கிறது.

நவீனம் காட்டும் ஓவியம் யாவும்
நச்சென்று ஏதும் சொல்வதுண்டோ?
எங்கள் குகையோவியம் சுட்டும்
கூற்றுக்குக் குறையேதுமுண்டோ?

கறுப்புமனிதனுக்கு மிருக வேட்டை,
வெள்ளைமனிதனுக்கு பண வேட்டை.

தகவற்கட்டைகள் இனி தேவையில்லை
தூது செல்வோர்க்கினி வேலையில்லை..
தொலைக்காட்சிகள் இல்லா வீடில்லை..
தொடர் விளம்பரங்களுக்கு முடிவில்லை.

குத்தீட்டிகள் இனி வேண்டாம்
குண்டுக்கழியும் இனி வேண்டாம்
அணுகுண்டு கைக்கொண்டோம்..
அகிலத்தை அழித்திடுவோம்.

---------------------------

(ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் வரவால் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த ஆதங்கக் கவிதை)

Oodgeroo Noonuccal


எழுதியவர் திருமதி ஓட்ஜெரூ நூநுக்கல் (Oodgeroo Noonuccal) (1920 – 1993)

1920-ல் குவீன்ஸ்லாந்தைச் சேர்ந்த நார்த் ஸ்ட்ராட்ப்ரோக் தீவில் நூநுக்கல் பூர்வகுடி இனத்தில் பிறந்த ஓட்ஜெரூ நூநுக்கல் அற்புதமான கவிஞரும் சமூக அரசியல் போராளியும் ஆவார். பூர்வகுடி மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அரசின் சட்டதிட்டங்களை மாற்றக்கோரும் போராட்டங்களில் பெரும்பங்கு வகித்தவர். வெள்ளையர்கள் வரவால் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட இழப்புகளைக் கவிதைகளாக்கியவர். ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களில் முதன்முதலில் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டவர் என்ற பெருமைக்குரியவர். ஏராளமான விருதுகளையும் கௌரவ முனைவர் பட்டங்களையும் பெற்றவர். Kathleen Jean Mary Ruska என்பது இவரது இயற்பெயர். Bruce Walker என்பவரை மணம் முடித்ததால் கேத் வாக்கர் என்று அழைக்கப்பட்டார். 1988-ல் ஓட்ஜெரூ நூநுக்கல் என்ற பூர்வகுடி அடையாளப் பெயரை சூட்டிக்கொண்டார். 1993-ல் தனது 72-வது வயதில் இயற்கை எய்தினார்

தமிழாக்கம் கீதா மதிவாணன்

(படங்கள் இணையத்திலிருந்து...)

9 September 2018

ஆசிகள் பலவிதம்





அன்பின்அக்கறையின்ஆதுரத்தின் அழகான வெளிப்பாடுதான் ஆசிகளும் வாழ்த்துகளும். ஆசி என்பது மூத்தோர் இளையோர்க்கு சொல்லும் நல்வாக்கு. நிறைந்த மனத்தோடு நல்கப்படும் ஆசிகளுக்கு உண்மையாகவே ஆற்றலுண்டு என்று நம்புகிறவள் நான். ழமொழிகள் தேடலின்போது, பாரம்பரியமிக்கப் பண்டைய அயர்லாந்து மக்களின் ஆசிகள் மற்றும் வாழ்த்துகள் பற்றி அறியும் வாய்ப்பு கிட்டியது. பல வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருக்கவே, நான் ரசித்தவற்றை தமிழாக்கி இங்கு பகிர்கிறேன், நீங்களும் சுவைத்து ரசிக்க.  

  • அயர்லாந்தின் தேவதைகள் உன் வீட்டு வாயிலில் இறங்கி இளைப்பாறட்டும்.

  •  அயர்லாந்தின் அதிர்ஷ்டம் உன்னை மகிழ்வின் உச்சங்களுக்கு அழைத்துச்செல்லட்டும். நீ செல்லும் சாலையெல்லாம் பச்சை விளக்குகள் ஒளிர்ந்திருக்கட்டும்.

  • நரகத்தின் பாதையில் புற்கள் நெடியதாக வளரட்டும்.

  • கடவுள் உன்னை உள்ளங்கையில் வைத்திருக்கட்டும். அதை என்றைக்கும் இறுக்கி மூடாதிருக்கட்டும்.

  • கடவுள் உன்மேல் பிரியமாயிருப்பாராக. அதற்காக விரைந்து உன்னைத் தன்னிடம் அழைத்துக்கொள்ளாதிருப்பாராக.

  •   நீ இறந்துவிட்டாய் என்பதை சாத்தான்கள் அறியுமுன்பு அரைமணி நேரமாவது சொர்க்கத்தில் இருப்பாயாக.

  • உன் இடர்கள் எல்லாம் என் பாட்டியின் பற்களைப் போல குறைவாகவும் பெரும் இடைவெளியோடும் இருக்கட்டும்.

  • அயர்லாந்தின் எதிரிகளுக்கு ஒருபோதும் நண்பர்கள் கிடைக்காதிருக்கட்டும்.

  • உனது 95-வது வயதில் பொறாமை பிடித்த உன் கணவனால் சுட்டுக் கொல்லப்படுவதாய் உன் இறப்பு அமையட்டும்.

  • உன்னுடைய சவப்பெட்டி ஆறு அழகிய வெள்ளிக் கைப்பிடிகள் கொண்டதாக இருக்கட்டும். அதை ஆறு அழகிய இளம்பெண்கள் சுமந்து நடக்கட்டும். அந்த சவப்பெட்டி, நாளை நான் நடவிருக்கும் விதையிலிருந்து வளர்ந்த, நூறாண்டு வயதுடைய மரத்திலிருந்து செய்யப்பட்டதாக இருக்கட்டும்.

  • உங்கள் மனைவிகளும் காதலிகளும் ஒருபோதும் சந்திக்காதிருக்கட்டும்.

  • பூக்கள் மலர்கையில் நீ தும்மாதிருப்பாயாகஅரவணைக்க ஓர் அன்புள்ளம் எப்போதும் பெற்றிருப்பாயாக.

  • எதிர்காலத்தில் வரக்கூடிய மிகத் துயரமான நாள், கடந்தகாலத்தின் மிக மகிழ்வான நாளை விடவும் மோசமானதாக இல்லாதிருக்கட்டும்.

  • கடவுள் உன்னை கருங்கல் சாலையில் நடக்கச் செய்வாராயின், அவரே உனக்கு நல்ல உறுதியான பாதணிகளைத் தந்தருள்வாராக.

  • உனது வலது கரம் எப்போதுமே நட்புக்காக மட்டுமே நீளட்டும், யாசிப்புக்காய் ஒருபோதும் நீளாதிருக்கட்டும்.

  • நீ நடக்கும் பாதையெல்லாம் பசும்புல் தழைத்திருக்கட்டும். உனக்கு மேலிருக்கும் வானம் நீலமாயிருக்கட்டும். உன்னைச் சுற்றியுள்ள மகிழ்வுகள் அப்பழுக்கற்று இருக்கட்டும். உன்னை நேசிக்கும் இதயங்கள் உண்மையாயிருக்கட்டும்.

  • காற்றுக்குத் தடுப்புச்சுவர்களும், மழைக்குக் கூரையும், கணப்பினருகே தேநீரும், உற்சாகப்படுத்த மகிழ்தருணங்களும், நீ நேசிக்கும் நெஞ்சங்கள் உனதருகிலும் எப்போதும் இருப்பதாக.

  •  உன் அனைத்து நண்பர்களையும் கொள்ளமுடியாத அளவுக்கு உன் வீடு மிகச்சிறியதாக இருக்கட்டும்.

  • நேசிக்க ஒருவர், செய்ய ஒரு வேலை, கொஞ்சம் சூரிய ஒளி, கொஞ்சம் மகிழ்ச்சி, பாதுகாவலாயொரு தேவதை - இவை யாவும் உனக்கமைவதாக.

  • உன் அண்டைவீட்டார் உன்னோடு இணக்கமாயிருக்கட்டும், துயரங்கள் உன்னை அலட்சியப்படுத்தட்டும், தேவதைகள் உன்னைக் காத்தருளட்டும், சொர்க்கம் உன்னை ஏற்றுக்கொள்ளட்டும்.

  • நாம் அன்பு செலுத்துபவர்கள் நம்மிடம் அன்பு செலுத்தட்டும். நம்மிடம் அன்பு செலுத்தாதவர்களின் இதயங்களை கடவுள் திருப்பட்டும். இதயங்களைத் திருப்ப முடியாவிடில் அவர்களது கணுக்கால்களைத் திருப்பட்டும். கெந்தும் நடை மூலம் அவர்களை நம்மால் இனங்காண இயலும்.

  • எப்போதும், துயரம் மிகுந்த சூழலிலும் கூட, வானம்பாடியின் இனிய கானம் உனக்குக் கேட்டிருக்கட்டும்.

  • நீ விரும்பும் வரை வாழ்ந்திரு. நீ வாழும் வரை (சாவை) விரும்பாதிரு.

  • நம்முடைய நட்பின் கீல்கள் என்றென்றும் துருப்பிடிக்காதிருக்கட்டும்.

  • உன் கோப்பை எப்போதும் நிறைந்திருக்கட்டும், உன் வீட்டுக் கூரை எப்போதும் உறுதியாயிருக்கட்டும்.

  • உன் உள்ளங்கால்கள் வேர்க்காதிருக்கட்டும், உன் அண்டைவீட்டார் உனக்கு விருந்தளிக்கட்டும்


எவ்வளவு சுவாரசியமான வாழ்த்துகளும் ஆசிகளும். ஜாங்கிரி போல சுற்றிச்சுற்றி சொன்னாலும் உள்ளிருக்கும் இனிப்பின் சுவை போல உள்ளிருக்கும் ஒரே பொருள்… நீ நல்லா இரு என்பதுதான்.

நமக்கோ சொற்சிக்கனம். ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்’ என்ற ஒற்றை வரியில் அடங்கிவிடுகிறது அத்தனை ஆசிகளும். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இனிமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் என ஒருவனது மகிழ்வான வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் கிடைக்குமாறு வாழ்த்தப்படும் வாழ்த்தை விடவும் வேறென்ன பெரிய வாழ்த்து இருக்கப்போகிறது? 

திருமணமான பெண், ‘தீர்க்க சுமங்கலியாக இரு’ என்று வாழ்த்தப்படுகிறாள். தீர்க்கம் என்றால் நீண்ட என்று பொருள். இவ்வாழ்த்தின் மூலம் அவளும் அவள் கணவனும் சேர்த்தே வாழ்த்தப்படுகிறார்கள். ஆத்திரமோ, எரிச்சலோ ஆதங்கமோ கொள்ளும் வேளையிலும். ‘நல்லா இருங்க’ என்று சலிப்போடு வெளிப்படும் வாழ்த்தும் அடையாளங்காட்டும், அன்பின் வழி பிறழாத சில அற்புத மனங்களை.