29 July 2013

பார், பகலும் கழிந்தது இரவும் போனது

பார், பகலும் கழிந்தது  இரவும் போனது,
சூரியன் மேற்கை அடைந்து  மறைந்தது.
அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.
முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே
ந்தப்பொழுதும் இருந்தது.
எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,
பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்
மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.
முந்தைய இரவுகளைப் போலவேதான்
அந்த இரவும் இருந்தது.
அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,
இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.
பறவைகள் கீச்சிட்டன,
அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.
கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.
வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்து.
உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,
விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது  இரவும் போனது.


*******************


(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘lo dhin beetha hai, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை,  வல்லமை இதழில் வெளிவந்தது. மூலக்கவிதை கீழே....)


लो दिन बीता, लो रात गई

 लो दिन बीता, लो रात गई,
सूरज ढलकर पच्छिम पहुँचा,
डूबा, संध्या आई, छाई,
सौ संध्या-सी वह संध्या थी,
क्यों उठते-उठते सोचा था,
दिन में होगी कुछ बात नई।
लो दिन बीता, लो रात गई।

धीमे-धीमे तारे निकले,
धीरे-धीरे नभ में फैले,
सौ रजनी-सी वह रजनी थी
क्यों संध्या को यह सोचा था,
निशि में होगी कुछ बात नई।
लो दिन बीता, लो रात गई।

चिड़ियाँ चहकीं, कलियाँ महकी,
पूरब से फिर सूरज निकला,
जैसे होती थी सुबह हुई,
क्यों सोते-सोते सोचा था,
होगी प्रातः कुछ बात नई।
लो दिन बीता, लो रात गई,26 July 2013

என் கதைமாந்தர்கள்…
காத்திருந்து காத்திருந்து
களைத்துப்போயிருக்கலாம்
என் கதைமாந்தர்கள்!

ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!
அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!

விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்
இன்னாருடன் இன்னாருக்கு
இணக்கமா பிணக்கா என்பதை
இடைக்கிடை நிர்ணயிப்பதும்
நிர்ணயித்ததை நிராகரிப்பதும்....

இடைச்செருகல்களாய்
இன்னுஞ்சிலரை இணைப்பதும்,
இணைந்தோரை வலிந்து பிரிப்பதுமாய்
ஒரு பொம்மை விளையாட்டைப்போலத்தான்
ஆரம்பித்தது அது

துல்லியமாய் கணக்கிடவியலா
துளிப்பொழுதொன்றில்
நானும் அங்கோர் அங்கமாகிவிட
நகரமறுக்கிறது கதைக்களம்!

அம்மாந்தரோடு நாளெல்லாம்
செம்மாந்து திரியும் எனக்கு
நாட்பட நாட்பட
புற உலகம் என்பது
புளித்துதான் போய்விட்டது!

*********************


(வல்லமை இதழில் வெளியானது)

24 July 2013

ஏட்டுச்சுரைக்காய் – என் முதல் கணினி அனுபவம்

என்னை இந்தத் தொடர்பதிவில் இணைத்துவைத்த நண்பர் கணேஷூக்கு நன்றி. என்னடா, சிக்கலில் சிக்கவைத்தவருக்கு நன்றி சொல்கிறாளே என்று நினைக்கிறீர்களா? என் ஆரம்பகால கணினி அனுபவங்களையெல்லாம் வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று நினைத்துக்கொண்டிருந்தவளை, அப்படியெல்லாம் நினைக்காதே, பதிவுலகில் இன்று அமர்க்களப்படுத்தும் பலரும் ஆரம்பகாலத்தில் கணினி பற்றி அறியாமலிருந்தவர்கள்தாம் என்ற எண்ணமுண்டாக்கும் வகையில் எழுதி, என்னையும் துணிவுடன் எழுதவைத்த கணேஷுக்கு நன்றி சொல்வது நியாயம்தானே.

நான் படித்தது Diploma in Electronics and communication engineering சுருக்கமாகச் சொன்னால் DECE. இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் பாலிடெக்னிக். பாலிடெக்னிக்கா? அப்படியென்றால்… க்கு கம்ப்யூட்டர் எல்லாம் அத்துப்படியாச்சே என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. அப்போது கம்ப்யூட்டரைக் கண்ணாலும் பார்த்ததே இல்லை. கம்ப்யூட்டர் பிரிவு எடுத்திருக்கிற பிள்ளைகளுக்குதான் அந்த பாக்கியமெல்லாம்

இரண்டாம் வருஷத்தில் Introduction to Computer Programming (ICP) என்றொரு பாடம் இருந்தது. அதில் BASIC, COBOL, FORTRAN என்று கம்ப்யூட்டர் மொழிகள் பலவற்றையும் கற்றுக்கொடுத்ததோடு அதில் சில புரோகிராம் எழுதவும் சொல்லிக்கொடுத்தார்கள். சரி, என்றாவது ஒருநாள் நாமும் கம்ப்யூட்டரோடு இந்த மொழியிலெல்லாம் பேசி ஒரு உறவை வளர்த்துக்கொள்ளப்போகிறோம் என்று மனசுக்குள் ஒரு ப்பாசையை வளர்த்துக்கொண்டதுதான் மிச்சம். ம்ஹூம்கடைசி வரைக்கும் கம்ப்யூட்டரைப் படத்தில் மட்டுமேதான் பார்த்திருந்தோம். இன்னொரு ரகசியம் சொல்லவா? அதுவரை பள்ளியிலும் சரி, பாலிடெக்னிக்கிலும் சரி, முதல் ஐந்து இடங்களில் மதிப்பெண்கள் பெற்றிருந்த எனக்கு தோல்வி என்ற வார்த்தையை  அறிமுகப்படுத்தியதும் அந்தப் பாடம்தான். அத்துடன் கம்ப்யூட்டர் என்றாலே சிக்கல்தான் என்ற நினைப்பு ஆழ்மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டுவிட்டது.

என்னை வேலைக்கு அனுப்பும் எண்ணம் வீட்டில் இல்லை என்பதால் படிப்பு முடித்தபின் சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்காமல் type writing வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி அனைத்திலும் பயிற்சி பெற்றுத் தேறினேன். அன்று கற்றுக்கொண்டதுதான் இன்று இத்தனை விரைவாக தட்டச்ச உதவுகிறது. நான் தடதடவென்று தட்டச்சும் வேகத்தில் எங்கே மடிக்கணினியின் விசைகள் பறந்துபோய்விடுமோ என்ற பயத்தில் தனி விசைப்பலகையே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேனே.. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

என் கணவர் தன் அலுவலக வேலைகளுக்காகவென்று ஒரு Desktop computer வாங்கி வீட்டில் இறக்கியபோதுதான், கணினியை முதன்முதலில் அருகில் பார்த்தேன். டிப்ளமா படித்த நான், படித்து முடித்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு வியப்போடு, அட, இதுதான் கம்ப்யூட்டரா என்று கேட்டபோது அவர் என்னை விநோதமாய்ப் பார்த்திருக்கவேண்டும். அவர் அலுவலகம் சென்றிருக்கும் நேரங்களில் என்னைப் பயன்படுத்த அனுமதித்தும் அதைத் தொடவே பயந்தேன். அதில் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. பிறகுதான் இமெயில் அறிமுகமானது. மற்ற நேரங்களில் Encarta வையும்  britannica வையும் புரட்டிக்கொண்டிருந்தேன். இணையப் பத்திரிகைகள் பற்றி அறியவந்தபோது அட, கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்தும் வருமா என்று இன்னொரு முறை ஆச்சர்யப்பட்டு என்னவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினேன்.

ஊரை, உறவை, உற்றாரைப் பிரிந்து தனிமையில் தவித்தபோது, தவிப்பின் வேதனையைத் தணித்துக்கொண்டிருந்த என் கவிதைகளைத் தாள்களிலிருந்து கணினிக்கு இடம்பெயர்க்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததோடு, பல இணையதளங்களையும் அறிமுகப்படுத்தி என் படைப்புகளை அனுப்பிவைக்க ஊக்கமளித்தவர் என் நாத்தனார். அப்போது அழகி என்னும் மென்பொருளைத் தரவிறக்கி அதன்மூலம் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன்.

கணினி உலகம் என்னும் மாயாஜால உலகம் மெல்ல மெல்ல பரிச்சயமானது. எனக்கே எனக்கென்று ஒரு மடிக்கணினி பரிசளித்து அந்த அதிசய உலகத்தின் உள் நுழையும் வழியைக் காட்டினார் கணவர். மகளோ கைப்பிடித்து அழைத்துப்போனாள். கணினி பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் எனக்குக் கற்றுத்தந்தாள். அவளறியாதவற்றைக் கேட்டபோது தேடிக் கொணர்ந்து உதவினாள். கணினிக்காட்டுக்குள் காணாமல் போய்த் தவித்தபோதெல்லாம் கண்டுபிடித்து மீட்டுவந்தாள். எளிதில் புரியாதவற்றை ஒரு குழந்தைக்குக் கற்றுத்தருவதைப் போல பொறுமையுடன் சொல்லிக்கொடுக்கிறாள். சமீபமாய் மகனும் அவளுடன் சேர்ந்துகொண்டு கணினிப்பாடம் கற்பிக்கிறான் எனக்கு.

சந்தேகம் கேட்கும்போதெல்லாம் எரிச்சலுறாமல், எள்ளி நகையாடாமல், அலுத்துக்கொள்ளாமல், அவசரப்படாமல் நிதானமாகத் தெளிவித்து குடும்பமே எனக்கு உதவுகிறது. கொடுத்துவைத்தவளல்லவா நான்! அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த வலைப்பூவை எவர் உதவியுமின்றி என் முயற்சியால் நானே ஆரம்பிக்க உதவியது. எனக்கு எப்போதும் துணைநிற்கும் என் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி, இத்தொடர் பதிவில் கணினியுடனான தங்கள் முதல் அனுபவத்தைப் பகிர்வதற்கு ஐந்து பதிவர்களை அழைக்கிறேன்.

இத்தொடரைத் தொடர நான் அழைப்பவர்கள்…

18 July 2013

கங்காரு - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (1)
ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு கங்காரு என்று பள்ளிகளில் படித்திருப்போம். உண்மையில் ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு என்று கங்காருவைக் குறிப்பிடுதல் சரியன்று. ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தத்தமக்கென்று தனித்த முத்திரை, விலங்கு, பறவை, பூ, கொடி, நிறம், வாசகம் போன்ற அடையாளங்களைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசியமுத்திரையில் இடம்பெற்றுள்ள பெருமை விலங்குகளில் கங்காருவுக்கும் பறவைகளில் ஈமுவுக்கும் மட்டுமே உள்ளது. இரண்டுக்குமே பின்னோக்கி நடத்தலோ நகர்தலோ அசாத்தியம் என்பதால் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இவை அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ளன.கங்காருவை ஆங்கிலத்தில் கேங்கரு (kangaroo) என்று சொல்வார்கள். கங்காரு மார்சுபியல் (marsupials) என்னும் வகையைச் சேர்ந்தது. மார்சுபியல் வகையென்றால் என்ன தெரியுமா? அவற்றின் வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போல ஒரு அமைப்பு இருக்கும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சி பெறும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் வைத்து வளர்க்கும்.

மார்சுபியல் வகையைச் சேர்ந்த இன்னும் சில விலங்குகள் கொவாலா (koalas), போஸம் (possums), ஒபோஸம் (opossums), டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devils), வோம்பேட் (wombats) போன்றவை. இந்தவகையான விலங்கினங்களில் இப்போது உலகத்தில் வாழ்பவை மொத்தமாக 334 இனங்கள்தானாம். அவற்றில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அதாவது 220 இனம் ஆஸ்திரேலியாவிலும், நியூ கினியாவிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. மற்ற முப்பது சதவீதம் அமெரிக்காவில் வாழ்கின்றன.

மார்சுபியலிலேயே மேக்ரோபாட் (macropod) என்னும் வகையைச் சார்ந்தவை கங்காருக்கள். மேக்ரோபாட் என்றால் மிகப்பெரிய பாதங்கள் கொண்டவை என்று பொருள்.

கங்காருவுக்கு கங்காரு என்கிற பெயர் வந்தது பற்றி செவிவழித் தகவல் ஒன்று உண்டு. முதன் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பியர்கள், இந்த விலங்கைப் பார்த்து வியந்துபோனார்களாம். தலை மானைப் போல இருக்கிறது. ஆனால் கொம்பு இல்லை, நின்றால் மனுஷனைப் போல் நிற்கிறது, ஆனால் நடக்கத்தெரியவில்லை, தவளை போல தாவித்தாவிப் போகிறது. இது என்ன மாதிரியான விலங்கு என்று தெரியலையே என்று விழித்தார்களாம். அங்கே போன சில கங்காருக்களைக் காட்டி, இது என்னவென்று அங்கிருந்த பூர்வகுடிகளைக் கேட், அவர்களோ, ‘நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலைஎன்பதை அவர்களுடைய மொழியில் குங்குரு என்று சொன்னார்களாம். இவர்கள் அதன்பெயரே அதுதான் என்று நினைத்து திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன்ஆக்கினதுபோல், குங்குருவை காங்கருவாக்கிவிட்டார்கள். அதுமட்டுமல், வயிற்றில் குட்டிகளோடு திரிந்த தாய் கங்காருக்களைப் பார்த்து அவையெல்லாம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நினைத்திருந்தார்களாம்.

கங்காரு இனங்களிலேயே அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. குளிர் பிரதேத்தில் வாழ்பவையும் உண்டு, பாலைவனத்தில் வாழ்பவையும் உண்டு, மழைக்காடுகளில் வாழ்பவையும் உண்டு, கடலோரப் பகுதிகளில் வாழ்பவையும் உண்டு. வாழும் இடத்தில் தட்பவெப்ப சூழலுக்கேற்றபடி அவை தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்கின்றன.கங்காருக்கள் இரவு விலங்குகள் (Nocturnal animals). இரவுநேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கும். உணவு தேடிப்போகும். சில வகைகள் அதிகாலை நேரத்திலும், பின்மதியத்திலும் உணவு உண்ணப்போகும். பகல் முழுவதும் ஏதேனும் மரநிழலிலோ, பாறையிடுக்குகளிலோ, படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். கங்காரு பெரும்பாலும் புல்தான் தின்னும். மற்ற கால்நடைகளைப் போலவே கங்காருக்களுக்கும் இரைப்பை அறைகள் உண்டு. அதனால் இவையும் இரவில் உண்ட உணவை பகலில் அசைபோட்டு விழுங்கும். மிகவும் குறைந்த அளவே தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலேயே பல மாதங்கள் அவற்றால் உயிர்வாழ முடியும்.

எல்லாக் கங்காருகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில்வலிமையான பின்னங்கால்களும் நீண்ட பாதங்களும். கங்காரு மணிக்கு நாற்பது முதல் அறுபது கிலோமீட்டர் வேகம் வரையிலும் ஓடுமாம். அது வேகமாக ஓடும்போது பேலன்ஸ் (balance) செய்ய அதன் வால்தான் உதவுகிறது. படங்களில் கங்காரு ஓடும்போது பார்த்திருப்போம்,  வாலால் உந்தி உந்தி ஓடுவது போல இருக்கும். உண்மைதான். வாலில்லையென்றால் கங்காருவால் ஒட மட்டுமில்லை, நகரவும் முடியாது. நமக்கு கட்டை விரல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்காருவுக்கு வால். கங்காருக்களால் தங்கள் கால்களைக் கொண்டு நடக்கவும் முடியாது, முன்பே குறிப்பிட்டது போல் பின்னோக்கி நகரவும் இயலாது. ஆனால் நன்றாக நீந்தத்தெரியும். ஏதாவது ஆபத்து வரும்போது பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்தால் அதற்குள் இறங்கித் தப்பித்துவிடும்.

கங்காருக்கள் குழுக்களாகத்தான் வாழும். குழுவை மாப் (mob), கோர்ட் (court) என்று குறிப்பிடுவார்கள். ஒரு குழுவில் பத்து முதல் நூறு வரையிலும் கூட இருக்கும். கங்காருவுக்கு எதிரிகள் என்றால் டிங்கோ நாய்கள், நரிகள், காட்டு நாய், பூனைகள் மற்றும் மனிதர்கள். பொதுவாக இவை மனிதர்களை தாக்காது என்றாலும் அவர்களால் ஏதேனும் ஆபத்தின் அறிகுறியைக் கண்டால் தாக்கக் கூடியவை.

கங்காருக்கள் குத்துச்சண்டையில் தேர்ந்தவை. எதிரியை சமாளிக்கவேண்டிய நெருக்கடியில் தங்கள் முன்னங்கால்களால் நன்றாக குத்து விடும். அல்லது பின்னங்கால்களால் பலமாக உதைவிடும். தங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், பெண் கங்காருக்களை கவரவும் பலம் வாய்ந்த ஆண் கங்காருக்கள் தங்களுக்குள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவதுண்டு.


கங்காருக்கள் பெரிய அளவில் சத்தமெழுப்பாது. சின்னதாய் செருமல்கள், மெல்லிய குரைப்பொலி, சன்னமான பக் பக், க்ளக் க்ளக் போன்ற ஒலிகளைத்தான் வெளிப்படுத்தும். பெரும்பாலும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும். குட்டியை அழைக்கவும், ஆபத்தில் எச்சரிக்கவும் இப்படி செய்கின்றன.

கங்காருக்களில் மிகவும் பெரிய வகை சிவப்பு கங்காரு இனம்தான். கங்காரு இனத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள மார்சுபியல் வகை விலங்குகளிலேயே பெரியதும் இதுதான். இது நின்றால் ஆறடி இருக்கும். கிட்டத்தட்ட மனிதர்களின் உயரம். எடை 85 கிலோ இருக்கும். சிவப்புக் கங்காரு இனத்தில் பெரியதும் ஆளுமையுடையதும் ஆண்தான்.

ஆண் கங்காருக்களை பக் (buck), பூமர் (boomer), ஓல்டுமேன்(old man), ஜாக் (Jack) என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். பெண் கங்காருக்களை டொ (doe), ஃப்ளையர் (flyer), ஜில் (Jill) என்று சொல்வார்கள். குட்டிகளை ஜோய் (Joey) என்று குறிப்பிடுவார்கள். கங்காருக்குட்டிகள் பார்க்க அவ்வளவு அழகு. அதிலும் அம்மா வயிற்றுப்பைக்குள் அமர்ந்தபடி தலையை மட்டும் வெளியில் நீட்டி உலகமறியாத குழந்தை போல அது விழிப்பது அவ்வளவு அழகு.

கங்காரு வருஷத்துக்கு ஒரு குட்டி போடும். அதனுடைய கர்ப்பகாலம் வெறும் 33 நாட்கள்தான். அதனால் குட்டி பிறக்கும்போது இரண்டுகிராம் எடையுடன் ஒரு மொச்சைக்கொட்டை அளவுதான் இருக்கும். கண், காது கால் உடல் என்று எதுவும் முழுமையாக உருவாகாமல் ஒரு புழுவைப் போல இருக்கும். மனிதக் கருவோடு ஒப்பிடுகையில் இது ஏழுவார சிசுவுக்கு சமம். 23 வாரங்களுக்குக் குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகும் மனித சிசுக்கள் உயிர்பிழைப்பது அரிது. ஆனால் கங்காருவின் குட்டி பிறந்த நொடியே உள்ளுணர்வு காரணமாக உந்தப்பட்டு தன் தாய்மடியை நோக்கி நகர ஆரம்பித்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குத் தெரியும் தனக்கான உணவு அங்கேதான் உள்ளது என்று.

தாய்க்கங்காருவால் அந்தக் குட்டியைத் தொடக்கூட இயலாத அளவுக்கு குட்டி மிகச்சிறியதாக இருக்கும். ஆனால் அம்மா என்ன செய்யுமென்றால், குட்டி, பைக்கு போகும் பாதையை நக்கி நக்கி சுத்தம் செய்து கொடுக்கும். குட்டியும் தன்னுடைய முன்னங்கால் விரல்களால் அம்மாவின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பைக்குப் போய்விடும். பைக்குள் நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் பிடித்ததென்றால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, அம்மா எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். விழவே விழாது. இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தசைகள் சுருங்கிவிரிவது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும்.கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஜோயி அதே நிலையில்தான் இருக்கும். அதற்குள் அது முழுவளர்ச்சி பெற்றுவிடும். எவ்வளவு நேரந்தான் உள்ளேயே இருப்பது. அலுத்துப்போகுமேஅவ்வப்போது மெதுவாக தலையை மட்டும் பைக்கு வெளியே நீட்டி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் வெளியில் வேடிக்கை பார்க்கும். ஆனாலும் பையைவிட்டு முழுவதுமாய் வெளியில் வர பயமிருக்கும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வெளியில் வரும். வந்தாலும் அம்மா கூடவே நிற்கும். சின்ன சத்தம் கேட்டாலும் உடனே பைக்குள் ஒடி ஒளிந்துகொள்ளும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், பயமெல்லாம் போய்விடும். அம்மாவை விட்டு கொஞ்சதூரம் விலகிப் போய் மேய ஆரம்பித்துவிடும். முன்போல் பயமிருக்காது. ஆனால் அம்மா எப்போதும் கவனமாகவே இருக்கும். ஆபத்து வரும் அறிகுறி அறிந்தால், உடனே தரையில் காலைத் தட்டும். சட்டென்று குட்டி அம்மாவின் பைக்குள் ஏறிக்கொள்ள, அம்மா அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்துவிடும்.

பொதுவாகவே கங்காரு ஒரு குட்டி ஈன்றாலும் உடனே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, இன்னொரு குட்டியையும் அடுத்த ஈட்டுக்குத் தயாராக கருப்பையில் பத்திரப்படுத்திக்கொள்ளும். ஆனால் வளரவிடாது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பதுபோல் அந்தக் குட்டி அம்மா மனம் வைக்கும்வரை கருவாகவே கருப்பைக்குள் காத்திருக்கும். முதலில் பிறந்த குட்டி பையை விட்டு வெளியேறும்வரை அம்மா காத்திருக்கும். பஞ்ச காலம் வருவதைப் போல் தெரிந்தால் அம்மா அப்போதும் குட்டியீனுவதைத் தள்ளிப்போடும். அம்மாவுக்கு நல்ல உணவு கிடைத்து, நல்லமுறையில் பால்கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் குட்டியை ஈனத் தயாராகும்.

ஒரே சமயம் வெவ்வேறு வயதுடைய இரண்டு குட்டிகள் அம்மாவிடம் பால் குடிப்பது உண்டு. பால்குடி மறக்காத அண்ணன் ஜோயி அவ்வப்போது அம்மாவின் மடிக்குள் தலைவிட்டு பாலைக்குடிக்கும். அதே பைக்குள் தம்பி ஜோயி ஒரு பக்கம் குடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஜோயி பிறந்தது முதல் கடைசிவரை ஒரே பால்காம்பில்தான் பால் குடிக்கும். தவறியும் அடுத்ததில் வாய் வைக்காது. அதனால் பாலும் அக்குட்டிகளின் வயதுக்கேற்ப தனித்தன்மையுடன் இருக்கும். வளர்ந்த குட்டி மாற்று உணவுக்குப் பழகிவிட்டதால் அதற்குக் கிடைக்கும் பாலில் அத்தனை சத்துகள் இருக்காது. வளர்ச்சியடையாத ஜோயிக்கோ அது ஒன்றே உணவென்பதாலும் வளர்ச்சிக்குத்தேவை என்பதாலும் மிகவும் சத்தான பால் கிடைக்கும். அண்ணனுக்கு தண்ணிப்பால், தம்பிக்கு சத்தான பால். சின்னதென்றால் எப்பவுமே செல்லம்தானேஆஸ்திரேலியாவில் யாரும் கங்காருக்களை வீடுகளிலோ பண்ணைகளிலோ வைத்து வளர்ப்பதில்லை. கங்காரு ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது. அதனால் பல இடங்களில் அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது. அவற்றின் இறைச்சிகள் கடைகளில் விற்பனையும் ஆகிறது. முதன் முதலில் கடைகளில் கங்காரு இறைச்சியைப் பார்த்து அதிர்ச்சியானேன். ஒரு நாட்டின் அடையாளச்சின்னமாய் விளங்கும் விலங்கைக் கொல்வதோடு, இப்படிக் கூறு போட்டு விற்கிறார்களே என்றுஅவற்றால் விவசாயிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகுதான் தெளிவானது.

ஆஸ்திரேலியாவில் கங்காரு வேட்டை காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் தங்களுடைய உணவுக்காகவும், உடைக்காகவும் கங்காருக்களை வேட்டையாடிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். ஐரோப்பிய காலணி உருவான பிறகு வேட்டையாடப்படும் கங்காருக்களின் எண்ணிக்கை கூடியதாம். ஐரோப்பிய முறை விவசாயமும் கங்காருக்களின் இனப்பெருக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணமாம். முறையான விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பல பயிர்கள் அவற்றுக்கு தடையில்லாத உணவு வழங்க, கங்காரு இனம் வஞ்சனையில்லாமல் பெருகிவிட்டதாம். தங்கள் உணவைத் தக்கவைக்க, வேறு வழியில்லாமல் கொத்தோடு வேட்டையாட வேண்டிய நிலை இவங்களுக்கு உண்டாயிற்று. அது இன்றும் தொடர்கிறது.ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும் சரிவை உண்டாக்கும் விதத்தில் இவற்றுடைய இனப்பெருக்க வளர்ச்சி இருப்பதாலும் அவற்றால் பாழ்படுத்தப்படும் விவசாய நிலங்களின் அளவு கூடிக்கொண்டே போவதாலும் கங்காருக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த,, குறிப்பிட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட இனங்கள் மட்டும் வேட்டையாடப்படுகின்றன. சிவப்பு கங்காரு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைச் சேர்ந்த சாம்பல் நிறக் கங்காருகளுக்குதான் வேட்டையில் முதலிடம். வருடாவருடம் இந்த இன கங்காருக்களின் எண்ணிக்கையைக் கண்காணித்தும், சந்தையில் கங்காரு இறைச்சியின் தேவையைப் பொறுத்தும் வேட்டைக்கான கால நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை கங்காரு அறுவடை என்றுதான் அரசு குறிப்பிடுகிறது.

அதே சமயம் ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சட்டத்தில் கங்காருக்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் மேலே குறிப்பிட்ட இனங்களுக்குப் பொருந்தாது.

கங்காருவை ஆஸ்திரேலியாவிலிருந்து உயிரோடு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். உயிரியல் பூங்காக்கள் விதிவிலக்கு. ஆனால் ஆஸ்திரேலியாவிலிருந்து கிட்டத்தட்ட 55 நாடுகளுக்கு உணவுக்காக கங்காரு இறைச்சி ஏற்றுமதியாகிறது. ரோமங்களுக்காகவும், தோல்பொருள் தயாரிக்கவும் அதன் தோலும் கூட ஏற்றுமதியாகிறது. இதனுடைய தோல் மிருதுவாக இருப்பதால் காலணிகள், முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிக்க மிகவும் ஏற்றதாம்.ஆனாலும் பல விலங்குநல அமைப்புகள் கங்காருவைக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆய்வரங்கங்கள் நடத்தி, அறிக்கைகள் சமர்ப்பித்தபடிதான் இருக்கின்றன.  ஆஸ்திரேலியாவின் கலாச்சார அடையாளங்களில் முக்கியமானதாயிற்றே கங்காரு. கங்காரு இல்லாத ஆஸ்திரேலியாவை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

*********************************************************
தகவல் உதவிக்கு நன்றி:

படங்கள் உதவிக்கு நன்றி: விக்கிமீடியா