15 January 2018

உங்களிடம் சில வார்த்தைகள்.. கேட்டால் கேளுங்கள்..




நம் மனம்தான் நமக்கு உற்ற நட்பும் பகையும். அதை நம்மோடு இணக்கமாய்ப் பேணுவதற்கே நாம் இன்னும் கற்றபாடில்லை. இந்த லட்சணத்தில் எங்கே மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது? அதையும் மீறி நாம் ஒருவருக்கொருவர் அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். இதோ இப்போதும் கேட்டால் கேளுங்க என்று அறிவுரை வழங்க வந்துவிட்டேன், துணைக்கு கண்ணதாசனின் வரிகளையும் அழைத்துக்கொண்டு.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா..
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

யாரும் எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் சிறப்பு. அது சொற்களுக்கும் பெரிதும் பொருந்தும். வாய்க்குள் இருக்கவேண்டியவை வெளியில் குதித்துவிட்டாலோ, வெளிப்பட வேண்டியவை வாய்க்குள் தேங்கிக் கிடந்தாலோ மதிப்பிழந்துபோதல் நிச்சயம். தேவைப்படும் சொற்களுக்கே இந்நிலை என்றால் தேவைப்படாத அறிவுரைகளுக்கு? கேட்கவிரும்பாத செவிகளுக்குள் செலுத்தப்படும் அறிவுரைகள், செவிடன் காதில் சங்கூதுவது போல விரயம் என்று அறிந்திருந்தாலும் ஊதுற சங்கை ஊதிவைப்போம் என்ற எண்ணத்தில்தான் பல அறிவுரைகள் ஓதப்பட்டுவருகின்றன.




அறிவுரைகள் அவசியப்படுவோர்க்குக் கூட நேரடியாக அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. நம்மைப் போன்ற படைப்பாளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன கதைகளும் கவிதைகளும். அவற்றின் வாயிலாக சொல்ல வேண்டியவற்றை சொல்வது ஒருவகையில் வசதியும் கூட. என் பிள்ளைகள் சிறுகுழந்தைகளாக இருக்கும்போதும் இந்த யுத்திதான் பெரிதும் கைகொடுத்தது. அவர்கள் தவறு செய்யும்போது நேரடியாக கண்டிக்காமல் அறிவுரை சொல்லாமல் கதைகள் மூலம் திருத்தினேன். இவர்கள் செய்யும் தவறுகளை கதையில் வரும் குழந்தைகள் செய்வதாகச் சொல்லி, அதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளால் குழந்தைகள் மனந்திருந்துவது போல கதைகளை உருவாக்கிச் சொல்வேன். நேரடியாக அறிவுரை சொல்வதை விடவும் கதைகள் மூலம் சொல்வதில் பலன் அதிகமாக இருந்தது.


சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை…

என்னைக் கேட்டால் சொல்லாத சொல்லுக்கும் விலை உண்டு என்றுதான் சொல்வேன். ஆம் என்பதை அழுத்தமாய் ஆமோதிக்கும் அதே சமயம், இல்லை என்பதையும் வாய்திறந்து மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயம், தயக்கம், கூச்சம், முகத்தாட்சண்யம், நாகரிகம், இங்கிதம் இன்னபிற காரணங்களால் நமக்கு உடன்பாடற்றவற்றை மறுக்கத் துணியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மௌனம் காப்பதுண்டு. மௌனம் எந்தக்காலத்திலும் நம் எதிர்ப்பை பதிவு செய்யாது. மௌனம் சம்மதம் என்ற பொதுவிதியின்படி எதிராளிக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அமையவேண்டும் என்றுதான் நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஆனால் அமைகிறதா? பிரச்சனை மேல் பிரச்சனை என்றுதானே வாழ்க்கை ஓடிக்கொண்டோ நகர்ந்துகொண்டோ இருக்கிறது? சிலர் தம் பிரச்சனை மட்டுமல்லாது அடுத்தவர் பிரச்சனைகளையும் அடித்துப்பிடித்து வாங்கி தங்கள் தோள்களில் போட்டுக்கொண்டு அல்லாடுவார்கள். இன்பமோ, துன்பமோ அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வதுதானே நியாயம்.


உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

கண்ணதாசனின் இவ்வரிகளில் பலருக்கும் உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்வரிகளை நான் பாசிடிவாகவே பார்க்கிறேன். நமக்கும் கீழே இருப்பவனோடு ஒப்பிட்டு நம் நிலைமை அவனை விடவும் மேல் என்று மகிழ்வது என்ன மாதிரியான சாடிஸ்டிக் மனோநிலை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். வரிகளை உற்றுக்கவனியுங்கள். அது மகிழ்ச்சி அடையச்சொல்லவில்லை. நிம்மதி நாடச்சொல்கிறது. கண்முன் ஒரு விபத்து நடக்கிறது. ஐயோ என்று பதறுகிறோம். யாருக்கும் அடிபடவில்லை என்று தெரிந்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு பரவுமோ.. அப்படியான நிம்மதிதான் அது. ஓட்டுவீட்டில் வசிப்பவனுக்கு பங்களாவாசியைப் போல வாழ ஆசை வருவதில் தவறில்லை. ஆசைகள் தானே முன்னேற்றம் என்னும் இலக்கு நோக்கி நம்மை நெம்பித்தள்ளும் நெம்புகோல்கள். இலக்கை அடைவதற்கான முயற்சியில் இறங்குவதை விட்டுவிட்டு பணக்காரனைப் பார்த்து ஏங்கித்தவிப்பதிலேயே தனக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையின் அருமை தெரியாமல் வீணடித்துக் கொள்பவர்களுக்கான அறிவுரையாகவும் கொள்ளலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று வெம்பி உச்சபட்ச தாழ்வுணர்வில் புழுங்கித்தவிக்கும் உள்ளங்களை ஆசுவாசப்படுத்தும் ஆறுதலுரையாகவும் இருக்கலாம். உன்னிலும் மேலானவனைப் பார்த்து பொருமிக் கொண்டிராமல் உன்னிலும் கீழான நிலையில் வாழ்பவனைப் பார்த்து அவன் நிலையை விடவும் என் நிலை பரவாயில்லை என்று நினைத்து, கிடைத்திருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழ் என்பதை சாடிஸமாக என்னால் நினைக்க முடியவில்லை. அடுத்தவன் வாழ்க்கை குறித்த பொருமல், பொறாமை போன்ற கண்பட்டைகளைக் கழட்டினால்தான் சொந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் புலப்படும்.

நம்மை வருத்தும் துயரிலிருந்து, நம்மை நாமே உந்தி வெளிக்கொணர ஒரு மனோவசிய மந்திரம் அவசியம் தேவை. கிட்டத்தட்ட இருகோடுகள் தத்துவம் போல், நடந்த துயரோடு நடக்காத ஆனால் நடக்க சாத்தியமுள்ள பெருந்துயர் ஒன்றைப் பக்கத்தில் இருத்தி, ஒப்பிட்டு நிம்மதி அடைவதும் அழகானதொரு மனச்சமாதானம்.


Happiness is found along the way, not at the end of the road என்பது அடிக்கடி என் நினைவுக்கு வரும் பொன்மொழி. வாழ்க்கையில் இலட்சியங்கள் அவசியம். ஆனால் இலட்சியங்களை அடைவது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது. தங்கத்தைத் தேடி அலைபவன் வழியில் தென்படும் வைரங்களையும் வைடூரியங்களையும் புறக்கணிப்பது எவ்வளவு பேதைமையோ அவ்வளவு பேதைமை வாழ்க்கையின் பெரும் இலட்சியங்களின் பொருட்டு சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தொலைப்பது. அன்றலர்ந்த மலர், அழகிய வானவில், பஞ்சாரத்துக் கோழிக்குஞ்சுகள், சடசடக்கும் மழைத்தூறல், மழை கிளர்த்தும் மண்வாசனை, மழலையின் குழறுமொழி, குழந்தைகள் குறும்பு, இளந்தம்பதியர் இணக்கம், மனந்தொடும் மெல்லிசை, ரசனைக்குரிய திரைப்படம், வாசனை மாறா புதுப்புத்தகம், சிறகு கோதும் சிறுபறவை, சரசரக்கும் அரசிலைகள், காற்றசையும் கொடி, கால் நனைக்கும் அலை, குடும்ப ஒன்றுகூடல், கூடத்து விருந்து, ஒரு குறும்பயணம், தோளணைக்கும் தோழமை, ஆசீர்வதிக்கும் முதுகரம், அறியா முகத்தரும்பும் புன்னகை என நம் வாழ்வில் எவ்வளவு பெரிய வேதனையையும் கணநேரம் மறக்கச் செய்துவிடும் மகிழ்தருணங்கள் எத்தனையோ உண்டல்லவா?

(மதுரைத்தமிழன் ஆரம்பித்த இத்தொடர்பதிவினைத் தொடருமாறு தோழி இளமதி விடுத்த அழைப்பின் பேரில் எழுதப்பட்டது.)

சில நாட்களாக வலைப்பக்கம் வராமையால் யார் தொடர்ந்திருக்கிறார்கள் யார் தொடரவில்லை என்று தெரியவில்லை. அதனால் யாரையும் இங்கே குறிப்பிடவில்லை. இதுவரை எழுதாதவர்கள்  இனிதே தொடரலாம். 

8 January 2018

பூக்கள் அறிவோம் (31-40)

பூக்கள் அறிவோம் தொடரும் சிறு இடைவேளைக்குப் பிறகு இனிதே மலர்ந்து மணம் வீச வருகிறது. 

31- லாவண்டர் 

Lavender (lavandula)






லாவண்டர் வண்ணமும் வாசமும் உலகப்பிரசித்தி பெற்றவை. லாவண்டர் எண்ணெய் தயாரிப்புக்காகவே லாவண்டர் செடிகள் பெரும்பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. எண்ணெய் தயாரிப்பில் பூக்களை விடவும் மொட்டுகளுக்கே பங்கு அதிகம். சோப்புகள், நறுமணத்தைலங்கள், அழகுசாதனப்பொருட்கள் மட்டுமல்லாது மருந்துகள் தயாரிக்கவும் லாவண்டர் எண்ணெய் உதவுகிறது. லாவண்டர் எண்ணெய் நல்லதொரு கொசுவிரட்டியும் கூட. உலரவைத்த லாவண்டர் பூக்களும் மொட்டுகளும் இலைகளும் உணவில் வாசமும் ருசியும் கூட்டவும், தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. லாவண்டர் மலர்த்தேனுக்கு உலகச்சந்தையில் மதிப்பு அதிகம். லாவண்டர் இனத்தில் சுமார் 47 வகைகள் உள்ளன. லாவண்டர் பூக்கள் உயர்த்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாயிருந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. ரோமானியர் காலத்தில் ஒரு பவுண்டு (450 கிராம்) எடையுள்ள லாவண்டர் பூக்கள் நூறு வெள்ளிக்காசுகளுக்கு விற்கப்பட்டனவாம். அந்நாளைய நிலவரப்படி நூறு வெள்ளிக்காசுகள் என்பது ஒரு விவசாயக்கூலியின் மாத வருமானம் அல்லது ஒரு முடிதிருத்துபவரின் ஐம்பது முடிதிருத்தலுக்கான கூலியாம்.

32 - தேயிலைப்பூ  

Camellia sinensis




இலை பிரபலமான அளவுக்கு இந்தப் பூ பிரபலமில்லை. நித்தமும் காலையும் மாலையும் நமக்குப் புத்துணர்ச்சி கூட்டும் தேநீர் இந்தப் பூமரத்தின் இலைகளிலிருந்துதான் கிடைக்கிறது. தேயிலை மரம் என்கிறாயே.. செடியிலிருந்துதானே இலைகளைப் பறிக்கிறார்கள்.. எத்தனை சினிமா பார்த்திருக்கிறோம்.. எத்தனை தேயிலைத் தோட்டங்கள் பார்த்திருக்கிறோம்.. என்று வியப்பாக இருக்கிறதா.. தேயிலைக்கென்று வளர்க்கப்படும் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக்கொழுந்துகளைப் பறிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அளவோடு குத்துச்செடிகளாகவே வைத்திருக்கிறோம். வளரவிட்டால் இப்படிதான் மரமாகிப் பூப்பூக்கும். சுமார் 300-க்கும் மேற்பட்ட கமேலியா வகையுள் முக்கியமான ஒன்று இது. இதன் தாயகம் சீனா என்பதால்தான் இதற்கு Camellia sinensis என்று பெயர். Sinensis என்றால் லத்தீன் மொழியில் சீனாவிலிருந்து என்று அர்த்தமாம். இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலில் ருசியும் மணமும் சேர்க்கப் பயன்படுகிறது.


33 - ரோஸ்மேரி 

rosemary




சமையலில் சுவையும் மணமும் கூட்டப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் ரோஸ்மேரி முக்கியமானது. மத்தியதரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது வறட்சியையும் தாங்கி வளரும் தன்மையுடையது. நன்னீர் கிடைக்காதபோது கடல்நீரின் ஈரப்பத்த்தை உள்வாங்கி வளரக்கூடியது என்பதால் கடல்துளி என்ற பொருளில் rosemary எனப்படுகிறது. லத்தீன் மொழியில் Ros என்பது துளியையும் marinus என்பது கடலையும் குறிக்கிறது.

ரோஸ்மேரி என்ற பெயர்வந்த கதை ஒன்று உள்ளது. ஆதியில் ரோஸ்மேரிப்பூக்கள் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம். ஒருமுறை மேரிமாதா ஓய்வெடுக்கையில் அவரது நீலவண்ண ஆடை அப்புதரை மூடியதால் வெள்ளைப் பூக்கள் எல்லாம் நீலப்பூக்களாக மாறிவிட்டனவாம். அதனால்தான் இச்செடிக்கு மேரியின் ரோஜா (rose of mary) என்ற பெயர் ஏற்பட்டதாம். பண்டைக்காலத்தில் கிரேக்கர், எகிப்தியர், ரோமானியர்கள் யாவருக்கும் ரோஸ்மேரி புனிதச்செடியாக இருந்திருக்கிறது. இப்போதும் வெள்ளைநிறப் பூக்கள் பூக்கும் ரோஸ்மேரி வகை உள்ளது.

ரோஸ்மேரி செடியின் சிறுதண்டையும் கிள்ளி நட்டுவைத்தாலும் நன்கு வளரக்கூடியது. ரோஸ்மேரி இலைகள் அசைவ உணவில் வாசமும் சுவையும் கூட்டுவதற்காக சேர்க்கப்படுகின்றன. ரோஸ்மேரி எண்ணெய், வாசனைத்திரவியங்கள், ஊதுபத்தி, ஷாம்பூ போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறுதிக்கிரியைகளின்போதும் நினைவேந்தல்களின்போதும் ரோஸ்மேரி கட்டாயம் இடம்பெறுகிறது. கல்லறைகளில் ரோஸ்மேரியைத் தூவி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைவீர்ர் நினைவுதினமான ஆன்ஸாக் தினத்தன்று (ANZAC day) ரோஸ்மேரி இணுக்குகள் சட்டையில் அணியப்படுகின்றன.

34 -  சிக்கரிப்பூ

Chicory flower (cichorium intybus)




சின்னவயதில் காஃபிக்கொட்டை அரைக்க மிஷினுக்குக் கொடுத்துவிடும்போது ஒரு ரூபாய்க்கு சிக்கரி சேர்க்குமாறு சொல்லிவிடுவார் அம்மா. சிக்கரி என்றால் என்ன என்று அப்போது மட்டுமல்ல.. சில நாட்கள் முன்புவரையிலும் கூட தெரியாது. யோசித்ததுமில்லை. சிக்கரி என்பது சிக்கரிச்செடியின் கிழங்கைக் காயவைத்து வறுத்து அரைக்கப்படும் பொடி. சிக்கரிக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. முக்கியமாக குடற்புழுக்களை அழிக்கவல்லதாம். மலர் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 38 மலர்களுள் இதுவும் ஒன்று. பொதுவாகவே நீலவண்ணப் பூக்கள் காதலுக்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாக விளங்குகின்றன. சிக்கரிப்பூவும் விலக்கல்ல. ஐரோப்பிய நாடோடிக்கதைகளில் பூட்டிய கதவுகளைத் திறக்கும் வல்லமை கொண்டவையாக அறியப்படுகின்றன இப்பூக்கள். லேசான கசப்புத்தன்மையுள்ள சிக்கரி இலைகள் பல நாடுகளில் சமைத்து உண்ணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் உண்ணப்படுவதாக தகவல். ஆராய்ச்சி பண்ணியதில் காசினிக்கீரை எனப்படுவது இதுதான் என்று தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் தெரியவருகிறது. ஆக காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரிஎன்பதைப் போல காசினிப்பூதான் சிக்கரிப்பூ.. சிக்கரிப்பூதான் காசினிப்பூ.

35 - காட்டுக்கிராம்பு

primrose willow (ludwigia octovalvis)




நீர்நிலைகளை ஒட்டி வளரக்கூடிய தாவர இனமான இதற்கு 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய தாவரவியல் வல்லுநர் Christian Gottlieb Ludwig அவர்களின் பெயரால் ludwigia என்று பெயரிடப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவகுணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படும் இந்த காட்டுக்கிராம்பின் இலை, வேர் உள்ளிட்ட பாகங்களை உலகெங்கும் பல நாடுகளிலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் தேநீர் தயாரிக்க இலைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், தலைவலி, வயிற்று உபாதைகளைப் போக்கவும் இலைக்கசாயம் பயன்படுத்தப்படுகிறது. நைஜீரியாவில் மலமிளக்கியாக வேகவைத்த இலைக்கடைசல் பயன்படுத்தப்படுகிறது. வியட்நாமில் இதன் இலைகள் பச்சையாகவோ வேகவைத்தோ பன்றிகளுக்குத் தீவனமாக அளிக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போடும் அற்புதம் இந்த மூலிகைக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

36 - கானாவாழை

Commelina benghalensis




கானாவாழை, கனவாழை, காணாம்வாழை என்றெல்லாம் குறிப்பிடப்படும் இதற்கும் வாழைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தரையோடு படர்ந்து வளரும் கானாவாழை புல்பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வாழையைப் போல கன்றுகள் உருவாகி வம்சம் தழைப்பதால் இதற்கும் வாழை என்று பெயராகிவிட்டது. பல நாடுகளில் களையாகப் பார்க்கப்பட்டாலும், எகிப்து, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் கானாவாழைக்கு சிறப்பிடம் உண்டு. ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் கானாவாழை இலைகளை கீரை போல் சமைத்து உண்பது வழக்கம். இதற்கு கன்னாங்கீரை என்ற பெயரும் உண்டு. இதன் சாற்றை காய்ச்சல் தீர உள்ளுக்கும் சருமநோய் மற்றும் வலி, வீக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக வெளியிலும் பயன்படுத்துகின்றனர். கன்றுக்குட்டிகள் இத்தாவரத்தை விரும்பித் தின்பதால் கன்றுக்குட்டிப்புல்’ (calf’s grass) என்ற செல்லப்பெயரும் உண்டு.  
 

37 - அவுரிப்பூ 

Indigofera tinctoria




ஆங்கிலத்தில் இன்டிகோ, சமஸ்கிருதத்தில் நீலிகா, இந்தியில் நீலி, கன்னடத்தில் கருநீலி, மலையாளத்தில் நீலமலர், தெலுங்கில் நீலி செட்டு, தமிழில் நீலி அல்லது அவுரி. பூ என்னவோ பார்ப்பதற்கு அழகான இளஞ்சிவப்பில் இருக்கிறது. ஆனால் பெயர் மட்டும் நீலி, நீலம், இன்டிகோ என்றெல்லாம் இருக்கிறதே.. ஏன்? காரணம் இருக்கிறது. இந்தச் செடியின் வேர் மற்றும் இலைகளை ஊறவைத்துதான் இயற்கையான நீலச்சாயம் (Indigotin) தயாரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்திய விவசாயிகளைத் துன்புறுத்தி அதிக அளவில் அவுரி பயிரிடச்செய்து, அதன் மூலம் பெறப்படும் நீலச்சாயம் இங்கிலாந்துக்கு பெட்டி பெட்டியாக ஏற்றுமதி செய்யப்பட்ட சோக வரலாறு உண்டு. சாயம் தவிர ஏராளமான மருத்துவகுணங்களும் உடையது அவுரி. பாம்புக்கடி உள்ளிட்ட 18 வகையான விஷங்களை முறிக்கும் இயல்புடையதாம். தோல் நோய், மஞ்சட்காமாலை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நல்லதொரு மருந்து. வெளுத்த கேசத்தைக் கருப்பாக்க இந்த இயற்கைச்சாயம் பெரிதும் உதவுமாம். நீலிபிருங்காதி தைலம் நினைவுக்கு வருகிறதா?

(நீலி அவுரி, பிருங்காதி கரிசலாங்கண்ணி)

38 - ஆடுதொடா இலை 

justicia adhatoda




Malabar nut, adulsa, adhatoda, vasa, vasaka என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஆடுதொடா இலையின் மகத்துவம் நாம் அறிந்ததே. சித்த, ஆயுர்வேத, ஹோமியோ மற்றும் யுனானி மருத்துவங்களில் பெருமிடம் பிடித்துள்ள இதன் பூர்வீகம் ஆசியா. Adhatoda என்பது இதன் அறிவியல் பெயர் என்றாலும் இச்செடியின் கைப்பு மணம் மற்றும் சுவை காரணமாக ஆடுமாடுகள் மேய்வதில்லை என்பதால் ஆடுதொடா இலை என்ற பெயர் மருவி ஆடாதோடை ஆனதாகவும் கருத்து உண்டு. பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தின் அடையாள மலர் இதுவே. ஆஸ்துமா, இருமல், கோழை, தொண்டைக்கட்டு போன்ற சுவாசப்பிரச்சனைகளுக்குத் தீர்வாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இலை, பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகள் மேயாத காரணத்தால் கிராமப்புறங்களில் வேலியோரம் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

39 - அரிவாள்மனைப்பூண்டு 

common wireweed (sida acuta)




லேசாகத் திருகினாற்போன்று ஐந்து இதழ்களுடன் சின்னச்சின்னதாய் மஞ்சள் வண்ணத்தில் பூக்கும் மூலிகைப் பச்சிலையான அரிவாள்மனைப் பூண்டுக்கு ஏராளமான மருத்துவகுணம் உள்ளதாக அறியப்படுகிறது. இலைகள் அரிவாள் போல் இருப்பதால் இந்தப்பெயர் என்று சிலரும் வெட்டுக்காயங்களை குறிப்பாக அரிவாள் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மையால் இப்பெயர் என்று சிலரும் கூறுகின்றனர். இதன் வேரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கசாயம் உடலுக்கு பல்வேறு நன்மைகளைப் பயக்கும் என்றும் இலைகளை ஊறவைத்த தண்ணீர், கூந்தலை அலசித் தூய்மையாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இச்செடியின் தண்டு நார்ப்பொருளால் ஆனதால் கயிறு, கான்வாஸ், மீன்வலை போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் வேறு பெயர்கள் வட்டத்திருப்பி, மலைதாங்கி. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா என்றாலும் உலகநாடுகள் பலவற்றிலும் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இது களைப்பயிராக அறியப்படுகிறது.

40 - அப்பக்கொடி 

 goat weed (Ageratum conyzoide)




தமிழில் அப்பக்கொடி என்றும் ஆங்கிலத்தில் Billygoat weed, chick weed, goat weed, white weed என்றெல்லாம் அழைக்கப்படும் களைத்தாவரமான இது பூக்களின் அழகுக்காக வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. பெயரில்தான் கொடியிருக்கிறதே தவிர இது ஒரு செடிதான். பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் இன்று உலகநாடுகள் பலவற்றிலும் பரவியிருப்பதோடு ஆஸ்திரேலியா உள்ளிட்ட அநேக நாடுகளில் ஆக்கிரமிப்புப் களைப்பயிராகவும் அறியப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மருத்துவ மூலிகையாகவும் பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது. இதை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்தால் இதன் வாடைக்கு கொசுக்கள் அண்டாதாம். இதன் பச்சிலைச்சாறு வெட்டுக்காயம், புண், கொப்புளம், தோல் தடிப்பு, அரிப்பு, வீக்கம் போன்ற சரும நோய்களுக்கு நல்ல நிவாரணியாக வெளித்தடவப்படுகிறது, துளசியோடு அப்பக்கொடியின் பூக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட கசாயம் சளி, இருமல் போன்றவற்றுக்கு மருந்தாகவும் உட்கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் இதன் இலைகளைக் காயவைத்து சமையலில் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

விரும்பத்தகாத வாடை கொண்ட அப்பக்கொடிக்கு வியட்நாம் மக்கள் தங்கள் மொழியில் வைத்திருக்கும் பெயர் பன்றிவிட்டை (pig feces). தமிழில் சில பகுதிகளிலும் இதே போன்ற வேடிக்கைப்பெயரொன்று வழங்கப்படுகிறது. என்னவென்று அறிந்துகொள்ள ஆவலா? கீழே கமெண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாரதிமணி ஐயாவின் இந்தப்பதிவை வாசித்து அறிந்துகொள்ளுங்கள். 

(இன்னும் மலரும்)
  

1 January 2018

அறுசுவை விருந்து படைத்த 2017




ஆஹா ஓஹோவென்று இல்லையெனினும்
அப்படியொன்றும் அசமந்தமாக இல்லை..
வாழ்விலுண்டாகும் சறுக்கல்களுக்கு
வருடத்தை நிந்திப்பதில் நியாயமுமில்லை.
வழக்கம்போலவே கழிந்து பிறக்கிறது புத்தாண்டு.
வருங்காலம் இனிதாகும் வளமாகுமென்னும்
ஆதி நம்பிக்கையை அடிப்பிறழாமல் தந்து! 🙂🙂




மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், கொண்டாட்டம், சோகம், கலவரம், அங்கீகாரம், அரவணைப்பு என பலவிதமான உணர்வுகளையும் கலவையாய் அள்ளித்தந்து அமைதியாய் நிறைவுபெறுகிறது 2017.

என்னுடைய எழுத்தின் வளர்ச்சிக்கு பின்புலமாய் இருந்த… இப்போதும் இருக்கும் அன்புத்தோழி மணிமேகலாவுக்கு இப்பிறவியில் நன்றி சொல்லிமாளாது. அவரால்தான் அற்புதமான பல அங்கீகாரங்கள் எனக்குக் கிட்டின..

1.   ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 26-ஆம் நாள் சிட்னி உயர்திணை இலக்கிய அமைப்பின் சார்பாக, தோழியின் அயராத முயற்சியால் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூல் வெளியீடு இனிதே நிறைவேறியது ஆகப் பெரும் மகிழ்வான நிகழ்வின் மூலம் சிட்னி இலக்கிய வட்டத்தில் நானும் ஒருத்தியாய் சங்கமிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகமும் அன்பும் ஆதரவும் கிட்டின.

2.   கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 - புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதற்கும் அன்புத்தோழியே காரணம். அவரே கீதமஞ்சரி வலைத்தளத்தை முன்மொழிந்துள்ளார் என்பது பிறகுதான் தெரியவந்தது.

3.   காக்கைச்சிறகினிலே– இலக்கிய இதழில் கீதமஞ்சரிக்காக முழுதாய் எட்டுப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பான அங்கீகாரம்.

4.   பிரபலஎழுத்தாளர் முருகபூபதி அவர்கள் என்றாவது ஒருநாள் நூல் குறித்த தன் வாசிப்பனுபவத்தை மெல்பனில்  06-05-17  அன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17-வது எழுத்தாளர் விழாவில் சமர்ப்பித்தமை எனது பெரும்பேறு. அவரை எனக்கும் என் எழுத்துகளை அவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு, அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் நெருக்கத்தை எனக்கு உருவாக்கித் தந்தவர் என் அன்புத்தோழியே.

5. ATBC எனப்படும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தாயகம் வானொலி, SBS Tamil Radio மூன்று வானொலியிலும் என்றாவது ஒருநாள் வெளியீடு தொடர்பாக என்னுடைய நேர்காணல் ஒலிபரப்பானது. SBS Tamil Radio-வில் அபாரமான பின்னணியோடு ஒலிப்பதிவு செய்யப்பட்ட திகில் கதையான சீனத்தவன் ஆவி ஒலிபரப்பானது இன்னொரு மகிழ்ச்சி.    
6.   எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ‘காலமும் கணங்களும்’ என்னும் தன்னுடைய அடுத்த நூலுக்கான அட்டைப்படத்தை என்னிடமிருந்து பெற்றது என் புகைப்பட ஆர்வத்தின் மீதான மிகப்பெரும் அங்கீகாரம்.

2017 - மகளுக்கு இரண்டாவது பட்டமளிப்பு விழா, மகனின் பள்ளியிறுதி ஆண்டுவிழா, எங்களுடைய திருமண வெள்ளிவிழா என பல மறக்கமுடியாத கொண்டாட்டங்களுக்கிடையில் உளைச்சலும் மனச்சோர்வும் தரும்வண்ணம் எதிர்பாராத சில நிகழ்வுகளும் நடந்தேறின. அவை தனிப்பட்டவை என்றாலும் என் எழுத்திலும் சற்று பாதிப்பை ஏற்படுத்தின. 

கொஞ்சகாலம் எதிலும் ஈடுபாடற்று பதிவுலகிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டு இருந்தேன். முந்தைய வருடங்கள் போல புகைப்படங்கள் அதிகம் பகிரவில்லை.. எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் கூடிவரவில்லை. வாசிப்பிலும் பெரிய ஈடுபாடு கிட்டவில்லை. எழுத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்ட பிடிவாதத்தால் எதையாவது கிறுக்கியபடி இருந்தேன்.

மொழிபெயர்ப்பில் தீவிரமாக இல்லாவிட்டாலும் இந்த வருடத்தில் ஹென்றி லாசனின் கதைகள் மேலும் சிலவற்றை மொழியாக்கம் செய்துள்ளேன்.

பூக்கள் பற்றிய தொடரை விளையாட்டாய் ஆரம்பித்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் பற்றி எழுதியிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது.

புஸ்தகா நிறுவனத்தின் மூலம் ஆறு மின்னூல்களும் பிரதிலிபி மூலம் எட்டு மின்னூல்களும் இந்த வருடத்தில் வெளியாகியிருப்பது உற்சாகம் அளிக்கும் உந்துசக்திகள். 

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளுடன் படைக்கப்படும் அசத்தலான விருந்து போல 2017 பல்சுவைகளால் எம் வாழ்வை நிறைத்துச் சென்றிருக்கிறது. அனுபவங்களே வாழ்வென்னும் பாடத்தை அழகாய்ச் சொல்லிக் கடந்திருக்கிறது இன்னுமோர் ஆண்டு. அதே பாடத்தைக் கற்றுத்தர இதோ.. தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது அடுத்ததோர் ஆண்டு.

அனைவருக்கும் 
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்
2018.