வயதிலும் அனுபவத்திலும்
மூத்தவரான நம் பதிவுலகத் தோழமையான ஜிஎம் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் உறவுகள் சார்ந்த
பதிவொன்றுக்கு தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய அனுபவங்களும் சிந்தனைகளும்
என்னை மிகவும் கவர்பவை. அவருடைய நிதானமான அழுத்தமான எண்ணப்பகிர்வுகளும், கருத்துக்களை
மிகத்துல்லியமாக எழுத்தாக்கும் திறமும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை.
உறவுகள் என்ற தலைப்பில்
சமீபத்தில் அவர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாக சில பெண் பதிவர்களின் கருத்துகளைக் கேட்டு
எழுதியுள்ளார். அப்பெண் பதிவர்களுள் நானும் ஒருத்தி என்பதறிந்து வியந்தேன். ஜிஎம்பி
ஐயா அவர்கள் எங்களை பெண் பதிவர்களின் பிரதிநிதிகளாகக் கருத்துக்களைக் கூறுவார்கள் என்று
எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் பதிவர்களின் மட்டுமல்ல பெண்களின் பிரதிநிதியாகவும்
இந்த விஷயத்தில் கருத்தளிக்க இயலுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இதுபோன்ற சிந்தனைகளிலெல்லாம்
இதுவரை நான் ஈடுபட்டதே இல்லை. வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு வாழுந்தன்மை உடையவள்
நான்.
என்னைப் பொறுத்தவரை
கணவன் மனைவியாகட்டும், பெற்றோர் பிள்ளைகளாகட்டும், உடன்பிறந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும்,
மற்ற உறவுகளாகட்டும்… எந்த உறவுநிலையையும் இது இப்படிதான் என்ற வரையறைக்குள் கொண்டுவருவது
அசாத்தியம். உறவுகள் நீட்டிப்பதும் வெட்டுப்படுவதும் அவரவர் வளர்ந்த விதம், வாழும்
சூழல், தேவைகள், சூழ்ந்துள்ள மற்ற உறவுகளின் இயல்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.
ஒரு குடும்பக்
கட்டமைப்பில் பெண் ஆணை ஆட்டுவிப்பதோ ஆண் பெண்ணை அடிமைப்படுத்துவதோ அவரவர் தனிப்பட்ட
குணநலன் சார்ந்த நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர பொதுவான கருத்தாக கொள்ளமுடியவில்லை.
பெரும்பான்மை என்று சொன்னால் பல இடங்களில் பெண்கள் ஆணைச் சார்ந்து வாழும் நிலையிலும்
சரி, சாராத நிலையிலும் சரி.. ஏதோ ஒரு விதத்தில் அல்லல்படுவதையும் அடிமைப்படுவதையும்
அறிந்தேயிருக்கிறோம். உரிய மரியாதை கிட்டாமல் உதாசீனப்படுத்தப் படுவதோடு இன்னும் சில
பெண்கள் வெளியில் சொல்லமுடியாத வேதனையை அனுபவிப்பதுமான பல வாழ்க்கை அனுபவங்களை கண்டும்
கேட்டும் அறிந்திருக்கிறோம். சில இடங்களில் நிலைமை தலைகீழாக இருப்பதும் நமக்குத் தெரியும்.
பெற்ற தாயுடனும் பேசும் உரிமை மறுக்கப்பட்டு வாழும் ஆண்களின் மனக்குமுறலும் வேதனையும்
வெளிப்படக் கேட்டு வருந்தியிருக்கிறோம். அதனால் உறவுகள் தொடர்பறுந்து போவதன் ஒட்டுமொத்தப்
பழியைத் தூக்கி பெண்களின் மீதோ அல்லது ஆண்களின் மீதோ சுமத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.
உறவுகள் விட்டுப்போவதற்கு
மாறிவரும் வாழ்க்கைச்சூழல் ஒரு முக்கியக் காரணம். அவசர யுகம் எந்திரமயம், உலகமயமாக்கல்
என்றெல்லாம் மாறிவரும் சூழலில் எந்த உறவையும் தொடர்பெல்லைக்குள் தக்கவைத்துக்கொள்ள
நம்மால் முடியவில்லை. நின்று நிதானித்துப் பேசவும் நமக்கு நேரமில்லை… அல்லது நேரமில்லாதது
போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சோம்பேறிகளாகிக் கொண்டு வருகிறோம்.
பட்டனை அழுத்தவும் அலுப்புப் பட்டு தொடுதிரைகளைத் தொட்டுத் தடவி காரியமாற்றிக் கொண்டிருக்கும்
காலமிது.
நேரமில்லை என்பது
ஒரு சாக்கு. நேரமில்லாமலா நெடுந்தொடர்களிலும் முகநூலிலும் இணையத்திலும் எங்கோ ஒரு முகந்தெரியாத
நண்பருடன் அரட்டை அடிப்பதிலும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். அவசரம் அவசரம்
என்று எதிலும் நிற்க நேரமில்லாமல் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் நாம்தான் சினிமா,
அரசியல், மதம் சார்ந்த பல வெட்டி சர்ச்சைகளில் இறங்கி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒற்றைப் பிள்ளை
போதுமென்று முடிவெடுத்த நாம்தான் அந்த ஒற்றைப் பிள்ளைக்கும் ஓய்வுப்பொழுதை ஒதுக்காமல்
வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து ஒண்டியாய் விளையாட விட்டிருக்கிறோம். குழந்தையிலிருந்தே
தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளைக்கு குடும்பத்தின் அருமை தெரியுமா? உறவுகளின் உன்னதம் புரியுமா?
நாமோ இன்றைய பொழுதுகளை இழந்துகொண்டு நாளைப் பொழுதுகளுக்காய் சேமித்தபடி நாட்களைக் கடத்திக்
கொண்டிருக்கிறோம்.
பெரும்பாலும் தேவைகளின்
நிமித்தமே உறவுகளின் தேவையும் தீர்மானிக்கப்படுகிறது. அது கணவன் மனைவி உறவானாலும் சரி
மற்ற உறவுகளானாலும் சரி. தேவை எது என்பதும் ஆளுக்காள் மாறுகிறது. சிலருக்கு பொருளாதாரம்..
சிலருக்கு கௌரவம்.. சிலருக்கு ஆள்மாகாணம்.. சிலருக்கு வேறு ஏதாவது.. வெகு சிலருக்கே
அன்பின் அடிப்படையில் உறவுகளின் தேவை தேவைப்படுகிறது.
குடும்ப அமைப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைந்துகொண்டு வரும் இக்காலத்தில் திருமணத்தின் மீதான நம்பிக்கையும்
மதிப்பிழந்துகொண்டு வருவது உண்மை. இப்படியானதொரு நிலையில் கணவன் மனைவி குழந்தை என்ற
முக்கோணத்தின் உள் நுழைய தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தப்பா சித்தி உறவுகளுக்கு அனுமதி
மறுக்கப்படுகிறது. அது அம்மா வழியா அப்பா வழியா என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்தமாகவே
உறவுகள் ஒதுக்கித் தள்ளப்படுவது நிதர்சனம்.
புகுந்த வீடு பிறந்த வீடு என்ற பேதம் பாராமல் அனைத்து உறவுகளையும் அனுசரித்தும் அன்பு செலுத்தியும் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதம் பற்றி நாம் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஒருதலைப் பட்சமான உறவுப்பேணலில்தான் உரசல்களும் மனக்கசப்புகளும் உண்டாகின்றன.
கூட்டுக்குடும்பங்களின்
அருமை பற்றி ஆதங்கித்துக்கொண்டும், பெற்றோர் வயதான காலத்தில் முதியோர் இல்லங்களுக்கு
அனுப்பப்படும் அவலம் குறித்து விவாதித்துக் கொண்டுமிருக்கும் கடைசி தலைமுறை நாமாகத்தான்
இருப்போம். உறவுகளின் அருமை பெருமை அறிந்த காரணத்தாலேதான் இன்னமும் அவற்றைப் பற்றிய
நம் ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
வளரும் தலைமுறைக்கு
அண்ணன் அக்கா தம்பி தங்கை போன்ற எந்த உறவுகளோடும் வளரும் வாய்ப்பு கொடுக்கப்படா நிலையில்
அதற்கடுத்த தலைமுறையில் அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா போன்ற உறவுகளைப்
பற்றியும் எந்தக் குழந்தைக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. அண்ணன் தம்பிகளுக்குள்
சொத்துத் தகராறோ.. அக்கா தங்கைகளுக்கு சீர் செய்வதில் சிரமமோ… தாய்மாமனை சபையில் முன்னிறுத்தவில்லை
என்ற சங்கடங்களோ எதுவுமே நேரப்போவதில்லை… ஒன்றே ஒன்றுதான்.. பெற்றவர்களை முதுமைக் காலத்தில்
பேணுவது குறித்தான சிரமம் ஒன்றுதான் பிரதானமாகப் போகிறது.
பெற்ற ஒற்றைப்
பிள்ளைக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் சென்ற முறை நான் விடுப்பெடுத்தேன் இந்த முறை
நீ விடுப்பெடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தப்படி தாயும் தந்தையும் விடுப்பெடுத்து குழந்தை
வளர்க்கும் சூழலில் பெற்றவர்களைப் பேணுவதும் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில்
விடுப்பெடுப்பதும் பிரதான பிரச்சனையாகப் போவதில் வியப்பில்லை.
போகப்போக மேலை
நாடுகளைப் போல இங்கும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கென்று தனிக்குடும்பம் உருவாகிவிட்ட
பிறகு அவர்களை விட்டு ஒதுங்கி வாழ தங்களை மனத்தளவிலும் பொருளாதார அளவிலும் தயார்படுத்திக்
கொள்ளும் சூழல் விரைவில் உருவாகும்.
காலமாற்றத்தால்
ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்றவை புழக்கத்திலிருந்து விடுபட்டு கிரைண்டர் மிக்ஸி என உருமாற்றம்
பெற்றது போல் உறவுகளும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இப்போது எந்த
உறவின் திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னதாக… ஒரு வாரம் வேண்டாம் இரண்டு நாட்கள் முன்னதாகப்
போகிறோம்? நேராக மண்டபத்துக்குப் போகிறோம்.. வீடியோவில் நம் வருகையைப் பதிவு செய்கிறோம்.
மொய் கவரைக் கொடுக்கிறோம். விருந்துண்கிறோம். விடைபெறுகிறோம். அந்த அளவில்தான் உள்ளது
தற்போது நமக்கு உறவுகளுடனான பிணைப்பு. இனிவருங்காலத்தில் அதுவும் விடுபட்டுப்போகும்
வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு காலமாற்றம்
அல்லாது யாரை குறை சொல்ல முடியும்? ஒற்றையாய் வளரும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்தல்
பற்றியோ பகிர்தல் பற்றியோ என்ன தெரிந்திருக்கப் போகிறது? திருமணமானவுடன் கணவன் மனைவிக்குள்ளே
கூட அந்த விட்டுக்கொடுத்தலும் பகிர்தலும் பிரச்சனைக்குரியவைகளாக மாறுகின்றன. அவர்கள்
இருவருக்குள்ளும் பரஸ்பர புரிதல் உருவாகாமல் பல திருமணங்கள் ஆரம்ப கட்டத்திலேயே விவாகரத்துக்
கோரி வழக்குமன்றங்களின் வாயில்களில் காத்திருக்கின்றன. இந்த நிலையில் மற்ற உறவுகளோடு
அவர்களுக்கு எப்படி பிணைப்பு உண்டாகும்?
ஆகவே இன்னும் ஓரிரு தலைமுறையோடு ஒழியப்போகும் உறவுச்சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் காலமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நடைமுறை வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று நடப்பதே இப்போதைக்கு நம்மால் இயன்றது என்பேன்.
யாரும், யாரையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை, நேரமும் இல்லை!. அவசர யுகம்!
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteமிக அருமையான கருத்துக்கள்! கால மாற்றம் உறவுகளையும் மாற்றி இருக்கிறது என்பது ஒத்துக்கொள்ளக் கூடிய கருத்துதான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteமிக அழகான அலசல். அழுத்தமான கருத்துக்கள். வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் வெகு இயல்பாகவும் எடுத்துச்சொல்லியுள்ள பாணி மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Deleteநடை முறைவாழ்க்கையை அப்படியே நிதர்சனமாய் விளக்கியுள்ளீர்கள். காலமாற்றம் தான். ஆழ்ந்து நோக்கிய பார்வை. வாழ்த்துக்கள். தம.1
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்.
Deleteஅவசர உலகம் வேறொன்றும் சொல்வதற்கில்லை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.
Delete//அது அம்மா வழியா அப்பா வழியா என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்தமாகவே உறவுகள் ஒதுக்கித் தள்ளப்படுவது நிதர்சனம்.//
ReplyDeleteஉண்மை. எல்லாமே வியாபாரமாகி விட்டது. நல்ல அலசல். என்றாலும் என்னால் வருங்காலத் தலைமுறை குறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. நடைமுறை வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று நடக்கத் தான் செய்கிறோம். ஆனாலும் வருங்காலத்துக்கு நாம் வைத்து விட்டுப் போகும் சொத்து இதுதானா என்னும் எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. :(
உண்மைதான் மேடம். சிலர் சொல்வார்கள் நான் மாமியாரிடம் அவ்வளவு கஷ்டப்பட்டேன். என் மருமகள் சொகுசாக இருக்கிறாள் என்று. அப்படியான ஆதங்கம் கூட உறவில் சிக்கலை உண்டாக்கும் அல்லவா? எதையும் காலத்தோடு ஏற்றுக்கொண்டால் ஆதங்கம் குறையும் என்ற கருத்தில்தான் எழுதினேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
Deleteஎன் பதிவில் தொலைந்து கொண்டு போகும் உறவுகளைப் பெண்கள் நிலை நிறுத்தலாம் என்னும் கருத்தை மறைமுகமாக வைத்தேன் பலரிடம் கேட்டுப் பார்த்தால் ஒரு நிதரிசன உண்மை விளங்கும் அறிந்த உறவுகளில் தாய் வழி உறவே அதிகம் நினைவில் இருக்கும். இதற்கும் தலையணை மந்திரம் முந்தானையில் முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையும் மறைமுகக் காரணங்களாக இருக்க வாய்ப்புண்டா. தெரிய வில்லை. நடைமுறை வாழ்க்கை நிலைகள் பிளவுபடும் குடும்ப உறவுகளுக்குக் காரணமானாலும் அதைச் சீர்செய்ய யாரால் இயலும் என்னும்கேள்வியும் எழுகிறது.சில பல காரணங்கள் தெரிவதைச் சொல்ல பெண்களுக்குத் தைரியம் இருக்கிறதா இல்லை இருக்கும் நிலையை மாத்திரம் சொல்லிக் காரண காரியங்களை அவரவர் சௌகரியத்துக்கு விட்டு விடுவதா எது சரி...? .
ReplyDelete//இதற்கும் தலையணை மந்திரம் முந்தானையில் முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையும் மறைமுகக் காரணங்களாக இருக்க வாய்ப்புண்டா.// இதெல்லாம் பேச்சுக்குத்தான் என்பது என் கருத்து ஐயா. ஒட்டுமொத்தத் சமூகமாக ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்யும் நிலைதான் இவையனைத்திற்கும் தீர்வு..அது நடக்க கீதமஞ்சரி சொல்வது போல சில தலைமுறைகள் கடக்க வேண்டியது இருக்கும். இவர்களால் இந்தப் பிரச்சினை என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது.
Deleteஐயா உறவுகளோடு பெண்களுக்குண்டான நிலைப்பாட்டில் உங்கள் கருத்தை எடுத்து வைத்தீர்கள். தொடர்பதிவு என்னும்போது என் கருத்தைக் கோருகிறீர்கள் என்றுதான் என் கருத்தை எழுதினேன். அதில் வார்த்தை விளையாட்டு ஏதும் இல்லை. இப்போது என் அனுபவம் சார்ந்த பதிவொன்றை பதிவிட்டிருக்கிறேன். அனுபவம் சார்ந்தே அவரவர் கருத்துகள் வெளிப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா?
Deleteவறட்டு பெண்ணியம் பேசாமல், வலிந்து ஆண்களை கொண்டாடாமலும் அழகா நகர்ந்திருக்கு பதிவு! அருமை அக்கா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.
Delete//இதுபோன்ற சிந்தனைகளிலெல்லாம் இதுவரை நான் ஈடுபட்டதே இல்லை///
ReplyDeleteவாவ் சிந்தனைகளிலெல்லாம் ஈடுபடுவதில்லை என்று சொல்லிவிட்டு மடமடவென்று அருவி போல அருமையாக பொளந்து கட்டி வீட்டிர்கள்.. யதார்சமான உண்மைகளை மிக எளிதாகவும் தெளிவாகவும் சொல்லிச் சென்ற விதம் மிக அருமை இந்த பதிவை சில மாற்றம் செய்து வார இதழ்களுக்கு அனுப்பலாம் பலரும் படித்து சிந்திக்க உதவும்.பாராட்டுக்கள்
தோன்றியதை எழுதினேன். பலருக்கும் பயன்படும் என்ற உங்கள் கருத்து மகிழ்வளிக்கிறது. நன்றி அவர்கள் உண்மைகள்.
Deleteஅருமையான அலசல் கீதமஞ்சரி.. நீங்கள் சொல்லியிருப்பது போல பெண்களால், ஆண்களால் என்று பொதுமைப் படுத்திச் சொல்லிவிடமுடியாது. கால மாற்றம் தான்..புதியச் சூழலின் கவலைகளும் அழுத்தங்களும் நீங்கி ஓரிரு தலைமுறைகளில் சமநிலை அடையும் என்றே நானும் கருதுகிறேன்
ReplyDeleteசிறந்த பகிர்விற்கு நன்றி , வாழ்த்துகள்!
வருகைக்கும் ஒத்தக் கருத்துடை சிந்தனைக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
Deleteஇன்றைய யதார்த்தத்தை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் சகோதரியாரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதம 2
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteநீங்கள் சொல்வதுப் போல் உறவுகளை தக்க வைத்துக் கொள்வதில் கணவன், மனிவி, இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. மடமட வென்று உங்கள் உள்ளத்தைக் கொட்டி விட்டீர்கள். அற்புதமான அலசல். மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.......
ReplyDeleteஎன் கருத்தில் தோன்றியதை எழுதினேன் மேடம். இன்று மேலுமொரு பதிவு என் அனுபவம் சார்ந்து எழுதியுள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteதாய், தந்தை
ReplyDeleteமகன், மகள்
அண்ணன், தங்கை
அக்கா, தங்கை
தாத்தா, பேரன், பேத்தி
பாட்டி, பேரன், பேத்தி
-- இப்படியான பந்தங்கள் எல்லாம் உறவுகளா என்கிற கேள்வி யோசிக்க வைக்கிறது.
மாமனார், மாமியார்
கொழுநன், நாத்தனார்
மருமகன், மருமகள்
சம்பந்தி
-- போன்ற இரத்த சம்பந்தமற்று வாழ்க்கையின் போக்கில் அமைந்து விடுகின்ற இந்த உறவுகளெல்லாம் உறவினர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதில் இயற்கையாகவே இரத்த சம்பந்தப்பட்ட தொடர்புகளாய் ஆகிப்போனதை பந்தங்கள் (பந்துக்கள் அல்ல) என்றும்,
வாழ்க்கையின் போக்கில் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தங்களை உறவுகள் என்றும் வரையறை கொள்ளலாமா என்று தோன்றுகிறது.
உறவாய் அமைந்து பந்தமாய் போவது கணவன்-மனைவி பந்தம். இன்னொரு தலைமுறை பந்தத்திற்கு ஆரம்பமாய் அமைந்து அடியொற்றி வைப்பதும் இந்த உறவே.
ஆழ்ந்து இறுகிப் போன நட்பு மட்டும் பந்தம், உறவு என்கிற வரையறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. எந்த கால சரித்திரமும்
நட்புக்கு மட்டும் எந்த வரையறையும் ஏற்படுத்த முடியாமல் தடுமாறி தலைகுனிந்து வாழ்த்தியிருக்கிறது.
எந்தத் தலைமுறையும் இந்த அடிப்படை உணர்வுகளிலிருந்து வழுவாமல்
இருப்பார்களேயானால் எல்லா பந்தங்களும் உறவுகளும் பேணிக் காப்பாற்றப்படும்.
பொருளாதார தீர்மானிப்புகளெல்லாம் கூட ஓரளவுக்குத் தான் தலைநீட்ட முடியுமே தவிர வாழ்க்கையின் சாரம் எல்லா குறுக்கீடுகளையும் வென்று வாகை சூட வல்லமை பெற்றது.
உறவுகள் யார் என்ற கேள்வி எழுப்பியதன் மூலம் மாறுபட்ட கோணத்தில் அலசவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்துவிட்டீர்கள்.
Deleteஇன்றைய அண்ணன் தம்பிகளே நாளைய பங்காளிகள் என்பார்கள்.
தங்கைக்கு செய்தால் மனைவி ஏதாவது சொல்வாளோ என்று நினைத்து மறைவாய் தங்கைக்கு செய்யும் பல ஆண்கள் தங்களையறியாமலேயே பிரச்சனையின் மூலகாரணமாகிவிடுகிறார்கள். மூத்தவனைச் சுரண்டும் தம்பி தங்கையரால் பல வீடுகளில் பிரச்சனை.
எனவே ஒரு குடும்பத்திலிருக்கும் குழந்தைகளுக்குள் நல்லதொரு புரிதல் இருந்தால் பிற்காலத்தில் அவர்களுடைய குடும்பங்களுக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கும் என்பதால்தான் உறவுகளில் உடன்பிறந்தவர்களையும் சேர்த்திருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஜீவி சார்.
இன்றைய யதார்தத்தை நிதானமாகவும் ஆழமாகவும் அலசியிருக்கிறீர்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சொக்கன்.
Delete
ReplyDelete@ தேன்மதுர தமிழ் கிரேஸ்
நான் இந்தத் தலைப்பில் சில கருத்துக்களை எழுதி என் பெண்வாசக நண்பர்களிடம் அவர்களின் கருத்துக் கூற வேண்டி இருந்தேன் அதன் தொடர்ச்சியே திருமதி கீத மஞ்சரியின் இந்தப்பதிவு. நீங்கள் என் அந்தப் பதிவைப் படித்திருந்தால் நான் சொல்ல வந்த கருத்து விளங்கி இருக்கும். உறவுகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன என்பது அநேகமாக எல்லோரும் ஒப்புக் கொள்ளும் விஷயம். உறவுகளின் உன்னதங்களை கீத மஞ்சரி விளக்குகிறார். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவற்றுக்கு யார் பொறுப்பு யாரால் சரிசெய்ய இயலும் என்பதே கேள்விக்குறி. ஓரிரு தலை முறைகளில் சீர் ஆகும் என்பது வெறும் ஹேஷ்யமாக இருக்கக் கூடாது அல்லவா. என் பதிவுக்கு வந்த ஒரு கருத்து கணவன் வழி உறவுகளைப் பேணுவதில் மனைவிகள் விரும்புவதில்லை என்பதாகும்.நாம் ஐடியல் சிசுவேஷனைக் கனவு காண்கிறோம். ஆனால் நடைமுறையில் வித்தியாசமாக இருக்கிறதே. மஞ்சரியின் அலசல் இந்த ஐடியல் வகையைச் சேர்ந்தது என்று தோன்றுகிறது/
கீத மஞ்சரி. நீங்கள் உறவுகள் பற்றிய வார்த்தை விளையாட்டில் இல்லை என்றே நினைக்கிறேன்
ReplyDeleteபச்சைக்கண்ணாடி போட்டவனுக்கு பார்ப்பதெல்லாம் பச்சையாகத் தெரிவது போல் என் அனுபவக் கண்ணாடியில் தெரிவதைக் கொண்டே என் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். உறவுகளைப் பேணுவதென்பது ஒரு சிக்கலான கலை. அதைக் கையாள்வது ஆளுக்காள் மாறும் அல்லவா?
Deleteஅருமையான எதார்த்தமான அலசல்... இனி ஆகப் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் இப்பொழுதை வாழ்வோம்.... இனி நட்புகள் தான் உறவுகள் எனும் நிலை வந்தாலும் ... அன்பின் காரணமாய் இணையும் உறவில் தான் நிலைத் தன்மை இருக்கும்... அது இருக்குமா என்பதில் சந்தேகமே....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில்.
Delete/// நேரமில்லாதது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறோம்... உண்மையில் சோம்பேறிகளாகிக் கொண்டு வருகிறோம்... ///
ReplyDeleteஇதை ஏற்றுக் கொள்வதே பெரிய விசயம்...
உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteநல்லதொரு அலசல் தோழி. உங்கள் கருத்தோடே நானும் உடன்படுகிறேன். ஆண் பெண் என்று யாரையும் நாம் ஒட்டுமொத்தமாக குறை கூற முடியாது. வளர்ந்த சூழல் தற்போது இருக்கும் அதிவேக சூழல் காரணமாக ஒருவரைஒருவர் குறைகூறிக்கொண்டு வளரும்தலைமுறையை நம் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறோம். சிந்திக்க வைத்த பகிர்வு தோழி.
ReplyDeleteவருகைக்கும் ஒத்த கருத்துக்கும் உளமார்ந்த நன்றி சசிகலா.
Delete//உறவுகள் யார் என்ற கேள்வி எழுப்பியதன் மூலம் மாறுபட்ட கோணத்தில் அலசவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்துவிட்டீர்கள். //
ReplyDeleteநன்றி, கீதமஞ்சரி!
நுணுகிப் பார்க்கும் சில பார்வைகளை ஏற்றுக் கொள்ளவும் பக்குவம் வேண்டியிருக்கிறது.
தான் நினைத்துக் கூடப் பார்க்காததை புதுக்கோணத்தில் இன்னொருவர் சொன்னால்--
//கீத மஞ்சரி. நீங்கள் உறவுகள் பற்றிய வார்த்தை விளையாட்டில் இல்லை என்றே நினைக்கிறேன்..//
உறவுகள் என்கிற மேலோட்டமான பார்வைக்குள்ளும் 'பந்தம்' என்று ஒரு தனிப்பிரிவு கொண்டதால் விளைந்தது இது.
கீதமஞ்சரி என்று விளித்தல் இருப்பினும் அது உங்களுக்காகச் சொல்லப்படவில்லை என்பதும் புரிகிறது.
தங்கள் மறு வருகைக்கும் மற்றுமொரு சிறப்பான பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி ஜீவி சார்.
Deleteநல்ல தெளிவான அலசல்.
ReplyDeleteஇதோ நான் போகிறேன் அடுத்த இடுகைக்கு!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி டீச்சர்.
Deleteஉங்களது இந்தப் பதிவினை இன்றுதான் படிக்க முடிந்தது. இன்றைய கால சுழற்சியில் உறவுகள் எந்திர மயமாகி விட்டதை உங்கள் கருத்துக்கள் தெரியப் படுத்துகிறன.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteஉறவுகளை கணவன்.மனைவி, குழந்தைகள் எல்லோருமே பேண வேண்டும். உறவுகளை பெண்கள் மட்டும் பேண வேண்டும், ஆண்கள் பேண கூடாது என்பது எல்லாம் இல்லை.இருபக்க உறவுகள் பிள்ளைகள் திருமணம் ஆனவுடன் அவர்கள் வழி உறவுகள் ,இருபக்கசகோதர சகோதரி உறவுகளின் சம்பந்திகள் என்று உறவுகள் பரந்து விரிந்து தான் போகிறது. அவர்களின்
ReplyDeleteநல்லது கெட்டதுகள், என்று உறவுகள் தொடர்கதையாகதான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் முடிந்தவரை அனைத்து உறவுகளையும் திருப்த்தி படுத்தி வருகிறோம், இன்னும் சொல்லபோனால் நம் குழந்தைகள் கலந்து கொள்ள முடியாத அவர்கள் மாமியார். மாமனார் உறவுகள் வீட்டு நல்லது கொட்டதுகளுக்கும் நாங்கள் போய்வருகிறோம். சொந்தபந்தம் ஆனந்தம் தான். ஆனால் எல்லோரையும், எல்லா சமயத்திலும் திருப்த்தி செய்வது முடியாது என்பதும் உண்மை. அதை புரிந்து கொண்டு நடந்தால் உறவுகள் பலப்படும்.
உங்கள் உறவுகள் உன்னதங்கள் அருமை.
உறவுகளைப் பேணும் விஷயத்தில் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். தங்களுடைய சிறப்பான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.
Deletehttp://mathysblog.blogspot.com/2014/12/blog-post_9.html
ReplyDeleteஎன் பதிவையும் படித்து பாருங்கள் கீதமஞ்சரி.
வாசித்துக் கருத்திட்டேன் மேடம்.
Delete